Sunday, February 28, 2010

மண் மலடாகுவதை தவிர்ப்போம் வாருங்கள்

பிப் 24 ஆம் தேதி Wallstreet Journal இல் வந்த செய்தியை நேற்று படிக்க நேர்ந்தது. அது இது தான்

"Green Revolution in India Wilts as Subsidies Backfire "

இதனை படித்தவுடன் என்னை கிலி பிடித்து கொண்டது. இந்த செய்தியின் சாரம் இது தான்.
1970 களில் இந்தியாவில் நடந்த பசுமை புரட்சியால் அதிகமாக Urea உரம் போட்டதால் இந்தியா மண் தன்னுடைய விளைவிக்கும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாகவும் நமது அண்டை நாடுகளை விட நம் நாட்டில் மகசூல் மிக குறைவாக இருப்பதாகவும் கூறி இருந்தனர்.

யோசித்து பாருங்கள் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட, அரிசியை முதன்மை உணவாக கொண்ட நம் நாட்டில் அரிசி மகசூல் குறைந்தால் அதனால் எப்படி உணவு தட்டுபாடு ஏற்படும் என்று. மனிதனை மனிதன் அடித்து சாப்பிடும் அளவு பற்றாகுறை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. இதை தவிர்க்க நம்மால் ஆனா சில விசயங்களை செய்யலாம் என்று நினைத்தேன். மக்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அதில் முக்கியமான ஒன்று என்று கருதுகிறேன்.

என் அறிவுக்கு எட்டிய ஒரு சில கருத்துகள் இங்கே.

மஞ்சள் பை கலாச்சாரத்தை திரும்ப கொண்டு வருதல். அமெரிக்காவில் இப்போது எங்கு பார்த்தாலும் "Green bag, Green towel" என்கிறார்கள். அது என்னவென்று பார்த்தால் நம்ம ஊர் மஞ்சள் பை. நம் ஊரில் எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயமான போக்கை மாற்ற மஞ்சள் பையை மறுபடியும் கொண்டு வர செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகளும், டம்ளர் களும் இப்போது நிறைய குப்பைகளாக சேர்கின்றன. அவை நீர்நிலைகளில் வீதிகளில் வீச படுகின்றன. எனக்கு தெரிந்தே மதுரையில் கிருதுமால் நதி என்ற ஒரு சாக்கடை உண்டு, அது ஒரு காலத்தில் நதியாக இருந்தது என்று என் பாட்டி சொல்லி கேள்விபட்டு இருக்கிறேன்.

இது எல்லாம் ஏதோ எனக்கு தோன்றிய ஒரு சில எண்ணங்கள். இதை ஒரு தொடர் பதிவாக ஆரம்பித்தால் இது போல நிறைய எண்ணங்களும், விடைகளும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ராமருக்கு அணில் போல நம்மால் ஆன ஒரு சிறு உதவி நம் பூமிக்கும், இந்தியாவிற்கும் செய்வதாக இருக்கட்டுமே.

இதனை தொடர நான் அழைப்பது

தெகா
முத்துலெட்சுமி

தொடர விருப்பம் இருந்தால் தயவு செய்து தொடருங்கள்.

Friday, February 26, 2010

மொழியும், இந்திய கலாச்சாரமும்

முதல் முதலாக நான் இங்கு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது என்னுடன் வேலை செய்த ஒருவரின் குடும்ப பெயர் Ramkissan. அட இந்தியர் பெயர் போல இருக்கே! என்று விசாரித்த போது அவர் westindies தீவுகளில் ஒன்றான Trinidad-Tobago நாட்டை சேர்ந்தவர் என்று தெரிந்தது. பார்த்தால் இந்தியர் போல அல்லாமல் கறுப்பினத்தவர் போல இருந்தார்.

அவருக்கு எப்படி இந்திய குடும்ப பெயர் வந்தது என்று கேட்ட போது அவர் தன்னுடைய மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து அடிமைகளாக, வேலைகாரர்களாக பிரிட்டிஷாரால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் ( 19th century ஆரம்பத்தில் ) அதன் பின் trinidad இல் settle ஆகி விட்டதாகவும். இந்தியாவுடனான தங்கள் தொடர்பு எப்போதோ அற்றுவிட்டதாகவும், இப்போது அவருக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது என்றும் கூறினார். ஹிந்தி யிலும் ஓரிரண்டு வார்த்தைகள் தவிர எதுவும் பேச தெரியவில்லை என்றாலும் பேசுவதை கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும் என்றார். தன்னுடைய சிறு வயதில் அமிதாப் பச்சன் படங்கள் பார்த்ததாகவும் சொன்னார்.

சுமார் 200 ஆண்டுகள் இந்தியாவை விட்டு புலம் பெயர்ந்து வேறு நாட்டை தனதாக்கி கொண்டாலும் இன்னும் இந்திய வம்சாவளியினர் தாங்கள் என்று சொல்ல பெருமை படுவதாகவும் சொன்னார். அதற்கு பின்னர் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற திரு V.S.நைபால் அவர்களும் Trinidad-Tobago வில் உள்ள இந்திய வம்சாவளியினர் என்றும் கூறினார். அவர் கூறிய நிறைய விஷயங்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

எதற்கு இப்போது இதனை நினைவு கூர்கிறேன் என்றால், நேற்று எங்களுடைய நெருங்கிய வடநாட்டு நண்பர் தன் புது மனைவியுடன் விருந்துண்ண எங்கள் வீட்டிற்க்கு வந்திருந்தார். எங்கள் நண்பரின் மனைவி மும்பையில் பிறந்து வளர்ந்த வடஇந்திய பெண் என்றாலும் ஹிந்தியை விட ஆங்கிலம் நன்றாக பேசினார். எங்கள் நண்பர் இங்கே சுமார் 25 வருடங்களாக படித்து வேலை பார்த்து வந்தாலும் அவர் சுத்தமாக ஹிந்தி பேசினார். மேலும் எங்கள் நண்பர் தன் மனைவி பேசும் ஹிந்தியை கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த போது வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் எப்படி தங்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாக்கிறார்கள் என்று எண்ணி ஆச்சரியமும், இந்தியாவில் அதுவும் மெட்ரோ நகரங்களில் வாழும் மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்கள் தாய் மொழியை கற்காமல் ஆங்கிலமும் தெரியாமல் ரெண்டும் கெட்டானாக இருப்பது குறித்து வேதனையும் அடைந்தேன்.

பி.கு : பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது.
என் நண்பர் ஒருவர் அனுப்பிய you tube video

http://www.youtube.com/watch?v=tgSienhtm3o

Friday, February 19, 2010

சின்ன சின்ன ஆசைகளும் நினைவுகளும்

ஒரு வருடத்திற்கு முன்பே பதிவுலகம் எனக்கு அறிமுகமானாலும், பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி கொண்டிருந்தேன். நாமும் பதிவு எழுதலாம் என்று முடிவு செய்த ஒரு மாதத்திற்குள் என்னை பதின்மகால வயது டைரி பதிவு எழுத அழைத்த தெகா அவர்களுக்கு என் நன்றி. தெகா என்னை தொடர் பதிவு எழுத அழைப்பதாக சொன்னதும் எனக்குள் ஒரு பயம், எதை எழுதுவது?, என்ன எழுதுவது? என்று. அலை அலையாக ஓடிய எண்ணங்களை ஒன்று சேர்த்து ஒரு வழியாக எழுதிவிடுவது என்று ஆரம்பித்தேன்.

சிறு வயதில் எங்கள் வீட்டுக்கு நெறைய டைரி இலவசமாக வந்தாலும் அதில் முதல் ஒரு சில நாட்களை தவிர வேறு நாட்களில் எதுவும் எழுதி இருக்க மாட்டேன். அவை அனைத்தும் எப்போதோ அடுப்பு எரிக்க பயன் பட்டு இருக்கும் என்பதால், என் ஆழ் மனதில் புதைந்து இருக்கும் ஒரு சில நினைவுகள் இங்கே.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் ஒன்பதாவது படிக்கும் போது என் அப்பாவின் கண்டிப்பால் பள்ளிக்கு தாவணி அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. பிறகு வீட்டிலும் எனக்கு நெறைய தாவணி எடுத்து கொடுத்தனர். அதில் மறக்க முடியாத
அரக்கு கலர் மயில் பாவாடையும் சந்தன கலர் தாவணியும் இன்னும் என் கண் முன் நிற்கின்றன. அதை அணிந்து தெருக்களில் நடக்கும் போது யாராவது என்னை பார்கிறார்களா என்று மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். எங்கள் பக்கத்துக்கு வீட்டுக்கு ஒரு குடும்பம் குடி வந்த போது அதில் இருந்தவர்களை பார்த்து எனக்குள் ஏற்பட்ட குறுகுறுப்பும் அதனை இரும்பு கரம் கொண்டு அடக்கிய என் அம்மாவின் ஆளுமையும் என்னை இப்போது வியப்பில் ஆழ்த்துகின்றன. பிறகு அம்மாவின் நம்பிக்கைக்கு உரியவளாக இருக்க நானே என்னை மாற்றி கொண்டதும், அலங்காரங்களை தவிர்த்தததும் நினைவுக்கு வருகிறது.

நான் பத்தாவது படிக்கும் போது நடந்த என் பெரிய அண்ணனின் திருமணமும் அதற்காக எனக்கு கிடைத்த மாம்பழ கலர் பட்டு பாவாடையும், நீல நிற தாவணியும் என்றும் மறக்க இயலாதது. அடுத்த வருடம் நான் அத்தை ஆனதும் என் அண்ணன் மகளை பார்க்க எங்கள் அண்ணி வீட்டுக்கு முதல் முதலாக குதிரை வண்டியில் சென்றதும் பசுமையான நினைவுகள். இன்று அண்ணன், அண்ணி இருவரும் உயிருடன் இல்லை என்று உணரும் போது மனம் கனக்கிறது.

மாநகராட்சி பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு பள்ளி இறுதியாண்டின் ஆரம்பத்தில் எனக்கு தெரிய ஆரம்பித்தது. அந்த கஷ்டங்களை எல்லாம் சமாளித்து ஒரு வழியாக நல்ல மதிப்பெண் வாங்கி தேறியவுடன் எப்படியும் பொறியியல் கிடைத்து விடும் என்று ஒரு மமதையில் இருந்தேன். பிறகு அது கிடைக்காமல் இளநிலை இயற்பியல் பாடத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்ததும், கல்லூரியில் இடம் கிடைத்தால் கல்லூரியில் இருந்த மீனாட்சி சிலைக்கு மாலை சாற்றுவதாக வேண்டி கொண்டதாகவும் ஞாபகம். அப்போதெல்லாம் எந்த ஸ்கூல் ல படிச்சிட்டு வந்திருக்க? என்று யாராவது கேட்டால் பள்ளி பெயர் சொல்ல வெட்கப்பட்டதும் கூட நினைவுக்கு வருகிறது.

கல்லூரி நாட்களில் எனக்கு கிடைத்த தோழிகள் அனைவரும் என்னை போல கல்லூரியில் ஒரு மாதம் கழித்து சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்குள் ஒரு பிணைப்பு இருந்தது. நாங்கள் ஏழு பேர் சேர்ந்த ஒரு குழுவாக இருப்போம். எங்கள் பெயரின் முதல் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து V R STARS என்று அழைத்து கொள்வோம். எனக்கு முதன் முதலில் பொன்னியின் செல்வனை அறிமுகம் செய்தவர்கள் அவர்களே. பொன்னியின் செல்வன் படித்து விட்டு அதனை ஒவ்வொரு நாளும் விவாதிப்போம். இன்று யாருடனும் நான் தொடர்பில் இல்லை என்றாலும் எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய என்னுடைய கல்லூரி தோழிகளுக்கு என் நன்றிகள்.

என்னுடைய சொந்த மாவட்டத்தை விட்டு சென்றறியாத என்னை என்னுடைய பதின்ம காலம் NCC கேம்ப் க்காக ஹைதராபாத் ம், உலக தமிழ் மாநாட்டுக்காக தஞ்சாவூர் க்கும் அழைத்து சென்றது. அதில் அறிமுகமான வெளி உலகம் இன்னும் நினைவில் இருக்கிறது. மரணத்தை பற்றி அதுவரை அறியாத எனக்கு மரணத்தை என் பாட்டியின் மூலம் பதின்மகாலம் அறிமுகம் செய்து வைத்தது.

இன்று காலம் என்னை எப்படி எப்படியோ மாற்றி ஏதேதோ படிக்க வைத்து முனைவர் பட்டம் பெற செய்திருந்தாலும், என்னை சுய கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து என்னை செதுக்கிய என் பதின்ம காலம் என்றும் நெஞ்சில் நிற்கும்.

Thursday, February 18, 2010

குழந்தைகள் பாடமும் நானும்

சில மாதங்களாக குழந்தைகள் புத்தகங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பார்த்து வருகிறேன். அப்படி நான் வாசித்த புத்தகங்கள், பார்த்த நிகழ்ச்சிகள் எனக்கு வியப்பை தருகின்றன. நான் படித்த காலத்தில் இவை எல்லாம் இல்லையே என்று ஏங்க வைக்கின்றன.அப்படி நான் வியந்த ஒரு சில விஷயங்கள் இங்கே.

சில நாட்களுக்கு முன் ஒரு TV நிகழ்ச்சியில் ஆங்கில எழுத்து q வை பற்றி காண்பித்தார்கள். அதில் ஆங்கில எழுத்து q வை மட்டும் வைத்து எந்த ஒரு ஆங்கில வார்த்தையும் தொடங்காது என்றனர். எப்போதும் q வுடன் u வும் சேர்ந்துதான் வரும் என்றனர். உதாரணமாக, queen. quest, quail, question, qualify, etc.,

அதே போல q ஒரு வார்த்தைக்கு நடுவில் வந்தாலும் கூட அது u வுடன் சேர்ந்தே வரும் என்றனர். உதாரணமாக require, inquire, acquisition, etc.,

அதை சுலபமாக விளக்க, q ஒரு ஆண் போலவும் u ஒரு பெண் போலவும் சித்தரித்து அவர்கள் எப்போதும் இணைந்து இருப்பார்கள் என்பது போலவும் ஒரு பாடல் பாடினார்கள்.

அட! இது புதுசா இருக்கே, என்று என்னுடைய Oxford dictionary இல் தேடி பார்தேன். q வில் ஒரு வார்த்தை கூட u உடன் இல்லாமல் இல்லை.

மற்றொரு நிகழ்ச்சியில் c பற்றி காண்பித்தார்கள். c உடன் i யோ e யோ வந்தால் அது ச போல சப்தம் உண்டாக்கும் என்றும் மற்ற எழுத்துக்களுடன் அது க சப்தம் உண்டாக்கும் என்றும் சொன்னார்கள்.

உதாரணமாக city, delicious, cedar, century, etc., மற்றும் camera, coffee, etc.,

இதை எல்லாம் பார்த்த போது நான் எப்படி mug up செய்து படித்து வந்துள்ளேன் என்று என்னை வருந்த வைத்தது.

சமீபத்தில் நான் என் பையனுக்காக வாசித்த ஒரு புத்தகம் "Joseph had a little overcoat". அதில் Joseph என்பவர் தன்னுடைய overcoat பழையதானவுடன் jacket ஆக மாற்றி விடுகிறார். அது பழையதானவுடன் வேறு ஒன்றாக மாற்றி விடுகிறார். இப்படி மாற்றி மாற்றி அது ஒரு பட்டன் ஆகி விடுகிறது. அதுவும் தொலைந்து விடுகிறது பிறகு அதை பற்றி ஒரு கதை எழுதி விடுகிறார்.

தற்போது எங்கும் எதிலும் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு விளைவிக்கும் இந்த நேரத்தில் இது போன்ற சுழற்சி முறை (recycling) குழந்தைகளுக்கு நல்லெண்ணத்தை விளைவிக்கும் என்பது மகிழ்ச்சி தருகிறது.

இதை போன்ற குழந்தைகள் புத்தகங்களும் பாடங்களும் எனக்கு "கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு" என்ற பொன் மொழியை நினைவு படுத்தியது.

Monday, February 15, 2010

வனஜா - ஒரு சிறுமியின் கதறல்.

நேற்று காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க TV channel ஐ மாற்றிய போது வனஜா என்ற ஒரு தெலுங்கு படம் பார்க்க நேர்ந்தது. அது ஒரு 15 வயது சிறுமியை பற்றிய கதை. வழக்கமாக எனக்கு தெலுங்கு சினிமா பார்க்க பிடிக்கும். ஏன் என்றால் அதில் வரும் ஒவ்வொரு செண்டிமெண்ட் காட்சிகளும் சிரிப்பை வரவைக்கும் என்பதால். வனஜா வும் ஒரு செண்டிமெண்ட் படம், ஆனால் இது realistic செண்டிமெண்ட்.

அதிகம் படிப்பறிவில்லாத ஒரு கடலோர ஆந்திர கிராமம். அதில் உள்ள ஒரு தாழ்ந்த சாதி ஏழை மீனவரின் மகள் வனஜா. ஒரு நாள் கூத்தில் குச்சிபுடி நடனம் பார்க்கிறாள். அதில் ஈர்க்கப்பட்டு நடனமாடும் பெண்ணின் சலங்கையில் இருந்து விழும் மணியை சேகரிக்கிறாள். பிறகு தானும் அவள் போல ஒரு dancer ஆக வரவேண்டும் என்று ஆசை படுகிறாள். வறுமையின் காரணமாக அவள் அப்பா அவளை வீட்டு வேலைக்கு செல் என்கிறார். அவளோ ஜமிந்தாரிணி வீட்டில் பாட்டும், நடனமும் நடப்பதால், அங்கு வேலைக்கு அனுப்புவதானால் செல்கிறேன் என்று அங்கு வேலைக்கு செல்கிறாள்.

அங்கு ஜமிந்தாரிணி உதவ வனஜா நடனம் கற்க ஆரம்பிக்கிறாள். எல்லாம் அவள் நினைத்தது போல் நன்றாக நடக்கிறது. ஜமிந்தாரினியின் மகன் அமெரிக்க வில் இருந்து வருகிறான். இருவருக்கும் பரஸ்பரம் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. ஒரு முறை அனைவர் முன்னிலையில் ஜமிந்தாரிணி மகன் இவளால் அவமான பட நேருகிறது. அதன் பின் அவன் பாலியல் ரீதியான தொல்லைகள் தர ஆரம்பிக்கிறான். வனஜா கர்ப்பமாகிறாள்.

இதை அறிந்து கொள்ளும் ஜமிந்தாரிணி கர்ப்பத்தை கலைக்க சொல்லுகிறாள். அதற்கு பயந்தும் அவர்களை பழிவாங்கவும் முடிவு செய்து வனஜா தப்பித்து ஓடுகிறாள். அவள் தந்தை நியாயம் கேட்க வருகிறார் அவரை அடித்து உதைக்க அவர் இறந்து விடுகிறார். தனியாக்க பட்ட வனஜா வேறு வழியில்லாமல் மறுபடியும் ஜமிந்தாரிணி வீட்டுக்கு வருகிறாள். குழந்தையை தாங்கள் (உயர் சாதி குழந்தையாக) வளர்பதாகவும் அவளுக்கு எந்த உரிமையும் இனிமேல் குழந்தை மேல் இல்லை என்றும் சொல்லி அனுப்பி (துரத்தி) விடுகிறார்கள்.

தனது குழந்தையையும், குழந்தை பருவத்தையும், தந்தையையும், நடனத்தையும்,அனைத்தையும் இழந்த வனஜா, தன் மகன் வளர்ந்ததும் தான் சேகரித்த மணிகளை அவனுக்கு தன் நினைவாக தர சொல்லிவிட்டு வந்ததாக தன் தோழியிடம் சொல்கிறாள். படம் முடிகிறது.

படம் முடிந்தவுடன் அதன் இயக்குனர் ராஜ்னேஷ் டொம்லாப்பள்ளி பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் இந்த படம் 100 film festival லில் பங்கு பெற்று 24 international awards ம் 2 nominations ம் பெற்றது என்றாலும் இந்தியாவில் இதனை வெளியிட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

Sunday, February 7, 2010

கொசுவும், Bt கத்தரிக்காயும்

இது என்னடா மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ?

எப்போ கொசுவை பற்றி பேசினாலும் என் அம்மாவிடம் இருந்து இந்த வார்த்தைகள் வரும்.

"எங்க காலத்தில எல்லாம் ஒரு புகை போட்ட போதும், கொசு எல்லாம் போயிடும் இப்ப பாரு என்ன பண்ணாலும் இந்த கொசு ஒழிய மாட்டேன்கிறது"

எதில் சமத்துவம் இருக்கிறதோ இல்லையோ, கொசுவர்த்தி ஏற்றி வைப்பதில் இன்று எல்லா வீடுகளிலும் இன்று சமத்துவம் உண்டு. அவர் அவர் வசதிக்கு ஏற்ப கொசுவர்த்தி விலை இருக்கும்.

தற்போது இருக்கும் கொசுவையும் அதன் மூதாதையர் கொசுவையும் ஒப்பிட்டு பார்த்தால் அதன் மரபணுக்களில் சில மாற்றங்கள் (Mutations) ஏற்பட்டு இருக்கும். அதாவது தற்போது இருக்கும் கொசுக்கள் எந்த வகை புகையையும் தாங்குமாறு அதன் உடல் மாறி இருக்கும்.

அது சரி இதில் எங்கு Bt கத்தரிக்கா வந்தது. ஒரு சிறிய முன்னுரை.

Bt என்பது Bacillus thuringiensis என்னும் மண்ணில் வாழும் ஒரு வகை நுண்ணுயிரி (Bacteria). அதில் இருந்து வரும் ஒரு சில ப்ரோடீன்கள் பூச்சி கொல்லியாக செயல் படுவது கண்டு பிடிக்க பட்டது. அந்த ப்ரோடீன்களை பிரித்து எடுத்து பூச்சிகொல்லியாக பயன்படுத்தினர்.அதன் பின்பு பார்த்தனர், அது என்ன பிரித்து எடுத்து பயன்படுத்துவது, பேசாமல் அந்த ப்ரோடீன் உருவாக்கும் மரபணுவையே (gene) எடுத்து கத்தரிக்காய் மரபணுவுடன் "Cut and paste" செய்து விட்டால் ஒவ்வொரு கத்தரிக்கா செடியும் பூச்சியை கொல்லும் திறன் கொண்டதாக ஆகி விடுமே! என்று நினைக்க அதன் விளைவு Bt கத்தரிக்காய்.

இது நல்ல தொழில் நுட்பம் தானே! பின் ஏன் சிலர் எதிர்கின்றனர்.

இப்போது கொசு பிரச்சனைக்கு வருவோம், கொசு புகை தாங்கும் சக்தி கொண்டதாக தன்னை மாற்றி கொள்ள சில தலைமுறைகள் உண்டானது ஏன் என்றால் அது கால சுழற்சியில் (evolution) தானாக உருவானது. ஆனால் Bt கத்தரிக்காய் செயற்கையாக மரபணு மாற்று செய்ய பட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் சரியாக ஆராய்ச்சி செய்ய படாத நிலையில் பூச்சிகளோ, களைகளோ கொசுவை போலே சீக்கிரமே அதனை தாங்கி கொள்ளும் தன்மை கொண்டதாக மாறிவிடும்.

விளைவு , வேறென்ன மற்றொரு மரபணு மாற்று Vt கத்தரிகாயோ Ct கத்தரிகாயோ. ஏதோ ஒரு company அதனை உற்பத்தி செய்யும். பிறகு என்ன கொசுவர்த்தி போலே எல்லா நிலங்களிலும் அதனை உபயோகிக்க ஆரம்பிப்பார்கள். எங்கும் எதிலும் சமத்துவம் வரும்.

"அட போங்கப்பா எது வந்தால் என்ன? வராட்டி எனக்கென்ன? டெய்லி பிரியாணி, "தண்ணி" கிடைக்குதா, TV, தியேட்டர்ல ஒரு படம் பார்த்தோமா, தூங்கினோமா அது போதும் பா எங்களுக்கு Bt யாவது Ct யாவது".