Thursday, July 28, 2011

ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்

மருத்துவ ஆராய்ச்சி உலகில் இருக்கும் அனைவருக்கும் HeLa என்ற பெயர் மிகவும் பரிச்சயமாக இருக்கும். HeLa என்பது அழியாத மனித செல் லைன் என்று சொல்வார்கள். பொதுவாக மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளர்ப்பது 1951 வரை மிக மிக கடினமானது என்று கருதப்பட்டது. அவற்றை எல்லாம் முறியடித்து உடம்புக்கு வெளியேயும் செல்கள் வளர முடியும் என்று நிரூபித்தது HeLa செல்கள் மட்டுமே.

இதென்ன!, மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதா? என்ன சொல்லுறாங்க! என்று கேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்

"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".

எப்படி செய்கிறார்கள்

"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது

எதற்க்காக செய்கிறார்கள்

மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோ, மனிதர்களிடமோ செய்வதற்கு முன், உயிரின செல்களிடம் செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்று காண்பர். இதனை போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும் பரிசோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்

முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர் செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.


போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை மருந்துகளும் முதன் முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில் தான். சொல்லப் போனால் ஒரு புது மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள் உருவாக்கி இருக்கின்றன. இன்னும் கூட பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவ ஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...

ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடைய உடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரிய இண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும் அறிந்திருக்க வில்லை.

புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் ஹென்றிட்டா மருத்துவர்களை அணுகி இருக்கிறார், ஆனால் அவர்கள் இவருடைய செல்லை எடுத்து எப்படி டிஷ் இல் வளர்க்கலாம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே குறியாக இருந்திருககிறார்கள் அந்த மருத்துவர்கள். அதனை தவிர கதிரியக்கத்தை கொண்டு எப்படி புற்று நோய் கட்டிகளை கரைப்பது என்ற அப்போதைய புது தொழில்நுட்பத்தை அவர் மீது செலுத்தி ட்ரையல் அண்ட் எரர் முறையில் நிறைய சோதனைகள் அவர் மீது நடத்தி இருக்கிறார்கள்.

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இனவெறி அதிகமாக அமெரிக்காவில் இருந்த சமயத்தில், கறுப்பர்களுக்கு என்று தனி மருத்துவமனை, தனி வார்டு, அவர்களுக்கு அளிக்கப்பட மாற்றான் பிள்ளை ட்ரீட்மென்ட் எல்லாம் அந்த புத்தகத்ததில் படிக்கும் போது இப்போது இருக்கும் அமெரிக்காவின் ஐம்பது வருடத்திற்கு முந்தய கொடூரமான முகம் தெரிகிறது.

அவ்வளவு ஏன், ஹீலா செல்கள் யாரிடம் இருந்து வந்தன என்று கூட யாரும் அறிந்திருக்கவில்லை. எங்கே இவரிடம் இருந்து வந்தது என்று தெரிந்தால் இனவெறி பிரச்சனை வரும் என்றோ அல்லது பண பிரச்சனை வரும் என்றோ மிக ரகசியமாக அதனை மறைத்து இருக்கிறார்கள்.

எப்படியோ, முடிவாக ரெபேக்கா ஸ்க்லூட் என்ற பெண் எடுத்த அயராத முயற்ச்சியின் விளைவாக தற்போது ஹென்ரிட்டா பற்றி அறிய முடிகிறது. தானோ தன் குடும்பமோ சுகப்படாவிட்டாலும் கூட, மருத்துவ ஆராய்ச்சி உலகில் தனக்கென்று ஒரு நீங்கா இடம்பெற்று விட்டார் செத்தும் கொடுத்த ஹென்ரிட்டா லாக்ஸ் அவர்கள்.