நீண்ட நாட்களுக்கு பின்னொரு பதிவு. மனதில் நெடுநாட்களாக அரித்து கொண்டிருந்த இந்த விடயம் குறித்து பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா வில் கண்ட கேட்ட கருத்துகளுக்கு பின்னர் இதனை இன்று பதிய முடிவெடுத்தேன்.
சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் வேலை பார்க்கும் சிலருடன் ( அனைவரும் தமிழர்கள் ) சாப்பிட சரவணா பவன் சென்றிருந்தேன். சாப்பாடு முடித்து காப்பி கொண்டு வரச்சொல்லி காப்பியும் வந்தது. அப்போது நான் "காப்பியை ஆற்றி குடிக்கும் போது தான் சுவையே!" என்று சொன்னேன். உடனே என்னுடன் வந்திருந்த சென்னை பெண், "நீங்க pure தமிழ் பேசுறீங்க" என்றாள். " இப்பெல்லாம் யாரும் சுவைன்னு சொல்லதில்ல, எல்லாரும் taste அப்படித்தான் சொல்லுறாங்க" என்றாள்.
அதன் பிறகு இட்லி பற்றிய பேச்சு வந்தது அப்போது நான் " இட்லி ரொம்ப ஆரோக்கியமானது ஏனென்றால் அதை அவிப்பதால்" என்றேன். உடனே சாப்பிட வந்திருந்த பல இளைய தலைமுறை தமிழர்கள் "அவிக்கிரதுன்னா என்ன?" என்றார்கள். எனக்கு தூக்கி வாரி போட்டது. பிறகு அவிப்பது என்றால் என்ன என்று நான் விவரிக்க பிறகு கேட்ட அனைவரும் " oh, steam பண்ணுறது, ஓகே." என்றார்கள்.
மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் மொழி அறிவு முக்கியம். அது எந்த மொழியாயினும் சரி, தமிழ் மட்டும் என்று இல்லை. அனைத்து மொழிக்கும் இதே நிலை என்று தான் தோன்றுகிறது.
இப்படி என்னுடன் அரைகுறை மொழி பேசியஅனைவரும் தமிழ் மொழியை கட்டாய பாடமாக படித்தவர்கள் அல்லர். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை பாடமாக படித்தவர்கள். தமிலிஷ் ஒரு பேச்சு மொழியாகவே இவர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்.
சரி தமிழுக்கு தான் இந்த நிலை என்று நீங்கள் ஹிந்தியிலோ அல்லது வேறு மொழியிலோ கேள்விகள் கேட்டாலோ அல்லது புத்தகங்கள் பற்றி கேட்டாலோ இவர்கள் முழிக்கிறார்கள். எந்த மொழியாயினும் 20 முதல் 100 வார்த்தைகள் மட்டுமே இவர்களுக்கு தெரிந்தது. இவற்றை வைத்து எப்படி சொற்றொடர் அமைப்பது என்று சிலர் கற்று கொண்டு மீதி ஆங்கிலம் கலந்து பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
சரி எல்லாவற்றிலும் ஆங்கிலம் கலக்கிறார்களே இவர்களுக்கு நன்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைத்தால் அதிலும் மண் விழும். பலருக்கு syllable என்றால் என்ன என்று தெரியாது. Soft c, hard c எப்போது உபயோகிப்போம் என்று தெரியாது. இவர்கள் அனைவரும் எந்த ஆங்கில புத்தகத்தையும் படித்திருக்க மாட்டார்கள், அப்படி படித்திருந்தாலும் Sydney Sheldon, Jeffrey Archer உடன் நின்றுவிடும்.
எந்த மொழியும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றிலும் நுனிப்புல் மட்டுமே மேய்வதால் எல்லாவற்றிலும் குழம்பி ஒரு கூட்டான்சோறு மொழியை மட்டுமே இவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது திண்ணம்.
இது நான் சந்தித்த நுனிப்புல் தலைமுறை இளைங்கர்களை பற்றி என் அவதானிப்பு மட்டுமே.
நன்றி.