Thursday, March 13, 2014

காசு, பணம் துட்டு, மணி மணி !

முகநூல், டுவிட்டர், பதிவுலகம், யுடூப், வாட்'ஸ் அப், இன்ஸ்டா கிராம் ... என்று என்னென்ன இருக்கிறதோ அவற்றில் எல்லாம் என்ன நடக்கிறது. சண்டை.., நீ நான் என்ற போட்டி. ஒரு லைக் வாங்குவதற்காக எந்த நிலைக்கும் அளவுக்கும் செல்லும் மனிதர்கள். இவை தான் தற்போது ஒரு பக்கம் இருக்கும் சாதாரண
மனிதர்களின் பக்கம்.
 
 



இப்போது இந்த பக்கத்தை விட்டு விட்டு அடுத்த பக்கத்திற்கு வாருங்கள். அது இப்படி சமூக வலைத்தளங்களே வாழ்க்கை என்றிருக்கும் மக்களை பணச்சுரங்கமாக மாற்றும் அடுத்த பக்கம். இவர்களின் முதலீடு நீங்கள் தான். உங்களின் ஒவ்வொரு அசைவையும் இவர்கள் கவனிக்கிறார்கள். நீங்கள் எந்த பக்கத்துக்கு அதிகம் செல்கிறீர்கள், எத்தனை தடவை செல்கிறீர்கள், என்ன வாங்குகிறீர்கள், அதனை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? எதனை பற்றி அதிகம் தேடுகிறீர்கள். உங்களுக்கு எத்தனை நண்பர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை? அவர்களுக்கு என்ன பிடிக்கிறது, அவர்கள் அதனை தேடுகிறார்கள், அவர்கள் என்ன வாங்குகிறார்கள், அதனை பற்றி என்ன சொல்கிறார்கள்......இப்படி உங்களை பற்றி அனைத்தும் சேகரிப்பது அவர்களின் முதல் வேலை. 

சரி, அடுத்து என்ன செய்கிறார்கள், உங்களிடம் இருந்து சேகரித்த விசயங்களை கொண்டு நீங்கள் இப்படித்தான் என்று ஒரு ப்ரொபைல் உருவாக்குகிறார்கள். அப்புறம் என்ன உங்கள் அனைத்து தளத்திற்கும் நீங்கள் கேட்காமலேயே விளம்பரங்கள் வந்து சேரும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , பார்த்தாலும் பார்க்கவிட்டாலும்  கூட. எவ்வளவு அதிகமாக நீங்கள் சமூக வலை தளங்களை நீங்கள் உபயோகிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள். 

நாம் இங்கு நீ பெரியவனா, நான் பெரியவனா என்று முக நூலில் சண்டை போட போட , அவர்களுக்கு பணம் குவிகிறது.

இப்போது இருக்கும் வேலை வாய்ப்புகளில் அதிக பணம் சம்பளமாக கிடைப்பது "Data scientist" எனப்படும் வேலை தான். இவர்களின் வேலை என்னவென்றால் , இப்படி சமூக வலைத்தளம் அல்லது கூகுள் போன்ற தளங்களில் கிடைக்கும் பொது மக்களை பற்றிய செய்திகளை சேகரிப்பது மற்றும் அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிவது உங்கள் ப்ரொபைல் உருவாக்குவது மட்டுமே.

அதனை கொண்டு, அதற்க்கு ஏற்ப விளம்பரதாரர்களை  அணுகுவது அல்லது விளம்பர தார்கள் இந்த பெரிய சமூக வலைத்தளங்களை அணுகுகிறார்கள். பின்பு, உங்களின் பலவீனம் அவர்களுக்கு காசு, பணம், துட்டு, மணி மணி தான்.