நாவல்கள் படிப்பவர் அனைவருக்கும் அவர்கள் படிக்கும் நாவலின் கதாநாயகர்களை தன் மனதில் ஒருவகையில் கற்பனை செய்து வைத்து இருப்பார்கள். அதுவும் இன்றளவும் அனைவராலும் படிக்கப்படும், விரும்பபடும் பழைய நாவல்கள் எனில் பல தலைமுறை மனிதர்கள் அதனை படித்து பல கற்பனைகள் கொண்டு இருப்பார்கள். உதாரணத்துக்கு "பொன்னியின் செல்வன்" நாவலை சொல்லலாம்.
1950 களில் எழுதப்பட்ட இந்த நாவல் இன்றளவும் விரும்பி படிக்கபடுகிறது, கிட்டத்தட்ட மூன்று தலை முறை மனிதர்கள் இதன் கதாநாயகர்களை தங்கள் ஆதர்சன கதாநாயகர்களாக மனக்கண்ணில் வடித்து இருக்கலாம். ஒவ்வொரு தலைமுறையினரின் வந்தியதேவனும், அருள் மொழியும், குந்தவையும் வேறு வேறாக இருக்கும். அனைத்து தலைமுறை மக்களையும் பூர்த்தி செய்யும்வண்ணம் ஒரு வந்தியதேவனையும், அருள்மொழியையும், குந்தவையும் கண்முன் கொண்டு வருவது சாதாரண காரியம் அல்ல.
இதே போல உலகம் முழுதும் விரும்பி படிக்கப்பட்ட/படுகின்ற ஒரு ஆங்கில நாவல் என்றால் "Sir Arthur Conan Doyle" அவர்கள் எழுதிய "Sherlock Holmes". இதுவரை உலகத்தில் அதிக முறை படமாக்கப்பட்ட, கலை பாத்திரமாக்கபட்ட ஒரு நாவல் கதாநாயகன் இவர் என்ற கின்னஸ் உலக சாதனை கொண்ட நாவல் கதா பாத்திரம் இது. "AVOID STEPPING INTO A GREAT MAN’S SHOES" என்று ஒரு ஆங்கில பதம் உண்டு. இப்படி பல சிறப்புகள் கொண்ட, மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து புகழின் உச்சிக்கு செல்வதென்பது சாதாரண காரியம் அல்ல.
அதே போல பழைய கதாபத்திரத்தை ஆனால் புது யுக சிந்தனைகளும், தொழில்நுட்பங்களும் உபயோகபடுத்தும் ஒரு கதாபாத்திரமாக மாற்றி அனைத்து ரசிகர்களையும் கட்டி போட்ட ஒரு தொடர் மற்றும் அதில் நடித்தவரும் என்றால் அது BBCன் "Sherlock" தொடரும், அதில் ஷெர்லோக் ஆக நடித்த "Benedict Cumberbatch" ம்.
பிரெஞ்சு மொழியில் ஒரு பதம் உண்டு, அது jolie laide ஆங்கிலத்தில் இதனை "beautiful ugly" என்று சொல்லலாம். தமிழில் சொல்ல வேண்டுமானால் அழகான அசிங்கம். இந்த பதத்தை கவனித்து பார்த்தால், பொதுவாக அனைவராலும் அழகு என்று நம்பப்படும் அழகு சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லாத ஆனால் நம்மை கவர்ந்து இழுக்கக்கூடிய அம்சங்கள் நிறைந்தவர். எடுத்துக்காட்டுக்கு தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சொல்லலாம், ஹிந்தியில் ஷாருக்கான் அவர்களை சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒரு நடிகர் Benedict Cumberbatch அவர்கள். நீண்ட முகம், கவர்ச்சியில்லாத கண்கள், ஒட்டிப்போன கன்னங்கள்,ஒல்லியான தேகம் என ஹாலிவூட் எதிர் பார்க்கும் எந்தவித ஒரு கவர்ச்சியும் இல்லாத ஒரு நடிகர் அவர். அவரின் பெயரும் 16 போப்களின் பெயர், பெயரும் சரியில்லை, ஆளும் சரியில்லை என ஒதுக்கப்பட்டவர் அவர்.
BBC முதலில் Sir Arthur Conan Doyleன் நாவலை தொடராக்க முனைந்த போது அவர்களின் மனதில் Sherlock ஆக Benedict இருக்கவில்லை. ஆனாலும் ஷெர்லோக் ஆக அவரும் Dr .வாட்சன் ஆகா மார்டின் ப்ரீனும் தேர்வானபோது இவர்களா என்று முகம் சுழித்தவர்கள் பலர்.
ஆனால் முதல் சீசன் ஷெர்லோக் முடிந்தபோது பெனெடிக்ட் ம் ஷெர்லோக் தொடரும் புகழின் உச்சியில். அப்பொழுது ஆரம்பித்த பெநேடிக்ட்ன் ஏறுமுகம், ஷெர்லோக் 4வது சீசன், star trek, Atonement, The Fifth Estate ...என தொடர்கிறது. சினிமா என்று மட்டும் அல்லாமல் , டிவி, டிராமா, ரேடியோ என்று அனைத்திலும் தன்னுடைய திறமையை நிருபித்து கொண்டு இருக்கும் பெனெடிக்ட், ஹாலிவூடின் மாறும் முகத்திற்கு ஒரு சான்று.
நன்றி.