Tuesday, March 31, 2015

சொந்த ஊருக்கு விடுமுறைக்கு செல்வது போல ஸ்ட்ரெஸ் எதுவும் இல்லை.

இந்தியாவுக்கு சென்று 2-3 வருடங்கள் ஆச்சு? ஒரு ட்ரிப் போடலாமா? அப்படின்னு யோசிச்சா கூட இப்பெல்லாம் பலருக்கு பல்ஸ் எகிறும். ஏனெனில் முதலில் அவர்கள் பார்க்க வேண்டியது டிக்கெட் காசு. இப்போதெல்லாம் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்வதென்றால் குறைந்தது ஒருவருக்கு $1200-$1500 செலவு ஆகும். அதுவும் சீசன் நேரங்களில் இன்னும் அதிகம் இருக்கும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தது $5000 டிக்கெட் க்கு மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். பிறகு ஆபிசில் லீவ் சொல்ல வேண்டும். நிறைய நேரங்களில் 3 வாரம் மட்டுமே லீவ் பலருக்கு கிடைக்கும். ஒரு சிலர் 4 வாரங்கள் எடுத்து கொள்ளலாம். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் இருவரின் லீவும் ஒரு சேர வர வேண்டும், இப்படி பல அட்ஜஸ்ட்மென்ட் உண்டு.

டிக்கெட், லீவ் எல்லாம் கரெக்ட் செய்த பின்பு வருவது தான் "இந்தியா ஷாப்பிங்" ஒரு பெரிய லிஸ்ட் இருக்கும். அதில் வீட்டில் உள்ளவர்களுக்கு, இல்லை தெரிந்தவர்களுக்கு என்று இருக்கும் லிஸ்ட் விண்ணை தாண்டும். அதற்க்கு பட்ஜெட் உண்டு பாருங்கள் அது எப்படியும் டிக்கெட் செலவில் ஒரு கால்பங்காவது இருக்கும், லேப்டாப், ஐபோன், கேமரா  போல கொஞ்சம் காஸ்ட்லி ஐடம்ஸ் என்றால் டிக்கெட் செலவில் பாதி கூட ஆகலாம், இதெல்லாம் அவரவர் வசதியை பொறுத்து. ஆனால் இதில் நாம் டென்ஷன் ஆவது தேடி தேடி அலைந்து வாங்குவது தான். உதாரணமாக சிறு குழந்தைகளுக்கு டிரஸ் வாங்குவது. போன் செய்து குழந்தைகளின் சைஸ் கேட்டு பின்னர் அதே சைஸ் இங்கு கிடைக்குமா என்று பார்த்து அலைந்து வாங்கி ஒழுங்கா அதை கொண்டு சேர்க்க வேண்டுமே என்று நினைத்து கொண்டு சேர்த்து இருப்போம், ஆனால் குழந்தைகளை விட பெற்றோர் முகம் ஒரு மாதிரி செல்லுமே அதனை பார்க்கும் பொது எனக்கெல்லாம் சரி கடுப்பு வரும். போன முறை விடுமுறைக்கு சென்ற பொது சொந்த கார பெண்ணின் மகனுக்கு என்று அலைந்து திரிந்து ஒரு டாம்மி ஹில்பிகர் சட்டை மற்றும் பேண்டு வாங்கி கொண்டு சென்றேன். ஜிகு ஜிகு டிரஸ் போட்டே பழக்க பட்ட அவர்கள், இந்த சட்டையை ஒரு ஆர்வமாக கூட வாங்கி கொள்ளவில்லை. எனக்கு சரி கோவம். அதே போல, பெண் குழந்தைகள் என்றால், நைல் பாலிஷ், மேக்கப் ஐடம்ஸ் என்று பெரிய லிஸ்ட் இருக்கும்.

ஒரு வழியாக ஷாப்பிங் எல்லாம் முடிந்தாயிற்று என்றால் அடுத்தது பயணம்,  குறைந்தது 24 மணிநேர விமான பயணம். அதுவும் சிறு குழந்தைகள் வைத்து கொண்டு செய்யும் பயணம் போல டென்ஷன் வேறெதுவும் இருப்பதில்லை.  குறைந்தது இரண்டு விமானங்கள் மாறி செல்ல வேண்டும். விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் தவிர இடத்தில் சிறு குழந்தைகளை வைத்து கொண்டு, விளையாட்டு காட்டி, விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் ஏற்படும் அழுத்த பிரச்சனைகளால் குழந்தைகள் காதில் உண்டாகும் வலியால் வீல் என்று அலறும் பொது சமாதானபடுத்தி ஊருக்கு போய் சேர்வதற்குள்..அப்பப்பா என்று இருக்கும். பெரியவர்களான நமக்கே ஒரே இடத்தில் உக்கார்ந்து உக்கார்ந்து கால் வலி, அல்லது வீக்கம் வரலாம். சின்ன குழந்தைகளை என்னவென்று சொல்வது. எப்போடா சென்னை போய் சேருவோம் என்று இருக்கும் எனக்கெல்லாம். ஒரு வழியாக, நடு இரவில் சென்னையில் போய் இறங்குவது போல இருக்கும். ஆனால் சென்னை என்னை போன்று பலருக்கு கடைசி பிரயாண இடமாக இருப்பதில்லை. அடுத்து மதுரை, கோவை என்று பல தொடர் விமானம் இருக்கும். நம்மநாட்டுக்கு  வந்துட்டாலும் சொந்த ஊருக்கு செல்ல இன்னும் சில மணி நேரங்கள் காத்து இருக்க வேண்டி வரும். அதுவும் சிறு குழந்தையுடன் என்றால் சொல்லவே வேண்டாம்.

சொந்த ஊருக்கு வந்தால் அடுத்து நாம் மற்றும் நம் குழந்தைகள் சந்திப்பது காய்ச்சல் அல்லது சளி. ஊருக்கு வந்து ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இது வந்து விடும். அடுத்து வெட்கை அல்லது சூடு, கொசுகடி என்று பல சிறு குழந்தைகளுக்கு உடல் முழுதும் கொப்புளம் வந்து விடும். நிறைய குழந்தைகளுக்கு  அலர்ஜி ஏற்பட்டு விடும்.  டாக்டரிடம் சென்றால் ஊசி போடுவேன் என்பார்கள், இங்கிருக்கும் பழக்கத்தில்  "எதற்கு ஊசி போடுகிறீர்கள்", என்று கேட்க முடியாது. உடனே "வந்துட்டன்கப்பா NRI ஸ்" அப்படின்னு கிண்டல் வரும். காரணம் சொல்ல மாட்டார்கள். முகுந்த் 10 மாத குழந்தையாக இருந்த பொது இந்திய அழைத்து சென்றிருந்தேன், உடல் எல்லாம் கொசு கடியில் கொப்புளம் பின்னர் காய்ச்சல் என்று டாக்டரிடம் அழைத்து சென்றோம். உடனே அந்த டாக்டர், அண்டிபையடிக் எழுதி கொடுத்தார். எதற்கு அண்டிபையடிக்? என்று டாக்டரிடம் நான் கேட்க்க, அது வைரல் இன்பிக்க்சன் மாதிரி இருக்கு அதனால தான் என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. "என்ன டாக்டர் இது, வைரல் இன்பாக்சனுக்கு அண்டிபயாடிக் ஆ", என்று உடனே கேட்டு விட்டேன். இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத அவர் சமாளித்து கொண்டு, ear infection இருக்கு அதனால என்று சமாளித்தார். பின்னர் என் அம்மாவிடம் "typical NRI" என்று சொல்லி இருக்கிறார். கேள்வி கேட்டால் இப்படி கிண்டல் செய்ய வேண்டியது.

அடுத்து ஒவ்வொரு முறை இந்தியா செல்லும் போதும்  நான் ரொம்ப அனுபவிப்பது என்றால், சொந்த காரங்க வீட்டுக்கு செல்வது. நாம் சென்றிருப்பதோ 3 அல்லது 4 வார விடுமுறை. அதிலும்" ஏன் வீட்டுக்கு வரல, அவங்க வீட்டுக்கு மட்டும் போயிருக்க" என்று நமது சொந்தகள் செய்யும் டிராமா இருக்கிறதே..ஐயோ சாமி ஆளை விடுங்க என்றிருக்கும். அதிலும்நாமிருப்பது  மதுரை என்றால், கோவை, சென்னை, பாண்டிச்சேரி பெங்களூர் என்று பல இடந்திலும் இருப்பார்கள். உள்ளூருக்குள்ளே நிறைய சொந்தங்கள் இருந்தாலும் தினமும் யாராவது வீட்டுக்கு வருவார்கள் அல்லது நாம் சென்று பார்க்க வேண்டி வரும். வருபவர்கள் எல்லாருக்கும் ஏதாவது அமெரிக்கா பொருள் கொடுக்க வேண்டும், அது சாக்லேட் அல்லது நட்ஸ் என்று ஏதாவது இருக்க வேண்டும். நெருங்கிய சொந்தம் என்றால் நம்மிடம் "பெரியதாக" எதிர்பார்பார்கள். நாம் அவர்களுக்கு ஏற்ற்றார் போல எதுவும் செய்யவில்லை என்றால், முகத்தைப் காட்டுவார்கள்.

எனக்கு மிகவும் காமெடியாக அதே சமயம் கடுப்பகுவது என்னவென்றால், எதோ நாமக்கெல்லாம் காசு வானத்தில் இருந்து கொண்ட்டுகிறது போல இவர்கள் நினைப்பதே. ஏற்கனவே நிறைய காசு செலவு செய்து இந்தியா சென்றிருப்போம், அங்கு சென்று கொஞ்சம் பணத்தை எண்ணி செலவு செய்தால், "என்னமா வெளி நாட்டு சம்பாத்தியம், இப்படி பார்த்து பார்த்து செலவளிக்கிற" என்பார்கள். அப்போது வரும் டென்ஷன் பயங்கரமாக இருக்கும்.

இங்கிருந்து அங்கு சென்று முதல் ஒரு வாரம், நேர வித்தியாசம் பழக சரியாக இருக்கும். இங்கு இரவென்றால் அங்கு பகல் என்றிருக்கும் நாம் அங்கு சென்று இரவில் முழித்து கொண்டிருப்போம், பின்னர் பகலில் எழுந்து உக்கார்ந்து கொண்டிருப்போம். ஒரு வழியாக டைம் செட் ஆகி இருக்கும் நேரம், திரும்ப வர வேண்டிய நேரமாகிவிடும். பின்னர் மறுபடியும் இங்கு வந்து அதே டைம் பிரச்னை சந்திக்க வேண்டி இருக்கும்.


முடிவாக விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்பியாயிற்று , விமான நிலையத்தில்  சொந்த பந்தங்களை  பார்க்கும் பொது கண்ணில் ஒரு துளி நீர் கட்டாயம் வரும். "அடுத்து எப்போ வருவ?" என்று கேட்கும் வார்த்தைகளை கேட்டு அழுகை வந்துவிடும். என்ன செய்வது, எத்தனை ஸ்ட்ரெஸ்..என்றாலும் ஊருக்கு செல்வது என்பது ஒரு சந்தோசம் தான்.

நன்றி..

Sunday, March 29, 2015

தனிமை கொடியது!

சமீபத்தில் "The Iron Lady" படம் பார்க்க நேர்ந்தது. பிரிட்டனின் முன்னால் பிரதமர் திருமதி மார்கரெட் தாட்செர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்டது.  ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்த மெரில் ஸ்ட்ரீப் அவர்கள் மார்கரெட் தட்செர் ஆக நடித்து அசத்தி இருந்தார்கள். அதுவும் வயதான தட்சேர் ஆக அவர் நடிப்பு பிரமாதம்.



நான் மார்கரெட் தட்சேர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முன் வாசித்ததில்லை, அறிந்ததில்லை. முதல் பெண் MP ஆக பாராளுமன்றம் சென்று படிப்படியாக முன்னேறி பிரதமர் ஆகி, பல கடுமையான முடிவுகள் எடுத்து அதன் லாப நஷ்டங்களை எதிர்கொண்டு எப்பொழுதும் தன் முடிவில் பின் வாங்காமல் நிலையாக நின்று சாதித்த பெண் அவர்.அந்த படமும் அவரின் அரசியல் வாழ்கையை விட்டு விட்டு அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நிறைய சொல்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் கணவர் டேனிஸ் உற்ற துணையாக இருந்தது. அவரின் இரட்டை குழந்தைகளை கவனிக்க நேரமில்லாமல் பிரத்தமராக அவர் போராடியது, அவரின் கணவர் இறந்த பிறகு தனிமை உணர்வுடன் தன் கணவர் தன்னுடன் வாழ்வதாக அவர் கற்பனை செய்து வாழ்ந்தது, முடிவில் பைத்தியமா ஆனது  ....என்று நிறைய சொல்கிறது.

இந்த படம் பார்த்தபிறகு எனக்கு என் பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு பாட்டியம்மா நினைவுக்கு வந்தார்கள். எப்படியும் வயது 85 இருக்கும். தனியாக ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறார்கள். பண விசயத்தில் பிரச்னை இல்லை. ஆனால் யாரும் பார்த்து கொள்ள இல்லை ஒரு நர்சை தவிர. அவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து போனார். அவரின் 60வயது மகன் வந்து வீட்டு வேலை செய்வார். எப்போது யார் அவர் வீட்டு வழி சென்றாலும் கூப்பிட்டு வைத்து பேசுவார். எப்போது முகுந்த் சென்றாலும் "Hello Mr.Little man" என்று பேசுவார். காது சரியாக கேட்காது என்றாலும் ஏதாவது பேசி கொண்டே இருப்பார். எப்படியும் அவரிடம் சென்றால் குறைந்தது 15 நிமிடங்களாவது ஆகும். வாக்கிங் போகும் அனைவருடனும் பேசி விடுவார். அந்த நெய்பர்ஹூடில் இருக்கும் அனைவரையும் அந்த பாட்டியம்மாவிற்கு தெரியும். தன்னுடைய தனிமையில் இருந்து தப்பித்து கொள்ள இப்படி ஒரு வழி அவர்க்கு.

அதே போல எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுகாரர் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன் கான்சரில் இறந்து போனார். கிட்டத்தட்ட 4-6 வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்தஅவரை இவர் கண்ணும் கருத்துமாக  கருத்துமாக பார்த்து கொண்டார். செர்வீஸ் வைத்து இருந்தார்கள். நாங்கள் சென்றிருந்த பொது அவர் கண்ணீருடன் சொன்னது இது "நோயாளியாக இருந்தாலும் யாரோ ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்ற நினைவு நிம்மதியாக இருந்த்தது, ஆனால் இப்போது வீட்டில் இருக்கும் வெறுமை கொடுமையாக இருக்கிறது.இப்போதும் அவள் இறந்த 4 மணிக்கு எனக்கு முழிப்பு வந்து விடுகிறது" என்று சொன்னதும் எல்லாருக்கும் கண்கள் கலங்கின.

என் அப்பா இருந்த வரை என் அம்மாவும் அப்பாவுக்கும் இடையே ஏதாவது சொல்லி கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு என் அம்மாவிடம் தினமும் என் அப்பா பற்றிய பேச்சு வராமல் இருந்ததில்லை. எல்லாரும் இருந்ததாலும் தன் வாழ்க்கை துணை கூட இருப்பது போல இருப்பதில்லை. ஆணாக இருந்ததாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமை அதுவும் வாழ்க்கை துணை இல்லாத தனிமை மிக கொடுமையானது.  சண்டை போட்டுகிட்டே இருந்தாலும் சரி,
நோயாளியாக இருந்ததாலும் சரி கூட இருக்கும் தன வாழ்க்கை துணை இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இது எந்த நாடாக இருந்தாலும் சரி இல்லை எந்த இனமாக, மதமாக, நிறமாக இருந்தாலும் சரி எல்லா மக்களுக்கும் பொது. தனிமை கொடியது.

நன்றி








 

Friday, March 27, 2015

நாம் குடிக்கும் பாலும், சாப்பிடும் இறைச்சியும் பாதுகாப்பானதா?


சமீபத்தில் நியூ சயின்டிஸ்ட் இதழில் ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது? அது சொல்வது இதுதான், நம்முடைய இறைச்சி வேட்கையால் சூப்பர் பக் எனப்படும் அண்டிபயாடிக் பாக்டீரியாக்களை வளர்கிறோம் என்பது.


Chinese chickens: hotbeds for antibiotic resistance (Image: Imaginechina/REX)



நான் ஒரு ஸ்டெப் பின்னோக்கி சென்று இதனை பற்றி யும் இதனுடன் தொடர்புடைய சில பற்றியும் விரிவாக விவரிக்க எண்ணுகிறேன். முதலில் சில அனுமானிப்புகள். இப்போதெல்லாம் 9-10 வயதில் சிறு பெண்கள் வயதுக்கு வந்து விடுகின்றனர், ஏன்?. அதே போல சிறு வயதில் அதிக எடையுடன் இருக்கும் குழந்தைகள் காணலாம். இந்தியாவில் தற்போது பாதி மக்களுக்கு சக்கரை வியாதி இருக்கிறது. புது புது காய்ச்சல்கள் வருகின்றன, வித வித பாக்டீரியாக்கள் கேள்விபடுகிறோம், அதே போல அன்டிபையடிக்ஸ் கொடுத்தும் சரியாகாத காய்ச்சல்கள் அல்லது கொல்லபடாத பாக்டீரியாக்கள் அதிகரிகின்றன.

அதே போல சமீபத்தில் இந்தியா சென்றிந்த போது கண்டது. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் குடும்பம் பால் பண்ணை வைத்திருக்கிறார்கள் . பால் சுரப்பு கூட்ட அல்லது பால் வற்றிபோகாமல் இருக்க என்று இப்போது ஊசி போடுகிறார்கள். என்ன ஊசி என்று பார்த்ததில் rbGH எனப்படும் மரபணு மாற்று பொவைன் க்ரௌத் ஹார்மோன், அதாவது கர்ப காலத்தில் அல்லது பாலூட்டும் காலத்தில் இயற்கையாக பசுக்களுக்கு அல்லது மாடுகளுக்கு சுரக்கும் ஒரு ஹார்மோன் இது ஆனால் இவர்கள் போடும் ஊசி மரபணு மாற்று செய்யப்பட்ட ஹார்மோன். அதனால் பால் சுரப்பு என்பது பாலூட்டும் காலத்தை போல அதிகரிக்கும்.  ஊசி போட்ட 15 நிமிடத்தில் பால் கொட்டுகிறது. அது நல்லது தானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அது என்ன உடல் மாற்றத்தை பசுக்களுக்கு ஏற்படுத்திகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். பசுக்கள் எப்படி ஆனால் நமக்கென்ன என்று நினைப்பவர்களுக்கு, அப்படி ஊசி போட்டு கிடைக்கும் பாலில் rbGH அளவு அதிகம் இருக்கும். அதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு இது. பசுக்களின் rbGH மனிதனுக்கு இருக்கும் hGH க்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஹுமன் க்ரோத் ஹார்மோன் என்பது மனித இனப்பெருக்க உறுப்புகளை வளர வைப்பது. இப்படி அதிக ஹார்மோன் ஊசி போட்டு சுரப்படும் பாலை குடிக்கும் சிறு குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வரலாம்.  


இது ஒரு புறம் இருக்க, இப்போதெல்லாம், எங்கே பார்த்தாலும் சிக்கன் சிக்கன் என்று சகலமும் மாறி கொண்டு இருக்கிறது. சிக்கன் சாப்பிடாத மக்களை மனிதர்களாக கூட பார்ப்பதில்லை என்று நினைக்கிறன். ஆனால் அந்த சிக்கன் எப்படி தயாரிக்கபடுகிறது எப்படி பராமரிக்க படுகிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். தயவு செய்து Food Inc. டாகுமெண்டரி பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்.



சிக்கன் நன்றாக கொழு கொழு என்று நோய் இல்லாமல் வளர வேண்டும் நிறைய அண்டிபையடிக்ஸ் சேர்கிறார்கள். ஆனால் என்ன பின்விளைவுகள் வருகின்றன என்பதை தான் நியூ சயின்டிஸ்ட் கட்டுரை சொல்கிறது. பாக்டீரியாக்கள் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அதிகரிக்க, அவற்ற்றை குணப்படுத்த முடியாத அளவு சூப்பர் பக் ஆக மாறி விடும் அபாயம் இருக்ககிறது. இதுவரை, MRSA, VRE, காச நோய் மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அறியப்பட்டு இருக்கின்றன. மருத்துவ மனைகளுக்கு பெரிய தலைவலி ஏற்படுத்தி இருக்கின்றன.


இதற்க்கு தீர்வு என்ன, முடிந்த அளவு, rbGH உபயோகிக்காத பால் மற்றும் இயற்கையாக வளர்க்கப்பட்ட கோழிகளை சாப்பிடுவது மட்டுமே, இல்லையேல் நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு கெட்டுபோன உடல்நலத்தையும் , நோய்களையுமே விட்டு செல்வோம் நாம்.

நன்றி.

Thursday, March 26, 2015

ABCD பெண்கள் சந்திக்கும் விமர்சனங்கள்

 அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய அமெரிக்கர்கள்  அதுவும் 70-80 களில் இங்கு வந்து செட்டில் ஆன இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் முக்கியமாக  பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கிய விஷயம் "டேட்டிங் மற்றும் கல்யாணம்".  ABCD ஆக இந்திய அமெரிக்க கலாச்சார கூட்டஞ்சோறு போல வளரும் இவர்கள், இந்திய கலாச்சாரத்துடன் ஓட்ட முடியாமல் அமெரிக்க கலாச்சாரத்துடனும் சேர முடியாமல் இருப்பதை காண முடியும். அதாவது இங்கு இருக்கும் கலாச்சாரம் போல பருவ வயதை அடைந்தவுடன் தன் மகளோ மகனோ "டேட்டிங்" போகவில்லை என்றால் ஏதோ பிரச்சனை அவர்களுக்கு என்று டாக்டரிடம் அழைத்து செல்லும் பெற்றோர்களை கண்டு இருக்கிறேன். நம் கலாச்சாரத்தை பின்பற்றி குழந்தைதைகளை வளர்க்கும் பல பெற்றோர் டேட்டிங் செல்ல அனுமதிப்பதில்லை. அதே போல பாலியல் பற்றிய பல விசயங்களை சொல்லி தருவதும் இல்லை. எல்லாம் தங்களின் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்கிறார்கள் இந்திய குழந்தைகள். அழகுணர்ச்சி பற்றியோ, சுத்தம் பற்றியோ இங்கிருக்கும் பெற்றோர் போல பெண் குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர் சொல்லி தருவதில்லை. படிப்பில் காட்டும் கவனம் மற்ற இங்கிருக்கும் சொஸைட்டியில் வாழ வேண்டும் என்றால் மற்ற விசயங்களிலும் வேண்டும் என்று பல பெற்றோர் அறிவதில்லை, சொல்லி கொடுப்பதில்லை.

கல்யாணம் என்று வரும் போது இந்திய ஆண்களை அல்லது பெண்களை தங்கள் குழந்தைகளுக்கு மனமுடிக்கவே இன்னும் பல NRI  பெற்றோர் விரும்புகின்றனர். கருப்பு, வெள்ளை, ஸ்பானிஷ் போன்ற பல இன ஆண்கள் அல்லது  பெண்களை தங்கள் குழந்தைகள் டேட்டிங் செய்தால் டென்ஷன் ஆகும் பெற்றோர் அதிகம்.

இப்படி பொத்தி பொத்தி இந்திய கலாச்சாரத்துடன் வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் முக்கியமாக தென் இந்திய பெண்கள் இன்னும் இந்திய பெண்கள் போல்  பல விசயத்தில் விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் இந்தியாவில் இருந்து இங்கு மேல் படிப்பு படிக்க வரும் பல பெண்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளும் இங்கே.

(இது நான்இங்கிருக்கும் இந்திய  பெண்களை அதுவும் தென் இந்திய பெண்களை  வைத்துஅவர்களிடம் பேசியதை வைத்து எழுதியது பொதுப்படையானது அல்ல ).  இந்திய பெண்கள் மீது வைக்கப்படும் சில விமர்சனங்கள் இங்கே.

1. இந்திய பெண்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லை. இந்திய உடை தவிர எதனையும் எப்படி உடுத்த வேண்டும் என்று தெரியாது

2. இந்திய பெண்கள் ஹெல்த் கான்சியஸ் இல்லை, தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்வது இல்லை. வயதில் ஒல்லியாக இருக்கும் பல பெண்களும், கல்யாண ரிங் மாட்டி விட்டால் பலூன் ஆகி விடுகிறார்கள். 35 வயது கடந்த ஒல்லியான அழகான இந்திய பெண்ணை காண்பது மிக அரிது. ஆனால் 40 வயதானாலும் அழகாக சிக்என்று இருக்கும் பல வேறு இன பெண்களை காணலாம். உதாரணமாக ஐரோப்பா பெண்கள் பலருடைய வயதையும் கணிக்க முடியாது.


3. அழகுணர்ச்சி கிடையாது, உடல் சுத்தம் என்பது கிடையாது, சில பெண்கள் அருகில் செல்ல முடியாத அளவு வியர்வை நாற்றம் இருக்கிறது, அல்லது ரோமங்கள்.

4. இந்திய பெண்கள் "அர்குமேண்டடிவ்" அனைத்தையும் டிராமடைஸ் செய்வார்கள். நிறைய பேசுவார்கள் சண்டை போடுவார்கள். நிறைய தொலைக்காட்சி தொடர்கள் பார்பதாலோ என்னவோ, எல்லாவற்றியும் டிராமா செய்து விடுவார்கள்.

5. எப்போதும் தன் இன மக்களுடன் தான் சேர்வார்கள், அடுத்த மக்களுடன் கலந்து பேசவோ, அவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வோ பழகவோ மாட்டார்கள். பல இந்திய பெண்கள் சோம்பேறிகள். தான் ஒன்றும் வேலை செய்ய மாட்டார்கள் ஆனால் செய்பவர்களை பற்றி நிறைய புரண் பேசுவார்கள்.

6. தன் கலர் பற்றி அல்லது இனம் பற்றி எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்.


இதனை போன்ற விமர்சனங்களை நான் கேட்கும் போது எனக்கு பயங்கர கோவம் வந்தது. ஆனால்
Lets face it ladies. இதில் சொல்லப்பட்ட பல விசயங்களை நானே பார்த்து இருக்கிறேன் உணர்ந்து இருக்கிறேன். அதனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் பொய் என்று நம்மை degrade செய்கிறார்கள் என்று  என்னால் தள்ள முடியவில்லை.

உதாரணமாக பெண்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லை என்பது , இந்திய உடை தவிர மற்றெதுவும் உடுத்த தெரியாது என்பது . எனக்கு தெரிந்து நான் பார்க்கும் பல பெண்கள் உடுத்தும் உடை பார்த்தால் நமக்கு ஐயோ என்று தோன்றும். ஒழுங்காக உடை உடுத்த ஒல்லியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நல்ல பிட்டிங் இருந்தால் போதும் டீசென்ட் உடை உடுத்த..ஆனால் பல நேரங்களில் ஆபிசுக்கு கூட சரியான பிட்டிங் இல்லாத உடல் பிதுங்கும் படி உடை உடுத்துபவர்களை நானே பார்த்திருக்கிறேன்.

அதே போல உடல் சுத்தம், நான் அதிகம் கவனித்தது இது, பல பெண்கள் பக்கம் செல்ல முடியாத அளவு வேர்வை நாற்றம் அல்லது உடல் நாற்றம் இருக்கும். ஆபிசுக்கு கூட இப்படி வருபவர்களை பார்த்தால் எனக்கு கோவம் கோவமாக வரும். நீங்கள் செல்வது பொது இடத்திற்க்கு, சில Etiquette உண்டு பெண்களே. எல்லாவற்றியும் பின்பற்ற முடியவில்லை என்றாலும் ஒரு சிலவற்றை முடிந்த அளவு பின்பற்றுங்கள் என்று சொல்ல தோன்றும்.

"அர்குமேண்டடிவ்" என்பது நிறைய பார்த்து இருக்கிறேன்.  அதே போல நிறைய புரண் பேசுவது, நிறைய தொலைகாட்சி தொடர் பார்த்து அதே போல நினைத்து டிராமாடைஸ்  செய்வது பார்த்து இருக்கிறேன். ப்ளீஸ், ஸ்டாப் இட் கேர்ள்ஸ், என்று பல நேரங்களில் எனக்கே தோன்றி இருக்கிறது. 


அதே போல எப்போதும் தன இன மக்களுடன் சேருவது. இந்தியர்கள் இந்தியர்களுடன் மட்டும் பேசுவது என்பது எல்லாம் போய், தமிழ் என்றால் தமிழ் மக்கள் குரூப் ஒன்று இருக்கும். தெலுங்கு என்றால் தெலுங்கு மக்கள் குரூப் என்று ஒன்று இருக்கும்...அங்கேயும் இவர்கள் பேசுவது எல்லாம், சினிமா, மேக்கப் அல்லது மாமியார் மருமகள் பிரச்னை.ஐயோ சாமி என்றிருக்கும்.  ஆபிசில் கூட இந்த குரூப் கலாச்சாரம் அதிகம் உண்டு.


வெளி நாடுகளில் வாழ போகிறீர்கள் அல்லது உங்கள் குழந்தை வாழபோகிறது என்றால் தயவு செய்து, மற்ற மக்களிடம் பழகும் முறை, அடுத்த மக்களின் பழக்கவழக்கங்கள், எப்படி சுத்தமாக இருப்பது, எப்படி ஹெல்த் கான்சியஸ் ஆகா இருப்பது, போன்ற பலவும் சொல்லி கொடுங்கள் உங்கள் பெண்களுக்கு.

முடிவாக இங்கு எழுதப்படிருக்கும் பலவும் என் அனுபவத்தில் நான் கண்ட கேட்ட, உணர்ந்த விசயங்களை கொண்டு எழுதியது. யார் மனதையும் புண் படுத்த அல்ல.

Tuesday, March 24, 2015

புதுமைகளாகும் நமது பழைய பழக்கவழக்கங்கள்!

சில நாட்களுக்கு முன் தொண்டை கமறல் எடுக்கிறது, அலர்ஜியாக இருக்கலாம் என்று என் கூட வேலை பார்க்கும் அமெரிக்கரிடம்  சொல்லி கொண்டு இருந்தேன். உடனே அவர், "Have Turmeric Milk and Honey" என்றார். அட பாவி, என் அம்மா எப்போது சளி பிடித்தாலும் "மஞ்சள் பொடி பால்" கொடுத்து படுத்துவார்கள். அப்பொழுது எல்லாம், உங்க வைத்தியத்தை என்கிட்டே கொடுக்காதீங்க என்று சண்டை போட்டு இருக்கிறேன். ஆனால் அதுவே இப்பொழுது நிறைய மக்கள் இங்கே செய்கிறார்கள்.

அதே போல, எப்போது தலை வலி தலை  பாரம் என்றாலும் எங்கள் வீட்டில் ஆவி பிடிக்க சொல்வார்கள். அது இந்த ஊரில் ஸ்டீம் பாத், சைனஸ் பிரச்னை என்று டாக்டரிடம் நீங்கள் சென்றாலும் அவரும் இதையே தான் சொல்வார், ஏனெனில் சைனஸ் குழாய் சிறியது அதில் ட்ரைனஸ் காரணமாக பாக்டீரியா தாக்குதல் இருக்கலாம் அதனால் தலை பாரம் என்று ஆரம்பிக்கும் போதே ஆவி பிடிப்பதின் மூலம் ஈரப்பதம் தக்க வைக்க படுகிறது.

எங்கள் வீட்டில் தினமும் தயிர் சாப்பிட சொல்வார்கள் அதுவும்  வீட்டில் தோய்த்த தயிர். அப்பொழுதெல்லாம் காரணம் தெரியாத எனக்கு இப்போது probiotic, probiotic என்று எங்கு பார்த்தாலும் ஒரே புலம்பலாக இருப்பதை பார்த்து சிரிக்க தோன்றுகிறது. probiotic என்பது நம் உடலுக்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அவை வீட்டில் தயிர் தோய்பதால் இயற்கையாகவே நமக்கு கிடைக்கிறது. உடலுக்கு நன்மையையும் பயக்கிறது.

இன்னொன்று எனக்கு சிரிப்பை தந்தது, போன வாரம் முகுந்த் க்கு உடம்பில் ராஷ் என்று டாக்டரிடம் அழைத்து சென்ற பொது அவர் சொன்னது "Apply cocunut oil, thats best moisturizer " என்று. அட போங்கப்பா...எங்க அப்பா சின்ன வயதில் அடிக்கடிஎங்களிடம்  சொல்வது
 இது தான், "தேங்காய் எண்ணெய் தடவு தினமும்" என்று. இது இப்போதெல்லாம் புது trend இங்கே.
 தலையில் தடவுகிறார்கள். நாங்க எல்லாம் டெய்லி எண்ணெய் தடவுற ஆளுங்கப்பா 
எங்க கிட்டயேவா என்று கேட்க்க தோன்றுகிறது.

அதே போல, புது beauty secret என்று என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் வந்து ஒரு கிரீம் பற்றி சொன்னாள் . உடல் பளபளா என்று ஆகும், சுருக்கங்கள் இருக்காது என்ரெல்லாம் சொன்னதை பார்த்து ,  என்னவென்று அதன் contents பார்த்தால் எல்லாம் மஞ்சள், aloevera என்றிருந்தது. இதை தானே எங்க அம்மா சிறு வயதில் இருந்து மஞ்ச தேச்சு குளி  என்று சொல்வார்கள் என்று நினைத்து கொண்டேன்.

"History and fashion repeats itself " என்பார்கள். பல விசயத்தில் அது உண்மையாகவே  இருக்கிறது.


Sunday, March 22, 2015

சிறு குழந்தைகள் காய்ச்சலில் மெத்தனம் வேண்டாம்!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

சில குடும்பங்களை வீட்டுக்கு கெட் டுகெதர் க்கு அழைத்து இருந்தோம். எல்லா குழந்தைகளும் நன்கு விளையாடி கொண்டிருந்தன. அவற்றில் ஓரூ 2 வயது சிறுவனும் அடங்குவர். நன்றாக விளையாடி கொண்டிருந்த அவன் திடீரென்று நடுங்க ஆரம்பித்து விட்டான். உடனே temperature பார்த்ததில் 101 காட்டியது. ஐபுப்ரொபின் கொடுத்து விட்டோம். அவன் உடைகளை கலைந்து ஸ்பான்ஜ் பாத் கொடுக்க ஆரம்பித்தோம். ஆனால் சிறிது நேரத்தில் அவனுக்கு வலிப்பு வந்து விட்டது. உடல் வெப்பநிலை திடீரென்று அதிகரிக்கும் பொது மூளை இப்படி ரியாக்ட் செய்கிறது.
உடனே 911 அடித்து பரமேடிக்ஸ் வந்து விட்டார்கள். அவர்கள் பார்க்கும் பொது அவன் உடல் 104 ஐ  கடந்து இருந்தது. 20 நிமிடத்திற்குள் 2-3 டிகிரி வெப்ப நிலையை சிறு உடல் தாங்கி கொள்ள இயலவில்லை, வலிப்பு வந்து விட்டது.  அந்த சிறுவனுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் விட்டு விட்டு வந்திருக்கிறது என்ன செய்ய போகிறது என்று இவர்கள் மெத்தனமாக இருந்து இருக்கிறார்கள்.

இப்படி வலிப்பு வந்து விட்டால் உடனே இரும்பு போன்ற எதையும் கையில் கொடுக்காதீர்கள், உடலில் உள்ள ஆடைகளை அவிழ்த்து நிறைய தண்ணீர் ஒத்தடம் கொடுங்கள், நிறைய காற்று படும் இடத்திற்கு குழந்தையை தூக்கி சொல்லுங்கள், தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம். இப்படி காய்ச்சலால் வரும் வலிப்பு 3 நிமிடத்திற்குள் இருக்கும். குழந்தை பிறந்த 30 நாட்களுக்குள்  இருப்பின் உடல் வெப்பம் 100.4 டு 101 காட்டுகையில் மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. இப்படி அழைத்து செல்வது Meningitis போன்ற மூளை காய்ச்சல் வருவதை தவிர்க்கும். மூளை காய்ச்சல் கவனிக்காமல் விட்டால் வலிப்பு, பேச்சுத்திறன் இழத்தல், கண்பார்வை இழத்தல் போன்ற பல ஆபத்துகளை ஏற்படுத்த வல்லது.

அதே போல 5 வயதிற்கு கீழே உள்ள குழந்தைக்கு காய்ச்சல் ஐபுப்ரொபின்  6-8 மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுத்தும் ககுறையாமல்  இருந்தால் TYLENOL இடையே 4-6 மணி நேரத்திக்கு ஒரு முறை கொடுக்கலாம். உடல் வெப்பநிகை 101 ஐ தாண்டாமல் பார்த்துகொள்வது மிக அவசியம்.

இன்னும் சில அனுபவ குறிப்புகள்.

சிறு குழந்தைகள் 3-4 நாட்களாக DRY COUGH  எனப்படும் வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் கொண்டிருந்தால் ear infection ஆக இருக்கலாம்,

சிறு குழந்தைகளுக்கு சளி, மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் இருப்பின் வைரல் காய்ச்சல் ஆக இருக்கலாம். சளியின் நிறத்தை வைத்து bacterial அல்லது vairal  infection என்று சொல்கிறார்கள். அதாவது சளியின் நிறம் தெளிவாகவோ அல்லது வெள்ளையாகவோ இருந்தால் அது viral , அதுவே மஞ்சள் அல்லது பச்சையாக இருப்பின் அது bacterial infection.

VIRAL என்றால் antibiotics தேவை இல்லை , சில நேரங்களில் நிறைய வாந்தி அல்லது வயிற்ருபோக்கு இருக்கும். நிறைய தண்ணீர் கொடுங்கள். pedialite கொடுக்கவும். BRAT டயட் அதாவது, பிரட், அரிசி கஞ்சி, ஆப்பிள் sauce ,வாழைபழம் கொடுக்கவும் .

Bacterial  infection என்றால் Antibiotics கொடுப்பார்கள்.10
நாளைக்கு கொடுக்கிறார்கள் என்றால் 10 நாட்களும் கொடுக்க வேண்டும்.
இடையே காய்ச்சல் சரியானாலும் கூட.ஏனெனில் FULL COURSE கொடுப்பது பாக்டீரியாவை முழுதும் கொல்ல உதவும்.இடையே நிறுத்தினால் பாக்டீரியா மீண்டும் வளர வாய்ப்புள்ளது,
சில நாட்களில் மறுபடியும் காய்ச்சல் வரலாம்.

கவனிக்கால் விடப்பட்ட VIRAL INFECTION  சில நேரங்களில் BACTERIAL உடன் சேர்ந்து
co -infection  ஆகலாம். அது ஆபத்தானதாக முடியும்.

முடிவாக, சிறு குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலை அலட்சியம் செய்யாதீர்கள்.

நன்றி

Friday, March 20, 2015

பெண்களும், வேலையும், குடும்பமும் !




எனக்கு தெரிந்தே இது இரண்டாவது விவாகரத்து இந்த வருடத்தில். வருடம் ஆரம்பித்து மூன்று மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் இரண்டு விவாகரத்து கேள்வி படுகிறேன்.

இந்த இரண்டு விவகாரத்து செய்து கொண்ட  கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும், அதுவும் ஹை பிரஷர் வேலை பார்க்கும் நபர்கள் . ஒன்று அமெரிக்க தம்பதிகள், மற்றொன்று இந்திய-அமெரிக்க கலப்பு  தம்பதிகள். நன்கு படித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள். 40 வயது தாண்டியவர்கள் இவர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள். பத்து -பதினைந்து வருட திருமணதிற்கு பிறகு இப்போது விவாகரத்து. எங்கே தப்பானது என்று தெரியவில்லை.  ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. படிக்கும் பொது காதலிக்க ஆரம்பித்து, திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்கள். ஆரம்பிக்கும் பொது சம நிலையில் இருந்த இவர்களின் பொருளாதாரம் படிப்படியாக மாறி இருக்கிறது. மனைவி மேல் படிப்பு படித்திருக்கிறார் அல்லது நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கிறார் அல்லது மிக அதிக பிரஷர் உள்ள வேலை அல்லது தொழில் தொடங்கி இருக்கிறார்.

கணவனும் மனைவியும் வீட்டு நிர்வாகத்தில் பொருளாதாரத்தில் சமமாகவோ அல்லது அதிகமாக பங்கெடுக்கும் போதோ அல்லது, கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதோ அல்லது கணவனை விட மனைவி அதிகம் படித்திருக்கும் போதோ ஈகோ பிரச்சனைகள் தலையெடுக்க ஆரம்பிக்கின்றன.

எனக்கு தெரிந்து அமெரிக்க பல அமெரிக்க வீடுகளில் கூட ஆண்கள் வேலைக்கு செல்வதும் பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொள்வதும் தான் இருக்கும்.  உலகத்தில் பரவலாக இருப்பது போல பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும், சமைக்க வேண்டும் ,ஆண்கள் இதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்பன போன்ற எதுவும் இருப்பதில்லை. எனக்கு தெரிந்தே என் கூட வேலை பார்க்கும் பல ஆண்கள்  வீட்டில் தினமும் சமைப்பது உண்டு. சொல்ல போனால் என்னுடன் வேலை பார்த்த ஒருவரின் மனைவிக்கு சுத்தமாக சமைக்கவே தெரியாது. எல்லாம் இவர் தான் செய்வார்.

இப்படி வீட்டு வேலை செய்வதில் பாகுபாடெல்லாம் பார்க்காத இந்த ஊர் ஆண்கள் கூட பொருளாதார விசயத்தில் தன மனைவியை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள், வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு சில வீடுகளில் பெண்கள் வீட்டுக்கு பிரட் விண்னர் ஆகா இருப்பதும் அமெரிக்க ஆண்கள் வொர்க் ப்ரொம் ஹோம் அல்லது வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொள்வதும் உண்டு..ஆனாலும் இப்படி வீட்டில் இருக்கும் ஆண்கள் சதவீதம் மிக மிக குறைவு.

எதிர்மறையாக இந்திய அல்லது ஆசிய ஆண்கள் அனைவரும் வீட்டு வேலை செய்வது பெண்கள் வேலை என்று வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். பொருளாதாரத்தை பொறுத்த வரை  நான் தான் குடும்பத்தை நடத்த வேண்டும், வேலைக்கு செல்லும் மனைவி சம்பளம் முழுதும் மனைவி தன்னிடம் கொடுத்து விட வேண்டும், என்று நினைக்காத ஆண்கள் மிக மிக குறைவு.

வீட்டு வேலையில் பெண்களுக்கு உதவும் தெற்காசிய ஆண்கள் மிக மிக குறைவு. இதனால் வேலைக்கு செல்லும் இந்திய அல்லது தெற்காசிய பெண்களுக்கு பெரும்பாலும் இரண்டு வேலையாக தான் இருக்கும். பெண்கள் வேலைக்கு செல்லலாம் என்றாலும் வீட்டு வேலை செய்து வைத்து விட்டு வேலைக்கு செல்லவேண்டும்.  சிறு குழந்தைகள் வைத்திருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எப்பொழுதும் ஒரு கில்ட் பீலிங் இருக்கும். "ஐயோ குழந்தைகளுடன் இருக்க முடியவில்லையே" என்று. எவ்வளவு பெரிய வேளையில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் இது போன்ற ஒரு "Working mom guilt" உண்டு.

இந்த காரனங்களுகாகவே ஆராய்ச்சி செய்யும் பல பெண்கள் திருமணம் செய்து கொள்வதில்லை, அல்லது தன் துறையை சேர்ந்த சக ஆராய்ச்சி மாணவரை திருமணம் செய்து கொள்வது அதிகம்.என் ஆராய்ச்சி கைடுகள் அனைவரும் திருமணம் ஆகாத அல்லது திருமணமாகி விவாகரத்தான பெண்கள்.
இத்தனைக்கும்  இவர்கள் அனைவரும் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் அல்லர். இருப்பினும் ஆராய்ச்சி என்று நேரம் ஒன்று இருப்பதில்லை. லேபில் தூங்குபவர்களும் உண்டு. நானே தீசிஸ் எழுதிய பல நேரங்களில் லேபில் தூங்கி இருக்கிறேன். வேலைக்கு அல்லது ஆராய்ச்சிக்கு என்று சென்று விட்டால் குடும்பம் குழந்தை என்று பார்க்க நேரம் கூட இருபதில்லை. நல்ல கணவர் வீட்டை நான் பார்த்து கொள்கிறேன் நீ படி அல்லது வேலை பார் என்று சொல்வது மிக மிக குறைவு. அதனாலேயே நிறைய பெண்கள் முனைவர் பட்டம் பெற்ற பின்பு கூட "குடும்பமா? ஆராய்ச்சியா?" என்று வரும் பொது குடும்பத்தை தேர்ந்தெடுத்து ஆராய்ச்சியை கைவிடுவதை பார்த்து இருக்கிறேன்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நிறைய பார்த்து இருக்கிறோம் , அதே போல  ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு உதவும் துவளும் போது தோள் கொடுக்கும் நல்ல கணவனும் வாய்த்து விட்டால் அவள் போல அதிஷ்டம் செய்தவள் எவளும் இருக்க மாட்டாள். ஆனால் பெரும்பாலும் குடும்பத்திற்காக தனது வேலையை, எதிர்காலத்தை விட்டுகொடுக்கும் பெண்கள் போல, தன் மனைவியும் தானும் வேறல்ல, அவள் முன்னேற்றம் தன் முன்னேற்றம் போன்றது என்று நினைத்து  முன்னேற சிறிது உதவி செய்து விட்டு கொடுத்தால் இதனை போன்ற விவாகரத்துகள் குறையலாம் என்பது என் எண்ணம்.


நன்றி .



Sunday, March 15, 2015

அடுத்தவர் வாக்கியங்களை நீங்கள் முடிக்காதீர்கள்!

ஒரு சில மனிதர்களை சந்தித்து இருக்கிறேன், இவர்களிடம் பேசுவது என்பது  தேவையே இல்லாதது. நாம் பேசவேண்டும் என்று ஆரம்பிப்போம் ஆனால் நாம் என்ன பேச போகிறோம் என்று இவர்களுக்கு தெரிந்தது போல இவர்கள் பேச்சை பாதியில் நிறுத்தி இவர்கள் பேச ஆரம்பிப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்கள் சொல்வதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும், என்று நினைப்பார்கள். எங்கள் ஊர்ர்பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள் "கல்யாண வீடா இருந்த மாப்பிள்ளையா இருக்கணும், இழவு வீடா இருந்தா பொணமா இருக்கணும்" என்று, அது போல, இப்படி பட்ட மனிதர்கள் எப்போதும் தன்னை சுற்றியே "center of attraction" இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

சில நேரங்களில் நம் வாக்கியங்களை இவர்கள் முடிப்பது தான்   வேடிக்கையாக இருக்கும். இப்படி பட்ட மனிதர்கள் எப்போதும் படபடப்பாகவே இருப்பார்கள் யோசிப்பார்கள்.  எங்கே நாம் சொல்லவந்தது மறந்து விடுமோ என்று இப்படி பேசுபவர்கள் நிறைய பேர். ஆனால் நம் எதிரில் நின்று பேசுபவர் எப்படி நினைப்பார் நம்மை பற்றி என்று நினைப்பதில்லை. இப்படி படபடப்பாக பேசுபவர் அவசரக்காரர் என்று பொறுப்பான பதவியை யாரும் வழங்க மாட்டார்கள். எங்கே ஒருவர் பிறரை நன்கு ஸ்டெடி செய்து கொண்டு, அவர் பேசுவதை கவனித்து பின்பு பதில் சொல்கிறாரோ அவருக்கு அன்பவமும் முதிர்ச்சியும் இருக்கும் என்று நிர்வாகத்தில் இருப்பவர்கள் அறிந்து இருப்பார்.  நீங்கள் இப்படி அடிக்கடி அடுத்தவர்கள் வார்த்தையை முடிப்பவராயின், பேச வாய் வரும்முன் ஒரு செகண்ட் நாம் எதிரில் இருப்பவர் இடத்தில் தற்போது இருந்தால் எப்படி பீல் செய்வோம் என்று நினைத்து பாருங்கள், நாம் செய்யும் தப்பு புரியும்.

இங்கு ஒரு பழமொழி உண்டு "Put yourself in others shoes" என்று, அதாவது உங்களை உங்கள் எதிராளியின் சிச்சுவேஷனில் பொருத்தி பாருங்கள் என்று பொருள். நான் இப்பொழுதெல்லாம் அடுத்தவர் சூழலில் இருந்து நிறைய யோசிக்கிறேன், அப்படி யோசிக்கும் போது கடந்து போன பல நிகழ்வுகள் எல்லாம் இப்போது வேறு கோணங்களில் யோசிக்க தோனுகிறது. எதிராளிளியின் மீது பல நேரங்களில் பாவப்பட தோனுகிறது. அடுத்தவர் நிலையில் இருந்து யோசிக்கும் பொது அவர் செய்தது சரி என்று கூட சில நேரங்களில் தோன்றுகிறது. "Develop the compassion"
அல்லது "பகைவனுக்கும் இரங்காய்"' என்பதே அது.


முடிந்தால் செய்து பாருங்கள், நிறைய ஸ்ட்ரெஸில் இருந்து விடுபடலாம்.


நன்றி





Friday, March 13, 2015

படித்தது மனதை பிழிந்தது , கவனித்தது, கேட்டது

படித்தது மனதை பிழிந்தது 

முக நூலில் யாரோ ஷேர் செய்தது, தற்செயலாக பார்க்க, படிக்க நேர்ந்தது. அது பால் கலாநிதி என்னும் ஒரு நரம்பியல் நிபுணரின் கடைசி காலங்கள் பற்றிய அவரின் சொந்த எழுத்துக்கள். மார்ச் 9 ம் தேதி 37 வயதில் அவர் இறந்து விட்டார்.  நுரையீரல் புற்றுநோய், அவரை கொன்று விட்டது. புகைபழக்கம் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அவரை நோய் கொன்று விட்டது. அவர் இறப்பதற்கு முன் தனக்கு மரணம் வர போகிறதென்று தெரிந்து அவர் எழுதிய "How long have i got left" மற்றும்  "Before I go" என்ற இரு கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. ஒரு டாக்டர் அவருக்கு கேன்சர்.  எவ்வளவு நாள் வாழப்போகிறோம் என்று அவருக்கு தெரியாது, ஆனால் குணப்படுத்த முடியாது என்று மட்டும் தெரியும். வேறு எந்த குறையும் இல்லை அவருக்கு, நல்ல வேலை, தன்னை  போல டாக்டர் காதல் மனைவி ,  அப்போது பிறந்த பெண் குழந்தை..எல்லாம் இருக்கிறது. அவருக்கு தற்போது  வேண்டியதெல்லாம் இன்னும் சில நாட்கள் வாழவேண்டும் தன் மகளுக்கு தன்னை பற்றிய சிறிது ஞாபகமாவது இருக்க வேண்டும் என்ற அவா. "எப்படி அதனை செய்வது, நிறைய கடிதங்கள் எழுதி வைக்க வேண்டுமா, அது என்ன செய்ய போகிறது, அவளுக்கு 15 ஆகும் போது, நாங்கள் வைத்திருந்த செல்ல பெயராவது ஞாபகம் இருக்குமா, அல்லது உபயோகிப்பாளா ? " இப்படி பல கேள்விகளை எழுப்பி, முடிவில் அவர் எழுதி இருப்பது இது தான், தன் மகளிடம் அவர் சொல்வது போல எழுதியது இது "உன் வாழ்கையில் ஒரு காலகட்டம் வரும், அதில் நாம் என்ன சாதித்தோம், உலகிற்கு என்ன செய்தோம், என்று யோசிக்கும் போது , ஒன்றை நினைத்து கொள் மகளே..நீ ஒரு சாகப்போகிற மனிதனுக்கு அளவில்லா, நான் முன்னெப்போதும் அனுபவித்திராத ஒரு சந்தோசத்தை கொடுத்து இருக்கிறாய். இன்னும் இன்னும் வேணும் என்று பேராசை படாத ஒரு நிறைவான மிகபெரிய சந்தோசம் அது.,  இது போதும் எனக்கு"

இந்த கடைசி வரிகளை படிக்கும் பொது என்னை அறியாமல் கண்ணீர் துளி. நுரையீரல் புற்றுநோயால் இறந்த தன் தந்தையை பற்றி, அவர் கடைசி  காலத்தில் அனுபவித்ததை பற்றி எனக்கு தெரிந்த ஒருவர் கூறியது நினைவிற்கு வந்தது. அந்த சிறு குழந்தை இறந்து போன தன தந்தையை பற்றி கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டும் என்று ஏனோ மனது நினைக்கிறது.

கவனித்தது 

இங்கு தமிழ் பள்ளியில் கவனித்தது. அதில் நடக்கும் கலை நிகழ்சிகளின் போதும் சரி, பொங்கல், தீபாவளி மற்றும் ஆண்டு விழா என்று எந்த நிகழ்ச்சியாக இருப்பினும், நிறைய பொது நோக்குடைய நிகழ்ச்சிகளாக அல்லது தமிழ் கலாச்சாரத்தை குறிக்கும் நிகழ்ச்சிகளாக பார்கிறேன். கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம்  என்று பல பல காண்கிறேன். அல்லது, மொழியை காப்போம், உலகை காப்போம், தண்ணீர் சேமியுங்கள் என்பன போன்ற பொது நோக்குடைய நிகழ்ச்சிகள் நிறைய சிறு குழந்தைகளாய் வைத்து நடத்துகிறார்கள். இதில் என்ன நகை முரண் என்றால், நேற்று மதுரையில் இருக்கும் என் அண்ணனிடம் பேசிய போது  அவர் சொன்னது, தன பையன் அவன் பள்ளி ஆண்டு விழாவிற்கு ஐ படத்திலிருந்து "ஐலா ஐலா" என்ற பாட்டுக்கு பேஷன் உடை அணிந்து நடனம் ஆட போகிறான் என்று கூறியது. எங்கேயே இடிப்பது போல இருந்தது.

கேட்டது 

என்ன மாயமோ தெரியவில்லை, இந்த பாடல்களிடம், இந்த படத்தில் இருந்து இருக்கும் ஒவ்வொரு பாடலும் எப்பொழுதும் கேட்டு கொண்டே இருக்கலாம். என்ன குரல் அர்ஜித் சிங் அவர்களுக்கு. பெரிய சல்யுட்.










Monday, March 9, 2015

LinkedIn உபயோகிக்கும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 உங்கள் துறையை சேர்ந்த பலரையும் தொடர்பில் வைத்திருக்க உதவுவது LinkedIn. இப்போதெல்லாம் வேலைக்கு முயற்சி செய்பவர்களும் சரி தொழில் தொடங்குபவர்களும் சரி ஒரு நல்ல நெட்வொர்க் தளமாக LinkedIn ஐ பயன்படுத்துகிறார்கள். வேலைக்கு ஆள் தேடுபவர்களும் இதனை உபயோகித்து தங்களிடம் இருக்கும் job opening ஐ விளம்பரம் செய்கிறார்கள். இதில் இருக்கும் recommendation feature மூலம் உங்களுடன் வேலை பார்த்தவரை சிபாரிசு செய்யலாம். அவரின் திறமைகளை ENDORSE செய்யலாம்.

இப்படி பல விதத்திலும் பயனுள்ளதாக இருக்கும் தளத்தை பெண்கள் உபயோகிக்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் இங்கே.

நீங்கள் முதன் முதலில் அக்கௌன்ட் ஓபன் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க என்று LinkedIn வைத்திருக்கும் ஒரு செயல் "invite your friends from your email contact list" என்பது. இதனை கவனியாமல் நீங்கள் கிளிக் செய்து விட்டால் அவ்வளவு தான். உங்கள் ஈமெயில் லிஸ்ட் என்பது உங்களுக்கு ஒரு முறை ஈமெயில் செய்தவரில் இருந்து உங்கள் நண்பராக இருந்து இப்போது எதிரியாக கூட ஆகி விட்ட நபர் வரை அனைவரும் அடங்குவர். நீங்கள் பல வருடங்கள் ஈமெயில் உபயோகிப்பவர் ஆயின் நிறைய நபர்கள் நம் ஈமெயில் லிஸ்ட்  வைத்திருக்கும். அத்தனை நபர்களுக்கும் உங்கள் சார்பில் ஈமெயில் சென்று விடும். பிறகு ஒவ்வொன்றாக சென்று நீங்கள் withdraw செய்ய வேண்டி வரும்.

இரண்டாவதாக நீங்கள் ப்ரோபைல் படம் உங்கள் தொடர்புகளுக்கு மட்டும் தெரிய வேண்டும் பப்ளிக் ப்ரோபைல் ஆக இருக்க வேண்டாம் என்று நினைத்தால் கவனமாக சென்று பப்ளிக் ப்ரோபைல் செட்டிங்க்ஸ் ஐ மாற்றவும். இல்லையேல் உங்களுக்கு தேவை இல்லாத நபர்களிடம் இருந்து எல்லாம் நிறைய காநெக்ட் அழைப்பு வரலாம். அதுவும் நீங்கள் அழகான புகைப்படத்தை ப்ரோபைலே படமாக வைத்திருந்தால் நிறைய அழைப்புகள் வரும்.

கடைசியாக, இதுவும் முந்தய குறிப்புடன் தொடர்பு உடையது. என்னுடன் வேலை பார்பவர் செய்து காட்டியது இது. அவர் பப்ளிக் ப்ரோபிளில் இருக்கும் எதோ ஒரு அழகான பெண்ணின் புகைபடத்தை கிளிக் செய்கிறார், அதன் பின்னர் சைடு பாரில் பார்தால் "people also viewed these profiles" க்கு கீழே இருக்கும் அத்தனையும் சில கிளிக்குகலுக்கு பிறகு அழகான பெண்களின் புகைப்படங்களாக இருக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், linkedin போன்ற தளங்களை கூட இப்படி அழகான பெண்களை பற்றிய புகைபடங்களை தேடும் தலமாக உபயோகிகிரார்கள் என்று அறிய முடிகிறது. பப்ளிக் புகைபடங்களை தரவிரக்கி அவர்கள் எப்படியும் உபயோகிக்கலாம். எனவே கவனம் தேவை.

நன்றி.









Wednesday, March 4, 2015

மேலை நாடுகளில் வாழும் இந்திய பெண்கள் சந்திக்கும் கலாச்சார மாற்றங்கள்


நீங்கள் மேலை நாடுகளில் வசிக்கிறீர்கள் அதுவும் மேலை நாடுகளில் மேல்படிப்பு படித்தவர் என்றால் கட்டாயம் இதனை அனுபவித்து இருப்பவர்கள்.

இது பலருக்கும் நடந்திருக்கும், நமக்குதெரிந்தவர் உதாரணமாக உங்கள் பாஸ் என்று வைத்து கொள்ளுங்கள் அவரை சந்திக்கும் போது  கட்டி பிடித்தல் சகஜம் அது இவர்களின் கலாச்சாரம். அதே சமயம் தெரியாதவர் என்றால் சந்திக்கும் போது கை கொடுத்தல் மிக சகஜம். உங்களுக்கு  எதாவது நல்லது அல்லது கெட்டது என்று எது நடந்தாலும் இப்படி வந்து கட்டி பிடித்து ஆறுதல் சொல்வார்கள் அல்லது வாழ்த்துவார்கள். இன்னும் சில நாடுகளில் அதுவும் ஐரோப்பிய நாடுகளில் கன்னத்தில் முத்தம் கொடுப்பார்கள். இதெல்லாம் எப்படி செய்யலாம், மாட்டேன் என்று சொல்ல முடியாது. உடனே "unfriendly" என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

இதனையும் அனுபவித்து இருக்கலாம், யாரையும் பார்க்கும் போது ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என்று எந்த வித்தியாசமும் இருக்காது. நீங்களும் பதிலுக்கு சிரிக்க வேண்டி வரும். நீங்கள் ஜாகிங் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது எதிரில் உங்களை போல ஜாகிங் செய்து கொண்டு வருபவர் உங்களை பார்த்து ஹாய் அல்லது குட் மார்னிங் சொன்னால் நீங்களும் சொல்ல வேண்டி வரும், அவர் யாரெண்று கூட உங்களுக்கு தெரியா விட்டாலும், இல்லாவிட்டால் நீங்கள் rude என்று சொல்லி விடுவார்கள்.

அதே போல நீங்கள் கீழே விழுந்து விடீர்கள் என்றாலும் உடனே வந்து உங்களை தொட்டு தூக்குவார்கள், உடனே "யார் நீ, என்னை தூக்க " என்று சண்டை போட முடியாது .  எப்போது டின்னெர் அல்லது பார்ட்டி என்றாலும் ஆண்களும் பெண்களும் பீர் அல்லது வைன் குடிப்பார்கள், நீங்களும் குடிக்கிறீர்களா? என்று கேட்பார்கள், இதென்ன பொம்பளை கிட்ட இப்படி கேட்குறீங்களே? என்று நீங்கள் கேட்க முடியாது . ஒரு success பார்டி அல்லது கல்யாணம் என்று சென்றாலும்  உடனே ஷாம்பெயின் ஓபன் செய்வார்கள், நமக்கும் குடுப்பார்கள், நீங்கள் குடிக்கவிட்டலும், கிளாஸ் ஐ வாங்கி டோஸ்ட் செய்ய வேண்டும், இல்லையேல் மரியாதை குறைவாக நினைப்பார்கள்.

வெளி நாடுகளில் வந்து படிக்கும் சிலர் அனுபவிப்பது இது. நீங்கள் இங்கு இருக்கும் பலரையும் உங்களுக்கு வெளிநாட்டு மக்களுடன் பழக வேண்டும் என்றால் அவர்களுடைய சினிமா, விளையாட்டு, மியூசிக், அரசியல், சமையல் என்று ஒவ்வொன்றாக கற்று கொள்ள வேண்டும், அப்பொழுது தான் அவர்களுடன் பேச பழக இயலும் .

என்னை போன்று ஒரு கட்டுபெட்டியான குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அதுவும் மேல்படிப்புக்கு என்று வந்தவர்கள் இதனை  போன்ற ஒரு விசயத்தை பெரிய ஷாக் ஆக்கி பார்பவர்கள். ஆனால்நாட்கள் செல்ல செல்ல  நீங்களும் இந்த பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உங்களை அறியாமல் பழகி இருப்பீர்கள்.

உதாரணமாக, பெண்கள் அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் பல  பொட்டு வைப்பது, விபூதி இடுவது, கல்யாணம் ஆனவர் என்றால் மெட்டி அணிவது, தாலி அணிவது என்பதெல்லாம் இருபதில்லை.எனக்கு தெரிந்தே வேலைக்கு செல்லாத  நிறைய பெண்களும் இப்போது தாலி அணிவதில்லை. திருட்டு பயம் என்று காரணம் சொல்கிறார்கள் என்றாலும் இது சாதரணமாகி விட்டது.தாலிக்கு  பதில் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள், இங்குள்ளவர்கள் போல.
நிறைய இந்திய பெண்கள் பார்ட்டி என்றால் வைன் அருந்துகிறார்கள். சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொள்கிறார்கள், ஆண் பெண் வித்தியாசம் இன்றி.

இந்திய உடைகளை உடுத்துவது என்பது மிக குறைந்து விட்டது . இப்போதெல்லாம் சுடிதார் கூட உடுத்துவது இல்லை, எப்பொழுதும் மேலை நாட்டு உடை தான். புடவை உடுத்துவது என்பது பார்ட்டிக்கு செல்லும் போது அல்லது கோவிலுக்கு போகும் பொது என்றாகிவிட்டது. இதெல்லாம் நம்மையும் அறியாமல் நடக்கும் மாற்றங்கள். எது நமக்கு சவுகரியமோ அதனை உடுத்தி கொள்கிறோம்.
ஏனெனில் ஐரோப்பிய நகரங்களில் இந்திய உடையுடன் சுற்றினால் எப்படி நம்மை வேடிக்கை பார்பார்கள் என்பதை நான் அனுபவித்து இருக்கிறேன். அமெரிக்காவில் இந்தியர்கள் நிறைய இருப்பதால் இந்திய உடை அணிதாலும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஆனால் ஐரோப்பாவில் கட்டாயம் வேடிக்கை பார்ப்பார்கள்(என்னுடைய 10 வருடங்களுக்கு முந்தைய அனுபவம் இது, இப்போது மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது). ஆனாலும் இன்றும் அமெரிக்காவில் இந்திய உடையுடன் ஆபிசுக்கு வந்தால் எல்லாரும் கட்டாயம் உங்களை வேடிக்கை பார்பார்கள்.


இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமல் மாறிய நாம், இந்தியாவிற்கு செல்லும் போது நம்மை மறுபடியும் re tune செய்து கொள்ள வேண்டி வரும். உதாரணமாக, படித்து கொண்டிருந்த போது,  நான்   விடுமுறைக்கு என்று சென்ற போது மதுரை ஏர்போர்ட்டில் என்னைபார்த்த என் அப்பா, "இது மதுரை மா, பான்ட் ஷர்ட் எல்லாம் போடாத, எல்லாரும் ஒரு மாதிரி பார்பாங்க" என்று சொன்னது இன்னும் நினைப்பு இருக்கிறது. இதற்காக பிரான்க்பார்தில் இருந்து விமானம் ஏறும் முன் நான் உடை மாற்றி கொண்டு வர இயலாது. எல்லாரையும் பார்த்து சிரித்து பழகி இருந்த நான், அங்கு ஒரு ஆட்டோ டிரைவரை பார்த்து சிரிக்க அந்த ஆள் என்னை ஒரு மாதிரி நினைத்து விட்டார். பின்னர் நான்  தவறை உணர்ந்து முகத்தை கடுப்பாக்கியது வேறு கதை. அதே போல தெரிந்தவர்களை பார்க்கும் போது  இங்கேபழகியது  போல கட்டி பிடிக்க முடியாது. அங்கே கட்டி பிடிப்பது என்றாலே பாலியல் சார்ந்த ஒரு வார்த்தை.  அதே போல யாராவது விழுந்தால் ஓடிபோய் தூக்குவது, அனைத்திற்கும் நன்றி சொல்லுவது, சாரி சொல்லுவது, என்று செய்து கொண்டிருப்போம்.

இப்படி எல்லாம் நம்மையும் அறியாமல் நாம் கற்ற பழக்கவழக்கங்கலால்  நாம் கலாச்சாரத்தை மறந்தவர்கள் ஆகிவிடுவோமா? என்னை பொறுத்த வரை, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் செய்யும் எந்த விசயங்களும் நல்லதே. மாற்றங்கள் என்பது மாறாதது, இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில  ஆண்டுகளில் இந்தியாவில் கூட இவை பெரிய விசயமாக இருக்காது.  நாம் தான் அந்த மாற்றங்களை பழகி கொள்ள வேண்டும்.

நன்றி