Saturday, November 19, 2016

அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே புரியும் சில விசயங்கள் !

முதல் விஷயம்,   நம் தங்க தலைவர், தான தலைவர், இந்தியாவின் லேட்டஸ்ட் துக்ளக் மோடி அவர்களின் சரித்திர புகழ் வாய்ந்த ஒரு செயல். " கருப்பு பண ஒழிப்பை பற்றி உக்கார்ந்து உக்கார்ந்து யோசித்து" முடிவாக கருப்பு பணத்தை ஒழிக்க இது தான் வழி என்று அவர் உருவாக்கிய சரித்திர புகழ் பெற்ற திட்டம் இது. வாழ்க மோடி ஜியின் புகழ் வளர்க அவரின் தொண்டு. (மைண்ட் வாய்ஸ் : நமக்கு எதுக்கு பா வம்பு, கொஞ்சம் புகழ்ந்து வைப்போம்)

என்னை போன்ற அறிவிலிகளுக்கு தற்போது என்ன பிரச்சனை என்றால், கடந்த  முறை இந்தியா வந்த போது அவசர  செலவுக்கு வேண்டும் என்று  எடுத்து வைத்திருந்த 500, 1000 நோட்டுக்களை என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறேன்.  இதே போல விசிட்டர் விசாவில் வந்த பலரும் இந்தியா சென்றதும் அவசர செலவுக்கு என்று பணம் வைத்து இருக்கின்றனர். இதனை போன்ற நோட்டுக்களை தற்போது என்ன செய்வது என்று என்னை போலவே பலரும் குழம்பி போய் இருக்கின்றனர். அதிலும் அடிக்கடி இந்தியா சென்று வரும் பலரும் 10 முதல் 50 ஆயிரம் வரை பணத்தை 500, 1000 நோட்டுக்களாக மாற்றி வைத்திருக்கின்றனர். அவர்களின் நிலைமையை நினைத்தால் என்னவாகும் என்று தெரியவில்லை. டிசம்பர் 30 க்குள் இந்தியா சென்றால் மட்டுமே பணத்தை மாற்ற முடியும் என்கிற பட்சத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. 

இந்த நிலையில், இங்கிருந்து யாரவது அங்கே செல்கிறார்கள் என்றால் அவர்களிடம் கொடுத்து மாற்ற சொல்லவேண்டிய நிலைமை பலருக்கும். அதுவும் நம்பிக்கை யானவர்களாக இருக்க வேண்டுமே என்ற பதட்டம். இந்த நிலையில் அங்கே இது போன்ற NRI களிடம் இருந்து பணம் மாற்றி கொடுக்க என்றே சிலர் ஏஜென்ட் வேலை பார்ப்பதாகவும், ஆனால் அப்படி பணம் மாற்றி கொடுக்க 10-20% கமிஷன் அடித்து கொள்ளுவதாகவும் கேள்வி பட்டேன். 

இதனை போன்ற கமிஷன் ஏஜெண்டுகளின் நன்மைக்காக இது போன்ற திட்டத்தை வகுத்த அறிவுச்செம்மல் மோடி வாழ்க.


அடுத்ததாக,  மனுஷ்ய புத்திரன் அவர்களின் "வேசிகளிடமும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகள்" என்ற கவிதை.  இதனை தொடர்ந்த  "ஒரு சொல் என்ன செய்யும்" என்ற விகடன் கட்டுரை என்னுடைய தோழி ஷேர் செய்து இருந்தாள். சிறு வயதில், தெருவில் பெண்களுக்கு இடையே சண்டை வந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் திட்டி கொள்ள உபயோகிக்கும் வார்த்தை இது. அதாவது, திட்டும் பெண், தன்னை சுத்தமானவள் என்று கருதி, திட்டப்படும் பெண்ணை நோக்கி வீசும் அம்பு இது. இதே நிலை, ஆண்களும் கையில் எடுப்பார்கள். ஒருவனை அவமானப்படுத்த, கோவப்படுத்த அவன் தாயை குறித்ததோ, மனைவியை குறித்தோ இது போன்ற தப்பான வார்த்தை சொன்னால் போதும். இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிகழ்வு, இந்தியா என்று மட்டும் அல்ல, உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், 2006 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை சொல்லலாம். உலகமே ஆர்வமாக பார்த்த அந்த போட்டியில், தன்னுடைய தாயை தரக்குறைவாக ஒருவன் கூறிவிட்டான் என்று அவனை தலையால் முட்டி மோதி, ரெட் கார்டு வாங்கி வெளியில் சென்ற Zidane ஐ சொல்லலாம். இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிகழ்வு. 





உலகின் தொன்மையான பெண்களை திட்டும் ஒரு வார்த்தையை வைத்து மோடி அவர்களின் செயலை புகழ்ந்த ஒரு அறிவி ஜீவியின் செயல் இது . இதனை புரிந்து கொள்ளவேண்டுமாயின் நீங்களும் அறிவு ஜீவியாக இருக்க வேண்டியது அவசியம்.

கடைசியாக, "அச்சம் என்பது மடமையடா" என்ற அறிவு ஜீவி காவியத்தை  சொல்லலாம்.  "படம்னா இது படம் யா, என்ன ஒரு லவ் பீலிங் தெரியுமா, அதெல்லாம் லவ் பண்ணவுங்களுக்கு தான் புரியும்" அமேஜிங்..என்று பல அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.  பல நேரங்களில் இவர்களின் தீர்க்க தரிசனத்தில்  இருந்து நான் தப்பித்து இருக்கிறேன், இருந்தாலும் இந்த படம்  ஒருவேளை VTV மாதிரி இருக்கும் போல என்று கொஞ்சம் நம்பி போய் விட்டேன். பிறகு தான் எனக்கு புரிந்தது, இந்த படத்தை பிடிக்க நானும் ஒரு அறிவு ஜீவி ஆக இருக்க வேண்டும் என்று.

எங்கயாவது "30 நாட்களில் அறிவு ஜீவி ஆவது" எப்படி என்று புக் யாராவது விக்கிறாங்களா சொல்லுங்கப்பா, நானும் படிச்சிட்டு அறிவு ஜீவி ஆகலாம்னு இருக்கேன்..

நன்றி.

டிஸ்கி 
இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே. 



Thursday, November 10, 2016

சைலன்ட் மெஜாரிட்டியும் , அமெரிக்க இந்தியர்களும்!!

இன்னும் மீள வில்லை!, அமெரிக்க தேர்தல் கொடுத்த தாக்கங்களில் இருந்து!. ஒரு பெண்மணி ப்ரெசிடெண்ட் ஆக வரவேண்டும் என்று நான் போட்ட முதல் ஓட்டும், பெண்களை அவமதிப்பாக நடத்துபவர் வரக்கூடாதென்ற என்னுடைய எண்ணங்களும் தவிடு பொடியாகிவிட்டிருந்தன.

ஏனெனில், எல்லா புள்ளியியலும், அனலிடிக்ஸ்ம், கணிப்புகளும் அடித்து நொறுக்க பட்டிருக்கின்றன. என்ன நடந்தது ஏது நடந்தது என்று இன்னும் கணிக்க இயலவில்லை.  ஆனால் என்னவோ ஒன்று நிகழ்ந்து இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். ஒவ்வொரு முறையும் கணிப்பு சரியாக இருக்கும் என்று ஜனநாயக கட்சி நம்பி இருந்தது. அதுவும், ஒபாமாவின் அலைக்கு பிறகு, டேட்டா அனாலிசிஸ் இல் நிறைய காசை ஹிலாரி அவர்கள் செலவழித்தார். நிறைய சர்வே, மக்களின் நாடித்துடிப்பு என்ன என்றெல்லாம் நிறைய டேட்டா சேகரிக்க பட்டது.

ஆனால், இப்படி சர்வே எடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் என்பது நிறைய சர்வே எடுப்பவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. அதே போல, இப்படி அவர்கள் எடுத்த சர்வேயும், நிறைய அர்பன்/நகர்ப்புற மக்களிடம் மட்டுமே இருந்திருக்கிறது. நிறைய அமெரிக்க கிராம மக்களிடம் எப்படி வாழ்க்கை தரம் இருக்கிறது என்று கேட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால், ப்ளூ காலர் வேலை எனப்படும் கூலி வேலை செய்யும் அன்றாடம் காட்சிகளும் அமெரிக்காவில் உண்டு, அவர்களின் வருட சம்பளம் "25000$" கும் குறைவு என்று ஏனோ நிறைய புள்ளியியல் சர்வே எடுக்கும் மக்கள் மறந்து விட்டு இருக்கின்றனர். இந்த மக்கள், தங்களின் "சைலன்ட் மெஜாரிட்டி ஐ" காட்டி விட்டு இருக்கிறார்கள். இது ஒரு பெரிய பிளவு. அமெரிக்காவில் முக்கால்வாசி பேர் நடுத்தர மக்கள்.   இது, அமெரிக்கா வரும்போதே H1B visa, வருட சம்பளம் குறைந்தது 50-70K என்று வரும் இந்திய சாப்ட்வேர் மக்களை காணும் சராசரி சம்பளம் வாங்கும் வெள்ளை அமெரிக்கன் கண்களுக்கு உறுத்தவே செய்யும். அதிலும் நம் மக்களுக்கு சொல்லவே வேண்டாம், வந்தவுடன் ஹோண்டா, டயோட்டா என்று ஜப்பான் கார்கள் வாங்கி, லேப்டாப்,....என்று பலதும் வாங்கி, தங்களின் "பலத்தை" காட்டுவார்கள்.  இது இந்தியர்கள் என்று மட்டும் இல்லை, இங்கே இம்மிகிரேண்ட் ஆக வந்த, வரும் பல நாட்டு மக்களுக்கும் பொருந்தும்.

டிரம்ப் அவர்களின் மிகப்பெரிய பலம் அவர், கஷ்டப்படும் சராசரி நடுத்தர அமெரிக்காவின் பிரதிநிதி தான், என்று பேசியது. இதனை கேட்ட "சைலன்ட்" மக்களுக்கோ, தங்களின் குரலையும் கேட்க, தங்களின் ஆதங்கத்தை உணர ஒருவர் இருக்கிறார், என்று நினைக்க வைத்து இருக்கிறது.  அங்கே டிரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார்.

photo from google images

இன்னொரு விஷயம், ஒரு "பெண்" ணை  எப்படி அவ்வளவு பெரிய பொறுப்பில் உக்கார வைப்பது என்ற எண்ணம். உதாரணமாக, நாங்கள் வசிக்கும் பகுதியில் நடந்த ஹாலோவீன் பார்ட்டியில், எங்களின் பக்கத்து வீட்டுக்கார வயதான வெள்ளை பாட்டி  சொன்ன ஒரு வார்த்தை.
"டிரம்ப் ஒரு ஆண்" அவர் கீழ்த்தரமாக பெண்களை பற்றி பேசியதாக வரும் வார்த்தைகள் எல்லாம், "மென்ஸ் டால்க்" அது சாதாரணம். இதுக்காக, அவரை வெறுப்போம் என்று தப்பு கணக்கு போடுறாங்க. "பெண்களால் நல்ல முடிவெடுக்க முடியாது, அமெரிக்காவின் எதிர்காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைக்க முடியாது".

இதனை கேட்ட நானோ, ஜியார்ஜியா ஒரு பைபிள் பெல்ட்  ஸ்டேட், அதனால் மக்கள் இப்படி பேசுறாங்க, மத்த ஊர்ல மக்கள் இப்படி பேச மாட்டாங்க என்று  நம்பினேன். ஆனால், நிறைய பெண்களே, பெண்களுக்கு ஓட்டு போடவில்லை என்று தெரிகிறது.

இது கூட ஒரு வகையில் ஒப்பு கொள்ள முடியும். ஆனால், எனக்கு ரொம்ப வெறுப்பை தந்தது, இங்கு வந்து குடியுரிமை வாங்கி செட்டில் ஆன பல அமெரிக்க இந்தியர்களும் , "டிரம்ப்" தான் பெஸ்ட் என்று என்னிடம் சொன்னது. அதாவது தானும் ஒரு டிபிகல் "அமெரிக்கன்" என்பது போல காட்டி கொள்ளுவது. "அவர் வந்தால் டாக்ஸ் குறையும்", பண புழக்கம் வரும். அதனால் "டிரம்ப்" க்கு ஓட்டு போடு என்று வந்து சொன்னது.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எப்படி இவர்கள், ஒரு 5-10 வருடத்துக்கு முன்பு குடியுரிமை வரும் முன், எப்படியாவது, க்ரீன் கார்டு வந்துவிடாதா?, வேலை நிரந்தரம் ஆகி விடாதா?, என்று இங்கிருப்பவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால், நீ ஒரு "ஏலியன்" என்று தவியாய் தவித்த மக்கள். தற்போது, குடியுரிமை வந்து விட்டதால், மற்றவர்களை பார்த்து, அவர்களுக்கும் ஒரு குடியுரிமை வேண்டும் அதற்க்கு நம்மால் ஆன முயற்சிகள் செய்ய வேண்டுமே, என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல். தானும் ஒரு "அமெரிக்கன்" என்று நடந்து கொள்ளுவது எவ்விதம் என்று தெரியவில்லை.

முடிவாக நான் கேட்ட ஒரு  விஷயம். ஆபீசில், தேர்தல் முடிவுகளை விவாதித்தபடி, லிப்ட் க்கு நின்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் தாய்லாந்து அல்லது பிலிப்பைன்ஸ் பெண் என்று நினைக்கிறன். ரொம்ப சோகமாக, "ப்ளீஸ் அதனை குறித்து பேசாதீர்கள், நானும் என் கணவரும் கனடா சென்று விட போகிறோம், ஏனெனில் அவர் ஒரு முஸ்லீம்" என்று கூறினார்.
இதனை நான் கேட்ட பிறகு, டிரம்ப் வெற்றி பெற போகிறார் என்ற செய்தி வந்து கொண்டிருந்த நேரத்தில், கனடா இம்மிகிரேஷன் தளம் நிறைய ஹிட் வந்ததால் டௌன் ஆகி விட்டது என்ற செய்தி படித்தது ஞாபகம் வந்தது.

முடிவாக "God Save us "

நன்றி.

டிஸ்கி

இது என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.