படித்தது
“Oysters open completely when the moon is full; and when the crab sees one it throws a piece of stone or seaweed into it and the oyster cannot close again so that it serves the crab for meat. Such is the fate of him who opens his mouth too much and thereby puts himself at the mercy of the listener"
Leonardo da Vinci, 1452-1519
தமிழில் மொழி பெயர்த்தால், "சிப்பிகள்" முழு நிலவை கண்டதும் முழுதும் திறந்து இருக்கும். இதனை சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் நண்டு, சிறிய கல்லையோ, அல்லது கடற்பாசியையோ அதில் போட்டு விடும். அதன் பின்பு அந்த சிப்பியால் மூட முடியாது, நண்டிற்கு உணவாகிவிடும். நேரம் காலம் பார்க்காமல், எப்போதும் தான் பேசுவதே வார்த்தை என்று வள வள வென்று பேசிக்கொண்டிருக்கும் ஒருவனுடைய வாழ்க்கையும், ஏதேனும் காரியம் ஆகா வேண்டுமாயின், எதிரி, அவனை தூண்டி விட்டு அவன் வாயாலேயே உளற விட்டு, அவசர கதியில் செயல் செய்ய வைத்து உங்களை எளிதாக தோற்க்கடித்து விடுவான். எப்போதும் ஓயாது பேசி கொண்டிருக்கும் பலருக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறன்.
கவனித்தவை: முன்பெல்லாம் பஸ் நிலையம், ரயில் நிலையம், லிப்ட், சிக்னல் போன்ற பொது இடங்களில் நின்று கொண்டிருந்தாலோ அல்லது பொது போக்குவரத்துகளில் சென்று கொண்டிருந்தாலோ தெரியாத மக்களாக இருப்பினும் ஏதேனும் பேசுவது அல்லது சிரிப்பது என்பது நடந்தது. உதாரணமாக, டவுன் பஸ்களில் அடிக்கடி செல்லும் நேரம், யாரேனும் வயதானவர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுப்பது, கர்ப்பினி பெண்கள் வந்தால் இடம் கொடுப்பது என்று இருக்கும். அல்லது ஒரு புத்தகம் வாசிப்பது, வார இதழ் வாசிப்பது என்பதெல்லாம் சாதாரணம். அதுவும் நீண்ட தூர பயணம் செய்பவர்கள், எதோ ஒரு வகையில் ரயில் சிநேகம் உண்டாக்கி ஒரு வித நட்பு கூட தொடரலாம். எனக்கே அப்படி சில அனுபவங்கள் உண்டு. ஒரு வயதான, ஆங்கிலம் தெரியாத அம்மாவை பிளைட்டில் அழைத்து வந்ததற்கு இப்போதும் போன் செய்து நன்றி சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் பழைய கதை என்று நினைக்க சொல்ல வைக்கிறது இப்பெல்லாம் நான் கவனிக்கும் பல இளைய தலைமுறை மக்களின் செயல்.
இப்போதெல்லாம் மக்களிடம் ஐ காண்டாக்ட் என்பதே அருகி போய் விட்டது. நீங்களே கவனித்து பாருங்கள், முன்பெல்லாம் லிப்ட்க்கு காத்திருக்கிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது ஏதாவது பேசுவார்கள். முக்கியமாக, அன்றைய வெதர் எப்படி இருக்கு, கேம்ஸ், என்பது போன்ற பொது விடயம் நிறைய இருந்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம், ஆளுக்கொரு போன் வைத்து கொண்டு எல்லா நேரமும் அதில் முகம் புதைத்து கொள்கின்றனர். போன் என்பது ஒரு எஸ்கேப் வழி ஆகிவிட்டிருக்கிறது. உங்களுக்கு பிறரிடம் பேச விருப்பம் இல்லையா, தவிர்க்க நினைக்கிறீர்களா, உடனே போனை எடுத்து அதில் பார்க்க வேண்டி இருக்கோ இல்லையோ, எதையாவது நோண்ட வேண்டியது. இல்லை 1000 வைத்து முறையாக ஏதாவது வந்திருக்கிறியாதா என்று வாட்ஸாப் பார்க்க வேண்டியது, என்று செய்வதை அப்பட்டமாக காண முடிகிறது. இல்லை, இளைய தலைமுறை மக்கள், காதில் ஏர் போனை சொருகி கொண்டு, கண்ணை மூடி கொள்ளுகிறார்கள்.
கண்ணை பார்த்து பேசாமல் அவாய்ட் பண்ணும் இவர்கள், நிஜத்தை, எதிரில் இருக்கும் ஒருவரின் பெர்சனாலிட்டியை அறிய முற்படாமல், எப்போதும் ஒரு கனவுலகில் வாழ்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. எந்த சூழலை எப்படி சமாளிப்பது என்பது எப்போதும் போனை பார்த்து கொண்டிருப்பதால் கிடைக்காது, இருக்கும் சூழலை கண் திறந்து பார்த்தால் மட்டுமே புரியும், பிடிபடும் என்று எப்படி இவர்களிடம் சொல்வது?
கேட்டது : கணவன் மனைவி உறவு குறித்தும், அதில் "அருகிவிட்ட காதல் என்பது எப்படி புதுப்பிக்க பட வேண்டும் என்பது குறித்த ரிலேஷன்ஷிப் கவுன்சிலர், T.T. Rangarajan அவர்களின் பேச்சினை தோழிகள் குழுமத்தில் ஷேர் செய்திருந்தனர். எப்பொழுதும் அடுத்தவரை நோக்கி குறை மட்டுமே சொல்லிக்கொண்டு நாம் திரிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் இது ஒரு நல்ல ஸெல்ப் செக் மற்றும் அனாலிசிஸ் போல தோன்றியது. நீங்களும் கேட்டு பாருங்கள், கட்டாயம் பிடிக்கும்.
ரசித்தது : எப்போதும் திரில்லர் வகை படங்கள் பார்க்க பிடிக்கும். எந்த ஒரு திரில்லர் படம் என்றாலும் கதாநாயகன் எவ்வளவு முக்கியமோ அதற்க்கு சமமான அளவில் வில்லனின் பாத்திரப்படைப்பும் இருக்கும் பட்சத்தில் படத்தின் வெற்றி உறுதி என்று சொல்லலாம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தனிஒருவன் படத்தின் சித்தார்த் அபிமன்யு, பாத்திர படைப்பு. கதாநாயகனை விட ஒரு படி மேலே சென்ற ரசிக்கும் படியான ஒரு வில்லன். அதே போல, எனக்கு பிடித்த ஒரு திரில்லர் என்றால் சமீபத்தில் பார்த்த "துருவங்கள் பதினாறு" படம். கடைசி வரை சீட் நுனியில், அடுத்து என்ன அடுத்து என்ன என்று தேட வைத்து சற்றென்று முடித்த ஒரு படம். என்ன முடிச்சிருச்சா?, என்னவானது என்று கேட்டு தெரிந்து முடிவை அனலைஸ் செய்து பார்த்து புரிந்து கொண்ட படம். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ரஹ்மான், நல்லவரா கெட்டவரா, என்று கடைசி வரை தெரியவில்லை. அது பெர்செப்ஷன் பொறுத்தது. எனக்கு பிடித்த திரில்லர் பட வரிசையில் இந்த படமும் உண்டு.
நன்றி