Saturday, August 26, 2017

முகமும், முகமூடியும், பிக்பாஸும் !!

நைபால் அவர்களின் "A Bend in the River"புத்தகத்தில் ஒரு பாதிரியார் பாத்திரம்வரும், அந்த பாத்திரத்தின்  பொழுதுபோக்கு முகமூடிகளை சேகரிப்பது. அப்படி அவர் சேகரிக்கும் முகமூடிகளை அவர் பத்திரப்படுத்தி கொண்டிருப்பார், சமயத்துக்கு தகுந்தாற்போல உபயோகப்படுத்த. நாமும் கூட அந்த லிஸ்டில் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். சமயத்துக்கு தகுந்தாற்போல நடந்து கொள்ள என்று பல பல முகமூடிகள் வைத்துக்கொண்டு இருக்கிறோம்.  சொல்லப்போனால், எல்லா இடங்களிலும் வாயில் வந்ததெல்லாம் வார்த்தை என்று பேசாமல், சமயத்துக்கு தகுந்தாற்போல பேச வேண்டும், என்று குழந்தையில் இருந்தே சொல்லி வளர்க்கப்படுகின்றனர். உண்மை முகத்தை காட்டுபவர்கள் கொடுமை காரர்களாக காட்டப்படுகிறார்கள். நடிப்பவர்கள், அல்லது முகமூடி அணிபவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள படுகிறார்கள்.

இந்த முகமூடிகளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டாலும், சில சமயங்களில் முகமூடியை கிழித்து கொண்டு உண்மை முகம் வெளியே தெரிந்து விடுகிறது. முகமூடியை உண்மை என்று நினைத்த வெளியுலகம், நிஜ முகத்தை பார்க்க நேரிடும் போது பயப்படுகிறது.

இரண்டு உதாரணங்கள் உண்டு. ஒன்று அமெரிக்காவில் சமீபத்தில் சார்லட்வில் நகரில் நடந்தது. கடந்த வருட அமெரிக்க தேர்தல் முடிந்தவுடன் நடந்த விஷயங்களும், அதனை குறித்த டிரம்ப் அவர்களின் அறிக்கையும். அமெரிக்க "சைலன்ட் மெஜாரிட்டி" பற்றி குறிப்பிட்டிருந்தேன். வெள்ளை இனத்தவர் மட்டுமே உசத்தி என்றென்னும் ஒரு இயக்கம் அல்லது பல இயக்கங்கள் அமெரிக்காவில் உண்டு. அமெரிக்காவில் அடிமை முறை வேரறுக்கப்பட்டு, எல்லாரும் சமம் என்று பிரகடன படுத்திய பிறகு அடங்கி போய், அல்லது அடங்கியது போன்ற முகமூடியை மாட்டிக்கொண்டு தெரிந்த இந்த இயக்கத்தினர், தனக்கு சப்போர்ட் செய்ய ஒருவர் வந்தது போன்ற எண்ணம் வந்தவுடன், அதுவரை, நான் இனவெறி கொண்டவன் அல்ல என்று சொல்லி திரிந்த அல்லது முகமூடி அணிந்து கொண்டிருந்த பலரும், தற்போது, "தான் ஒரு வெள்ளை, அடக்கப்படும் வெள்ளை", என்று வீறுகொண்டு எழுந்திருக்கிறதை காண முடிகிறது.  ஆபிசில், எதேச்சையாக, சார்லெட் வில் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அங்கே வந்த ஒருவர், "பிரசிடெண்ட் சொல்லுவதில் உண்மை இருக்கிறது, இரண்டு பக்கமும் தப்பு உண்டு" என்று வார்த்தையை உதிர்க்க, அதிர்ந்து விட்டேன். ஏனெனில், இதுவரை, அவர் எல்லாருடனும் "நன்றாக" பேசிக்கொண்டிருந்தனர், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முகமூடியை கிழித்து கொண்டு அவரின் உண்மை இனவெறி முகம் வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது.


ஆனால் இது நடந்த நேரத்தில், ஒபாமா அவர்கள் ட்விட்டரில் வெளியிட்ட மண்டேலா அவர்களின் ஒரு பொன்மொழி, ட்விட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட ஒன்றாகி இருக்கிறது. வெயிலில் தானே தெரியும் நிழலின் அருமை!.

அடுத்த நிகழ்வு, சற்று வேறுபட்ட செட்டப், எல்லாரும் எப்போதும், எங்கேயும்  பேசும் தமிழ் பிக்பாஸ் பற்றியது. "இது நமக்குள் நடக்கும் மாற்றங்கள், நம்மில் இருக்கும் பல பல பிரமாணங்கள் வெளிப்படுகின்றன, ஒரு செட்டப் இல் 100 நாட்கள், வெளியுலக தொடர்பு இல்லமால் இருப்பின் எப்படி இருக்கும் " என்று கமல் அவர்கள் ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தினாலும். மக்களுக்கு எது பிடிக்கிறது என்று பார்க்க வேண்டும்.  உண்மையை சொன்னால், பிக் பாஸ், பிக் பிரதர் போன்றவை எல்லாமே, ஜியார்ஜ் ஆர்வெல் அவர்களின் "1984" புத்தக படைப்பில் வரும் பாத்திரம். என்ன அங்கே, ஒவ்வொரு வீடும் பிக் பாஸ் வீடு போல கேமரா பொருத்தப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படும்,என்று 1934 இல் எழுதி இருப்பார். தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

நிற்க..நான் இங்கே சொல்ல வந்தது, முகமூடிகளை பற்றி. மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு தீர்வு காணும் அல்லது காண நினைக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே போற்ற படுகின்றனர். அதாவது, முகமூடி மாட்டி, நன்றாக நடிக்க தெரிந்தவர்கள். அல்லது, அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை முகமூடி அணிந்து காட்ட தெரிந்தவர்கள் மட்டுமே நல்லவர்கள் மற்றபடி, இது ஒரு கேம் என்று தெரியாமல், அதாவது முகமூடி அணியாமல் இருப்பின், அவர்கள் கெட்டவர்களாக சித்தரிக்க படுகின்றனர்.  உண்மையாக நாம் அது போன்ற ஒரு செட்டப்பில் இருப்பின் நமக்குள் இருக்கும் ஒரு சில விஷயங்கள் வெளியே எட்டிப்பார்க்கும். உதாரணமாக, நாம் வளர்ந்த சூழல், நம் குடும்பம், சாதி, இவற்றை கொண்டு நம்மை  செதுக்கிய விஷயங்கள். அது எவ்வளவு தான் முகமூடி அணிந்தாலும் எப்படியாயினும் எட்டி பார்த்து விடும். அதனாலேயே, நம்முடைய அலைவரிசைக்கு இசைந்த பலருடன் நாம் பழக எத்தனிக்கிறோம்.

இதே போன்ற சூழல் நிலவாத  போது, மற்றவர்களை நம் அலைவரிசைக்கு இழுக்க என்று சிலபல உத்திகள். அதாவது, எங்கள் குடும்பம், நாங்க பணக்காரங்க, படிச்சவங்க, அரசியல்வாதி, என்பது போன்ற பல அஸ்திரங்களை உருவாக்கி, incrowd சேர்ப்பது. அதாவது குரூப்பிஷம் சேர்ப்பது. அப்படி சேர்ப்பதன் மூலம், தன்னுடைய, பெரிய மனிதன் முகமூடியை அணிந்து கொள்ளுவது. அப்படி தன்னுடைய குரூப்பில் சேராத, அடிபணியாத பலரை, ஒதுக்கி தீர்த்து கட்டுவது.  இது, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. இல்லை என்று சொல்ல இயலாது. ஏன் நாமே கூட பல இடங்களில் அதனை செய்து இருக்கலாம், அல்லது செய்பவரின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம்.  ஆனால், அதனை மற்றவர் செய்வதை பார்க்கும் போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. உடனே, நாம், நடுநிலையானவன் முகமூடியை அணிந்து கொண்டு "குரூப் சேர்த்த காயத்திரியை" கண்டபடி திட்டுவது.  என்று நமக்கும் இருக்கும் உண்மை தனத்தை முகமூடியை கிழித்துக்கொண்டு வெளியே வந்து கீழ்த்தரமாக திட்டி தீர்க்கிறோம். உண்மையை சொன்னால், அந்த இடத்தில் பிழைக்க என்று, தன்னை மாற்றிகொண்டு, அல்லத ஒத்திசைத்த ஜூலியை, கண்டபடி திட்டி தீர்த்தது. ஆனால் உண்மையில் நாமெல்லாமே, ஜூலியை போலவே. ஆபிசில் பிடிக்காவிடினும், சிலருடன் வேலை செய்ய அல்லது ஒத்துப்போக என்று "நல்லவர்" முகமூடியை அணிந்து கொண்டு நடிக்கிறோம். அங்கே நம்முடைய  அந்த "முகமூடி", பிழைக்கத்தெரிந்தவன் பட்டத்தை நமக்கு கொடுக்கிறது. ஆனால், இங்கே நாம் நடுநிலையானவன் என்று நம்முடைய உண்மையான முகத்தை திறந்து, மற்றவர்களை திட்டி தீர்க்கிறோம். கமல் அவர்கள் குறிப்பிட்டது போல, "உள்ளே அவர் பேசியது கொஞ்சம் தான், வெளியே பேசும் மக்களின் கீழ்த்தரமான வார்த்தைக்கு".

எது என்னவோ, "இனவெறி/தான் உசத்தி" என்ற உண்மை முகத்தை மறைக்க முகமூடி அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களின் உண்மை முகத்தை மக்கள் பார்த்தார்கள் என்றால், அவர்கள் தங்களின் நல்லவர் முகமூடியை கிழித்து உங்களை தொங்கவிட்டு விடுவார்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்படி சண்டை போடும், முகத்தை காட்டும் வேலையை செய்யாமல் சும்மா நாம் உண்டு நம் வேலை உண்டு என்று "பிந்து" போல இருந்தால் அவர்களை பிடிப்பதில்லை. போரிங்  என்று முத்திரை குத்தப்படுவர். அதாவது, மக்கள் விரும்புவது என்னவோ அதற்க்கு தகுந்தாற்போல முகமூடி அணிந்து நடிக்க, பேச, சண்டை போட தெரிந்தவர்களை மட்டுமே, நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு ஒரு வில்லி/வில்லன் வேண்டும், ஒரு கதாநாயகி/கதாநாயகன் வேண்டும். எப்போதுமே சீரியல் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு, இதெல்லாம் அவசிய தேவை.  அதனை நிறைவேற்ற என்று டிவியும் நிறைய மக்களை தரையிறக்குகிறது என்று தோன்றுகிறது.


டிஸ்கி
இதில் குறிப்பிட்டுள்ளவை எல்லாமே, என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிடவில்லை.