Sunday, April 29, 2018

அறையில் இருக்கும் யானைகள்!!

ஆங்கிலத்தில் "An elephant in the room" என்ற பதத்தை அதிகம் உபயோகிப்பதை கேட்டதுண்டு. இந்த metaphor அல்லது உதாரணம், நாம் எல்லோருக்கும் தெரியும் ஒரு பிரச்னை இருக்கிறது என்று, ஆனாலும் அந்த பிரச்னை இருப்பதை குறித்து பேசவோ, எழுதவோ, விவாதிக்கவோ நாம் விரும்பாத போது, அந்த பிரச்னையை "அறையில் இருக்கும் யானை" என்று குறிப்பிடலாம்.

நாம் அனைவருக்கும் தெரியும், அந்த யானை அறையில் இருக்கிறது என்று, ஆனாலும் நாமெல்லாம் அதனை பார்ப்பதில்லை அல்லது பார்த்தும் பார்க்காமல் இருக்க நினைக்கிறோம். நான் இப்போது சொல்ல வருகிற விஷயமும் அது போல சில  "அறையில் இருக்கும் யானை" தான்.

1. அறையில் இருக்கும் முதல் யானை 

என் கல்லூரி தோழிகள் குழுமத்தில் அடிக்கடி நான் கேட்கும் ஒன்று. இந்தியா மட்டும் தான் உலகில் இருக்கும் "மத சார்பற்ற ஒன்று", "வேற்றுமையில் ஒற்றுமை",  நம் அண்டைய நாடுகளை பாருங்கள், அவர்களை விட நாம் தான் மற்ற எல்லா விதத்திலும் உயர்ந்து இருக்கிறோம், நம்மை யாரும் பிரிக்க முடியாது.. இத்தியாதி இத்தியாதி..அதுவும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் இந்த சத்தம் பெரிதாக ஓங்கி ஒலிக்கும்.

இதுதான், என்னுடைய  முதல் "அறையில் இருக்கும் யானை" . நாம் எல்லோருக்கும் தெரியும், நமக்குள் ஒற்றுமை இல்லை என்று. இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தியாவை விட்டு வெளியே வந்தாலும், நமக்குள் ஒற்றுமை இல்லை என்று.  ஏன், ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. இந்திய சாதி பிரிவுகள் இங்கேயும் இருக்கின்றன. இவை ஏன், தமிழ் நாட்டில் வசித்து, அங்கிருந்து சாதியை இங்கே கொண்டு வந்து, தன் சாதியை சேர்ந்த மக்களாக மட்டும் அழைத்து தீபாவளி பொங்கல் என்று விழா கொண்டாடும் மக்களும் இங்கே இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தே, அப்படி "ஒரு பொங்கல் விழா" நடந்தேறியது. அந்த விழாவில் வேறு எந்த சாதிக்கும் அனுமதி இல்லை.


photo from google image

தற்போது இளைஞர்களை கூட தன்னுடைய ஜாதியை (அது உயர்ந்த சாதியாக இருக்கும் பட்சத்தில்) அதனை தன்னுடைய பெயருக்கு பின்னர் பெருமையாக இட்டு கொள்கிறார்கள். அதில் ஒரு பெருமை.

இந்த அறையில் இருக்கும் யானையில், என்னுடைய ஒரே நம்பிக்கை/எதிர்பார்ப்பு, நமக்கு அடுத்த தலைமுறை, இதனை தொடர கூடாது என்பதே. ஆனாலும், நம்முடைய "கலாச்சாரத்தை ஊட்டுகிறேன்" பேர்வழி என்று, கலாச்சாரத்தோடு, "சாதியையும்", சேர்த்து ஊட்டுபவர்களே  இங்கு அதிகம். இங்கே இந்த நிலை என்றால் இந்தியாவில் கேட்கவே வேண்டாம்.

2. அறையில் இருக்கும் இரண்டாம் யானை 

இந்த யானையும் முதல் யானையோடு சம்மந்த பட்டது தான் என்றாலும், இது கொஞ்சம் வேறானதும் ஆகும்.  முதல் யானை சாதி மதத்தை  பற்றியது என்றால், இரண்டாவது யானை சாதி மாறி, மதம் மாறி நடக்கும் திருமணங்களை குறித்தது.

என்னுடைய கல்லூரி தோழிகள் குழுமத்தில் எல்லா மத நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள், இப்படி "இந்தியா தான் சிறந்தது, வேற்றுமையில் ஒற்றுமை, நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், இந்த அரசியல்வாதிகள் தான் மக்களை பிரிக்கிறார்கள்" என்ற வாக்கியங்களை கேட்க்கும் போது எல்லாம் நான் கேட்க்கும் ஒரு கேள்வி இது தான். சரி, நீங்கள் சொல்வது, "நன்று," "உங்கள் பெண் அல்லது பையன், மற்ற சாதி/மதம் சேர்ந்த பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களிடம் வந்து கேட்கிறார் என்றால், நீங்கள் சம்மதிப்பீர்களா?" திருமணம் முடித்து வைப்பீர்களா?" இப்படி நான் கேட்டவுடன் "ஜகா" வாங்குபவர்களே அதிகம்.

உங்களால் ஒரு சொல்லுக்கு கூட, "ஆமாம் நான் சம்மதிப்பேன்" என்று சொல்ல முடியவில்லையே, பின்னர் எதற்கு இந்த வீண் பேச்சு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூச்சல்.

3. அறையில் இருக்கும் மூன்றாவது யானை 

இது ஒரு விதத்தில் நான்   முன்பு சொன்ன விஷயத்துக்கும் தொடர்புடையது. "இந்திய கலாச்சாரம்தான் சிறந்தது", என்று நடக்கும் கூச்சல்.  

40 வயதை கடந்தாலே, நம் மக்களுக்கு ஒரு வித மனப்பான்மை வந்து விடுகிறது என்று கொள்ளலாம். "நமக்கு" என்ற சுயம் இல்லாமல் "போய்" அனைத்த்தும் குடும்பத்துக்கு என்று வாழ்வது என்றாகி விட்ட போது, "தான் யார் " என்று தேடும் "ஐடென்டிட்டி கிரைசிஸ்" வந்து விடுகிறது.  இது உண்மை, எல்லோருக்கும் நடக்கும், ஆண் பெண் வித்தியாசம் இன்றி, இதையே "மிட் லைப் கிரைசிஸ்" என்று அழைப்பார்கள்.  இது "அறையில் இருக்கும் மூன்றாவது யானை", பலரும் எதோ ஒரு வகையில் இந்த நிலையை கடந்து வந்திருப்பார்கள்.

இந்த சூழலில், இன்னொரு காதல் என்று திரும்பும்சிலரும்  இருக்கிறார்கள்.  எந்த பத்திரிக்கை எடுத்தாலும் இதனை போன்ற செய்திகள்இல்லாமல்  இருக்காது. பத்திரிக்கை வாசிப்பவரை பொறுத்தவரை, அது ஒரு கிளுகிளுப்பு செய்தி.  முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த செய்திகள் போய், தற்போது எங்கும் எதிலும் இப்படி நிறைய கேட்க முடிகிறது.


ஆனால், ஜோக் என்னவென்றால், இப்படி பரவலாக நடக்கும் விஷயங்களை மக்கள் "அறையில் இருக்கும் யானையாக" பாவித்து, "நமது கலாச்சாரமே சிறந்தது" நாம் தான் சிறந்தவர்கள் என்று கலாசார காவலர்களாக இருப்பது.

4. அறையில் இருக்கும் கடைசி யானை 


சில வாரங்களுக்கு முன்பு, என்னுடைய முதுநிலை கல்லூரி  குழுமத்தில் இருந்து வந்த ஒரு செய்தி. வயசான பெற்றோர், தன்னுடைய தனிமை குறித்து, தன்னுடைய பிள்ளைகள் குறித்து திட்டி எழுதிய ஒரு மடல், என்று வைத்து கொள்ளலாம். அதனை குறித்த ஒரு விவாதம் எங்கள் குழுமத்தில் நடக்க, அதில்  நான் பாட்டுக்கு சும்மா இல்லாமல், வயதான காலத்தில், எதுக்கு பிள்ளைகளை நம்பி இருக்கணும், காசு இருக்குல்ல, பேசாம, எங்கையாவது டூர் போகலாம், அவங்க பிரெண்ட்ஸ் கூட விளையாடலாம், பேசலாம், படிக்கலாம்".  என்று கூற, பயங்கர விவாதம். "நீ அந்த இடத்தில இருந்து  பார்த்தால் தான் தெரியும், எப்படி கஷ்டம் தெரியுமா? என்று. உங்களை போல வெளிநாட்டுல போய் செட்டில் ஆனவங்கனால தான் பெற்றோர் கஷ்டப்படுறாங்க" என்று என் மேலே திரும்பிய கணைகள்.

அந்த சூழலில் அறையில் இருக்கும் யானை, "எதோ வெளிநாட்டிலோ இருப்பவர்களாலே தான் பெற்றோர் இப்படி கஷ்டப்படுகிறார்கள்  உள்நாட்டில் நாங்கள் எங்கள் பெற்றோரை கண்ணில் வைத்து பார்த்து கொள்ளுகிறோம்" என்று திருப்பும் மக்கள். அதுவும் இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களை தாக்க என்று வெயிட் செய்து கொண்டிருப்பார்கள்.

அதில் என்னுடைய தோழி ஒருவர் சொன்ன சில விஷயங்கள், எங்கள் தரப்பு விவாதம் என்று வைத்து கொள்ள உதவியது.  அவர் சொன்னது இது தான், என்னுடைய பெற்றோரை எங்களுடன் வந்து இருங்கள் என்று அழைத்தாலும் வந்து இருப்பதில்லை, எப்படி "பெண்" வீட்டில் இருப்பது, என்ற ஈகோ வந்து விடுகிறது. அதனால் தனிமையில் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் எங்களுடன் வந்து தங்க மாட்டார்கள். இன்னும் பெண் வீடு, பையன் வீடு என்று வித்தியாசம் பார்க்கும் பெற்றோர் இருக்கிறார்கள்.

இருப்பதை நினைத்து, வைத்து கொண்டு, சந்தோசமாக வாழ்ந்து குறை காலத்தை கழிப்பதே சுகம். என்னுடைய பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா, 75 வயதை கடந்தவர்கள். பிள்ளைகள் அருகில் இல்லை, ஆனாலும் அவ்வளவு ஆக்ட்டிவ். இன்னும் டென்னிஸ் விளையாடுவது, பாட்டி தோட்டவேலை செய்வது, சர்ச்சில் வலண்டீர் பணி செய்வது என்று சந்தோசமாக இருக்கிறார்கள்.

என் அம்மா மருத்துவ செலவு இவ்வளவு ஆகுது.. என்று புலம்பும் போதெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். "செலவு செய்து மருத்துவம் பார்க்கும் அளவு காசு இருக்குல்ல" அதனை நினச்சு சந்தோசமா இருங்க... என்று சொல்வேன். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு."



டிஸ்கி

இங்கே குறிப்பிட்டுள்ளதை எல்லாம் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. யாரையும் எவரையும், எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை. புரிதலுக்கு நன்றி

Saturday, April 21, 2018

கனவு, கவர்ச்சிகன்னிகளும் , Femme Fatale ம்.

Femme Fatale, என்றால் என்ன என்று கூகிளில் தேடவும்: An attractive and seductive woman, especially one who will ultimately bring disaster to a man who become involved with her.

நீங்கள் தமிழில் இதற்க்கு அர்த்தம் தேடினால், விவகாரமான பெண்,  கவர்ச்சியான பெண் என்பது போன்ற அர்த்தங்கள் வருகிறது. ஆனால் இவை இரண்டும் பொருந்தாது என்பது என் எண்ணம். இப்படி பட்ட பெண்கள், கவர்ச்சியாகவும் இருப்பார்கள், கனவு கன்னிகளாகவும் இருப்பார்கள், ஆனால் பயங்கரமான உள்நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

தமிழ் சினிமாவில், முதன் முதலில் கனவு கன்னியாக பார்க்கப்பட்ட பேசப்பட்டவர் T.R. ராஜகுமாரி என்று சொல்வார்கள். அவரின் "மன்மத லீலையை வென்றார் உண்டோ" பாடலில் "பறக்கும்  முத்தம்" அந்த காலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பார்கள்.  ஒரு seductress அவர். பார்வையில் ஒரு மயக்கம் கிறக்கம் இருக்கும். அந்த கால இளைஞர்களை அவரின் bold மூவ்ஸ் பாடாய் படுத்தியது என்று சொல்லலாம்.  அந்த நாட்களில் பின்னர் எத்தனையோ பேர் வந்தாலும், T.R.ராஜகுமாரி அளவு கவரவில்லை எனலாம். 1940-50 களில் கோடி கட்டி பறந்தவர்.

பின்னர் 60-70 களில் , நிறைய கிளப் டான்சர்ஸ் ரோல்களில் நிறைய பேர் அறை குறை ஆடையுடன் ஆடுவது போல நிறைய பாடல்கள் வந்தாலும், மனதில் நிற்பது போல Femme Fatale ரோல்கள் செய்தவர்கள் என்றால் ஜெயமாலினி, ஹிந்தி நடிகை ஹெலன், அனுராதா என்ற ஒரு சிலர். ஆனாலும், இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர், சில்க். தன்னுடைய கண்ணசைவில், கவர்ச்சியில் 80 களின் இளைஞர், முதல் முதியவர் வரை ஆட்டி படைத்தவர். என்ன படம் என்று நினைவில்லை, ஆனால் ஒரு படத்தில் பாடலின் ஒவ்வொரு பத்தியில் தன்னுடைய ஒவ்வொரு உடையின் லேயர் அவிழ்ப்பார். ரொம்ப பேமஸ் பாடல் அது.

முன்பெல்லாம் இது போன்ற Femme Fatale ரோல் செய்வதற்கு என்று சிலர் இருந்தனர். ஆனால் இப்போது பல ஹீரோயின்களே அந்த ரோல்கள் செய்து விடுகிறார்கள். ஆடை அவிழ்ப்பு மற்றும் அரைகுறை ஆடை, நீச்சல் உடை போன்றவை உடை அணிந்தால் Femme Fatale அல்ல,  

 என்னை பொறுத்தவரை, Femme Fatale ரோல் செய்வதென்றால் உங்கள் மேல் நெகடிவ் இமேஜ் இருக்க வேண்டும். பெண்களுக்கு உங்களை பிடிக்க கூடாது, ஆனால் ஆண்கள் கனவு காண வேண்டும்.  நல்ல அறிவாளியாக இருக்க வேண்டும், எதிராளியை எப்படி கவிழ்க்க முடியும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அனைத்தையும், அனைவரையும், உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த வளைக்க தெரிந்திருக்க வேண்டும். வெரி வெரி  போல்ட். ஜேம்ஸ் பாண்டு படங்களில் எல்லாம் ஒரு Femme Fatale ரோல் கட்டாயம் இருக்கும், இவர்கள் எல்லாருமே டபிள் ஏஜென்ட் ஆக இருப்பார்கள். 

சரி, என்ன திடீரென்று, Femme Fatale பற்றிய ஆராய்ச்சி. உண்மையில் இது Paulo Cohelho வின் "தி ஸ்பை"  படித்த பிறகு ஏற்பட்ட ஆராய்ச்சி.


photos from google images

இந்த நாவலின் கதாபாத்திரம், "மாதா ஹரி"/ "Mata Hari" என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல. உண்மையில் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு Femme Fatale. மிக மிக கவர்ச்சியான, அறிவான, யாரையும் மயக்கக்கூடிய, ஒரு பெண். உண்மையான டபிள் ஏஜென்ட். முதல் உலகப்போரில் டபிள் ஏஜென்ட் ஆக செயல்பட்டவர் என்று பிரெஞ்சு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவர்.

ஆனால், யார் இந்த மாதா ஹரி. என்று Paulo, அவர் இறக்கும் முன்பு தன்னுடைய வக்கீலுக்கு எழுதிய கடிதங்களை வைத்து விவரிக்கிறார். 

சந்தேகப்படும், அடிக்கும்  கணவனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து, அடிபட்டு சுதந்திரமாய் இருக்க என்று  வீட்டை விட்டு ஓடி வந்த பெண் அவர். சிறு வயதில் கற்ற நடனம் உடன் இருக்க. எப்படியாவது பெரியாளாக வேண்டும் என்று  கையில் ஒருபைசா இல்லாமல் பாரிஸ் நகரம் வந்திறங்கிய "மார்க்ரெட் ஸில்லே".  எப்படி பெரியாளாவது என்று யோசனையில், தன்னுடைய பெயரை "மாதா ஹரி" என்று மாற்றி வைத்து கொண்டு, தான் கீழை நாடுகளில் வாழ்ந்தவர், அங்கிருக்கும் நடனம் பயின்றவர் என்று பரப்பினார். "கீழை நாடுகளில் மக்கள் நடனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால், என்னதான் இந்த பெண் காட்டுகிறார் என்று பார்க்க வந்த கூட்டத்தை, தன்னுடைய வித்தியாசமான அலங்காரம், எஸோட்டிக்மூவ்மெண்ட் என்று தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை, சரியாக பயன்படுத்திய மாதா ஹரி, அதனுடன் நிற்கவில்லை. தன்னுடைய ஷோ ஸ்டாப்பர், மூவ்மெண்ட், ஒவ்வொரு அசைவிலும் தன்னுடைய ஒவ்வொரு லேயர் துணியை உருவி விடுவது, முடிவில் முக்கால் வாசி ஆடை உருவி ஷோவை முடிப்பது என்று, முடித்து, 1904-5 களில், பாரிஸ் நகரை அலற வைத்தவர்.



photos from google images

 பின்னால் நடராஜர் சிலை இருக்க, அலங்காரங்களும், தோரனைகளும் வேறு மாதிரி இருக்க, இவரின் நடனம், அந்த கால பத்திரிகைகள், பெரியமனிதர்கள், "யார் இவர்", இப்படி ஒரு டான்சர் பார்த்ததில்லை என்று அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின. 

ஆனால், "கவர்ச்சி"  சிறு ஆயுட்காலம் கொண்டது. சில ஆண்டுகளில் வெறுத்து. அதே பத்திரிக்கைகள், இவரை, வேறு மாதிரி விவரிக்க தொடங்க ஆரம்பிக்கும் போது , தன்னை ஒவ்வொரு முறையும் புதுப்பிக்க மறக்க வில்லை மாதா ஹரி. ஒவ்வொரு முறையும், வேறு வேறு கிழக்காசியா நாடுகளின் நடனத்தை புகுத்தி, புதுமை கொண்டுவர மறக்கவில்லை. ஒரு சூழலில், "இவரை யாரும் மதிக்கவில்லை, ஆனால் மறக்கவும் இல்லை". 

படிப்படியாக, பெரிய மனிதர்கள் பலருக்கு இவரின் "சகாயம்" தேவைப்பட. இவரும், அந்த சூழலை நாசுக்காக பயன்படுத்தி, தன்னுடைய அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார். முதல் உலகப்போர் மூண்ட நேரம், பிரான்சும், ஜெர்மனியும், எப்படி போரை கையாள்வது, அடுத்தவர்களை பற்றிய துப்புகளை எப்படி அறிவது என்று ஒற்றர்களை பல திசைகளிலும் அனுப்ப எத்தனித்து கொண்டிருக்க. பல பெரிய மனிதர்களின், சர்கிளில், சுதந்திரமாக வாழ்ந்து வந்திருந்த "மாதா ஹரி"  தயவை "ஜெர்மனி" அடைய ஒற்றர் H21 நியமித்தது. வயதாகிவிட்டது, இன்னும் டான்ஸ் ஆட முடியாது, என்று, இவரே சென்று, "பிரெஞ்சு" போர் அமைச்சரவையில், "இங்கே பாருங்கள், ஜெர்மனி என்னை அவர்களின் தூதரக நியமித்து இருக்கிறது, எனக்கு "ஜெர்மனி" பெரிய மனிதர்களும் பழக்கம். வேண்டும் என்றால், பிரெஞ்சு க்காக நான் ஒற்றரிகிறேன், எனக்கு பணம் கொடுங்கள்" என்று இரண்டு பக்கமும், "டபிள் ஏஜென்ட்" ஆக செயல்பட்டு, ஆனால், ஒரு பக்கமும், பயனுள்ள எந்த தகவலையும் தெரிவிக்காமல் இரண்டு நாட்டிற்கும் "பெப்பே"  காட்டியவர். இரண்டு பக்கமும் எந்த தகவலும் சொல்லாமல் இவர் நழுவி கொண்டிருக்க, இவரை பிரெஞ்சு ஒற்றராக நியமித்த பிரெஞ்சு அதிகாரி, எப்படி ஒரு பெண் தன்னை ஏமாற்றி இருக்கிறார் என்று வெறுப்பாகி, அவரை கர்ணம் வைத்து மாட்டி விட்டிருக்கிறார்"

கடைசியில் பிரெஞ்சு  தூதராகத்தால், சிறை பிடிக்கப்பட்டு சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையில்  யாராலும், அவர் செய்த எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பலியாடாக இவர் தலை உருண்டிருக்கிறது.

வழக்கமான, Paulo Coelho, புத்தகம் இது இல்லை என்றாலும், அங்கங்கே, சில தத்துவங்களை போலோ,  தூவ தவறவில்லை. போலோ வின் கூற்றுப்படி, "ஆணாதிக்க சமுதாயத்தில், தனக்கு விரும்பிய வகையில் சுதந்திரமாக   வாழ எத்தனித்த ஒரு பெண்ணின் முடிவு" என்று முடிக்கிறார்.
எது எப்படியோ, என்னை பொறுத்தவரை, "மாதா ஹரி", உண்மையான  Femme Fatale.


நன்றி.