Sunday, April 7, 2019

மறுபடியும், கேரேமேர் Vs கேரேமேர், 90ml

ஒரு 40 வருடங்களுக்கு முன்பு 1979 இல், ஹாலிவூட்டில் "Kramer Vs Kramer" என்ற அற்புதமான படம். குடும்ப உறவுகளை, ஜெண்டர் பையஸ், அல்லது பாலின பாகுபாடுகள் குறித்து வந்த படம்.
ஆண்கள் பாதுகாப்பாளர்கள், வீட்டுக்கு தேவையானதை சம்பாதிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், தன் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட அறியாதவர்கள், அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், மதியம் உணவு வேளையில் கூட 3 மார்டினி அடிக்கலாம். மாறாக பெண்கள் :வீட்டை,  குழந்தைகளை, குடும்பத்தை, வீட்டு பெரியவர்களை பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும் கவலை குடும்ப பிரச்னை இருந்தாலும் பொறுத்து கொண்டு, தியாக சிகரம் ஆக இருக்க வேண்டும். என்ற ஜெண்டர் பையஸ் இல் இருந்து வெளியே வர துடிக்கிறாள் ஜோயன். தன்னுடைய மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ளாத கணவன், அவளுக்கு என்ன நடக்கிறது என்று கூட பரிமாறி கொள்ளாத கணவன் டெட்.

ஒரு நாள் மிக பெரிய ப்ரோமோஷன் கிடைத்ததை பகிர வீட்டுக்கு வரும் டெட் க்கு, தன்னுடைய மனைவி வீட்டை விட்டு செல்ல தயாராக இருக்கிறாள் என்று தெரிய வருகிறது. அவள் யாருடனும் "ஓடி போக வில்லை", மாறாக தன்னை புரிந்து கொள்ள அறிந்து கொள்ள, தன்னுடைய ஐடென்டிட்டி ஐ தெரிந்து கொள்ள செல்கிறாள்.

தானாக வாழ வேண்டும், தனக்கென்று ஒரு ஐடென்டிட்டி உருவாக்க விழையும் ஒரு பெண்ணின் தேடுதல் அது.  ஜெண்டர் ரோல்ஸ் மாற வேண்டும் என்று 40 வருடங்களுக்கு முன்பு சொன்ன படம் அது.







25 வருடங்களுக்கு முன்பு வந்த படம் . "மறுபடியும்"

"கல்யாணம்கிறது ஒரு செக்யூரிட்டி அப்படின்னு கவிதா நினைக்கிறாங்க, ஆனா ஒரு கையெழுத்து போட்டா அது முடிஞ்சிடும்னு அவங்களுக்கு தெரியல"

"மறுபடியும் என்னை கோழை ஆக்கிடாதீங்க. எல்லாத்தையும் உங்க மேல தூக்கி போட்டு ரிலாக்ஸ் ஆகிடுவேன் நான். எனக்கு அது வேண்டாம்."

"மறுபடியும்" படத்தின் அற்புதமான வரிகள்.

"கல்யாணம் என்பது  செக்யூரிட்டி" என்ற பார்வையில் இருந்து ஒரு பெண் விலகி தனி ஆளாக எந்த குடும்ப பெயர், கணவன் பெயர், அப்பா பெயர் இல்லாமல்  சுதந்திரமாக வாழ முடிவெடுத்த ஒரு இடத்தில் முடிந்த படம் அது. அந்த பெண்ணுக்கு வாழ ஒரு பிடிமானம் கொடுத்தது "தத்தெடுத்த அந்த குழந்தை"






"மறுபடியும்" படம் தற்போது வரை கொண்டாட படுகிறது என்றால் அதற்க்கு காரணம், "துளசி" கேரக்டர், ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற தமிழ் சமுதாயம் வரையறுத்த இலக்கணத்தில் இருந்து மாறாமல் அதே சமயம் தனக்கென்ற ஒரு ஐடென்டிட்டி தேடிய பெண்ணின் கதை என்பதால்.

இன்று வரை, பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் "பெண்ணின் விருப்பம் என்று ஒன்றும் இல்லை", ஆண் தன்னுடைய விருப்பத்தை பெண்ணின் மீதி திணிக்கலாம். பெண்கள் என்பவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும்  என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. உதாரணமாக "ரோஜா", "மௌன ராகம் ".  ஒரு சில படங்களில் மட்டுமே வலுவான பெண் கதாபாத்திரம் இருக்கும். அதுவும் தனக்கென்று முடிவெடுக்க தெரிந்த, அந்த முடிவில் நிலைத்து நின்ற பெண் தமிழ் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சரி ஹாலிவுட்டில் 40 வருடங்களுக்கு முன்பு வந்த kramer vs  kramer போன்ற ஒரு கருத்து உள்ள படம் தற்போது தமிழில் எடுக்கப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள், என்ன எதிர் வினை வரும்? உடனே அந்த பெண்ணின் கேரக்ட்டர் மேல் படுகொலை நடந்து இருக்கும். என்னப்பா படம் எடுக்குறீங்க? எப்படி அந்த பெண் தன்னுடைய விருப்பப்படி முடிவெடுக்க முடியும். இது குடும்பத்துக்கு எதிரானது, கலாச்சார படுகொலை, என்று கத்தி இருப்பார்கள்.

இந்திய திரைப்படங்களை பொறுத்தவரை, ஜெண்டர் பையஸ் என்பது இன்று வரை மிக அதிகமாக விரவி கிடக்கிறது. இந்தியா போன்ற சமூகத்தில், ஒரு பெண் தனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை வாழ நினைக்கிறாள் என்பதை காட்சி படுத்த நினைத்த ஒரு படம் 90ML. "My life My rules!", தனக்கென்ற ஒரு ஐடென்டிட்டி திருமணம் ஆனால் தொலைந்து விடும் என்று நம்பும் ஒரு பெண், திருமணத்தை தவிர்க்கிறாள். தனக்கு பிடித்ததை செய்கிறாள். அது தண்ணி அடிப்பதில் ஆகட்டும், மற்ற வஸ்துகள் உபயோகிப்பதில் ஆகட்டும். இதுவே நம் கலாச்சார காவலர்களுக்கு பெரிய ஷாக் ஆகிறது. எப்படி சமூக சீர்கேட்டை இந்த படம் பரப்புகிறது என்று குய்யோ முறையோ என்று அடித்து கொள்கிறார்கள். அதாவது, இதே போன்ற ஒரு காட்சி 100இல் 99.99 தமிழ் படங்களில் கதாநாயகர்கள் செய்வார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படும். அதே சமயம், பெண்கள் இது போன்று செய்தால் கலாச்சார சீர்கேடாம்.




இன்னும் 40-50 வருடங்கள் பின்தங்கி இருக்கும் தமிழ் திரை உலகில்,  "My life My rules! போன்ற அல்ட்ரா மாடர்ன் கருத்துகளை கொண்டு இருக்கும் இது போன்ற படங்களை ஓட ஓட விரட்டியே தீர்வார்கள். இன்னும் அருக்காணி போல, "மாமா" என்று கதாநாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் லூசு காதலி, அல்லது, தியாகசிகரம் மனைவி மட்டுமே இவர்கள் தேவை.  இந்திய சமூகத்தில், பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அதனை நீங்கள் சிறிதளவு தாண்டினாலும், நீங்கள் கலாச்சார சீரழிவை உண்டாக்குபவர்ஆக்கப்படும் .

இன்னும் மனதளவில் வளராத ஒரு சமூகத்தின் முன்பு, இது போன்ற கருத்துகள் கொண்ட படங்கள் தேவை இல்லை. ஏனெனில் புரிந்து கொள்ள படாது என்பது என் எண்ணம்.


டிஸ்கி 
இது என்னுடைய கருத்துகள் மட்டுமே. இது தமிழ் கலாச்சார சீர்கேட்டை ஆதரிப்பதாக படிப்பவர்களுக்கு தோன்றினால் அது என் பொறுப்பு அல்ல.






1 comment:

வேகநரி said...

இப்படி படம் வந்தது உங்க பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். நமது கலாச்சார காவலர்களுக்கு பயங்கர கோவம் வரும் என்பது ஊகிக்க முடிகிறது.