Thursday, January 27, 2011

எல்லாம் பயமயம்!

`தெனாலி படத்தில் கமல் ஒரு பயந்தாங்குளியாக நடித்திருப்பார். ஜெயராமை சந்திக்கும் முதல் காட்சியிலேயே தனக்கு எதை எதை பார்த்தால் பயம் என்று ஒரு லிஸ்ட் வாசிப்பார். அந்த லிஸ்ட் இல் புல் முதல் வெடிகுண்டு வரை இருக்கும்..

உண்மையில் ஒருவருக்கு இப்படி பய உணர்வு இருக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் உன்மையில் மனிதர்களுக்கு இருக்கும் பய லிஸ்ட் மிக பெரியது என்று தோன்றுகிறது.
உதாரணமாக..
  1. முடி கொட்டிட்டா என்னாவது?
  2. பரு அல்லது சுருக்கம் வந்தால் முகம் அசிங்கமாயிடுமோ?
  3. லேட்டஸ்ட் மாடல் பொண்ணை/பையனை போல டிரஸ்/ செல் போன்/பைக்வாங்காட்டி யாரும் நம்மை பார்க்க/மதிக்க மாட்டாங்களோ?
  4. அந்த பொண்ணு/பையன் என்னை கிண்டல்/சைட் அடித்தால்/அடிக்காட்டி என்ன செய்வது?
  5. வாத்தியார் எல்லார் முன்னாடியும் திட்டினால் என்னாவது?
  6. ப்ரோமோஷன் கிடைக்கா விட்டால் என்னாவது?
  7. மெமோ கிடைத்து விட்டால் என்ன செய்வது?
  8. வேலையை விட்டு தூக்கிவிட்டால் என்ன செய்வது?
  9. பதவி போயிட்டா என்னாவது?
  10. பக்கத்து வீட்டுக்காரன்/காரி என்னை பத்தி என்னா நினைப்பா?

இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் பெரிய லிஸ்ட் கட்டாயம் இருக்கும்

உண்மையில் நமது சமுதாயம் சிறுவயது முதலே நமக்கு பயங்காட்டியே ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக "
பூச்சாண்டி பிடிச்சிட்டு போயிடுவான்", "பிள்ளை பிடிகிறவன் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்", "சரியா சாப்பிடாட்டி பூனை வந்துடும்"என்று குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க பயத்தை உண்டாக்குகிறோம்.

சிறுவர்கள் ஆன பிறகு இது போன்று எதுவும் கிடையாது என்பதில்லை, அப்பொழுது வேறு மாதிரியான பயஉணர்வு ஏற்படுத்தி ஒழுக்கத்தை போதிக்கிறோம். உதாரணமாக, "ஒழுங்கா சாப்பிடாட்டி TV கிடையாது", "ஒழுங்கா ஹோம்வொர்க் பண்ணாட்டி கிரிக்கெட்/கேம் கிடையாது", "ஒழுங்கா படிச்சு first ரேங்க் வராட்டி vacation கட் " போன்றவை.

இதனை போன்ற பயத்தின் மூலம் ஒழுக்கம் என்பது பெரியவர்கள் ஆன பிறகும் தொடர்கிறது. உதாரணமாக "தப்பு செய்தால் போலீஸ் பிடிக்கும்", "பாவம் செய்தால் நரகத்துக்கு போவோம்", "படிச்சு, பாஸ் செய்யாட்டி வேலை கிடைக்காது" என்பது போன்ற சில.

அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் தரப்படுவதால் தான் அங்கு குற்றம் நடப்பதும் குறைவாக இருக்கிறது. அதனாலேயே தமிழ் திரைஉலகில் அந்த காலத்து வாத்தியார் படங்களில் இருந்து இந்த காலத்து அன்னியன் வரை பல படங்கள் இதனை வலியுறுத்துகின்றன.

தண்டனை கிடைக்கும் என்று தெரிந்துகொண்டே குற்றம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்த நாட்களில் ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்து “நான் 10 தங்க பார்களை உங்கள் கிராமத்துக்கு தருகிறேன், போலிஸ் எல்லாம் பிடிக்காது, யாரேனும் ஒருவரை கொலை செய்ய முடியுமா?” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா? இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா?

என்ன இது லூசு தனமா இருக்கு என்று நினைகிரீர்களா? இப்படி ஒரு சூழலை மையமாக கொண்டது தான் நான் இப்பொது வாசித்த Paulo Cohelco வின் புத்தகமான The Devil and miss Prym இல் கேட்கப்படும் கேள்வி இது..என்ன செய்வார்கள் அந்த கிராம மக்கள் நீங்களே சொல்லுங்கள்.

Wednesday, January 12, 2011

ஆட்டோகிராப்!

சிறு வயதில் நாம் இருந்த ஊர், வீடு பள்ளி போன்றவை எப்போதும் மனதில் நிற்கும். அதற்க்கு பிறகு எத்தனை வீடு, ஊர், மாநிலம், நாடு மாறினாலும் எப்போது நினைத்தாலும் அந்த பழைய வீடு கண்முன் வந்து நிற்கும்.

எனக்கு எப்போது இந்தியா பற்றி நினைத்தாலும் நான் சிறு வயதில் இருந்து இந்தியாவை விட்டு வெளியில் வரும் வரை நாங்கள் வசித்த அந்த வீடு நினைவிற்கு வரும்..எனது சிறு வயது நண்பர்கள், பள்ளி தோழிகள், பக்கத்து வீட்டு எதிர் வீட்டு நண்பர்கள் என பலரும் நினைவுக்கு வருவார்கள்.

பள்ளி முழுப்பரிட்சை முடிந்து லீவு விட்டதும் என் நண்பர்களில் பலர் அவரவர் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகிறோம் என்று சொல்லி செல்வார்கள் அப்போதெல்லாம் எனக்கும் அவர்களை போல தாத்தா பாட்டி வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றும், ஆனால் வாய்ப்பு வாய்த்ததில்லை. அதற்காகவே என் அம்மா கோவிலுக்கு, கடை வீதிக்கு என்று அழைத்து செல்வார்கள்.

அதிலும் சித்திரை மாதம் வரும் சித்திரை திருவிழா மறக்க முடியாதது. எல்லா நாட்களும் சாமி சுத்தி வருவதை பார்க்க சாயங்காலம் கிளம்பி விடுவோம். அப்புறம் மீனாட்சி கல்யாணம், தேர், பூபல்லாக்கு, அழகர் ஆத்தில இறங்குறதுன்னு சித்திரை திருவிழா முடியும் வரை ஒரே கொண்டாட்டம் தான்..

பிறகு மறுபடியும் போரடிக்க ஆரம்பிக்கும் போது, என் அம்மா, என்னை தையல் கிளாஸ் போ, பாட்டு கிளாஸ் போ என்று விரட்டுவார்கள். நான் போகவே மாட்டேன்! பிறகு ஒரு வழியாக போக ஆரம்பிக்கும் போது ஸ்கூல் திறந்து விடும்..அப்புறம் மறுபடியும் ரௌடீன் ஆரம்பித்து விடும்..

சிறுவயதில் நான் அனுபவித்த அந்த நாட்களை போல முகுந்துக்கு கிடைக்குமா என்று நினைத்தால் ஒரு சில நேரம் அவனை பார்க்க பாவமாக இருக்கிறது. பாதி நேரம் என்னையும் ரங்கமணியும் விட்டால் அவனுக்கு விளையாட எந்த ஆட்களும் இல்லை.

அதனாலேயே அவனை இங்கு லைப்ரரி களில் நடக்கும் ஸ்டோரி டைம்முக்கு அழைத்து செல்கிறேன். அதில் அவன் வயதொத்த பல குழந்தைகள் இருப்பர். ஒரு லைப்ரரியன் குழந்தைகள் புத்தகம் சிலவற்றை எடுத்து கொண்டு அதில் இருக்கும் கதைகளை வாசிக்கிறார். பல நேரங்களில் அந்த கதைகளை குழந்தைகள் உக்கார்ந்து கேட்பதில்லை இருப்பினும் சில பல விளையாட்டுகளை காட்டுகிறார் அந்த லைப்ரரியன். இந்த கதை நேரம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, எந்த செலவும் இல்லாமல் மற்ற குழந்தைகள், பெற்றோரை சந்திக்க நல்ல வாய்ப்பு.

என்னுடைய சிறுவயதில் நான் அனுபவித்ததை போன்ற ஒரு சூழ் நிலை முகுந்துக்கு கிடக்க போவதில்லை, இருந்தாலும் இந்த ஊரில் இருக்கும் சூழ்நிலைக்கு அவன் சீக்கிரம் பழகி கொள்வான் என்று நினைக்கிறேன்.

இது இப்படி இருக்க இப்போது வேறு ஊருக்கு செல்ல வேண்டும். அமெரிக்கா வந்ததில் இருந்து நோர்த் கரோலினா வாசியாக தான் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது வேலை கிடைத்திருப்பது பக்கத்து மாநிலமான ஜியார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில், அதனால் ஜியார்ஜியா சொந்த மாநிலமாக போகிறது. இனிமேல் அங்கு சென்று நண்பர்கள், வீடு என்று back to square 1.

எத்தனை நாள் தான் இப்படி சட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா திரியறதோ!..எப்போ இந்தியா வந்து அக்கடான்னு இருப்போம்னு தோணுது! என்ன செய்ய காலம் தான் இதுக்கு பதில் சொல்லணும்.

Tuesday, January 11, 2011

நேரு - எட்வினா மௌன்ட்பாட்டன்



நான் பயோகிராபி புத்தகங்கள் அதிகம் படிப்பதில்லை, ஏனென்றால் அவை போரிங் என்பது என்னுடைய கருத்தாக இருந்தது. ஆனால் அந்த எண்ணம், "Indian Summer: The Secret History of the End Of An Empire" by the historian Alex von Tunzelmann படிக்கும் வரை.

ஒரு அமெரிக்க நண்பரால் பரிந்துரைக்கப்பட்ட இந்த புத்தகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இறுதி நாட்களை சுவாரஸ்யமாக விவரிக்கிறது என்றாலும், நேஹ்ருவுக்கும் மௌன்ட்பாட்டன் மனைவி எட்வினா விக்கும் இருந்த நட்பை போன்ற சில பர்சனல் விசயங்களையும் அந்த புத்தகம் விவரிக்கிறது.

நேஹ்ருவும், மௌன்ட்பாட்டன் மனைவி எட்வினாவும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் நடப்பை பார்த்து மௌன்ட்பாட்டனே ஜூன் 1948 இல் தன் சகோதரிக்கு எழுதிய கடிதத்தில்" அவர்கள் இருவரும் மிக சந்தோசமாக இருக்கிறார்கள்" என்று கூறியதாக மௌன்ட்பாட்டன் மகள் பமீலா மௌன்ட்பாட்டன் India Remembered: A Personal Account of the Mountbattens During the Transfer of Power என்ற புத்தகத்தில் கூறி இருக்கிறார்.

இந்தியன் சும்மர் புத்தகத்தில் எட்வினா தன்னுடைய கணவருக்கு எழுதிய கடிதத்தில் "தனக்கும் நேஹ்ருவுக்கு இடையே உடல் தொடர்பில்லாத நல்ல நட்பு மட்டுமே இருந்தது " என்று எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

எது உண்மையோ தெரியவில்லை, ஆனாலும் தன் மனைவிக்கும் நேஹ்ருவுக்கும் இருக்கும் நட்பு தெரிந்தே, மௌன்ட்பாட்டன் இந்திய சுதந்திரத்தை சீக்கிரம் பிரகனப்படுத்துவதை ஆதரித்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த வருடம் இந்த புக் படமாக எடுக்கப்படுகிறது. அதில் எட்வினாவாக கேட் ப்லான்செலேட்ம் நடிக்கிறார். மௌன்ட்பாட்டேன் ஆக ஹுக் கிராண்ட்ம், நேஹ்ருவாக இர்பான் கானும் நடிப்பதாக அறிவிக்கபட்டிருக்கிறது.



இந்த படத்தில், எட்வினவுக்கும் நேஹ்ருவுக்கும் இடையே எந்த முத்தகாட்சியோ அல்லது நெருக்கமான காட்சிகளோ இருப்பது போல காட்டக்கூடாது என்று இந்திய அரசு ஆணையிட்டு இருப்பதாக தெரிகிறது.

எப்படியோ, ஒரு இந்திய சுதந்திரம் சார்ந்த ஒரு படம் வருவது so exciting!

Sunday, January 9, 2011

மன்மதன் அம்பு காட்டுவது என்ன?





சமீப காலமாக நான் பார்த்த படங்களில், பத்து டாலர் அழுது ஒரு கொடுமையான படத்தை ஏன் பார்த்தோம் என்று நொந்து தலையில் முட்டி கொண்டது சமீபத்தில் பார்த்த மன்மதன் அம்பு படத்தில் தான் என்று நினைக்கிறேன்.

எனக்கு சில கமல் படங்களான பஞ்சதந்திரம், தெனாலி போன்றவை எப்போது பார்த்தாலும் பிடிக்கும். ஆனாலும் மன்மதன் அம்பு போன்ற ஒரு கொடுமையான படம் கமல் படம் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை.

கமலின் தோல்விப்படமான மும்பை எக்ஸ்ப்ரஸில் கூட காமெடி நன்றாக இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் காமெடி என்ற பெயரில் வந்த சில வசனங்கள் எனக்கு சிரிப்பை விட கடுப்பை வரவழித்தது. அதை விட மாதவனை ஒரு கேனை போல சித்தரித்து இருந்தார்கள்.

இவற்றை எல்லாம் விட என்னை மிக மிக கடுப்பேத்தியது சங்கீதாவின் காரெட்டரை அவர்கள் போட்ரேட் செய்த விதம் ..

கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் ஒரு பெண் அவர் என்று அவரைப் பற்றி அவரே கூறிக்கொள்கிறார்.

நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான்..எத்தனை பெண்கள் இப்படி இருக்கிறார்கள்...இதில் சங்கீதா ஒரு நடிகையாக காட்டவில்லை. அவர் நடிகையின் தோழியாக தான் காட்டப்பட்டு இருக்கிறார்..

விவாகரத்து என்பது மனதளவில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்...அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..அதிக பாதிப்புக்கு உள்ளாபவர்கள் அவர்கள் தாம்..அப்படிப்பட்ட அவர்களை இப்படி ஜீவனாம்சம் வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் பெண் என்று சித்தரித்து இருப்பது... கடுப்பின் உச்சம்..

உடனே சிலர் இருப்பதை,ஊர் உலகத்தில நடக்கிறதை தானே சினிமாவில் காட்டுகிறோம் என்று சப்பை கட்டு கட்டலாம்..எனக்கு தெரிந்து எந்த ஊரில் இப்படி நடக்கிறது என்று சொல்லுங்கப்பா...

இங்கே அமெரிகாவில் கூட எனக்கு தெரிந்த பல அமெரிக்க தோழிகள் விவாகரத்துக்கு பிறகு படும் கஷ்டத்தை கண்ணாற கண்டு இருக்கிறேன். இங்கே நிறைய சர்ச்சுகளில் விவாகரத்துக்கு பிறகு ஏற்படும் மனமுறிவுக்காகவே பல கவுன்சிலிங்குகள் நடத்தப்படுவது உண்டு...சாதாரணமானவர்களின் உண்மை நிலை இதுதான்..

உண்மை நிலை இப்படி இருக்க யாரை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு கமல் இந்த காரெக்டரை உருவாக்கினார் என்று தெரியவில்லை...

ஒரு வேலை அமெரிக்காவில் பணத்திற்காக பணக்கார கிழவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஒரு சில பெண்களை உதாரணமாக அவர் எடுத்து இருக்கலாம்..ஆனால் இந்த பெண்கள் எல்லாம் 15 மினிட் fame க்காக எதுவும் செய்பவர்கள்..அவர்களை அந்த படத்தில் சங்கீதா சித்தரிக்கபட்டு இருப்பது போல ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக காட்டி இருக்க வேண்டாம்..

ஒன்றே ஒன்று இறுதியாக..Kamal disappointed us..and he made me hate him.

Friday, January 7, 2011

பதிவுலகில் ஒரு வருடம் !


அப்பாடியோ!! ஒரு வருடம் எப்படி பறந்தது என்றே தெரியவில்லை. இன்றோடு நான் வலையுலகம் வந்து ஒரு வருடம் ஆகிறது. எப்படியாவது நூறு பதிவாவது எழுதி முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் வலையுலகம் வரமுடியாத அளவுக்கு வேலை, நேரமின்மை..etc.

என்னுடைய, ஒரு வருட பதிவுலக அனுபவத்தை திரும்பி பார்க்கும் பதிவு இது.

கொசுவர்த்தி
-----------------
பதிவு ஆரம்பித்த பொழுதில் எல்லாம் பதிவுலகே கதியாக இருந்தது,அதற்காக ரங்கமணியிடம் திட்டு வாங்கியது, சிறிதுசிறிதாக இந்த அடிக்க்ஷனில் இருந்து வெளியில் வந்தது, பதிவெழுதவே நிறைய படிக்க ஆரம்பித்தது. நிறைய புத்தகங்கள், செய்திகள், பிற தளங்கள் என பலவும் வாசித்தது என நிறைய சொல்லலாம்... முன்னிருந்த ஆர்வம் இப்போது இல்லையென்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வரவே மனம் விரும்புகிறது.

தட்டி கொடுத்தது
-------------------
ஒரு வருடம் நிறைய எனக்கு கற்று கொடுத்து இருக்கிறது என்றாலும், என்னாலும் எழுத முடியும் என்று என்னையே தட்டிக்கொடுத்தது, யூத்புல் விகடன், தேவதை மற்றும் பாண்டிச்சேரி வலைப்பூவின் அறிமுகத்துவம், இவற்றில் என்னுடைய பதிவை பற்றி வெளிவந்தது. அதனையும் தாண்டி என் வலைபூவிற்கு வந்து படித்து பின்னூட்டம் இட்டு என்னை தட்டிக்கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.

மலைக்க வைத்தது
-----------------------
ஒரு நாளைக்கு அரை மணிநேரம் பதிவுலகிற்கு வருவதே இப்போது எனக்கு கடினமாகிவிட்ட நிலையில் எப்போதும் ஆன்லைனில் இருந்து எல்லாருடைய பதிவை படித்து தினம் ஒரு பதிவு இடும், பின்னூட்டம் இடும் பதிவர்களை பார்க்கும் போது மலைப்பும் பெருமூச்சும் வருகிறது.


நட்புகள்
------------

ஒரு சில மறக்க வேண்டிய நிகழ்வுகளை தவிர்த்து பார்த்தால்,வேலையில் இருந்து நான் எடுத்த பிரேக்குக்கு, இந்த பதிவுலகம் நல்ல வடிகாலாக இருந்து இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.சில நல்ல நண்பர்களையும் இந்த பதிவுலகம் எனக்கு தந்திருக்கிறது. பெயர், ஊர் என்று என்னைப்பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தாலும் நிறைய பேர் இங்கு வந்து வாசித்து பின்னூட்டம் இட்டு ஒரு முகமறியா நட்பை என்னுடன் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் மற்றுமொறு நன்றி.

தற்போதய நிலவரப்படி இன்னும் சில நாட்களில் மறுபடியும் வேலைக்கு செல்ல போகிறேன். அதனால் வலைப்பூ வருவது இன்னும் குறையும் என்று நினைக்கிறேன். ஆனாலும் தொடர்ந்து வந்து உங்களை தொல்லை படுத்தாமல் விடப் போவதில்லை என்று உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.