ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காய்ச்சல் : பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குன்யா என வித விதமான காய்ச்சல்கள். ஆனால் இந்த காய்ச்சல் வகைகள் எல்லாம் ஒரே ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! உண்மை தான்.
இன்ப்லுயன்சா வைரஸ் என்பதே அந்த வைரஸ் கிருமி. பொதுவாக வைரஸ் கிருமிகள், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை விட வித்தியாசமானவை. மனித செல்களை அடையும் வரை அவை செயல் படுவதில்லை, மனித செல்களை அடைந்தவுடன் வேகமாக தன்னை மனித செல்களுடன் இணைத்து கொண்டு தன்னை தானே படிவமெடுத்து வெளியிட்டு பெருகுகின்றன.
சரி, இன்ஃப்லுயன்ஸா என்பது ஒரு வைரஸ் கிருமி தானே, பிறகு எப்படி பல உயிரினங்களில் வித விதமான காய்ச்சல்கள் ஏற்படுத்துகிறது?
இந்த வைரஸ் கிருமி ஒரு உயிரினத்தில் வசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்து கொள்ளுவோம், அது அந்த உயிரினத்தில் தன்னை நகல் எடுக்க ஆரம்பிக்கும் போது, தனக்குள்ளே சில மாற்றங்களை செய்து கொள்ளுகிறது, அதனை ஆங்கிலத்தில் மியுட்டேஷன் என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அந்தந்த உயிரினத்திற்கு தகுந்தாற் போல அது தன்னை மாற்றிகொண்டே இருப்பதால், ஒரு நோய்-> ஒரு மருந்து என்ற முறைப்படி நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.
2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலை இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை ஏற்படுத்திய இன்ஃப்லுஎன்ஸா வைரஸ் H1N1 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு 1918 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு H1N1 ஸ்பெயினில் ஏற்பட்டு இருந்தாலும், அப்போது இருந்த வைரஸை விட இப்போது 2009 ல் நோய் உண்டாக்கிய வைரஸ் நிறைய மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அதனை தவிர 2009 ல் ஏற்பட்ட பன்றிக்காய்சல் பன்றியில் இருந்து வந்திருந்தாலும், ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு தாவும் சக்தி பெற்றிருந்தது.
சரி, இது எப்படி ஒரு மனிதனில் இருந்து இன்னொருவருக்கு தாவுகிறது?
காய்ச்சல் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் தும்மல், இருமல், சளி துப்புதல் இவற்றால் இந்த காய்ச்சல் அதிகம் பரவும் என்பதால், முடிந்த வரை நோயுற்ற ஒருவரிடம் இருந்து விலகி இருப்பது நமக்கு அந்த காய்ச்சல் வராமல் தடுக்கும். அடிக்கடி கை கழுவுவதன் மூலமும் இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.
மேலும் நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நம் மூக்கை உலராமல் வைத்திருந்து மூக்கில் இருக்கும் மியூக்கஸ் மூலமாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் முடிந்த அளவு வீட்டில் ஈரப்பதம் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ளலாம்.
ஃப்லூ தடுப்பூசி
ஒவ்வொரு வருடமும் இந்த வகை இன்ஃப்லுயன்ஸா வைரஸ் பரவலாம் என்று ஊகித்து அதற்கு மருந்து தயாரிக்கின்றனர். அதனை இங்கு அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஃப்லு ஷாட்ஸ் என்று தடுப்பூசியாக போடுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்று அறிவதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஆனாலும் ஒரு முறை இந்த தடுப்பூசி போட்டுவிட்டால் ஒவ்வொருவருடமும் போட வேண்டும் இல்லாவிட்டால் ஃப்லூ கட்டாயம் வந்துவிடும் என்று இங்குள்ள அனைவரும் நம்புகிறார்கள்..ஆனால் உன்மை என்னவென்றால் ஃப்லூ தடுப்பு ஊசி போட்டு கொண்டாலும் பலருக்கு காய்ச்சல் வரலாம். ஏன் என்றால் தடுப்பூசி மருந்து இந்த வகை வைரஸ் பரவலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இந்த இன்ஃப்லூயன்ஸா வைரஸ் இந்த வருடம் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது?, அதற்குறிய மருந்து என்ன? என்பது நோய் வந்த பிறகே கணிக்க முடியும் என்பது வருந்ததக்க உண்மை.