தெரியாதனமா நேற்று இங்கிருக்கும் சரவணாபவனுக்கு சாப்பிட சென்றுவிட்டோம். அங்கு இசை அருவி சானல் போட்டு அதில் பாடல்கள் போட்டு கொண்டிருந்தார்கள். அதில் அழகு குறிப்பு சொல்ல போன் செய்ய சொல்லி ஒரு DJ பேசி கொன்று கொண்டிருந்தார். அதை கூட தாங்கி கொள்ளலாம் போல இருந்தது. ஆனால் அதற்கு பிறகு போட்ட ஒவ்வொரு பாடல்களும் ஆகா என்ன அருமையான அர்த்தங்கள் கொண்டவை.
“எப்படியும் ஒருத்தனுக்கு கழுத்த நீட்ட போறேன்” ,
“ஒரு நாள் மட்டும் கேர்ள் ஃப்ரெண்ட் ஆக வரயா” ,
"பம்பர கண்ணாலே”
“அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும்”
இந்த பாடல்களின் அர்த்தம் தெரிந்த நமக்கு நெளிவை ஏற்படுத்த, அதில் வந்த காட்சிகள் எல்லாம் ”உவ்வே” ரகம். அந்த நேரம் பார்த்து சாப்பிட என்று ஒரு அமெரிக்க குடும்பம் 5 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை கூட்டி கொண்டு வந்தனர்.
அவர்கள் வந்து உட்கார்ந்த சில நிமிடங்களில் அவர்களின் இரண்டு குழந்தைகளும் திரையில் வந்த பாடல்களை கண்கொட்டாமல் பார்க்க ஆரம்பிக்க அந்த பெற்றோர்கள் அவர்களை பார்க்க விடாமல் செய்ய செய்த பிரயத்தனம் எங்களுக்கு சிரிப்பை வரவழித்தது.
இங்கு அமெரிக்காவில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் நிகழ்ச்சிகள், புத்தகங்கள், திரைப்படங்கள் மட்டுமே காட்டுவார்கள். வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களோ, 18 வயதிற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்கும் படி இருக்கும் காட்சிகள் நிறந்த படங்களையோ பார்க்க பல பெற்றோர் அனுமதிப்பதில்லை.
அதிலும் குழந்தைகள் 5 வயதுக்குட்பட்டவராய் இருப்பின் அவர்களுக்கு டிவி பார்ப்பது கூட பல நேரங்களில் தடை உண்டு.
எவ்வளவோ முயற்சி செய்து குழந்தைகளை ’அந்த மாதிரி’ பாடல்களை பார்க்க முடியாமல் செய்ய முடியாமல் ஆக, முடிவாக அந்த கடை நடத்துபவரிடம் சென்று டிவியை அணைக்கும் படி சொன்னார்கள் அந்த அமெரிக்க பெற்றோர்.
இப்படி மிட் நைட் மசாலா பாடல்கள் பட்ட பகல் நேரங்களில் டிவியில் ஒளிபரப்புதல் தேவையா?
டிவிக்கும் கண்டிப்பாக தணிக்கை தேவை என்பது கண்கூடு..கவனிக்குமா இந்திய அரசு.