Thursday, January 22, 2015

சங்கரின் "ஐ" வைரசும் ஒரு ஃப்ளு ஆராய்ச்சியாளரின் புலம்பலும்

ஃப்ளு போன்ற ஒரு சுவாசப்பகுதியை தாக்கும்  வைரசை ஒரு பெரிய உயிர் கொல்லியாக்கி அதற்கான தடுப்பூசி அவசியம் என்றதொரு மாயபிம்பம் அமெரிக்காவில் உருவாகாப்பட்டு இது வரை சிறப்பாக செயல்படுத்தபட்டும் இருக்கிறது.  

இன்னொரு பக்கம் இதுபோன்றதொரு தடுப்பூசிகள் குழந்தைகளிடம் ஆட்டிசம் போன்ற குறைபாடுகளைஅதிகரிக்கின்றன என்ற சில எதிர்ப்புகளும் கிளம்பியவண்ணம் இருக்கின்றன. ஃப்ளு தடுப்பூசியில் பதபடுத்த உபயோகபடுத்தபட்ட    Thimerosal போன்றவை ஆட்டிசம் போன்றவற்றை தூண்டுகின்றன என்று சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் 2000ஆம் ஆண்டில் இருந்து Thimerosal உபயோகிப்பதில்லை.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இந்த ஃப்ளு வைரசை வைத்து சினிமா உலகம் அதுவும் தமிழ் சினிமா உலகம் சரியான காமெடி செய்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் வந்த "ஐ" படம் அதற்க்கு சாட்சி. அதில் ஹீரோவுக்கு மனிதனால் ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்கப்படும்  H4N2 என்ற I வைரசை செலுத்துகிறார்கள், உடனே, அவர் உடலில் கட்டிகளும் அவலட்சணமும் தோன்றி, கூனனாகி விடுகிறாராம். என்ன கதையையா இதெல்லாம்.

மூன்று வருடமாக ஃப்ளு வைரஸில் ஆராய்ச்சி செய்திருக்கிறேன், இதுவரை இப்படி பட்ட ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதில்லை.

முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், H4N2, ஒரு avian virus , அதாவது பறவைகளை தாக்கும் ஃப்ளு. அது இயற்கையாக இருக்கும் வைரஸ். மனிதனால் லேபில் உருவாகாபடுவதில்லை. கிட்டதட்ட 100 வருடங்களாக 1918 இல் இருந்து ஃப்ளு வைரஸ் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் H4N2 மனிதனை தாக்கியதில்லை. 


இது லேபில் மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்றே வைத்துகொள்வோம் அதனால் மனிதனை தாக்கும் படி மாறிவிட்டது என்று வைத்து கொண்டாலும் அப்படியே செய்யப்பட்டு இருப்பினும், அதன் mode of infection , அதாவது,எப்படி எந்த வழியில் மனிதனை தாக்கும் என்பது நன்கு அறியப்பட்டு இருக்கிறது. அதாவது, upper respiratory அல்லது மூச்சு குழாய் பகுதியை தாக்கலாம். அல்லது, avian பறவை  ஃப்ளு போல மனிதனின் GI tract (gastrointestinal tract)  அதாவது குடல் மற்றும் செரிமான பகுதியை மட்டுமே தாக்கும் என்று இதுவரை கண்டறிய பட்டு இருக்கிறது. இந்த படத்தில் காட்டுவது போல, pituitary gland அல்லது pituitary சுரப்பியை மற்றம் செய்து, உடல் முழுதும் அவலட்சணம் ஆகும் என்றோ அல்லது, கூன் விழும் என்றோ எனக்கு தெரிந்த எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை.

என் இப்படி உண்மைக்கு புறம்பான விசயங்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவும் சங்கர் போன்றவர்களிடம் இருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை.


References 

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2504709/
http://www.cdc.gov/vaccinesafety/concerns/autism/





Friday, January 16, 2015

படித்தது, கேட்டது, அனுபவித்தது

படித்தது 

சில மாதங்களுக்கு முன்பு, "ஆண்டிபயாடிக் சோப்புகளை உபயோகிப்பது நல்லதா இல்லையா " என்ற பதிவு எழுதி இருந்தேன். அதில் தற்போது மருத்துவமனைகளில் பரவும் MRSA ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களை பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்.

இன்று வாசித்த செய்தி. சாதாரண ஆண்டிபயாடிக்குகள் போல ஆண்டிபயாடிக் எதிர்பை அல்லது பாக்டீரியாகளில் பரிணாம மாற்றத்தை தூண்டாத ஒரு புது ஆண்டிபயாடிக்கை தற்போது மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பிரித்து எடுத்து கண்டுபிடித்து இருக்கின்றனர்.  அதன் பெயர் teixobactin. இதனை காச நோயை உருவாக்கும் Mycobacterium tuberculosis பாக்டீரியாக்களின் மீது செலுத்திய போது, இது காச நோய் பாக்டீரியாக்களை கொன்றது மட்டுமல்லாமல் எந்த வித ஆண்டிபயாடிக் எதிர்ப்பு காச நோய் பாக்டீரியாக்களையும் உருவாக்கவில்லை. அதனால் இந்த மருந்தை எந்த பயமும் இன்றி கொடுக்கலாம். ஆனால் என்ன, இதனை மருந்தாக உருவாக்கி, பரிசோதனைகள் செய்து மார்கெட்டில் புழக்கத்தில் வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகும் என்றாலும் இது மருத்துவ உலகில் வரவேற்க தக்கது.

கேட்டது 

ஒரு சிலரின் குரலை முதன் முதலில்  கேட்கும் போது மனம் மயங்கும், அப்படி நான் கேட்டவுடன் பிடித்த குரல் Israel "IZ" Kamakawiwoʻole எனப்படும் ஹவாயை சேர்ந்த பாடகர். அவரின் "Somewhere over the rainbow" எனப்படும் இந்த பாடல் சோர்ந்த மனதிற்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கும். "IZ" அவர்களின் சொந்த வாழ்க்கை சோகமானது, உடல் பருமனால் அவரின் மொத்த குடும்பமும் அவதிப்பட்டு இறந்தாலும் தனது வசீகர குரலால் பலருக்கு தன்னம்பிக்கை அளித்தவர் அவர்.

இதோ அவரின் "Somewhere over the rainbow" பாடல் 




அனுபவித்தது 

சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது பட்ட அவஸ்த்தை. சொந்த ஊரான மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லலாம் என்று குடும்பத்துடன் முடிவு செய்து அனைவரும் கிளம்பியாயிற்று. போகும் வழியில் எல்லாம் பெண்களுக்கான கழிப்பறை தேடி தேடி நொந்து போனது அவஸ்தை. அப்படியே ஒரு சில இடங்களில் கழிப்பறைகள் இருப்பினும் அவற்றில் எல்லாம் உபயோகித்த நாப்கின் குப்பைகளில் இருந்து அனைத்தையும் போட்டு சில இடங்களில் கால் கூட வைக்க முடியவில்லை.  பல கட்டண கழிப்பறைகளில் கூட இந்த நிலை, தண்ணீர் கூட  வருவதில்லை. கட்டணமில்லா கழிப்பறைகளை பற்றி சொல்லவே வேண்டாம். ஒழுங்கான கழிப்பறைகளை நான் கண்டது மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் இருந்த  A2B உணவகங்களுக்கு அருகில் இருந்தவை மட்டுமே.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் கழிப்பறைகளை உபயோகித்தாலும் UTI (Urinary track infection) வருவது தவிர்க்க முடியாது.  நல்ல கழிப்பறைகள் தேவை, எல்லா இடங்களில் இல்லாவிட்டாலும் , சுற்றுலா தளங்களிலாவது வேண்டும். கவனிக்குமா அரசு.

நன்றி