Friday, March 18, 2016

குழந்தை மணமகள்களும் , அழகான சமன்பாடுகளும்!

முதல் விஷயம். சில வாரங்களுக்கு முன்பு "மியூசியம் ஆப் நேசுரல் ஹிஸ்டரி" சென்றிருந்தேன், அங்கு "நேஷனல் ஜியோக்ராபி"யின் சார்பில் புகைப்பட கண்காட்சி ஒன்று வைத்து இருந்தார்கள். பல பல அருமையான இயற்க்கை புகைப்படங்கள் கண்களை கவர பார்த்து கொண்டு வந்த நான்,  ஸ்டெப்னி சிங்குலர் என்பவரின் "டூ யங் டு வெட்" எனப்படும் குழந்தை மணமகள்கள் புகைப்படங்கள் கண்டபோது திகைக்க நேர்ந்தது. புகைப்படத்தில் காணப்பட்ட 8-10 வயது சிறுமிகள்  திருமணமாகி அவர்களின் கணவர்களுடன் சோகமாக கொடுத்த போஸ் பார்க்கவே மனதை வருத்தியது.


அரபு நாடான ஏமனில் எடுக்க பட்ட புகைப்படங்கள் அவை. எண்ணெய் வளங்கள் ஏதும் இன்றி மிக மிக  ஏழை நாடான ஏமனில் பிறக்கும் அல்லது வளர்க்கப்படும் பல பெண் குழந்தைகள் அவர்களின் 15 வயதுக்குள் அவர்களுக்கு கொடுக்கப்படும் டவுரிக்காக அவர்களின் வயதை விட 2-3 மடங்கு வயது நிறைந்த ஆண்களுடன் திருமணம் முடித்து  கொடுக்க படுகிறார்கள். புகைப்படங்களில் காணப்பட்ட குழந்தைகள் 9-10 வயது குழந்தைகள் அவர்களின் கணவர்களின் குறைந்தபட்ச வயது 30-40.

புகை பட கண்காட்சியில் நான் பார்த்த அனைத்து படங்களும் சொல்லுவது என்னவென்றால், குழந்தை திருமணங்கள் சாதி, மதம், இனம், நாடு கடந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது என்று தெரிவிக்கிறது. வளரும் நாடுகளும் இதில் அடங்கும், நேபால், இந்தியா, நைஜீரியா போன்ற பல பல நாடுகளில் திருமணம் ஆக போகும் அல்லது திருமணம் ஆன சிறுமிகளின் பல புகைப்படங்கள் அவர்களின் கருத்துக்கள் எல்லாம் கண்ணீர் வரவழிக்கும்.  திருமணம் முடிந்த கையோடு கணவரால் பாலியல் தொல்லைக்கும் , 12 -13 வயதில் ஒரு குழந்தைக்கு  தாயாகவும் ஆகும் பல குழந்தைகள் பல பாலியில் தொற்றுக்கும் பல ஆப்ரிக்கா நாடுகளில் HIV க்கும் ஆளாவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கும் கொடுமை.


இதனை சார்ந்த ஒரு புத்தகமும் வாசிக்க நேர்ந்தது "I am Nujood, Age 10 and divorced" என்ற 10 வயது நுஜூத் என்ற பெண்ணின் சுயசரிதை. ஏமன் நாட்டை சேர்ந்த 10 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு கணவரால்? 10 வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு, வீட்டை விட்டு ஓடி வந்து கோர்டில் தஞ்சம் புகுந்து முடிவில் விவாகரத்து கொடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் கதை அது.  படிக்க படிக்க கண்ணீர் வர வழிக்கும் ஒன்று. எந்த நாடாக இருந்தாலும் எந்த ஊராக இருந்தாலும் பெண்கள், பெண் குழந்தைகள்  அனுபவிக்கும் கஷ்டங்கள் மட்டும் மாறாமல் இருக்கிறது.


அடுத்து நான் ரசித்த  விஷயம் கணக்கு குறித்தது. பள்ளி கல்லூரி நாட்களில் கணிதம் மிக விருப்ப பாடம். பயன் என்ன வென்று அறியாமலேயே நிறைய மனனம் செய்து கணித சமன்பாடுகளை கற்றுகொண்டு இருக்கிறேன். உதாரணமாக pi எனப்படும் pi =3.14 என்னும் நம்பர், சிறு வயதில் வட்டத்தின் ஆரம் மற்றும் பரப்பளவு  கண்டு பிடிக்க உதவும் ஒன்று. அதே போல arithmetic progression எனப்படும் 2,4,6,8,10.. போன்ற 2 வித்தியாசம் உள்ள நம்பர் சீரிஸ் போன்ற எளிதான சீரிஸ் .. இவை எல்லாம் மனனம் செய்து கடம்  அடித்து படித்து இருக்கிறேன் அதன் உபயோகம் தெரியாமல். சொல்ல போனால் நம்மில் பலர் நாம் சிறு வயதில் படித்த படிப்புக்கும் இப்பொழுது பார்க்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஏனெனில் நமக்கு எந்த இடத்தில் சமன்பாடுகள் உபயோக்கிக்க படும் என்று ப்ராக்டிகல் ஆக எங்கும் சொல்லி கொடுப்பதில்லை. உதாரணமாக என்னுடைய முதுநிலையில் fourier சீரிஸ் என்னும் ஒரு சமன்பாடுகள் வரும். அது எங்கு உபயோகிக்க வேண்டும் என்று யாரும் சொல்லி கொடுக்கவில்லை இன்னும் கூட சொல்லி கொடுக்கபடுவதில்லை. ஆனால், என்னுடைய முனைவர் படிப்பின் போது புரதங்களின் வடிவமைப்பை பற்றி படிக்கும் போது அல்லது ஆராய்ச்சி செய்யும் போது எப்படி fourier சீரீஸ் உபயோகிக்க படுகிறது என்று ஆச்சரிய பட்டது உண்டு.

அதே போல புள்ளியியல் படிக்கும் பலரும் Bayes தியரம் என்ற ஒன்று படித்து இருப்பார்கள். என்ன சொத்தை தியரம் இது என்று நானே கடம் அடித்து படித்து இருக்கிறேன். ஆனால், இதன் ப்ராக்டிகல் உபயோகம் அளவற்றது. நிறைய ரீசனிங் அல்லது டிடெக்டிவ் வேலை பார்க்கும் பலர் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உபயோகிப்பது இது. சொல்ல போனால் அகதா க்ரிஷ்டி அவர்களின் மையின் கதாநாயகனான "Hercule Poirot" வின் திறமையின் அடிநாதமே இந்த Bayes தியரம் தான்.

கணித சமன்பாடுகளின் உபயோகங்களை அறிந்து கொண்டால் அதனை படிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பது உங்களுக்கு பிடித்த செயலை செய்வது  போல சுவாரசியமானது. கணித சமன்பாடுகளின் மீது காதல் கொண்டிருந்த நான் BBC தளத்தில் "அழகிய சமன்பாடுகள்" என்ற போட்டி காண நேர்ந்தது. அதில் 12 கணித சமன்பாடுகளை கொடுத்து வாசகர்களை தேர்தெடுக்க சொல்லி இருந்தார்கள். பார்க்க படிக்க ஆச்சரியமாக  இருந்தது. அதில் என்னுடைய பாவரிட் ஆன Bayes தியரமும் இருந்தது கண்டு இன்னும் சந்தோசம்.




 உங்களுக்கும் கணித சமன்பாடுகள் பிடிக்கும் என்றால் http://www.bbc.com/earth/story/20160120-you-decide-what-is-the-most-beautiful-equation-ever-written என்ற தளம் சென்று உங்களுக்கு பிடித்த சமன்பாட்டுக்கு வாக்களியுங்கள்.


நன்றி.

No comments: