சில விஷயங்களில் நாம் செய்வது சரியா, தப்பா, நாம் சரியான வழியில் செய்கிறோமா, இல்லையா என்று ஒரே குழப்பம் வரும். அது போன்ற ஒரு குழப்பம் எனக்கு அடிக்கடி ஒரு விசயத்தில் வருகிறது.
எந்த மாதிரி ஒரு சூழலில் நாம் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதே அது. நிறைய இந்தியர்கள் இருக்கும் ஒரு பகுதியில் குழந்தைகள் வளர்ப்பது சரியா?, இல்லை இந்தியர்களே இல்லாத ஒரு பகுதியில் வளர்ப்பது சரியா? இது எனக்குள் தற்போது இருக்கும் ஒரு குழப்பம்.
இந்தியர்கள் நிறைய ஒரே இடத்தில் வீடு வாங்கி குடியேறுவது என்பது இங்கே சகஜம். அது தமிழர்கள் மட்டும் என்று இல்லை, கிட்ட தட்ட இந்தியாவின் எல்லா இந்திய மாநில, மொழி பேசும் மக்களும் ஒரே இடத்தில் வீடு வாங்கி குடியேறுவார்கள். ஒரு நெய்பர்ஹூடில் 200 வீடுகள் இருக்கின்றன என்றால் , அதில் 190 வீடுகள், சில நேரம் 200 வீடுகளும் இந்தியர் வீடுகளாகவே இருக்கும். ஒரு மினி இந்தியா அது. இப்படி நிறைய நெய்பர்ஹூட் எல்லாமே இந்தியர்கள் மட்டுமே இருப்பதால் இருக்கும் சாதக பாதகங்கள்.
சாதகங்கள்
- நாம் சிறு வயதில் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு குழந்தைகளுடன் அன்றாடம் விளையாண்டதை போல, இங்கிருக்கும் குழந்தைகளும், தினமும் விளையாடுகிறார்கள். வீட்டில் வந்து கதவை தட்டி, உங்க பையனை வெளியே அனுப்புங்கள் என்று சொல்லி இழுத்து சென்று விடுகிறார்கள். நம் குழந்தைகளுக்கென்று ஒரு பிரென்ட் சர்க்ள் உருவாகி விடுகிறது. இது நல்ல விஷயம்.
- நாம் இந்தியாவில் இருந்து அப்பா, அம்மாவை அழைத்து வரும் போது, அவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே புலம்பல், "வீட்டுக்குள்ளேயே பூட்டிட்டு இருக்கிறது சிறையில் இருப்பது போல, எத்தனை நேரம் தான் டிவி பாக்குறது. அக்கம் பக்கம் மக்களே இல்லை, என்னன்னு பேசுறதுக்கு கூட." என்று புலம்பாத அப்பா, அம்மாக்கள் மிக குறைவு. இது போன்ற நிறைய இந்தியர்கள் இருக்கும் பகுதியில் இருப்பின், அம்மா அப்பாக்களுக்கு நல்ல கம்பெனி கிடைக்கும். ஒன்றாக சேர்ந்து வாக்கிங், சமையல், போன் என்று தனக்கென்று ஒரு சர்க்ள் அமைந்து விடுகிறது.
- தீபாவளி, பொங்கல் என்று எதுவென்றாலும் அந்த நெய்பர்ஹூஏ வெடி வெடித்து, சீரியல் செட் போட்டு என்று, நம்ம ஊர் பீல் வந்து விடுகிறது.
- நம்ம ஊர் போல, குழந்தைகளில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு படிக்க வேண்டும் என்று பெற்றோர் படுத்தி படுத்தி அவர்களும் அகாடெமிக்ஸ் மற்றும் பாட்டி, டான்ஸ், மியூசிக் என்று எல்லாவற்றிலும் நன்றாகவே செய்கிறார்கள்.
பாதகங்கள்
- நிறைய இந்தியர்கள் வாழ்வதால், இந்தியாவில் வாழும் சூழல் போன்ற ஒன்றை நாம் உருவாக்கலாம், ஆனால், அமெரிக்கர்களுடன் எப்படி வாழ்வது, எப்படி ஊருடன் ஒட்டி வாழ்வது என்பது போன்றவற்றை நாம் அறிவது எப்போது?
- எப்போதும் இந்திய குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் இந்திய குழந்தைகள், மற்ற நாட்டினர் பற்றியோ அல்லது, அவர்களின் பழக்க வழக்கங்கள், அல்லது எப்படி அவர்களுடன் பழகுவது, எது லிமிட், என்று எப்பொழுது தெரிந்து கொள்ளுவார்கள் என்று தெரியவில்லை. அல்லது எப்படி இனவேறுபாடு போன்ற கமெண்ட்களை எதிர் கொள்ள பழகி கொள்ளுவார்கள் என்று தெரியவில்லை.
- எனக்கு தெரிந்த சில பள்ளிகளில் 100 க்கு 100 மாணவர்களும் இந்திய குழந்தைகள், எனும் பட்சத்தில் காம்பெடிஷன் நாறுகிறது. குழந்தைகளை படி படி என்று படிப்பை மட்டும் கற்று, ஸ்பில்லிங் பீ, சயின்ஸ் பீ, மேத் பீ, என்று எல்லா காம்பெடிஷன்களிலும் பெற்றோர் புஷ் செய்கிறார்கள்.
- நான் வலெண்டீர் செய்யும் தமிழ் பள்ளியில், படிக்க வரும் பல விவரம் தெரிந்த குழந்தைகள் , எனக்கு இங்கே வர இஷ்டம் இல்ல, எங்க அம்மா, அப்பா புஷ் பண்ணுறாங்க அதனாலே தான் வர்றோம், என்று ஓபன் ஆகவே சொல்லுகிறார்கள். இதனால் குழந்தைகள், சீக்கிரமே burn out ஆகி விடுகிறார்கள். ஒருமுறை இப்படி ஆகி விட்டால், பின்னர் அவர்களை இன்டெரெஸ்ட் கொள்ள வைப்பது கடினம்.
- எல்லாரும் இந்தியர்கள் இருக்கும் ஒரு இடத்தில், வழக்கம் போல நீ பெரியவனா, நான் பெரியவனா? என்ற பாலிடிக்ஸ் நாறுகிறது.
எனக்கு தெரிந்து 70-80 களின் போது இங்கு வந்து செட்டில் ஆன, பலர், தற்போது இருக்கும் மக்களை போல ஒரே இடத்தில் இருந்து குழந்தைகளை படிக்க வைக்க வில்லை. எப்போதும் இந்தியர்களுடன் மட்டுமே அவர்கள் பழக வேண்டும் என்ற ஒரு சூழலையும் உருவாக்கி தரவில்லை. அதனாலேயே, 70-80 களில் இங்கு வந்த நிறைய ABCD கள், அமெரிக்கா சூழலில் எப்படி தன்னை மாற்றி கொள்ளுவது, எப்படி பழகுவது என்று நிறைய கற்று கொண்டார்கள் என்று அறிய முடிகிறது. 90 களின் இறுதியில் -2000 க்கு அப்புறம் வந்த பல இந்தியர்கள், எல்லாரும் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற ஒரு சூழலை உருவாக்கி தருகிறார்களா என்பது சந்தேகமே.
நன்றி.