Sunday, August 7, 2016

மதத்தை மதிப்பவர்களும், மிதிப்பவர்களும்!!

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது. அது இந்திய கோயில்களை பற்றியது. அடிக்கடி இதனை போன்ற செய்திகளை தோழிகள் க்ரூப் பார்வேர்ட் செய்தாலும் பார்க்காமல் இருந்த நான் என்ன கிரகமோ, அன்று படிக்க தொடங்கினேன். அதில் கூறப்பட்ட ஒவ்வொரு செய்தியும் சிரிப்பை வர வழித்தது. வாயை வைச்சிட்டு சும்மா இருக்காம, வாயை கொடுத்து நான் வாங்கி கட்டி கொண்ட கதை தான் இங்கு.

அந்த பார்வேர்டில்  கூறப்பட்ட ஒரு விஷயம், காசி நகரை சுற்றி 20 கிலோமீட்டர் வரை காகம், கருடன் பறப்பதில்லை, அங்கு பல்லி இருப்பதில்லை. என்பது போன்ற செய்தி. என்ன கிரகமோ, அதனை படிப்பதற்கு சில காலம் முன்பு தான் என்னுடைய பிரெஞ்சு நண்பர் ஒருவர் தன்னுடைய "காசி" அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதுவும், 24 மணி நேரமும் எரியும் சிதை, பாதி வெந்தும் வேகாமலும் கங்கையில் தூக்கி வீசப்படும் சடலங்கள் குறித்தும், அதனை உண்ணும் பறவைகள்  , கோட்டான்கள் குறித்தும் தான் பார்த்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அங்கு எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் காட்டி விவரித்து கொண்டு இருந்தார். நான் காசிக்கு சென்றதில்லை என்றாலும், அவர் காட்டிய புகைப்படங்கள் புல்லரிப்பை ஏற்படுத்தின.

மேலை நாடுகளில் எல்லாம் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த உடலை உடனே அப்புறப்படுத்தி விடுவார்கள். அந்த உடல் அழகுபடுத்த எடுத்து செல்லப்பட்டு விடும். அதற்கு என்றே பியூனெரல் ஹோம்ஸ் எனப்படும் இறுதி சடங்கு இல்லங்களுக்கு சென்று, பின்னர் இறுதி சடங்கு அன்று எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்படும். இப்படி பார்த்து பழக்கப்பட்ட அந்த பிரெஞ்சு மனிதருக்கு 24 மணிநேரமும் எரியும் சிதையும் அதனை சுற்றி நடக்கும் விஷயங்களும், உடல்களை உண்ணும் பறவைகளும் கோட்டான்களும்  ஆச்சரியப்படுத்தியதில் வியப்பு எதுவும் இல்லை என்று தோன்றியது. இதனை சார்ந்த நேஷனல் ஜியோகிராபியின் செய்தி ஒன்றும் காண நேர்ந்தது  முடிந்தால் படித்து பாருங்கள். இதுவே இன்றைய நிலை. இப்படி இருக்க, எங்கிருந்து பறவைகள் பறப்பதில்லை என்ற செய்தி வந்தது என்று தெரியவில்லை.


அடுத்த விஷயம், சாமிக்கு செய்யும் அபிஷேக தயிர் புளிப்பதில்லை என்பது. இதனை படித்த பிறகு எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தயிர் புளிப்பது என்பது லாக்டோபேசில்லஸ் எனப்படும் பாக்டீரியா செய்யும் வேலை. அது பாலில் இருக்கும் லாக்டோஸை சாப்பிட்டு லாக்டிக் ஆசிட் ஆக மாற்றும் அதனாலே புளிப்பு சுவை வரும். எவ்வளவு பாக்டீரியா இருக்கிறதோ அவ்வளவு லாக்டிக் ஆசிட் இருக்கும். அவ்வளவு புளிப்பு ஏற்படும். இதில் எப்படி சாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை என்று சொல்கிறார்கள் தெரியவில்லை. தயிரில் இருக்கும் பாக்டீரியா முழுதும் கொல்லப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். அப்படி ஆக வேண்டும் என்றால் சாமி விக்கிரகத்தில் ஆன்டி பாக்டீரியா தன்மை இருக்க வேண்டும். அதனை தான் சொல்லுகிறார்களா?. இந்திய சாமி விக்கிரகங்களை சுற்றி எல்லா பூச்சிகளும் ஓடி விளையாடி பாக்டீரியா வளர்வதற்கு மிக மிக சாதகமான சூழலை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் இன்றைய வேளையில் இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.

இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க யோசிக்க கூடாது போல..ஏன்னா..இதெல்லாம் நான் சும்மா இருக்காம பார்வேர்ட் செய்த தோழிக்கு சொல்ல  , அவளோ  "என்னமா வெளி நாடு போயிட்டு நம்ம ஊரு சாமிய, சூழலை கிண்டல் அடிக்கிற, நாத்திகனாயிட்டாயா?, ரொம்ப படிச்சிட்டு இப்படி நம்ம கலாச்சாரத்தை குறை சொல்லுறது இப்ப பேஷன் ஆகிப்போச்சு....மத  துரோகி"..அப்படிங்கிறாங்க.. என்னத்தை சொல்லுவது...

கடவுள் அல்லது நமக்கும் மேலே ஒரு போர்ஸ் இருக்கிறது என்பதை நம்புபவள் நான், ஆனால், இப்படி கதை கதையாக கட்டி விட்டு, அதனை சாமியின் அருள் என்று கலர் கலர் ஆக ரீல் விட்டு. அதனை நம்புபவர்கள் மட்டுமே இந்து மதத்தை மதிப்பவர்கள், மற்றவர்கள் எல்லாம் மிதிப்பவர்கள் என்று வாதிடும் மக்களை என்னவென்று சொல்லுவது.


டிஸ்கி 

இது, என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. அறிவியல் ரீதியாக எனக்கு தெரிந்ததை மட்டுமே இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன். எந்த மதத்தையும் குற்றம் சொல்ல வில்லை.

நன்றி.


5 comments:

ப.கந்தசாமி said...

சாமி (காசி விஸ்வநாதர்) உங்க கண்ணைக் குத்தப் போகிறது பாருங்கள்!

எதுக்கும் ஒரு நல்ல கண்ணாடியா வாங்கி 24x7 போட்டுக்குங்க.

நம்பள்கி said...

நீங்கள் ஒன்றும் தெய்வ குற்றம் செய்து விடவில்லை. மேலும், இல்லாத ஒன்றை எப்படி குறை சொல்ல முடியும்?

ஆதராம்: கீழே உள்ளதை எழுதியது மறைந்த காஞ்சி மடத்தின் தலைவர்; பெரியவர் என்றும் சொல்வார்கள். some excerpts; மேலும் இணையத்தில் படிக்கலாம்!

Quote unquote
"தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

வைதிக மதம்;
பெயரில்லாத மதம்
இப்போது 'ஹிந்து மதம்' என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. 'ஹிந்து' என்றால் 'அன்பு' என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், 'ஹிந்து மதம்' என்கிற வார்த்தையே கிடையாது.

ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள்.

ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் ஹிந்து என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல. வைதீக மதம், ஸநாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவைதான் பெயரா என்றால், அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

இதைப் பற்றி நினைத்தபோது எனக்கு ரொம்பவும் குறையாக இருந்தது."

Ref: http://www.kamakoti.org/tamil/part1kural28.htm

நம்பள்கி said...

வந்த புதிதில் குளிர் பகுதியில் இருந்தோம்; ஒரு சின்ன வேல் வீட்டில். அந்த வேலுக்கு சக்தி மிக மிக அதிகம்; இந்த சாமி முன்னால் இட்லி மாவு கூட புளிக்கவே புளிக்காது!

பின்குறிப்பு:
இங்கு எனக்கு தெரிந்து தமிழர்கள் அதிகாமாக செய்த ஆராய்ச்சி இட்லி மாவை எப்படி புளிக்க வைப்பது என்பது தான்!

சீனிவாசன் said...

பக்தி வந்தால் புத்தி போய்விடும்- தந்தை பெரியார்.

நம்பள்கி said...

புத்தி வந்தால் பக்தி போய்விடும் - 'இதுவும்' தந்தை பெரியார் தான்!.