Friday, August 12, 2016

சாமானியர்களும், பெரிய மனிதர்களும்!!

சிறு வயதில் என்னுடைய அனுபவம் இது. எங்கள் வீட்டிற்கு அருகே அந்த ஏரியா கவுன்சிலர் வீடு இருந்தது. அந்த கவுன்சிலருக்கு எங்கள் வயதுடைய குழந்தை இருந்தது. நாங்கள் எல்லாம் சிறு வயதில் வெளியில் சென்று விளையாடும் போது ஒரு நாள் அந்த குழந்தையும் விளையாட வர, அதன் பிறகு அவங்க வீட்டில இருந்து வந்த அந்த குழந்தையை எங்களுடன் விளையாட கூடாதென்று கண்டித்து அழைத்து சென்றார்கள். அப்பொழுதெல்லாம் என்னவென்று விளங்காமல் நாங்களும் அவங்க பெரிய ஆளுங்க  பா, அதனால நம்ம கூட எல்லாம் விளையாட விட மாட்டாங்க. என்று எங்களுக்குள் நாங்க சொல்லி இருக்கிறோம். பத்தாவது படிக்கும் போதெல்லாம் சைக்கிளே பெரிய விஷயமாக இருந்த எங்களுக்கு அந்த பிள்ளை காரில் பள்ளிக்கு செல்வது வழக்கம். பெரிய பள்ளியில் படித்து, மார்க்கே இல்லை என்றாலும் காசு கொடுத்து கல்லூரி சீட் என்று எல்லாவற்றிலும் ஒரு அட்வான்டேஜ் இருந்தது. எங்களிடம் இருந்து அதாவது சாதாரண மக்களிடம் இருந்து விலகியே இருந்ததை அறிய முடிந்தது. ஒரு சாதாரண கவுன்சிலரே தங்களை சாதாரண  மக்களிடம் இருந்து தங்களை வேறு படித்தி கொள்ளுவதை வழக்கமாக இருப்பதை எல்லோரும் கண்டு இருக்கிறோம்.

இது இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வா என்று நான் சிந்தித்ததுண்டு. ஆனால், சமீபத்தில் நான் வாசித்த கார்டியன் செய்தி இதெல்லாம் ஜுஜுபி என்று என்னை நினைக்க வைத்தது. அது எப்படி மெக்சிகோ நாட்டில் இருக்கும் அரசியல் வாதிகளின் குழந்தைகள் தங்களை அரச குடும்பத்தினர் போல நினைத்து கொண்டு நடப்பது குறித்து எழுதி இருந்தனர். அதில் ஒரு அரசியல் வாதியின் மகன், சைக்கிள் செல்லும் ரோட்டில் காரில் வந்து அங்கு காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் இவருக்கு வழிவிட வில்லை என்று அவருடன் சண்டை போட்ட ஒரு வீடியோ வைரல் ஆக யூடூபில் பரவி கொண்டு இருக்கிறது.



அதே போல, ஒரு அரசியல்வாதியின் மகள் தனக்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை என்று கோவப்பட்டு அந்த ஹோட்டலை போலீசை வைத்து மூட செய்த நிகழ்ச்சியும் அங்கே நடந்து இருக்கிறது. 

அப்போது, பெரிய மனிதர்களின் குழந்தைகள் எல்லாரும் இப்படி தான் இருப்பார்களா? என்று யோசித்த போது, அமெரிக்கா ப்ரெசிடெண்ட் ஒபாமாவின் மகள் தன்னுடைய கோடைகாலத்திற்கு என்று ஒரு வேலையில் இருப்பதனை அதுவும் ஒரு சாதாரண ஹோட்டலில் கேஷியர் ஆக வேலை செய்யும் போட்டோ வை காண நேர்ந்தது.



அதற்கு பக்கத்திலேயே மெக்ஸிகோ நாட்டின் ப்ரெசிடெண்ட் மகள்கள் இருவரும் ஹை சொசைட்டி மக்கள் போல உடை அணிந்து போஸ் கொடுக்கும் படங்களும் பார்க்க நேர்ந்தது.
இவை அனைத்தும் எனக்கு பழைய ஞாபகங்களை கிளறி விட்டது. இதில் எனக்கு தெரிந்த நான் அறிந்தது போல அரசியல் வாதிகளின் குழந்தைகள் தங்களை மாற்றி கொள்ளுவது, சாமானியர்களை விட்டு தள்ளி இருப்பது ஒரு புறம். இன்னொரு புறம் தான் பெரிய ஆள் என்றாலும் தன்னுடைய குழந்தைகளை சாதாரண மனிதர்கள் போல வளர்க்கும் ஒருவர்.

எல்லாரும் சமம், நம் குழந்தைகள் எல்லார் குழந்தைகளை போல சாமானியர்கள் என்று நினைக்கும் நடத்தும் செயல் ஆச்சரியமாக இருந்தது. இதுவே ஒரு காகேசியன் ரேஸ் ப்ரெசிடெண்ட் ஆக இருப்பின் இதனை செய்திருப்பாரா? என்ற கேள்வியும் தொக்கியே நிற்கிறது.

இதனை சார்ந்த ஒரு சில விஷயங்களும் எனக்கு தோன்றியதுண்டு. அதாவது, அரசியல் வாதிகள்எ, பெரிய மனிதர்கள் என்று இல்லை , நம்மள போல வெளி நாட்டுக்கு வந்த எத்தனை பேர் நம்ம குழந்தைகளை இது போல சம்மர் வேலைக்கு அனுப்புவோம். எனக்கு தெரிந்தே இங்கு வந்த பலர் தங்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவை முழுதும் செலவழித்து படிக்க வைப்பதை பார்த்து இருக்கிறேன்.  எத்தனை பேர் நார்மல் வாழ்க்கையை குழந்தைகளுக்கு சொல்லி தருகிறோம். நாம கஷ்டப்பட்ட மாதிரி நம்ம குழந்தைகள் கஷ்டப்பட கூடாது அப்படின்னு நினச்சு, எல்லாத்தையும் கொடுக்கிறோம். ஆனால் அது உபயோகப்படுமா? யோசிக்க வேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது.


நன்றி.


No comments: