Wednesday, May 26, 2010

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மனிதன்



ஒரு கப்பல் பசிபிக் மகா சமுத்திரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அதில்
ஒரு இந்திய குடும்பமும் zoo வில் இருக்கும் மிருகங்களும் அடங்கும்.

அப்போது பயங்கர புயல் வீசுகிறது, கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கவிழ ஆரம்பிக்கிறது. இந்திய குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் அந்த குடும்பத்தில் உள்ள பதினாறு வயது பையன் " Pi " க்கு ஒரு lifeboat கிடைக்கிறது. ஆனால் அவன் அதில் ஏறுவதற்கு முன் ஒரு Hynea (ஒரு வகை ஓநாய்), ஒரு குரங்கு (Orangutan ), ஒரு அடிபட்ட வரிக்குதிரை , பின் ஒரு பெங்கால் புலி, ஏறிக்கொள்கிறது.

சில நாட்களில் ஓநாய், குரங்கையும், வரிக்குதிரையையும் தின்றுவிடுகிறது.
புலி, ஓநாயை திங்க, " Pi " க்கு பயம் பிடித்து கொள்கிறது. எப்படியாவது தன்னை
புலியிடம் இருந்து காப்பாற்றி கொள்ள பல வழிகளை கையாள்கிறான். தானே மீன் பிடித்து அதனை புலிக்கும் அளிக்கிறான். சரியான உணவும் நீரும் இல்லாததால் இருவருக்கும் கண் தெரியாமல் போகிறது, நோய் வாய்படுகின்றனர். மெசிக்கன் கரையில் boat ஒதுங்க புலி காட்டிற்குள் எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது.

மீட்கப்பட்ட " Pi " யிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கும் போது அவன் மேற்சொன்ன கதையை கூறுகிறான். ஆனால் யாரும் அதனை நம்ப தயாராக இல்லை. உடனே அவன் வேறு ஒரு கதையை கூறுகிறான், அந்த கதையின் படி "Hynea " ஒரு பிரெஞ்சு சமையல்காரனாகவும், "Orangutan " அவன் தாயாகவும் , அடிபட்ட வரிக்குதிரை ஒரு சக பயணியாகவும், புலி அவனாகவும் இருக்கிறார்கள். இந்த கதை நம்பக்கூடியதாக இருப்பதாக கூறுகிறார்கள்.

கடல் பிரயாணத்தின் போது இப்படி உணவும் குடிநீரும் இல்லாமல் தனித்து விடப்பட்டவர்கள் "Cannabalism " எனப்படும் மனித மாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவது உண்டு. எப்படியாவது வாழவேண்டும் என்ற போராட்டம் அவர்களுக்கு உள் உள்ள மிருகத்தை தட்டி எழுப்பி விடும்.

அதன் படி " Pi " முதலில் சொன்ன கதையில் தனக்கு உணவு இல்லாவிட்டாலும் கூட மீன் பிடித்தாவது புலிக்கு கொடுத்து தன்னையும் காப்பாற்றி கொண்டு கொஞ்சம் மனிதனுக்கு உள்ள கடவுளை தட்டி எழுப்ப முயற்சிக்கிறான். ஆனால் யாரும் இதனை ஏற்று கொள்ளாத போது மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை பற்றி சொல்ல அனைவரும் ஏற்று கொள்கின்றனர்.

நீங்கள் என்ன நினைகிறீர்கள் முதலில் சொன்ன கதை உண்மையா? அல்லது இரண்டாவது சொன்ன கதை உண்மையா?

இது Booker பரிசு வென்ற "Life of pi " என்ற புத்தகத்தை படித்த பிறகு எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.


பி.கு: எப்போதோ எழுதியது, இந்தியா செல்லும் இந்த இடைப்பட்ட காலத்தில் இருக்கட்டுமே என்று போஸ்ட் செய்து வைத்தது. நன்றி.

Friday, May 14, 2010

எனது கட்டுரை யூத்புல் விகடனில்

அனைவருக்கும் ஒரு நற்செய்தி,

HFCS பற்றிய எனது பின்வரும் கட்டுரை விகடன் முகப்பு பகுதியில் வெளிவந்து இருக்கிறது.

http://www.vikatan.com

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறோம். "Corn இல்லாமல் எந்த உணவுமே இல்லை" என்று புதிதாக ஒரு மொழி வரும் போல இருக்கிறது.

ஆச்சரியமாக இருக்கிறதா? எப்படி என்று அறிய கீழே உள்ள கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் சொல்லுகிறீர்கள் பார்ப்போம்.

நீங்கள் காலையில் எழுந்தவுடன் breakfast-க்கு corn-flakes அல்லது Grits என்பதை போன்று உண்பவரா?

உங்களுக்கு கோக் அல்லது பெப்சி இல்லாமல் வாழவே முடியாதா?

ஐஸ்கிரீம் சாப்பிடுபவரா?

உணவகங்களில் டோமோடோ சூப் அல்லது ஏதேனும் ஒரு சூப் குடிப்பவரா?

எந்த உணவுக்கும் ketchup தொட்டு கொள்பவரா?

சாக்லேட், பிஸ்கட், Candy சாப்பிடுபவரா?

பீர் குடிப்பவரா?

விக்ஸ், இருமல் டானிக் எடுத்து கொள்பவரா?

சாலட் சாப்பிடும் போது சாலட் டிரெஸ்ஸிங் போட்டுகொள்பவரா?

Pizza சாப்பிடுபவரா?

பிரட் சாப்பிடுபவரா?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் அளித்திருந்தால் நீங்கள் சோளத்திலிருந்து எடுக்கப்படும் சோள சர்க்கரை - High Fructose Corn Syrup (HFCS) என்ற சுவையூட்டியை தினமும் உண்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த சர்க்கரை அதிக ஆபத்தானது. தற்போதைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தால் இந்த சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் உண்கிறார்கள். இதுகுறித்து இளைம் தலைமுறையினருக்கு பெற்றோருக்கும் விழிப்பு உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

சோளத்தில் உள்ள கார்போஹைடேரேட் பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு fructose எனப்படும் சர்க்கரையாக மாற்றபடுகிறது. இந்த fructose, corn syrup (100% glucose) உடன் மேலும் சுவையூட்ட சேர்க்கபடுகிறது.
சோளத்தின் விலை கரும்பின் விலையை விட மலிவாதலால் இந்த HFCS மேற்குறிப்பட்ட எல்லா உணவு பொருள்களிலும் சர்க்கரைக்கு பதில் அமெரிக்காவில் முதலில் சேர்க்கபட்டது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் அதிக அளவு இது சேர்க்கப்பட்டு வருகிறது.

சரி, இது நல்ல விஷயம் தானே என்று நினைத்தால், இல்லை!

கரும்பு சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவை விட இந்த சோள சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவு அதிகம் என்பதால், அதில் தயாரித்த உணவை செரிக்க நம்முடைய உடல் அதிக அளவில் இன்சுலின் தயாரிக்க வேண்டி வரும். முடிவு சர்க்கரை வியாதி.

இந்தியாவில் தற்போது இருக்கும் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக புள்ளியியல் தெரிவிக்கிறது. இதிலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமான இந்த சோள சர்க்கரை உணவுகள் கொண்ட பொருள்களை உண்ண ஆரம்பித்தால் இந்தியாவில் அனைவரும் வெகு விரைவில் சர்க்கரை வியாதிக்காரர்கள் ஆகி விடுவோம்.

இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

முடிந்த அளவு HFCS உள்ள பொருள்களை உண்ணாமல் தவிர்க்கலாம்.

கடைகளில் பொருள்களை வாங்கும் போது லேபிள்களை படித்து, அதில் HFCS என்ற பொருள் இருக்கிறதா? என்று பரிசோதித்த பின் வாங்கலாம்.

தவிர்க்க முடியாத காரணத்தால் உண்ண நேர்ந்தால் அளவாக உண்ணலாம்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம்.

நமது பாரம்பரிய உணவு முறையில் அதிகம் உபயோகபடுத்தபடும் கரும்பு சர்க்கரை, வெல்லம் மற்றும் பனை வெல்லம் போன்றவை இயற்கையானவை. எந்த வேதியியல் மாற்றத்துக்கும் உட்படுத்தபடாதவை ஆகையால் முடிந்த அளவு இயற்கையான இனிப்பை குறித்த அளவு உண்ணுவோம் உடல் நலம் காப்போம்.

*

Wednesday, May 12, 2010

ஆட்டோ ,டாக்ஸி, ரயில் மற்றும் விமானம்

இது பயணங்கள் பற்றிய என் அனுபவங்களின் கொசுவர்த்தி.

சிறுவயதில் டாக்ஸி , ரயில் அல்லது விமானம் என்றால் சினிமாவில் பார்ப்பதோடு சரி. வெளியில் செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ, ரிக்க்ஷா, டவுன் பஸ் அல்லது நடை மட்டுமே. எப்போது வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் என் அப்பா, பெரிய அண்ணன் அல்லது அம்மா கூட வருவார்கள். அதனால் தனியாக செல்வது என்றால் கொஞ்சம் எனக்கு பயமாக தான் இருக்கும்.

இப்படி பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட நான் முதன்தனியாக நான் சென்றது என்றால் அது B .Sc ., NCC கேம்ப்க்காக ஹைதராபாத் சென்றது தான். மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து பின் ஹைதராபாத்துக்கு சார்மினார் எக்ஸ்பிரஸ் பிடித்து செல்ல வேண்டும். எங்கள் கல்லூரியில் இருந்து என்னை தவிர மூன்று பெண்கள் தேர்ந்தெடுக்க பட்டு இருந்தாலும் மற்ற இருவரும் எனக்கு சீனியர்கள் வேறு துறை வேறு அதனால் யாரையும் தெரியாது. முன்பின் தனியாக சென்றறியாத நான் எப்படி சமாளிக்க போகிறோம் என்று தொடை நடுங்கி கொண்டிருந்தேன். ஆனாலும் கூட இருந்த instructor அவர்கள் எனக்கு தைரியம் தந்து கொண்டிருந்தார்.

என் அப்பா வேறு "பொம்பள பிள்ளைய இவ்வளவு தூரம் தனியா அனுப்ப வேணான்னு சொன்ன கேட்குறியா?" என்று என் அம்மாவிடம் கடுப்படித்து கொண்டிருந்தார். அதனால் நான், பயந்தது போல் காட்டினால் எங்கே பயணம் தடைபட்டு விடுமோ என்று தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டேன். ஒரு வழியாக வைகை எக்ஸ்பிரஸ் ஏறிய பிறகு மெதுவாக பயம் மறுபடியும் பிடித்து கொள்ள தொடங்கியது (எவ்வளவு நேரம் தான் தைரியமா இருக்குற மாதிரி நடிக்கிறது?), கடவுளே கடவுளே என்று உலகத்தில் உள்ள எல்லா கடவுளையும் சாதி மத வேறுபாடின்றி வேண்டி கொண்டிருந்தேன். உள்ளூர பயம் இருந்தாலும் முதல் ரயில் பயணம் ரசிக்க வைத்தது.

எப்படியோ, ஒருவழியாக சென்னை எக்மோர் வந்து அடைந்து விட்டோம். பிறகு டாக்ஸி எடுத்து கொண்டு சென்ட்ரல் செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எங்கள் கல்லூரியில் இருந்து வந்த மூன்று பெண்களும் எங்கள் instructor ம் சேர்ந்து ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து "சென்ட்ரல் போகணும்" என்று சொல்ல அந்த டாக்ஸி காரர் "ஏறுங்க" என்று சொல்ல ஏறி உட்கார்ந்தோம். பிறகு டாக்ஸி சென்றது சென்றது சென்றுகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சென்று இருக்கும் பிறகு சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தது. டாக்ஸிக்கு பணம் சுமார் 300 என்று நினைக்கிறேன் ,ஆனது. நாங்கள் பிரித்து கொடுத்தோம். பிறகு சார்மினார் எக்ஸ்பிரஸ் வந்தது ஏறி உட்கார்ந்தோம், எங்களை போலவே கேம்புக்கு வந்தவர்களும் அந்த ட்ரெயினில் வர பயணம் கொஞ்சம் போரடிக்காமல் சென்றது.

பேச்சு வாக்கில் சென்னையில் இருந்து வந்திருந்த மாணவர்களிடம் டாக்ஸி பற்றி சொன்ன போது அவர்கள் சொன்னது "அடப்பாவிங்களா, உங்கள நல்ல ஏமாத்தி இருக்கான் அந்த டாக்ஸி காரன்" என்று பதில் வந்தது . தொன்னூறுகளில் எக்மோர் இல் இருந்து சென்ட்ரல் செல்ல 30 ரூபாய் கொடுத்தாலே அதிகம் என்று பிறகு தான் கேள்வி பட்டேன். பிறகு நாட்கள் செல்ல செல்ல தனியாக செல்வது என்பது பயமில்லாமல் போனாலும் டாக்ஸி என்றால் மட்டும் கொஞ்சம் நடுக்கம் வரும்.

மறுபடியும் ஒரு நாள் டாக்ஸி பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாததானது அது முதன் முதலில் இந்தியாவை விட்டு வெளிநாடு செல்ல நேர்ந்தபோது நடந்தது. சிறுவயதில் விமானம் மேலே பறக்கிறதென்றால் கீழிருந்து கைகட்டுவோம், அது ஒரு சந்தோசம். ஆனால், தனியாக லண்டனுக்கு விமான பயணம், அதுவும் சென்னையில் இருந்து இல்லாமல் பம்பாயில் இருந்து பயணம். சென்னையில் இருந்து பாம்பே வந்து பிறகு எமிரேட்ஸ் விமானம் மூலம் லண்டன் heathrow ஏர்போர்ட் செல்லவேண்டும். அதுவும் லண்டன் சென்ற பிறகு அங்கிருந்து Norwich செல்ல வேண்டும். அது இரண்டரை மணிநேர ரயில் பயணம்.

எனக்கு லண்டனில் தெரிந்தவர் என்று யாரும் இல்லை. என்னுடைய சீனியர் அக்கா தன்னுடைய நண்பர் என்று ஒருவர் இருக்கிறார் அவரை வந்து உன்னை அழைத்து போக சொல்கிறேன் அவர் உன்னை Norwich ரயில் ஏற்றி விடுவார் என்று சொல்லிவிட்டார். யார் அந்த நண்பர்? எப்படி இருப்பார்? யாரும் வரா விட்டால் என்ன செய்வது?. எனக்கோ உள்ளூர கிலி பிடித்து கொண்டது.

தனியாக ரயில் பயணம் பழகியதால் பாம்பே வந்தாயிற்று, அங்கிருந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின், கடவுளே கடவுளே என்று வழக்கம் போல கடவுளை கும்பிட ஆரம்பித்து விட்டேன். விமானம் துபாயில் தரை இறங்கியது, இறங்கியவுடன் துபாய் விமான நிலையத்தை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன். எங்கும் மினுமினுக்கும் வண்ண விளக்குகள் ஈச்சமரம் போல வடிவமைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தானது.

பின்னர் லண்டன் விமான நிலைய கேட் எது வென்று பார்த்து விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் ஒரு தைரியம் வந்தது, ஏர்போர்ட் இல் கூப்பிட வருபவர் இந்தியர் தான், அதனால் சுலபமாக அடையாளம் காணலாம் என்று நினைத்து இருந்தேன். லண்டன் heathrow விமான நிலையம் வந்த பிறகு தான் தெரிந்தது என்னை போல பல இந்தியர்கள் பயணம் செய்திருந்தார்கள், அவர்களை அழைத்து செல்ல பலரும் காத்து கொண்டிருந்தனர்.

ஒன்றும் புரியாமல் ஓரிடத்தில் நின்று முழி முழி என்று முழித்து கொண்டு இருக்கும் போது ஒருவர் என்னிடம் வந்து "Are you ....?" என்று கேட்டார். நான் ஆம் என்று தலை ஆட்டியவுடன், "I am Karthikeyan, your senior's friend" என்று சொன்னார். எனக்கு ஒரு வழியாக அப்போது தான் உயிர் வந்தது (அப்பாடா ஒரு வழியா ரங்கமணியை அறிமுகப்படுத்தியாச்சு :))

நான் சென்று லண்டன் சேர்ந்தது சனிக்கிழமை அதிகாலை எட்டு மணி , அங்கிருந்து Norwich செல்ல இரண்டு -இரண்டரை மணி நேரம் ஆகும். அந்த நண்பர் "எனக்கு இன்று வேறு வேலை இருக்கிறது உங்க சீனியர் சொன்னாங்கன்னு அவசரமா பாதியில விட்டுட்டு வந்தேன், இல்லாட்டி நானே உங்கள கொண்டு விட்டுடுவேன், தப்பா எடுத்துக்காதீங்க" என்று சொல்லி என்னை ரயில் ஏற்றி விட்டார்.

எனக்கு தங்க ஏற்பாடு செய்திருந்த இடத்திடம் போனில் பேசிய பின்னர் அந்த நண்பர் "நீங்க அந்த இடத்துக்கு காலையில பதினோரு மணிக்குள்ள போகணும்னு சொல்லுறாங்க, ட்ரெயின் அதுக்குள்ளே போயிடும், எந்த இடம்னு தேடி அலையாம இருக்க ஒரு டாக்ஸி எடுத்துட்டு போயிடுங்க, worst கம் worst பக்கத்தில ஒரு யூத் ஹாஸ்டல் ஆவது கட்டாயம் இருக்கும் அதுக்கு போயிடுங்க" என்று சொன்னார். எனக்கு டாக்ஸி ன்னா பயம்னு அவர்கிட்ட எப்படி போய் சொல்ல.
அதை தவிர யூத் ஹாஸ்டல் அப்படி என்றால் என்னவென்று கூட தெரியாது. சரி என்று தலை ஆட்டி வைத்தேன்.

ரயில் 30 நிமிடம் தாமதமாக வர, நான் Norwich சென்று சேரும் போது மணி பதினொன்றை கடந்திருந்தது. இருந்தாலும் இந்திய ஞாபகத்தில் திறந்து தான் இருப்பாங்க என்று ஒரு குருட்டு நம்பிக்கை. அருகில் இருந்த டாக்ஸி காரரிடம் சென்று இந்த அட்ரஸ் செல்லவேண்டும் என்று அட்ரஸ் காட்டினேன். அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு "Its a walkable distance, you can go by yourself" என்று சொன்னார். நானோ நண்பர் சொன்ன ஞாபகத்தில், "ITs Ok , I have luggages", என்று சொல்லி ஏறி அமர்ந்தேன். சில நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்தபோது எனக்கு ஒரே அதிர்ச்சி, காரணம் அந்த இடம் பூட்டி இருந்தது. என் நண்பர் சொன்ன ஞாபகத்தில் "Is there a Youth hostel nearby?" என்று கேட்டேன். அவர் "Yes there is one, I will take you there". என்று சொல்லி அழைத்து சென்றார்.

இன்றும் நான் அந்த டாக்ஸி-டிரைவர் ஐ நினைத்து பார்ப்பதுண்டு. இந்தியாவில் இப்படி ஒரு நிலை வந்து இருந்தால், எவ்வளவு தூரம் தனியாக வந்த பெண்ணை டாக்ஸி டிரைவர் கொண்டு சேர்த்து இருப்பார். நினைக்கவே பயமாக இருக்கிறது.

சுறாவும் எங்க வீட்டு ரங்கமணியும்

"தீதும், நன்றும், பிறர் தர வாரா" கணியன் பூங்குன்றனார் எப்போதோ சொல்லி வைத்த பொன்மொழி. ஆனாலும் எங்களை போல எத்தனை பேர் தெரிந்தே குழியில் விழுபவர்கள்.

வலையுலகத்தில் கிழித்து தொங்க விடப்பட்ட சுறா படத்தை நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பார்த்தே ஆவது என்று முடிவு கட்டி விட்டார் எங்க வீட்டு ரங்கமணி(வீட்டுகாரரை அப்படி தானே சொல்லணும்?).

படத்தை வீட்டுல உட்கார்ந்து பார்ப்பதில் ஒரு சௌகரியம் உண்டு, பிடிக்காத சீன்கள், பாடல்கள் எல்லாவற்றையும் பாஸ்ட் பார்வர்ட் செய்து விடலாம். அப்படி ஓட்டி ஓட்டி சுறாவை பார்த்த போது மிஞ்சியது என்றால் ஒரு பத்து நிமிட படம் என்று நினைக்கிறேன்.

படத்தில் எல்லாமே யூகிக்க கூடியாதாக இருந்தது, இதுல எங்க வீடு ரங்கமணி செய்த டார்ச்சர் இருக்கு பாருங்க அது சொல்லி மாளாது.

முதலில் ஹீரோ அறிமுக காட்சி வந்ததும் ரங்கமணி

"இப்போ சும்மா குத்து சாங் ஒன்னு வரணுமே",

அப்புறம் சிறிது நேரம் கழித்து

"காமெடியன் எல்லாம் அறிமுகம் செய்துட்டாங்க எங்கப்பா கனவு தேவதை தமன்னா" என்று ஒரே வருத்தம்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவரே கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்

"பாரு இப்போ எழுந்திருச்சு வருவான் பாரு"

"அடுத்த சீன் ல அந்த பொண்ணு வரும் பாரு"

"இப்போ அந்த அம்மா அழுவாங்க பாரு"

அவர் நேரம், எல்லாம் அவர் சொன்னது போலவே வந்தது.

உடனே "நான் சொன்னேன் இல்ல" என்று பெருமை வேறு.

ஐயோ சாமி தாங்க முடியல, சுறா கொத்து பெரும் கொத்துன்னா இவர் கொத்து அதை விட பெருசா இருந்தது.

ஒரு டிஸ்கி: தமிழ் சினிமாவுக்கு கதை வேணும்னா எங்க வீட்டு ரங்கமணியை தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவாக படம் பார்த்து முடித்த பிறகு இருவருமே சேர்ந்து சொன்னது

"வீட்டுல உட்கார்ந்து ஓட்டி ஓட்டி பார்த்தப்போவே நம்மால் பார்க்க முடியலையே, எப்படி தான் இதுக்கு பொறுமையா ரெண்டரை மணிநேரம் தியேட்டர் ல உட்கார்ந்து பார்க்கிறார்களோ ".

பிளேடு கூட சீக்கிரம் அறுத்துரும், இந்த படம் மழுங்கடிக்கப்பட்ட ஆக்சா பிளேடு.

யாரெல்லாம் இந்த படத்தை தியேட்டர்ல போய் பார்த்தார்களோ அவர்களுக்கு "உலகின் மிகச்சிறந்த பொறுமை சாலிகள்" என்ற பட்டம் கொடுக்கிறேன்.

Tuesday, May 11, 2010

கல்வியும் மனனமும்

சில நேரங்களில் நான் படிக்கும் இடுகைகள் எல்லாம் பழைய நினைவுகளை அசை போட வைத்து விடும். அதிலும் நேற்று நான் வாசித்த வினவு அவர்களின் தளத்தில் வெளியான தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !! என்ற இடுகை என்னுடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்தது.

இந்திய கல்வி திட்டத்தின் நிறை குறைகளை பற்றிய விவாதத்திற்கு வினவு அவர்களின் இந்த இடுகை வழிவகுக்கும் என்று நம்புகிறேன். இந்த விவாதத்தில் என்னுடைய பங்களிப்பாக இந்த இடுகை. விருப்பமானவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் படிப்பது குறித்த என்னுடைய முந்தய இடுகையான salt analysis படிக்கவும்.

நான் ஆறாவது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தது மதுரையில் உள்ள ஈ. வே .ரா நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி. மதுரையில் உள்ளவர்களுக்கு நீச்சதொட்டி பள்ளி என்று சொன்னால் உடனே தெரியும். அந்த அளவிற்கு மாநகராட்சி பள்ளி என்றாலும் அறியப்பட்டு இருந்தது என் பள்ளி. கிட்டத்தட்ட 1000 -2000 பேர் படிக்கும் பள்ளி என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஏழையோ பணக்காரரோ நெறைய பெண்கள் அங்கு படித்தனர்/படிக்கின்றனர்.

இப்படி நிறைய பெண்கள் படித்த பள்ளி என்றாலும் எல்லா மாநகராட்சி பள்ளிகள் போலவே, எங்கள் பள்ளியும் இருந்தது. ஒழுங்கான கழிப்பிட வசதி கிடையாது, அதனால் பல நேரங்களில் கழிவு நீர் வெளியே வந்து நிரம்பி கிடக்கும், அதற்கு சிறிது தூரத்தில் நாற்றத்திற்கு மத்தியில் மரத்தடியில் வகுப்புகள் நடக்கும். உட்கார பெஞ்ச் கிடையாது தரை அல்லது மரத்தடி தான். பாதி வகுப்புகளுக்கு/பாடங்களுக்கு ஆசிரியர்கள் கிடையாது.

இவையெல்லாம் பெரிய தடையாக சிறு வயதில் எனக்கு தெரியவில்லை. ஆனால் பத்தாவது படிக்கும் போது தான் இந்திய கல்வித்திட்டத்தின் ஆணிவேரான மதிப்பெண் பற்றிய அவசியம் எனக்கு தெரிய ஆரம்பித்தது. நல்ல மதிப்பெண் பெற்றால் தான் வேண்டும் குரூப் கிடைக்கும் அதனாலேயே ஒழுங்காக படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.ஆனால் பள்ளியிலோ அதற்கான சுழல் எனக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அறிவியல் பாடத்திற்கு என்று யாரும் காலாண்டு தேர்வு வரை எங்களுக்கு இல்லை. பின்னர் ஒருவாறு ஒரு ஆசிரியரை நியமித்தார் எங்கள் தலைமை ஆசிரியை. அவரும் வகுப்பு எடுகிறேன் என்று சொல்லி அறிவியலை வாசித்து விட்டு செல்வார்.சமூக அறிவியல் ஆசிரியை பல நாட்கள் பள்ளிக்கு வந்தாலும் சில வகுப்புகளே எங்களுக்கு எடுப்பார். ஆங்கிலம் எடுத்த ஆசிரியை ஆங்கிலத்தை தமிழ்படுத்தி படிக்க சொல்வார். அதாவது She - ஷி, He - ஹி ...இப்படி எல்லாமே தமிழ் படுத்தி படிக்க சொல்வார். அதிலும் Present tense, Past tense, Future tense இதற்கெல்லாம் எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. கணிதம் வகுப்பு என்றாலே எல்லா Formula க்களும் நெட்டுரு போட்டு வைத்து இருப்போம். கணிதத்தை மனப்பாடம் செய்ய சொல்வார்கள் என் ஆசிரியை. தமிழ் அம்மாவும் இலக்கணம் படியுங்கள் என்று சொல்வார்களே தவிர, யாரும் விளக்கியது கிடையாது.

ஒவ்வொரு ஆசிரியையும் ஓவ்வொரு மாதிரி என்றாலும் அனைவரும் ஒன்று பட்ட ஒரு விஷயம் இருக்கிறதென்றால் "ஒழுங்கா மனப்பாடம் செய்யுங்கள்" என்பதே . ஆங்கிலத்தில் இருந்து கணிதம் வரை மனப்பாடம் செய்து இருக்கிறோம். அதுவும் என்னுடன் படித்த உமா என்ற ஒரு பெண் பயங்கரமாக நெட்டுரு செய்வாள், அதனால் பரீட்சை நேரங்களில் அவளுக்கு நடுவில் ஏதாவது மறந்து விட்டால் அவ்வளவு தான் மறுபடியும் ஞாபகம் வராது, உடனே "ஏ, இதுக்கு அப்புறம் என்னப்பா வரும்?" என்று குசுகுசு வென்று கேட்பாள். அடுத்த வார்த்தை என்னவென்று சொன்னவுடன் மளமள வென்று எழுதி முடித்து விடுவாள். "எங்கம்மா ஞாபக சக்திக்கு வல்லாரை மாத்திரை வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லுறாங்க "என்று பெருமையாக சொல்வாள். அப்படி மனனம் செய்து பத்தாவதில் நல்ல மதிப்பெண் பெற்றும் விட்டாள்.

பள்ளி இறுதி ஆண்டு படிப்பில், எங்களுக்கு வேதியியல், தாவரவியல் மற்றும் கணிதம் இவற்றிக்கு ஆசிரியைகள் கிடையாது. இந்த பாடங்களுக்கு எல்லாம் நாங்கள் tuition center ஐ நம்பி இருந்தோம். ப்ராக்டிகல் அல்லது செய்முறை வகுப்பு என்றால் ஒரு ஆய்வு பற்றி செய்முறை படித்து, புரிந்து , பிறகு செய்ய வேண்டும் ஆனால் எங்களுக்கு செய்முறை வகுப்பு என்று ஒன்று நடக்கவே நடக்காது. அதற்கு பதில் செய்முறை புத்தகங்களை எங்களுக்கு கொடுத்து விடுவார்கள் அதனையும் மனனம் செய்ய வேண்டும் நாங்கள். அதனால் மனன திலகங்கள் ஆன நாங்கள் அனைவரும் செய்முறையில் முழு மதிப்பெண் பெற்று விட்டோம்.

இப்படி எல்லாமே எதிர்மறையில் எங்களுக்கு இருந்தாலும் அதில் ஒரு வசந்தகாலமாக எங்களுக்கு இருந்தவர்கள் ஆங்கில மற்றும் இயற்பியல் ஆசிரியைகள். அதிலும் என்னுடைய ஆங்கில ஆசிரியை கொடுத்த உற்சாகம் ஆங்கிலத்தை ரசிக்க வைத்தது. அவர் பாடம் எடுக்கும் விதம் அருமையாக இருக்கும், கதை சொல்வது போல சொல்லி பாடம் நடத்துவார். அதே போல என்னுடைய இயற்பியல் ஆசிரியை, எடுத்த பாடமும், விளக்கும் விதமும் எனக்கு அறிவியல் என்பது மனனம் செய்வதல்ல என்று கொஞ்சம் புரிய வைத்தது.

நான் இளநிலை படித்தது அரசினர் கல்லூரியான மதுரை மீனாட்சி கல்லூரியில், அங்கு நான் படித்தது இளநிலை இயற்பியல். இங்கும் மனப்பாடம் செய்து வந்த நான் படித்தது என்றால் அது எங்களுக்கு electronics வகுப்பு எடுத்த ராஜேஸ்வரி மேடம் பாடத்தில் தான். அவர்கள் எடுக்கும் விதமும் அவர்களின் நடை, உடை பாவனைகளை அதிகம் ரசித்து இருக்கிறேன்.

நான் முதுநிலை இயற்பியல் படித்தது மதுரை கல்லூரி, இங்கு கண்டிப்பு அதிகம், நான் மனப்பாடம் செய்து படிப்பது இங்கு கணிசமாக குறைந்திருந்தாலும் முழுவதும் மாற வில்லை என்று தான் கூற வேண்டும்.

உண்மையாக நான் புரிந்து படித்தது என்றால் அது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் உள்ள உயிரியல் தொழில் நுட்பத்துறையில் தான். படிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நான் இங்கே கண்டு கொண்டேன். மனப்பாடம் செய்வது என்பது அணுவளவும் உதவாது, மதிப்பெண் என்பது ஒரு மாயை, அறிவியல் என்பது அற்புதமானது என்று நான் உணர்ந்ததும் இங்கு தான்.வெளி நாடு/ மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களின் அறிமுகமும் எனக்கு இங்கு தான் கிடைத்தது.

கல்வி என்பது மனனம் செய்வது மட்டுமே என்று இருந்தால், வல்லாரை மாத்திரை விற்பவர்கள் மட்டுமே அதிக பயன் அடைய முடியும். மதிப்பெண் மட்டுமே அனைத்தையும் தரும் என்ற எண்ணம் இருக்கும் வரை, பிட் அடிப்பதும் அதிகரிக்கும், மனப்பாடம் செய்யும் மெசின்களை மட்டுமே நாம் உருவாக்க முடியும், கல்வி முன்னேற்றம் அடைய முடியாது என்பதே என் எண்ணம்.

ஆணென்றால் உசத்தியா?

மிகுந்த மன வருத்ததுடன் நான் எழுதும் இடுகை இது.

எந்த ஊராக இருந்தாலும் சரி எந்த நாடா இருந்தாலும் சரி எங்கும் நடப்பது ஒரு விஷயம் தான். அது ஆணென்றால் ஒரு மாதிரி பெண் என்றால் ஒரு மாதிரி என்பதே.

நேற்று நான் மிகவும் மன வருத்தம் அடைய நேரிட்டது. காரணம் நான் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் நான் வகித்த அதே பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் என்று கேள்வி பட்டேன். அவர் முன் அனுபவம் இல்லாதவர் ஆனாலும் ஆண். அங்கே வேலை பார்த்த மற்ற நண்பர்களிடம் பேசிகொண்டிருக்கும் போது நான் அறிந்தது இது தான்.

புதிதாக சேர்ந்திருக்கும் அந்த நபருக்கு நான் வாங்கிய சம்பளத்தை காட்டிலும் சம்பளம் சுமார் 20K ($20,000) அதிகம் என்பது. இத்தனைக்கும் அவர் முன் அனுபவம் இல்லாதவர், எனக்கோ மூன்று வருட முன் அனுபவம் உண்டு.

என்ன பாகுபாடு பாருங்கள்?. இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, வேலை செய்து என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்?. மனது வலிக்கிறது.

இதனை பற்றி மனம் நொந்து என் கணவரிடம் புலம்பி கொண்டிருந்த போது அவர் சமீபத்தில் வால்மார்டில் வேலை பார்க்கும் பெண்கள் இதே போன்று பாகுபடுத்த படுவதாக வழக்கு தொடர்ந்து இருக்கும் செய்தியை காண்பித்தார்.


பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள், பேய் இறங்க வேண்டாம் எங்களுக்கு உரிய பே (Pay) மட்டும் கொடுங்கள் போதும்.

Friday, May 7, 2010

மதுரைகாரங்க...

"சாமி...எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி"

மதுரைகாரங்கன்னா ரவுடிகளா?.

ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு நண்பர் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் பேசிகொண்டிருந்த போது அந்த நண்பரின் மனைவி

"நீங்க இந்தியாவில எந்த ஊரு" என்று கேட்டார்.

நான் அதற்கு "நான் மதுரைங்க" அப்படின்னு சொன்னவுடனே

"அய்யயோ உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும், எங்கயாவது அருவா கிருவா வச்சிருப்பீங்க இல்ல நீங்க எல்லாம்" அப்படின்னு கிண்டல் செய்தார்.

உடனே என் வீட்டுகாரர் "இவங்களுக்கு ----கிரி எல்லாம் தெரியுங்க" அப்படின்னு கொளுத்தி போட, அவங்களும் "உண்மையாவாங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் உங்ககிட்ட அப்படின்னு ஒரே சிரிப்பு"

எல்லாம் இந்த சினிமா காரவங்க பண்ணுற வேலை. எப்போ பாரு மதுரைனாலே அருவா, வெட்டு, குத்து, ரத்தம், ரவுடி.. ஏங்க, நான் ஒன்னு கேட்குறேன், இதை தவிர மதுரைல ஒண்ணுமே இல்லையா.

சினிமா தான் அப்படின்னா, நேத்து பார்க்குறேன் ஒரு மெகா சீரியல் பேரு மதுரை யாம், அது ஆரம்பிகிறது நான் படிச்ச மீனாட்சி கல்லூரியில. அதுவாவது வேற கதையோட இருக்கா, அதுவும் இல்ல அதே வெட்டு குத்து, ரவுடி...

எங்க அம்மா போனவாரம் பேசும்போது ஒன்னு சொன்னங்க "ஜெய்ஹிந்துபுரம்" அப்படின்னு ஒரு படம் எடுக்குறாங்களாம். அதுவும் நான் சின்ன வயசில இருக்கும் போது போன ஒரு கோயில்ல எடுத்தாங்களாம், அதில வில்லனா நடிக்கிறவர் எங்களுக்கு தெரிஞ்சவர்.

ஐயோ சாமி தாங்கல!

சுப்ரமணியபுரம், கோரிப்பாளையம்,ஜெய்ஹிந்துபுரம்....இன்னும் மதுரையில இருக்கிற அனுப்பானடி, ஆரப்பாளையம், திருப்பரங்குன்றம், குண்டு, குழி, மேடு, பள்ளம் இதெல்லாம் படம் பேரா வரப்போவுது பாருங்க.

தமிழ் சினிமாகாரங்களே மதுரை பாவம் விட்டுருங்க. வேற ஏதாவது ஊருக்கு உங்க ஜாகையை மாத்திருங்க ப்ளீஸ்.

Wednesday, May 5, 2010

Pink Vs. Blue



என் கணவர் ஆபீஸ்க்கு பிங்க் சட்டை உடுத்தி செல்ல மாட்டார். ஏன் என்று கேட்டால் "ஆபீஸ்ல ஒரு மாதிரி பார்கிறாங்க" என்று சொல்லுவார். நானும் சரி என்று விட்டு விடுவேன்.

முகுந்த் பிறப்பதற்கு முன் வரை எனக்கு பிங்க் அல்லது ப்ளூ வித்தியாசம் அதிகம் தெரியாது. ஆனால் குழந்தை உண்டாகி இருப்பதாக அனைவரிடமும் சொல்ல ஆரம்பித்தவுடன் அமெரிக்க நண்பர்கள் கேட்ட முதல் கேள்வி "Have you found out the sex of the baby?" என்று கேட்டனர்.

நாங்கள் "இல்லை ஒரு surprise ஆக இருக்கட்டும் என்று விட்டு விட்டோம்" என்று சொன்னோம் (இங்கு என்ன குழந்தை என்று பெரும்பாலும் 16 -20 ஆவது வாரம் சொல்லிவிடுவார்கள்).

உடனே அவர்கள் "Then how would you purchase clothes for the baby?" என்று கேட்பார்கள். எனக்கு அதன் அர்த்தம் முதலில் தெரியவில்லை.

பிறகு தான் தெரிந்தது. பெண் குழந்தை என்றால் பிங்க், பர்பிள் போன்ற நிறங்களில் உடை உடுத்த வேண்டும். ஆண் குழந்தை என்றால் ப்ளூ, கிரே போன்று எடுக்க வேண்டும் என்று.

பெண் குழந்தைகளுக்கு வேறு நிறங்களில் உடை உடுத்தினாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் ஆனால் ஆண் குழந்தைகளுக்கு பிங்க், ரெட் அல்லது பர்பிள் உடை உடுத்தினால் ஒரு மாதிரி பார்ப்பார்கள். சிலர் வேண்டுமென்றே "Boy or Girl?" என்று கேட்ப்பார்கள்.

என் அம்மா பிரசவத்திற்கு அமெரிக்கா வரும் முன் இந்தியாவிலிருந்து நெறைய துணிமணிகள் வாங்கி வந்து விட்டார்கள். அதில் எல்லா நிறங்களும் அடங்கும். அவற்றை எல்லாம் முகுந்துக்கு உடுத்தினால் வேண்டுமென்றே இந்தியர்கள் சிலரே "என்ன பொம்பள பிள்ள மாதிரி டிரஸ் பண்ணி விட்டிருக்கீங்க " என்று கேட்கிறார்கள்.

அதே போல விளையாட்டு சாமான்கள் வாங்குவதிலும் வித்தியாசம் உண்டு. டோரா பொம்மை என்றால் பெண் குழந்தைகளுக்கு. Spongebob , தாமஸ் ட்ரெயின் இவை போன்றவை ஆண் குழந்தைகளுக்கு. நியூட்ரல் என்று சில நிறங்களும் பொம்மைகளும் உண்டு. அவை பச்சை, மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களும். winnie pooh போன்ற கரடி பொம்மைகளும் அதில் அடங்கும்.

என் அம்மா இந்தியாவில் இருந்து வாங்கி வந்த டோரா பொம்மையை பார்த்து இங்கு இருந்த ஒரு இந்திய பெண்குழந்தை "Dora for baby boy, how is it possible?" என்று கேட்டது. அந்த குழந்தையின் அம்மாவும் அதே கேள்வியை வேறு மாதிரி என்னிடம் கேட்டார்கள்.

என்ன பிங்க் கோ என்ன ப்ளூ வோ, இந்தியாவில் இருக்கும் வரை இது போன்று எந்த வித்தியாசமும் நான் பார்த்ததில்லை. என்னை பொறுத்தவரை ராமராஜன் முதல் ரஜினி காந்த் வரை பிங்க் சட்டை போட்டு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கிறேன். அதை விட பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் வானவில் கலரில் தான் உடை உடுத்துவார்கள் அவர்களை எல்லாம் பார்த்தால் இங்கு இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ.


Monday, May 3, 2010

என்ன கொடுமை இது?

இரண்டு மூன்று வாரங்களுக்கு பதிவிலிருந்து விடுமுறை பெறலாம் என்று நினைத்தாலும் என்னை விட மாட்டேன் என்கிறது இன்று நான் கேட்ட செய்தி.

செய்தி இதுதான், இந்தியாவில் என் அம்மாவீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த சுமார் எழுபது வயது பாட்டி எங்கேயோ சென்றுவிட்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு ஆட்டோ காரர் அவரை அணுகி,

"நீங்க கண்ணனோட அம்மாதானே மா, என்ன மா இந்த பக்கம்" என்று கேட்டு இருக்கிறார். அந்த அம்மாவுக்கு விசாரித்தவர் யார் என்று தெரியாமல் இருந்தாலும் தன் பையன் பெயர் சொன்னதால் "யாரப்பா நீ" என்று கேட்டு இருக்கிறார். அந்த ஆட்டோ காரர் தான் கண்ணன் உடன் கூட படித்தவர் எனவும் வீட்டுக்கு எல்லாம் வந்திருக்கிறேன் எனவும் சொல்ல அந்த பாட்டி நம்பி இருக்கிறார்.

பிறகு அந்த பாட்டியை அழைத்து சென்று கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார் அந்த ஆட்டோ காரர். அப்புறம் என்ன நடந்தது என்று பாட்டிக்கு தெரியவில்லை. பிறகு நினைவு வந்த போது பாட்டியின் நகை களவாடப்பட்டு, சேலை எல்லாம் தாறுமாறாக இருந்திருக்கிறது (என்ன நடந்திருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்).

இதில் என்ன கொடுமை என்றால் அந்த பாட்டியின் பையன் கண்ணன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதே.