Tuesday, May 11, 2010

கல்வியும் மனனமும்

சில நேரங்களில் நான் படிக்கும் இடுகைகள் எல்லாம் பழைய நினைவுகளை அசை போட வைத்து விடும். அதிலும் நேற்று நான் வாசித்த வினவு அவர்களின் தளத்தில் வெளியான தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !! என்ற இடுகை என்னுடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்தது.

இந்திய கல்வி திட்டத்தின் நிறை குறைகளை பற்றிய விவாதத்திற்கு வினவு அவர்களின் இந்த இடுகை வழிவகுக்கும் என்று நம்புகிறேன். இந்த விவாதத்தில் என்னுடைய பங்களிப்பாக இந்த இடுகை. விருப்பமானவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் படிப்பது குறித்த என்னுடைய முந்தய இடுகையான salt analysis படிக்கவும்.

நான் ஆறாவது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தது மதுரையில் உள்ள ஈ. வே .ரா நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி. மதுரையில் உள்ளவர்களுக்கு நீச்சதொட்டி பள்ளி என்று சொன்னால் உடனே தெரியும். அந்த அளவிற்கு மாநகராட்சி பள்ளி என்றாலும் அறியப்பட்டு இருந்தது என் பள்ளி. கிட்டத்தட்ட 1000 -2000 பேர் படிக்கும் பள்ளி என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஏழையோ பணக்காரரோ நெறைய பெண்கள் அங்கு படித்தனர்/படிக்கின்றனர்.

இப்படி நிறைய பெண்கள் படித்த பள்ளி என்றாலும் எல்லா மாநகராட்சி பள்ளிகள் போலவே, எங்கள் பள்ளியும் இருந்தது. ஒழுங்கான கழிப்பிட வசதி கிடையாது, அதனால் பல நேரங்களில் கழிவு நீர் வெளியே வந்து நிரம்பி கிடக்கும், அதற்கு சிறிது தூரத்தில் நாற்றத்திற்கு மத்தியில் மரத்தடியில் வகுப்புகள் நடக்கும். உட்கார பெஞ்ச் கிடையாது தரை அல்லது மரத்தடி தான். பாதி வகுப்புகளுக்கு/பாடங்களுக்கு ஆசிரியர்கள் கிடையாது.

இவையெல்லாம் பெரிய தடையாக சிறு வயதில் எனக்கு தெரியவில்லை. ஆனால் பத்தாவது படிக்கும் போது தான் இந்திய கல்வித்திட்டத்தின் ஆணிவேரான மதிப்பெண் பற்றிய அவசியம் எனக்கு தெரிய ஆரம்பித்தது. நல்ல மதிப்பெண் பெற்றால் தான் வேண்டும் குரூப் கிடைக்கும் அதனாலேயே ஒழுங்காக படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.ஆனால் பள்ளியிலோ அதற்கான சுழல் எனக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அறிவியல் பாடத்திற்கு என்று யாரும் காலாண்டு தேர்வு வரை எங்களுக்கு இல்லை. பின்னர் ஒருவாறு ஒரு ஆசிரியரை நியமித்தார் எங்கள் தலைமை ஆசிரியை. அவரும் வகுப்பு எடுகிறேன் என்று சொல்லி அறிவியலை வாசித்து விட்டு செல்வார்.சமூக அறிவியல் ஆசிரியை பல நாட்கள் பள்ளிக்கு வந்தாலும் சில வகுப்புகளே எங்களுக்கு எடுப்பார். ஆங்கிலம் எடுத்த ஆசிரியை ஆங்கிலத்தை தமிழ்படுத்தி படிக்க சொல்வார். அதாவது She - ஷி, He - ஹி ...இப்படி எல்லாமே தமிழ் படுத்தி படிக்க சொல்வார். அதிலும் Present tense, Past tense, Future tense இதற்கெல்லாம் எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. கணிதம் வகுப்பு என்றாலே எல்லா Formula க்களும் நெட்டுரு போட்டு வைத்து இருப்போம். கணிதத்தை மனப்பாடம் செய்ய சொல்வார்கள் என் ஆசிரியை. தமிழ் அம்மாவும் இலக்கணம் படியுங்கள் என்று சொல்வார்களே தவிர, யாரும் விளக்கியது கிடையாது.

ஒவ்வொரு ஆசிரியையும் ஓவ்வொரு மாதிரி என்றாலும் அனைவரும் ஒன்று பட்ட ஒரு விஷயம் இருக்கிறதென்றால் "ஒழுங்கா மனப்பாடம் செய்யுங்கள்" என்பதே . ஆங்கிலத்தில் இருந்து கணிதம் வரை மனப்பாடம் செய்து இருக்கிறோம். அதுவும் என்னுடன் படித்த உமா என்ற ஒரு பெண் பயங்கரமாக நெட்டுரு செய்வாள், அதனால் பரீட்சை நேரங்களில் அவளுக்கு நடுவில் ஏதாவது மறந்து விட்டால் அவ்வளவு தான் மறுபடியும் ஞாபகம் வராது, உடனே "ஏ, இதுக்கு அப்புறம் என்னப்பா வரும்?" என்று குசுகுசு வென்று கேட்பாள். அடுத்த வார்த்தை என்னவென்று சொன்னவுடன் மளமள வென்று எழுதி முடித்து விடுவாள். "எங்கம்மா ஞாபக சக்திக்கு வல்லாரை மாத்திரை வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லுறாங்க "என்று பெருமையாக சொல்வாள். அப்படி மனனம் செய்து பத்தாவதில் நல்ல மதிப்பெண் பெற்றும் விட்டாள்.

பள்ளி இறுதி ஆண்டு படிப்பில், எங்களுக்கு வேதியியல், தாவரவியல் மற்றும் கணிதம் இவற்றிக்கு ஆசிரியைகள் கிடையாது. இந்த பாடங்களுக்கு எல்லாம் நாங்கள் tuition center ஐ நம்பி இருந்தோம். ப்ராக்டிகல் அல்லது செய்முறை வகுப்பு என்றால் ஒரு ஆய்வு பற்றி செய்முறை படித்து, புரிந்து , பிறகு செய்ய வேண்டும் ஆனால் எங்களுக்கு செய்முறை வகுப்பு என்று ஒன்று நடக்கவே நடக்காது. அதற்கு பதில் செய்முறை புத்தகங்களை எங்களுக்கு கொடுத்து விடுவார்கள் அதனையும் மனனம் செய்ய வேண்டும் நாங்கள். அதனால் மனன திலகங்கள் ஆன நாங்கள் அனைவரும் செய்முறையில் முழு மதிப்பெண் பெற்று விட்டோம்.

இப்படி எல்லாமே எதிர்மறையில் எங்களுக்கு இருந்தாலும் அதில் ஒரு வசந்தகாலமாக எங்களுக்கு இருந்தவர்கள் ஆங்கில மற்றும் இயற்பியல் ஆசிரியைகள். அதிலும் என்னுடைய ஆங்கில ஆசிரியை கொடுத்த உற்சாகம் ஆங்கிலத்தை ரசிக்க வைத்தது. அவர் பாடம் எடுக்கும் விதம் அருமையாக இருக்கும், கதை சொல்வது போல சொல்லி பாடம் நடத்துவார். அதே போல என்னுடைய இயற்பியல் ஆசிரியை, எடுத்த பாடமும், விளக்கும் விதமும் எனக்கு அறிவியல் என்பது மனனம் செய்வதல்ல என்று கொஞ்சம் புரிய வைத்தது.

நான் இளநிலை படித்தது அரசினர் கல்லூரியான மதுரை மீனாட்சி கல்லூரியில், அங்கு நான் படித்தது இளநிலை இயற்பியல். இங்கும் மனப்பாடம் செய்து வந்த நான் படித்தது என்றால் அது எங்களுக்கு electronics வகுப்பு எடுத்த ராஜேஸ்வரி மேடம் பாடத்தில் தான். அவர்கள் எடுக்கும் விதமும் அவர்களின் நடை, உடை பாவனைகளை அதிகம் ரசித்து இருக்கிறேன்.

நான் முதுநிலை இயற்பியல் படித்தது மதுரை கல்லூரி, இங்கு கண்டிப்பு அதிகம், நான் மனப்பாடம் செய்து படிப்பது இங்கு கணிசமாக குறைந்திருந்தாலும் முழுவதும் மாற வில்லை என்று தான் கூற வேண்டும்.

உண்மையாக நான் புரிந்து படித்தது என்றால் அது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் உள்ள உயிரியல் தொழில் நுட்பத்துறையில் தான். படிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நான் இங்கே கண்டு கொண்டேன். மனப்பாடம் செய்வது என்பது அணுவளவும் உதவாது, மதிப்பெண் என்பது ஒரு மாயை, அறிவியல் என்பது அற்புதமானது என்று நான் உணர்ந்ததும் இங்கு தான்.வெளி நாடு/ மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களின் அறிமுகமும் எனக்கு இங்கு தான் கிடைத்தது.

கல்வி என்பது மனனம் செய்வது மட்டுமே என்று இருந்தால், வல்லாரை மாத்திரை விற்பவர்கள் மட்டுமே அதிக பயன் அடைய முடியும். மதிப்பெண் மட்டுமே அனைத்தையும் தரும் என்ற எண்ணம் இருக்கும் வரை, பிட் அடிப்பதும் அதிகரிக்கும், மனப்பாடம் செய்யும் மெசின்களை மட்டுமே நாம் உருவாக்க முடியும், கல்வி முன்னேற்றம் அடைய முடியாது என்பதே என் எண்ணம்.

16 comments:

padma said...

சரியாய் சொல்லிருகீங்க
நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மனப்பாடம் ரொம்ப செய்ததில்லை .செய்யுள்கள் தவிர .புரிந்தால் தான் படிப்பேன் .bright student என்ற பெயர் .அனால் மார்க்ஸ் இரண்டு மூன்று இடங்களில் தான் வரும் .என் கடம் அடிக்கும் தோழியர்கள் தான் முதல் மதிப்பெண்கள் .அதற்காக நான் வருத்தப்படவில்லை .
அனால் இப்போது என் பெண் செமயா கடம் அடிக்கறா .மார்க்ஸ் முக்கியம் அம்மா அப்படின்னு சொல்றா .நான் ஒன்னும் சொல்ல முடில .

Chitra said...

ஒவ்வொரு ஆசிரியையும் ஓவ்வொரு மாதிரி என்றாலும் அனைவரும் ஒன்று பட்ட ஒரு விஷயம் இருக்கிறதென்றால் "ஒழுங்கா மனப்பாடம் செய்யுங்கள்" என்பதே . ஆங்கிலத்தில் இருந்து கணிதம் வரை மனப்பாடம் செய்து இருக்கிறோம். அதுவும் என்னுடன் படித்த உமா என்ற ஒரு பெண் பயங்கரமாக நெட்டுரு செய்வாள், அதனால் பரீட்சை நேரங்களில் அவளுக்கு நடுவில் ஏதாவது மறந்து விட்டால் அவ்வளவு தான் மறுபடியும் ஞாபகம் வராது, உடனே "ஏ, இதுக்கு அப்புறம் என்னப்பா வரும்?" என்று குசுகுசு வென்று கேட்பாள். அடுத்த வார்த்தை என்னவென்று சொன்னவுடன் மளமள வென்று எழுதி முடித்து விடுவாள். "எங்கம்மா ஞாபக சக்திக்கு வல்லாரை மாத்திரை வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லுறாங்க "என்று பெருமையாக சொல்வாள். அப்படி மனனம் செய்து பத்தாவதில் நல்ல மதிப்பெண் பெற்றும் விட்டாள்.......ஆஆஆஆஆஆ ........ என்னதான் படிச்சு படிச்சு சொன்னாலும், இப்படி "படிச்சாதான்" மார்க் போடுவேன் என்று இருக்கிற சிஸ்டம் மாறாதா?

தமிழ் உதயம் said...

புரிந்து படித்தல் தாய் மொழி கல்வியில் மட்டுமே சாத்தியம். இல்லேன்னா மனப்பாடம் தான். இதுவும் இல்லேன்னா காப்பி தான்

வினவு said...

மனப்பாடக் கல்வி முறையின் அபத்தத்தையும், துறையில் உயிர்ப்புள்ள ஆசிரியர்கள் இருந்தால் அந்த ஈர்ப்பு மாணவர்களிடமும் வளரும் என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி!

சேட்டைக்காரன் said...

தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

சந்தனமுல்லை said...

நல்ல அலசல் முகுந்த் அம்மா! தங்கள் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட விதமும் நன்று! மனப்பாடம் செய்வதுதான் படிப்பது என்று நெடுநாட்கள் நம்பிக்கொண்டிருந்தேன்!

அமுதா கிருஷ்ணா said...

மனப்பாடம் செய்தால் தான் உண்டு, அறிவியல் படித்தால் மட்டும் தான் உருப்பட முடியும் என்ற எண்ணம் எப்ப தான் போகுமோ...

முகுந்த் அம்மா said...

@பத்மா
//சரியாய் சொல்லிருகீங்க
நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மனப்பாடம் ரொம்ப செய்ததில்லை .செய்யுள்கள் தவிர .புரிந்தால் தான் படிப்பேன் .bright student என்ற பெயர் .அனால் மார்க்ஸ் இரண்டு மூன்று இடங்களில் தான் வரும் .என் கடம் அடிக்கும் தோழியர்கள் தான் முதல் மதிப்பெண்கள் .அதற்காக நான் வருத்தப்படவில்லை //


இந்தியாவில mug up தான் ஒரே வலி, இல்லாட்டிமார்க் வரவே வராது. டிட்டோ புத்தகத்தில இருக்கிறமாதிரி ஒரு வரி விடாம எழுதணும் இல்ல. அது மனப்பாடம் பண்ணாட்டி எப்படி வரும்.

//இப்போது என் பெண் செமயா கடம் அடிக்கறா .மார்க்ஸ் முக்கியம் அம்மா அப்படின்னு சொல்றா .நான் ஒன்னும் சொல்ல முடில //

நல்ல வேலை பண்ணுறாங்க.

முகுந்த் அம்மா said...

@தமிழ் உதயம்
//புரிந்து படித்தல் தாய் மொழி கல்வியில் மட்டுமே சாத்தியம். இல்லேன்னா மனப்பாடம் தான். இதுவும் இல்லேன்னா காப்பி தான்//

ஆங்கிலத்தை முதலில் புரிந்து கொண்டால் பின்பு அதில் அறிவியல் படிப்பது கடினம் அன்று.

முகுந்த் அம்மா said...

@சித்ரா
//......ஆஆஆஆஆஆ ........ என்னதான் படிச்சு படிச்சு சொன்னாலும், இப்படி "படிச்சாதான்" மார்க் போடுவேன் என்று இருக்கிற சிஸ்டம் மாறாதா?//

same feeling , ஒரு நாள் மாறுமென்று நம்புவோம்.

தேங்க்ஸ் சித்ரா

முகுந்த் அம்மா said...

@வினவு அய்யா
//மனப்பாடக் கல்வி முறையின் அபத்தத்தையும், துறையில் உயிர்ப்புள்ள ஆசிரியர்கள் இருந்தால் அந்த ஈர்ப்பு மாணவர்களிடமும் வளரும் என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி//

இப்படி ஒரு தலைப்பை கொடுத்து சிந்திக்க தூண்டிய தங்களுக்கு முதற்கண் என் நன்றிகள்.

முகுந்த் அம்மா said...

@சேட்டைக்காரன்
//தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக!//

நன்றி! -சேட்டைக்காரன்

முகுந்த் அம்மா said...

@சந்தனமுல்லை

//நல்ல அலசல் முகுந்த் அம்மா! //

நன்றி சந்தன முல்லை.

//தங்கள் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட விதமும் நன்று! மனப்பாடம் செய்வதுதான் படிப்பது என்று நெடுநாட்கள் நம்பிக்கொண்டிருந்தேன்!//

நானும் அப்படி தான் நிறைய நாள் நினைத்து இருந்தேன். என்ன செய்வது இந்திய கல்வி அமைப்பின் சாபக்கேடு அது.

முகுந்த் அம்மா said...

@அமுதா கிருஷ்ணா

//மனப்பாடம் செய்தால் தான் உண்டு, அறிவியல் படித்தால் மட்டும் தான் உருப்பட முடியும் என்ற

எண்ணம் எப்ப தான் போகுமோ...//

சரியான ஆதங்கம். நானும் நிறைய நாள் இப்படி யோசித்ததுண்டு.

நன்றி

அமைதி அப்பா said...

நல்ல பதிவு முகுந்தம்மா,
இன்றுவரை எனக்கு ஒரு வாக்கியத்தை மனப்பாடம் செய்து அதை அப்படியே எழுதத் தெரியாது. எனது மகனுக்கும் அதே பிரச்சினைதான். எதோ என்னையும், உடன் இருப்பவர்கள் 'புத்திசாலி' என்கிறார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, ஏனெனெனில் படிக்கிற காலத்தில் நான் ஒன்றும் நிறைய மதிப்பெண் பெற்றது கிடையாது.

மதிப்பெண்ணின் முக்கியத்துவம் குறைந்து, திறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம், விரைவில் வருமென்று நம்புவோம்.

Avargal Unmaigal said...

நீங்களூம் கார்ப்ரேஷன் ஸ்கூலா? நம்ம கட்சிதான், பாருங்க நம்ம பொழைப்பை கடைசியில் அமெரிக்காவில் வந்து குப்பை கொட்டுறோம் ( நானும் படித்தது மதுரைக் கல்லூரி தான் வீணாப் போன எக்னாமிக்ஸ் தான் நான் எடுத்து படித்து.