Wednesday, May 12, 2010

ஆட்டோ ,டாக்ஸி, ரயில் மற்றும் விமானம்

இது பயணங்கள் பற்றிய என் அனுபவங்களின் கொசுவர்த்தி.

சிறுவயதில் டாக்ஸி , ரயில் அல்லது விமானம் என்றால் சினிமாவில் பார்ப்பதோடு சரி. வெளியில் செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ, ரிக்க்ஷா, டவுன் பஸ் அல்லது நடை மட்டுமே. எப்போது வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் என் அப்பா, பெரிய அண்ணன் அல்லது அம்மா கூட வருவார்கள். அதனால் தனியாக செல்வது என்றால் கொஞ்சம் எனக்கு பயமாக தான் இருக்கும்.

இப்படி பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட நான் முதன்தனியாக நான் சென்றது என்றால் அது B .Sc ., NCC கேம்ப்க்காக ஹைதராபாத் சென்றது தான். மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து பின் ஹைதராபாத்துக்கு சார்மினார் எக்ஸ்பிரஸ் பிடித்து செல்ல வேண்டும். எங்கள் கல்லூரியில் இருந்து என்னை தவிர மூன்று பெண்கள் தேர்ந்தெடுக்க பட்டு இருந்தாலும் மற்ற இருவரும் எனக்கு சீனியர்கள் வேறு துறை வேறு அதனால் யாரையும் தெரியாது. முன்பின் தனியாக சென்றறியாத நான் எப்படி சமாளிக்க போகிறோம் என்று தொடை நடுங்கி கொண்டிருந்தேன். ஆனாலும் கூட இருந்த instructor அவர்கள் எனக்கு தைரியம் தந்து கொண்டிருந்தார்.

என் அப்பா வேறு "பொம்பள பிள்ளைய இவ்வளவு தூரம் தனியா அனுப்ப வேணான்னு சொன்ன கேட்குறியா?" என்று என் அம்மாவிடம் கடுப்படித்து கொண்டிருந்தார். அதனால் நான், பயந்தது போல் காட்டினால் எங்கே பயணம் தடைபட்டு விடுமோ என்று தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டேன். ஒரு வழியாக வைகை எக்ஸ்பிரஸ் ஏறிய பிறகு மெதுவாக பயம் மறுபடியும் பிடித்து கொள்ள தொடங்கியது (எவ்வளவு நேரம் தான் தைரியமா இருக்குற மாதிரி நடிக்கிறது?), கடவுளே கடவுளே என்று உலகத்தில் உள்ள எல்லா கடவுளையும் சாதி மத வேறுபாடின்றி வேண்டி கொண்டிருந்தேன். உள்ளூர பயம் இருந்தாலும் முதல் ரயில் பயணம் ரசிக்க வைத்தது.

எப்படியோ, ஒருவழியாக சென்னை எக்மோர் வந்து அடைந்து விட்டோம். பிறகு டாக்ஸி எடுத்து கொண்டு சென்ட்ரல் செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எங்கள் கல்லூரியில் இருந்து வந்த மூன்று பெண்களும் எங்கள் instructor ம் சேர்ந்து ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து "சென்ட்ரல் போகணும்" என்று சொல்ல அந்த டாக்ஸி காரர் "ஏறுங்க" என்று சொல்ல ஏறி உட்கார்ந்தோம். பிறகு டாக்ஸி சென்றது சென்றது சென்றுகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சென்று இருக்கும் பிறகு சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தது. டாக்ஸிக்கு பணம் சுமார் 300 என்று நினைக்கிறேன் ,ஆனது. நாங்கள் பிரித்து கொடுத்தோம். பிறகு சார்மினார் எக்ஸ்பிரஸ் வந்தது ஏறி உட்கார்ந்தோம், எங்களை போலவே கேம்புக்கு வந்தவர்களும் அந்த ட்ரெயினில் வர பயணம் கொஞ்சம் போரடிக்காமல் சென்றது.

பேச்சு வாக்கில் சென்னையில் இருந்து வந்திருந்த மாணவர்களிடம் டாக்ஸி பற்றி சொன்ன போது அவர்கள் சொன்னது "அடப்பாவிங்களா, உங்கள நல்ல ஏமாத்தி இருக்கான் அந்த டாக்ஸி காரன்" என்று பதில் வந்தது . தொன்னூறுகளில் எக்மோர் இல் இருந்து சென்ட்ரல் செல்ல 30 ரூபாய் கொடுத்தாலே அதிகம் என்று பிறகு தான் கேள்வி பட்டேன். பிறகு நாட்கள் செல்ல செல்ல தனியாக செல்வது என்பது பயமில்லாமல் போனாலும் டாக்ஸி என்றால் மட்டும் கொஞ்சம் நடுக்கம் வரும்.

மறுபடியும் ஒரு நாள் டாக்ஸி பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாததானது அது முதன் முதலில் இந்தியாவை விட்டு வெளிநாடு செல்ல நேர்ந்தபோது நடந்தது. சிறுவயதில் விமானம் மேலே பறக்கிறதென்றால் கீழிருந்து கைகட்டுவோம், அது ஒரு சந்தோசம். ஆனால், தனியாக லண்டனுக்கு விமான பயணம், அதுவும் சென்னையில் இருந்து இல்லாமல் பம்பாயில் இருந்து பயணம். சென்னையில் இருந்து பாம்பே வந்து பிறகு எமிரேட்ஸ் விமானம் மூலம் லண்டன் heathrow ஏர்போர்ட் செல்லவேண்டும். அதுவும் லண்டன் சென்ற பிறகு அங்கிருந்து Norwich செல்ல வேண்டும். அது இரண்டரை மணிநேர ரயில் பயணம்.

எனக்கு லண்டனில் தெரிந்தவர் என்று யாரும் இல்லை. என்னுடைய சீனியர் அக்கா தன்னுடைய நண்பர் என்று ஒருவர் இருக்கிறார் அவரை வந்து உன்னை அழைத்து போக சொல்கிறேன் அவர் உன்னை Norwich ரயில் ஏற்றி விடுவார் என்று சொல்லிவிட்டார். யார் அந்த நண்பர்? எப்படி இருப்பார்? யாரும் வரா விட்டால் என்ன செய்வது?. எனக்கோ உள்ளூர கிலி பிடித்து கொண்டது.

தனியாக ரயில் பயணம் பழகியதால் பாம்பே வந்தாயிற்று, அங்கிருந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின், கடவுளே கடவுளே என்று வழக்கம் போல கடவுளை கும்பிட ஆரம்பித்து விட்டேன். விமானம் துபாயில் தரை இறங்கியது, இறங்கியவுடன் துபாய் விமான நிலையத்தை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன். எங்கும் மினுமினுக்கும் வண்ண விளக்குகள் ஈச்சமரம் போல வடிவமைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தானது.

பின்னர் லண்டன் விமான நிலைய கேட் எது வென்று பார்த்து விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் ஒரு தைரியம் வந்தது, ஏர்போர்ட் இல் கூப்பிட வருபவர் இந்தியர் தான், அதனால் சுலபமாக அடையாளம் காணலாம் என்று நினைத்து இருந்தேன். லண்டன் heathrow விமான நிலையம் வந்த பிறகு தான் தெரிந்தது என்னை போல பல இந்தியர்கள் பயணம் செய்திருந்தார்கள், அவர்களை அழைத்து செல்ல பலரும் காத்து கொண்டிருந்தனர்.

ஒன்றும் புரியாமல் ஓரிடத்தில் நின்று முழி முழி என்று முழித்து கொண்டு இருக்கும் போது ஒருவர் என்னிடம் வந்து "Are you ....?" என்று கேட்டார். நான் ஆம் என்று தலை ஆட்டியவுடன், "I am Karthikeyan, your senior's friend" என்று சொன்னார். எனக்கு ஒரு வழியாக அப்போது தான் உயிர் வந்தது (அப்பாடா ஒரு வழியா ரங்கமணியை அறிமுகப்படுத்தியாச்சு :))

நான் சென்று லண்டன் சேர்ந்தது சனிக்கிழமை அதிகாலை எட்டு மணி , அங்கிருந்து Norwich செல்ல இரண்டு -இரண்டரை மணி நேரம் ஆகும். அந்த நண்பர் "எனக்கு இன்று வேறு வேலை இருக்கிறது உங்க சீனியர் சொன்னாங்கன்னு அவசரமா பாதியில விட்டுட்டு வந்தேன், இல்லாட்டி நானே உங்கள கொண்டு விட்டுடுவேன், தப்பா எடுத்துக்காதீங்க" என்று சொல்லி என்னை ரயில் ஏற்றி விட்டார்.

எனக்கு தங்க ஏற்பாடு செய்திருந்த இடத்திடம் போனில் பேசிய பின்னர் அந்த நண்பர் "நீங்க அந்த இடத்துக்கு காலையில பதினோரு மணிக்குள்ள போகணும்னு சொல்லுறாங்க, ட்ரெயின் அதுக்குள்ளே போயிடும், எந்த இடம்னு தேடி அலையாம இருக்க ஒரு டாக்ஸி எடுத்துட்டு போயிடுங்க, worst கம் worst பக்கத்தில ஒரு யூத் ஹாஸ்டல் ஆவது கட்டாயம் இருக்கும் அதுக்கு போயிடுங்க" என்று சொன்னார். எனக்கு டாக்ஸி ன்னா பயம்னு அவர்கிட்ட எப்படி போய் சொல்ல.
அதை தவிர யூத் ஹாஸ்டல் அப்படி என்றால் என்னவென்று கூட தெரியாது. சரி என்று தலை ஆட்டி வைத்தேன்.

ரயில் 30 நிமிடம் தாமதமாக வர, நான் Norwich சென்று சேரும் போது மணி பதினொன்றை கடந்திருந்தது. இருந்தாலும் இந்திய ஞாபகத்தில் திறந்து தான் இருப்பாங்க என்று ஒரு குருட்டு நம்பிக்கை. அருகில் இருந்த டாக்ஸி காரரிடம் சென்று இந்த அட்ரஸ் செல்லவேண்டும் என்று அட்ரஸ் காட்டினேன். அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு "Its a walkable distance, you can go by yourself" என்று சொன்னார். நானோ நண்பர் சொன்ன ஞாபகத்தில், "ITs Ok , I have luggages", என்று சொல்லி ஏறி அமர்ந்தேன். சில நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்தபோது எனக்கு ஒரே அதிர்ச்சி, காரணம் அந்த இடம் பூட்டி இருந்தது. என் நண்பர் சொன்ன ஞாபகத்தில் "Is there a Youth hostel nearby?" என்று கேட்டேன். அவர் "Yes there is one, I will take you there". என்று சொல்லி அழைத்து சென்றார்.

இன்றும் நான் அந்த டாக்ஸி-டிரைவர் ஐ நினைத்து பார்ப்பதுண்டு. இந்தியாவில் இப்படி ஒரு நிலை வந்து இருந்தால், எவ்வளவு தூரம் தனியாக வந்த பெண்ணை டாக்ஸி டிரைவர் கொண்டு சேர்த்து இருப்பார். நினைக்கவே பயமாக இருக்கிறது.

4 comments:

Ananya Mahadevan said...

//அதை தவிர யூத் ஹாஸ்டல் அப்படி என்றால் என்னவென்று கூட தெரியா// so cute!! எத்தனை பேர் ஒத்துப்பாங்க இந்த மாதிரி? ரொம்ப ரசிச்சேன்?

அமுதா கிருஷ்ணா said...

நானும் பார்த்து விட்டேன் ரொம்ப பயப்படுகின்றவர்கள் தான் இப்படி அதிகம் பிரயாணம் செய்ய நேரிடுகிறது. ஆனால், தைரியம் இப்படி தனியே போக போக தான் நம்மிடையே வரும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு உங்க பயணமும்
சாரோட அறிமுகமும்..:)
இருந்தாலும் நம்ம ஊரு படம் மாதிரி இல்ல ஹீரோ அறிமுகம்..

ஹுஸைனம்மா said...

//எனக்கு ஒரு வழியாக அப்போது தான் உயிர் வந்தது //

சினிமா மாதிரி இருக்கு ஹீரோ எண்ட்ரி!! ;-))

இந்தியாவிலும் இப்படி நல்ல மனங்கள் உண்டு. எனக்கும் இதை விடத் திகிலான அனுபவம் உண்டு!!