Thursday, September 30, 2010

பிறந்த நாள் (கொ/தி)ண்டாட்டம்



ஊரிலேயே முகுந்துக்கு முதல் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியாயிற்று. இருப்பினும் இங்கு வந்தவுடன் "என்ன பையன் பர்த்டே கொண்டாடலையா ?" அல்லது "என்ன உங்க பையன் பர்த்டே க்கு ஏன் எங்கள கூப்பிடல?" என்று பார்க்கும் அனைவரும் கேட்கிற கேள்விக்கு பயந்து சரி ஒரு பார்ட்டி வச்சிருவோம் என்று நானும் ரங்கமணியம் முடிவு செய்தோம்.

சரி எத்தனை பேரை கூப்பிடனும், யாரையும் விட முடியாது. அவரோட, என்னோட ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க, பார்த்தவங்க, அப்புறம் தமிழ் நண்பர்கள், பிறகு வேறு மாநில இந்தியன் நண்பர்கள், அப்புறம் அமெரிக்கன் அல்லது வேறு நாட்டு நண்பர்கள், அப்புறம் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று குடியிருப்பில் உள்ள குடும்பங்கள் என்று சுமார் லிஸ்ட் அம்பது குடும்பத்தை தொட்டது.

சரி பார்ட்டின்னா முதல்ல ஒரு பார்ட்டி ஹால் பார்க்கணுமே, இப்போ எல்லாம் பார்ட்டி ஹால் எல்லாம் ரெண்டு மணிநேர வாடகை குறைஞ்சது அம்பது முதல் நூறு டாலர். அதுவும் அம்பது குடும்பம் வரணும்னா அதுக்கு தகுந்த மாதிரி பெரிய ஹால் ஆகா இருக்கணும். அதுக்கு வாடகை இன்னும் ஜாஸ்தி ஆகும். பேசாமா ஒரு பார்க் ல இருக்கிற recreation area வில வச்சிரலாம்னு நான் ஐடியா சொல்ல ஒரு மாதிரி என்னை பார்த்தார் ரங்கமணி. "போயும் போயும் ஒரே பையன் பர்த்டே ய எவனாவது பார்க் ல கொண்டாடுவானா, என்னை பத்தி என்ன நினைப்பாங்க" என்று அவர் சொல்லவும் சரி என்று விட்டு விட்டேன்.

அடுத்தது சாப்பாடு. அம்பது குடும்பம்ன்னா கணவன், மனைவி குழந்தைகளோட சேர்த்து எப்படியும் 150 பேர் ஆனது. "அவ்வளவு பேருக்கும் வீட்டில குழந்தைய வச்சுக்கிட்டு உன்னால தனியா சமைக்க முடியாது, அதனால வெளியில ஆர்டர் பண்ணிடலாம்" என்று ரங்கமணி சொல்ல சரி என்று சொல்லி விட்டேன். சமையல் ஆர்டர் விலை சுமார் ஐநூறு டாலரை தாண்டியது.

நாங்கள் யோசித்த இந்த முன் ஏற்பாடுகள் எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆனது நாங்கள் கேள்விப்பட்ட அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடும் விதம். பொதுவாக கீழ்க்கண்ட அனைத்தும் ஒரு பிறந்த நாளில் இருக்கின்றன.

  1. முதலில் பிறந்த நாள் என்றால் ஒரு தீம் எடுத்து கொள்கிறார்கள். உதாரணமாக ஆண் குழந்தை என்றால் தாமஸ் ட்ரைன், பாப் தி பில்டர்போன்றவை. பெண்குழந்தை என்றால் டோரா, டின்கர் பெல் போன்ற சில.
  2. ஒரு தீம் எடுத்து கொண்ட பிறகு, அதனை சார்ந்தே அனைத்து அலங்காரங்களும், பிறந்த நாள் கேக்கும் ஆர்டர் செய்ய படுகிறது. உதாரணமாக பிறந்தநாள் தோரணைகள் முதல் குடிக்க கொடுக்கும் டம்ளர், பேப்பர் டவல் வரை அந்த தீம் உள்ள படங்கள் இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள். அந்த தீம் உள்ள கேக் ஆர்டர் செய்ய படுகிறது.
  3. பார்டிக்கு வரும் குழந்தைகளை மகிழ்விக்க என்று பல விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்கிறார்கள் அல்லது ஒரு ஜோக்கேரை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த ஜோக்கர் குறிப்பிட்ட தீம் உள்ள உடை அணிந்து வந்து குழந்தைகளுக்குவிளையாட்டு காட்டுகிறார்.
  4. பிறகு பார்ட்டிக்கு வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் return gift அல்லது திரும்ப பரிசு கொடுக்க வேண்டும். கொடுக்கா விட்டால் அந்த குழந்தைகள் "where's our gift" என்று உங்களிடம் வந்து கேட்டே விடுகின்றன.
  5. பிறகு return கிபிட் ஐ அழகாக pack செய்து உடன் ஒவ்வொரு குழந்தையின் பெயருடன் அச்சடித்த thank you கார்டு பிரிண்ட் செய்து gift bag இல் வைத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கிறார்கள்.
இவை எல்லாம் சேர்த்து கூட்டி கழித்து பார்த்தால் பட்ஜெட் சுமார் ஆயிரம் டாலரை தாண்டும் போல இருந்தது.

எப்படியும் முகுந்துக்கு இப்போது விவரம் தெரிய போவதில்லை. ”ஏன் எனக்கு இன்னொரு பிறந்த நாள் கொண்டாடவில்லை” என்றும் அவன் கேட்கப்போவதில்லை. அதனால் அடுத்தவர்களுக்காக இப்படி ஒன்று அவசியமா என முடிவு செய்தோம். பேசாமல் ஒரு நூறு டாலரை cancer ஆல் அவதிப்படும் குழந்தைகளுக்கு மிக குறைந்த செலவில் மருத்துவம் அளிக்கும் St jude children's hospital க்கு அனுப்பி விட்டு, அடுத்த வருடம் பார்க்கலாம் என நினைத்து நிம்மதியாக இருந்துவிட்டோம்.

Thursday, September 23, 2010

பிங்க் ரிப்பனும் , BRC1 & BRC2 ம்

அக்டோபர் 1st என்ன விசேஷம்?

எந்திரன் ரிலீஸ் அப்படின்னு சொல்லுறவங்களுக்கு (ஹி, ஹி, ஹி, இந்த விளையாட்டுக்கு நான் வரல, கொஞ்சம் சீரியஸ் ஆ யோசிக்கலாம்)

அக்டோபர் ஒன்னு உலக பிங்க் ரிப்பன் டே, பிங்க் ரிப்பன் மார்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை குறிக்கிறது.

கான்செர் ன்னா என்னங்க?

Unconditional growth, அதாவது எல்லை இல்லா வளர்ச்சி. எதுக்கும் ஒரு எல்லாம் இருக்கணும் அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க, அது ஒவ்வொரு செல்லுக்கும் கூட பொருந்தும். நம்ம உடம்பில இருக்கிற ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு கன்ட்ரோல் ஜீன் இருக்கு. அந்த ஜீன் ஒவ்வொரு செல்லையும் தேவையானப்போ "வளருன்னு" சிக்னல் கொடுக்கும், அதே போல தேவை இல்லாதப்போ "போதும் நிறுத்து" அப்படின்னு சிக்னல் கொடுக்கும். ஆனா இந்த கன்ட்ரோல் ஜீனுக்குள் மாற்றம் (Mutation) ஏற்பட்டுடுச்சுன்னா அந்த ஜீன் தன்னோட கன்ட்ரோல் பண்ணுற திறமையை இழக்குது. பிறகு ஒவ்வொரு செல்லும் கன்ட்ரோல் இல்லாம வளரும். இதுதான் ஒவ்வொரு கான்செர்க்கும் அடிப்படை.


சரி, பிங்க் ரிப்பன் Breast cancer awareness, ஆனா BRC1 & BRC2 ன்னா என்ன?

BRC1 & BRC2 ங்குறது மனுஷ உடம்புல இருக்கிற மார்பக செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ரெண்டு ஜீன். இந்த ரெண்டு ஜீன்லையும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுடுச்சுன்னா, உடனே மார்பக புற்று நோய் வந்துடும்ன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க.

சரி, எப்படி Breast கான்செர் கண்டுபிடிப்பது?

பெண்கள் வாரம் ஒரு முறை பத்து நிமிடம் எடுத்துகோங்க. ஒரு தனி அறையில் சென்று கீழ்க்கண்ட படத்தில் சொல்லுவது போல மார்பகத்தை நன்கு அமுக்கி ஏதேனும் கட்டி போன்று தென்படுகிறதா என்று பார்க்கவும். ஏதேனும் சிறிய கட்டி போன்று இருப்பதாக சந்தேகம் வந்தால், இதே டெஸ்டை திரும்ப இரண்டு நாட்கள் கழித்து செய்து பார்க்கவும். மறுபடியும் இருப்பது போல அறிந்தால், உடனே மீமொக்ராம் (Mammogram) மார்பு புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளவும்.





நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஆரம்ப நிலை மார்பு புற்றுநோயை முழுதும் குணப்படுத்த முடியும்.

மார்பு புற்றுநோய்யை தடுக்க என்ன செய்யலாம் ?

  1. குண்டாகாமல், ஆரோக்கியமான எடையுடன் இருப்பது.
  2. நிறைய காய்கறி, பழங்கள் உண்பது, இறைச்சி உண்பதை முடிந்த அளவுகுறைத்து கொள்வது
  3. முடிந்தவரை உடற்பயிற்சி செய்வது
  4. அதிக கொழுப்பு, மாவு பொருட்களை உண்ணாமல் இருப்பது
இவை எல்லாம் அனைவருக்கும் தெரிந்த வழிகள் தான் ஆனாலும் யாரும் பின் பற்றுவது இல்லை.

விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன செய்யலாம்?

பெண் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அம்மா, அக்கா, தங்கை, மகள், தோழியர் அனைவருக்கும் மார்பு புற்றுநோய் பற்றி எடுத்து சொல்லுங்கள். முடிந்தால் விழிப்புணர்வுக்காக கீழ்க்கண்ட பிங்க் ரிப்பன்ஐ உங்கள் தளத்தில் இணையுங்கள்.



மேலும் இதனை பற்றி அறிந்து கொள்ள http://www.pinkribbon.org/ என்ற தளத்தை பாருங்கள்.

Tuesday, September 21, 2010

ஒரு வருடத்தில் 524 recipes சமைப்பது எப்படி?

வேலை கழுத்தறுக்கிறது, வாழ்க்கை போர் அடிக்கிறது, சுவாரசியப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தேன். What about trying a new recipe everyday? Isn't it fun?

"என்ன ரேசிபே செய்ய ஆரம்பிக்கலாம்?" யோசித்த போது பிரெஞ்சு ரேசிபே செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். (Why French?, அது எப்படின்னே தெரியல, பிரெஞ்சு பொண்ணுங்க மட்டும் என்ன சாப்பிட்டாலும், எப்படி தான் ரவுண்டு கட்டி சாப்பிட்டாலுமே ஒல்லியாவே இருக்குதுங்க? அதான் ஹி, ஹி, ஹி)

முதல் வேலையா, ஒரு பிரெஞ்சு சமையல் புத்தகம் வாங்கினேன், அது Mastering the Art of French Cooking, by Julia Child

அடுத்து ஒரு வலைபூ ஆரம்பித்தேன், அதில் இன்று என்ன ரேசிபே செய்ய போகிறேன் என்று எழுதினேன்.

சும்மா, one recipe one day னா போர் அடிக்குமே , ஏதாவது சுவாரஸ்யம் கொண்டு வரணுமே? என்ன செய்யலாம்?

ஓகே,
  • ஒரு வருசத்துக்குள்ள அந்த சமையல் புத்தகத்தில இருக்கிற எல்லா ரேசிபேயும் சமைச்சு முடிச்சுடனும்
  • ஒவ்வொன்னையும் சமைச்சு முடிச்சப்புறம் வலைபூவில சொல்லணும்,
  • கவுன்ட் டவுன் வச்சுக்கணும்,
இது எப்படி இருக்கு? சுவாரஸ்யமா இருக்கு இல்ல?

இதென்ன சின்னபுள்ள தனமா இருக்கு, இதெல்லாம் எப்படி சாத்தியம்னு நினைக்கிறவங்க,

Julie & Julia படத்த பாருங்க

Monday, September 20, 2010

திரைப்படமும், வாசிப்பனுபவமும்


ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் வரும் கதை மாந்தர்கள் பற்றிய நமது கற்பனையும், கதை நடக்கும் சூழ்நிலைகள் பற்றிய நமது அவதானிப்பும், அந்த புத்தகங்கள் திரைப்படங்களாக எடுக்கப்படும் போது சில வேளைகளில் பெருத்த ஏமாற்றம் தருவது உண்டு. திரை படங்களாக ஒரு புத்தகம் மாறும் போது கதை சொல்லியின் கோணத்தில் இருந்து மாறுபட்டு ஒரு இயக்குனரின் கோணத்தில் மாறுவதே இதற்க்கு காரணமாக இருக்கலாம்.

இப்படி நிறைய எனக்கு பிடித்த புத்தகங்கள் திரைப்படங்களாக மாறும் போது ஏமாற்றம் தருவது உண்டு. ஆனால் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள், படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விட திரைபடமாக மாறும் போது ஏற்படும் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்படி எனக்குள் தாக்கம் ஏற்படுத்திய ஒரு புத்தகம்/திரைப்படம் Khaled Hosseini அவர்கள் எழுதி Marc Forster அவர்கள் இயக்கிய The Kite Runner.

2000 ஆம் ஆண்டு கதைமாந்தர் அமிரின் நினைவுகளாக படம் ஆரம்பிக்கிறது. ஆப்கானிஸ்தானில் 1978 இல் சோவியத் படைகள் நுழைவதற்க்கு ஒரு சில மாதங்களுக்கு முந்தய அமைதியான, அழகான காபூல் நகரம் அது. குழந்தைகள் குதூகலத்துடன் பட்டம் விட்டு கொண்டிருக்கின்றனர். அதில் உயர்ந்த குலத்தை சேர்ந்த பணக்கார அமிரும், தாழ்ந்த குலத்தை சேர்ந்த அமிர் வீட்டில் வேலை செய்யும் ஹாசனும் அடுத்து நடைபெரும் பட்டப்போட்டியில் எப்படி ஜெயிப்பது என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.

பட்டபோட்டியின் விதிகளின் படி, பட்டத்தை ஒருவர் அறுத்த பிறகு தன் பட்டத்துடன் அறுந்த பட்டத்தையும் ஓடி சென்று எடுக்க வேண்டும், அப்படி செய்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்க படுகிறார். அமீர் ஒவ்வொரு பட்டத்தை அறுக்கும் போதும் ஹாசன், அமீருக்கு அறுந்த பட்டத்தை எடுத்து வரும் Kite Runner ஆக இருக்கிறான்.

தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனாக வீட்டு வேலைகாரனாக ஹாசன் இருந்தாலும் அவன் மீது தன் தந்தைக்கு அதிக பாசம் இருப்பதாக அமீர் எப்போதும் பொறமை படுகிறான். எப்படியும் வரும் பட்டப்போட்டியில் வெற்றி பெற்று தந்தையிடம் நல்ல பேர் பெறவேண்டும் என்று அமீர் நினைக்கிறான்.

பட்டபோட்டி நாள் வருகிறது. ஒவ்வொரு பட்டமாக அமீர் அறுக்க அமிரின் தந்தை குதூகளிக்கிறார். கடைசி பட்டத்தையும் அறுத்த பிறகு ஹாசன் அறுந்த அந்த பட்டத்தை எடுக்க ஓடுகிறான், அவனை தேடி அமிரும் பின் செல்கிறான். அப்போது உயர்ந்த இனத்தை சேர்ந்த சில சிறுவர்கள் ஹாசனை சூழ்ந்து கொண்டு பட்டத்தை கொடுத்து விடும்படி மிரட்டுகிறார்கள். "இது அமீர் உடையது கொடுக்க முடியாது" என்று ஹாசன் மறுக்க அவனை பாலியல் துன்பத்துக்கு ஆட்படுத்து கின்றனர். இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அமீருக்கு அதிலிருந்து குற்றஉணர்ச்சி மனதில் ஏற்பட அதிலிருந்து தப்பிக்க ஹாசன் குடும்பத்தின் மீது திருட்டு பட்டம் காட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறான்.

சில மாதங்களில் சோவித் படைகள் காபூலில் நுழைய உயிருக்கு பயந்து அமிரும் அவன் தந்தையும் பாகிஸ்தானுக்கு செல்கிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்க வருகின்றனர். அமீர் வளர்ந்து திருமணம் செய்யும் வரை அவன் தந்தை அவனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். அமீர் ஒவ்வொரு முறை வெற்றி பெரும் போதும் "ஹாசன் இப்போ இருந்த நல்ல இருக்கும்" என்று கூறுகிறார்.

அமிரின் தந்தை இறந்த பிறகு அவன் தந்தையின் நண்பர் மூலம் ஹாசன் தன்னுடைய சகோதரன் என்றும், தன் வீட்டு வேலைகாரிக்கும் தந்தைக்கும் பிறந்தவன் என்றும் அமீர் அறிகிறான். மேலும் ஹாசன் இப்போது உயிரோடு இல்லை என்பதும் தாலிபான் படைகளால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டான் என்பதும் தெரிய வரும் போது அமீர் மனம் வருந்துகிறான். அவனுக்கு மேலும் துன்பம் சேர்க்கும் வண்ணம் ஹாசனின் மகன் சொஹ்ராப் இப்போது அனாதையாக யாருமில்லாமல் தாலிபான்கள் வசம் உள்ளான் என்றும் அறிகிறான்.

சொஹ்ரப்பை மீட்டு வர காபூல் கிளம்புகிறான், அவன் பார்த்த அழகான அமைதியான காபூல் நகர் அழிந்து விட்டு இருக்கிறது. ஒரு மைதானத்தில் ஒரு பெண்ணை கல் எறிந்து கொள்வது, நடு ரோட்டில் சுட்டு கொள்வது, தாடி இல்லாதவர்களை சுடுவது, நினைத்த போது யாரையும் கடத்தி சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது போன்ற தாலிபான்கள் ஆதிக்கம் அவனுக்கு அதிர்ச்சி தருகிறது.

சொஹ்ராப் ஒரு பெண்ணைப்போல உடைகளை அணிந்து நடனம் ஆடுவதை பார்கிறான், தாலிபான்கள் வசம் இருந்த சொஹ்ரப்பை பலத்த காயங்களுடன் ஒரு வழியாக மீட்டு வீடு திரும்புகிறான்.

புத்தகமாக இதனை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை விட அதனை படமாக பார்க்கும் போது மனதை நெகிழ செய்தது இந்த படம்.

சிலம்பாட்டம்

சிறு வயதில் நான் பார்த்த எல்லா எம்ஜியார் படங்களிலும் ஒரு சிலம்பாட்டம் வரும். லாவகமாக கையில் சிலம்பை எடுத்து சுத்தற மாதிரி தெரியும். அட எப்படி வேகமாக சுத்துறாங்க பாரு என்று வியந்திருக்கிறேன் (ஆனால் நெறய டுப்பு நடிகர்கள் தான் உண்மையில் சிலம்பம் சுற்றினார்கள் என்பது எனக்கு லேட் ஆகவே புரிந்தது).

திரையில் பார்க்கிற விஷயத்தை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு. அப்படி ஒரு அருமையான சிலம்பம் சுற்றலை நேற்று இங்கு நடந்த சார்லோட் தமிழ் சங்க விழாவில் பார்க்க முடிந்தது. தெற்கு கரோலினாவை சேர்ந்த பனைநிலம் தமிழ்ச் சங்க சிலம்பம் குழுவினர் இதனை செய்தனர்.

தாரை, தப்பட்டை முழங்க சிலம்பம் சுற்றலை காணும் போது, நாம் இருப்பது அமெரிக்காவில் அல்ல, இந்தியாவில் தான், என்னும் உணர்வு அனைவருக்கும் வந்திருக்கும்.

என்னுடைய கைத்தொலைபேசியில் இருந்து எடுத்த சில சிலம்பஆட்டம் காட்சிகள் இங்கே.








மேலும் காட்சிகள் மற்றும் செய்திகளுக்கு பழைமை பேசி அய்யா அவர்களுடைய இந்த இடுகையை பார்க்கவும்.

Monday, September 13, 2010

புற்றுநோய்

உலகில் அதிகம் பேரை கொல்லும் ஆட்கொல்லி நோய் எது?

இதற்க்கு நீங்கள் AIDS, என்று பதில் அளித்து இருந்தால், உங்கள் விடை தவறு.

உண்மையில் உலகை ஆட்டுவிக்கும் உயிர்கொல்லி நோய் புற்றுநோய்.

2008 ஆம் வருட புள்ளியியல் படி AIDS ஆல் இறந்தவர்கள் இருப்பது
லட்சம் பேர். ஆனால் புற்றுநோயால் இறந்தவர்கள் இரண்டு கோடி பேர். இது உலகம் முழுதும் எடுக்கப்பட்ட ஒரு வருட கணக்கு மட்டுமே. அதிலும் ஆசியா கண்டத்தில் தான் புற்று நோயாளிகள் அதிகம் என்று அந்த புள்ளியியல் தெரிவிக்கிறது .

தலை முதல் கால் வரை கிட்டதட்ட உடலின் அனைத்து உறுப்புகளும் புற்று நோய்க்கு இலக்கானாலும் ஆண்களும் பெண்களும் அதிகம் இறப்பது நுரையீரல் புற்று நோயால் தான். நுரையீரல் புற்று நோயின் முதல் காரனி புகையிலை. புகைப்பவர்களை விட அதனை சுவாசிப்பவர்கள் அதிகம் பாதிக்கபடுகின்றனர்.

பெண்களை அதிகம் தாக்கும் மற்ற புற்று நோய்கள், மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய். இதனை தடுக்க நாற்பது வயதிற்க்கு மேல் ஒவ்வொரு பெண்ணும் வருடத்திற்க்கு ஒரு முறை மார்பக மற்றும் கருப்பை சோதனை செய்து கொள்ளுதல் அவசியம்.

அதே போல ஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோய், Prostate cancer எனப்படும் முன்னிலை சுரப்பி நோய். வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது புற்று நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய உதவும். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பெரும்பாலான புற்று நோயை குணப்படுத்த முடியும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடத்திற்க்கும் மூன்று பேருக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்படுகிறார்கள்.

கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அனைத்து பொது தொலைகாட்சிகளும் இணைந்து Stand up to Cancer என்னும் புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பின. அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புற்றுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தை முன் வைத்தனர். அதில் சொல்லப்பட்ட விவரங்களே மேலே நான் குறிப்பிட்டது.

அந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் புற்றுநோய் ஆராய்ச்சி குழுக்கள் பல கலந்துகொண்டன. அதில் பல இந்திய முகங்களை காண முடிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இந்தியாவிலும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இதே போன்றதொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி மக்களுக்கு புற்று நோயை பற்றி எடுத்து சொல்வது அவசியம் என்பது என் கருத்து, செய்வார்களா?

Monday, September 6, 2010

பிறகு சந்திப்போம் !

வேலை காரணமாக வேறு ஊருக்கு செல்ல இருப்பதால் தமிழ் வலைப்பூவில் இருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன்.

நேரம் கிடைக்கும் போது வர முயற்சிக்கிறேன்.

இதுவரை ஆதரவு தந்ததிற்கு நன்றி.

Friday, September 3, 2010

குழந்தைகளுக்கு டைம் அவுட் கொடுப்பது நல்லதா?



குழந்தை அடம் பிடிக்கிறது அல்லது அடுத்தவர்களை அடித்தல்/உதைத்தல்/கடித்தல்/விழுந்து அழுதல் போன்றவற்றை செய்கிறது என்ன செய்யலாம் என்று குழந்தைகள் மருத்துவரிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் டெக்னிக்

"டைம் அவுட் கொடுத்து பாருங்கள்" என்று.

டைம் அவுட் என்பது அழும்/பிடிவாதம் செய்யும் குழந்தைகளை தனி இடத்தில் அல்லது ஒரு மூலையில் உக்கார செய்து அழுவதை நிறுத்தும் வரை யாரும் பேசாமல்/ கண்டு கொள்ளாமல் இருப்பது. இப்படி செய்யும் போது குழந்தை தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அமைதி அடைந்து, பெற்றோரிடம் தனக்கு என்ன வேண்டும்/தேவை என்பதை சொல்லும் என்று இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். இது போல செய்வது குழந்தையின் தன்னம்பிக்கை வளர்க்கும் கட்டுப்பாட்டோடு வளர உதவும் என்றும் சொல்கிறார்கள்.

என்னுடைய இந்தியா பயணத்தில் அநேகமாக எல்லா வீடுகளிலும் இருக்கும் சிறு குழந்தைகள் பிடிவாதம் பிடித்து அழுத போதும் பிறரை அடிக்கும் போதும் நான் கேள்வி பட்ட இந்த டெக்னிக் ஐ சொன்னேன்.

அதற்க்கு அவர்கள் பதில் "அதெல்லாம் ஒத்து வராது இங்க, குழந்த பயந்து போயிடும்" என்று சொல்கிறார்கள். குழந்தை கேட்பதை கொடுத்து அந்த நேரம் சமாதனப்படுத்துகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தை திரும்ப திரும்ப அதே செய்து கவனத்தை ஈர்க்கிறது. சில பெற்றோர் குழந்தையை அடிக்கிறார்கள். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் அதனை மறந்து விடுகிறார்கள்.

இதனை தடுக்க என்ன வழி? எப்படி சமாதனப்படுத்துவது? டைம் அவுட் கொடுப்பது நல்லதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?