Sunday, December 7, 2014

வளர்சிதைமாற்றம்



ஒவ்வொரு வருட முடிவின் போதும் இந்த வருடம் என்ன செய்தோம், எப்படி இருந்தது, நல்லவை கெட்டவை என்ன என்ன என்று அனைவரும் அசை போடுவதுண்டு. இது என்னுடைய இந்த வருட வளர்சிதைமாற்றங்கள் பற்றிய சுயசொறிதல் பதிவு.

இந்த வருடம் நிறைய பாடங்களை எனக்கு கற்று கொடுத்து இருக்கிறது. நிறைய படிக்க சிந்திக்க வாய்ப்பை தந்தது. நிறைய மாற்றங்கள் என்னுள்ளே. எது சரி எது தப்பு என்று பிரித்தறியும் பக்குவம் தந்து இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை என்று உணர்ந்து இருக்கிறேன். எந்த ஒரு விசயத்தை செய்யும் போதும் உங்கள் மனசாட்சி உங்களை கொல்லாமல் இருந்தால் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று பொருள். மனசாட்சியை விட சரியான ஆசான் இல்லை என்பது நான் கண்ட உண்மை.


என் தனிப்பட்ட விருப்பங்களில் நிறைய மாற்றங்கள்.  உதாரணமாக இசையில் இளையராஜா மட்டும்  கேட்டு கொண்டு இருந்த நான் இப்போது உலக இசை பக்கம் திரும்பி இருக்கிறேன். வித விதமான இசை மனதை கவர்கிறது. "Adele" அவர்களின் குரலில் "Someone like you", மனதை மயக்கி இருக்கிறது.

நிறைய புது புத்தகங்கள் படிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. வெறும் கதை புத்தகங்கள் படித்தததில் இருந்து இப்போது விலகி நிறைய சுயசரிதை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். எனது துறையை சேர்ந்ததலோ என்னவோ  "The Immortal Life of Henrietta Lacks" மிகவும் பிடித்து மனதை கனக்க வைத்தது. "Steve Jobs" அவர்களின் சுயசரிதை உத்வேகம் அளித்து இருக்கிறது.

நிறைய ஆங்கில படங்கள் பார்த்து இருக்கிறேன். "Gone girl " மற்றும் "Wild" பிடித்திருந்தது. ப்போதும் தொலைகாட்சி பார்ப்பதில்லை நான். சிலரிடம் "நாதஸ்வரமா , எங்க கச்சேரி? " என்று அவர்கள் நாதஸ்வரம் தொடர் பற்றி பேசும் போது கேட்டு பல்பு வாங்கி இருக்கிறேன். ஆயினும் சில நேரங்களில் அம்மாவுடன் சேர்ந்து தமிழில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததுண்டு.
ஆயினும் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டான Soccer உலக கோப்பையை விளையாட்டை ஒருபோட்டி விடாமல் தொலைகாட்சியில் பார்த்து பெட் கட்டி கடைசியில் என்னுடைய பிடித்த நாடான ஜேர்மனி வெற்றிவாகை சூடுவதை பார்த்து ஆனந்த பட்ட நிமிடங்கள் மறக்க முடியாதவை.

வேலையை பொருத்தவரை, புது  துறையை தேர்தெடுத்து அதை கற்றுக்கொண்டு இருக்கிறேன். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெறியாகி இருக்கிறது. பார்க்கலாம்.

ஒரு சில நட்புகளை சந்திக்கவும் ஒரு சிலரை இழக்கவும் நேர்ந்திருக்கிறது. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்ளும் பக்குவம் வந்து இருக்கிறது.
பதிவுலகை பொறுத்தவரை , நிறைய பதிவுகள்  எழுதவில்லை என்றாலும் எழுதிய ஒரு சில பதிவுகளும் மன நிறைவை தந்து இருக்கின்றன.

நிறைய சந்தோசமும் நிறைய மனவருத்தமும் இந்த வருடம் தந்து இருந்தாலும் என்னை செதுக்கி ஒரு வளர்சிதைமாற்றத்தை இந்த ஆண்டு உருவாக்கி இருக்கிறது. வரும் புத்தாண்டில் எல்லாம் நன்மையாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் கொஞ்சம் சீ க்கிரமே புத்தாண்டுவாழ்த்துக்கள்.



Thursday, November 6, 2014

ஆதர்சன கதாநாயகர்களும், ஹாலிவூட்டின் மாறும் முகமும்!

நாவல்கள் படிப்பவர் அனைவருக்கும் அவர்கள் படிக்கும் நாவலின் கதாநாயகர்களை தன் மனதில் ஒருவகையில் கற்பனை செய்து வைத்து இருப்பார்கள். அதுவும் இன்றளவும் அனைவராலும் படிக்கப்படும், விரும்பபடும் பழைய நாவல்கள் எனில் பல தலைமுறை மனிதர்கள் அதனை படித்து பல கற்பனைகள் கொண்டு இருப்பார்கள். உதாரணத்துக்கு "பொன்னியின் செல்வன்" நாவலை சொல்லலாம்.

1950 களில் எழுதப்பட்ட இந்த நாவல் இன்றளவும் விரும்பி படிக்கபடுகிறது, கிட்டத்தட்ட மூன்று தலை முறை மனிதர்கள் இதன் கதாநாயகர்களை தங்கள் ஆதர்சன கதாநாயகர்களாக மனக்கண்ணில் வடித்து இருக்கலாம். ஒவ்வொரு தலைமுறையினரின் வந்தியதேவனும், அருள் மொழியும், குந்தவையும் வேறு வேறாக இருக்கும். அனைத்து தலைமுறை மக்களையும் பூர்த்தி செய்யும்வண்ணம் ஒரு வந்தியதேவனையும், அருள்மொழியையும், குந்தவையும் கண்முன் கொண்டு வருவது சாதாரண காரியம் அல்ல.

இதே போல உலகம் முழுதும் விரும்பி படிக்கப்பட்ட/படுகின்ற ஒரு ஆங்கில நாவல் என்றால் "Sir Arthur Conan Doyle" அவர்கள் எழுதிய "Sherlock  Holmes". இதுவரை உலகத்தில் அதிக முறை படமாக்கப்பட்ட, கலை பாத்திரமாக்கபட்ட ஒரு நாவல் கதாநாயகன் இவர் என்ற கின்னஸ் உலக சாதனை கொண்ட நாவல் கதா பாத்திரம் இது. "AVOID STEPPING INTO A GREAT MAN’S SHOES" என்று ஒரு ஆங்கில பதம் உண்டு. இப்படி பல சிறப்புகள் கொண்ட, மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து புகழின் உச்சிக்கு செல்வதென்பது சாதாரண காரியம் அல்ல.  


அதே போல பழைய கதாபத்திரத்தை  ஆனால் புது யுக சிந்தனைகளும், தொழில்நுட்பங்களும் உபயோகபடுத்தும் ஒரு கதாபாத்திரமாக மாற்றி அனைத்து ரசிகர்களையும் கட்டி போட்ட ஒரு தொடர் மற்றும்  அதில் நடித்தவரும்  என்றால் அது BBCன் "Sherlock" தொடரும், அதில் ஷெர்லோக் ஆக நடித்த "Benedict Cumberbatch" ம். 

பிரெஞ்சு மொழியில் ஒரு பதம் உண்டு, அது jolie laide ஆங்கிலத்தில் இதனை  "beautiful ugly" என்று சொல்லலாம். தமிழில் சொல்ல வேண்டுமானால் அழகான அசிங்கம். இந்த பதத்தை கவனித்து பார்த்தால், பொதுவாக அனைவராலும் அழகு என்று நம்பப்படும் அழகு சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லாத ஆனால் நம்மை கவர்ந்து இழுக்கக்கூடிய அம்சங்கள் நிறைந்தவர். எடுத்துக்காட்டுக்கு தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சொல்லலாம், ஹிந்தியில் ஷாருக்கான் அவர்களை சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒரு நடிகர் Benedict Cumberbatch அவர்கள். நீண்ட முகம், கவர்ச்சியில்லாத கண்கள், ஒட்டிப்போன கன்னங்கள்,ஒல்லியான தேகம்  என ஹாலிவூட் எதிர் பார்க்கும் எந்தவித ஒரு கவர்ச்சியும் இல்லாத ஒரு  நடிகர் அவர். அவரின் பெயரும் 16 போப்களின் பெயர், பெயரும் சரியில்லை, ஆளும் சரியில்லை என ஒதுக்கப்பட்டவர் அவர்.  

BBC முதலில் Sir Arthur Conan Doyleன் நாவலை தொடராக்க முனைந்த போது அவர்களின் மனதில் Sherlock ஆக Benedict இருக்கவில்லை. ஆனாலும் ஷெர்லோக் ஆக அவரும் Dr .வாட்சன் ஆகா மார்டின் ப்ரீனும் தேர்வானபோது இவர்களா என்று முகம் சுழித்தவர்கள் பலர்.

ஆனால் முதல் சீசன் ஷெர்லோக் முடிந்தபோது பெனெடிக்ட் ம் ஷெர்லோக் தொடரும் புகழின் உச்சியில். அப்பொழுது ஆரம்பித்த பெநேடிக்ட்ன் ஏறுமுகம், ஷெர்லோக் 4வது சீசன், star trek, Atonement, The Fifth Estate ...என தொடர்கிறது. சினிமா என்று மட்டும் அல்லாமல் , டிவி, டிராமா, ரேடியோ என்று அனைத்திலும் தன்னுடைய திறமையை நிருபித்து கொண்டு இருக்கும் பெனெடிக்ட், ஹாலிவூடின் மாறும் முகத்திற்கு ஒரு சான்று.

நன்றி.




Sunday, November 2, 2014

அமெரிக்காவிலிருந்து இந்தியா பயணம் இரண்டு மணி நேரத்தில் சாத்தியமா?

இது என்ன புது கதை என்று நினைக்க வேண்டாம். இன்னும் 2- பத்து ஆண்டுகளில் இது சாத்தியம் ஆகலாம். 

The Virgin Galactic SpaceShip2 (VSS Enterprise) By Mark Greenberg/Virgin Galactic

Virgin Galactic நிறுவனம் தற்போது space flight technology எனப்படும் விண்வெளியை தொடும் விண்கலத்தை மாற்றியமைத்து கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் விண்கலம், சுற்றுபயணம் செல்ல வசதியானதாக மாற வாய்ப்பு உள்ளது. 

செய்திகள் 

அதிவேக Concorde விமானம் போல இந்த விண்கல விமானம் பூமியின் வளிமண்டலத்தை தாண்டி பூமியின் சுற்றுப்பாதையில் நுழைவதால் மணிக்கு கிட்டத்தட்ட 4200 mph அல்லது 6720 kmph செல்ல இயலுமாம்.


கிட்டத்தட்ட புவிஈர்ப்பு இல்லாத ஜீரோ கிராவிட்டி நிலையை எட்டி பயணித்து பின்பு பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து பின்பு திரும்ப தரை இறங்கும் படி இந்த விமானங்கள் அமைக்க பட்டு இருக்கிறது. இதுவரை Virgin நிறுவனத்தின் SS2 வகை விண்கலவிமானம் பூமியின் stratosphere கீழ் அடுக்குமண்டலத்திலிருந்து மட்டுமே நுழைந்து வெளியேற முடிந்திருக்கிறது.

ஏற்கனவே செய்த இரண்டு சோதனை ஓட்டங்கள் விபத்தில் முடிந்தாலும், அடுத்த வருடம் , இந்த அதிவேக விமானம் சத்தியமென்று Virgin Galactic நிறுவனர் தெரிவித்துள்ளார்.


இதனால் லண்டன் டு சிட்னி பயணம் இரண்டரை  மணி நேரத்தில் சாத்தியமாம். அப்படியெனில், அமெரிக்கா டு இந்திய பயணமும் இரண்டு மணி நேரமாகலாம்.

என்ன ஒரு டிக்கெட் விலை $200,000 மட்டுமே, கிட்டத்தட்ட 640 பணக்காரர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாகவும் அதன் மூலம் இந்த நிறுவனம் $80 மில்லியன் பணம் வசூலித்து இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த கம்பெனி நிலவுக்கு சுற்றுபயணம் செல்லும் வசதியும் பொது மக்களுக்கு செய்து தர எண்ணியுள்ளதாக தெரிகிறது.

எப்படியோ இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் இரண்டைரை மணி நேர இந்திய பயணம் சாத்தியம் என்றால் மகிழ்ச்சியே. அதே போல டிக்கெட் விலையும் குறையும் என்று நம்புவோம்.

நன்றி 



Tuesday, October 28, 2014

போலியோ இல்லா உலகம், நன்றி Dr. ஸால்க் அவர்களே!

இன்று கூகுள் திறந்தவுடன் கண்ணில் பட்டது Dr. ஸால்க் அவர்களின் நூறவது பிறந்தநாள் வாழ்த்து .  Dr. ஸால்க்  என்றவுடன் பலருக்கு யாரென்று தெரிய வாய்ப்பில்லை, ஆனால் பல கோடி குழந்தைகளை ஊனமாகாமல் காப்பாற்றிய பெருமை உடையவர் அவர். பிஞ்சு குழந்தைகளை ஊனமாக்கிய போலியோ வைரஸ்க்கு தடுப்பு ஊசி கண்டுபிடித்தவர் அவர்.

Source: Google doodle

1939 ஆம் ஆண்டு மருத்துவ பட்டம் பெற்று மருத்துவராக நியூயார்க் நகர மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தனது ஆராய்ச்சியை தொடங்கிய அவர் 1947 ஆம் ஆண்டு பிட்ச்புர்க் பல்கலைகழகத்தின் வைரஸ் ஆராய்ச்சியை தொடங்கினார்.

மனித உடலில் செயல் இழந்த வைரஸ்களை செலுத்தி எதிர்ப்பு சக்தியை தூண்டும் முறையைபயன்படுத்தி  அதனை தடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் இவர். இதுவே பல நோய் தடுப்பு ஊசிகளை கண்டுபிடிக்க உதவியது.

இவரின் ஆராய்ச்சி பின்பு National Foundation for Infantile Paralysis எனப்படும் குழந்தைகள் முடக்குவியாதி தடுப்பு ஆராய்ச்சி கூடத்தின் தலைவர் Basil O'Connor ன் கண்ணில் பட்டது. அவர், குழந்தைகள் முடக்கு வியாதியான போலியோவிற்கு மருந்து தயாரிக்க கேட்டுகொண்டார்.

ஸால்க் கண்டுபிடித்த தடுப்பு ஊசியானது முதலில் குரங்குகளில் பரிசோதிக்கப்பட்டு பின்பு 1954 ல் ஆறிலிருந்து ஒன்பது வயது வந்த பத்து லட்சம் குழந்தைகள் மீது பரிசோதிக்கப்பட்டது. ஏப்ரல்  12, 1955 இந்த போலியோ மருந்து பயனுள்ளது, பாதுகாப்பானது என்று அறிவிக்க பட்டது.

 மருந்து வெளிவருவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வரை அமெரிக்காவில் 45,000 மேற்பட்ட குழந்தைகள் போலியோவால் பாதிக்க பட்டு இருந்தனர் அது இரண்டு வருடங்களில் 910 ஆக குறைந்தது. தற்போது பல நாடுகள் இந்தியா உற்பட போலியோ இல்லாத நாடாக WHO ஆல்  அறிவிக்க பட்டு இருக்கிறது.

பல நாட்டு குழந்தைகளை ஊணமாக்காமல் காப்பற்றி புது வாழ்வு அளித்த Dr.ஸால்க் அவர்கள் இந்த தடுப்பு ஊசி கண்டுபிடித்ததை காப்புரிமை கூட செய்யவில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட பண பயன் பெறவில்லை. தன்னுடைய ஆராய்ச்சியை உலக நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தியவர் ஆவார்.

அவருடைய நூறாவது பிறந்த நாளில் அவருக்கு நம்முடைய மனதார நன்றியை தெரிவிப்போம்.

நன்றி.




Tuesday, October 21, 2014

எபோலா வைரஸு க்கு மருந்து ஏன் இன்றுவரை இல்லை!

தற்போது உலகளவில் பயமுறுத்தும் ஒரு சொல் "எபோலா வைரஸ்", கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆப்ரிக்கா நாடான  காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கபட்டது.

மைக்ரோஸ்கோபில் பார்க்கும் போது , சின்னம்மை வைரஸ் அல்லது ஃப்ளு வைரஸ் போன்ற ஒரு தோற்றம் கொண்ட இந்த வைரஸ் , ஃப்ளு போன்று மூச்சுகுழாயை தாக்கும்  (upper respiratory infection) வைரஸ் ஆக இல்லாமல் உடலின் எந்த ஒரு செல்லையும், உறுப்பையும் தாக்கும் திறன் கொண்டது. 




எப்படி பரவும் ?

எபோலா வைரஸ் எங்கிருந்து உண்டானது என்பது இன்னும் அறியமுடியாவிட்டாலும், தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட வைரஸ் பரவலானது ஒரு மிருகத்தில் இருந்து மனிதருக்கு பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சரி, இது எப்படி பரவுகிறது என்றுபார்க்கலாம்? நோய்வாய்ப்பட்ட மனித உடலில் இருந்து வெளியேறும் திட,திரவங்கள் மூலம் இது எளிதில் பரவலாம். அவை சிறுநீர், எச்சில், வேர்வை, மலம்,  வாந்தி , தாய்பால்  , ரத்தம் மற்றும் விந்து.  நோய்வாய்ப்பட்ட மிருகத்தில் இருந்தும் இது பரவலாம்.  நோயாளிகள்  உபயோகபடுத்திய ஊசி மூலமும் இவை பரவும் தன்மை வாய்ந்தது. 

எந்த உறுப்பிலும் நுழைந்த உடன் தன்னை பல பிரதி எடுத்து உடனடியாக அந்த உறுப்பின் முதல் 
பாதுகாப்பு கவசமான T-cells அழித்துவிடும். பின்பு, அந்த உறுப்பை செயலிழக்க செய்து, மரணத்தை ஏற்படுத்தவல்லது. 

எப்படி பரவாது?

இந்த வைரஸ் காற்றின் மூலமும் நீரின் மூலமும் பரவாது. உணவின் மூலமும் பரவாது. அதனால், நோய் வாய்ப்பட்ட  மனிதர் இருக்கும் இடத்தில் காற்றை சுவாசிப்பதால் இது பரவாது. கொசு மற்றும் பூச்சி கடிப்பதாலும் இது பரவாது.

என்ன அறிகுறிகள்?

நோய் கிருமி தாக்கிய அவரவர் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப 2 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கலாம். அவை, காய்ச்சல், கடுமையான தலைவலி, உடம்பு வலி, சோர்வு, வயிற்றுபோக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி போன்றவை.

ஏன் மருந்து இல்லை?

இத்தனை வருடங்களில் ஏன் இதற்கென்று ஒரு மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை?  பல காரணங்கள் உண்டு என்றாலும் ஒரு சில மருத்துவ காரணங்கள் இங்கே.,, 

முதல் காரணம் , இது வைரஸ் என்பதால், வெகு சீக்கிரம் தன்னை தகவமைத்து கொண்டு (mutates) மாற்றி கொண்டு விடுகிறது.

இரண்டாவது காரணம்,  இது பல உறுப்புகளை தாக்கவல்லது என்பதால், உறுப்பை சார்ந்த மருந்துகளை செலுத்துவது, கண்டு பிடிப்பது சில நேரங்களில் கடினமானது.

இப்போது மருத்துவம் தாண்டிய பொருளாதாரம் சார்ந்த ஒரு காரணம். 

இது, HIV போலவோ, கான்செர், ஃப்ளு, சின்னம்மை போன்ற  அதிகம் அறியப்பட்ட "high profile" நோய் அல்ல. அதனாலே, இதற்க்கான மருத்துவ ஆராய்ச்சிக்கு அதிகம் செலவிடப்படவில்லை. அதனை தவிர, உலகின் உள்ள பல மருந்துகளை தடுப்பூசிகளை தயாரிக்கும் பெரிய மருத்துவ நிறுவனங்கள் இந்த நோயை அதிகம்  கண்டு கொள்ளவில்லை, காரணம் இது நிகழ்ந்தது ஏழை நாடுகளை கொண்ட ஆப்பிரிக்க கண்டத்தில், அங்கு மருந்துக்கான  மார்க்கெட் இல்லை என்று அவர்கள் நினைத்ததால்.

தற்போது உலகமெங்கும் இந்த நோய் பரவும் ஆபத்து இருப்பதால், இதற்கான மார்க்கெட் நன்றாக இருக்கும் என்று அனைவரும் நினைத்ததால், நீ, நான் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு இந்த வைரஸ்காண தடுப்பூசி கண்டுபிடிக்க முனைகிறார்கள். இதனை சில வருடங்களுக்கு முன்பு செய்திருந்தால் பல ஆயிரம் உயிர்கள் போவது தடுக்கபட்டு இருக்கலாம்.  

நன்றி 

References

http://www.cdc.gov/vhf/ebola/
http://www.mirror.co.uk/news/world-news/ebola-virus-symptoms-start-sore-3933920
http://www.huffingtonpost.com/2014/08/05/big-pharma-ebola_n_5651855.html



Thursday, August 21, 2014

உங்கள் குழந்தைகள் அதிகம் டிவி பார்கிறார்களா!!



வீட்டு  வேலை அவசரமாக  முடிக்க வேண்டும், சமைக்கணும், பிள்ளைகள் வேற  ஸ்கூல் ல  இருந்து வந்துட்டாங்க, என்ன செய்ய , சரி டிவில கார்டூன் போட்டு விட்டுடலாம்.

பிள்ளைகள் ரொம்ப அடம் பிடிக்கிறாங்களா?, சரி கார்டூன் போட்டுடலாம், பேசாம இருப்பாங்க.

குழந்தைங்களுக்கு சாப்பாடு ஊட்டணுமா? சரி கார்டூன் போட்டுடலாம்.

நம்ம டிவில சீரியல் பாக்கணுமா?, சரி பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் ல கேம்ஸ் விளையாட கொடுத்துடலாம்.

....இப்படி கிட்ட தட்ட பெற்றோர்களுக்கு  ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால்  இப்போது பிள்ளைகளுக்கு நாம கொடுப்பது ஸ்க்ரீன் டைம்...அது டிவி, கம்ப்யூட்டர், ipad, வீடியோ கேம்ஸ்...etc

 கூட்டு குடித்தனம் சிதைந்து தனிக்குடித்தனம் என்றன பின், குழந்தைகளை பார்த்துக்கொள்ள என்று பெரியவர்களும் இல்லாத நிலையில், சிறு வயதில் இருந்து இப்படி எல்லாவற்றிற்கும் டிவி என்பது ஒரு குழந்தைகளை கவனிக்கும் ஒரு ஆயா போல ஆகிவிட்டது.

நாம் சுவிட்ச் ஆன் செய்ய மாட்டேன் என்று சொன்னாலும் தானாகவே டிவி சுவிட்ச் ஆன் செய்து தனக்கு வேண்டிய கார்டூன் சேனல் போட்டு கொள்ள 4-5 குழந்தைகள் கூட தற்போது  அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இப்படி எப்போதும் டிவி பார்க்கும் குழந்தைகள் தங்களை அந்த கார்டூன்  கேரக்டர்களை போலவே நினைத்து கொள்வது எல்லா வீடுகளிலும் தற்போது பார்க்க முடிகிறது. எனக்கு தெரிந்து சோட்டா பீம் பார்த்து விட்டு பெரியவர்களை போட்டு குத்து குத்து என்றும் குத்தும்  பிள்ளைகளை அதிகம் பார்த்து இருக்கிறேன். நான் நின்ஜா,  என்னால் மேலிருந்து கீழே குதிக்க முடியும் என்று குதித்து அடி வாங்கிய சிறுவர்களை காட்ட முடியும். பார்பி  பொம்மைகளையும், டிஸ்னி கார்டூன் களையும் பார்த்து விட்டு தன்னை இளவரசியாக நினைத்து அதற்கு ஏற்றார் போல நடை உடை பாவனைகள் மாற்றி கொள்ளும் அனேக பெண் குழந்தைகள் பார்த்து இருக்கிறேன்.

இப்படி தனக்கு முன்னால் விரியும் ஒரு உலகத்தில் வாழ ஆரம்பிக்கும் பல குழந்தைகள் தங்களால் நிஜ உலகுக்கு வர முடியாமல் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவது, கத்துவது, அடிப்பது போன்ற மன மாற்றங்கள் அடைந்து . பொறுமை என்பது நிறைய குழந்தைகளுக்கு இருப்பதில்லை. தனக்கு வேண்டியது உடனே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைய தோன்றுவதையும் பார்த்து இருக்கிறேன். இப்படி நிறைய குழந்தைகள் பள்ளி சென்றாலும் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவதை தற்போது attention deficient disorder  என்று அழைக்கிறார்கள் . அதாவது கவன பற்றாகுறை நோய். தற்போது ஒரு ஆராய்ச்சியில் இந்த நோய்க்கு டிவி யின் பங்கு எவ்வளவு என்பதை நிருபித்து இருக்கிறார்கள். http://www.additudemag.com/adhd/article/826.html


இதனை தவிர்க்க வேண்டுமாயின், குழந்தைகளுக்கு வெளியில் சென்று விளையாட நிறைய நேரம் கொடுக்கவும், டிவி யை, ஒரு ஆயா போல பயன் படுத்தாமல் ஒரு மணி நேரம் மட்டுமே டிவி நேரம் என்று நேர எல்லை வகுக்கலாம். இதனால் எப்போதும் டிவி ஏ  கதி என்று குழந்தைகள் இல்லாமல் இருக்கும்.
புத்தகங்கள் வாசித்து காட்டலாம். புதிய இசை, பாட்டு, நடனம் போன்ற விசயங்களில் குழந்தைகளை செலுத்தலாம்.

குழந்தைகள் களிமண் போன்றவர்கள், அவர்களை நன்வகையில் வளர்ப்பது பெற்றோர்களான  நம் கையில் மட்டுமே இருக்கிறது.

நன்றி.

Monday, June 9, 2014

வாயை மூடி பேசவுமும் contagion, outbreak ம்

2009 ஆம் ஆண்டு மத்தியில் பரவ ஆரம்பித்த H1N1 swine flu வைரஸ் புது வகையாக பன்றியில் இருந்து மனிதனுக்கு தாவிய வைரஸ். அது மனிதனின்  ஜீனொமுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு பரவியது.

பொதுவாக ஃப்ளு வைரஸ் கிருமி என்பது இது வரை 3 உயிரினங்களை மட்டுமே தாக்கி வந்துள்ளது: மனிதன், பன்றி மற்றும் பறவைகள்.

இவற்றில் இது வரை பன்றியில் இருந்து மட்டுமே மனிதனுக்கு மிக எளிதாக ஃப்ளு வைரஸ் பரவி இருக்கிறது. கடந்த ஆண்டு H7N9 என்னும் புதிய வகை ஃப்ளு வைரஸ் சைனாவில் பறவைகளில் இருந்து மனிதனுக்கு பரவ ஆரம்பித்தது, ஆயினும் H1N1 swine flu வைரஸ் போல அதனால் பரவ இயலவில்லை. ஏனெனில், H1N1 swine flu காற்றின் மூலம் பரவ கூடியது, ஒருவர் ஒரு தும்மல் தும்மினால் போதும் அதிலிருந்து கோடான கோடி வைரஸ் கிருமிகள் வெளி வருகின்றன. அவை அடுத்த மனிதர்களுக்கு அப்படி பரவுகின்றன.

ஆனால் H7N9 போன்ற பறவைகள் ஃப்ளு வோ நம்முடைய digestive system ஐ தாக்க கூடியது. இதனால் சீக்கிரம் பரவ இயலவில்லை என்றாலும், மனிதனுக்கு மரணத்தை விளைவித்தது. 

H7N9 flu  போன்ற ஒரு புது வகை வைரஸ் அதுவும் மனிதனுக்கு மரணத்தை விளைவிக்க கூடிய ஒன்று காற்றில் பரவினால் என்னாகும்?, அதுவே, contagion, outbreak போன்ற ஹாலிவுட் படங்களின் கரு. 

இப்படி ஒரு புது வைரஸ் பரவுகிறது என்றறிந்தால் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்கிறார்கள் என்று contagion படத்தில் சொல்லி இருப்பார்கள். கொஞ்சம் மிகைபடுத்த பட்டு இருப்பினும் இந்த படங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் செயல் படுத்த படுவதை நேரில் நான் பார்த்ததுண்டு.




இதனை போன்ற ஒரு கரு கொண்ட படங்கள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு.




அதனை ஓரளவு பூர்த்தி செய்த படம் வாயை மூடி பேசவும். ஆயினும் இந்தியன் சினிமாவுக்கே உரிய அசட்டு காதல், பாடல்கள், அசட்டு காமெடி என்று இவர்கள் தடம் மாறாமல் ஒரு திரில்லர் போல இருந்திருந்தால் சொல்ல வந்த விஷயம் மக்களுக்கு போய் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

இந்த படம் ஒரு attempt on மெடிக்கல் பீல்ட் என்றாலும் பல science தவறுகளும் காண நேர்ந்தது, வைரஸ் ஒரு genetic disease அது antibiotic கொடுத்தால் குணமாகும், குரலை மட்டும் எடுக்கும் வைரஸ் போன்ற சில விஷயங்கள் மட்டும் நீக்கி பார்த்தால் இதனை போன்ற படங்களை தமிழில் வரவேற்கலாம். 


Saturday, May 31, 2014

ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை உபயோகிப்பது நல்லதா இல்லையா?

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்ட போது , anti-bacterial lotion எனப்படும் பாக் டீரியா நுண்ணுயிர்  எதிர்ப்பு கை கழுவும் லோஷன் பற்றிய விளம்பரங்களை அதிகம் காண நேர்ந்தது. ஒவ்வொரு கம்பெனியும், தன்னுடைய லோஷன் 15 நிமிடத்தில் செயல்படும், என்னுடையது 10 நிமிடத்தில் செயல்படும் என்று ஒரே புராணத்தை பாடி கொண்டிருந்தார்கள்.

உண்மையில், இப்படி ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை  உபயோகிப்பது நல்லதா இல்லையா? பார்ப்போம் இங்கே .

நம்மை சுற்றி நம் சுற்றுபுறத்தில் கோடிகணக்கான பாக்டீ ரியாக்கள் உள்ளன. நம் digestive system நன்கு செயல்படவும், பல நன்மை பயக்கும் பாக்டீ ரியாக்கள் காரணமாக இருக்கின்றன. நம்முடைய ecosystem அனைத்திலும் பாக்டீ ரியாக்கள் செய்யும் வேலைகள் பல, இலை தளை  மக்கவைப்பது, கழிவுப்பொருள்களை மீண்டும் உரமாக்குவது என்பது அவற்றுள் முக்கியமானவை. நாம் வாழும் ஈக்கோ சிஸ்டத் தில் பாக்டீ ரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நம்மை சுற்றி பல நன்மை பயக்கும் பாக்டீ ரியாக்கள் இருந்தாலும், பல தீமை விளைவிக்கும் பாக்டீ ரியாக்கலும் உள்ளன . இந்த தீமை விளைவிக்கும் பாக்டீ ரியாக்களை கொல்லவே தற்போது நிமிடத்திற்கு நிமிடம் ஆண்ட்டி பாக்டீரியல் சோப் விளம்பரங்கள் ஒலிபரப்பபடுகின்றன. 

சரி இப்போது அடிக்கடி ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என பார்போம்.

முதலில், இந்த வகை சோப்கள் கெட்ட கிருமிகளை மட்டும் கொல்வதில்லை, அவற்றோடு, நமக்கு நன்மை கொடுக்கும் பலவும் அழிகின்றன.

தற்போது, இங்கு இருக்கும் மருத்துவர்கள் பலர் , ஆண்டி பயொடிக்க்ஸ் மருந்துகளை சாதாரண இருமல் காய்ச்சல் என்று போனால் பரிந்துரை செய்வதில்லை, அதற்கும் ஆ ண்ட்டி பாக்டீரியல் சோப்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டும் பாக்டீ ரியாக்களை கொல்ல உபயோகபடுத்த படுகின்றன.



Photo courtesy Rocky Mountain Laboratories
என்ன பிரச்சனை என்றால், இந்த பாக்டீ ரியாக்களை கொல்ல நாம் மருந்துகளையோ  அல்லது கை கழுவும் திரவங்கலையோ உபயோகபடுத்த படுத்த , அவை மிக சாதுர்யமாக தங்களை mutate எனப்படும் மாற்றி அமைத்து கொள்கின்றன. தற்போது இங்கிருக்கும் மருத்துவ மனைகள் சந்திக்கும் ஒரு மிகபெரிய பிரச்சனை antibiotic resistant bacteria. தற்போது ஒரு சில anti biotics மருந்துகளுக்கு கட்டுபடாத MRSA  101 எனப்படும் பாக்டீ ரியா பெருகி வருகிறது. அதனை superbug என்று சொல்லும் அளவுக்கு. 


எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் சாதாரண ஆபரேஷன் என்று மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை முடிந்து சில நாட்களில் இறக்க நேரிட்டது. இத்தனைக்கும் அவருக்கு மிகச்சாதாரணமான ஒரு ஆபரேஷன் மட்டுமே. என்னவென்று விசாரித்தால், சிகிச்சை முடிந்த பின்னர் அவருக்கு antibiotic resistant bacteria தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. அதனை கொல்ல எந்த antibiotic மருந்துகளும் பயன்படவில்லை.

சரி, இப்போது தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்,நாம் தேவை இல்லாமல் ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை உபயோகபடுத்த உபயோகபடுத்த, அவை நம்முடைய உடம்பின் ecosystem மாற்றியமைப்பது மற்றுமின்றி, இதனை போன்ற antibiotic resistant bacteria உருவாகவும் காரணமாக இருக்கிறது. முடிந்தவரை இதனை போன்ற கண்கவர் விளம்பரங்கள் வராது தடுக்கவும், மக்களுக்கு இதன் எதிர்விளைவை சொல்லவும் வேண்டும்.

சரி, அதற்கென்று எப்படி கிருமிகளை ஒழிப்பது என்று பலர் கேட்கலாம், நாம்  அன்றாடம் உபயோகிக்கும் சோப்புகளை கைகழுவ உபயோகிக்கலாம். இதற்காக, அடிக்கடி ஆண்ட்டி பாக்டீரியல் சோப் தனியாக உபயோகிக்க வேண்டாம்.

நன்றி.

Thursday, March 13, 2014

காசு, பணம் துட்டு, மணி மணி !

முகநூல், டுவிட்டர், பதிவுலகம், யுடூப், வாட்'ஸ் அப், இன்ஸ்டா கிராம் ... என்று என்னென்ன இருக்கிறதோ அவற்றில் எல்லாம் என்ன நடக்கிறது. சண்டை.., நீ நான் என்ற போட்டி. ஒரு லைக் வாங்குவதற்காக எந்த நிலைக்கும் அளவுக்கும் செல்லும் மனிதர்கள். இவை தான் தற்போது ஒரு பக்கம் இருக்கும் சாதாரண
மனிதர்களின் பக்கம்.
 
 



இப்போது இந்த பக்கத்தை விட்டு விட்டு அடுத்த பக்கத்திற்கு வாருங்கள். அது இப்படி சமூக வலைத்தளங்களே வாழ்க்கை என்றிருக்கும் மக்களை பணச்சுரங்கமாக மாற்றும் அடுத்த பக்கம். இவர்களின் முதலீடு நீங்கள் தான். உங்களின் ஒவ்வொரு அசைவையும் இவர்கள் கவனிக்கிறார்கள். நீங்கள் எந்த பக்கத்துக்கு அதிகம் செல்கிறீர்கள், எத்தனை தடவை செல்கிறீர்கள், என்ன வாங்குகிறீர்கள், அதனை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? எதனை பற்றி அதிகம் தேடுகிறீர்கள். உங்களுக்கு எத்தனை நண்பர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை? அவர்களுக்கு என்ன பிடிக்கிறது, அவர்கள் அதனை தேடுகிறார்கள், அவர்கள் என்ன வாங்குகிறார்கள், அதனை பற்றி என்ன சொல்கிறார்கள்......இப்படி உங்களை பற்றி அனைத்தும் சேகரிப்பது அவர்களின் முதல் வேலை. 

சரி, அடுத்து என்ன செய்கிறார்கள், உங்களிடம் இருந்து சேகரித்த விசயங்களை கொண்டு நீங்கள் இப்படித்தான் என்று ஒரு ப்ரொபைல் உருவாக்குகிறார்கள். அப்புறம் என்ன உங்கள் அனைத்து தளத்திற்கும் நீங்கள் கேட்காமலேயே விளம்பரங்கள் வந்து சேரும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , பார்த்தாலும் பார்க்கவிட்டாலும்  கூட. எவ்வளவு அதிகமாக நீங்கள் சமூக வலை தளங்களை நீங்கள் உபயோகிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள். 

நாம் இங்கு நீ பெரியவனா, நான் பெரியவனா என்று முக நூலில் சண்டை போட போட , அவர்களுக்கு பணம் குவிகிறது.

இப்போது இருக்கும் வேலை வாய்ப்புகளில் அதிக பணம் சம்பளமாக கிடைப்பது "Data scientist" எனப்படும் வேலை தான். இவர்களின் வேலை என்னவென்றால் , இப்படி சமூக வலைத்தளம் அல்லது கூகுள் போன்ற தளங்களில் கிடைக்கும் பொது மக்களை பற்றிய செய்திகளை சேகரிப்பது மற்றும் அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிவது உங்கள் ப்ரொபைல் உருவாக்குவது மட்டுமே.

அதனை கொண்டு, அதற்க்கு ஏற்ப விளம்பரதாரர்களை  அணுகுவது அல்லது விளம்பர தார்கள் இந்த பெரிய சமூக வலைத்தளங்களை அணுகுகிறார்கள். பின்பு, உங்களின் பலவீனம் அவர்களுக்கு காசு, பணம், துட்டு, மணி மணி தான்.



Tuesday, February 11, 2014

விடாது கருப்பு!

நான் கல்லூரியில் சேர்ந்த புதிது அது. துணைப்பாடமாக வேதியியல் பாடம். அப்போது ஆய்வறையில் செய்முறை பாடம் நடந்தது. நான் படித்தது மாநகராட்சி பள்ளியில் என்பதால் எனக்கு வேதியியல் செய்முறை என்பது வெறும் மனப்பாடம் செய்து பரிட்சையில் எழுதுவது மட்டுமே. நான் முழிக்க ஆரம்பிக்க, அங்கிருந்த வேதியில் விரிவுரையாளர் என்னிடம் சொன்னது இது தான், “எந்த சாக்கடையில இருந்து வந்திருக்க?, இப்படி எங்கிருந்தாவது வந்துடறது, அப்புறம் எங்க உயிர வாங்குறது?என்றார். அதை நினைத்து பல நாட்கள் அழுது இருக்கிறேன். பின்னர் அந்த அம்மா சில வருடங்களில் என்னை பல்கலை கழகத்தில் பார்த்து அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டது வேறு கதை.

அப்படியே காலம் உருண்டு செல்ல சில வருடங்களுக்கு முன்  இந்தியாவில் இருந்து படிக்க வந்த நான் என்னுடைய இந்தியன் ஆக்செண்ட் ஆங்கிலத்தில் ஒரு வரவேற்பறை அம்மாவிடம் லாபிற்கு வழிகேட்க அந்த அம்மா என்னுடைய ஆங்கிலம் புரியாமல் ஏதோ சொல்ல நான் அவர்கள் ஆக்செண்டு புரியாமல் விழிக்க கடைசியில் அந்த அம்மா என்னை படிக்காதவள் என்று நினைத்து சைகையில் சொல்ல எனக்கு என்னவோ ஆனது.அதன் பிறகு உஷாரான நான் அவர்களிடம் “ப்ளீஸ் டாக் ஸ்லோலி” என்று சொல்லி அவர்கள் பேசுவதை புரிந்து கொண்டதுண்டு. 

தற்போது வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் ஒரு சில கூத்துகள் எனக்கு பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டன. அதாவது, நீங்கள் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும், விஷய ஞானம் உள்ளவராக இருந்தாலும் ஒரு படிக்கு மேலே நீங்கள் பதவி உயர்வு பெற முடியாது. உங்களால் ஆராய்ச்சி கட்டுரை எழுதும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தாலும், பல நேரங்களில் உங்கள் வெள்ளை பாஸ்கள் உங்களுக்கு நேடிவ் லாங்குவேஜ் ஆங்கிலம் இல்லை என்று சொல்லி ஒதுக்கலாம். பல நேரங்களில் நீங்கள் கொடுக்கும் நல்ல யோசனைகள் எல்லாம் கண்டுகொள்ளபடாமல் போகலாம். அதுவும் நீங்கள் பெண்ணாக இருப்பின் இன்னும் மோசமே. பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக எம்.பி.ஏ படிப்பவர்கள் இங்கு அதிகம்.

மற்ற துறைக்கு எப்படி என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராக இருந்தாலோ உங்கள் வாழ்க்கை கிட்டதட்ட அந்தரத்தில் தொங்குவது போன்றது தான். முக்கால்வாசி நேரம் முனைவர் படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பை தேட முனைபவர்கள் முதலில் சேர்வது Postdoc fellowship எனப்படும் ஆராய்ச்சி ஸ்டைபண்டு தான். அந்த சம்பளம் மிக மிக சொற்பம். ஒரு சில நேரங்களில் உங்களுக்கு ஹைச் 1 விசா கிடைக்கலாம் இல்லாவிடில் எஃப் 1 விசா தான். அப்படி ஹைச் 1 கிடைத்து விட்டாலும் அப்பாடா என்று உட்கார முடியாது,  ஹைச் 1 விசாவை நம்பி இருப்பவர் என்றால் நீங்கள் ஒரு சொல்லப்படாத அடிமைதான். உங்கள் பாஸ் சொல்லும் அனைத்திற்கும் ஆட வேண்டும்.  ஒரு வேலை உங்களுக்கு ஹெச் ஒன் கிடைத்து, கீரீன் கார்டும் கிடைத்து விட்டால் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எங்கு வேலைக்கு சென்றாலும் நீங்கள் அங்கிருக்கும் பல வெள்ளை மனிதர்களை விட ஒரு படி கீழே தான் நடத்தபடுவீர்கள். இப்படி எனக்கு தெரிந்தே நிறைய பேர் படும் கஷ்டங்களை பார்த்து அனுபவித்தும் இருக்கிறேன்.

ஓ, அதெல்லாம் இல்லை எங்கள் கம்பெனியில் அதெல்லாம் கிடையாது, பாருங்கள் இப்போது மைக்ரோச்ஸாஃப்ட், கூகுளில் எல்லாம் நிறைய இந்திய வம்சாவளியினர் பெரிய பொஷிஷனில் இருக்கிறார்கள் என்று சொல்பவரா நீங்கள். அப்படியாயின் என்னுடைய பதில் ஒன்று தான் ”அவர்கள் கடந்து வந்த பாதை பற்றி நமக்கு தெரியாது”.


இப்போது எல்லாம் யாராவது என்னை கீழாக நடத்தினாலோ பேசினாலோ அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று போயிருக்கிறேன். ஆனால் எனக்கு இருக்கும் பயம் எல்லாம் முகுந்த் தலைமுறை எப்படி இருக்கும்/அல்லது முகுந்துக்கு எப்படி இதை எல்லாம் சொல்லி கொடுப்பது என்பது தான்.

 சில நாட்களுக்கு முன் எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இங்கு இருக்கும் மியூசியம் சென்றிருந்தோம். அங்கு ”நேச்சர் ஃக்வெஸ்ட்” என்று சில ஊர்வனவற்றை பற்றி செய்முறை விளக்கம் அளித்தனர் சில இளவயது பெண்கள். பார்வையாளர்களாக பல வெள்ளை குழந்தைகளும் சில கருப்பு குழந்தைகளும் முகுந்தும் இருந்தனர். செய்முறை விளக்கம் அளித்த பெண்கள் பல கேள்விகளை குழந்தைகளிடம் கேட்டனர். அப்படி அவர்கள் கேட்ட கேள்விக்கு வெள்ளை குழந்தைகளிடம் இருந்து மட்டுமே பதிலை பெற்று கொண்டனர். கருப்பு குழந்தைகளோ அல்லது முகுந்தோ கையை தூக்கினாலும் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதை எல்லாம் பார்த்து பார்த்து வெறுப்படைந்தாலும் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். ஆனால் முகுந்த் எந்த வித சலனமும் இல்லாமல் திரும்ப திரும்ப கையை தூக்கி கொண்டிருந்தான். பின்னர் பொறுமை இழந்து “Why are you not asking me?" என்று கேட்டே விட்டான். அதன் பின்னர் அந்த பெண்மணிகள் அவனிடம் ஒரு பதில் கேட்டனர்.

அப்பொழுதே நம்பிக்கை வந்துவிட்டது. இந்த தலைமுறை எதையும் தாங்கிகொண்டு செல்பவர்கள் அல்லர், தமக்கு உரிமையானதை எப்படியாவது கேட்டு வாங்கி கொள்வார்கள் என்று. இருப்பினும் மீண்டுவருவது/சாதிப்பது எப்படி என்று குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியது முக்கியம் என்று நினைக்கிறேன்.

First they ignore you, then they laugh at you, then they fight you, then you win.






 

Monday, January 20, 2014

நுனிப்புல் தலைமுறை!


நீண்ட நாட்களுக்கு பின்னொரு பதிவு. மனதில் நெடுநாட்களாக அரித்து கொண்டிருந்த இந்த விடயம் குறித்து பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா வில் கண்ட  கேட்ட கருத்துகளுக்கு பின்னர் இதனை இன்று பதிய முடிவெடுத்தேன்.

சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் வேலை பார்க்கும் சிலருடன் ( அனைவரும் தமிழர்கள் ) சாப்பிட சரவணா பவன் சென்றிருந்தேன். சாப்பாடு முடித்து காப்பி கொண்டு வரச்சொல்லி காப்பியும் வந்தது. அப்போது நான் "காப்பியை ஆற்றி குடிக்கும் போது தான் சுவையே!" என்று சொன்னேன். உடனே என்னுடன் வந்திருந்த சென்னை பெண், "நீங்க pure தமிழ் பேசுறீங்க" என்றாள். " இப்பெல்லாம் யாரும் சுவைன்னு சொல்லதில்ல, எல்லாரும் taste அப்படித்தான் சொல்லுறாங்க" என்றாள்.


அதன் பிறகு இட்லி பற்றிய பேச்சு வந்தது அப்போது நான் " இட்லி ரொம்ப ஆரோக்கியமானது ஏனென்றால் அதை அவிப்பதால்" என்றேன். உடனே சாப்பிட வந்திருந்த பல இளைய தலைமுறை தமிழர்கள் "அவிக்கிரதுன்னா என்ன?"  என்றார்கள்.  எனக்கு தூக்கி வாரி போட்டது.   பிறகு அவிப்பது என்றால் என்ன என்று நான் விவரிக்க பிறகு கேட்ட அனைவரும் " oh, steam பண்ணுறது, ஓகே." என்றார்கள்.

 மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் மொழி அறிவு  முக்கியம்.  அது எந்த மொழியாயினும் சரி,  தமிழ் மட்டும் என்று இல்லை.  அனைத்து மொழிக்கும் இதே நிலை என்று தான் தோன்றுகிறது.
இப்படி என்னுடன் அரைகுறை மொழி பேசியஅனைவரும் தமிழ் மொழியை கட்டாய பாடமாக படித்தவர்கள் அல்லர். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை பாடமாக படித்தவர்கள்.   தமிலிஷ்  ஒரு பேச்சு மொழியாகவே இவர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்.

சரி  தமிழுக்கு தான் இந்த நிலை என்று நீங்கள் ஹிந்தியிலோ அல்லது வேறு மொழியிலோ கேள்விகள் கேட்டாலோ அல்லது புத்தகங்கள் பற்றி கேட்டாலோ இவர்கள் முழிக்கிறார்கள். எந்த மொழியாயினும் 20  முதல் 100  வார்த்தைகள் மட்டுமே இவர்களுக்கு தெரிந்தது.  இவற்றை வைத்து எப்படி சொற்றொடர் அமைப்பது என்று சிலர் கற்று கொண்டு மீதி ஆங்கிலம் கலந்து பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.  

  சரி எல்லாவற்றிலும் ஆங்கிலம் கலக்கிறார்களே இவர்களுக்கு நன்கு ஆங்கிலம்  தெரியும் என்று நினைத்தால் அதிலும் மண் விழும்.  பலருக்கு syllable என்றால் என்ன என்று தெரியாது. Soft c, hard c எப்போது உபயோகிப்போம் என்று தெரியாது.  இவர்கள் அனைவரும் எந்த ஆங்கில புத்தகத்தையும் படித்திருக்க மாட்டார்கள், அப்படி படித்திருந்தாலும் Sydney Sheldon, Jeffrey Archer உடன் நின்றுவிடும்.
 
எந்த மொழியும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றிலும் நுனிப்புல் மட்டுமே மேய்வதால் எல்லாவற்றிலும் குழம்பி ஒரு கூட்டான்சோறு மொழியை மட்டுமே இவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது திண்ணம்.
 
இது நான் சந்தித்த நுனிப்புல் தலைமுறை இளைங்கர்களை பற்றி என் அவதானிப்பு  மட்டுமே.
 
நன்றி.