Sunday, March 29, 2015

தனிமை கொடியது!

சமீபத்தில் "The Iron Lady" படம் பார்க்க நேர்ந்தது. பிரிட்டனின் முன்னால் பிரதமர் திருமதி மார்கரெட் தாட்செர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்டது.  ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்த மெரில் ஸ்ட்ரீப் அவர்கள் மார்கரெட் தட்செர் ஆக நடித்து அசத்தி இருந்தார்கள். அதுவும் வயதான தட்சேர் ஆக அவர் நடிப்பு பிரமாதம்.



நான் மார்கரெட் தட்சேர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முன் வாசித்ததில்லை, அறிந்ததில்லை. முதல் பெண் MP ஆக பாராளுமன்றம் சென்று படிப்படியாக முன்னேறி பிரதமர் ஆகி, பல கடுமையான முடிவுகள் எடுத்து அதன் லாப நஷ்டங்களை எதிர்கொண்டு எப்பொழுதும் தன் முடிவில் பின் வாங்காமல் நிலையாக நின்று சாதித்த பெண் அவர்.அந்த படமும் அவரின் அரசியல் வாழ்கையை விட்டு விட்டு அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நிறைய சொல்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் கணவர் டேனிஸ் உற்ற துணையாக இருந்தது. அவரின் இரட்டை குழந்தைகளை கவனிக்க நேரமில்லாமல் பிரத்தமராக அவர் போராடியது, அவரின் கணவர் இறந்த பிறகு தனிமை உணர்வுடன் தன் கணவர் தன்னுடன் வாழ்வதாக அவர் கற்பனை செய்து வாழ்ந்தது, முடிவில் பைத்தியமா ஆனது  ....என்று நிறைய சொல்கிறது.

இந்த படம் பார்த்தபிறகு எனக்கு என் பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு பாட்டியம்மா நினைவுக்கு வந்தார்கள். எப்படியும் வயது 85 இருக்கும். தனியாக ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறார்கள். பண விசயத்தில் பிரச்னை இல்லை. ஆனால் யாரும் பார்த்து கொள்ள இல்லை ஒரு நர்சை தவிர. அவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து போனார். அவரின் 60வயது மகன் வந்து வீட்டு வேலை செய்வார். எப்போது யார் அவர் வீட்டு வழி சென்றாலும் கூப்பிட்டு வைத்து பேசுவார். எப்போது முகுந்த் சென்றாலும் "Hello Mr.Little man" என்று பேசுவார். காது சரியாக கேட்காது என்றாலும் ஏதாவது பேசி கொண்டே இருப்பார். எப்படியும் அவரிடம் சென்றால் குறைந்தது 15 நிமிடங்களாவது ஆகும். வாக்கிங் போகும் அனைவருடனும் பேசி விடுவார். அந்த நெய்பர்ஹூடில் இருக்கும் அனைவரையும் அந்த பாட்டியம்மாவிற்கு தெரியும். தன்னுடைய தனிமையில் இருந்து தப்பித்து கொள்ள இப்படி ஒரு வழி அவர்க்கு.

அதே போல எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுகாரர் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன் கான்சரில் இறந்து போனார். கிட்டத்தட்ட 4-6 வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்தஅவரை இவர் கண்ணும் கருத்துமாக  கருத்துமாக பார்த்து கொண்டார். செர்வீஸ் வைத்து இருந்தார்கள். நாங்கள் சென்றிருந்த பொது அவர் கண்ணீருடன் சொன்னது இது "நோயாளியாக இருந்தாலும் யாரோ ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்ற நினைவு நிம்மதியாக இருந்த்தது, ஆனால் இப்போது வீட்டில் இருக்கும் வெறுமை கொடுமையாக இருக்கிறது.இப்போதும் அவள் இறந்த 4 மணிக்கு எனக்கு முழிப்பு வந்து விடுகிறது" என்று சொன்னதும் எல்லாருக்கும் கண்கள் கலங்கின.

என் அப்பா இருந்த வரை என் அம்மாவும் அப்பாவுக்கும் இடையே ஏதாவது சொல்லி கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு என் அம்மாவிடம் தினமும் என் அப்பா பற்றிய பேச்சு வராமல் இருந்ததில்லை. எல்லாரும் இருந்ததாலும் தன் வாழ்க்கை துணை கூட இருப்பது போல இருப்பதில்லை. ஆணாக இருந்ததாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமை அதுவும் வாழ்க்கை துணை இல்லாத தனிமை மிக கொடுமையானது.  சண்டை போட்டுகிட்டே இருந்தாலும் சரி,
நோயாளியாக இருந்ததாலும் சரி கூட இருக்கும் தன வாழ்க்கை துணை இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இது எந்த நாடாக இருந்தாலும் சரி இல்லை எந்த இனமாக, மதமாக, நிறமாக இருந்தாலும் சரி எல்லா மக்களுக்கும் பொது. தனிமை கொடியது.

நன்றி








 

3 comments:

ஹுஸைனம்மா said...

/"நோயாளியாக இருந்தாலும் யாரோ ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்ற நினைவு நிம்மதியாக இருந்த்தது, ஆனால் இப்போது வீட்டில் இருக்கும் வெறுமை கொடுமையாக இருக்கிறது.//

படுக்கையில் இருக்கும் நோயாளி இறந்தால் நிம்மதி என்று நினைக்கும் நிலையில், இப்படி ஒரு வித்தியாச எண்ணம் வியக்க வைக்கிறது!! இப்படிச் சொல்லுமளவுக்கு, தனிமை எத்தனை கொடுமையானது!!

பலரின் பதிவுகளிலும், அனுபவங்களிலும் கண்டு அறிந்துகொண்டது, முதுமையில் தனிமை என்பதுதான் மிகக் கொடுமையானது என்று. இறைவன் எல்லாரையும் காப்பானாக.

Deiva said...

Completely agree

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

யாருக்கு என்ன? எழுதியுள்ளதோ?
பயம் உண்டு!