Sunday, March 27, 2016

அமெரிக்க மற்றும் இந்தியா பள்ளி ஆண்டு விழா பெயரில் நடக்கும் கூத்துகள்!

இது நோர்தேன் ஹெமிஸ்பியர் இல் இருக்கும் பல நாடுகளில் பள்ளி இறுதி தேர்வு நடக்கும் காலம்.

ஒவ்வொரு நாட்டிலும் அதன் தட்ப வெப்ப நிலை பொறுத்து வேறு வேறு மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு நடக்கலாம். இந்தியாவில் பல பள்ளிகளில் முக்கால் வாசி நேரம் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு கோடை விடுமுறை மாதங்கள் ஆகும். ஏனெனில் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் கோடை காலம் ஏப்ரல் மே மாதங்கள் என்பதால்.

அமெரிக்காவில் பல மாகாணங்களில் மே, ஜூன் மாதம் தான் பள்ளி இறுதி தேர்வு அல்லது பள்ளி முடிவு ஆகி ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் விடுமுறை இருக்கும். ஏனெனில் அமெரிக்காவில் ஜூன் ஜூலை மாதங்கள் தாம் கோடை காலம். கனடாவில் செப்டம்பர் மத்தியில் பள்ளி திறக்கும் என்று நினைகிறேன்.  

நிற்க, இந்த பதிவு கோடை காலங்கள் எப்படி நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன என்பதனை குறித்தவை அல்ல. மாறாக பள்ளி ஆண்டுவிழாக்கள் என்ற பெயரில் செய்யும் சில விஷயங்கள்/கூத்துக்கள் குறித்தவை.

இந்திய பள்ளி ஆண்டுவிழாக்கள் 

இந்தியாவில் பல பள்ளிகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி ஆண்டுவிழாக்கள் நடத்துகின்றன. அதில் நம் குழந்தைகளும் நடனம் ஆடட்டும் என்று பல பெற்றோரும் அதனை ஊக்க படுத்துகின்றனர். நான் சொல்வது எலிமெண்டரி ஸ்கூல் ஆண்டுவிழாக்கள் என்றாலும் பல உயர் நிலை பள்ளிகளும் இதனை நடத்துகின்றன என்று அறிய முடிகிறது. நம்ம குழந்தைகளுக்கும் ஒரு சான்ஸ் என்று நிறைய பெற்றோர் இப்போது நினைப்பதை பார்க்க முடிகிறது. இதனை சாக்காக வைத்து கொண்டு தனியார் பள்ளிகள் செய்வது சில நேரங்களில் ஓவர். முதலில், ஆண்டுவிழாக்களில் குழந்தைகளுக்கு டிரஸ் நாங்களே கொடுத்து விடுவோம், நீங்கள் எங்களுக்கு குறிப்பட்ட தொகை மட்டும் கொடுத்துடுங்க என்பார்கள். சரி நமக்கு தொல்லை விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொடுக்க தொடங்கினால் பட்டியல் நீளும்.

டிரஸ்க்கு, உபயோகிக்கும்பொருட்களுக்கு, டான்ஸ் சொல்லி கொடுப்பவருக்கு என்று ஒவ்வொருன்றுக்கும் தனி தனியாக பணம் கேட்பார்கள். இதில் முக்கால் வாசி நேரம் வெளியில்  இருந்து எந்த டான்ஸ் மாஸ்டரும் வர மாட்டார், மாறாக உள்ளுக்குளே இருக்கும் பள்ளி ஆசிரியர் நடனம் சொல்லி கொடுப்பார்.  அதில் காசு பார்பார்கள் பள்ளி நிர்வாகம். அடுத்து பிள்ளைகளுக்கு எடுக்கும் உடைகளுக்கு என்று குறைந்தது 1500 இல் இருந்து 2500 வரை வசூலிப்பார்கள். ஆனால் LKG, UKG, முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு என்று ஒரே மாதிரி டிரஸ் வாங்க எப்படியும் ஆகும் செலவு 600 இல் இருந்து 800 வரை மட்டுமே ஆகும். மீதி உள்ள பணம் எல்லாம் பள்ளிக்கு. அதே போல ப்ரோப்ஸ் அதற்க்கும் சேர்த்து காசு அடிக்கிறார்கள்.

இப்படி பெற்றோரிடம் அடிக்கும் காசிலேயே அவர்களின் தனியார் பள்ளிக்கு விளம்பரம் செய்து கொள்ளுகிறார்கள். முடிவாக பங்கு பெரும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் போன்ற பரிசுகள் கொடுத்து நல்ல பேரு வாங்கி கொள்ள முனைவது.

அமெரிக்க தமிழ் பள்ளி ஆண்டுவிழாக்கள் 

சரி இந்தியாவில் நடக்கும் பள்ளி ஆண்டுவிழாக்கள் தாம் அப்படி இங்கெல்லாம் ஆண்டு விழாக்கள் நடக்குமா? என்று கேட்பவர்களுக்கு. ரெகுலர் பள்ளிகளில் ஒரு சில நேரம் பாடல்கள் அல்லது மியூசிக் ரீசைடல், கோரஸ் மியூசிக் போன்றவை நடக்கும். ஆனால் இந்திய அமெரிக்கா வார இறுதி நாள் மொழி பள்ளிகளில் எல்லாம் நம்ம ஊரில் நடப்பது போல குழந்தைகள் பங்கு பெரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடக்கும். இறுதியில் பள்ளி இறுதி வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியும்  நடக்கும்.

இது போன்ற நிகழ்ச்சிகளை பள்ளிகள் நடத்துவது இல்லை, மாறாக உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களிடம் ஒரு குரூப் இருந்தால் நீங்களே பதிவு செய்து பங்கு பெறுங்கள் என்று விண்ணப்ப படிவம் பள்ளியில் இருந்து அனுப்புவார்கள். அதற்க்கு பிறகு யாரெல்லாம் விண்ணப்பம் அனுப்புகிறார்களோ அவர்களிடம் யார் யார் பங்கு பெறுகிறார்கள், குழந்தைகள் பெயர்கள் , யார் ஒருங்கிணைபாளர்கள் என்று பதிவு செய்கிறார்கள். பின்னர் பள்ளியின் சார்பில் எவென்ட் ஒருங்கிணைபாளர்கள் குழு நடன ஒருங்கினைபாளர்களை தொடர்பு கொள்ளுவார்கள். இதில் அனைவரும் தன்னார்வ தொண்டர்கள் என்பதால் பணம் என்னும் விஷயம் இருப்பதில்லை.

அமெரிக்காவில் மட்டும் பல பல தமிழ் பள்ளிகள் "கலிபோர்னியா தமிழ் அகாடமி" பாட திட்டங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கின்றனர். நாங்கள் இருக்கும் ஜியார்ஜியாவில் தமிழ் ஒரு மொழி பாடமாக படிக்கலாம் கிரெடிட் வாங்கி கொள்ளலாம் என்பதால் ஒவ்வொரு வருடமும் நிறைய குழந்தைகள் பள்ளி இறுதி தெரிவு முடிந்து பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.

அடடா, பரவாயில்லையே வெளி நாட்டுக்கு சென்றும் தமிழை எப்படி எல்லாம் வளர்கிறார்கள். பணம் என்பதே இல்லை போல, எல்லாரும் எல்லாமும் சமம்,  என்று யாராவது நினைக்க ஆரம்பித்தால்..ப்ளீஸ்  ஸ்டாப். ஏனெனில் நான் மேலே சொன்னவை எல்லாம் நல்ல விஷயங்கள் அல்லது அனைவராலும் பரப்பப்படும் விஷயங்கள் மட்டுமே.

இங்கும் பணம் என்ற ஒன்று உண்டு அது பள்ளிகளிடம் இருந்து கேட்கபடுவது இல்லை. மாறாக "தமிழ் சங்கங்கள்" இதனை கேட்கும். உதாரணமாக, தமிழ் பள்ளிகள் அனைத்தும் தமிழ் சங்ககளின் கீழ் இயங்குகின்றன என்பதால் ஆண்டு விழாக்கள் எல்லாம் தமிழ் சங்கங்கள் நடத்து கின்றன.  ஒவ்வொரு ப்ரோக்ராமும் நடன குழுக்களை சார்ந்தது, அவர்களே குழந்தைகள் துணி மணி, ப்ரோப்ஸ், எல்லாம் கொண்டு வர வேண்டும்.

2 மணிக்கு ப்ரோக்ராம் ஆரம்பிக்கும் ஆனால் 1:30 கே பங்கு பெரும் அனைத்து நடன குழுக்களும் இருக்க வேண்டும் என்பார்கள். இதில் பங்கு பெற வரும் குழந்தைகள் அல்லது பெற்றோர்களுக்கு நாங்களே சாப்பாடு போடுகிறோம் வாங்கி கொள்ளுங்கள் என்பார்கள். சரி என்று நடன குழுக்களும் , பங்கு பெரும்  குழந்தைகளும் அங்கு சாப்பாடு வேண்டும் என்று புக் செய்தால் நடப்பது கொடுமை. 8$, 6$ என்று கேட்பார்கள், ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாடு 1$ அல்லது 2$ மட்டுமே.  எதோ பிரசாதம் போல இருக்கும். இதுக்கு போய்  8$ ஆ கொடுமை என்று தலையில் அடித்து கொள்ள வேண்டும்.

இதனை தவிர நிறைய நகை, இஷா யோகா அல்லது சாப்பாட்டு கடை என்று விளம்பர ஸ்டால்கல் வைக்க அந்த அந்த கம்பனிகளிடம் இருந்து பணம் வாங்கி கொள்ளுவார்கள். அதனை தவிர ப்ரோக்ராம் அறிவிக்க என்று பெரிய ஸ்க்ரீன் வைப்பார்கள் ஆனால் அதில் முக்கால் வாசி நேரம் விளம்பரங்கள் மட்டுமே ஓடும். அனைத்தும் அட்வேர்டிசிங் பணம்.

நடக்கும் ப்ரோக்ராம் எல்லாம் அந்த அந்த நடன குழுக்களை சார்ந்தது என்பதால் தமிழ் சங்கத்துக்கு எந்த செலவும் இல்லை. பணிபுரிபவர்கள்  எல்லாரும் தன்னார்வ தொண்டர்கள், அதனால் சம்பளம் என்று எந்த செலவும் இருப்பதில்லை. விழா மேடை ஒலி ஒளி செட்டிங் போன்ற ஒரு சில செலவு விஷயங்கள் தவிர பெரிய செலவு என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்தும் கொள்ளை லாபம், தமிழ் சங்கத்துக்கு என்று சொல்லி கொள்ளுகிறார்கள். யாருக்கு செல்கிறதோ?

இது ஒரு புறம் இருக்க, பள்ளியில் இருக்கும்  எவென்ட் ஒருங்கினபாளர்கள் அல்லது ஒருங்கிணைபாளர்கள் குழு செய்யும் பாரபட்சம், ஐயோ சாமி என்று இருக்கும். அதாவது, அவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் குழந்தைகள் பங்கு பெரும் நிகழ்சிகள் எனில் நல்ல டைம் ஸ்லாட் கொடுப்பது, அல்லது நிறைய நேரம் ஆட கொடுப்பது. அவர்களுக்கு தெரிந்த நடன குழுக்கள் மட்டுமே உற்சாக படுத்துவது மற்ற குழுக்கள் எனில், தற்பொழுது ஸ்லாட் இல்லை வேறொரு டைம் முயற்சி செய்யுங்கள், இல்லை இவ்வளவு நேரம் மட்டுமே கொடுக்க முடியும், இந்த பாட்டு நாங்கள் ஆட வைத்து இருக்கிறோம், வேறு ட்ரை செய்யுங்கள் என்று பாட்டை பாதியில் மாற்றுவது, வேறு குரூப் முதலிலேயே ஆட இருக்கிறார்கள், என்று பந்தா காட்டுவது.

ப்ரோக்ராம் நேரங்கள் எப்பொழுது நடக்கும் என்று தனக்கு தெரிந்த குழுக்களுக்கு மட்டும் அறிவிப்பது, மற்ற குழுக்களை கண்டு கொள்ளாமல் அல்லது செய்திகள் நிகழ்ச்சி நிரல்களை சொல்லாமல் விடுவது. என்ன டைம் எங்கள் ப்ரோக்ராம் என்று சென்று கேட்டாலும் எரிந்து விழுவது என்று..இந்த பந்தா பேர்வழிகள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாதவை.

உலகின் எந்த மூலை சென்றாலும் மக்களின் பணமும் பதவியும் அதிகார வேட்கையும் மாறாதவை என்பது திண்ணம்.


டிஸ்கி 

5 டு 6 வயது சிறு குழந்தைகள் வைத்து GATS தமிழ் பள்ளிகள் நடத்திய தமிழ் பள்ளிகள் ஆண்டு விழாவில் குழு நடன ஒருங்கினைபாளாராக இருந்து நான் அனுபவித்த விடயங்களின் தொகுப்பே இது. இது என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே.

7 comments:

வேகநரி said...

நீங்கள் சொன்ன அதே குற்றசாட்டுக்கள் தமிழ் சங்கங்கள் மீது மேற்குலகநாடுகளில் நானும் கேட்டிருக்கேன். காசு அடிப்பது தான் குறிகோள்.நடன தமிழ் ஆசிரியர்கள் வெளிநாட்டில் லட்சாதிபதிகள். அவர்கள் வருமானம் வருமானவரிகட்டாத அவ்வளவும் கறுப்பு பணம்.

//அடடா, பரவாயில்லையே வெளி நாட்டுக்கு சென்றும் தமிழை எப்படி எல்லாம் வளர்கிறார்கள். பணம் என்பதே இல்லை போல, எல்லாரும் எல்லாமும் சமம், என்று யாராவது நினைக்க ஆரம்பித்தால்..ப்ளீஸ் ஸ்டாப்.//
:) சொந்த ஊரிலேயே தமிழை மதிப்பதில்லை. ஆனால் வெளிநாட்டில் தமிழை வளர்க்கிறார்கள் என்று சொன்னால் பரவசம் அடைந்து விடுகிறார்கள்! வெள்ளையினத்தவர்கள் எல்லாம் தமிழ்படிக்க தொடங்கிவிட்டார்கள் என்று நம்புகிறார்கள் போலும்!
உலகின் எந்த மூலை சென்றாலும் - தமிழ் மக்களின் - பணமும் பதவியும் அதிகார வேட்கையும் மாறாதவை என்பது அசைக்க முடியாத உறுதி.

சுந்தரவடிவேல் said...

அமெரிக்காவில் இயங்கும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களில் தன்னார்வலர்களாக இயங்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாது, அவர்களது உழைப்பைப் பணம் சம்பாதிக்கும் நோக்கம் என்று நீங்கள் மலினப்படுத்துவதைக் காண வேதனையாக இருக்கிறது. உண்மைகளை நீங்கள் புரிந்துகொண்டு பிறகு எழுதலாம். பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு அமெரிக்காவிற்கு வரும் பலரிடமும் தமிழ் உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல் இருக்கிறது. ஒரு திரைப்படத்துக்கு 20-30 டாலர்களைக் கொடுத்துச் செல்லும் கூட்டம் இருக்கும், ஆனால் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்கு 5 டாலருக்குக் கணக்குப் பார்ப்பார்கள். குடும்பம், வேலை என்று ஆயிரம் வேலைகளுக்கு நடுவிலும் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பள்ளி என்று உழைப்பவர்களைத் தயவு செய்து கொச்சைப் படுத்தாதீர்கள். சீன, யூதக் கலாச்சாரங்களைப் பார்த்துத் திருந்துங்கள். எல்லாவற்றையும் எல்லாவற்றோடும் ஒப்பிட்டுக் கொண்டே இருக்காதீர்கள், அது ஒரு மனோவியல் குறைபாடு. நான் இருக்கும் சார்ள்ஸ்டன் (உங்கள் மாநிலத்துக்கு அருகில்தான்) நகரில் பனைநிலத் தமிழ்ச் சங்கம் இயங்குகிறது. வந்து பாருங்கள். பொத்தாம் பொதுவாக காசு காசு என்று சில்லறைத் தனமாகப் பேசாதீர்கள். உங்கள் குறைகளை உங்கள் சங்க நிர்வாகிகளோடு பேசுங்கள். உங்கள் சங்க நடவடிக்கையில் நேரடியாக நீங்களே ஈடுபடலாமே. ஒவ்வொரு சங்கமும் தேர்தல் நடைமுறை வைத்திருக்கும். அமெரிக்க லாபநோக்கற்ற நிறுவனங்களுக்கெனச் சட்டம் உண்டு. அதன்படி நீங்கள் கணக்குக் கேட்கும் உரிமை இருக்கிறது. உதாரணமாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தனது வரவு செலவை இணையத்திலேயே வெளியிடுகிறது. குறைகள் இல்லாத இடமில்லை. ஆனால் அதனைத் திருத்தும் உரிமை உங்களிடத்தில் உண்டு. அதைச் செய்யுங்கள். அதை விடுத்து, பணம் என்று அலைகிறார்கள், அதிகாரம் என்று அலைகிறார்கள் என்று கிணற்றுத் தவளை வசனம் பேசாதீர்கள். ஆர்வமாக உழைத்து வருபவர்களை அசிங்கப் படுத்தாதீர்கள், அது மொழிக்குச் செய்யும் தீங்காகவே இருக்கும். வேறு ஏதேனும் மேலதிக விபரம் தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளலாம், உங்களுக்கு விளக்கத் தயாராகவே இருக்கிறேன். நன்றி!

Nals said...

I don't think you have the right understanding of the happenings. Tamil sankams are not going to make any big money of your 6 dollar meals.It is not the intention as well.

சீனிவாசன் said...

காசிக்கு போனாலும் கருமம் தொலையாது என்ற கதைதான் :p என்ன செய்வது? நம்மவர்கள் மனநிலை அப்படி. பொது நோக்கங்களின் பெயரில் தனிப்பட்ட நபர்கள் லாபமடைவது பெரும்பாலான இடங்களில் நடப்பதுதான்.

இதில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கிறது என்பதையும் எழுதியிருந்தால் இது உண்மையிலேயே தமிழ் வளர்க்க உதவுகிறதா என்பதையும் அறிந்து கொண்டிருப்போம். நூறு ஆண்டுகளை கடந்த பள்ளியில் படித்து வந்தவன் நான், ஒருகாலத்தில் எனது பள்ளியின் ஆண்டுவிழாவில் பக்திபாடல்களை தவிர வேறு எந்த சினிமா பாடல்களும் இடம்பெறாது. இப்பொழுதெல்லாம் காலம் மாறிவிட்டது, திரைப்பட பாடல்களே ஆண்டுவிழாவின் பெரும்பாலான நேரத்தை அடைத்து கொள்கிறது. அவையும் ஆபாசபாடல்களாக இருக்கின்றன, ஒரு முறை அருகிலுள்ள ஒரு பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு சென்று பத்து நிமிடங்கள் கூட நிற்க முடியாமல் அருவெறுப்புடன் வெளியேறிவிட்டேன். திரைப்படத்தின் போலி நகல்களான இவை தமிழையோ, மாணவர்களின் கற்பனைத்திறனையோ, திறமையையோ சிறிதும் வளர்ப்பதில்லை.

முகுந்த்; Amma said...

@ Sundara Vadivel
Sorry for the English font comment

Thanks for your comments and explanation.
First of all I never hurted or belittled any voluteers hard work and motivation,
because I myself is an volunteer and so is my husband.

Thanks for your information about Tamil sangam financial availability over Internet.

I was here mentioning about th personal experience on Tamil school annual day, and I'm not
Sure why you are comparing Cinema tickets .

Even Tamil sangams invite actor/ actresses directors or cinema world people or famous people
To do program, and they charge for tickets. If someone wants to participate in the program like
Pattimandram they need to pay money to participate or speak.

I might not know what's happening at other Tamil sangams, but can you vouch for them being clean
Because internal politics is ugly. People wants to come to Power and they are hungry for it.

I understand that nothing is perfect,but I don't see a point in why we should t mention about the
politics that's happening inside Tamil sangams and money involved in it and all.?


Further this is what I observe and I wrote that it's
My personal opinion and none are oblivious to criticisms..




ஆரூர் பாஸ்கர் said...

தமிழ் சங்கங்களை போத்தாம் போதுவாக குற்றம் சாட்ட முடியாது.சமீபத்தில் ஓரு தமிழ்சங்க பொருளாளரிடம் பேசினேன். பல நியாயமான பிரச்சனைகளை முன் வைக்கிறார்.

உங்கள் பிரச்சனைகளை தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆக்கபூர்வமாக செயல்படலாம் என்பது என் கருத்து.

இராய செல்லப்பா said...

பள்ளி விழாக்களைப் பொறுத்தவரை, பொறுப்பேற்று நடத்தும் ஆசிரியருக்குப் பிடித்தமான மாணவர்களுக்கே நல்ல time slot வழங்கப்படுவது கண்கூடு. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இதைக் கண்டிருக்கிறேன். அமெரிக்காவிலும் நம்மவர்கள்தானே இருக்கிறார்கள், வேறு எப்படி இருக்கும்?

(௨)பொதுக் காரியங்களுக்குப் பணம் கொடுக்க முன்வருபவர்கள் குறைவு. நடிகைகள் வந்தால் மட்டுமே தங்கள் மனதை தாராளமாகத் திறப்பவர்கள்தாம் மிகுதி. எனவே, நிகழ்ச்சி நடத்துபவர்களின் பாடு எப்போதுமே திண்டாட்டம்தான். இந்தியாவில் உள்ள நிலைமை இது. நம்மவர்கள்தானே அங்கும் இருக்கிறார்கள்? நல்ல காரியங்களுக்கு பர்சை திறந்தால் அல்லவா நடத்துபவர்களுக்கும் உற்சாகம் இருக்கும்? அப்படி இல்லாதபோது, தலா பத்து டாலர்களுக்காக ஆயிரம் பேரிடம் பிச்சை எடுப்பதை விட, ஆயிரம் டாலர் வீதம் பத்து விளம்பரதாரர்களிடம் பிச்சை எடுப்பது எளிதல்லவா என்று அவர்கள் யோசிக்க நேர்கிறது.

(3) தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்களை அப்படியே பிரதிஎடுத்து அமெரிக்கத் தமிழர்கள் நடத்தவேண்டுமா என்று யோசிக்கவேண்டும். வாழும் நாட்டின் பண்பாட்டுடன் ஒன்றிவிடுவதல்லவா வள்ளுவன் சொன்ன 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்?' அதை அமெரிக்கத் தமிழர்கள் செய்கிறார்களா? (இது பற்றி எனது அனுபவம் குறைவு - பலமுறை அங்குவந்து சென்றிருந்தபோதும்.)தங்கள் ஆதங்கம் நிச்சயமாகச் சில உண்மைகளைத் தெரிவிக்கிறது. அவை சீர்திருத்தம் செய்யபடவேண்டியவையே என்பதில் ஐயமில்லை. - இராய செல்லப்பா, சென்னை.