Friday, September 16, 2016

இந்திய அமெரிக்க திருமணங்கள், கல்யாணமாம் கல்யாணம்!!

எப்போதும் பிற கலாச்சாரங்கள் குறித்து பேச விவாதிக்க பிடிக்கும், அதிலும் எப்படி திருமணங்கள் நடக்கின்றன? அதற்க்கு ஆகும் செலவுகள் போன்ற பிற விஷயங்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது. வேலை விஷயமாக டல்லஸ் பயணம் அங்கு பிற நாட்டை சேர்ந்த பலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில், ரஷ்யா, அர்ஜென்டினா, பிரான்ஸ், துருக்கி, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய பலருடன் பேசிக்கொண்டு இருந்த போது எதேச்சையாக, அர்ஜென்டினா காரர் தனக்கு திருமணம் அடுத்த மாதம் என்றும் அதற்காக எவ்வளவு செலவாகிறது எத்தனை பேர் கெஸ்ட் அழைக்க போகிறேன் என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்த அவர், எப்படியும் 100-200 பேராவது அழைக்கவேண்டும், செலவு பயங்கரமாக இருக்கும். எப்படியும் ஒரு பிளேட் சாப்பாடு 200-250$ ஆகும், அதனை தவிர டிரஸ், ட்ரிங்க்ஸ் எல்லாம் சேர்ந்து எப்படியும் 50000$ ஆகலாம். பயமாக இருக்கிறது. என்று புலம்பி கொண்டு இருந்தார்.

உடனே, எல்லாரும் அவரவர் நாட்டில் நடக்கும் திருமணங்கள் குறித்தும், பேச ஆரம்பித்து விட்டனர். அதில் நான் அறிந்த சில விஷயங்கள் இங்கே.

முன்பெல்லாம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகை திருமண சடங்குகள் இருந்தது போய் தற்போது அனைவரும் ஹாலிவுட் சர்ச் வெட்டிங் போல, வெள்ளை டிரஸ், கருப்பு சூட் என்ற கலாச்சாரத்துக்கு மாறி விட்டு இருக்கின்றனர். இது, சீனா, துருக்கி போன்ற ஆசிய நாடுகளுக்கு பொருந்தும். அதாவது முன்பு போல சிவப்பு நிற பாரம்பரிய உடை அணிந்து நிறைய சீனா திருமணங்கள் நடப்பதில்லை போல. அனைவருக்கும் வெள்ளை உடைக்கு மாறி விட்டு இருக்கின்றனர். இதே போல ஒரு நிலை துருக்கி திருமணத்திலும் நிகழ்ந்து இருக்கிறது.

மற்றொரு உலகமயமாக்கல் விளைவாக கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும், தற்போது ரிசப்ஷன் என்பது சாம்பைன் குடிப்பது, டான்ஸ் ஆடுவது , கேக் வெட்டுவது என்றாகி இருக்கிறது.

மற்றொரு விஷயம், இங்கே நடக்கும் தெற்காசிய நாடுகளை சேர்ந்த மக்கள் திருமணங்கள் எல்லாம்  3-4 நாட்கள் நடக்கின்றன. இது இந்தியா, பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்து குடியேறிய அனைவரும் வடஇந்தியாவில் நடப்பது போல, மெஹந்தி, பாராத்(மாப்பிளை அழைப்பு)கல்யாணம்  மற்றும் ரிசப்ஷன். என்று நடத்துகிறார்கள்.

அதிலும், இந்தியன் அமெரிக்கன் கல்யாணங்களில் இப்போதெல்லாம் குதிரையில் அல்லது யானையில் மாப்பிள்ளை அழைப்பு இந்தியாவில் நடப்பது போல  நடக்கிறது.அதற்காகவே அதிகம் செலவழிக்கும் பழக்கம் இந்தியர்களிடையே நடக்கிறது. இதற்க்கு போட்டியே கூட நடக்கிறது. நீ இவ்வளவு செலவு செய்கிறாயா?, நான் எவ்வளவு செலவு செய்கிறேன் பார்? என்ற போட்டி.
photo from Washingtonpost
இதனை குறித்த ஒரு செய்தியையும் பாகிஸ்தானிய நபர் சொன்னார். அது அமெரிக்காவில் நடக்கும் இந்திய திருமணங்கள் எவ்வளவு ஆடம்பரமான நிகழ்ச்சிகள் என்பதை குறிக்கும் https://www.washingtonpost.com/business/2015/02/13/89e874e8-b210-11e4-886b-c22184f27c35_story.html வாஷிங்டன் போஸ்ட் செய்தி.

மற்ற கலாச்சாரங்களில் திருமணம் முடிக்க ஆகும் செலவு 50 ஆயிரம் டாலர்கள் எனில், இந்திய திருமணங்கள் அல்லது தெற்காசிய திருமணங்கள் முடிக்க ஆகும் செலவு எப்படியும் 250 ஆயிரம் டாலர்கள்.  இதில் ஒரு சில திருமணங்கள் எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் குடும்பம் உட்பட செய்த திருமணம் 1 மில்லியன் டாலர்கள். இது 4 நாட்கள் சடங்காக நடந்தது. எல்லா வட இந்திய சடங்குகளும் உள்ளடிக்கிய அந்த திருமணம். இத்தனைக்கும் அவர்கள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள்.

எனக்கு தெரிந்த இன்னொரு திருமணம் புளோரிடா அருகில் ஒரு தீவில் நடந்தது, US இல் இருந்து மட்டுமே 200-300 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதனை தவிர இந்திய சொந்தங்களும் பலரும் அழைக்க பட்டு இருக்க, அவர்கள் தங்கும் விடுதி, சாப்பாடு, 5 நாட்கள் சடங்கு என்று ஒரே களேபரம். இந்துவான இவர்கள், கிறிஸ்துவ முறைப்படியும் மோதிரம் மாற்றி கல்யாணமும் செய்து கொண்டார்கள். எல்லாரும் சொல்ல கேட்டது, இவர்களின் திருமணமும் 1 மில்லியன் டாலர் செலவு ஆனது என்று.

சராசரி அமெரிக்கர்கள் திருமணம் நடக்க ஆகும் செலவு 5 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை. இது அவரவர்கள் வசதியை பொறுத்து கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம். ஆனால் சராசரி திருமணத்திற்கு ஆகும் செலவை விட குறைந்தது 10 மடங்கு ஒவ்வொரு இந்திய அமெரிக்க திருமணமும் நடக்க செலவாகிறது அல்லது செலவழிக்க படுகிறது என்று இந்த செய்தி தெரிவிக்கிறது.

இது உண்மையா?, எல்லா திருமணங்களும் இவ்வளவு செலவு செய்து நடத்த படுகின்றனவா? தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த சில திருமணங்கள் இந்த அளவு செலவு செய்து நடத்தப்பட்டவை என்று நான் உறுதி கூறலாம்.


நன்றி.


2 comments:

ப.கந்தசாமி said...

இந்தியாவிலும் அதாவது தமிழ்நாட்டிலும் இப்போது சர்வ சாதாரணமாக ஒரு கல்யாணத்திற்கு ஒரு கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள். மண்டபம் அலங்கார்திற்கே 10-20 லட்சம் செலவழிக்கிறார்கள்.

என்னுடைய கல்யாணத்திற்கு 1964 ல் இரண்டாயிரம் ரூபாய் செலவழித்தேன். இன்று நான்கு நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சாப்பிடப் போனால் அந்த அளவு செலவு ஆகும்.

வேகநரி said...

//இந்துவான இவர்கள் கிறிஸ்துவ முறைப்படியும் மோதிரம் மாற்றி கல்யாணமும் செய்து கொண்டார்கள்.//
:)
பெருமைகுரியது என்று நம்பினால் போதும் தலிபான்கள் உடை அணிந்து, தாடி வைத்தும், டாலர்கள் செலவு செய்து திருமணம் செய்து கொள்வார்கள் இந்தியர்கள்.
தெரிஞ்சு இருப்பீங்க.83 கோடி ரூபாவில் தமிழகத்தின் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் அமைக்க போகிறார் தமிழக முதல்வர். ஏழை மக்கள் திருமண நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக செலவு செய்து நடத்த விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் திருமண மண்டபங்களில் வாடகையாக பணம் அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பதால் அதை சரியாக புரிந்து கொண்டு தமிழக முதல்வரின் தமிழர்களின் வாழ்கை தரத்தை உயர்த்தும் பிரமாண்டமான திட்டம் இது.ஏற்கெனவே ஏழை எளிய மக்களின் ஆசைகளைபுரிந்து கொண்டு தமிழக அரசே மது கடைகள் நடத்துகிறது.