Saturday, March 3, 2018

"மில்லியனல்ஸ்"/ஜென் Z " என்னும் ஐ, மீ, தலைமுறை!!!

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நாம்,  இது பாசிட்டிவ் விளைவை தரும் என்று நினைத்து செய்யும் பல விஷயங்கள் மறுபக்கத்தில் நெகடிவ் விளைவை தரலாம். அப்படி ஆன ஒரு விடயத்தை குறித்த பதிவு இது.

சில பல வருடங்களாக, பாசிட்டிவ் பேரெண்டிங் குறித்து நிறைய படித்து, பேசி இருக்கிறேன். எப்படி குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஊக்குவித்து, அவர்களின் ஒவ்வொரு அசைவிலும்  பின்னிருந்து உற்சாகப்படுத்துவது குறித்தது.

ஒவ்வொரு தலைமுறையும் தன்னுடைய அடுத்த தலைமுறை மக்களை பார்த்து குறை சொல்ல ஆரம்பிப்பது பொதுவாக நடப்பதுண்டு. உதாரணமாக, போன தலைமுறை அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறும் ஒன்று , “நாங்க எல்லாம் எப்படி கஷ்டப்பட்டு படிச்சோம் தெரியுமா!! “ என்று.  பிள்ளைகளிடம், உங்களுக்கு பொறுப்பே இல்லை என்று குறை சொல்லுவார்கள். அதனாலேயோ என்னவோ தான் பட்ட கஷ்டத்தை தனது பிள்ளை படக்கூடாது என்று தாராளமாக செலவு செய்வது, கடன் வாங்கியாவது பிள்ளைகளை படிக்க வைப்பது தொடர்ந்தது. “ போய், புள்ள குட்டிங்கள, படிக்க வையுங்கைய்யா!!” என்பது பொதுவான சொல்வழக்காக ஆகி இருந்தது.

இது நல்ல விஷயம் தானே!!, என்பவர்களுக்கு, இதன் அடுத்த பக்கம் குறித்த கிலிம்ஸ் இங்கே.

சரி, தற்போது விசயத்துக்கு வருவோம். வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்தால், அதிகம் வேலைக்கு அப்ளை செய்வது மில்லியனல்ஸ் எனப்படும் தலைமுறை. 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும்  பிள்ளைகள் மில்லியனல்ஸ் எனப்படுகின்றனர்,   முதலில் மில்லியானால் தலை முறை எண்பதுகளின் மத்தியில்  பிறந்த குழந்தைகளில் இருந்து 2000 ஆம் ஆண்டு தொடக்கம் வரை பிறந்த குழந்தைகளை குறிக்கிறது. ஓவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்கேல் வைத்து இருக்கிறார்கள் மில்லியனல்ஸ் தலைமுறைக்கு என்பதால் இது பொதுவாக குறிக்கப்படும் அளவீடுகளை வைத்து எழுதப்பட்டது. நான் பார்த்த வரையில் இப்பொழுதெல்லாம், சினிமாக்களில் பொதுவாக கதாநாயகன் இந்த தலைமுறையை சார்ந்தவனாக காட்டப்படுகிறார (1988-89 இறுதியில் பிறந்தவராக)



இந்த தலைமுறை மக்களிடம்  இன்டெர்வியூ செய்யும் போது,பொதுவாக எந்த சூழல் உங்களுக்கு அதிகம் மோட்டிவேட் செய்யும்,  அதிகம் சந்தோசம் தரும், என்று கேட்டு இருக்கிறேன். முக்கால் வாசி நேரம் அவர்களின் பதில், சிலிக்கான் வல்லேய் போல்,   1. பிரீ சாப்பாடு, 2. ரிலாக்ஸ் ஆன வேலை சூழல், 3. இன்டெரெஸ்ட்டிங் வேலை, 4. தாக்கம் ஏற்படுத்தும் வேலை என்று சொல்வார்கள்.  வேலைக்கு எடுத்தால், பயங்கர இன்டெரெஸ்ட்டிங் ஆக வேலையை  தொடக்கத்தில் கற்று கொள்வார்கள்.

சில மாதங்கள் கழித்து நீங்கள் அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். முக்கால் வாசி பேர், "மை ஜாப் சக்ஸ்",  சந்தோசமாக இல்லை,  இம்பாக்ட் இல்லாமல் இருப்பதாக சொல்வார்கள். எங்கள் கம்பெனியில், மூன்று மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ஒருவர், எனக்கு வேலை பிடிக்கவில்லை என்று ரிசைன் செய்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், எனக்கு ஒரே ஆச்சரியம்,  இங்கு "ப்ரோமோஷன் இல்லை, எனக்கு ரெகக்னிஷன் இல்லை, வேலை சேலஞ்சிங் இல்லை". என்பது.  சேர்ந்து 3 மாதத்தில் எப்படி ப்ரோமோஷன் கொடுப்பார்கள், இல்லை ரெகக்னிஷன் கொடுப்பார்கள், எப்படி சேலஞ்சிங் இல்லை என்று கண்டுகொண்டார்? என்று எனக்குள் கேள்வி.

இந்த தலைமுறை மக்களுக்கு எது சந்தோசம், எந்த மாதிரி வேலை சேலஞ்சிங் என்று நிறைய குழம்பி இருக்கிறேன். அப்போது,  "சைமன் சிமோக்" தன்னம்பிக்கை புத்தக, பேச்சாளர் உலகில் அதிகம் அறியப்படும் பெயர், அவரின்,  டெட் டாக் ஒன்றை கேட்க நேர்ந்தது. அதனை தொடர்ந்து மில்லியனல்ஸ் தலைமுறை பற்றிய ஒரு டைம் ஆர்டிகிள் ஒன்றும் படிக்க நேர்ந்தது. இந்த இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விசயங்கள் பகிரப்பட்டு இருந்தன.

சைமன், மில்லியனல்ஸ் தலைமுறையை ஆபிசில் வழி நடத்துவது எப்படி ஒரு கடினமான வேலை என்று கூறுகிறார். அவரும் நான் முன்பு பகிர்ந்ததை போன்ற விஷயங்களை பகிர்ந்து , அவர்கள் இப்படி செய்வதற்கான காரணங்களை விளக்குகிறார்.

 முதல் காரணம்: பெற்றோரின் வளர்ப்பு : 

பிள்ளைகளை செல்லம் கொடுத்து, கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறோம், தன்னம்பிக்கையுடன் வளர்க்கிறோம் என்று இந்த தலைமுறை பெற்றோர் பிள்ளைகளை பெரும்பாலும் வளர்கிறார்கள். பிள்ளைகள் பள்ளியில் கடைசியில் வந்தாலும் சரி, இல்லை பெயில் ஆனால் கூட, பரவாயில்லை என்று உற்சாகப்படுத்தியது.  எப்பொழுதும் தங்களுடைய குழந்தைகளை "நீங்கள் ஸ்பெஷல்" என்று சொல்லி, என்ன வேண்டுமோ அதனை தர/தந்த பெற்றோர்.  குழந்தைகளுக்காக டீச்சர்களிடம் சண்டை போட்ட பெற்றோர். தங்கள் குழந்தைகள் பெஸ்ட் நீங்கள் தான் சரியாக குழந்தைகளை ட்ரீட் செய்யவில்லை என்று கம்பளைண்ட் செய்த பெற்றோர்.

இதெல்லாம் சரியான அணுகுமுறையா? என்றால் failed parenting என்கிறார் சைமன் அவர்கள். ஏனெனில், இந்த தலைமுறைக்கு, தோல்வி தரும் வேதனையும்,அவமானத்தால்  முன்னேறும் உத்வேகம் வந்து அதன் பிறகு எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று  செயலாற்றுவதும் இல்லாமல் போய் விட்டது என்கிறார். எப்பொழுதும் ஒருவர் வென்று கொண்டே இருந்தால், தோல்வி என்பது என்னவென்று தெரியாமல்போய்  விடும், அடிபட்டு, மிதிபட்டு, வென்றால் மட்டுமே வெற்றியின் சுவை தெரியும்.

"நீ எப்பொழுதும் ஸ்பெஷல்"என்று  வளர்க்கப்பட்ட இந்த தலைமுறை ,வெளி  உலகில் விடப்படும் போது , வேலைக்கு வரும் போது , யாரும் அவர்க்ளை, "நீங்கள் ஸ்பெஷல்", என்று சொல்லவோ, எப்பொழுதும் ஏதாவது "அவார்ட், ரெகக்னிஷன்" கொடுக்கவோ மாட்டார்கள். இதனால் இவர்கள் ரெகக்னிஷன் இல்லை, சந்தோசம் இல்லை என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.  அடுத்தது என்ன என்று தேட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இரண்டாவது காரணம்: டெக்னாலஜி 

இந்த தலைமுறை அதிகம் சோசியல் மீடியா உபயோகித்த/உபயோகிக்கும் தலைமுறை. ஒவ்வொரு முறையும் செல்போன் ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், ட்விட்டர்  என்று தன்னை பற்றி
அதிகம் பப்லிஷ் செய்த தலைமுறை. எப்பொழுதும் போனும் கையுமாக "லைக்ஸ்/கிளிக்ஸ்/கமெண்ட்ஸ்" வருகிறதா என்று பார்த்த  தலைமுறை. ஒவ்வொரு முறை லைக்ஸ் வரும்போதும், மூளையில் ப்ளெஷர் சென்டர்இல் "டோபோமின்" சுரக்க ஆரம்பிக்கிறது. இது ஒரு இன்ஸ்டன்ட் சந்தோசம் தரும் ஹார்மோன். அதிகம் டோபோமின் சுரக்க சுரக்க, அதிகம் நம்மை பற்றி போஸ்ட் செய்ய ஆரம்பிப்பார்கள். இன்டர்நெட் அடிக்சன் எல்லா தலைமுறைக்கும் தற்போது இருக்கிறது என்றாலும், சிறு  வயது முதல் இந்த அடிக்சனில் இருப்பவர்கள் மில்லியனல்ஸ்.

இதே  "டோபோமின்", ஒருவர் தண்ணி அடிக்கும் போதும், சிகரெட் புகைக்கும் போதும்,  சீட்டாடும் போதும், ரிலீஸ் செய்யப்படும் ஒன்று, அதாவது, மற்ற போதை போல இதுவும் ஒரு வகை போதை. தன்னை முன்னிறுத்தி எப்போதும் மற்றவர்கள் தன்னை பற்றி பேச வேண்டும் என்று நினைக்க வைக்க நினைக்கும் போதை. இன்ஸ்டன்ட் க்ராடிபிகேஷன் அடைய/ந்த அதற்காக எல்லாமுமே செய்ய விளையும் தலைமுறை.

இந்த தலைமுறை எல்லாவற்றையும் உடனே, உடனே பார்த்து விடுகிறார்கள்.
எல்லாம் உடனே உடனே என்று பழக்கப்பட்ட இவர்கள், வேலையில் அங்கிகாரமும் உடனே வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெற்றிக்கு வெயிட் செய்வது, கஷ்டப்பட்டு உழைப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு பிடிப்பதில்லை. எல்லாமே உடனே அவர்களுக்கு நடந்து விடவேண்டும். "இப்பொழுதே, இங்கே, எனக்கு, எனக்கு" கிடைக்க வேண்டும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையோ, செயலோ இருப்பதில்லை.



மூன்றாவது காரணம்: மக்களுடன் எப்படி பழகுவது என்று அறியாமல் இருப்பது


இதனை கேட்டவுடன் பலரும், என்ன சொல்லுறீங்க, இந்த தலைமுறை தான் அதிகம் பேஸ்புக் நண்பர்கள் உள்ள தலைமுறை, எப்பொழுதும் "வெல் கன்னெக்ட்டடட் " தலைமுறை. இப்படி சொல்லும் பலரை கேட்டு இருக்கிறேன். ஆனால், இந்த தலைமுறை தங்களுடைய அனைத்து நண்பர்களையும் நிழல் உலகத்தில் மட்டுமே வைத்து இருக்கிறார்கள். அந்த நிழல் உலகில் தன்னை பற்றிய பல பல பிம்பங்களை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அந்த பிம்பங்கள் உடையாத வாறு மெயின்டைன் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த தலைமுறை மக்களுக்கு தன்னை பற்றிய சுயதேடல் அல்லது சுயமரியாதை மிக குறைவு. அடுத்தவர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைக்கவைக்க என்னென்ன தேவையோ அதனை செய்யும் அவர்கள், தன்னுடைய சுயம் என்ன?, என்பதை மறந்த தலைமுறை.

ஒரு நல்ல, நம்பிக்கையான நண்பர்/நண்பிகள் இல்லாத தலைமுறை இதுவாகத்தான் இருக்கும். வெளியே சுற்றவும், தண்ணி அடிக்கவும், சினிமா செல்லவும் அதிகம் கூட்டம் கூட்ட மெனக்கெடும் இந்த தலைமுறை, நல்ல அர்த்தமுள்ள, ஆழமான நட்பை வளர்க்க தவறி விட்டதென சொல்லலாம். அப்படிப்பட்ட நட்பை எப்படி வளர்ப்பது என்று தெரியாத தலைமுறையும் இதுவே. உண்மை நட்பை அறியவேண்டுமானால், நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். நீங்கள் மற்றொருவராக இருந்தால், அந்த மற்றொரு பிம்பம் மட்டுமே நீங்கள் என்று உங்கள் நண்பர்கள் அறிவார்கள். இந்த தலைமுறை, தன்னுடைய உண்மையான சொரூபத்தை காட்டாதவர்கள். எப்பொழுதும் ஒரு முகமூடி அணிந்து நடப்பதாலேயோ என்னவோ, உண்மையான நட்பு என்பது என்ன, எப்படி நட்புகளை உறவுகளை வளர்ப்பது என்று அறியாமல் வளர்க்கிறார்கள்.

இந்த நிலையில், ஆபிசில் வேலை செய்ய வேண்டும் என்றால், நீங்கள் மட்டும் அல்ல, உங்களை சுற்றி உள்ள மக்களுடன் பழக தெரிந்திருக்க வேண்டும். பீப்பிள் ஸ்கில்ஸ் மிக முக்கியம். ஆபிசில் நீங்கள் ஒருவர் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும், ஒருவர் மட்டுமே அனைத்தையும் தெரிந்திருக்க முடியாது. எப்பொழுதும் ஒரு   "டீம்" என்பதே ஒரு காரியத்தை சரிவர நிறைவேற்ற முடியும்.   அடுத்தவர்களுடன் எப்படி பழகுவது என்பதே அறியாத இந்த தலைமுறை, "தான், தான்", என்று மட்டுமே நினைக்கும் ஒரு தலைமுறை. இதனாலேயே, ஒரு "டீம்" என்று வந்துவிட்டால், இவர்களால்
சமாளிக்க முடிவதில்லை.

எனக்கு சைமன் அவர்களின் பேச்சை கேட்ட போது, அதனை சார்ந்த விஷயங்களை வாசித்த பொது, அதில் இருக்கும் உண்மையை நிதர்சனத்தை மறுக்க முடியவில்லை.  இந்த தலைமுறையை நினைத்து பாவமாக இருந்தது. அதிகம், சுயமரியாதை இல்லாத, சுயம் என்ற ஒன்று இல்லாத, பொறுமை இல்லாத, சோசியல் ஸ்கில்ஸ் இல்லாத, எப்படி அடுத்தவர்களோடு பழக வேண்டும் என்று அறியாத, சந்தோசமே இல்லாத ஒரு தலைமுறை உருவாகி இருக்கிறது/ உருவாகி கொண்டிருக்கிறது.  என்ன செய்து இவர்களை மீட்டெடுப்பது?


டிஸ்கி :

இது மில்லியனல்ஸ் தலைமுறை குறித்த என்னுடைய அனுபவங்கள், வாசித்த விடயங்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.  நன்றி

1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

நல்ல கருத்துகளை தொகுத்து வழங்கியதற்கு நன்றி!.

இளவயதில் அவர்களுடைய சுயத்தை அறியச் செய்வதே நல்ல கல்வி
அது இல்லாததே பெரிய குறை..