Thursday, March 29, 2018

எது சரி? எது தப்பு?: உளவியல் மற்றும் அறிவியல் பார்வை

ஒரு நிகழ்வு நடக்கிறது, நீங்களும் அந்த தருணத்தில் அங்கு இருக்கிறீர்கள், அந்த நிகழ்வை காணும் நாம் எப்படி அந்த நிகழ்வை குறித்து ஓர் முடிவுக்குவருகிறீர்கள் . அது சரியான முடிவா? இல்லை தவறான முடிவா?

ஒரு உதாரணம் எடுத்து கொள்ளுவோம். ஆபிசில் ஒரு மீட்டிங் நடக்கிறது. ஒரு முக்கியமான பிரச்னை குறித்து மேனேஜர் தெரிவிக்கிறார். அதன் தீர்வு என்ன என்று விவாதிக்கவே இந்த மீட்டிங். தற்போது உங்களுக்கும் அந்த மேனேஜர் க்கும் டெர்ம்ஸ் சரி இல்லை என்று வைத்து கொள்ளுவோம். அவர், என்ன சொல்ல வந்தாலும் அல்லது சொன்னாலும் அது தப்பாகவே தோன்றும்.  அதே நேரம், அந்த மேனேஜர்க்கு  உங்களுடன் நல்ல டெர்ம்ஸ் இருக்கிறது என்றால், அவர் சொல்வது எல்லாமே கரெக்ட் ஆக தோன்றும்.

ஏன் இப்படி நடக்கிறது. எது சரி? எது தப்பு?. முதலில் உளவியல் பார்வை.

மனோதத்துவத்தில் "Ladder of Inference" என்ற ஒரு தியரி உண்டு. அதாவது, தமிழாக்கத்தில் "ஊகிக்கும் படிநிலை". இந்த தியரி படி, ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் அந்த விஷயம் குறித்து நாம் ஒரு ஊகம் செய்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

Image from google images

1. இந்த படிநிலையில் முதல் படி," நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்", எந்த பில்டரும் இல்லாமல் நம்மை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இங்கே முதல் படி. என்னுடைய முந்தைய உதாரணத்தில், ஆபிசில் நடக்கும் மீட்டிங், அது நடக்கிறது. அங்கு கூடியிருக்கும் மக்கள், அவர்கள் முக பாவனைகள், அவர்கள் அமர்ந்திருக்கும் முறை. இப்படி பலவும் முதல் நிலை. "அதாவது , நம்மால் பார்க்க/கவனிக்க முடிந்த/முடியாத எல்லா  செய்திகள்/நிகழ்வுகள் கலவை"

2. இரண்டாவது படி, " நாம் பார்த்த செய்திகளில்/ நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்யும் நிகழ்வுகள்".  என்னுடைய உதாரணப்படி, அந்த மேனேஜர் என்னுடன் நல்ல டெர்ம்ஸ் இல் இருந்தார் எனில், அவருடைய செய்கைகள், அவரை ஆமோதிக்கும் அனைவரின் செய்கைகள் மட்டுமே என் மூளை செலக்ட் செய்யும். இல்லை, எனக்கு அந்த மேனேஜர் உடன் மோசமான முன் விரோதம் இருப்பின் என்றால், அவருக்கு எதிராக நடக்கும் எல்லா விஷயங்கள் மட்டுமே கண்ணில் சிக்கும், அல்லது மூளை செலக்ட் செய்யும். இந்த நேரத்தில், அந்த மேனேஜர் சொல்லும் சொல்லுக்கு எதிர் பேசும் ஒருவர் சொல்லுவது எல்லாமே கரெக்ட் ஆக தெரியும்.

3. மூன்றாவது படி, "நம்முடைய கற்பனை கலத்தல்", நடந்த நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்த நிகழ்வுகளில், நம்முடைய கற்பனை கலப்பது. உதாரணமாக, அந்த மீட்டிங்கில், ஒரு பெண் தலை குனிந்து கேட்கிறார் என்று வைத்து கொள்ளுவோம், நமக்கு பாஸிடம் நல்ல டெர்ம்ஸ் இல்லாத பட்சத்தில், "அந்த பொண்ணு ஏன் தலை குனிச்சிட்டு இருக்கு, எதோ வருத்தப்படுற மாதிரி தெரியுது", என்று மனதுக்குள் நினைப்பது.  அந்த பொண்ணு என்ன காரணத்துக்காக தலை குனிந்து இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், நம்முடைய எண்ணத்துக்கு ஏற்றபடி கற்பனை கலப்பது, மூன்றாவது படி.


4. நான்காவது படி," நாம் கலந்த கற்பனை கொண்டு  இது தான்நடந்து கொண்டிருக்கிறது  "என்று ஊகிப்பது. உதாரணமாக,, அந்த மீட்டிங்கில், "பாஸ் பேசுவது அந்த பொண்ணுக்கு  பிடிக்கவில்லை போல,அதான் தலை குனிஞ்சி வருத்தப்படுது, இந்தம்மா/ஆளு ஏன் இப்படிஇருக்கிறார் ? என்று பாஸ் பற்றிய தன்னுடைய  ஊகத்தை வலுப்படுத்துவது.

5. ஐந்தாவது படியில், "நாம் கொண்ட ஊகம், கற்பனை, எல்லாம் கலந்து  அந்த நிகழ்வு குறித்து முடிவெடுப்பது" . அதாவது, "அந்த மீட்டிங்கில், பாஸ் பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை, அதனாலேயே எல்லாரும், தலையை குனிஞ்சிட்டு இருக்காங்க,  ஏன் இந்தம்மா/அய்யா  மத்தவங்களை புரிஞ்சுக்காம இப்படிபேசுறாங்க ? " என்று முடிவெடுப்பது

6.  ஆறாவது படியில், "நாம் எடுத்த முடிவுவை கொண்டு இப்படி தான் உலகம் இருக்கு என்று நம்பிக்கை கொள்வது".  அந்த மீட்டிங்கில் நடந்த, நாம் பில்டர் செய்த, கற்பனை கலந்த, ஊகித்த நிகழ்வுகளை கொண்டு, இந்த உலகமே இப்படி தான் பா", முதலாளி வர்கம், ஏழைகளை பற்றி கவலை பட மாட்டாங்க, என்று புலம்புவது.

7. ஏழாவது படிநிலை, இறுதி நிலை. நாம் எடுத்த முடிவுக்கு ஏற்ற ஆக்சன் எடுப்பது. அதாவது, இந்த மேனேஜர் சரியில்லை, எல்லாரையும் தப்பாக நடத்த்துகிறார், அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டேன்கிறார், என்று HR இடம் காம்ப்ளயின் செய்வது. அல்லது, அடுத்தவர்களிடம் புறம் பேசுவது, கேங்கு சேர்ப்பது, கூட்டம் சேர்ப்பது,கொடி  பிடிப்பது.


நான் விவரித்த இந்த "Ladder of Inference" இல், "நீ" அல்லது "I" என்பது மிக முக்கியமான ஒன்று. அதாவது, என்ன நடக்கிறது என்பதை, "நீ" அல்லது "I" இன் பார்வையில் மட்டுமே பார்த்து "நாம்" முடிவெடுக்கிறோம். அதுவும் நமக்கு சாதகமாக, அதனை திரித்து, அதனை மாற்றி, கற்பனை கலந்து, மோல்ட் செய்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இந்த இடத்தில் நாம் எடுத்த முடிவு சரியா? இல்லை தப்பா?

வெளியில் இருந்து பார்க்கும் போது, அல்லது மூன்றாவது மனுஷனாக பார்க்கும் போது அந்த முடிவு தப்பு, ஆனால், நாம் உள்ளே இருக்கும் போது, நாம் அதில் உடன்பட்டு இருக்கும் போது, அந்த முடிவு சரியான முடிவு. இது எல்லாமே பெர்ஸப்ஸன்/ நாம் உணர்வது  சார்ந்தது. ஆனால் உண்மை நிலை அல்ல.

உண்மை நிலை வேறொன்றாக இருக்கலாம், ஆனால், எந்த ஒரு சூழலுக்கும் நாம் அந்த சூழலை குறித்து என்ன நினைக்கிறோம் என்பதை சார்ந்தே, அது சரி என்றோ அல்லது தவறு என்றோ நம்மால் அல்லது பிறரால் தீர்மானிக்கப்படுகிறது.


நிற்க, மனோ தத்துவத்தில் இருந்து, சிறிது மாற்றத்துக்காக  அறிவியல் பார்வை பாப்போம்.

எத்தனை பேர், தன்னுடைய பள்ளி பருவத்தில், "அறிவியல்/பிசிக்ஸ்" பாடத்தை கடுப்புடன் படித்து இருக்கிறீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒளியின் பண்புகள் என்று, இரண்டு வகை பண்புகள் படித்திருப்போம். 1. துகள் வடிவானது( Particle nature of light), 2. அலை வடிவானது (wave nature of light).  என்று நிறைய படித்திருப்போம். ஒவ்வொரு தியரியும் பற்றி படம் வரைந்து,சமன்பாடுகள் மனப்பாடம் செய்து. அட போங்கைய்யா என்று கடுப்பை கிளப்பி இருக்கும்.

பிசிக்ஸ் பாடத்தை குறித்த பார்வையை, அது வெறும் கணித சமன்பாடுகள் மட்டுமே கொண்டது என்ற என்னுடைய எண்ணத்தை மாற்றியது "The Dancing Wu Li Masters" என்ற புத்தகம்.


Image from google images

சரி எதற்கு இந்த புத்தகத்தை குறித்து இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அதில், "The Role of "I"" என்ற அத்தியாயம் உண்டு. இந்த அத்தியாயத்தில், எந்த சமன்பாடும் இல்லாமல் ரொம்ப அழகாக இதன் ஆசிரியர், ஒளியின் , அலை மற்றும் துகள் பண்புகளை எளிமையாக குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர் சொல்வது. "ஒளிக்கு, அலை மற்றும் துகள் பண்பு இருப்பது இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, வேறு பல பண்புகளையும் ஒளி கொண்டிருக்கலாம், ஆனால் இதுவரை "நாம்" என்ன அறிந்திருக்கிறோமோ அதனை கொண்டு இது தான் ஒளியின் பண்பு என்று முடிவு கட்டிவிட முடியாது. இது "நாம்"/"ஐ" அறிந்த வரை காணும் ஒளியின் பண்பு மட்டுமே"


பொதிகவியளார், ஹெய்சென்பெர்க் அவர்களின் "Theory of uncertainity" மிக பிரபலம். அதன் முடிவில் ஹெய்சென்பெர்க் சொல்லுவது

" What we observe is not nature itself, but nature exposed to our method of questioning."


நாம் பார்க்கும் உலகம் /இயற்க்கை என்பது உண்மையில் இருப்பது அல்ல, நம்முடைய அனுமானத்தில் அல்லது நமக்கு பிடித்த வகையில் நாம் அறிந்த வரையில் இருக்கும் இயற்க்கை/உலகம் மட்டுமே. இது தான் உண்மையில் உலகம் என்று வரையறுக்க இயலாது.


உளவியல் மற்றும் அறிவியல் பார்வைகளின் சாராம்சம் எளிமையாக, நம்முடைய, எது சரி, எது தப்பு என்ற வாதத்துக்கு வருவோமானால். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு,  "நான், நாம்", என்ற அந்த பாய்ண்ட்யை விட்டு வெளியே வந்து, மூன்றாவது மனிதனாக, யூனிவேர்சல் ஆக யோசித்தால் மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் "முழுப்பரிமாணம்" கிடைக்கும். இல்லை எனில், லாடம் கட்டிய குதிரை போல் நாம் நினைத்ததே சரி என்று அந்த வழியில் சென்று கொண்டிருப்போம்.


நன்றி.





5 comments:

Avargal Unmaigal said...

நல்லதொரு பதிவு

Unknown said...

Very nice write up,! - Rajan

bandhu said...

Really nice! very well written!

வேகநரி said...

மிகவும் அருமையாக உண்மைகளை விளக்கமளித்துள்ளீர்கள்.

Pandian Subramaniam said...

உண்மையை நேருக்கு நேர் வெளிப்படையாகச் சந்திக்கும் மனம் இல்லாதிருப்பதும் "நான், நாம்", என்ற அந்த பாய்ண்ட்யை விட்டு வெளியே வந்து, மூன்றாவது மனிதனாக" செயல்படத் தடையாக இருக்கிறது. அழகான எளிய விளக்கம்.