Sunday, November 4, 2018

பழைய ரூபாய் நோட்டும், பரியேறும் பெருமாளும், ஹிந்தியும்!!


சோசியல் மீடியா வந்தாலும் வந்தது, அதில் எந்த வித பில்டரும் இல்லாமல் வந்ததை எல்லாம் சொல்லும், அடித்து சத்தியம் செய்யும், மற்றவர்களை பேச விடாமல், தான் பேசுவது மட்டுமே சரி என்று விவாதிக்கும் சிலரும் இருக்க தானே செய்கிறார்கள். அப்படி ஒரு குரூப்பிடம் மாட்டி கொண்ட என்னுடைய அனுபவம் இங்கே.

அது 1930 களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு குறித்தது.( அது உண்மையான நோட்டா, இல்லையா என்று தெரியவில்லை). அதனை ஒரு தோழி ஷேர் செய்து, பாருங்கள் இதில் "இந்தி இல்லை", என்று அவள் குறிப்பிட்டு விட்டாள். உடனே இன்னொரு தோழி, வரிந்து கட்டி கொண்டு. அதெல்லாம் உண்மை இல்லை, நோட்டின் அடுத்த பக்கத்தை பார்க்கவும். இந்தி எல்லாவற்றிலும் இருக்கும். "இந்த நோட்டு போலி", என்று விவாதம் மேல் விவாதம். அதோடு நின்று கொள்ளாமல், "இந்தி கற்று கொள்ளாததால் நாம் இழந்தது நிறைய" என்றுஅவள் சொல்ல  "இந்தி ஆதரிப்பு  பிரச்சாரமாக" ஆகி விட்டு இருந்தது.

 அவளிடம் உரையாடிய பிறகு பல சந்தேகங்கள். "ஒரு சிலரிடம் தர்க்கம் செய்வது என்பது ஏன் முடியாமல் போகிறது?, எப்படி விடாமல் தான் சொல்வது சரி என்று வாதிக்கிறார்கள். அடுத்தவர்களை பேச விடாமல், அவர்கள் எந்த விடயம் பேச ஆரம்பித்தாலும் அதற்கென்று ஒரு எதிர் பாயிண்டு எப்படி தயாரித்து பேச முடிகிறது.?"
மேலும், இந்த பிரச்னை கட்டாயம் பல இடங்களில் பேச/விவாதிக்க பட்டு இருக்கும், என்பதால், இது சரியா தவறா என்ற விவாதிக்க நான் வரவில்லை. ஆனால், உண்மையில் ஹிந்தி கற்று கொள்ளாததால், நாம் நிறைய இழந்தோமா?

இங்கு வந்த பிறகு, ஆபிசில் நிறைய இந்தியர்கள் இருப்பின், எந்த மாநில மக்களாயினும் சரி, இந்தியில் பேசுவதை பார்த்து இருக்கிறேன். அதே நேரம், தமிழ் பேசும் மக்கள், எனக்கு ஹிந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பேசுவதையும் பார்த்திருக்கிறேன். இந்தி படிக்காததால்  எந்த பிரச்னையும் அவர்கள் அனுபவித்ததாக தெரியவில்லை. ஒரு வேலை இந்தியாவில் இருப்பவர்கள் இந்தி படிக்காததால் பிரச்சனைகள் அனுபவிக்கிறார்களா?. எனக்கு தெரிந்து IT  வேளைகளில் இருக்கும் பலரும், பெங்களூரு, ஹைதெராபாத், சென்னை, புனே போன்றஊர்களில் வசிக்கும்போது   ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பதை பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் பாஷையிலும் பேசி சமாளிப்பதற்கு பார்த்திருக்கிறேன். அதனால், தெரியாமல் கேட்கிறேன்,  ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லை இது பிரச்சாரமா?


தற்போது, இதனை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல முகத்தில் அறைந்த படம் பார்த்த திருப்தி.  இப்போயெல்லாம் எங்கப்பா சாதி பாக்குறாங்க/ என்று சொல்லி திரியும் சிலரின் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில், "பரியேறும் பெருமாள்", உண்மைக்கு மிக அருகில் எடுக்கப்பட்ட உண்மை விளக்கம்.

 நான் முதுநிலை படித்த கல்லூரியில் எப்போதும் விரிவுரையாளர்கள், பையன்கள் முதுகில் நன்கு தட்டி கொடுப்பார்கள். முன்பு எனக்கு அதன் அர்த்தம் புரியாது. ஆனால், பிறகு மற்றவர்கள் சொல்ல அறிந்து கொண்டது. அவர்கள், தட்டி கொடுப்பது போன்று எதனை தேடுகிறார்கள், என்பது, அதே போல, இளங்கலை படித்த போது, என்னுடன் படித்த சில பெண்கள், எப்படி ஒரு சில பெண்களிடம் நடந்து கொண்டார்கள்?, என்பதையும் அறிந்து இருந்தேன்.  அவர்களிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்அல்லது எதோ சொல்லி பாலிஷ் ஆக தவிர்ப்பார்கள்.

எனக்கென்னவோ, இந்த படம் பார்த்த பிறகு, சில எண்ணங்கள். அந்த "பரியனின்" இடத்தில் ஒரு பெண் இருந்திருப்பின் எவ்வாறு இருந்திருக்கும்?. ஒரு ஏழை பெண், கீழ் சாதியாய்இருப்பின்,  ஆங்கிலம் தெரியாமல், மற்றவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளமுடியாமல், அந்த பெண்ணின் பொருளாதார மற்றும் சாதிய நிலையை குத்தி காட்டி காட்டியே, அவளை முழுதாக கொன்றிருப்பார்கள். ஏதேனும் மேல் சாதி பையனிடம் அந்த பெண் பழகியிருக்கிறார் என்றால், அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்திருக்க மாட்டார்கள். மாறாக, அவளின் மானத்தை எடுத்து அப்போதே பிணமாக்கி இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.  

இங்கே சாதி என்ற குறியீட்டை கூட எடுத்து விடுவோம். ஒரு ஏழை பெண், கிராமத்தில் வாழும், ஒரு பெண் படிக்கிறாள். படிக்க விரும்புகிறாள், என்று வைத்து கொள்ளுவோம்.  ஆங்கில அறிவு கொஞ்சம் மட்டுமே இருக்கும். மார்க்கும் நிறைய எடுக்கவில்லை அல்லது 10 ஆம் வகுப்பில் பெயில் என்றால் அவ்வளவு தான், படிப்பு வரல என்று கல்யாணம் செய்து வைத்து இருப்பார்கள்.  திரும்ப படிக்க வைப்பதோ அல்லது டுடோரியல் சேர்த்து படிக்கவைத்து பாஸ் செய்வதோ பெரிய விஷயமாகி இருக்கும். அப்படியே படிக்க வைத்த பெற்றோர் இருப்பினும். கல்லூரி வரை அந்த பெண் சென்றிருந்தால் பெரிய விஷயம். "பொம்பள புள்ளைய எதுக்கு படிக்க வச்சிட்டு, பேசாம கல்லாணம் பண்ணி வையுங்க", என்று பலரும் பரிந்துரைத்து இருப்பார்கள். திரும்ப படிக்க வைப்பது போன்ற சலுகை எல்லாமே பையனுங்களுக்கு தான்.

இந்த உண்மை நிலவரத்தில், ஹிந்தியும் கட்டாயமாக்க பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும். தமிழை தவிர பிற மொழியான ஆங்கிலமே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் இருக்கும் நம்ம ஊரு பப்லிக் பள்ளிகளில் ஹிந்தி சொல்லி கொடுக்க யாருப்பா இருப்பாங்க. அதுலயும் பெயில் ஆகுங்க புள்ளைக. இதையே காரணம் காட்டி புள்ளைக படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்பி இருப்பாங்க இல்லாட்டி கல்யாணம்  பண்ணி கொடுத்து இருப்பாங்க கிராமத்தில இருக்கும் பெத்தவங்க. 

சரி, கிராம பிள்ளைகளை விட்டுடுவோம். பல நகரங்களில் தற்போது பிள்ளைகள் ஹிந்தி கற்று கொள்கிறார்கள். சொல்ல போனால், தமிழை கற்று கொள்வதே இல்லை. மார்க்குக்காக, ஹிந்தி, சமஸ்க்ருதம், பிரெஞ்சு. ஜெர்மன், ஆங்கிலம் போன்றவற்றை மற்றும் கற்றுக்கொள்கிறார்கள்.  அதுவும் மிக மிக தொடக்க நிலை மொழி அறிவு மட்டுமே இவர்கள் அறிந்துஇருக்கிறார்கள். இதனால் என்ன பயன்?. இவர்களால் கோர்வையாக ஹிந்தியில் பேச முடியுமா?, அல்லது பிரெஞ்சு அல்லது ஜெர்மனில் தான் பேச முடியுமா?. ஒன்றும் இல்லை. 

அதே நேரம், எனக்கு தெரிந்தே, 5ஆவது வரை படித்த ஒரு அம்மா, மும்பையில் வசிக்க நேர்ந்த 6 மாதத்தில் அழகான ஹிந்தி கற்று கொண்டு விட்டார். மொழியை பாடமும் பாட திட்டமும் கற்றுக்கொடுக்காத மொழியை சுற்றுசூழலும், தேவையும் கற்றுகொடுத்து விட்டது.  எவ்வளவோ வடஇந்திய குடும்பங்கள், மதுரையில் கோயிலை சுற்றி கடைகள் வைத்து ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் எந்த ஊரில் தமிழ் எழுத படிக்க கற்று கொண்டனர்?. எல்லாம் சூழல் கற்று கொடுத்தது.

சரி, மறுபடியும், தொடங்கிய கேள்விக்கு வருவோம். 

ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லையா?

வாசிப்புக்கு நன்றி.3 comments:

Avargal Unmaigal said...

ஹிந்தி படிக்காததால் நான் இழந்தது மோடியை திட்டி ஹிந்தியில் பதிவு எழுத முடியவில்லை அதுதான் பெரிய இழப்பு
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

Kalai Van said...

"இந்த உண்மை நிலவரத்தில், ஹிந்தியும் கட்டாயமாக்க பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும்? அதுலயும் பெயில் ஆகுங்க புள்ளைக. இதையே காரணம் காட்டி புள்ளைக படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்பி இருப்பாங்க இல்லாட்டி கல்யாணம் பண்ணி கொடுத்து இருப்பாங்க கிராமத்தில இருக்கும் பெத்தவங்க. எவ்வளவோ வடஇந்திய குடும்பங்கள், மதுரையில் கோயிலை சுற்றி கடைகள் வைத்து ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் எந்த ஊரில் தமிழ் எழுத படிக்க கற்று கொண்டனர்?. எல்லாம் சூழல் கற்று கொடுத்தது. அதே நேரம், எனக்கு தெரிந்தே, 5ஆவது வரை படித்த ஒரு அம்மா, மும்பையில் வசிக்க நேர்ந்த 6 மாதத்தில் அழகான ஹிந்தி கற்று கொண்டு விட்டார். மொழியை பாடமும் பாட திட்டமும் கற்றுக்கொடுக்காத மொழியை சுற்றுசூழலும், தேவையும் கற்றுகொடுத்து விட்டது."

அருமையான வாதம்.

ஆரூர் பாஸ்கர் said...

தமிழ்நாட்டில் தமிழின் நிலை ? நல்ல நிலையி்ல்
இல்லை. தமிழர்கள் கவலைப்படும் நிலையில்தான் இருக்கிறது.
தொடர்ந்து அதுபற்றி நான் எழுதுகிறேன்...