Monday, December 7, 2015

பொறமை: புல்லியிங்/ராகிங் முதல் இதிகாசங்கள் வரை

என்னுடன் வேலை பார்க்கும் வெள்ளை அமெரிக்கர் ஒருவர் தன்னுடைய 10 வயது மகன் பள்ளியில் தான் பெரியவனாக, உயரமானவனாக இருப்பதால்  ராகிங்  செய்யபடுவதாக குறிப்பிட்டார். அதனால் அந்த சிறுவன் தன்னுடைய பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் சொன்னார், இதனை கேட்ட இன்னொரு என்னுடன் வேலை பார்க்கும் ஆசியர் ஒருவர், "தன்னுடைய பையன் உயரம் குறைந்தவானாக இருப்பதால்" எப்போதும் புல்லி செய்ய படுவதாக கூறினார். ஒரு கேசில் உயரம் அதிகம் ஆனாதால் ராகிங் இன்னொரு கேசில் குள்ளமானதால் ராகிங்.இதனை குறித்து பேசிக்கொண்டு இருந்த போது,  என்னுடன் வேலை பார்க்கும் இன்னொரு அரபு நாட்டை சேர்ந்த, இங்கு சிறு வயதில் வந்து செட்டில் ஆன ஒருவர், "ராகிங் செய்பவர்களுக்கு அடிப்படை பொறமை, உங்கள் மேல் ஏதேனும் ஒரு வகையில் தான் பெரிய ஆள் என்று காட்ட வேண்டும் அனைவரை விடவும் தான் அதிகாரம் மிகுந்தவன்/ மிகுந்தவள் என்று காட்ட வேண்டும் என்ற காரணத்தாலேயே இப்படி   செய்கிறார்கள். நீங்கள் பெர்பெக்ட் ஆகவே இருப்பவர் ஆயினும், ஏதேனும் ஒன்றை கண்டுபிடித்து உங்களை புல்லி செய்வார்கள். குழந்தைகள் இதனை எப்படியாவது சமாளிக்க கற்று கொள்ளுவார்கள், "Dont worry". என்று சொல்லி கொண்டு இருந்தார்.


இதனை கேட்டபின்னர் எனக்கு தோன்றிய சில எண்ணங்கள் இங்கே  பொறமை என்பது என்ன?, அடுத்தவர் சந்தோசமாக/அழகாக/அறிவாக/பணக்காரராக இப்படி எதோ ஒன்று அல்லது பல வைத்திருப்பது கொண்டு அவர் மேலே கோவம்/ஆத்திரம்/ இப்படி கொண்டு அவரை மறைமுகமாகவோ நேராகவோ தாக்குவது.

"பொறமை என்பது  ஒரு வகை மனநோய்",  என்று சொல்லி சிலர் சென்று விடுவார்கள்.ஆனால், இது கிட்டத்தட்ட எல்லாருக்குள்ளும் இருக்கும் ஒரு குணம். என்னிடம் பொறாமையே இல்லை என்று ஒருவன் சொல்வார் என்றால் அவர் முற்றும் துறந்தவர் அல்லது பைத்தியம். ஏனெனில் குழந்தைகள் கூட அவனிடம் அந்த பொம்மை இருக்கிறது என்னிடம் இல்லை, என்று சொல்வதுண்டு.

பொறமை என்ற ஒரு குணம் தான் பல பல தமிழ் சீரியல்களில் அன்றாடம் காட்டபடுகிறது. பொறமை என்ற ஒரு உணர்ச்சியை மைய படுத்தியே கணக்கில்லா விளம்பரங்கள். அவ வீட்டுல அது இருக்கு எனக்கும் வேணும். அவ டிரஸ் வெள்ளை எனக்கும் வேணும். நீ இங்க வீடு வாங்கி இருக்கியா நான் அங்க வீடு வாங்கி இருக்கேன் பாரு என்று பல பல தினுசாக பொறாமையை மையபடுத்தி
பாத்ரூம் கிளீனர் இல் இருந்து வாஷின்மசின் கார் அல்லது வீடு  வாங்குவது வரை விளம்பரங்கள் தினமும் டிவி யில் ஒளிபரப்ப படுகின்றன.

சிறு வயதில் இருந்தே, பொறமை என்பது நல்ல குணம் என்பது போல நமக்கு மறைமுகமாக புகட்ட படுகிறது. அடுத்த வீட்டு பொண்ணு/பைய்யன் எப்படி படிக்கிறான் பாரு நீயும் தான் படிக்கிறியே..என்று அடுத்த வீட்டு பையனை/பொண்ணை உதாரணம் காட்டி அவர் மீது பொறமை தீ கொழுந்து விட்டு எரிய செய்வதில் நிறைய பெற்றோருக்கு பங்கு உண்டு. அது ஆரோக்கியமான போட்டிக்கு உதவும், பல நேரங்களில் காரணம் சொல்லபட்டாலும், உண்மையில் தன்னிடம் இருக்கும் நல்ல விஷயத்தை அறிவை நம் பெற்றோர் பாராட்டவில்லையே என்று தன் மீதே நிறைய "காம்ப்ளெக்ஸ்" வரும் நிலையை நிறைய குழந்தைகள் அடைகிறார்கள். எப்படி படிப்படியாக காம்ப்ளெக்ஸ் அடைந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது நிறைய "காம்ப்ளெக்ஸ்" நிறைய போட்டி எதற்கெடுத்தாலும் போட்டி, யாருடனும் போட்டி. என்று போட்டி மேல் போட்டி போடும் நிலை. இதில் ஒரு கட்டத்தில் தன்னை சுற்றி எல்லாருமே போட்டியாளர்கள் என்ற ஒரு மனநிலை வந்து விடுகிறது. "Competitiveness is good" என்று பலரும் போதிக்கிறார்கள். உண்மையில் பொறமை/போட்டி தேவையா?

தமிழில் பொறமை , அழுக்காறு என்று குறிக்கபடுவது போல என்பது ஆங்கிலத்தில் இரண்டு சொற்களால் குறிக்க படுகிறது. Jealousy and Envy.

Jealousy என்பது எங்கே தன்னிடம் இருக்கும் ஒன்று தன்னை விட்டு சென்று விடுமோ என்ற பயத்தில் அடுத்தவர் மீது கொள்ளும் பொறமை. இதற்க்கு உதாரணமாக பல சந்தேகப்படும் கணவன் அல்லது மனைவிகளை சொல்லலாம்.  எங்கே தன்னுடைய கணவன் அல்லது மனைவி தன்னை அழகில்லை/காசில்லை/அறிவில்லை  என்று சொல்லிவிட்டு பிறரிடம் சென்று விடுவாரோ என்று பயந்து, கணவன்/மனைவி யாரிடம் பேசினாலும் அவர்கள் இடத்தில் பொறமை கொள்ளுவது, அவர்களை தூற்றுவது. இது ஒரு போச்செச்சிவ் நிலை.

மற்றொன்று, envy. இது தன்னிடம் இல்லாததை அடுத்தவர்கள் வைத்திருந்தால் அதற்காக அவர்கள் மீது பொறமைபடுவது. அல்லது தன்னிடம் இருக்கும் எதனையும் சந்தோசமாக அனுபவிக்காமல் இன்னும் இன்னும் என்று எதனையோ தேடி கொண்டே இருப்பது.


சொல்லபோனால், பொறமை இல்லையேல் நமக்கு பல இதிகாசங்கள் ,கதைகள்  கிடைத்து இருக்காது. கிட்டத்தட்ட எல்லா கதைகள் மற்றும் இதிகாசங்களில்  அடிநாதம் "பொறமை" தான். ராமாயணத்தில் "சூர்பனகை கொண்ட பொறமை, மகாபாரதத்தில் "துரியோதனன் கொண்ட பொறமை. ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ வில்  அடிநாதமே தன் மனைவியின் அழகு மீது பொறமை பயம் கொண்ட ஒதெல்லோ. Lolita வில் ஹம்பேர்ட் இன் பொறமை, "The Great Gatsby", "Ulysses" என்று சொல்லி கொண்டே போகலாம்.

பதிவின் முதலில் குறிப்பிட்டது போல, நிறைய பள்ளிகளில் தற்போது நடக்கும் புல்லியிங் இன் அடிப்படை என்னவென்று பார்த்தால் ஒன்று அந்த பெண் அழகானவராக இருக்க வேண்டும் அல்லது அந்த பையன் அறிவாளியாக இருக்கவேண்டும். அல்லது தான் பெஸ்ட், என்று உலகிற்கு காட்ட நிரூபிக்க என்று புல்லி செய்கிறார்கள். பொறமை உணர்வில் ஆரம்பிக்கும் சில நேரங்களில் வெறியாகி குழப்பத்தை, சில நேரங்களில் மரணத்தை கூட கொண்டு வந்து விடும். அதே trait பள்ளி, கல்லூரி, வாழ்க்கை என்று தொடர்ந்து எப்போதும் எல்லாரையும் போட்டியாக, பொறமை படுவது. எப்பொழுதும் தன்னிடம் இருப்பது பத்தாது இன்னும் இன்னும் வேணும் என்று ஏங்குவது அதற்காக எல்லாவற்றையும் செய்ய தயாராக இருப்பது. என்று முடிவில்லாமல் போய் கொண்டு இருக்கும், வாழ்கையில் சந்தோசம் என்பது துளியும் இருக்காது.

முடிவாக, உங்கள் குழந்தைகளுக்கு பொறாமையை கற்று கொடுக்காதீர்கள், அதற்க்கு பதில் அவர்களின் திறமையை வளர்க்க பாசிடிவ் ஆக கற்றுகொடுங்கள். அதே போல அடுத்தவர் தங்கள் மீது பொறமை கொண்டு தங்களை துன்புறுத்தினால்  அதனை எப்படி சமாளிப்பது என்று கற்று கொடுங்கள். அதுவே சரியான வாழ்க்கை பாடமும் ஆகும்.

நன்றி



2 comments:

Nagendra Bharathi said...

அருமை

ஆரூர் பாஸ்கர் said...

Good topic.

Without any doubt. our Indian kids are bullied or treated differently in schools. Do you agree? If so, how to over come that specifically.

Thanks.