Sunday, February 21, 2016

சாதியையும்/நிறமும், திருமணமும்,அரசியலும்-இந்திய அமெரிக்க ஒற்றுமைகள்.

ரொம்ப நாட்களாகவே இது எனக்கு தோன்றுவது உண்டு. அதாவது, இனமும், நிறமும், சாதியும் இந்தியாவிற்கு மட்டும் தான் சொந்தமானதா இல்லை வேறெங்கும் இருக்கிறதா என்று. இதனை சார்ந்த ஒரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றும்  வாசிக்க நேர்ந்தது. அதன் விளைவே இது.

நான் இங்கு வந்த புதிதில் பல்கலைகழக காம்பஸ் இல் நிறைய கலப்பு ஜோடிகள் காணலாம். அதாவது, வெள்ளை-ஆசியன், வெள்ளை-இந்தியன், வெள்ளை-கருப்பு, வெள்ளை-சவுத் அமெரிக்கன்..அப்பொழுதெல்லாம், பரவாயில்லையே இங்கு நம்ம ஊர் போல சாதி, மதம் எல்லாம் இல்ல, என்று நான் நினைப்பது உண்டு. ஆனால், அப்படி சுற்றி திரிந்த பல காதல் பறவைகள் எத்தனை பேர் மண வாழ்கையில் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்று பாருங்கள், கம்மி. ஆனால் வெள்ளை -வெள்ளை, கருப்பு-கருப்பு,மெக்சிகன் -மெக்சிகன், இந்தியன்-இந்தியன் ஜோடிகள் எனில் கட்டாயம் அவை திருமண வாழ்கையில் ஒன்று சேர தடை இருப்பதில்லை.

உதாரணமாக, ஒரு பைபிள் பெல்ட் ஸ்டேட் எனப்படும் தென் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் ஒரு வெள்ளை பைய்யன் ஒரு கறுப்பின பெண்ணை நான் விரும்புகிறேன் அவளை திருமணம் செய்ய விளைகிறேன் என்று சொன்னால் அவன் வீட்டில் கிடைக்கும் ட்ரீட்மென்ட் வித்தியாசமாக இருக்கும். நிறைய பேர் வீட்டில் அதனை ஒத்து கொள்ள மாட்டார்கள். என்னுடன் தற்போது வேலை பார்க்கும் ஒரு கறுப்பின பெண், தன்னுடைய வெள்ளை கணவர் வீட்டில் தனக்கு இருக்கும் வரவேற்ப்பை பற்றி சில நேரம் வருத்தபடுவது உண்டு. இந்த விசயத்தில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய வித்தியாசம் என்று எதுவும் இல்லை. ஆனால், இங்கு இந்தியாவில் நடப்பது போல கௌரவ கொலைகள் எதுவும் நடப்பதில்லை என்றாலும், குடும்பத்தால் ஒதுக்க படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

அதே போல, எனக்கு தெரிந்து, யூத, முஸ்லிம் ஜோடிகள் எங்கேயும் பார்த்ததே இல்லை. கல்லூரி காம்பஸ் ஆகட்டும் அல்லது திருமணம் முடித்த பின்னர் ஆகட்டும். இது நடக்க வாய்ப்பே இல்லை அல்லது நான் பார்த்த வரை இல்லை. 

இந்தியாவிலாவது காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் மக்கள் பிரித்து வைத்து பார்த்து இருக்கிறேன், ஆனால் இங்கு இது போன்ற கலப்பு ஒத்து வராது என்று நினைத்தே எந்த யூத-முஸ்லிம் ஜோடிகளும் இணைவது இல்லை போல. ஒரு வேளை லிபரல் ஸ்டேட்ஸ் எனப்படும் நார்த் ஈஸ்ட் அல்லது கலிபோர்னியாவில் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

தற்போது இந்தியாவை எடுத்து கொள்வோம். நிறைய கூலி செய்து தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு எஞ்சினீர் ஆக்கி, கீழ் மட்டத்தில் இருந்து தற்போது மிடில் கிளாஸ் ஆகி இருக்கும் பல குடும்பங்கள் எனக்கு தெரிய உண்டு. எனக்கு தெரிய பல கலப்பு காதல் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவை எல்லாம் பார்க்கும் ஒரு வேளை இந்தியாவில் சாதி ஒழிந்து விட்டதோ என்று எண்ண தோன்றும். ஆனால் இது ஒரு மேம்போக்கான பார்வை மட்டுமே.

உதாரணமாக பல சாதி விட்டு சாதி கலப்பு திருமணம் நடக்கிறது. ஆயினும் அப்படி அங்கிகரிக்க படுகின்ற சில திருமணங்கள் எல்லாம் ஓரளவு ஒத்த சாதி திருமணங்கள் தாம். எனக்கு தெரிந்து நடந்த மேல்சாதி  - கீழ் சாதி திருமணங்கள் மிக மிக சொற்பம். இப்படிப்பட்ட காதல் கூட கௌரவ கொலைகளில் மட்டுமே முடிகின்றன. 

இந்த நிகழ்வு எல்லா நாடுகளும் உண்டா?, இல்லை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மட்டுமே நடப்பதா? என்று நான் யோசித்து பார்ப்பது உண்டு. உதாரணமாக, என்னுடைய ஜெர்மனி காலங்களில் நான் பார்த்தவரை , எல்லாம் நிறைய டர்கிஷ்-டர்கிஷ் ஜோடிகள் பார்த்து இருக்கிறேன். ஜெர்மன்-ஜெர்மன் ஜோடிகள் அல்லது, ஜெர்மன் -மற்ற வெள்ளை ஜோடிகள் பார்த்து இருக்கிறேன். ஜெர்மன்- கருப்பு ஜோடிகள் மிக மிக அபூர்வம். தற்போது இந்த நிலை மாறி இருக்கிறதா என்று தெரியவில்லை. 


அதே போல இன்னொரு முக்கியமான சாதி அல்லது இனம் சார்ந்த விஷயம் என்றால் அது அரசியல் தான். இங்கு வந்த புதிதில் எல்லாம், அமெரிக்காவில் எல்லாரும் சமம் என்ற குருட்டு நம்பிக்கை கொண்டு இருந்தேன். அல்லது அப்படி ஒரு மாயை என்னுள் உருவாக்கி கொண்டிருந்தேன். ஆனால், பல விசயங்களில் எப்படி இனம் என்பது ஒரு முக்கியமான ஒன்று என்று இங்கு வந்த பிறகு தெரிய ஆரம்பித்தது. உதாரணமாக, எனக்கு தெரிந்து நான் பார்த்த  தேர்தல்கள் ஒபாமாவின் இரு முறை ஜனாதிபதி தேர்தலும் மற்றும் செனட் தேர்தலும். ஒபாமா தேர்தலில் காலத்திலும் கூட எப்படி கறுப்பின மக்கள் குதூகலமாக வாக்களித்தார்கள், தங்களில் ஒருவர் வர போகிறார் என்று சந்தோஷ பட்டார்கள் என்று கண் முன் காண நேர்ந்தது. அப்படி கருப்பு மக்கள் சந்தோஷ பட்டு கொண்டு இருக்க எனக்கு தெரிந்தே, ஒபாமாவை குறித்து கிண்டல் செய்த பல வெள்ளை மக்களும்  உண்டு. அவரை முட்டாள், குரங்கு கையில் பூமாலை என்பது போன்ற விமரிசனங்கள் முன் வைக்க பட்டன.
இங்கு(அமெரிக்கா) தேர்தல் எனும் பொழுது எல்லாம் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எப்படியாவது வேட்பாளரின்  நிறம் அல்லது இனம் ஓட்டு போடுவதற்கு ஒரு முக்கிய காரணி ஆகி விடும்.
இதனை பல பேர் நம்ப மறுத்தாலும் இது தான் உண்மை.

உதாரணமாக ஒபாமாவின் தேர்தலின் போது  கூட ஒபாமா ஒரு கலப்பு,அவருடைய  தாய் வெள்ளை, அப்பா கருப்பு என்று பல முறை மீடியாக்கள் ஒளிபரப்பின. அதாவது, மறை முகமாக அவர் முழு கருப்பு இல்லை, ஒரு மிக்ஸ் என்று அறிய வைக்க ஊடகங்கள் பல முயன்றன. தற்போது குடியரசு கட்சி தேர்தல் வேட்பாளராக இருக்கும் Trump கூட இனம் மற்றும் மதங்களை சொல்லியே பேசி வருகிறார், ஆதரவு திரட்டி வருகிறார். 

இந்தியாவை பொருத்தவரை, தேர்தல் என்று மட்டும் அல்ல தேர்தல் இல்லாத நேரத்திலும் கூட சாதி/மதம் என்பது ஒரு முக்கிய காரணி எனபது அனைவரும் அறிந்ததே.

இந்த விஷயங்கள் எல்லாம் யோசிக்கும் போது சாதி, மதம் போன்ற பாகுபாடுகள் எல்லாம் எதோ இந்தியாவிற்கு மட்டும் சொந்தம் என்பது போல ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உண்மையில் உலகில் இருக்கும் பல நாடுகளிலும் இப்படி எதோ ஒரு வகையில் ஒரு பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. பொருளாதாரம், செய்யும் தொழில், நிறம், இனம் என்று பல வகைகளிலும் அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்ன பட்டு இருக்கின்றன. ஒரு சில நாடுகளில் அவை அப்பட்டமாக தெரிந்தாலும், பல நாடுகளிலும் அவை நீக்கமற நிறைந்து இருக்கின்றன என்பது மறுக்க இயலாது.

நன்றி .

3 comments:

செங்கதிரோன் said...

Very good analysis. I have noticed the same

ப.கந்தசாமி said...

இதற்குக் காரணம் ஒத்த சூழ்நிலையில் (அதாவது மதம், இனம், நாடு) வளர்ந்தவர்கள் ஒன்றாக வாழும்போது அதிக மன வேற்றுமைகள் வர வாய்ப்பில்லை. வேறு வேறு சூழ்நிலைகளிலிருந்து வருபவர்கள் ஒன்றாக வாழும்போது மன ரீதியான பல பிரச்சினைகள் தோன்றி அவர்கள் பிரியவேண்டி வருகிறது.

சீனிவாசன் said...

நல்ல பதிவு, வேறுபாடு எல்லா இடங்களிலும் உள்ளது. நான் அரபுநாடுகளில் பணிபுரிந்த பொழுது இஸ்லாமியர்களுக்குள்ளேயே சில கோத்திரங்களில் மண உறவு புரியாததை கண்டு ஆச்சரியப்பட்டேன்.

ஆனால் இவை எதுவும் இந்தியாவில் நிகழும் கொடுமைகளுக்கு சிறிதும் அருகில் வராது. ஆதிக்க சாதியினரின் தெருவில், தலித்துகளை செருப்பு அணிந்து நடக்க விடாதது, சைக்கிளில் கூட அமர்ந்து செல்ல விடாதது, பிணத்தை கூட பொது வழியில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பது என இங்கு நடக்கும் அநியாயங்களுக்கு அளவே இல்லை. கயர்லாஞ்சி, திண்ணியம், பதனி டோலா, தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், சமீபத்திய திருநாள்கொண்ட சேரி வரை இங்கு நடக்கும் கொடுமைகளுக்கு முடிவே இல்லை. இந்தியாவில் சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமானது என்ற நம்பிக்கையும் இல்லை.