Friday, February 19, 2010

சின்ன சின்ன ஆசைகளும் நினைவுகளும்

ஒரு வருடத்திற்கு முன்பே பதிவுலகம் எனக்கு அறிமுகமானாலும், பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி கொண்டிருந்தேன். நாமும் பதிவு எழுதலாம் என்று முடிவு செய்த ஒரு மாதத்திற்குள் என்னை பதின்மகால வயது டைரி பதிவு எழுத அழைத்த தெகா அவர்களுக்கு என் நன்றி. தெகா என்னை தொடர் பதிவு எழுத அழைப்பதாக சொன்னதும் எனக்குள் ஒரு பயம், எதை எழுதுவது?, என்ன எழுதுவது? என்று. அலை அலையாக ஓடிய எண்ணங்களை ஒன்று சேர்த்து ஒரு வழியாக எழுதிவிடுவது என்று ஆரம்பித்தேன்.

சிறு வயதில் எங்கள் வீட்டுக்கு நெறைய டைரி இலவசமாக வந்தாலும் அதில் முதல் ஒரு சில நாட்களை தவிர வேறு நாட்களில் எதுவும் எழுதி இருக்க மாட்டேன். அவை அனைத்தும் எப்போதோ அடுப்பு எரிக்க பயன் பட்டு இருக்கும் என்பதால், என் ஆழ் மனதில் புதைந்து இருக்கும் ஒரு சில நினைவுகள் இங்கே.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் ஒன்பதாவது படிக்கும் போது என் அப்பாவின் கண்டிப்பால் பள்ளிக்கு தாவணி அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. பிறகு வீட்டிலும் எனக்கு நெறைய தாவணி எடுத்து கொடுத்தனர். அதில் மறக்க முடியாத
அரக்கு கலர் மயில் பாவாடையும் சந்தன கலர் தாவணியும் இன்னும் என் கண் முன் நிற்கின்றன. அதை அணிந்து தெருக்களில் நடக்கும் போது யாராவது என்னை பார்கிறார்களா என்று மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். எங்கள் பக்கத்துக்கு வீட்டுக்கு ஒரு குடும்பம் குடி வந்த போது அதில் இருந்தவர்களை பார்த்து எனக்குள் ஏற்பட்ட குறுகுறுப்பும் அதனை இரும்பு கரம் கொண்டு அடக்கிய என் அம்மாவின் ஆளுமையும் என்னை இப்போது வியப்பில் ஆழ்த்துகின்றன. பிறகு அம்மாவின் நம்பிக்கைக்கு உரியவளாக இருக்க நானே என்னை மாற்றி கொண்டதும், அலங்காரங்களை தவிர்த்தததும் நினைவுக்கு வருகிறது.

நான் பத்தாவது படிக்கும் போது நடந்த என் பெரிய அண்ணனின் திருமணமும் அதற்காக எனக்கு கிடைத்த மாம்பழ கலர் பட்டு பாவாடையும், நீல நிற தாவணியும் என்றும் மறக்க இயலாதது. அடுத்த வருடம் நான் அத்தை ஆனதும் என் அண்ணன் மகளை பார்க்க எங்கள் அண்ணி வீட்டுக்கு முதல் முதலாக குதிரை வண்டியில் சென்றதும் பசுமையான நினைவுகள். இன்று அண்ணன், அண்ணி இருவரும் உயிருடன் இல்லை என்று உணரும் போது மனம் கனக்கிறது.

மாநகராட்சி பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு பள்ளி இறுதியாண்டின் ஆரம்பத்தில் எனக்கு தெரிய ஆரம்பித்தது. அந்த கஷ்டங்களை எல்லாம் சமாளித்து ஒரு வழியாக நல்ல மதிப்பெண் வாங்கி தேறியவுடன் எப்படியும் பொறியியல் கிடைத்து விடும் என்று ஒரு மமதையில் இருந்தேன். பிறகு அது கிடைக்காமல் இளநிலை இயற்பியல் பாடத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்ததும், கல்லூரியில் இடம் கிடைத்தால் கல்லூரியில் இருந்த மீனாட்சி சிலைக்கு மாலை சாற்றுவதாக வேண்டி கொண்டதாகவும் ஞாபகம். அப்போதெல்லாம் எந்த ஸ்கூல் ல படிச்சிட்டு வந்திருக்க? என்று யாராவது கேட்டால் பள்ளி பெயர் சொல்ல வெட்கப்பட்டதும் கூட நினைவுக்கு வருகிறது.

கல்லூரி நாட்களில் எனக்கு கிடைத்த தோழிகள் அனைவரும் என்னை போல கல்லூரியில் ஒரு மாதம் கழித்து சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்குள் ஒரு பிணைப்பு இருந்தது. நாங்கள் ஏழு பேர் சேர்ந்த ஒரு குழுவாக இருப்போம். எங்கள் பெயரின் முதல் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து V R STARS என்று அழைத்து கொள்வோம். எனக்கு முதன் முதலில் பொன்னியின் செல்வனை அறிமுகம் செய்தவர்கள் அவர்களே. பொன்னியின் செல்வன் படித்து விட்டு அதனை ஒவ்வொரு நாளும் விவாதிப்போம். இன்று யாருடனும் நான் தொடர்பில் இல்லை என்றாலும் எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய என்னுடைய கல்லூரி தோழிகளுக்கு என் நன்றிகள்.

என்னுடைய சொந்த மாவட்டத்தை விட்டு சென்றறியாத என்னை என்னுடைய பதின்ம காலம் NCC கேம்ப் க்காக ஹைதராபாத் ம், உலக தமிழ் மாநாட்டுக்காக தஞ்சாவூர் க்கும் அழைத்து சென்றது. அதில் அறிமுகமான வெளி உலகம் இன்னும் நினைவில் இருக்கிறது. மரணத்தை பற்றி அதுவரை அறியாத எனக்கு மரணத்தை என் பாட்டியின் மூலம் பதின்மகாலம் அறிமுகம் செய்து வைத்தது.

இன்று காலம் என்னை எப்படி எப்படியோ மாற்றி ஏதேதோ படிக்க வைத்து முனைவர் பட்டம் பெற செய்திருந்தாலும், என்னை சுய கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து என்னை செதுக்கிய என் பதின்ம காலம் என்றும் நெஞ்சில் நிற்கும்.

7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முகுந்த் அம்மா ..பதின்மத்துல அவங்கம்மா சொல் பேச்சு கேட்டிருக்காங்க .. அதை நல்லா அழுத்தி சொல்லி இருக்கீங்க.. :))

Thekkikattan|தெகா said...

கலவையாக பதின்மத்தின் எல்லா பசுமைகளையும் தோண்டி எடுத்து தங்களின் அறிமுகமாகவே முன் வைத்து விட்டீர்கள் :) நன்று.

//இன்று அண்ணன், அண்ணி இருவரும் உயிருடன் இல்லை என்று உணரும் போது மனம் கனக்கிறது.//

இது பெரிய சோகமாக இருந்திருக்கக் கூடும் :( ...

//மாநகராட்சி பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு பள்ளி இறுதியாண்டின் ஆரம்பத்தில் எனக்கு தெரிய ஆரம்பித்தது. //

//என்று யாராவது கேட்டால் பள்ளி பெயர் சொல்ல வெட்கப்பட்டதும் கூட நினைவுக்கு வருகிறது.//

இது போன்று தோன்றச் செய்வதற்கு அடிப்படைக் காரணங்கள், அது போன்ற பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரிய பெருமக்களின் பொறுப்பற்றத் தனம் என்றுதான் கருதச் செய்கிறது.

//எங்கள் பெயரின் முதல் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து V R STARS என்று அழைத்து கொள்வோம்.//

V R - என்ன :D

அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி, முகுந்தம்மா!

Thekkikattan|தெகா said...

one more thing you have to do in order to take your log ins to reach wider, use the following link to attach தமிழ்மணம் கருவிப் பட்டை, இது என்ன செய்யுதுன்னா மறுமொழிகள் வரும் பொழுது தமிழ்மணத்தின் முகபிற்கு உங்க பதிவை எடுத்துட்டுப் போகுது. என்ன செய்யுங்க... just cut and past your template html code onto.... just follow the link's instruction with thamizhmanam http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

முகுந்த்; Amma said...

பின்னுாட்டத்திற்கு நன்றி முத்துலெட்சுமி அவர்களே.

//பதின்மத்துல அவங்கம்மா சொல் பேச்சு கேட்டிருக்காங்க //

பேச்சை கேட்காட்டி எங்கம்மா "special கவனிப்பு " ல்ல கவனிச்சிருப்பாங்க.

முகுந்த்; Amma said...

// கலவையாக பதின்மத்தின் எல்லா பசுமைகளையும் தோண்டி எடுத்து தங்களின் அறிமுகமாகவே முன் வைத்து விட்டீர்கள்
//

நன்றி தெகா அவர்களே.

//இது பெரிய சோகமாக இருந்திருக்கக் கூடும்//

உண்மை.

//அது போன்ற பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரிய பெருமக்களின் பொறுப்பற்றத் தனம் //

இன்றும் இந்த நிலை தொடர்வது வேதனைக்குரியது.

என்னை தொடரெழுத அழைத்த தங்களுக்கு மீண்
டும் நன்றி.

தாங்கள் சொன்னது போல கருவிபட்டையில் இணைகிறேன்

அம்பிகா said...

முகுந்த் அம்மா, இன்று தான் உங்கள் தளம் வருகிறேன். பதின்ம நினைவுகள் அருமை. நானும் ஒரு அரசினர் பள்ளியில் தான் படித்தேன். இதே அனுபவம் எனக்கும் உண்டு. உங்களுக்கு ஒரு இயல்பான எழுத்து நடை அமைந்திருக்கிறது. இனி தொடர்கிறேன்.

முகுந்த்; Amma said...

வருகைக்கு நன்றி அம்பிகா அவர்களே.

பின்னுாட்டத்திற்கு நன்றி.