Saturday, February 27, 2016

Gen Z தலைமுறையும், பாடல்களும்!


Gen Z தலைமுறை: 2000 க்கு பிறகு பிறந்த குழந்தைகள் Gen Z  தலைமுறை எனப்படுகின்றனர்.

1990 களில் எல்லாம் திண்டுக்கல் லியோனி அவர்களின் பட்டிமன்றம் ஒன்று ரொம்ப பேமஸ். அது பழைய பாடல்களா அல்லது புதிய பாடல்களா! என்பது. MKT, TR மகாலிங்கம், MSV காலத்து பாடல்கள் எல்லாம் எப்படி அமைதியாக அர்த்தமுள்ள வரிகள் கொண்டதாக இருந்து இருந்தது, இளையராஜா, ARRAhman ஆரம்ப கால பாடல்கள் எப்படி அர்த்தம் புரியாதவையாக வெறும் சத்தம் மட்டும் கொண்டதாக இருக்கிறது என்று  விவாதிப்பார்கள். பள்ளிபருவத்தில் நான் கேட்ட அந்த பட்டிமன்றம், அப்பொழுதெல்லாம் எனக்கு "என்ன இது இளையராஜா போட்ட நல்ல நல்ல பாட்டை எல்லாம் நல்லா இல்லைன்னு சொல்லுறாங்க" என்று கோவம் வந்தது நினைவிருக்கிறது.

20 வருடங்கள் பாஸ்ட் பார்வர்ட் செய்து கடந்த மாதம்  முன்பு ஒரு தமிழ்சங்கம் நிகழ்சிக்காக ஏதாவது டான்ஸ் நம் குழந்தைகளை ஆட செய்யலாம் என்று நினைத்து எங்கள் தோழிகள் குழுவில்  முடிவு செய்து சாங் செலெக்சன் பற்றி டிஸ்கசன் நடந்தது. லேட்டஸ்ட் தமிழ் சினிமா பாடல்கள் அதிகம் நான் கேட்பதில்லை என்பதால்  தற்போது என்ன சாங்க்ஸ் ட்ரெண்டு என்று நான்அறிந்திருக்க வில்லை. மொத்தம் 5-6 பாடல்கள் தற்போதைய ட்ரெண்டு, சும்மா பிச்சுக்கும் என்று மக்கள் பரிந்துரை செய்தனர். அவை, 1. டங்கமாரி ஊதாரி, 2. ஆலுமா டோலுமா 3. டண்டனக்கா நக்க 4. சூட் த குருவி 5. டான்னு டான்னு டான்னு மற்றும் 6. செல்பி புள்ள


முதலில் நான் அவர்களிடம் கேட்டது இது தான், இந்த பாட்டுக்கு எல்லாம் அர்த்தம் என்னப்பா என்று. ஆனா, இப்படி கேட்டது நான் மட்டுமே என்று நினைக்கிறேன். முதல் இரண்டு பாட்டுக்கு எனக்கு சுத்தமா அர்த்தம் தெரியல. டனடனக்க பாட்டாவது கொஞ்சம் அர்த்தம் புரியுது. அது என்னப்பா பாட்டு சூட் த குருவி  உலகில் உள்ள அத்தனை Cuss வோர்ர்ட்ஸ் ம் இருக்கு. இதில என்ன கூத்துன்ன குழந்தைகள் எல்லாரும் அதன் அர்த்தம் புரியாமல் பாடுவது டான்ஸ் ஆடுவது தான். இதில எந்த பாட்டு டிவி ல வந்தாலும் சில குழந்தைகள் எழுந்து ஆடுதுங்க. அவங்க அம்மா அப்பாவும் பெருமையா பாருங்க எங்க பிள்ளைங்க எப்படி பாடுதுங்க ஆடுதுங்க அப்படின்னு சொல்லுறாங்க.

 அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதே பாட்ட இங்கிலீஷ் அர்த்தம் புரிஞ்சு அந்த குழந்தைங்க பாடினா நீங்க  ஏத்துகுவீங்களா? உதாரணமா, சூட் த குருவி  பாட்டு உலகத்துல அதிகம் உபயோகிக்க படுகிற கெட்ட வார்த்தைய மறைமுகமாக இல்ல நேரடியாகவே சொல்லுறாங்க. இங்கயாவது 18+க்கு ன்னு நிறைய பாட்டுக்கள் வரும், அதை டீனேஜ் குழந்தைகள் அல்லது சிறு குழந்தைகள் கேட்க எந்த பெற்றோரும் அனுமதிப்பதில்லை, அல்லது இப்படி பப்ளிக் ஆக கேட்க அனுமதிப்பதில்லை. பாத்ரூம் வார்த்தகள் உபயோகிக்க கூடாது என்று குழந்தைகள் சொல்லி சொல்லி வளர்க்க படுகிறார்கள். ஒருவேளை இது எல்லாம் ஆங்கில வார்த்தைகளுக்கு தானே, தமிழ் பிள்ளைகளுக்கு புரியாது என்று நினைத்தே, இப்படி பட்ட அர்த்தம் உள்ள பாட்டுகளை பிள்ளைகளுக்கு போட்டு ஆட சொல்லுறாங்க போல.

இது மாதிரி எல்லாம் கேள்வி கேட்குறது ஒரு வேளை நான் மட்டும் தானா, இது தான்  தலைமுறை இடைவெளியா? 1990 களில் லியோனி அவர்களுக்கு 80-90 களில் இருந்த பாடல்களில் தப்பாக  தோன்றிய வித்தியாசம் எனக்கு இப்படி தோன்றுகிறதா?. இல்லை இப்பொழுது லியோனி அவர்கள் பட்டிமன்றம் வைத்தால் எப்படி வைப்பார்.. "2010 க்கு  பின்பு வந்த பாடல்களா இல்லை முன்பு வந்த பாடல்களா என்று ஒரு வேலை வைப்பாரோ?"

 என்னவோப்பா, ஒண்ணுமே புரியல உலகத்தில!.


Sunday, February 21, 2016

சாதியையும்/நிறமும், திருமணமும்,அரசியலும்-இந்திய அமெரிக்க ஒற்றுமைகள்.

ரொம்ப நாட்களாகவே இது எனக்கு தோன்றுவது உண்டு. அதாவது, இனமும், நிறமும், சாதியும் இந்தியாவிற்கு மட்டும் தான் சொந்தமானதா இல்லை வேறெங்கும் இருக்கிறதா என்று. இதனை சார்ந்த ஒரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றும்  வாசிக்க நேர்ந்தது. அதன் விளைவே இது.

நான் இங்கு வந்த புதிதில் பல்கலைகழக காம்பஸ் இல் நிறைய கலப்பு ஜோடிகள் காணலாம். அதாவது, வெள்ளை-ஆசியன், வெள்ளை-இந்தியன், வெள்ளை-கருப்பு, வெள்ளை-சவுத் அமெரிக்கன்..அப்பொழுதெல்லாம், பரவாயில்லையே இங்கு நம்ம ஊர் போல சாதி, மதம் எல்லாம் இல்ல, என்று நான் நினைப்பது உண்டு. ஆனால், அப்படி சுற்றி திரிந்த பல காதல் பறவைகள் எத்தனை பேர் மண வாழ்கையில் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்று பாருங்கள், கம்மி. ஆனால் வெள்ளை -வெள்ளை, கருப்பு-கருப்பு,மெக்சிகன் -மெக்சிகன், இந்தியன்-இந்தியன் ஜோடிகள் எனில் கட்டாயம் அவை திருமண வாழ்கையில் ஒன்று சேர தடை இருப்பதில்லை.

உதாரணமாக, ஒரு பைபிள் பெல்ட் ஸ்டேட் எனப்படும் தென் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் ஒரு வெள்ளை பைய்யன் ஒரு கறுப்பின பெண்ணை நான் விரும்புகிறேன் அவளை திருமணம் செய்ய விளைகிறேன் என்று சொன்னால் அவன் வீட்டில் கிடைக்கும் ட்ரீட்மென்ட் வித்தியாசமாக இருக்கும். நிறைய பேர் வீட்டில் அதனை ஒத்து கொள்ள மாட்டார்கள். என்னுடன் தற்போது வேலை பார்க்கும் ஒரு கறுப்பின பெண், தன்னுடைய வெள்ளை கணவர் வீட்டில் தனக்கு இருக்கும் வரவேற்ப்பை பற்றி சில நேரம் வருத்தபடுவது உண்டு. இந்த விசயத்தில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய வித்தியாசம் என்று எதுவும் இல்லை. ஆனால், இங்கு இந்தியாவில் நடப்பது போல கௌரவ கொலைகள் எதுவும் நடப்பதில்லை என்றாலும், குடும்பத்தால் ஒதுக்க படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

அதே போல, எனக்கு தெரிந்து, யூத, முஸ்லிம் ஜோடிகள் எங்கேயும் பார்த்ததே இல்லை. கல்லூரி காம்பஸ் ஆகட்டும் அல்லது திருமணம் முடித்த பின்னர் ஆகட்டும். இது நடக்க வாய்ப்பே இல்லை அல்லது நான் பார்த்த வரை இல்லை. 

இந்தியாவிலாவது காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் மக்கள் பிரித்து வைத்து பார்த்து இருக்கிறேன், ஆனால் இங்கு இது போன்ற கலப்பு ஒத்து வராது என்று நினைத்தே எந்த யூத-முஸ்லிம் ஜோடிகளும் இணைவது இல்லை போல. ஒரு வேளை லிபரல் ஸ்டேட்ஸ் எனப்படும் நார்த் ஈஸ்ட் அல்லது கலிபோர்னியாவில் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

தற்போது இந்தியாவை எடுத்து கொள்வோம். நிறைய கூலி செய்து தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு எஞ்சினீர் ஆக்கி, கீழ் மட்டத்தில் இருந்து தற்போது மிடில் கிளாஸ் ஆகி இருக்கும் பல குடும்பங்கள் எனக்கு தெரிய உண்டு. எனக்கு தெரிய பல கலப்பு காதல் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவை எல்லாம் பார்க்கும் ஒரு வேளை இந்தியாவில் சாதி ஒழிந்து விட்டதோ என்று எண்ண தோன்றும். ஆனால் இது ஒரு மேம்போக்கான பார்வை மட்டுமே.

உதாரணமாக பல சாதி விட்டு சாதி கலப்பு திருமணம் நடக்கிறது. ஆயினும் அப்படி அங்கிகரிக்க படுகின்ற சில திருமணங்கள் எல்லாம் ஓரளவு ஒத்த சாதி திருமணங்கள் தாம். எனக்கு தெரிந்து நடந்த மேல்சாதி  - கீழ் சாதி திருமணங்கள் மிக மிக சொற்பம். இப்படிப்பட்ட காதல் கூட கௌரவ கொலைகளில் மட்டுமே முடிகின்றன. 

இந்த நிகழ்வு எல்லா நாடுகளும் உண்டா?, இல்லை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மட்டுமே நடப்பதா? என்று நான் யோசித்து பார்ப்பது உண்டு. உதாரணமாக, என்னுடைய ஜெர்மனி காலங்களில் நான் பார்த்தவரை , எல்லாம் நிறைய டர்கிஷ்-டர்கிஷ் ஜோடிகள் பார்த்து இருக்கிறேன். ஜெர்மன்-ஜெர்மன் ஜோடிகள் அல்லது, ஜெர்மன் -மற்ற வெள்ளை ஜோடிகள் பார்த்து இருக்கிறேன். ஜெர்மன்- கருப்பு ஜோடிகள் மிக மிக அபூர்வம். தற்போது இந்த நிலை மாறி இருக்கிறதா என்று தெரியவில்லை. 


அதே போல இன்னொரு முக்கியமான சாதி அல்லது இனம் சார்ந்த விஷயம் என்றால் அது அரசியல் தான். இங்கு வந்த புதிதில் எல்லாம், அமெரிக்காவில் எல்லாரும் சமம் என்ற குருட்டு நம்பிக்கை கொண்டு இருந்தேன். அல்லது அப்படி ஒரு மாயை என்னுள் உருவாக்கி கொண்டிருந்தேன். ஆனால், பல விசயங்களில் எப்படி இனம் என்பது ஒரு முக்கியமான ஒன்று என்று இங்கு வந்த பிறகு தெரிய ஆரம்பித்தது. உதாரணமாக, எனக்கு தெரிந்து நான் பார்த்த  தேர்தல்கள் ஒபாமாவின் இரு முறை ஜனாதிபதி தேர்தலும் மற்றும் செனட் தேர்தலும். ஒபாமா தேர்தலில் காலத்திலும் கூட எப்படி கறுப்பின மக்கள் குதூகலமாக வாக்களித்தார்கள், தங்களில் ஒருவர் வர போகிறார் என்று சந்தோஷ பட்டார்கள் என்று கண் முன் காண நேர்ந்தது. அப்படி கருப்பு மக்கள் சந்தோஷ பட்டு கொண்டு இருக்க எனக்கு தெரிந்தே, ஒபாமாவை குறித்து கிண்டல் செய்த பல வெள்ளை மக்களும்  உண்டு. அவரை முட்டாள், குரங்கு கையில் பூமாலை என்பது போன்ற விமரிசனங்கள் முன் வைக்க பட்டன.
இங்கு(அமெரிக்கா) தேர்தல் எனும் பொழுது எல்லாம் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எப்படியாவது வேட்பாளரின்  நிறம் அல்லது இனம் ஓட்டு போடுவதற்கு ஒரு முக்கிய காரணி ஆகி விடும்.
இதனை பல பேர் நம்ப மறுத்தாலும் இது தான் உண்மை.

உதாரணமாக ஒபாமாவின் தேர்தலின் போது  கூட ஒபாமா ஒரு கலப்பு,அவருடைய  தாய் வெள்ளை, அப்பா கருப்பு என்று பல முறை மீடியாக்கள் ஒளிபரப்பின. அதாவது, மறை முகமாக அவர் முழு கருப்பு இல்லை, ஒரு மிக்ஸ் என்று அறிய வைக்க ஊடகங்கள் பல முயன்றன. தற்போது குடியரசு கட்சி தேர்தல் வேட்பாளராக இருக்கும் Trump கூட இனம் மற்றும் மதங்களை சொல்லியே பேசி வருகிறார், ஆதரவு திரட்டி வருகிறார். 

இந்தியாவை பொருத்தவரை, தேர்தல் என்று மட்டும் அல்ல தேர்தல் இல்லாத நேரத்திலும் கூட சாதி/மதம் என்பது ஒரு முக்கிய காரணி எனபது அனைவரும் அறிந்ததே.

இந்த விஷயங்கள் எல்லாம் யோசிக்கும் போது சாதி, மதம் போன்ற பாகுபாடுகள் எல்லாம் எதோ இந்தியாவிற்கு மட்டும் சொந்தம் என்பது போல ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உண்மையில் உலகில் இருக்கும் பல நாடுகளிலும் இப்படி எதோ ஒரு வகையில் ஒரு பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. பொருளாதாரம், செய்யும் தொழில், நிறம், இனம் என்று பல வகைகளிலும் அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்ன பட்டு இருக்கின்றன. ஒரு சில நாடுகளில் அவை அப்பட்டமாக தெரிந்தாலும், பல நாடுகளிலும் அவை நீக்கமற நிறைந்து இருக்கின்றன என்பது மறுக்க இயலாது.

நன்றி .

Monday, February 15, 2016

விவாகரத்தும், ஜாதி சார்ந்த வேலை வாய்ப்பும்- ஒரு அமெரிக்க இந்திய கதை

இரண்டு செய்திகள் இரண்டும் மன வேதனை தரும் செய்திகள் கேட்க நேர்ந்தது.

ஒன்று, எப்படி பகணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகள் சுற்றங்கள் மற்றும் நண்பர்களால் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு விவாகரத்து வரை சென்றும் ஊர் மக்களால் தொடர்ந்து துன்பத்துக்கு உள்ளாக்கபட்டார்கள் என்ற ஒரு செய்தி. 

வட இந்தியாவில் இருந்து வந்தவர் அவர். அவருடைய எக்ஸ் மனைவி இந்தியாவில் பிறந்தாலும் இங்கே சிறு வயதில் வந்து படித்து முடித்தவர்.   நிறைய செல்வம். இரண்டு வளர்ந்த  ஆண் குழந்தைகள்.  வேலை அடிமையான அவர், மனைவியை கவனிக்க நேரம் இல்லாமல் போக, மனைவியோ இணையத்தில் நேரத்தை செலவழித்து இருக்கிறார். அதில் ஒரு நட்பு உண்டாக அதிலேயே நேரம் காலம் தெரியாமல் செலவழித்து இருக்கிறார். இதில் சந்தேகம் அடைந்த கணவன், என்னவென்று பார்க்க தன் மனைவி ஒரு வயதான ஒருவருடன் அதிக நேரம் இணையத்தில் நேரம் செலவழிப்பதை கண்டு பிடித்து இருக்கிறார். அதனால் குடும்பத்தில் சண்டை வர ஆரம்பித்து இருக்கிறது.  இதனை சாக்காக வைத்து அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஊதி ஊதி பெருசாக்க. இந்த பெண்ணோ, நான் என்ன தப்பு செய்தேன் என்ற ரீதியில் பெண்ணுரிமை பேச, நீயா நானா என்ற போட்டி. நான் அப்படி தான் செய்வேன் என்று மனைவி அடம் பிடிக்க, அவரோ விவாகரத்துக்கு அப்ளை செய்து விட்டார். முடிவில் குழந்தைகள் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று அலைகழிக்க பட்டு, அவதி பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இதில் யாரை குத்தம் சொல்ல, நேரம் செலவழிக்க முடியாமல் போன கணவனையா, அல்லது, இணையத்தில் நேரம் செலவழித்த மனைவியையா, இல்லை இதனை சாக்காக கொண்டு ஊதி ஊதி பெருசாக்கி குடும்பத்தை பிரித்த மக்களையா?.. எது எப்படியோ, நல்லா இருந்த ஒரு குடும்பம் இணையத்தால் சீர் கெட்டு விட்டது. இதில் ஹய் லைட் என்னவெற்றால், விவாகரத்து முடியும் வரை இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசி திரிந்த மக்கள் இப்பொழுது அதனையோ ஒரு ஹாட் டாபிக் ஆக எந்த கெட் டுகெதர் என்றாலும் பேசி பேசி மகிழ்கிறார்கள். எங்கே சென்றாலும் இந்திய மக்களின் புரண் பேசும் எண்ணம் மாறாது போல.

அடுத்த விசயமும் இந்திய மக்களின் மாறாத குண நலன்கள் குறித்தது. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் நிறைய தெலுங்கு மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தற்போது புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்.தனக்கு வேலை சீக்கிரம் கிடைக்கவில்லை  என்றும். ஒரு வேலைதான்  ரெட்டியாகவோ அல்லது நாயுடுவாகவோ இருந்தால் சீக்கிரம் கிடைத்து இருக்கும் என்றும் கூறினார். இது என்ன புது கதை என்று கேட்டபோது அவர் சொன்ன விஷயங்கள் தலை சுற்றின. 

இங்கு, பெரிய பெரிய கம்பனிகளில் நல்ல உயர் நிலையில் இருக்கும் இந்திய மேனேஜர் எல்லாம் வெளியே, தன்னுடைய மனைவி அல்லது சொந்தகாரர் பெயரில் ஒரு கன்சல்டின்  கம்பெனி வைத்து இருப்பார்கள். அதன் மூலம் வேலைக்கு ஆட்கள் பிடித்து கொடுத்து கொண்டு இருப்பார்கள்.இதனை வைத்து கொண்டு அந்த கம்பெனியில் எந்த ஒபெனிங் என்றாலும் இவர்களின் கம்பனி வழி மட்டுமே அப்ளை செய்ய முடியும். அவர்கள் வேலைக்கு எடுப்பவர்கள் எல்லாமே, தன்னுடைய சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே. இப்படி நிறைய தெலுங்கு ரெட்டிகளும், நாயுடுக்களும் நிறைய கம்பனிகள் வைத்து இருப்பதால் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களாக இருப்பின், வேலை கிடப்பது சீக்கிரம் என்று தெரிந்தது.

கண்டம் விட்டு கண்டம் வந்தாலும் மாறாத குண நலன்கள் கொண்ட மக்கள். எப்பொழுது திருந்த போகிறார்களோ!.

டிஸ்கி 
இது நான் கேட்ட செய்திகளை வைத்து எழுதியது மட்டுமே. பொதுப்படையானது அல்ல.

நன்றி.

Saturday, February 6, 2016

Stinky லஞ்ச் ம், பாமாயிலும், அமேசான் காடுகளும்!

முகுந்துக்கு சில மாதங்களாக லஞ்ச் என்று எது கொடுத்தாலும், அது சாண்ட்விச் தவிர எதுவாக இருப்பினும் திரும்பி வருகிறது. அதுவும் இந்தியன் சாப்பாடு என்றால் சொல்லவே வேண்டாம். டிபன் திறக்க கூட படுவதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் இட்லி, சாப்பாடு என்று எது வைத்தாலும் அதனை திறந்து சாப்பிட்டால் மற்ற குழந்தைகள் stinky lunch என்று கேலி செய்வதாகவும் அதனால் தான் சாப்பிடாமல் வருவதாகவும் காரணம் வருகிறது. இது முகுந்த் மட்டும் தான் செய்கிறானா இல்லை மற்ற இந்தியன் குழந்தைகளும் செய்கிறதா என்று அறிந்து கொள்ள, முகுந்த் உடன் படிக்கும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பையனின் டாக்டர் அம்மாவிடம் கேட்டேன். அந்த அம்மா, இங்கே சிறு வயதில் வந்தவர்கள், மிடில் ஸ்கூல், ஹை ஸ்கூல், கல்லூரி எல்லாம் இங்கே படித்து கணவன் மனைவி இருவரும்  டாக்டர் ஆனவர்கள். அவர்களிடம் இது பற்றி கேட்ட போது அவர்கள் சொன்னது இது.

சிறுவயதில் தானும் சான்ட்விச் தவிர எதுவும் பள்ளிக்கு எடுத்து சென்றதில்லை. ஏனெனில், stinky லஞ்ச் என்று இந்தியன் சாப்பாட்டை அமெரிக்க குழந்தைகள் கிண்டல் செய்வதுண்டு. அது மட்டும் அல்லாமல் தானும் மற்ற குழந்தைகள் போல இருக்க வேண்டும் என்று கிட்ட தட்ட எல்லா குழந்தைகளும் எண்ணுவதுண்டு. அதுவும் 80 களில் எல்லாம் தற்போது போல இந்தியன் மக்கள் அதிகம் இல்லாததால், மற்ற குழந்தைகளிடம் இருந்து தான் மட்டும் தனித்து தெரிய விரும்பியதில்லை அதனால், எப்பொழுதும் என் அம்மாவிடம் சண்ட்விச் மட்டுமே அனுப்புங்கள் என்று சொல்லுவதுண்டு.

 ஏனெனில், நாம் நம்ம ஊர் சாப்பாட்டை கொடுத்தால் அதன் வாசத்தை வைத்து சாப்பிடும் குழந்தைகள்  தனித்து அறியபடுகிரார்கள், அதுவே அவர்களை தனிமை படுத்துகிறது. அதிலிருந்து தப்பிக்கவே, குழந்தைகள் இந்தியன் சாப்பாடு கொடுத்தால் டப்பாவை திறப்பது கூட கிடையாது. இதனை என் பையனும் செய்தான். இது ஒரு துவக்க கால பிரச்சனை மட்டுமே, போக போக குழந்தைகள் இதனை எதிர்த்து நிற்க பழகி கொள்ளுவார்கள். யாரேனும் கிண்டல் செய்தாலும் "இது என் சாப்பாடு உனக்கு பிடிக்க வில்லை எனில் வேறு பக்கம் திரும்பி கொள், அல்லது வேறு பெஞ்ச் சென்று விடு" என்று சொல்ல பழகி கொள்ளுவார்கள்.  என் பையனிடம் இதனை சொல்லி வருகிறேன். நீங்களும் சொல்லுங்கள், இதுவும் ஒரு வகையான புல்லியிங் தான், ஆனால், குழந்தைகள் எதிர்த்து நின்றால் மட்டுமே இது முடிவுக்கு வரும். இதனை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். சரியாகி விடும் என்று சொன்னார். எனக்கும் அதுவே சரி என்று படுகிறது. மெதுவாக சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம்.

என்றாவது ஒரு நாள் வீட்டு சாப்பாடு வேண்டாம், ஸ்கூல் கபே இல் சாப்பிடு என்று சொன்னாலும், அதுவும் பல நேரங்களில் ஒரே மாதிரியான சாப்பாடு மட்டுமே அங்கு கிடைக்கிறது. அதிலிலும் இருக்கும் நியூற்றிஷன் பார்த்தால் தலை சுற்றுகிறது.  நான் பார்த்த படித்த அடுத்த விஷயம் எல்லா பொருட்களிலும் இருக்கும் அப்படி பட்ட ஒரு நியூற்றிஷன் பற்றியது.

அமெரிக்காவில், கனடாவில் அல்லது ஐரோப்பா போன்ற எந்த மேலை நாடுளில், எந்த பொருள் நீங்கள் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும்  நேரடியாக அல்லது மறைமுகமாக ஒரு ingredient கொண்டு இருக்கும்.  அது  பாமாயில். பல் துலக்கும் பேஸ்ட் முதல் திங்கும் சிப்ஸ் வரை அனைத்திலும் இந்த பாமாயில் சேர்க்க படுகிறது.அமெரிக்காவில்  தினமும் உபயோகிக்கும் கிட்டத்தட்ட 40-50% பொருட்களில்  பாமாயில் சேர்க்கபடுகிறது என்று புள்ளியியல் தெரிவிக்கிறது.  

மிகவும் சீப் ஆன எண்ணெய், குறைந்த செலவில் அதிக லாபம் அதனால் என்ன தீங்கு என்று கேட்பவர்களுக்கு. அனைத்திலும் நீக்கமற இது நேரடியாகவோ மறைமுகமாகவோ சேர்க்கபடுவதால் இதய நோய்கள் வரும் என்று புள்ளியியல் தெரிவிக்கிறது. பாமாயிலில் அதிக  saturated fat ம்குறைந்த   polyunsaturated fat ம் இருப்பதால் இதய நோய்கள் வரும் என்பது ஒரு பக்கம் என்றாலும் இந்த பாமாயில் உற்பத்தி செய்ய நடக்கும் சுற்றுப்புற சீர்கேடுகள் அளவிட முடியாதவை. முதலில் அதிக அளவில் பனை மரங்களை நட என்று  என்று அதிக அளவில் மற்ற மரங்கள் வெட்டபடுகின்றன. முக்கியமாக அமேசான் காடுகள். அதனால் பல காட்டு மிருகங்கள் தற்போது அழிந்தது மட்டும் அல்லாது பல மிருகங்கள் கிட்டத்தட்ட எச்டின்ச்ட் அல்லது அழியும் நிலைக்கு தள்ள பட்டு விட்டன. இது ஒரு புறம் இருக்க, பனை மரங்கள் தரும் ஆக்சிஜன் அளவை விட  இயற்க்கை  மரங்கள் வெட்டபடுவதால் அதிலிருந்து கிடைக்கும் ஆக்சிஜென் அளவு மிக குறைந்து அதிக நுரையீரல் மட்டும் சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் என்று பல பிரச்சனைகளை பிரேசில் போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் வசிக்கும் பல மக்கள் அனுபவிக்கிறார்கள்.

பல தானார்வ நிறுவனங்கள் பாமாயில் எப்படி இயற்க்கை வளங்களை சுரண்டுகிறது என்பதனை குறித்து ஒரு பக்கம் கத்து கத்து என்று கத்தி கொண்டு இருந்தாலும், Embrace the Serpent என்னும் கொலம்பியா நாட்டு படம் அமேசான் காடுகள் அழிக்க படுவதால் ஏற்படும் பாதிப்புகளை கதற கதற காட்டுகிறது. இந்த படம் இந்த வருட ஆஸ்கார் போட்டிக்கு தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறது. 




எப்படி எல்லாம் இயற்க்கை வளங்கள் சூறை யாட படுகின்றன அவை எப்படி நமக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று பார்க்கும் பொது, மனிதனின் பணம் சேர்க்கும் சுயநலத்துக்காக எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகின்றன என்று கண்ணீர் விட தோன்றுகிறது. 

நன்றி.