Monday, September 19, 2016

இளையராஜா ஆஆஆ ...!



சிறு வயதில் இருந்து  நான்  கேட்ட மனதில்  மனதில் ரீங்காரமிடும் அந்த ட்யூன்கள்..கண் எதிரில்    ஆர்கேஸ்டரா வாசிக்க இசைஞானி இளையராஜாவை நேரில் முதன் முறையாக காணும் வாய்ப்பு கிட்டியது. இளையராஜாவின் Live -In Concert ,USA சுற்றுப்பயணத்தில் ஒரு ஊரான அட்லாண்டாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.

கொட்டும் மழையில் ஓபன் தியேட்டரில் மழைச்சாரல் அடிக்க ,  "சிவ சக்தியா யுக்தோ யதி பவதி" என்று ஆரம்பித்து, "ஜனனி, ஜனனி" என்று தொடங்கியது..அடுத்து அதிரும் குரலில் "ஓம் சிவோஹம்" என்று பாடகர் கார்த்திக் ஆரம்பித்து அதிர வைத்தார்.  

ஆனால் ஆர்ப்பாட்டமான துவக்கத்துக்கு  பிறகு துவக்கத்தில் ஏனோ கச்சேரி களை  கட்டவில்லை.  ஆயிரம் பாடல்களுக்கு மேல்  இசை அமைத்தவர் என்பதால் என்னவோ எதை விடுவது எதை எடுப்பது என்று தெரியவில்லை போலும். "நிலா காயுது, நேரம் நல்ல நேரம்"  பாடல்கள் எல்லாம் சேர்த்த அவர்கள், நூற்றுக்கணக்கான மெலடி பாடல்கள் சேர்க்காதது ஏன் என்று தெரியவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்திருந்தது அட்லாண்டா தமிழ் சங்கம் மட்டுமல்லாது அட்லாண்டாவில் இயங்கும் 3  தெலுங்கு சங்கங்களும் ஸ்பான்சர்  செய்திருந்தார்கள். அதனால் தானோ என்னவோ, நிறைய தெலுங்கு பேசினார் ராஜா.. அதனை தவிர நிறைய தெலுங்கு பாடல்கள்களும் இசைக்கப்பட்டன. அதிலும் ஒரு சில மனதுக்கு பிடித்த நான் அதிகம் விரும்பிய ஒரு சில பாடல்களான "இதழில் கதை எழுதும் நேரமிது" பாடலும் "கொடியிலே மல்லிகைப்பூ" பாடலும் தெலுங்கு வெர்சனில் கேட்க கடுப்பாகி விட்டது.

ஏற்கனவே இதழில் கதை எழுதும் நேரமிது பாடல் தமிழில் பாட கேட்காதது கண்டு கடுப்பாகி இருந்த நான், அதனை பாடிய கார்த்திக்கை ராஜா திரும்ப பாடு, தப்பாக பாடுகிறாய் என்று ட்ரில் வாங்கி கொண்டிருந்தார். கார்த்திக் பாடிய அத்தனை பாடல்களும் திரும்ப பாடும்படி அவர் சொன்னது, பலருக்கு கடுப்பேத்தியது என்பது உண்மை. "சின்ன மணிக்குயிலே" பாட்டு, பால்ஸ் வாய்ஸில் படுற, ஒரிஜினல் வாய்ஸில் பாடு, என்று திரும்ப பாட சொல்லி ஆரம்பித்த அவர், பின்னர் "நினைவோ ஒரு பறவை" பாட்டில் சுருதி இல்லை என்று திரும்ப பாட சொன்னார். அதே நிலை
"லலித பிரிய கமலம் (இதழில் கதை எழுதும் நேரமிது) பாடலுக்கும் நிகழ்ந்தது.
சில நேரம் வந்த இடத்தில இதெல்லாம் சகஜமப்பா..என்று சொல்ல தோன்றியது என்னவோ உண்மை. அதையும் தவிர, மேடைக்கு வருபவர்கள் எல்லாரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க காலில் விழுவது நேரம் போகப்போக கடுப்பாக இருந்தது. அருகில் இருந்த ஒரு சிலர்," கார்த்திக், கால்ல விழுகல போல, அதான் மாஸ்டரோ ட்ரில் வாங்குறாரு " என்று கமெண்ட் அடித்து கொண்டிருந்தனர்.





ஒரு சில நேரத்தில் தொடர்ந்து 3 தெலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்ட, கிட்டத்தட்ட அனைவரும் "தமிழ் பாட்டு வேணும் " என்று கத்தவே ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் முடியும் தருவாயில், சில குத்து பாடல்கள் போட்டு கச்சேரியை நிறைவு செய்தாலும் எனக்கென்னவோ முழு திருப்தி இல்லை.

ஆயினும்,  ஒரு சில பாடல்களான "காட்டு குயிலு மனசுக்குள்ள," "ஓ ப்ரியா ப்ரியா", "மடை திறந்து பாடும்" போன்ற பாடல்கள் அற்புதமாக இருந்ததென்னவோ உண்மை.

கொடுத்த காசுக்கு இன்னும் நிறைய மெலடி பாடல்கள் சேர்த்து இருந்தால் முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருந்திருக்கும். இது என்னவோ தரவில்லை என்பதென்னவோ உண்மை.

ஒரு கொசுறு செய்தியும் இங்கே. எங்கள் தமிழ் பள்ளியில் என் வகுப்பில் 2 ஆவது 3ஆவது படிக்கும் பிள்ளைகளிடம், "இளையராஜா யார் என்று தெரியுமா?" என்று ஒரு கேள்வி கேட்டு விட்டேன். அதற்க்கு அவர்கள் கொடுத்த பதில் புல்லரிக்க வைத்தது. சில குழந்தைகள் "He is a flutist", "He plays sitar", "He is singer" etc. இங்கேயே பிறந்து வளர்ந்த இவர்களிடம் யார் இளையராஜா என்ற கேள்வி கேட்டு இருக்க கூடாது..ஏனெனில் இவர்கள் அனைவரும் Taylor Swift, Justin Beiber, பரம்பரையை சேர்ந்தவர்கள். எல்லாம் என் நேரம்.


டிஸ்கி
இங்கு நான் குறிப்பிட்டு இருக்கும் செய்திகள் எல்லாம் என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே. யாரையும்குறிப்பிடவோ குறை  கூறவோ  இல்லை  இங்கு. புரிதலுக்கு நன்றி.




Friday, September 16, 2016

இந்திய அமெரிக்க திருமணங்கள், கல்யாணமாம் கல்யாணம்!!

எப்போதும் பிற கலாச்சாரங்கள் குறித்து பேச விவாதிக்க பிடிக்கும், அதிலும் எப்படி திருமணங்கள் நடக்கின்றன? அதற்க்கு ஆகும் செலவுகள் போன்ற பிற விஷயங்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது. வேலை விஷயமாக டல்லஸ் பயணம் அங்கு பிற நாட்டை சேர்ந்த பலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில், ரஷ்யா, அர்ஜென்டினா, பிரான்ஸ், துருக்கி, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய பலருடன் பேசிக்கொண்டு இருந்த போது எதேச்சையாக, அர்ஜென்டினா காரர் தனக்கு திருமணம் அடுத்த மாதம் என்றும் அதற்காக எவ்வளவு செலவாகிறது எத்தனை பேர் கெஸ்ட் அழைக்க போகிறேன் என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்த அவர், எப்படியும் 100-200 பேராவது அழைக்கவேண்டும், செலவு பயங்கரமாக இருக்கும். எப்படியும் ஒரு பிளேட் சாப்பாடு 200-250$ ஆகும், அதனை தவிர டிரஸ், ட்ரிங்க்ஸ் எல்லாம் சேர்ந்து எப்படியும் 50000$ ஆகலாம். பயமாக இருக்கிறது. என்று புலம்பி கொண்டு இருந்தார்.

உடனே, எல்லாரும் அவரவர் நாட்டில் நடக்கும் திருமணங்கள் குறித்தும், பேச ஆரம்பித்து விட்டனர். அதில் நான் அறிந்த சில விஷயங்கள் இங்கே.

முன்பெல்லாம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகை திருமண சடங்குகள் இருந்தது போய் தற்போது அனைவரும் ஹாலிவுட் சர்ச் வெட்டிங் போல, வெள்ளை டிரஸ், கருப்பு சூட் என்ற கலாச்சாரத்துக்கு மாறி விட்டு இருக்கின்றனர். இது, சீனா, துருக்கி போன்ற ஆசிய நாடுகளுக்கு பொருந்தும். அதாவது முன்பு போல சிவப்பு நிற பாரம்பரிய உடை அணிந்து நிறைய சீனா திருமணங்கள் நடப்பதில்லை போல. அனைவருக்கும் வெள்ளை உடைக்கு மாறி விட்டு இருக்கின்றனர். இதே போல ஒரு நிலை துருக்கி திருமணத்திலும் நிகழ்ந்து இருக்கிறது.

மற்றொரு உலகமயமாக்கல் விளைவாக கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும், தற்போது ரிசப்ஷன் என்பது சாம்பைன் குடிப்பது, டான்ஸ் ஆடுவது , கேக் வெட்டுவது என்றாகி இருக்கிறது.

மற்றொரு விஷயம், இங்கே நடக்கும் தெற்காசிய நாடுகளை சேர்ந்த மக்கள் திருமணங்கள் எல்லாம்  3-4 நாட்கள் நடக்கின்றன. இது இந்தியா, பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்து குடியேறிய அனைவரும் வடஇந்தியாவில் நடப்பது போல, மெஹந்தி, பாராத்(மாப்பிளை அழைப்பு)கல்யாணம்  மற்றும் ரிசப்ஷன். என்று நடத்துகிறார்கள்.

அதிலும், இந்தியன் அமெரிக்கன் கல்யாணங்களில் இப்போதெல்லாம் குதிரையில் அல்லது யானையில் மாப்பிள்ளை அழைப்பு இந்தியாவில் நடப்பது போல  நடக்கிறது.அதற்காகவே அதிகம் செலவழிக்கும் பழக்கம் இந்தியர்களிடையே நடக்கிறது. இதற்க்கு போட்டியே கூட நடக்கிறது. நீ இவ்வளவு செலவு செய்கிறாயா?, நான் எவ்வளவு செலவு செய்கிறேன் பார்? என்ற போட்டி.
photo from Washingtonpost
இதனை குறித்த ஒரு செய்தியையும் பாகிஸ்தானிய நபர் சொன்னார். அது அமெரிக்காவில் நடக்கும் இந்திய திருமணங்கள் எவ்வளவு ஆடம்பரமான நிகழ்ச்சிகள் என்பதை குறிக்கும் https://www.washingtonpost.com/business/2015/02/13/89e874e8-b210-11e4-886b-c22184f27c35_story.html வாஷிங்டன் போஸ்ட் செய்தி.

மற்ற கலாச்சாரங்களில் திருமணம் முடிக்க ஆகும் செலவு 50 ஆயிரம் டாலர்கள் எனில், இந்திய திருமணங்கள் அல்லது தெற்காசிய திருமணங்கள் முடிக்க ஆகும் செலவு எப்படியும் 250 ஆயிரம் டாலர்கள்.  இதில் ஒரு சில திருமணங்கள் எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் குடும்பம் உட்பட செய்த திருமணம் 1 மில்லியன் டாலர்கள். இது 4 நாட்கள் சடங்காக நடந்தது. எல்லா வட இந்திய சடங்குகளும் உள்ளடிக்கிய அந்த திருமணம். இத்தனைக்கும் அவர்கள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள்.

எனக்கு தெரிந்த இன்னொரு திருமணம் புளோரிடா அருகில் ஒரு தீவில் நடந்தது, US இல் இருந்து மட்டுமே 200-300 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதனை தவிர இந்திய சொந்தங்களும் பலரும் அழைக்க பட்டு இருக்க, அவர்கள் தங்கும் விடுதி, சாப்பாடு, 5 நாட்கள் சடங்கு என்று ஒரே களேபரம். இந்துவான இவர்கள், கிறிஸ்துவ முறைப்படியும் மோதிரம் மாற்றி கல்யாணமும் செய்து கொண்டார்கள். எல்லாரும் சொல்ல கேட்டது, இவர்களின் திருமணமும் 1 மில்லியன் டாலர் செலவு ஆனது என்று.

சராசரி அமெரிக்கர்கள் திருமணம் நடக்க ஆகும் செலவு 5 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை. இது அவரவர்கள் வசதியை பொறுத்து கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம். ஆனால் சராசரி திருமணத்திற்கு ஆகும் செலவை விட குறைந்தது 10 மடங்கு ஒவ்வொரு இந்திய அமெரிக்க திருமணமும் நடக்க செலவாகிறது அல்லது செலவழிக்க படுகிறது என்று இந்த செய்தி தெரிவிக்கிறது.

இது உண்மையா?, எல்லா திருமணங்களும் இவ்வளவு செலவு செய்து நடத்த படுகின்றனவா? தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த சில திருமணங்கள் இந்த அளவு செலவு செய்து நடத்தப்பட்டவை என்று நான் உறுதி கூறலாம்.


நன்றி.


Saturday, September 10, 2016

ஹோம் ஒர்க் உலகத்தில் குழந்தைகளும் பெற்றோரும் !

பள்ளி ஆரம்பித்ததில் இருந்து இரண்டாவது படிக்கும்  முகுந்துக்கு வரும் ஹோம் ஒர்க் பார்த்தால் நமக்கு தலை சுற்றுகிறது.

இரண்டாவது சிலபஸ் இல்  "ஸ்டேட்ஸ் ஆப் மேட்டர்" டெஸ்ட் கடந்த வாரம். அவர்களுக்கு திட, திரவ, வாயு நிலைகளை (liquid, solid and gas )பற்றி சொல்லி கொடுத்து, அவர்களை தயார் செய்ய வேண்டும். நேற்று "Next gen vehicles" பற்றி ப்ராஜெக்ட். அவர்களாகவே யோசித்து, டிஸ்கஸ் செய்து, கேள்விகள் கேட்டு, பின்னர் படம் வரைந்து என்று நிறைய நிறைய ..ஆங்கிலத்தை பொறுத்தவரை, அதற்குள் இலக்கணம் வந்துவிட்டது, proper noun, common nound, adjective..என்று அனைத்தும் வந்துவிட்டது. இதில், singular, plural nouns இல் டெஸ்ட் எல்லாம் வருகிறது. கணக்கில் picture puzzules, or puzzle problem தினமும் 15 நிமிடம் கணக்கு விளையாட்டு விளையாட வேண்டும் அதற்கென்று Reflex math என்ற Ipad app /online game இருக்கிறது. அதனை தவிர, தினமும் ஒரு புத்தகம் குறைந்தது 15 நிமிடமாவது  படிக்க வேண்டும். என்ன படித்தான், எவ்வளவு நேரம் கணக்கு விளையாட்டு என்று பெற்றோர் பையனின் ஜர்னலில் எழுதி அனுப்ப வேண்டும். எனக்கு தெரிந்த வரை 6-7 ஆவது படிக்கும் போது சிங்குலார் ப்ளுரேல் nouns படித்ததாக நியாபகம். அதனையே, இங்கேயே படித்த ஒரு அம்மாவும் சொன்னார். அதுவும் Next gen vehicle போன்ற ப்ராஜெக்ட் எல்லாம், 10 அல்லது 12 வது வகுப்பில் படித்து இருப்போம். இப்படி இரண்டாவது வகுப்பிலேயே படித்து இருக்க மாட்டோம். இத்தனைக்கும் முகுந்த் படிப்பது பப்ளிக் ஸ்கூலில்.  அவர்களுக்கு சொல்லி கொடுக்க என்று பெற்றோரும் நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டி வருகிறது.


picture from google images

நான் கேள்வி பட்ட வரை, முன்பெல்லாம் இங்கு STEM எனப்படும் Science, Technology, Engineering and Mathematics க்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க படுவதில்லை. மொழி, மற்றும் கலை இலக்கியங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க பட்டு வந்து இருக்கிறது. ஹை ஸ்கூல் படிக்கும் போது மட்டுமே நிறைய கணக்கு மற்றும் அறிவியல் விடயங்கள் படிக்க வேண்டி இருந்திருக்கிறது. ஆனால் தற்போது, elementary பப்ளிக் பள்ளிகள் கூட, STEM சிலபஸ் பின்பற்றுகிறார்கள். அதனால் 7 வயதில் "States of Matter" பற்றி படிக்க வேண்டி வருகிறது. இது காம்பெடிட்டிவ் அதிகம் உள்ள பள்ளிகளுக்கு இடையே நடக்கும் போட்டி போல ஆகி விட்டது.

முன்பெல்லாம் ஸ்கூல் விட்டு வந்ததும் விளையாட செல்லும் குழந்தைகள், தற்போது குறைந்தது 1 மணி நேரம் ஸ்கூல் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்றால் அழுது அடம் பிடிக்கிறார்கள். இதனை தவிர, இந்திய குழந்தைகள் பலரும், எக்ஸ்ட்ரா கிளாஸ் செல்கிறார்கள் திரும்பி வந்து அதனை சார்ந்த ஹோம் ஒர்க் செய்ய சொல்லும் போது இன்னும் அதிகம் அழுகிறார்கள்.

இது இங்கு நடக்கும் கூத்து என்றால், இந்தியாவில் வேறு வகையான கூத்து நடக்கிறது. எல்லா பெற்றோரும் தன் குழந்தைகளை பெஸ்ட் ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்று பணம் கொட்டி சேர்க்கிறார்கள். ஆனால் அங்கு கொடுக்கப்படும் ஹோம் ஒர்க் ஐ, சொல்லி கொடுக்க, செய்ய வைக்க  இவர்களுக்கு தெரிய வில்லை அதனால் ட்யூஷன்க்கு அனுப்புகிறார்கள். பள்ளி விட்டு வரும் எந்த குழந்தையும் விளையாட்டுவதே இல்லை, அதற்க்கு நேரம் இருப்பது இல்லை. ஒரு ட்யூசன் முடிந்தவுடன் அடுத்தது என்று ஓடுகிறார்கள்.

எங்கள் சொந்த கார பெண் தன்னுடைய 6 வயது பையனை பெரிய பள்ளியில் சேர்க்கிறேன் பேர்வழி என்று தன து வீடு இருக்கும் இடத்தில் இருந்து மறுகோடியில் இருக்கும் ஒரு பள்ளியில் சேர்த்து இருக்கிறார். காலை 8 மணிக்கு பள்ளி செல்லும் குழந்தை பள்ளி முடிந்து  வரும்போது மணி 5 ஆகி விடுகிறது. வந்தவுடன் 1 மணி நேரம் பள்ளி பாட டியூசன், பின்னர் ஹிந்தி டியூசன் 1 மணி நேரம் பின்னர் ஸ்கூல் ஹோம் ஒர்க் என்று முடிக்க வைக்க எப்படியும் 9 மணி ஆகி விடுகிறது. இதில் எங்கே குழந்தைகள் விளையாட நேரம்.

எனக்கு தெரிந்து என் பெற்றோர் எனக்கு சொல்லி கொடுத்ததில்லை அல்லது என்னிடம் இவ்வளவு நேரம் செலவழித்து ப்ராஜக்ட் செய்தது இல்லை. எனக்கு தெரிந்தே என்னுடைய ஸ்கூல் பிரிண்ட்ஸ் ன் பெற்றோரும் சரி இல்லை அவர்களும் சரி நிறைய விளையாடி இருக்கிறோம். பின்னர் எப்படி இந்த ஜெனெரேஷன் குழந்தைகளும் சரி பெற்றோரும் சரி ஹோம் ஒர்க்குக்கு  என்று  இவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள்.  பாட திட்டங்கள் அதிகமாகி விட்டதாலா? அல்லது காம்பெடிஷன் அதிகமாகி விட்டதாலா? இப்படி அதிகம் ஹோம் ஒர்க் செய்யும் குழந்தைகள் child prodigy ஆகி விடுமா?, எதனால் இத்தனை புஷ்?

STEM பாடத்திட்டம் மட்டும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து விடுமா? ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் இங்கே

“it’s in Apple’s DNA that technology alone is not enough — that it’s technology married with liberal arts, married with the humanities, that yields us the result that makes our hearts sing.”

படிப்புடன், மொழியும் இலக்கியமும், மனிதநேயமும் எல்லாமும் சேர்ந்தாலே பெஸ்ட் ரிசல்ட் வரும் என்கிறார்.  இன்னோவேஷன் அல்லது கண்டு பிடிப்பு எல்லாவற்றுக்கும் கற்பனை திறன் வேண்டும். கற்பனை திறன் வளர நிறைய மொழி மற்றும் கலை பற்றிய பிடிப்பு வேண்டும். ஆர்வம் வேண்டும்.  குழந்தைகள் நிறைய விளையாட, ஆராய்ந்து தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். தினம் தினம் ஹோம் ஒர்க் மட்டுமே வாழ்க்கை, ஒரு கிளாஸ் முடிந்தவுடன் அடுத்தது  என்று உக்கார வைக்காமல் வேறு சில விஷயங்களையும் செய்ய ஊக்கு விக்க வேண்டும்.

ஏற்கனவே நிறைய பள்ளிகளில் ஹோம் ஒர்க் கொடுத்து செய்ய சொல்லும் நேரத்தில்,  எல்லா எக்ஸ்ட்ரா கிளாஸ்களிலும் சேர்த்து குழந்தைகளை படுத்தாமல் கொஞ்ச நேரமாவது அவர்களுக்கு விளையாட கொடுக்க வேண்டும், அதுவே அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் அதுவே நான் நம்புவது.


நன்றி







Friday, September 9, 2016

கதாசிரியர்களும், உயிரி ஆயுதமும் !!

அது என்னவோ தெரியல..முன்னெல்லாம் TB, கான்செர் போன்ற வியாதிகளை முன்வைத்து கதை எழுதி வந்த சினிமா கதாசிரியர்களும் சரி அல்லது நாவல் எழுதுபவர்களும் சரி சில காலங்களாகவே உயிரியல் ஆயுதம் அல்லது உயிரியல் தொழில் நுட்பத்தை வைத்து கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஒரு வகையாக நம்மை கொன்று விடுகிறார்கள்.
அதில் தற்போது இணைந்திருப்பவர் டான் பிரவுன்.


ஆங்கில நாவல்கள் எழுதுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட மைய கருத்து உண்டு அதிலிருந்து  அவர்கள் விலகுவது இல்லை. உதாரணமாக ஜான் க்ரிஷம் அவர்களின் அத்தனை நாவல்களும் வழக்கறிஞர் அல்லது அதனை சார்ந்த அத்தனை பாயிண்டுகளையும் மைய படுத்தி இருக்கும். ஜான் க்ரிஷம் ஒரு வழக்கறிஞர் என்பதால் அவரின் துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கலக்கி தெளித்து இருப்பார். உதாரணமாக "Time  to Kill", "The Firm",  "The Partner" etc.,

அதே போல, ராபின் குக் ஒரு மருத்துவர், இவரின் அத்தனை நாவல்களும் மருத்துவம் அல்லது உயிரியல் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். உதாரணமாக, Chromosome 6, Fever, Cell etc.,

அதே போல டாம் கிளான்ஸி அவர்களின் நாவல்கள் அனைத்தும் மிலிட்டரி அல்லது போர் சம்பந்தமானவை, பாலோ கோயல்ஹோ அவர்கள் எப்பொழுதும் மனோதத்துவ நாவல்கள் எழுதுபவர்.

இப்படி எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருப்பது போல, டான் பிரௌனின் ஸ்டைல் என்பது cyptography - ரகசிய குறியீடு வைத்து நாவல் எழுதுவது. அவரின் கிட்டத்தட்ட எல்லா நாவலிகளிலுமே ஒவ்வொரு சாப்டர்றிலும் ஏதாவது ரகசிய குறியீடு அதனை எப்படி கண்டு பிடிப்பது என்று இருக்கும். The Davinci Code, Angels and Demons , Digital Fortress etc., இன்னொரு விஷயம் என்னவென்றால் கிரேக்க, ரோம கலை மற்றும் ஓவியம் குறித்த பழைய வரலாற்று செய்திகள் நிறைய நாம் இவரின் நாவல்களில் தெரிந்து கொள்ளலாம். மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி என்று பல ஓவியர்கள் பற்றியும் சிற்ப வல்லுநர்கள் பற்றியும் டாவின்சி கோட் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார்.

அந்த வரிசையில் "Inferno" வில் முழுக்க முழுக்க Dante குறித்து நிறைய அறிய  முடிந்தது.
அவரின் Inferno என்பது நரகம் எப்படி இருக்கும் எதற்கெல்லாம் தண்டனை தருவார்கள் என்பது குறித்த ஒரு சித்திரம். அதனை தவிர Dante வின் "The Divine comedy" என்ற புத்தகம் குறித்தும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. இது கிட்டத்தட்ட நம்முடைய கருட புராணத்தை ஒத்தது. அதாவது இந்த தப்புக்கு இந்த தண்டனை என்று கருட புராணத்தில் இருப்பது போல, 7 வகை குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பதே Inferno அதாவது இத்தாலிய மொழியில் Inferno என்றால் நரகம் என்று பொருள்.

இந்த புத்தகத்தின் அடிநாதமே, வில்லனின் முயற்சியான "மக்கள் தொகையை எப்படி கட்டுப்படுத்துவது, அதுவும் உயிரி ஆயுதம் கொண்டு கட்டுப்படுத்துவது என்பதே".  அதனை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பது.


இந்த புத்தகத்தை படித்த பிறகு ஒரு சில விஷயங்கள் எனக்குள் தோன்றின. அதாவது, இதில் கூறப்படும் ஒரு விஷயம், உலகில் நடக்கும் அதிக மக்கள் தொகை பெருக்கம். அதன் பின்விளைவுகள் அல்லது அதனால் நடக்க போகும் நிகழ்வுகள் குறித்த கற்பனைகள். அது ஓரளவு உண்மை என்றே வைத்து கொள்ளுவோம். உதாரணமாக, சுதந்திரம் வாங்கிய போது ~40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய மக்கள் தொகை தற்போது ~1 பில்லியன் அசுர 100 வளர்ச்சி.

 அதிக மக்கள் தொகை பெருக்கத்தால் நடக்கும் சில விஷயங்களில் முக்கியமானவை, சாப்பாடு, தங்கும் இடம், உடை மற்றும் கழிவு நீர் மேலாண்மை. அதிக மக்கள் தொகை பெருக இவை அனைத்தும் கிடப்பது அல்லது மேலாண்மை செய்வது என்பது எவ்வளவு கடினம். இந்தியாவை எடுத்து கொண்டாலே, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குப்பை அளவை விட தற்போது இருக்கும் தூக்கி வீசப்படும் குப்பை அளவு 100 மடங்கு அதிகம். தண்ணீர் என்பது கேன்களில் மட்டுமே, அடிகுழாய் தண்ணீர் என்பதெல்லாம் நமக்கு பின் வரும் சந்ததிக்கு மறந்தே விடும் போல. சாப்பாடும் அதனை தயாரிக்க அல்லது மக்களுக்கு தேவையான சாப்பிட்டுக்காகவே என்று மாஸ் ப்ரொடியூஸ் செய்ய என்று உயிரியல் தொழில் நுட்பம் புகுத்தப்பட்ட BT வகை உணவு பொருட்கள் சந்தையில் விடப்படுகின்றன, அவை மற்ற நாட்டு காய்கறிகளை சுத்தமாக அழித்து விடுகின்றன..இப்படி பல பல
எல்லாமே ஒரு டோமினோ எபெக்ட் போல..அதன் ஆரம்பம் என்பது அதிக மக்கள் தொகை பெருக்கம்..

ஆனால், இதனை தவிர்க்க உயிரி ஆயுதம் கொண்டு அதாவது 18 ஆம் நூற்றாண்டு நிகழ்ந்ததை போல பிளேக்  கொண்டு அல்லது "மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிளேக்" கொண்டு , உலகின் மக்கள் தொகையை பாதி அழித்து விடுவது என்று எழுதி சற்று விளையாடி இருக்கிறார் டான் பிரவுன். இது அக்டோபர் மாதம் படமாகவும் வரப்போகிறது. டாம் ஹாங்க்ஸ் ராபர்ட் லாங்டன் ஆக நடிக்க விருக்கிறார். இதோ ட்ரைலர்



எனக்கென்னவோ இதனை படித்த பிறகு, நம் இதே போல உயிரி தொழில்நுட்பத்தை ஆயுதங்களாக உபயோகித்த  தமிழ் சினிமா கதைகளான தசாவதாரம், 7 ஆம் அறிவு மற்றும்  ஐ போன்றவை ஞாபகத்துக்கு வந்தன. இவர்கள் எல்லாம் சொல்வது போல, உயிரி ஆயுதம் என்பது பண்டமிக் ஆக உபயோகிப்பது சாத்தியமா?.

வைரஸ் என்பது எப்போதும் பரிணாம வளர்ச்சிப்படி மாறி கொண்டே இருப்பது ஏனெனில் நம் உடல் என்பது அற்புதமான ஒரு மெஷின் . மாறி கொண்டே இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற பலவற்றுக்கும்  ஏற்ப ஆன்டிபாடி உருவாக்கி கொண்டே இருக்கும். அதனையெல்லாம் தாண்டி நம்மை நோயாளி ஆக்கவேண்டும் என்றால் தொடர்ந்த மரபியல் மாற்றம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதனையே வைரஸ்கள் செய்கின்றன. ஆனால், ஒரு பண்டமிக் உருவாவது என்பது தற்போது இருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் என்றாலும் (உதாரணமாக 2009 இல் நடந்த H1N1 swine virus பண்டமிக்) வைரஸ் பரவுதல் என்பது குறைந்தது 7 நாட்கள் முதல் 10 நாட்கள் ஆகும். தசாவதாரம் படத்தில் காண்பது போல, ஒரு செகண்ட் இல் நடப்பது இல்லை.  வைரஸ் பரவ பரவ நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியும் ஆன்டிபாடிகளை உருவாக்கும்.

அதே போல இப்போது இருக்கும் சூழலில் ஒரு பண்டமிக் உருவாக்கி அது உலகில் இருக்கும் பாதி மக்கள் தொகையை கொள்வது என்பதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை. இது 18 ஆம் நூற்றாண்டு இல்லை, இப்பொழுது நடந்த 2009 H1N1 இல் கூட <0 .000001="" 3="" nbsp="" p="">பிளேக் க்கு தடுப்பு மருந்து உண்டு, ஆண்டிபயாடிக் ம் உண்டு.

அதனால் இது போன்ற வைரஸை உயிரி ஆயுதமாக கொண்டு உலகின் மக்கள் தொகையை பாதியாக குறைப்பது அல்லது வேரறுப்பது என்பது என்னை பொறுத்தவரை நடப்பது இயலாதது. கதாசிரியர்களும், சினிமா கதை எடுப்பவர்களுக்கு இனிமேலும் இதனை போன்ற கதை எடுக்க போகிறீர்கள் என்றால், வேறேதாவது ஒன்றை எடுத்து உலகை அழிக்க வில்லன் முயல்கிறான் என்று வைத்து எடுங்கள். தயவு செய்து உயிரி ஆயுதத்தை விட்டு விடுங்கள்.



டிஸ்கி
இங்கே குறிப்பிட்டு இருப்பவை எல்லாமே, அந்த புத்தகம் குறித்தும், சினிமா குறித்தும் என்னுடைய கருத்துக்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.


நன்றி