Friday, August 27, 2010

தட்சணை போடுங்கோ!


இந்தியா பயணம் பற்றி நிறைய எழுதி விட்டேன் என்று நினைக்கிறேன். இருப்பினும் முக்கியமாக நான் பார்த்த ஒன்றை பற்றிய இந்த இடுகையுடன் இந்தியா பயண இடுகைகளை நிறைவு செய்கிறேன். (எப்படியோ முடிஞ்சா சரிதான், என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

மதுரை கோவிலுக்கு ரங்கமணி, முகுந்த் உடன் சென்று இருந்தேன். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், முகுந்த்தை வைத்துகொண்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதாலும் திருப்பணிக்காக என்று வைத்திருந்த நூறு ருபாய் டிக்கெட் வாங்கினால் சிறப்பு தரிசனம் என்றும் எழுதி இருந்த படியால் இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டோம்.

நாங்கள் சென்ற நேரம் ஆடி முளைக்கட்டு திருவிழா ஆரம்பித்து இருந்தது. அந்த நேரத்தில் அம்மன் பிரஹாரத்தில் எழுந்தருளி இருப்பார். அதனை பார்த்தவுடன் ரங்கமணி "என்ன விசேஷம் இப்போ" என்று என்னிடம் கேட்டார், அப்போது அருகில் இருந்த குருக்கள் ஒருவர் இரண்டு வெயிட் ஆனா பார்ட்டி மாட்டிடுச்சு என்று நினைத்தோ என்னவோ மெதுவாக மதுரை பற்றி ஆரம்பித்தார்

"இப்போ தான் ஆடி முளைக்கட்டு திருவிழா ஆரம்பிச்சிருக்கு, இங்க தினம் ஒரு திருவிழா தான்"

பொறுமையாக நானும் கேட்டுக்கொண்டு வந்தேன், பிறகு தாங்க முடியாத நிலையில் "சாமி நான் பிறந்து வளந்தது மதுரையில தான்க " என்று சொன்னதும் அவர் அசடு வழிந்தார். பிறகு உள்ளே சென்று குங்கும பிரசாதம் எடுத்து வந்தார், அதனை கொடுத்து விட்டு "தட்சணை போடுங்க" என்று கேட்டார், ரங்கமணி இருபது ருபாய் தட்டில் போட்டதும் ஒரு மாதிரி முறைத்து கொண்டு சென்று விட்டார்.

இந்த இந்தியா பயணத்தில் நாங்கள் சென்ற கோவில்களில் எல்லாம் நான் கண்டது இதுதான்

நல்ல பணம் வரும் அல்லது கூட்டம் வரும் கோவில்களில் இருக்கும் குருக்கள் கூச்சம் இல்லாமல் "தட்சணை போடுங்கோ" என்று demand செய்கிறார்கள். மதுரை, ஸ்ரீ ரங்கம், சமயபுரம், திருச்செந்தூர்.. இந்த கோவில்களில் எல்லாம் இதனை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. இருவது ரூபாய் கொடுத்தால் தான் பிரசாதமாவது கொடுக்கிறார்கள் அல்லது எப்போ தட்சணை போடுவார்கள் என்று வெயிட் செய்கிறார்கள்.

கூட்டம் இல்லாமல் இருக்கும் அல்லது பண வசதி இல்லாமல் இருக்கும் கோவில்களில் எல்லாம் மிகுந்த பய பக்தியுடன் பூஜை நடக்கிறது, உதாரணதிற்கு திருவெண்காடு, திரு நாங்கூர். அதிலும் திருநாங்கூர் சுற்றி ஆழ்வார்களால் பாடப்பட்ட பல வைணவ திவ்ய தேசங்கள் இருக்கின்றன. ஆனாலும், அதில் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு குருக்களே இருக்கிறனர். ஒரு கோவில் தரிசித்து விட்டு அதே குருக்களை எங்கள் வண்டியிலேயே கூட்டி கொண்டு அடுத்த கோவிலுக்கு சென்றோம். அங்கு அவர் கோவில் கதவை திறந்து பூஜை செய்கிறார்.

இந்த குருக்கள் யாருமே தட்சணை தாருங்கள் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. அன்புடன், எந்த ஆழ்வார் மங்களாசாசனம் செய்தது, என்ன பாடல் என்று அழகாக விளக்குகிறார்கள். அற்புதமாக சாமி தரிசனம் செய்தோம். கோவிலை சுற்றி இருக்கும் இடங்களில் எல்லாம் செடிகள் மண்டி கிடக்கின்றன. யாரும் கவனிப்பதில்லை. "நாங்களே வலிய வந்து நாங்கள் திருப்பணிக்கு ஏதாவது கொடுக்க நினைக்கிறோம் எங்கே கொடுப்பது" என்று கேட்டோம். அவர்கள் ஒரு விலாசத்தை கொடுத்து அங்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினார்கள். அதனையும் அவர்கள் வாங்கி கொள்வது இல்லை.

இத்தனைக்கும் பெரிய கோவில்களில் இருக்கும் குருக்களுக்கு சம்பளம் என்று ஒன்று கொடுப்பார்கள். ஆயினும் அவர்கள் demand செய்கிறார்கள். ஆனால் நாங்கூர் போன்ற சிறிய கோவில்களில் எல்லாம் குருக்களுக்கு சம்பளம் உண்டா என்று தெரியவில்லை. இருப்பினும் அவர்களின் இந்த பண்பு எங்களுக்கு வியப்பை தந்தது.

12 comments:

அம்பிகா said...

எரிச்சலூட்டும், அவமானகரமான விஷயம். இன்னும் இதைப் போல நிறைய சொல்லலாம். தட்டில் தட்ச்ணை போட்டால் தான் சில கோயில்களில் திருநீறு கூட ஒழுங்காக தருவார்கள்.

அபி அப்பா said...

திருநாங்கூர் குருக்கள் மட்டும் அல்ல எங்க பக்கம் இருக்கும் எல்லா குருக்கள்க்கும் வருஷத்துக்கு 24 கலம் நெல் சம்பளம். அதாவது 12 மூட்டை. அதை அரைத்தால் 6மூட்டை அரிசி. அவரும் அவருடைய சகதர்மினியும் இரண்டு குழந்தைகளும் சந்தோசமாக சாப்பிடலாம். அத்தனையே. தவிர மாதம் 750 ரூபாய் பணமாக இப்போது சமீபமாக தருகின்ரனர்.

தங்குவதற்கு கோவில் சன்னதி அல்லது திருஞ்சனவீதி அல்லது மடவிளாகத்தில் ஒரு ஓட்டு வீடு அப்போது ஒதுக்கப்பட்டது இருக்கும். அதிலே இப்போது சேவகம் செய்யும் குருகள்க்கு ஒரு ஒண்டு குடித்தன இடம் சொந்தமாக இருக்கும்.

மீதி பங்காளிங்க எல்லாம் அமரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இருப்பாங்க. அவங்களும் போனா போகுதுன்னு இவருக்கே அந்த வீட்டை எழுதியும் தர மாட்டாங்க.

இதான் அவங்க வாழ்க்கை. செய்யும் தொழிலை பக்தியோட செஞ்சு திருப்தி அடைகின்றனர்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் விருந்து என இருக்கும் இவங்களுக்கு மாதத்தில் 15 நாள் தான் வேலை. அடுத்த 15 நாள் வேற குருக்கள். விஷேஷ காலத்தில் இருவருக்கும் வேலை.

கோவில் சன்னதில வாசல்ல நிலவு ஒளியில் ஈஸி சேர் போட்டுகிட்டு காத்து வாங்கிகிட்டு சாணிமெழுகிய தரையில் உட்காந்து தாம்பூலம் தரும் சகதர்மினியோடு உலகவிஷயம் பேசும் இவங்களை பார்த்து நான் பொறாமைக்கூட பட்டிருக்கேன்!!!

Thekkikattan|தெகா said...

இதுக்காகத்தான் இப்பல்லாம் மானசீகமா இந்த பரந்த வெளியையே கடவுளா நினைச்சு வாழக் கத்துக்கிட்டது.

வெளியில முடியல. நம்மை நாமே ஏமாத்திகிட்டு, நாம எழுதி வைச்சிக்கிட்டதை நாமே உடைச்சு அல்லது வளைச்சு நெளிச்சின்னு நேரத்திற்கு, ஆளுக்கு தகுந்த மாதிரி பேசிகிட்டு.

ஒரு நண்பர் சொன்னாரு - யாரு ரொம்ப காலங்களா கடவுளின் பெயரால் கடவுளுக்கு மிக அருகமையில் இருந்து அவருக்கு தொழில் நிமித்தம் சர்வீஸ் செய்து வருகிறாரோ அவருக்குத்தான் தெரியுமாம் கடவுள் இல்லை என்று :) ...

சோ விடுங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடவுளை கேள்வி கேக்கறதுன்னா தெகாவுக்கு சக்கரை.. :)

சின்ன ஊருல இருக்கவங்க இன்னும் கிராமத்து பழக்கவழக்கத்தில் அடுத்தாள் காசை அதிகம் எதிர்பார்ப்பதில்லை ..நகரத்தில் எப்படியோ பிடிங்கினாப்போதும் என்பது தான்.
மேலும் யாருமில்லா கோயிலில் பொதுவா நாமே நமக்காக திறந்து பூஜை செய்தாரேன்னு கொஞ்சம் போடத்தான் செய்வோம் வேற.. இல்லையா..

அமைதி அப்பா said...

இந்த இடுகையுடன் இந்தியா பயண இடுகைகளை நிறைவு செய்கிறேன்//

என்ன மேடம், அதற்குள் முடித்துக் கொள்வதாகா அறிவித்து விட்டீர்கள்.
முடிவை மறு பரிசீலனை செய்யவும்.
இன்னும் நிறைய எழுதலாமே!

இன்னும் நிறைய விஷயங்களை, நீங்கள் தொடவே இல்லையே.

இந்தியர்களின் அமெரிக்கப் பார்வை தற்பொழுது எப்படி உள்ளது?

இளைஞர்கள் அமெரிக்கா வர விரும்புகிறார்களா?

இதுபோன்று இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன.
தொடரவும்.

அரசூரான் said...

//பொறுமையாக நானும் கேட்டுக்கொண்டு வந்தேன், பிறகு தாங்க முடியாத நிலையில் "சாமி நான் பிறந்து வளந்தது மதுரையில தான்க " என்று சொன்னதும் அவர் அசடு வழிந்தார். பிறகு உள்ளே சென்று குங்கும பிரசாதம் எடுத்து வந்தார், அதனை கொடுத்து விட்டு "தட்சணை போடுங்க" என்று கேட்டார், ரங்கமணி இருபது ருபாய் தட்டில் போட்டதும் ஒரு மாதிரி முறைத்து கொண்டு சென்று விட்டார்//
உங்க முகத்துல யு.எஸ் ரிட்டர்ன்-ன்னு எழுதியிருந்துக்கும் ( இல்ல உண்மைய சொல்லனும்னா, இதுக்கு முதல் பதிவுல எழுதின மாதிரி ஏதாவது பண்ணி இருப்பீங்க... அவ்வ்வ்வ்வ்).
சரி, டாக்டருக்கு ஊசிதான் போடத்தெரியாது, தட்சணையுமா போடத்தெரியாது? 20 அமெரிக்கன் டாலரன்னா போட்டிருக்கனும். எப்பூடி?

முகுந்த்; Amma said...

@அம்பிகா said...

//எரிச்சலூட்டும், அவமானகரமான விஷயம். இன்னும் இதைப் போல நிறைய சொல்லலாம். தட்டில் தட்ச்ணை போட்டால் தான் சில கோயில்களில் திருநீறு கூட ஒழுங்காக தருவார்கள்.//

நீங்க சொல்லுறது நூறுக்கு நூறு உண்மைங்க, தட்சணை வாங்கிட்டு தான் திருநீறு தர்றாங்க.

முகுந்த்; Amma said...

@அபி அப்பா said...

திருநாங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களில் இருக்கும் குருக்களின் வாழ்க்கை பற்றி அறியும் போது ஆச்சரியமாக இருக்குகிறது. போதும் என்ற மனதுடன் கடவுளுக்கு சேவகம் செய்வதே திருப்தி என்று இருக்கும் மனநிலை அனைவருக்கும் இருக்காது.

செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அபி அப்பா அவர்களே

முகுந்த்; Amma said...

@தெகா

//இதுக்காகத்தான் இப்பல்லாம் மானசீகமா இந்த பரந்த வெளியையே கடவுளா நினைச்சு வாழக் கத்துக்கிட்டது. வெளியில முடியல. நம்மை நாமே ஏமாத்திகிட்டு, நாம எழுதி வைச்சிக்கிட்டதை நாமே உடைச்சு அல்லது வளைச்சு நெளிச்சின்னு நேரத்திற்கு, ஆளுக்கு தகுந்த மாதிரி பேசிகிட்டு.//

இயற்கையே தெய்வம்! உங்க பிலாசபி கூட நல்லா தாங்க இருக்கு


//ஒரு நண்பர் சொன்னாரு - யாரு ரொம்ப காலங்களா கடவுளின் பெயரால் கடவுளுக்கு மிக அருகமையில் இருந்து அவருக்கு தொழில் நிமித்தம் சர்வீஸ் செய்து வருகிறாரோ அவருக்குத்தான் தெரியுமாம் கடவுள் இல்லை என்று :) ...//

யாருங்க அவரு?, கோவில்ல ஏதும் வேலை பார்க்குறாரா? :)). கோவில்களில் நடப்பதை வைத்து கொண்டு அவரா முடிவு பண்ணிட்ட அதுவே உண்மை ஆகிடாதுக்கிறது என்னோட கருத்து.

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி/muthuletchumi said...

//கடவுளை கேள்வி கேக்கறதுன்னா தெகாவுக்கு சக்கரை.. :)//


:))

//சின்ன ஊருல இருக்கவங்க இன்னும் கிராமத்து பழக்கவழக்கத்தில் அடுத்தாள் காசை அதிகம் எதிர்பார்ப்பதில்லை ..நகரத்தில் எப்படியோ பிடிங்கினாப்போதும் என்பது தான்.மேலும் யாருமில்லா கோயிலில் பொதுவா நாமே நமக்காக திறந்து பூஜை செய்தாரேன்னு கொஞ்சம் போடத்தான் செய்வோம் வேற.. இல்லையா..//

நீங்க சொல்லுறதும் நல்ல காரணமா தாங்க தெரியுது, ஆனாலும் அபி அப்பா அவங்க சொல்லுறத பார்த்தா, அங்க இருக்க குருக்கள் எல்லாம் கிடக்கிறத வச்சுக்கிட்டு ரொம்ப திருப்தியா கடவுள் சேவகம் பண்ணுறாங்கன்னு தெரியுது.

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@அமைதி அப்பா said...

//என்ன மேடம், அதற்குள் முடித்துக் கொள்வதாகா அறிவித்து விட்டீர்கள்.
முடிவை மறு பரிசீலனை செய்யவும்.
இன்னும் நிறைய எழுதலாமே!//

நடந்து முடிந்ததை திருப்பி திருப்பி யோசிச்சா சில நாட்களுக்கு பின்
பயங்கரமா போர் அடிச்சிடுதுங்க, அதனாலேயே இந்த மாதிரி அறிவிச்சேன்.


//இன்னும் நிறைய விஷயங்களை, நீங்கள் தொடவே இல்லையே.

இந்தியர்களின் அமெரிக்கப் பார்வை தற்பொழுது எப்படி உள்ளது?

இளைஞர்கள் அமெரிக்கா வர விரும்புகிறார்களா?

இதுபோன்று இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன.
தொடரவும்.//

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலை கட்டாயம் சிறிது காலம் கழித்து எழுதுகிறேன்.

நீங்கள் கேட்டது போல பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன, கட்டாயம் தொடருவேன். கேட்டதற்கு நன்றி.

நன்றிங்க

முகுந்த்; Amma said...

Blogger@ அரசூரான் said...
//உங்க முகத்துல யு.எஸ் ரிட்டர்ன்-ன்னு எழுதியிருந்துக்கும் ( இல்ல உண்மைய சொல்லனும்னா, இதுக்கு முதல் பதிவுல எழுதின மாதிரி ஏதாவது பண்ணி இருப்பீங்க... அவ்வ்வ்வ்வ்).//

அவ்வளவு பீட்டர் எல்லாம் எங்க கிட்ட இல்லீங்க.


//சரி, டாக்டருக்கு ஊசிதான் போடத்தெரியாது, தட்சணையுமா போடத்தெரியாது? 20 அமெரிக்கன் டாலரன்னா போட்டிருக்கனும். எப்பூடி?//

ஆமாங்க என்ன பண்ணுறது. இருபது டாலர் போட்டாலும் அவங்க இன்னும் கேட்ட்கதான் செய்வாங்க.