Monday, September 20, 2010

திரைப்படமும், வாசிப்பனுபவமும்


ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் வரும் கதை மாந்தர்கள் பற்றிய நமது கற்பனையும், கதை நடக்கும் சூழ்நிலைகள் பற்றிய நமது அவதானிப்பும், அந்த புத்தகங்கள் திரைப்படங்களாக எடுக்கப்படும் போது சில வேளைகளில் பெருத்த ஏமாற்றம் தருவது உண்டு. திரை படங்களாக ஒரு புத்தகம் மாறும் போது கதை சொல்லியின் கோணத்தில் இருந்து மாறுபட்டு ஒரு இயக்குனரின் கோணத்தில் மாறுவதே இதற்க்கு காரணமாக இருக்கலாம்.

இப்படி நிறைய எனக்கு பிடித்த புத்தகங்கள் திரைப்படங்களாக மாறும் போது ஏமாற்றம் தருவது உண்டு. ஆனால் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள், படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விட திரைபடமாக மாறும் போது ஏற்படும் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்படி எனக்குள் தாக்கம் ஏற்படுத்திய ஒரு புத்தகம்/திரைப்படம் Khaled Hosseini அவர்கள் எழுதி Marc Forster அவர்கள் இயக்கிய The Kite Runner.

2000 ஆம் ஆண்டு கதைமாந்தர் அமிரின் நினைவுகளாக படம் ஆரம்பிக்கிறது. ஆப்கானிஸ்தானில் 1978 இல் சோவியத் படைகள் நுழைவதற்க்கு ஒரு சில மாதங்களுக்கு முந்தய அமைதியான, அழகான காபூல் நகரம் அது. குழந்தைகள் குதூகலத்துடன் பட்டம் விட்டு கொண்டிருக்கின்றனர். அதில் உயர்ந்த குலத்தை சேர்ந்த பணக்கார அமிரும், தாழ்ந்த குலத்தை சேர்ந்த அமிர் வீட்டில் வேலை செய்யும் ஹாசனும் அடுத்து நடைபெரும் பட்டப்போட்டியில் எப்படி ஜெயிப்பது என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.

பட்டபோட்டியின் விதிகளின் படி, பட்டத்தை ஒருவர் அறுத்த பிறகு தன் பட்டத்துடன் அறுந்த பட்டத்தையும் ஓடி சென்று எடுக்க வேண்டும், அப்படி செய்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்க படுகிறார். அமீர் ஒவ்வொரு பட்டத்தை அறுக்கும் போதும் ஹாசன், அமீருக்கு அறுந்த பட்டத்தை எடுத்து வரும் Kite Runner ஆக இருக்கிறான்.

தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனாக வீட்டு வேலைகாரனாக ஹாசன் இருந்தாலும் அவன் மீது தன் தந்தைக்கு அதிக பாசம் இருப்பதாக அமீர் எப்போதும் பொறமை படுகிறான். எப்படியும் வரும் பட்டப்போட்டியில் வெற்றி பெற்று தந்தையிடம் நல்ல பேர் பெறவேண்டும் என்று அமீர் நினைக்கிறான்.

பட்டபோட்டி நாள் வருகிறது. ஒவ்வொரு பட்டமாக அமீர் அறுக்க அமிரின் தந்தை குதூகளிக்கிறார். கடைசி பட்டத்தையும் அறுத்த பிறகு ஹாசன் அறுந்த அந்த பட்டத்தை எடுக்க ஓடுகிறான், அவனை தேடி அமிரும் பின் செல்கிறான். அப்போது உயர்ந்த இனத்தை சேர்ந்த சில சிறுவர்கள் ஹாசனை சூழ்ந்து கொண்டு பட்டத்தை கொடுத்து விடும்படி மிரட்டுகிறார்கள். "இது அமீர் உடையது கொடுக்க முடியாது" என்று ஹாசன் மறுக்க அவனை பாலியல் துன்பத்துக்கு ஆட்படுத்து கின்றனர். இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அமீருக்கு அதிலிருந்து குற்றஉணர்ச்சி மனதில் ஏற்பட அதிலிருந்து தப்பிக்க ஹாசன் குடும்பத்தின் மீது திருட்டு பட்டம் காட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறான்.

சில மாதங்களில் சோவித் படைகள் காபூலில் நுழைய உயிருக்கு பயந்து அமிரும் அவன் தந்தையும் பாகிஸ்தானுக்கு செல்கிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்க வருகின்றனர். அமீர் வளர்ந்து திருமணம் செய்யும் வரை அவன் தந்தை அவனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். அமீர் ஒவ்வொரு முறை வெற்றி பெரும் போதும் "ஹாசன் இப்போ இருந்த நல்ல இருக்கும்" என்று கூறுகிறார்.

அமிரின் தந்தை இறந்த பிறகு அவன் தந்தையின் நண்பர் மூலம் ஹாசன் தன்னுடைய சகோதரன் என்றும், தன் வீட்டு வேலைகாரிக்கும் தந்தைக்கும் பிறந்தவன் என்றும் அமீர் அறிகிறான். மேலும் ஹாசன் இப்போது உயிரோடு இல்லை என்பதும் தாலிபான் படைகளால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டான் என்பதும் தெரிய வரும் போது அமீர் மனம் வருந்துகிறான். அவனுக்கு மேலும் துன்பம் சேர்க்கும் வண்ணம் ஹாசனின் மகன் சொஹ்ராப் இப்போது அனாதையாக யாருமில்லாமல் தாலிபான்கள் வசம் உள்ளான் என்றும் அறிகிறான்.

சொஹ்ரப்பை மீட்டு வர காபூல் கிளம்புகிறான், அவன் பார்த்த அழகான அமைதியான காபூல் நகர் அழிந்து விட்டு இருக்கிறது. ஒரு மைதானத்தில் ஒரு பெண்ணை கல் எறிந்து கொள்வது, நடு ரோட்டில் சுட்டு கொள்வது, தாடி இல்லாதவர்களை சுடுவது, நினைத்த போது யாரையும் கடத்தி சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது போன்ற தாலிபான்கள் ஆதிக்கம் அவனுக்கு அதிர்ச்சி தருகிறது.

சொஹ்ராப் ஒரு பெண்ணைப்போல உடைகளை அணிந்து நடனம் ஆடுவதை பார்கிறான், தாலிபான்கள் வசம் இருந்த சொஹ்ரப்பை பலத்த காயங்களுடன் ஒரு வழியாக மீட்டு வீடு திரும்புகிறான்.

புத்தகமாக இதனை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை விட அதனை படமாக பார்க்கும் போது மனதை நெகிழ செய்தது இந்த படம்.

3 comments:

Thekkikattan|தெகா said...

கதையின் வீச்சை வாசிக்கும் பொழுதே படம் நன்றாக வந்திருக்க வேண்டுமென்றுதான் தோன்றுகிறது.

நீங்கள் கூறுவது போலவே, Michael Crichton எழுதிய டைம்லைன் என்ற புதினத்தை படமாக்கிய விதத்தினைக் காணும் பொழுது இரண்டிற்கும் பெரிய வித்தியாசங்களை உணர முடிந்தது. அது பல புதினங்களை தழுவி எடுத்த படங்களுக்கும் பொருந்தலாம்மென்றுதான் படுகிறது எனக்கு.

ஒரு நல்ல படத்திற்கான அறிமுகத்திற் நன்றிங்க!

Chitra said...

மனதை உருக்கும் நிலைமை.... பகிர்வுக்கு நன்றி.

முகுந்த்; Amma said...

@தெகா,

//நீங்கள் கூறுவது போலவே, Michael Crichton எழுதிய டைம்லைன் என்ற புதினத்தை படமாக்கிய விதத்தினைக் காணும் பொழுது இரண்டிற்கும் பெரிய வித்தியாசங்களை உணர முடிந்தது. அது பல புதினங்களை தழுவி எடுத்த படங்களுக்கும் பொருந்தலாம்மென்றுதான் படுகிறது எனக்கு.//

நிறைய படங்கள இப்படி தான் சொதப்பி இருப்பாங்க.

நன்றிங்க. உங்கள் ஆதரவுக்கு.


@சித்ரா

நன்றி சித்ரா.