கடந்த இரண்டு வார மதுரை வாசத்தில் என்ன புது விஷயங்கள் கற்று கொண்டேனோ இல்லையோ ஒரு சில விஷயங்கள் மனப்படமாகி இருக்கிறது. அவைகள், குறைந்தது 12 மணி நேரமாவது அலறும் FM ரேடியோக்கள், மாலை நேரங்களில் வீட்டுக்கு வீடு மறக்காமல் ஒலிக்கும் டிவி சீரியல்கள், ஏதாவது ஒரு கல்யாணம், காது குத்து, பூப்புனித நீராட்டு விழா இல்லை கோயில் திருவிழா, அரசியல் கட்சி கூட்டம் என்று ஊரெங்கும் ஒலி பெருக்கி கட்டி அலறவிடப்படும் பாடல்களும், வெடி சத்தங்களும்.
அதுவும், நான் பார்த்த ஒரு கட்சி கூட்டம் , பெட்ரோல் பங்குக்கு எதிரில் இருந்த திருமண மண்டபத்தில் நடந்தது..ஆயினும் யாரும் எந்த கவலையும் இல்லாமல் 1000 வாலா , 10000 வாலா என்று வெடி விட்டு கொண்டு இருந்தார்கள். என்னுடன் வந்த 9 வயது என் அண்ணன் மகள், இப்படி பெட்ரோல் பங்குக்கு பக்கத்துல வைக்கிரன்களே, பெட்ரோல் பத்திக்காது? என்று கேட்டாள். ஒரு 9 வயது சிறுமிக்கு இருக்கும் பொது அறிவு கூட இவர்களுக்கு இல்லையே என்று வருந்த நேர்ந்தது.
இன்னொரு காமெடியான விஷயம் மொய் வசூலிப்பதற்காக ஒரே பையனுக்கு இரண்டு மூன்று முறை காது குத்துவது. மறுகுத்து என்று வேறு சொல்லி கொள்ளுகிறார்கள். ஒவ்வொரு முறை காது குத்துக்கும் ப்ளெக்ஸ் பானேர்கள். தாங்க முடியலடா சாமி.
அடுத்து, மக்களின் சீரியல் பார்க்கும் மோகம். இதனை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள், நானும் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆயினும், மக்களின் மோகம் எல்லை கடந்து போய் விட்டது போல. ரேடியோ மிர்ச்சி, சீரியல் கில்லர்ஸ் என்று ஒரு நிகழ்ச்சி கூட நடத்துகிறார்கள். முன்பெல்லாம் வீட்டு வேலை முடிந்ததும் நிறைய கைவேலைகள், கைத்தொழில்கள் என்று செய்து வந்த பலர் இப்போது சீரியல் மோகத்தில் மூழ்கி, சீரியல் அடிமைகள் ஆகி விட்டு இருப்பதை பார்த்தேன். அதுவும் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்று இருந்தேன், அங்கு கல்லாவில் இருந்த ஒரு பெண் கல்லாவுக்கு அருகில் டிவி பெட்டி வைத்து கொண்டு அதில் வரும் ஒவ்வொரு டயலாக் குக்கும் முக பாவனைகள் மாற்றுவது, கதாநாயகியை பார்த்து பாவப்படுவது என்று ரியாக்சன் பார்க்க காமெடியாக இருந்தது. காசு கூட கரெக்டாக வாங்கி கல்லாவில் போடுமா அந்த அம்மா என்று தெரியவில்லை.
எனக்கு தெரிந்த தையல் வேலையில் சிறந்த என் தோழி ஒருத்தி பிள்ளைகள் கணவர் வேலைக்கு வெளியில் சென்றதும் தற்போது டிவி பெட்டியே கதி என்று இருப்பதை பார்க்க முடிந்தது. நாம் அவர்கள் சீரியல் பார்க்கும் நேரத்திற்கு வீட்டுக்கு சென்றால் நம்மிடம் கூட இவர்கள் பேசுவதில்லை அல்லது பாரமாக நினைக்கிறார்கள் என்பதை கண்கூடாக காண நேர்ந்தது. இனிமேல், ரேடியோ மிர்ச்சியில் கிண்டல் செய்வது போல, இவர்களிடம் போன் செய்து எப்பொழுது வந்து சந்திக்கலாம் என்று கேட்டாலும், ஒரு சீரியலுக்கு பின்னர் அடுத்ததாக இவர்கள் சொல்லி கிட்டத்தட்ட வீட்டுக்கு வராதீர்கள் என்று சொல்லி விடுவார்கள் போல. எங்கே போக போகிறதோ இவர்களின் நிலைமை, பார்க்க கஷ்டமாக இருக்கிறது. எப்படி இவர்களை திருத்துவதோ?
நன்றி
4 comments:
தமிழ்நாட்டில் வீட்டுக்கு போய் ஆட்களை பார்க்கும் வழக்கம் ஒழிந்து பல ஆண்டுகளாகிவிட்டன் அவங்கெல்லாம் ரொம்ப அட்வான்ஸாக்கும். அவங்க கூட நீங்க உரையாட வேண்டும் என்றால் பேஸ்புக் மூலம்தான் பேசமுடியும் நீங்கள் பேஸ்புக்கில் தகவல் அனுப்பினால் அவங்க சீரியல் பார்க்கும் போது கிடைக்கும் விளம்பர இடைவெளியில் உங்களுக்கு பதில் அனுப்புவார்கள்.. நீங்கள் அமெரிக்க வந்தாலும் இன்னும் அந்த கால ஆட்களாகவே இருக்கிறீங்க
தாங்கள் ஊரிலேயே இருந்திருந்தால் மிகவும் சமர்த்தாக இருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவரின் வளர்ச்சி மற்றும் சிந்தனைகள் அவர் இருக்கும் சமுதாயத்தையும் பொறுத்துள்ளது.
தமிழகம் பெருமளவிலான சமூக மாற்றத்தைக் கண்டு வருகின்றது. 1960-களில் முற்று முழுதாக நாட்டுப்புற வாழ்வியலைக் கொண்டிருந்த சமூகம் வெறும் 40 ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்வியலுக்கு மாறிவிட்டது. அதாவது ஒரு தலைமுறைக்குள்ளேயே அது மரபுசார் வாழ்வியலைவிட்டு நவீன வாழ்வியலுக்கு தாவிவிட்டது. அதிலும் தமிழகமே நகர்சார் வாழ்வியலுக்கும் நவீனத்துக்கும் அதிகம் மாறி வரும் மாநிலமும் கூட. இந்த நகர்சார் மாற்றம் நிகழ்ந்த அதே காலத்தில் பன்னாட்டு நவீன தொழில்நுட்ப புகுதலும் நடந்திருக்கின்றது. அதாவது மேலை நாடுகளில் வானொலியில் இருந்து தொலைக்காட்சிக்கும் தொலைக்காட்சியில் இருந்து கணனிக்கும் கணனியில் இருந்து செல்பேசிக்கும் மாற மூன்று, நான்கு தலைமுறை ஆனது. ஆனால் தமிழகத்தில் ஒன்றிரண்டு தலைமுறையில் இது நிகழ்ந்துவிட்டது. இதனால் படிநிலை வளர்ச்சி பகுத்தறிவு எட்டப்படவில்லை. கூடவே தொழில்நுட்பம் சார்ந்த மோகமும் மிக அதிகம். பாட்டி காலத்தில் வானொலி கூட வரப்பெறாத ஒரு சமூகம் பேத்திகாலத்தில் செல்பேசிக்கே போய்விட்டது என்றபடியால், இந்த இடைநிலை தலைமுறை அதாவது 1960-கள் முதல் 1990-வரை பிறந்தவர்கள் மத்தியில் தொலைக்காட்சி மோகம் மிக அதிகமே. கூடவே நவீனத்தை உள்வாங்கி அதனை முறையாக நிலைப்படுத்தவோ, பயன்படுத்தவோவல்ல பகுத்தறியும் பொதறிவும் குறைவே. பாருங்கள் ! இன்றைய நிலையில் 15-வயதுக்கு உட்பட்டோர் மத்தியில் பொதறிவும் பாதுகாப்பறிவும் மிகுதியாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விபத்துக்கள் தடுக்கும் பேரறிவு என பலவகையில் அவர்களது அறிவுத்திறன் மிகுதியாகவே உள்ளது. ஆனால் 15-வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் சுயநலம், மிதமிஞ்சிய நுகர்வுத் தன்மை காணப்படுகின்றன. ஆக ! மேலைநாடுகளின் பொதறிவு நிலைக்கு தமிழகம் வருவதற்கு இன்னம் ஒருதலைமுறை கடக்க வேண்டும். அதாவது 15-வயதுக்கு உட்பட்டவர்கள் வளர்ந்து பெற்றோராகி அவர்களுக்கு 15 வயதில் பிள்ளைகள் உண்டாகி நிற்கும் காலம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
I became satisfied to examine this article after looking at google, after reading I have written a piece of article about: nutrition info apple Thank you for the article and supporting me.
Post a Comment