Sunday, July 5, 2015

தனியே பயணமும், வாழ்க தமிழும் !!


இரண்டரை வார இந்திய விடுமுறை இனிதே முடிந்தது. தனியே இந்திய பயணம், என்னுடைய ஐரோப்பா நாட்களை நினைவு படுத்தியது. தனியே பயணம் செய்யும் போது ஒரு சில நன்மைகளும், கஷ்டங்களும்  உண்டு. நன்மைகள் என்றால். சிறு குழந்தைகளை வைத்து கொண்டு செல்லும் பயணம் போல மன இறுக்கம் இருப்பதில்லை. இந்தியாவில் சிறு குழந்தைகளுக்கு என்ன  நோய்கள் வருமோ என்று கவலை தேவை இல்லை. நம்முடைய நேரம் முழுக்க முழுக்க நம்முடையது, என்ன செய்ய விழைகிறோமோ அதனை செய்யலாம்...என்று சில நன்மைகள். கஷ்டங்கள் என்றால், பயணம் முழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயண அட்டவணை சரியாக மனப்பாடம் செய்து இருக்க வேண்டும் மற்றும் விமானம் மாறும் நேரங்களில் பல நேரங்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும். இவை எல்லாம் சிறு சிறு கஷ்டங்கள் என்றால். பெரிய கஷ்டம் என்பது..இந்தியா சென்றவுடன் ஒரு பெண் தனியே பயணம் செய்கிறாள் என்றால் அதனை அட்வான்டேஜ் ஆக எடுத்து கொள்ள பார்க்கும் சிலர்.

உதாரணமாக, பயண உடைமை கோரல் இடத்தில் பெட்டியை எடுத்து வைக்க என்று நியமிக்க பட்டிருக்கும் பலரும் demand செய்யும் பணம். பெட்டி எடுத்து வைப்பது அவர்கள் கடமை. ஆனால் Cot எடுத்து கொண்டு கொடுப்பதற்கு கூட இவர்கள் பணம் கேட்கிறார்கள். நாம் சொல்வதற்கு முன்பே, இவர்கள் பெட்டியை எடுத்து வைத்து விட்டு பணம் கொடுங்கள் என்று demand செய்கிறார்கள்.

அதுவும் என்னுடையது, சென்னை வந்து இறங்கியவுடன், மதுரைக்கு தொடர் பயணம். இரண்டு மணி நேர இடைவெளியில் international டெர்மினலில் இருந்து டொமெஸ்டிக் ஓட வேண்டிய நிலை. அதற்காக என்று ப்ரீ கார் சர்வீஸ் வைத்து இருந்தாலும். பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் இரவு நேரங்களில் வந்து இறங்கும், நிறைய பேருக்கு அடுத்த விமானம் பிடிக்க வேண்டிய கட்டாயம் என்று இருக்கும் நேரத்தில், இவர்கள் available ஆக  இருப்பதில்லை, பல நேரங்களில் பணம் கேட்கிறார்கள். பணம் கொடுத்தால் கூட்டி கொண்டு செல்கிறார்கள். இல்லையேல் ஆட்களே இருப்பதில்லை. எங்கு செல்ல வேண்டும் என்று போர்டு கூட இருப்பதில்லை. இப்படி பல நேரங்களில் குழம்பும் நிலை.

அடுத்து எனக்கு இருந்த மிக நெருடலான விஷயம் என்றால், உள்ளூர் விமானங்களில் கொடுக்கப்படும் அறிவிப்புகள். எனக்கு தெரிந்து ஐரோப்பாவில் இருந்து சென்னை செல்லும் எல்லா விமானங்களிலும், அதே போல சென்னையில் இருந்து ஐரோப்பா செல்லும் எல்லா விமானங்களிலும் தமிழில் அறிவுப்பு செய்கிறார்கள். விமான பணியாளர்களும் தமிழில் பேசுகிறார்கள். உதவி செய்கிறார்கள். இது நான் இது வரை பயணம் செய்த, பிரிட்டிஷ், Lufthansa, ஏர்  பிரான்ஸ் மற்றும் KLM என்று அனைத்திலும் பார்க்க நேர்ந்தது. ஆனால் உள்ளூர் விமானங்களில் அதுவும் சென்னை டு மதுரை செல்லும் ஜெட் ஏர்வேஸ், spice Jet போன்ற விமானங்களில் ஒன்று ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். விமான பணி செய்பவர்களும் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். உள்ளூர் விமானங்களில் அதிகம் பயணிப்பது உள்ளூர் மக்கள் என்பதால் ஏன் இவர்கள் தாய் மொழியில் அறிவிப்பு செய்வதில்லை என்று கேள்வி எனக்குள். உள்ளூர் விமானங்களில் தமிழுக்கு இருக்கும் மதிப்பை பார்த்து புல்லரித்து போனேன்.

இதே போன்ற நிலை ஒவ்வொரு வீடுகளிலும் பார்க்க நேர்ந்தது. உதாரணமாக, இப்போது CBSC சிலபஸ் பின்பற்றும் நிறைய பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் கட்டாய பாடமாக ஆக்கி இருக்கிறார்கள். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ பேசினால் மகிழ்ச்சி அடைகிறார்கள். தமிழில் தங்கள் குழந்தைகளுக்கு படிக்க தெரியவில்லை அல்லது பேச தெரிவதில்லை என்பது மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

முகுந்த்கு தமிழ் சொல்லிதர என்று புத்தகங்கள் மற்றும் சார்ட் வாங்க மதுரை புது மண்டபம் சென்று  தேடும் போது, நிறைய கடை காரர்களே, ஹிந்தி வாங்கிகோங்க மா, என்று சொல்லுகிறார்கள். நிறைய ஆங்கில, ஹிந்தி புத்தகங்கள் மற்றும் சார்ட்கள் பார்க்க முடிந்தது.  தமிழில்  படங்கள் போட்ட புராண கதைகள் வாங்கலாம் என்று சென்று தேடி தேடி ஓய்ந்து விட்டேன். எல்லா புத்தகங்களும் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் இருந்தன. ஒரு வேலை நான் சரியாக தேடவில்லையா, அல்லது சரியான இடங்களில் தேடவில்லையா என்று தெரியவில்லை.

ஒன்று மட்டுமே நன்றாக தெரிந்தது, தமிழ் வளர்கிறதோ இல்லையோ, ஹிந்தி நன்றாக வளர்ந்து இருக்கிறது அல்லது வளர்க்க பட்டு இருக்கிறது. இன்னொரு மொழி கற்று கொள்ளுவது ஆரோக்கியமான விஷயம், அதனை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அது தாய் மொழியை அழிக்காமல் இருக்க வேண்டும். இன்னும் ஒரு பத்து இருபது  வருடங்களில் தமிழின் நிலை தமிழ் நாட்டில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

நன்றி.

3 comments:

ஆரூர் பாஸ்கர் said...

முகுந்த்அம்மா,

என் பழைய வலைப்பதிவு.

http://aarurbass.blogspot.com/2015/01/blog-post.html

உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

-ஆரூர் பாஸ்கர்

முகுந்த்; Amma said...

@ஆரூர் பாஸ்கர் said...

REad your post. Sorry for commenting in English. I agree with a lot in your post. You have mentioned many things similar to my experience. As you have suggested, we need to follow steps at least to keep the tamil language alive. Thanks for the comment and thanks for the link to the post.

Deiva said...

I noticed the same last year when I travelled from Chennai to Madurai in Spicejet. British airways announces in Tamil but not Spice jet which is owned by Kalanidhi Maran , grand niece of Kalignar who is vocal about Tamil.