Wednesday, December 29, 2010

சகுனங்களும் வாழ்கையும் !


சிறு வயதில் நிறைய பேர் சகுனங்கள் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். "நமக்கு நல்லது நடக்கிறதா இருந்தா சில பல சகுனங்கள் நமக்கு உணர்த்தும்" என்று என்னுடைய பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். சகுனங்கள் என்பது உண்மையா?, சகுனங்கள் நமக்கு எதனை உணர்த்துகின்றன. நிறைய பேர் "எனக்கு இப்போ நடக்கிறதெல்லாம் பார்த்தா நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்" என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்..அப்படியானால் நமக்கு சுற்றிலும் நடப்பவை நமக்கு எதையோ உணர்த்துகின்றனவா? இவை எல்லாம் எனக்கு நிறைய நேரம் எழும் கேள்விகள்.

சில மாதங்களாக வேலைக்கு முயற்சி செய்து ஒன்றும் சரியாக கிளிக் ஆகாத நிலையில் மனது வெறுத்து இருந்தேன். அந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன் பாலோ கேல்ஹோ அவர்களின் தி அல்கெமிஸ்ட் என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது.

- The Alchemist- : பாலோ கேல்ஹோவின் முக்கியமான புத்தகம். ஒரு மனிதனின் விதியை தேடிய பயணத்தை பற்றியது இந்த புத்தகம். அது தன்னம்பிக்கை புத்தகமா அல்லது கதையா, நாவலா எதிலும் வகைப்படுத்த முடியாத படியான அருமையான புத்தகம் அது. இப்போது படிக்கும் போது ஒரு வகையான எண்ணங்களை தருகிறது இந்த புத்தகம், ஒரு வேலை சில வருடங்கள் கழித்து படிக்கும் போது வேறு எண்ணங்கள் எனக்கு தோன்றக்கூடும்.


ஒரு மனிதன் தன்னுடைய விதியை நோக்கி பயணம் செய்யும் போது இந்த உலகமும் அதனை சார்ந்த அனைத்தும் உதவும் என்று அந்த புத்தகத்தில் படித்தேன். எத்தனை தூரம் இது உண்மை.

சில காரியங்களை செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் எல்லாமே நல்ல படியாக நடப்பது போன்று இருக்கும், ஆனால் நாட்கள் ஆக ஆக தடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தலை எடுக்கும். பின் ஒரு கட்டத்தில் எல்லாமே முடிந்து விட்டது நமக்கு இதில் எதிர் காலமே இல்லை என்று அந்த காரியத்தை ஊத்தி மூட நினைப்போம், அப்போது எல்லாமே நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். இவை எல்லாம் எதனை குறிக்கின்றன?

அந்த புத்தகத்தின் படி இயற்கை/விதி எதுவோ ஒன்று நம்மை ஒரு செயலில் ஈடுபடுத்த முதலில் நம்பிக்கை தருவது போல சில லக் தரும் அது பிகிநேர்ஸ் லக் என்கிறார். பிறகு காலம் செல்ல செல்ல வாழ்கையை/உலகத்தை புரிய வைக்க நமக்கு கஷ்டத்தை தருகிறது. பலர் இந்த கஷ்டம் தாங்க முடியவில்லையே என்று வருந்தி முயற்சியை கை விட்டு விடுகிறார்கள். அவர்கள் losers ஆகிறார்கள். ஆனால் முயற்சியை கைவிடாமல் கடைசி வரை முயல்பவன் ஜெயிக்கிறான்.

அதனை தான் ஒரு வேலை

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

என்று வள்ளுவர் குறிப்பிட்டாரோ, தெரியவில்லை.

எப்படியோ அந்த புத்தகம் கிருஸ்துவ நம்பிக்கைகளை அங்கங்கே தூவினாலும் அது சொல்லும் கருத்துகள் மறுக்க முடியாததாக உள்ளன.

சில நாட்களுக்கு முன் CNN ஹீரோவான மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் இங்கு நியூ ஜெர்சி வந்திருந்த போது ஒன்று குறிப்பிட்டதாக நண்பர் ஒருவர் கூறியது ஞாபகத்திற்கு வந்தது, "நல்ல காரியம் செய்யனும்னு நான் ஆரம்பிச்சது தாங்க, நல்ல காரியம்னு ஆரம்பிச்சவுடன் fund தானா வர ஆரம்பிச்சது, எனக்கு பின்னால யாரவது இதனை தொடர்ந்து நடத்த ஆள் கட்டாயம் வருவார்" இது நாராயணன் கிருஷ்ணன் சொன்னது. இதனை தான் சகுனங்கள் என்பதோ?

டிஸ்கி: இந்த பதிவு புத்தக விமர்சனமா, அனுபவமா அல்லது கொசுவர்த்தியா எனக்கே தெரியவில்லை!

Wednesday, December 22, 2010

தி டின்னெர் கேம் , பீஜா பிரை & ஏப்ரல் பூல்






ஒரு வீடு, அதற்குள் இருவர், அதில் ஒருவருக்கு முதுகு வலி, இன்னொருவர் சற்று வெகுளியான மனிதர். இதுதான் கதை களம். இதனை வைத்துக்கொண்டு ஒரு முழு நீள காமெடி படம். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும் அளவு காமெடி. நான் சொல்வது நேற்று நாங்கள் பார்த்த பிரெஞ்சு படமான Le dîner de cons' பற்றி.

இந்த வெகுளியை தங்கள் நண்பர்கள் நடத்தும் டின்னெர் பார்டிக்கு அழைத்து செல்வதே முதுகுவலிகாரரின் நோக்கம். அங்கு, அவரவர் உடன் அழைத்து வரும் வெகுளி/முட்டாள்கள் அனைவருடனும் பேச விட்டு கலாய்த்து அதில் ஒருவருக்கு "சிறந்த முட்டாள்" என்று பட்டம் கொடுப்பார்கள். இது பற்றி டின்னெர் முடியும் வரை அழைத்து வரப்படும் வெகுளிகளுக்கு தெரியாது.

அந்த டின்னேர்க்கு அழைத்து செல்வதற்கு முன் முதுகு வலி ஏற்பட்டு பாடாய்படுத்த, அவர் மனைவி அவரை விட்டு விட்டு செல்ல, இன்கம் டாக்ஸ் காரர் வீட்டுக்கு வர என்று வரிசையாக எல்லாமே தப்பாய் முதுகு வலிகாரருக்கு நடக்க, ஒரே சிரிப்பு தான்.


ஆங்கிலத்தில் இந்த படத்தின் பெயர் 'தி டின்னெர் கேம்' . சப் டைட்டில் உதவியுடன் நாங்கள் அந்த படம் பார்த்தாலும், சப் டைட்டில் தேவையே இல்லை என்று சொல்லுமளவு François Pignon ஆக நடித்த Jacques Villeret அவர்களின் நடிப்பு. அவரின் சொட்டை தலையும் அவர் முக பாவனைகளும் பார்த்தாலே சிரிப்பாய் வரவழித்தது. முதுகு வலியுடன் Pignon கொடுக்கும் தொல்லைகளையும் பொறுத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நடிக்கும் கதாபாத்திரத்தில் Thierry Lhermitte நடித்திருந்தார்.

நான் பிரெஞ்சு படங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை ஆயினும் சிரித்து சிரித்து வயிறு வலி வந்தே விட்டது. இப்படி நல்ல படத்தை நம்ம மக்கள் காப்பி அடிக்காம இருக்க மாட்டாங்களே என்று தேடிப்பார்த்ததில் கண்டுபிடித்தது இது தான். ஹிந்தியில் 'Bheja Fry' அப்புறம் மலையாளத்தில் "ஏப்ரல் பூல்" இரண்டுமே அன் அபீசியல் காப்பி ஆப் தி டின்னெர் கேம் படம்.


படங்கள்: நன்றி இணையம்


Saturday, December 18, 2010

வழிபாடும் வழிபடும்முறையும் !

பிராத்திப்பது என்பது என்ன?, சில நேரங்களில் என்னுள் எழும் சில எண்ணங்களின் வெளிப்பாடே இந்த பதிவு.

இன்று இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தோம். வழக்கமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு இருக்கும் பெருமாளுக்கு அபிஷேகமும், பின் அலங்கார ஆராதனையும் நடப்பதுண்டு. அபிஷேகம் ஆரம்பிக்கும் முன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருக்கும் பெரியாழ்வார் திருமொழியில் இருந்து "வெண்ணை அளந்த குணுங்கும்" என்ற பத்து பாசுரங்கள் பாடப்படுவது வழக்கம்.சிறு கண்ணனை குளிக்க யசோதை அழைப்பது போன்று அமைந்திருக்கும் அந்த பத்து பாசுரங்களும் கேட்க்க இனிமையானவை.

இவற்றை போன்ற பாசுரங்களை அனைவரும் படிக்கும் வண்ணம் கிட்ட தட்ட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து புத்தகமாக வைத்திருப்பார்கள்.ஒவ்வொரு முறையும் சுவாமிக்கு அபிஷேகம் ஆரம்பிக்கும் போது அனைவரும் இந்த பாடல்கள் பாடுகின்றனர்.

இன்று மார்கழி பிறந்து முதல் சனிக்கிழமை, இன்றும் வழக்கம் போல அபிஷேகம் ஆரம்பிக்கும் போது சிலர் "வெண்ணை அளந்த குணுங்கும்" பாட ஆரம்பித்தார்கள். உடனே அங்கிருந்த சிலர் "யார் இதனை பாட சொன்னது?" இது மார்கழி மாதம் இந்த மாதம் முழுதும் திவ்ய பிரபந்தம் பாடக்கூடாது, தேசிக பிரபந்தம் மட்டுமே பாட வேண்டும் என்று கத்தி கட்டளை இட ஆரம்பித்து விட்டனர். அதில் பாட விளைந்த பலர் முகம் சிறுத்து போய் விட்டது.

வைஷ்ணவ சம்பிரதாயத்தின் படி இந்த மார்கழி மாதம் முழுதும் தேசிக பிரபந்தம் பாடுவார்கள், நம்மாழ்வார் மோட்சம் அன்று மட்டுமே அனைத்து திவ்ய பிரபந்த பாசுரங்களும் பாடுகிறார்கள்.

ஆனால் இந்த சம்பிரதாயம் எத்தனை பேருக்கு தெரியும்? அதன் பின் இருக்கும் கதை என்ன? ஏன் அப்படி ஒரு சம்பிரதாயம்? என்றெல்லாம் விளக்கி விட்டு பின் அவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா?. அங்கு பாட அமர்ந்திருந்த பலரும் வேறு வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் தமிழ் பாசுரங்களை பாடுவதே நமக்கு கிடைத்த பெருமை அல்லவா.

என்னை பொறுத்தவரை இறைவனை நோக்கி பாடப்படும் அனைத்து பாடல்களும் இறைவனை சென்றடையும், அதில் இதை பாட வேண்டும் இதை இன்று பாட கூடாது என்று கூறுவதெல்லாம் வெறும் அந்தந்த சம்பிரதாயங்களை சார்ந்தது மட்டுமே. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளை இடுவது தேவையா?

Sunday, November 21, 2010

கேள்வி, புதிர் விடை

நேற்று நான் கேட்ட முதல் மூன்று கேள்விகளுக்கு பல பதில்கள் உண்டு, அவை எந்த வகை வேலைக்கு நீங்கள் அப்ளை செய்திருக்கிறீர்கள் என்பதனை பொறுத்தது

நீங்கள் மேனேஜர் அல்லாத வேலைக்கு அப்ளை செய்திருக்கிறீர்கள் என்றால்

1) பாதாள சாக்கடை மூடி வட்டமாக இருப்பதேன்? என்ற கேள்விக்கு கும்மி அவர்கள் சொன்ன பதில் சரியாக இருக்கும்.

அதுவே நீங்கள் மேனேஜர் வேலைக்கு அப்ளை செய்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வேறு மாதிரி விடை தர வேண்டும்

உதாரணமாக
எந்த வடிவத்தை எடுத்துக்கொண்டாலும் வட்ட வடிவமே அல்லது கோள வடிவமே அனைத்திலும் உறுதியானது. நீர் துளி துளியாக விழுவது முதல் பூமி முதல் அனைத்து கோள்களும் கோளமாக இருக்கின்றன, ஏன் என்றால் அந்த ஒரு வடிவத்தில் மட்டுமே பரப்பு இழுவிசை அனைத்து பக்கமும் சமன் செய்யப்பட்டு மிக உறுதியாக இருக்கும்.

அதனால் வட்ட வடிவ மூடி மட்டுமே பூமியின் பக்கவாட்டில் அழுத்தும் திறனை நன்கு தாங்க வல்லது, அதனால் மூடி நிறைய நாட்கள் உழைக்கும். நமக்கும் செலவு குறைவு. போன்ற cost- management பதில்களை எதிர் பார்கிறார்கள்.


2) அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் பம்ப்கள் உள்ளன?

இந்த கேள்விக்கு யாராலும் சரியான பதில் தர இயலாது, ஆயினும் ஒரு approximate பதில் தரலாம்.

உதாரணமாக அமெரிக்க மக்கள் தொகை 300 மில்லியன் அதில் பாதி பேருக்கு கார் இருக்கிறதென்றால் 150 மில்லியன் மக்களுக்கு கார் உண்டு.

ஒரு பிஸி ஆன நகரத்தில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு கார் பெட்ரோல் போடுகிறது என்று வைத்து கொள்வோம் ஒரு மணி நேரத்திற்கு முப்பது கார்கள், இருபத்தி நாலு மணி நேரமும் திறந்திருக்கும் பேங்க் என்றாலும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 500 கார்கள் பெட்ரோல் போடலாம்.

150 million கார்களுக்கு பெட்ரோல் போட எத்தனை பங்குகள் தேவை

150 million / 500 ~ 300,000


இந்த கேள்வி ஏன் கேட்கபடுகிறது என்றால் உங்களால் எத்தனை தூரம் cost estimate செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளவே. எந்த ஒரு மேனேஜர் கும் முதல் தேவை இது என்பதால் இதனை போன்ற estimation கேள்வி கேட்கப்படுகிறது.


3. இது நாள் வரை நீங்கள் அனுபவித்த வித்தியாசமான உணர்வு எது?

இது behavioral சம்பந்தமான கேள்வி. இது பெரும்பாலும் பெண்களிடம் கேட்கப்படுகிறது. பெண்கள் உணர்ச்சி பூர்வமானவர்கள். ஒரு மேனேஜர் பொறுப்பை பெண்ணிடம் கொடுத்தால் உணர்ச்சி பூர்வமான முடிவு எடுக்க கூடாது என்பதற்காகவே இது போன்ற கேள்வி கேட்கப்படுகிறது.

இதற்க்கு பதிலாக நான் காதலித்த, குழந்தை பிறந்த நேரத்தில் ஏற்பட்ட அனுபவம் என்று பதில் சொல்லாமல் வேலையில் சாதித்த தருணம், அல்லது பட்டம் வாங்கியபோது எழுந்த உணர்வு இது போன்று professional ஆக பதில் எதிர் பார்க்கிறார்கள்.

மற்ற இரண்டு கேள்விகளும் நிறைய ஆப்டிடுட் டெஸ்டில் கேட்பது போன்றது

4) 1, 2, 6, 42, 1806, _____??? ஆறாவது எண் எது?

இதற்க்கு கும்மியும் கெக்கே பிக்குனியும் சரியான பதில் தந்து இருக்கிறார்கள்.

இது ஒரு geometric sequence

1*(1+1) =2
2*(2+1)=6
6*(6+1)=42
42*(42+1)=1806
1806*(1806+1)=3263442

So

A(n) = A(n-1)*( A(n-1)+1)

5) J ? M A M J J A S O N D விடுபட்ட எழுத்து என்ன?

J F M A M J J A S O N D

இதற்கும் கும்மியும் கெக்கே பிக்குனியும் சரியான பதில் தந்து இருக்கிறார்கள்.

இது ஆங்கில மாதங்களின் முதல் எழுத்தை குறிக்கிறது

So இரண்டாவது மாதம் Feb அதன் முதல் எழுத்து F

Saturday, November 20, 2010

சில புதிர்களும் கேள்விகளும்

சில மாதங்களாக வேலைக்காக தொடர்ந்து நேர்முக தேர்வுக்கு சென்று வருகிறேன். அதில் கேட்கப்பட்ட ஒரு சில சுவாரஸ்யமான கேள்விகளும் அதற்க்கு தயார் செய்யும் போது என் கவனத்துக்கு வந்து சில புதிர்களும் இங்கே

பாதாள சாக்கடை மூடி வட்டமாக இருப்பதேன்?

அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் பம்ப்கள் உள்ளன?

இது நாள் வரை நீங்கள் அனுபவித்த வித்தியாசமான உணர்வு எது?

1, 2, 6, 42, 1806, _____??? ஆறாவது எண் எது?

J ? M A M J J A S O N D விடுபட்ட எழுத்து என்ன?


நீங்கள் இந்த கேள்விகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



Friday, November 19, 2010

PIT போட்டிக்கு என் சார்பாக !



நிறைய நாட்கள் பிட் போட்டிக்கு புகைப்படங்களை அனுப்ப நினைத்திருந்தேன் ஆனால் நேரமின்மை, எப்படி அனுப்புவது என்று தெரியாமை என்று தள்ளி கொண்டே போனது, முடிவாக சில புகைப்படங்களை தேர்தெடுத்து இருக்கிறேன். எதை அனுப்பலாம் நீங்களே சொல்லுங்கள்.


1) இரவின் ஒளியில் ஐபில் டவர்


2) சூரிய உதயம் sunset பீச்


3) இரவின் தொடக்கம் நியூயார்க் சுதந்திர தேவி சிலை



4) சூரிய ஒளியில் Manhattan நகரம்




5) வீடு




எது உங்கள் சாய்ஸ்?

Tuesday, November 16, 2010

பொய் முகம்



V.S. Naipaul அவர்களின் புத்தகமான A Bend in the River இல் ஒரு பாதிரியார் ஒருவர் இருப்பார். அவரின் பொழுது போக்கு முகமூடிகள் சேகரிப்பது. இந்த கதையை படிக்கும் பலருக்கும் இந்த கதை மாந்தர் எதனை குறிக்கிறார் என்ற சந்தேகம் வருவதுண்டு. என்னை பொறுத்த வரை மனிதர்கள் பல நேரங்களில் நம் உண்மை முகத்தை மறைக்க உதவும் முகமூடியை இந்த கதை மாந்தர் சூசகமாக குறிக்கிறார் என்று சொல்லுவேன்.

என் கணவர் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ஒன்றை கூறுவதுண்டு. அது "நாமெல்லாம் லிபரல் என்ற முகமூடியில் இருக்கும் கன்செர்வேடிவ்கள்" என்பதே அது. இதனை நான் இந்தியர்கள் மட்டுமே அல்ல எல்லா நாட்டினர்க்கும் பொருந்தும் என்பேன்.

உதாரணமாக என்னுடைய பாஸ் ஆக இருந்த ஒரு ஜெர்மனை கூறலாம். மேற்கு ஜெர்மனியை சேர்ந்தவர் அவர். எங்க க்ரூப்பில் இருந்த ஒரு பையன் gay. ஆனாலும் மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறிய அவருக்கு gay பையனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. அவன் முதுகுக்கு பின்னால் பயங்கரமாக கிண்டல் செய்வார். லிவிங் டுகெதர் எல்லாம் சர்வ சாதரணமாக இருந்த அவருக்கு ஒரு பையன் இன்னொரு பையனுடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அவரை பொறுத்தவரை அவர் ஒரு லிபரல் ஆனால் கே விஷயத்தை எடுத்து கொண்டால் அவர் ஒரு கன்செர்வேடிவ். என்ன தான் அந்த பையனை கிண்டல் செய்தாலும் அவனுக்கு முன் சாதாரணமாகவே பேசுவார்.
அங்கு அவருக்கு லிபரல் முகமூடி தேவை பட்டது.

அறுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் சிவில் ரைட்ஸ் மூவ்மென்ட் வர ஆரம்பித்த பின்பு வரை கூட, ஒரு கறுப்பினத்தவர் ஒரு வெள்ளை இனத்தவரை காதலிக்கவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ முடியாது. இன்னும் கூட சில இடங்களில் இதனை இங்கு காணலாம். ஆனால் தேர்தல் நேரங்களில் அவர்கள் எல்லாம் நான் லிபரல் என்ற போர்வையை போர்த்திக்கொள்வார்கள்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் சட்டபூர்வமாக்கபடும் வரை கூட பெண்களுக்கு சம உரிமை இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் எழுபதுகளில் மிகப்பெரிய பெண்ணிய இயக்கம் வந்து பெண்கள் சம உரிமை கேட்க்க ஆரம்பித்து அமெரிக்காவை புரட்டி போட்டார்கள். பெண்ணுரிமை இயக்கங்கள் கொடி பிடிக்க ஆரம்பிக்கும் போது இங்கு ஏற்பட்ட எதிர்ப்பு அலை அடங்க பத்தாண்டுகள் பிடித்தது எனலாம். ஆனாலும் தற்போது பெண்கள் சம உரிமை என்பதெல்லாம் இங்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆயினும் பெண்ணுரிமை இயக்கங்கள் கொடி பிடித்த போது அது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது.


என்னை பொறுத்தவரை இந்தியாவில், அமெரிக்காவில் எழுபதுகளில் ஏற்பட்ட நிலை போன்றதொரு நிலை வர ஆரம்பித்து இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய இந்தியா பயணத்தில் அதனை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஒரு பத்து வருடதிற்க்கு முந்தய காலத்தில் கூட எல்லாவற்றிர்க்கும் எதிர் கேள்வி பெண்கள் கேட்டதில்லை. ஆனால் இப்போது நான் சந்தித்த அனைத்து இளைய சமுதாயத்தினரும் ஏன், எதற்கு, இப்படி செய்தால் என்ன ஆகும்.... இப்படி பல கேள்விகள் கேட்கிறார்கள்.

ஏதேனும் ஒன்றை செய்யாதே என்றால், செய்தால் என்ன ஆகும்? என்று கேட்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் இருந்த பெண்கள் கேள்வி கேட்க்க ஆரம்பித்திருப்பது புதுமையாக சிலருக்கு தெரிகிறது, அவர்களின் ரத்தம் கொதிக்கிறது. நாங்கள் பெண்களுக்கு சம உரிமை வழங்குபவர்கள் என்று அவர்கள் அணிந்திருந்த முகமூடியை கிழித்து கொண்டு அவர்களின் கன்செர்வேட்டிவ் முகம் வெளியில் தெரிய ஆரம்ப்பிக்கிறது. இதுவும் சில காலம் மட்டுமே வித்தியாசமாக தெரியும், பின்பு பழகிவிடும்.

இந்த எதிர்ப்பு அலைகள் அடங்க சிறிது காலம் பிடிக்கலாம் ஆனால் மாற்றம் என்பது மாறாதது. நாம் வேண்டாம் வேண்டாம் என்று அடக்க ஆரம்பித்தால் தான், அதில் என்ன தான் இருக்கிறது என்று முயற்சி செய்து பார்ப்பவர்கள் அதிகரிப்பார்கள் என்பது என் எண்ணம்.

இதற்க்கு உதாரணமாக நான் படிக்கும் போது சந்தித்த ஒரு பெண்ணை சொல்லலாம். அந்த பெண் இந்தியாவில் இருக்கும் ஒரு மெட்ரோ நகரத்தில் இருந்து வந்தவள், ஆனாலும் அவள் குடும்பம் ஒரு கட்டுப்பெட்டியானது. அவள் வீட்டில் அடக்கி அடக்கி வைத்திருந்ததன் விளைவாக வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன், அவள் புகை, தண்ணி...இன்னும் நிறைய.. எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டாள். திரும்பி நான் ஊருக்கு போகவே போவதில்லை அது நரகம் என்று சொல்லி கொண்டிருப்பாள். இதே போல நிறைய சொல்லலாம்..

ஆகவே நான் நல்லவன், அதனால் அதே போல அனைவரும் இருக்க வேண்டும், என்ற நம்முடைய முகமூடியை கழற்றி வைத்து விட்டு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்வதே நன்மை பயக்கும். அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது, இதனை செய்தால் என்ன என்ன பக்க விளைவுகள் நேரலாம், அதிலிருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்று ஒரு நண்பர்கள் போல அறிவுரை கூறலாமே தவிர, அடக்கி வைப்பதென்பது இனி வரும் தலைமுறையிடம் உதவாது என்பதே என் எண்ணம்.

Saturday, November 13, 2010

பெண்களும் சுதந்திரமும்

இன்று நான் பார்த்த பெண் சுதந்திரம் மற்றும் கலாச்சாரம் குறித்த சில இடுகைகளை படித்த பிறகு எனக்குள் எழுந்த எண்ணங்களின் விளைவே இந்த இடுகை.

தற்போது இருக்கும் பெண்களுக்கு பொது அறிவு தெரியவில்லை அல்லது அரசியல் குறித்தோ அல்லது ஆட்சி குறித்தோ அறிந்திருக்க வில்லை. அவர்களுக்கு சுதந்திரம் என்றாலே என்ன என்று தெரியவில்லை. தெரிந்தால் தானே அவர்களுக்கு சுதந்திரம் தர முடியும்?. இவ்வாறெல்லாம் ஜோதிஜி அவர்களின் தளத்தில் பெண்கள் குழந்தைகள் கொஞ்சம் சுதந்திரம் என்ற இடுகையில் படிக்க நேர்ந்தது.

ஒரு விவாதத்திற்காக கீழ் காணும் ஒரு சூழல் நடப்பதாக வைத்துக் கொள்வோம்.

குடும்ப தலைவி ஆக இருக்கும் ஒரு பெண் அரசியல் குறித்து பேச ஆரம்பிக்கிறார் அல்லது இந்திரா நூயி குறித்து பேச ஆரம்பிக்கிறார் அல்லது நிறைய அரசியல் பற்றியோ அல்லது பொது அறிவு பற்றியோ படித்து தெரிந்து கொள்கிறாள்.

தான் அறிந்து கொண்டதை, அவள் கணவரிடம் தன்னுடைய நிலைப்பாடு குறித்தோ அல்லது எப்படி ஆட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்றோ பேச தலைப்படுகிறாள் என்று வைத்து கொள்வோம். எத்தனை கணவன் மார்கள் அதனை விரும்புவார்கள்?.

ஒரு சமயம் தன்னுடைய கணவனை விட உலக அறிவு அதிகம் தெரிந்து கொண்டாள் என்று வைத்து கொள்வோம் எத்தனை பேர் "பரவாயில்லையே! என்ன விட உனக்கு நிறைய தெரியுதே?" என்று ஊக்குவிப்பார்கள். அல்லது பிறரிடம் சொல்லி சந்தோஷ படுவார்கள்.

நான் சிறு வயதில் இருந்து பார்த்த சில சொந்தங்களையே இதற்க்கு பதிலாக தர விளைகிறேன்.

என் அம்மாவுக்கு நிறைய விஷயம் தெரியும், எப்படி பேசுவது, முடிவெடுப்பது, சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.
அவர்களை போல தைரியமானவர்களை நான் பார்த்ததில்லை (என் பிரசவதிற்க்காக அமெரிக்காவுக்கு யார் துணையும் இன்றி தனியாக இரண்டு விமானம் மாற்றி வந்தார்) .

ஆனால் என் அப்பாவை பொறுத்த வரை தெருவில் நடந்து போகும் போது கூட என் அம்மா என் அப்பாவிற்க்கு முன்னால் நடந்து செல்ல கூடாது, பத்தடி பின்னால் வர வேண்டும். எதேனும் ஒரு விடயத்தை பற்றி என் அம்மா தன் கருத்தை என் அப்பாவிடம் சொன்னால் உடனே வரும் விடை “ஆமா, இவ எனக்கு முன்னால பிறந்தவ, ரொம்ப தெரியும் பாரு”.

என் தாத்தா வீட்டில் அடுக்களையை விட்டு என் அத்தை வந்ததில்லை. என் தாத்தா முன்பு எந்த பெண்ணும் உட்கார கூடாது. எதோ நான் சொல்வதெல்லாம் அறுபதுகளில் நடந்தது என்று நினைப்பவர்களுக்காக “இது இப்போதும் எங்கள் வீட்டில் நடந்து கொண்டிருப்பது”.

"பொண்ண இவ்வளவு படிக்க வைக்கிறயே எதுக்கு, எப்படியும் இன்னொரு வீட்டுக்கு போக போறா, அவளுக்கு இவ்வளவு செலவு பண்ணனுமா, இந்த செலவுக்கு பதிலா ரெண்டு பவுனு வாங்கி வச்சிருக்கலாம்"

இதெல்லாம் சின்ன வயதில் நான் கேட்ட வார்த்தைகள். என் அம்மாவிடம் வழங்கப்படும் என்னை சார்ந்த அறிவுரைகள்.

பெண்கள் பொது அறிவு பேச வேண்டும் ஆனால் அதிகம் பேச கூடாது. நிறைய சிந்திக்க வேண்டும் ஆனால் தன்னை விட அதிகம் சிந்திக்க கூடாது. இதெல்லாம் என்ன நியாயம்.

நீங்கள் சொல்வதெல்லாம் நான்சென்ஸ் நான் என் மனைவியை சரி சமமாக மதிக்கிறேன் என்று சொல்பவரா நீங்கள், உங்களை நான் மதிக்கிறேன், போற்றுகிறேன். ஆனால் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? மனதை தொட்டு சொல்லுங்கள்.


Sunday, November 7, 2010

இழப்பின் வலி !

2000 ஆவது ஆண்டு தீபாவளி மறக்க முடியாத தீபாவளி. குடும்பத்தில் அனைவரும் இருந்து வெடி வெடித்து, பலகாரம் சாப்பிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு சென்று, நண்பர்களை வீட்டுக்கு அழைத்து புகைப்படம் எடுத்து...இன்னும் நிறைய. கடந்த பத்து வருடங்களில் நான் கொண்டாடிய மகிழ்ச்சிகரமான தீபாவளி என்றாலும் அது தான்.

அடுத்த வருடம் நிகழ்ந்த பெரிய அண்ணனின் மறைவு குடும்பத்தை புரட்டி போட அந்த வருடம் தீபாவளி இல்லையென்று ஆனது. அதற்க்கு அடுத்த வருடம் நிகழ்ந்த அண்ணியின் மரணம் நெஞ்சில் தைத்து தீபாவளியை மறக்க செய்தது. வெளிநாட்டில் படிக்க போய் அங்கிருந்த படியே அடுத்தடுத்த வருடங்களில் தனியாக நான் கொண்டாடிய தீபாவளி சுவாரசியம் இல்லாமல் ஆனது. திருமணம் ஆன பின்பு கூட எங்கள் தலை தீபாவளி சந்தோசம் இல்லாமல் அவர் இங்கேயும் நான் வேறெங்கோ இருந்தும் தனித்தனியாக கொண்டாடியது நினைவில் வந்தது.

2005 தீபாவளி இல் நான் இங்கு வந்த பிறகு " அம்மா அப்பாவுடன் தான் சேர்ந்து தீபாவளி கொண்டாட முடியவில்லை அவருடன் சேர்ந்தாவது, தீபாவளி கொண்டாடலாம்" என்று இருந்தேன் அதற்கும் வேட்டு வைத்தது அவர் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மரணம். என்ன எங்கள் ராசி யோ தெரியவில்லை ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு தடங்கல், மரணம்.

எப்போ தான் தீபாவளி கொண்டாட போறோமோ என்று நினைத்து யோசித்த படியே ஊருக்கு போன் செய்ய, எடுத்தது என் பெரிய அண்ணன் மகள் "அத்தை ஹாப்பி தீபாவளி" என்று மகிழ்ச்சியோடு அவள் சொல்ல, என் மனம் அழ ஆரம்பித்து விட்டது. "நமக்கு அம்மா அப்பாவுடன் தீபாவளி கொண்டாட தான் முடியவில்லை ஆனால் அவளுக்கு அம்மா அப்பாவே இல்லையே".

Friday, November 5, 2010

B. A, M. A ., எதற்கு?

எனக்கு நிறைய நாட்கள் ஒன்று தோன்றுவதுண்டு. எதற்கு எல்லாரும் தங்கள் பெயருக்கு பின்னால் டிகிரி போட்டு கொள்கிறார்கள்?.

நான் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் டிகிரி போட்டு கொள்வதற்காகவே படிப்பதாக என்னுடன் படித்த பெண்கள் சிலர் சொல்வார்கள்.

இன்னும் சிலர் ஒரே பாடத்தில் இளநிலை முடித்து முது நிலையும் அதே பாடத்தில் படித்திருந்தாலும் தன் பெயருக்கு பின்னால் இரண்டையும் போட்டு கொள்வதை பார்த்ததுண்டு.

உதாரணமாக

என்பெயர் B. A., M. A., என்று

இன்னும் சிலர் படித்து கொண்டிருப்பார்கள் அதற்குள் கல்யாணம் முடிந்து விடும் (அதற்க்கு பிறகு படிப்பார்களோ இல்லையோ, அது வேற விஷயம்) ஆனாலும் டிகிரி போட்டு கொள்வார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் பத்தாவது படித்து முடித்தார், பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக படிப்பை மூட்டை கட்டி விட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். பிறகு என்ன நினைத்தாரோ தெரிய வில்லை இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலை கழகத்தில் M. A., படிப்புக்கு அப்ளை செய்தார். அடுத்த சில மாதங்களில் அவருக்கு திருமணம் நிச்சயித்தார்கள். பத்திரிக்கையில் அவருடைய பெயருக்கு பின்னால் M. A என்று போட்டு கொண்டு மேலே கோடு போட்டு கொண்டார்.

இவராவது எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்ல வேண்டும். என்னுடைய சொந்த காரர்கள் வீட்டில் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்தனர். அந்த பெண் பிளஸ் டூ பாஸ் செய்ய வில்லை. ஆனாலும் கல்யாண பத்திரிகையில் அவள் பெயருக்கு பின்னால் B. A., என்று (ஒரு கோடு கூட போடாமல்) போட்டு கொண்டனர்.

எனக்கு தெரிந்த இன்னொரு (அரசியல்வாதி) நண்பர் வக்கீலுக்கு படிக்க விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து அனுப்பிய அடுத்த நாளே B. L என்று போட்டு கொண்டதை பார்த்திருக்கிறேன். என்னுடைய சமீபத்தைய இந்தியா பயணத்தின் போது கிட்ட தட்ட எல்லா ப்ளெக்ஸ் போர்ட்களில் இருக்கும் பெயருக்கு பின்னாலும் ஒரு டிகிரி போட்டு (சிலர் கோடு போட்டு) பார்த்திருக்கிறேன்.

யாரும் வந்து பரிசோதிக்க போவதில்லை என்பதால் எத்தனை டிகிரி வேண்டும் என்றாலும் போட்டு கொள்ளாலாமா?. ஏன் இந்த டிகிரி மோகம்?

Wednesday, November 3, 2010

The Metamorphosis - எனது பார்வையில்



கடந்த வாரம் தெகா அவர்கள் தன் தளத்தில் Franz Kafka வின் The Metamorphosis புத்தகம் பற்றிய அறிமுகமும் சுட்டியும் கொடுத்திருந்தார். Metamorphosis என்பது சில உயிரினங்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் என்று நான் அறிந்திருந்தாலும் , காஃப்கா பற்றி நான் அறிந்திருக்கக்வில்லை.

மாற்றம் என்பது மாறாதது, என்பதே கதையின் கரு. கதையின் நாயகன் கிறிகர் மூலம் அது காட்டப்படுகிறது. வளர்சிதை மாற்றம் என்பது வெளி தோற்றத்தில் ஏற்படுவது என்பது அறிவியல் கூறும் கருத்து. இந்த புத்தகத்தில் மற்றொரு மாற்றமும் நமக்கு அறிமுகப்படுத்தபடுகிறது. அது மனித மனங்களில் ஏற்படும் மாற்றம்.

கதையின் நாயகன் கிறிகர் சம்சா ஒரு சேல்ஸ் மேன். தன் தந்தை பட்ட கடனுக்காக ஒரு கம்பெனியில் அடிமை போல இரவு பகல், நாள் கிழமை எதுவும் பார்க்காமல் தனக்கென்று எதை பற்றியும் யோசிக்காமல் வேலை பார்கிறான். ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது தன் உடல் ஒரு பூச்சி போன்று மாறி விட்டதை போன்ற புறமாற்றத்தை பார்கிறான். அது ஒரு புற மாற்றமாகவே அவனுக்கு தெரிகிறது. அது சீக்கிரம் சரியாகிவிடும் தன் பணியை தொடரலாம் என்றே அவன் நினைக்கிறான்.

ஆனால், மற்றவர்களுக்கு அவன் உதவாக்கரை ஆகி விட்டான். அங்கிருந்து ஆரம்பிக்கிறது அவனை சார்ந்த மனிதர்களின் மனங்களின் மாற்றங்கள். படிப்படியாக அவன் இருப்பை பற்றியும், அவனை பற்றிய நினைவுகளையும் அனைவரும் மறக்க ஆரம்பிக்கிறார்கள்.

அவன் இருந்த அறை பழைய சாமான்கள் வைக்கும் அறையாக மாறுகிறது. பழைய மிச்சம் மீதிகள் அவனுக்கு உணவாகின்றன. அவன் தன்னுடைய அறையை விட்டு வெளியில் வருவதில்லை. ஆனாலும் ஒரு முறை தன் அறையில், தான் இருக்கும் நிலையை பார்த்து அவன் தாய் மயங்கி விழுந்து விடுகிறாள். அதற்க்கு அவனை காரணம் காட்டி அவன் தந்தை அவனை ஆப்பிள் பழங்கள் கொண்டு வீசி எரிய ஒரு பழம் அவன் முதுகில் பதிந்து புண் ஆகி ரணமாக ஆரம்பிக்கிறது. யாருக்கும் அவனுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் போகிறது.

ஒரு நாள் தன் குடும்பம் பேசும் போது அவன் கேட்க நேரிடுகிறது, அதில் அவனுடைய தந்தை அவனுக்கு தெரியாமல் அவன் சம்பாத்தியத்தை சேர்த்து வைத்திருப்பதாகவும் இன்னும் சில காலம் அது குடும்ப செலவுக்கு பயன்படும் என்றும் அறிகிறான். தந்தை சேர்த்து வைத்த அந்த பணம் தனக்கு கொடுத்திருந்தால் முன்னமே அவன் செய்த அடிமை வேலையை விட்டு விட்டிருக்கலாமே என்றும் நினைக்கிறான். ஆனாலும், தன் தந்தை செய்தது நல்லது தான் என்றும் நினைக்கிறான்.

அது நாள் வரை அவன் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்து கொழுத்த அவன் சொந்தங்கள் இப்போது வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவன் செத்து தொலைந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இவன் ஒரு ஒட்டுண்ணி ஆக தெரிகிறான். ஆனால் அவர்களே இத்தனை நாள் அவனை சார்ந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்தார்கள் என்பதை மறக்கிறார்கள். ஒரு நாள் அவன் மூச்சை விடுகிறான் அவன் குடும்பம் "தொலைந்தது சனியன்" என்று நிம்மதி அடைகிறது. அவன் பெற்றோரின் கவனம் அவன் இளவயது தங்கையின் மேல் விழுகிறது. "அவளின் இளமை அவர்களின் கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கிறது". புத்தகம் முடிகிறது.

கிறிகர்யிடம் உடல் சார்ந்த மாற்றம் மட்டுமே நிகழ்கிறது. அதனை தவிர அவன் மனதளவில் அவன் அவனாகவே இருக்கிறான். ஆனால் பெரும் மாற்றத்திற்கு உட்படுபவர்கள் அவன் சொந்த பந்தங்களே.

புத்தகத்தை படிக்க ஆரம்பித்த போது ”96 பக்கம் தானே சீக்கிரம் முடிச்சிடலாம்” என்றே ஆரம்பித்தேன். படிக்க படிக்க ”ஒவ்வொரு வாக்கியத்தையும் பல முறை படிக்க வேண்டுமோ? , ஒவ்வொன்றுக்கும் பல அர்த்தம் இருக்கும் போல” என்று தோன்றுகிறது.

இப்படி ஒரு நல்ல புத்தகத்தை வாசித்து நெடுநாட்கள் ஆகி விட்டன. இப்படி பட்ட புத்தகத்தை அறிமுகம் செய்த தெகா வுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Friday, October 29, 2010

இந்தியா தூதரகமா?

இன்று குடும்ப நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்திருந்தோம். அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்தாலும் இங்கே குடியுரிமை பெற்று விட்டார். தற்போது திருமணம் முடித்து மனைவியை அழைத்து வந்துள்ளார்.

இங்கே வந்த பிறகு திருமண லைசென்ஸ் விண்ணப்பித்து மனைவிக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் கிரீன் கார்டு வாங்கியும் விட்டார். தற்போது இந்தியன் பாஸ்போர்ட் இல் இருக்கும் மனைவியின் குடும்ப பெயரை மாற்றி தன் குடும்ப பெயரை சேர்க்க இந்தியா தூதரகத்தில் விண்ணப்பித்து இருக்கிறார். அதில் நடக்கும் கூத்துகளை அவர் கதையாக சொன்ன போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

முதலில், அந்த பெண் இங்கே வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. இப்போது தான் அந்த பெண்ணிற்கு சோசியல் செக்யூரிட்டி நம்பர் வந்து இருக்கிறது. SSN எனப்படும் அது வந்த பிறகே எதுவும் செய்ய முடியும் உதாரணமாக, டிரைவர் லைசென்ஸ், வீடு வாடகைக்கு எடுப்பது, கிரெடிட் கார்டு வாங்குவது போன்ற சில.

பெயர் மாற்றத்திற்காக இந்தியா தூதரகத்திற்கு அவர் தன்னுடைய கல்யாண சான்றிதல், அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் அவரின் டிரைவர் லைசென்ஸ் எல்லாம் வைத்து அனுப்பி இருக்கிறார். சில வாரங்களுக்கு பிறகு ஒரு நோட் உடன் அது திரும்பி வந்து இருக்கிறது. அந்த நோட் இல் "பெண்ணின் டிரைவர் லைசென்ஸ் வைத்து அனுப்பவும் அதோடு முப்பது டாலர் போஸ்டல் செலவுக்கு பணமும் அனுப்பவும்" என்று வந்திருக்கிறது.

"இனிமேல் தான் டிரைவர் லைசென்ஸ் வாங்க போகிறாள் அந்த பெண் " என்று சொல்ல அவர் பல முறை போன் செய்து பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அது வாய்ஸ் மெசேஜ் க்கு சென்றிருக்கிறது. வாய்ஸ் மெசேஜ் கூட விட முடியாதபடி அவர்களின் மெயில் பாக்ஸ் புல் ஆகி இருக்கிறது. வேறு வழியில்லாமல் பல முறை போனில் தொடர்பு கொண்ட பிறகு ஒருவர் போன் எடுத்து இருக்கிறார். அவரிடம் எல்லாம் விளக்கிய பிறகும், தூதரகத்தில் இருப்பவர் "ரூல்ஸ் எல்லாம் ரூல்ஸ் தாங்க லைசென்ஸ் வாங்கியபிறகு எங்களுக்கு அனுப்புங்க" என்று சொல்லி போன் ஐ துண்டித்து இருக்கிறார்.

எங்கள் நண்பர் இந்தியாவில் யாரோ தெரிந்தவரை பிடித்து ஒரு வழியாக சரி காட்டி அவர் மூலமாக இங்கே உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றும் வேலை செய்ய திரும்ப அனுப்பி இருக்கிறார்.

தற்போது பாஸ்போர்ட் வந்து விட்டது ஆனால், எங்கள் நண்பரின் மனைவி பாஸ்போர்ட் அல்ல அது. வேறு யாருடைய பாஸ்போர்ட் ஒ அது. திரும்ப தூதரகத்தை தொடர்பு கொண்டாலும் அதே வாய்ஸ் மெயில், அதே பிரச்சனை.

இப்போது எனக்கு ஒன்று விளங்க வில்லை. எங்கள் நண்பர் கையில் கிடப்பதற்கு பதில் வேறு யார் கையிலாவது அந்த வேறு ஒருவருடைய பாஸ்போர்ட் கிடைத்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமே அதனை வைத்து?. என்ன ஒரு அலட்சியம் பாருங்கள். அதனை திருப்பி அனுப்ப கூட யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் முழிக்கிறார் எங்கள் நண்பர்.

இதனை பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்த போது சமீபத்தில் மஸ்கட் நகரில் இந்திய தூதரக அதிகாரிகளின் அலட்சியத்தால் இறந்த அந்த பெண்மணியின் நினைவு வந்தது. எங்கே போய் சொல்வது இந்த அவலத்தை.




,

Tuesday, October 12, 2010

சிவப்பா, அழகா, ஒல்லியா...


அது, தன் பெண்களுக்காக அமெரிக்கா, UK போன்ற வெளி நாடுகளில் வேலை பார்க்கும் வரன்களை அப்பாக்கள் வலை போட்டு தேடிய, பத்து வருடங்களுக்கு முந்தய காலம். என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு சில பெண்கள் இப்படி திருமணம் ஆகி போக, அதே போல நாமும் போக வேண்டும் என்று நினைத்த என்னுடைய தோழி அவர். வெளி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற அவரது அவா என்ற நிலையை தாண்டி வெறி என்றே ஆகி விட்டிருந்தது.

அவரின் தந்தையும் பல சொந்த பந்தங்கள், ப்ரோக்கர்கள், பத்திரிக்கைகள் தவிர மேற்றிமொனியால் தளங்கள் வர ஆரம்பித்திருந்த தருணம் ஆகையால், அதிலும் அவளை பற்றி விளம்பரம் கொடுத்து இருப்பார். அவள் மாநிறமான , கொஞ்சம் பூசினாற்போல இருந்த சற்று குள்ளமான பெண். ஆனாலும் அவர் தந்தை விளம்பரத்தில் "Fair, tall, lean beautiful, domestically trained girl" என்று விளம்பரம் கொடுத்து இருந்தார். இதில் domestically trained என்பது வீடு வேலை செய்ய தெரிந்த பெண் என்று பொருள் தரும்படி எழுத பட்டு இருந்தது.

நாங்கள் எல்லாம் கூட "என்ன, உங்க அப்பா உன்ன ஒரு பிராணி லெவலுக்கு உயர்த்தி இருக்காரே" என்று கிண்டல் செய்தாலும் அவள் சளைக்காமல் "அதிலென்ன தப்பு, வீட்டு வேலை செய்ய தெரிஞ்ச பொண்ணுன்னு அப்புறம் எப்படி சொல்லுறதாம்" என்று சப்பை கட்டு கட்டுவாள்.

என்ன தான்அவள் தந்தை விளம்பரம் செய்தாலும் அவள் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை அவர்கள் சமூகத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிவப்பா, ஒல்லியா இருந்த பெண்ணையே விரும்பினார்கள். அதனால் இவளும் சிவப்பாக கிரீம் மேல கிரீம் ஆக போட்டு கொண்டு இருந்தாள். எந்த சிவப்பழகு கிரீம் மார்க்கெட்டில் வந்தாலும் உடனே அதனை முதலில் ட்ரை செய்து பார்ப்பவள் அவளாகத்தான் இருக்கும். பிறகு உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என்று சரியாக சாப்பிடாமல் டியட்டிங் வேறு இருக்க ஆரம்பித்தாள்.

பிறகுஅவளுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. நாங்கள் படிப்பை முடித்து வேறு வேறு திசையில் சென்று விட்டோம். பல வருடங்களுக்கு பின் நேற்று என்னுடைய அம்மாவிடம் பேசும் போது அந்த பெண்ணை கோவிலில் பார்த்ததாகவும் அடையாளம் தெரியாத அளவுக்கு அவள் குண்டாக இருப்பதாகவும், அவள் கணவன் அவளை இங்கு தனியே விட்டு விட்டு சிங்கப்பூரில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

என்னவென்று மேலும் விசாரிக்க அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் சொன்னது மேலும் அதிர்ச்சி அளித்தது. அவள் தந்தை எப்படியாவது அவளுக்கு கல்யாணம் ஆனால் சரி நினைத்து அதிக வரதட்சணை கொடுத்து சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஒரு வரனை பார்த்து திருமணம் முடித்து இருக்கிறார். அந்த வரன் நல்ல பையன் என்றாலும் மனைவி ஒல்லியாக சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்ப, அவள் அதிகம் டியட்டிங் செய்ய ஆரம்பித்து இருக்கிறாள். ஒல்லியாக, அவள் செய்த டியட்டிங் வேறு வகையில் பக்க விளைவுகள் கொடுத்து பூசினாற்போல இருந்தவள் தைராய்டு பிரச்சனை ஏற்பட்டு அதிகம் குண்டாக ஆரம்பித்து இருக்கிறாள்.

சிலவருடங்கள் ஆவலுடன் வாழ்ந்த அவள் கணவன் அவள் குண்டாக ஆக அவளை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து இருக்கிறார். கண்ட கண்ட கிரீம்கள் போட்டு அவள் முகம் வேறு கிழடுதட்ட ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் ஒரு காரணமாக சேர்ந்து கொள்ள "சிவப்பா, ஒல்லியா இருக்கிற பொண்ணுதான் வேணும்னு நினைச்சேன், எங்க அம்மாதான் உன்னை என் தலையில கட்டிட்டாங்க" என்று தினமும் திட்டி இருக்கிறார். அதோடு தைராய்டு பிரச்சனையால் குழந்தைபேறு வேறு தட்டி போக, அதையே ஒரு காரணமாக சொல்லி அவளை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அறிய முடிந்தது.

இதில் யாரை குற்றம் சொல்ல? வெளிநாட்டு மோகத்தினால் வாழ்கை தொலைத்த என் தோழியையா அல்லது ஒல்லியான சிவப்பான பொண்ணுதான் அழகுன்னு நினைத்த அவள் கணவனையா!

Friday, October 8, 2010

இளைஞர்களிடம் தண்ணீ பழக்கம்!

வேலை விசயமாக குடிப்பழக்கம் பற்றிய ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் இந்தியாவில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தது. மேலும் அறிந்து கொள்ள கூகுளை தோண்டியபோது கிடைத்த தகவல்கள் மன வருத்தம் தந்தன.

India alcohol policy alliance, என்றழக்கப்படும் இயக்கத்தில் இருந்து வந்த கட்டுரை தந்த தகவல்கள் இவை.


பதினைந்து வருட இடைவெளியில் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக அது தெரிவிக்கிறது. அருகில் இருக்கும் அட்டவணையில் அது தெளிவாக கட்டப்படுகிறது. தொன்னூறுகளில் இரண்டு சதவீதமாக இளைஞர்களிடம் இருந்த குடிப்பழக்கம் தற்போது பதினான்கு சதவீதமாக மாறி இருக்கிறது.

அதே
போல,
எந்த வயதில் இளைஞர்கள் குடிப்பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள், என்று பார்த்தபோது எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.


தொன்னூறுகளில் பத்தொன்பது வயதாக ஆரம்பித்த குடிப்பழக்கம், தற்போது பதிமூன்று வயதாக குறைந்து இருக்கிறது. இளமை காலம் ஆரம்பிக்கும் போதே குடிப்பழக்கமும் இளைஞர்கள் /குழந்தைகளிடம் வர ஆரம்பிக்கிறது என்று தெரிவிக்கிறது.


இப்படி சிறுவயதில் குடிப்பழக்கத்தை ஆரம்பிப்பவர்கள் வளர வளர நிரந்தர குடிகாரர்கள் ஆக மாறிவிடுகிறார்கள். இருபதுகளில் இருபத்தி ஏழு வயதில் நிரந்தர குடிகாரர்கள் ஆனவர்கள், தற்போது பத்தொன்பது வயதிலேயே அன்றாட குடிகாரர்கள் ஆவதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது.


இதே நிலை தொடர்ந்தால், சீக்கிரமே இந்தியா ஒரு குடிகார, பொறுப்பற்ற நாடாக மாறும் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.

தமிழக அரசு
எல்லா ஊர்களிலும், சந்து பொந்துகளிலும் கூட டாஸ்மாக் கடை திறந்து இது போன்ற நிலையை ஊக்குவிப்பது போல இருக்கிறது. என்ன ஆகுமோ!

Saturday, October 2, 2010

ஒரு டாலர் தியேட்டர்ம் எந்திரன் படமும்



எங்க ஊரில ஒரு ஒரு டாலர் தியேட்டர் இருக்குதுங்க. அந்த தியேட்டர் நம்ம ஊரு டூரிங் தியேட்டர் மாதிரிங்க. அதாவது எப்போ புது படம் வந்தாலும் அந்த தியேட்டர் ரிலீஸ் ஆகிறதுக்கு மூணு மாசமாவது ஆகும். அதே போல எப்போ அந்த தியேட்டர் போனாலும் கொசு, பூச்சி கடி கிடைக்கும். அந்த தியேட்டர் படம் பார்க்க டிக்கெட் விலை ரொம்ப கம்மிங்க. எப்பவுமே எந்த படம் பார்கனும்னாலும் நாலு டாலர் தான் ஆகும். அதுவும் செவ்வாய் கிழமைன்னா எந்த படம்னாலும் ஒரு டாலர் தான்.

அப்படி இருந்த அந்த தியேட்டர் க்கு இந்த வாரம் வந்தது பாருங்க ஒரு மவுசு. ஒரு படம் பார்க்க இருவது டாலர் ஆம். அதுவும் preview ஷோன்னா 35 டாலராம். என்ன படத்துக்கு இப்படி மவுசுன்னு நீங்க யூகிச்சு இருப்பீங்களே. நம்ம எந்திரன் படத்துக்கு தாங்க.

ரஜினி எவ்வளவு காசு கொடுத்தும் பார்க்க மக்கள் ரெடி இருக்காங்கப்பா. யாரை பார்த்தாலும் கேட்குற முதல் கேள்வி "எந்திரன் பார்த்தாச்சா" அப்படின்னு தான். "இல்ல நாங்க இன்னும் பாக்கல அப்படின்னு சொன்னா" ஒரு மாதிரி பார்க்குறாங்க. அப்படி ஒரு எந்திரன் மாயை உருவாக்கப்பட்டு இருக்கு.

அதை விட கொடுமை என்னன்னா, எல்லா டிக்கெட் ம் படம் போடப்படுற எல்லா நாளும் booked. இங்க இந்திய அல்லது மற்ற மொழிப்படம் எல்லாம் ஒரு வாரம் தான் போடுவாங்க

ஒரு படம் வெளியிட அதிகப்படியா ஒரு 200-300 டாலர் அந்த தியேட்டர் வாடகை கொடுக்க வேண்டி வரும்ங்க. ஒரு நாள் மூணு ஷோ ஓட்டுறாங்க. எல்லா நாளும் டிக்கெட் booked ன்னா , 150 சீட்டிங் கபாசிட்டி இருக்கிற ஒரு தியேட்டர் எவ்வளவு லாபம் வரும்ன்னு நீங்களே கணக்கு போட்டுகோங்க.

ஒரு டிக்கெட் இருவது டாலர் விக்கிறாங்கன்னா எவ்வளவு டாலர் கொடுத்து அந்த படத்தை வாங்கி இருப்பாங்க. இது எங்க ஊரில மட்டும் தான். அமெரிக்கா புல்லா யோசித்து பாருங்க. இதில இன்னொரு விஷயம் என்னன்னா எவ்வளவு பேமஸ் ஆன ஆங்கில படமா இருந்தாலும் சரி, டிக்கெட் விலை பத்து முதல் பதினஞ்சு டாலர் தாங்க.

என்ன தான் இருந்தாலும் தலைவர் மதிப்பே தனி தான். ஆனா என்ன, பந்திக்கு முந்துன்னு சொல்லுவாங்க, இனிமே தலைவர் படத்துக்கு புக் பண்ண முந்துன்னு மாத்தணும் போல.

Thursday, September 30, 2010

பிறந்த நாள் (கொ/தி)ண்டாட்டம்



ஊரிலேயே முகுந்துக்கு முதல் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியாயிற்று. இருப்பினும் இங்கு வந்தவுடன் "என்ன பையன் பர்த்டே கொண்டாடலையா ?" அல்லது "என்ன உங்க பையன் பர்த்டே க்கு ஏன் எங்கள கூப்பிடல?" என்று பார்க்கும் அனைவரும் கேட்கிற கேள்விக்கு பயந்து சரி ஒரு பார்ட்டி வச்சிருவோம் என்று நானும் ரங்கமணியம் முடிவு செய்தோம்.

சரி எத்தனை பேரை கூப்பிடனும், யாரையும் விட முடியாது. அவரோட, என்னோட ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க, பார்த்தவங்க, அப்புறம் தமிழ் நண்பர்கள், பிறகு வேறு மாநில இந்தியன் நண்பர்கள், அப்புறம் அமெரிக்கன் அல்லது வேறு நாட்டு நண்பர்கள், அப்புறம் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று குடியிருப்பில் உள்ள குடும்பங்கள் என்று சுமார் லிஸ்ட் அம்பது குடும்பத்தை தொட்டது.

சரி பார்ட்டின்னா முதல்ல ஒரு பார்ட்டி ஹால் பார்க்கணுமே, இப்போ எல்லாம் பார்ட்டி ஹால் எல்லாம் ரெண்டு மணிநேர வாடகை குறைஞ்சது அம்பது முதல் நூறு டாலர். அதுவும் அம்பது குடும்பம் வரணும்னா அதுக்கு தகுந்த மாதிரி பெரிய ஹால் ஆகா இருக்கணும். அதுக்கு வாடகை இன்னும் ஜாஸ்தி ஆகும். பேசாமா ஒரு பார்க் ல இருக்கிற recreation area வில வச்சிரலாம்னு நான் ஐடியா சொல்ல ஒரு மாதிரி என்னை பார்த்தார் ரங்கமணி. "போயும் போயும் ஒரே பையன் பர்த்டே ய எவனாவது பார்க் ல கொண்டாடுவானா, என்னை பத்தி என்ன நினைப்பாங்க" என்று அவர் சொல்லவும் சரி என்று விட்டு விட்டேன்.

அடுத்தது சாப்பாடு. அம்பது குடும்பம்ன்னா கணவன், மனைவி குழந்தைகளோட சேர்த்து எப்படியும் 150 பேர் ஆனது. "அவ்வளவு பேருக்கும் வீட்டில குழந்தைய வச்சுக்கிட்டு உன்னால தனியா சமைக்க முடியாது, அதனால வெளியில ஆர்டர் பண்ணிடலாம்" என்று ரங்கமணி சொல்ல சரி என்று சொல்லி விட்டேன். சமையல் ஆர்டர் விலை சுமார் ஐநூறு டாலரை தாண்டியது.

நாங்கள் யோசித்த இந்த முன் ஏற்பாடுகள் எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆனது நாங்கள் கேள்விப்பட்ட அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடும் விதம். பொதுவாக கீழ்க்கண்ட அனைத்தும் ஒரு பிறந்த நாளில் இருக்கின்றன.

  1. முதலில் பிறந்த நாள் என்றால் ஒரு தீம் எடுத்து கொள்கிறார்கள். உதாரணமாக ஆண் குழந்தை என்றால் தாமஸ் ட்ரைன், பாப் தி பில்டர்போன்றவை. பெண்குழந்தை என்றால் டோரா, டின்கர் பெல் போன்ற சில.
  2. ஒரு தீம் எடுத்து கொண்ட பிறகு, அதனை சார்ந்தே அனைத்து அலங்காரங்களும், பிறந்த நாள் கேக்கும் ஆர்டர் செய்ய படுகிறது. உதாரணமாக பிறந்தநாள் தோரணைகள் முதல் குடிக்க கொடுக்கும் டம்ளர், பேப்பர் டவல் வரை அந்த தீம் உள்ள படங்கள் இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள். அந்த தீம் உள்ள கேக் ஆர்டர் செய்ய படுகிறது.
  3. பார்டிக்கு வரும் குழந்தைகளை மகிழ்விக்க என்று பல விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்கிறார்கள் அல்லது ஒரு ஜோக்கேரை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த ஜோக்கர் குறிப்பிட்ட தீம் உள்ள உடை அணிந்து வந்து குழந்தைகளுக்குவிளையாட்டு காட்டுகிறார்.
  4. பிறகு பார்ட்டிக்கு வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் return gift அல்லது திரும்ப பரிசு கொடுக்க வேண்டும். கொடுக்கா விட்டால் அந்த குழந்தைகள் "where's our gift" என்று உங்களிடம் வந்து கேட்டே விடுகின்றன.
  5. பிறகு return கிபிட் ஐ அழகாக pack செய்து உடன் ஒவ்வொரு குழந்தையின் பெயருடன் அச்சடித்த thank you கார்டு பிரிண்ட் செய்து gift bag இல் வைத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கிறார்கள்.
இவை எல்லாம் சேர்த்து கூட்டி கழித்து பார்த்தால் பட்ஜெட் சுமார் ஆயிரம் டாலரை தாண்டும் போல இருந்தது.

எப்படியும் முகுந்துக்கு இப்போது விவரம் தெரிய போவதில்லை. ”ஏன் எனக்கு இன்னொரு பிறந்த நாள் கொண்டாடவில்லை” என்றும் அவன் கேட்கப்போவதில்லை. அதனால் அடுத்தவர்களுக்காக இப்படி ஒன்று அவசியமா என முடிவு செய்தோம். பேசாமல் ஒரு நூறு டாலரை cancer ஆல் அவதிப்படும் குழந்தைகளுக்கு மிக குறைந்த செலவில் மருத்துவம் அளிக்கும் St jude children's hospital க்கு அனுப்பி விட்டு, அடுத்த வருடம் பார்க்கலாம் என நினைத்து நிம்மதியாக இருந்துவிட்டோம்.

Thursday, September 23, 2010

பிங்க் ரிப்பனும் , BRC1 & BRC2 ம்

அக்டோபர் 1st என்ன விசேஷம்?

எந்திரன் ரிலீஸ் அப்படின்னு சொல்லுறவங்களுக்கு (ஹி, ஹி, ஹி, இந்த விளையாட்டுக்கு நான் வரல, கொஞ்சம் சீரியஸ் ஆ யோசிக்கலாம்)

அக்டோபர் ஒன்னு உலக பிங்க் ரிப்பன் டே, பிங்க் ரிப்பன் மார்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை குறிக்கிறது.

கான்செர் ன்னா என்னங்க?

Unconditional growth, அதாவது எல்லை இல்லா வளர்ச்சி. எதுக்கும் ஒரு எல்லாம் இருக்கணும் அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க, அது ஒவ்வொரு செல்லுக்கும் கூட பொருந்தும். நம்ம உடம்பில இருக்கிற ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு கன்ட்ரோல் ஜீன் இருக்கு. அந்த ஜீன் ஒவ்வொரு செல்லையும் தேவையானப்போ "வளருன்னு" சிக்னல் கொடுக்கும், அதே போல தேவை இல்லாதப்போ "போதும் நிறுத்து" அப்படின்னு சிக்னல் கொடுக்கும். ஆனா இந்த கன்ட்ரோல் ஜீனுக்குள் மாற்றம் (Mutation) ஏற்பட்டுடுச்சுன்னா அந்த ஜீன் தன்னோட கன்ட்ரோல் பண்ணுற திறமையை இழக்குது. பிறகு ஒவ்வொரு செல்லும் கன்ட்ரோல் இல்லாம வளரும். இதுதான் ஒவ்வொரு கான்செர்க்கும் அடிப்படை.


சரி, பிங்க் ரிப்பன் Breast cancer awareness, ஆனா BRC1 & BRC2 ன்னா என்ன?

BRC1 & BRC2 ங்குறது மனுஷ உடம்புல இருக்கிற மார்பக செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ரெண்டு ஜீன். இந்த ரெண்டு ஜீன்லையும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுடுச்சுன்னா, உடனே மார்பக புற்று நோய் வந்துடும்ன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க.

சரி, எப்படி Breast கான்செர் கண்டுபிடிப்பது?

பெண்கள் வாரம் ஒரு முறை பத்து நிமிடம் எடுத்துகோங்க. ஒரு தனி அறையில் சென்று கீழ்க்கண்ட படத்தில் சொல்லுவது போல மார்பகத்தை நன்கு அமுக்கி ஏதேனும் கட்டி போன்று தென்படுகிறதா என்று பார்க்கவும். ஏதேனும் சிறிய கட்டி போன்று இருப்பதாக சந்தேகம் வந்தால், இதே டெஸ்டை திரும்ப இரண்டு நாட்கள் கழித்து செய்து பார்க்கவும். மறுபடியும் இருப்பது போல அறிந்தால், உடனே மீமொக்ராம் (Mammogram) மார்பு புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளவும்.





நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஆரம்ப நிலை மார்பு புற்றுநோயை முழுதும் குணப்படுத்த முடியும்.

மார்பு புற்றுநோய்யை தடுக்க என்ன செய்யலாம் ?

  1. குண்டாகாமல், ஆரோக்கியமான எடையுடன் இருப்பது.
  2. நிறைய காய்கறி, பழங்கள் உண்பது, இறைச்சி உண்பதை முடிந்த அளவுகுறைத்து கொள்வது
  3. முடிந்தவரை உடற்பயிற்சி செய்வது
  4. அதிக கொழுப்பு, மாவு பொருட்களை உண்ணாமல் இருப்பது
இவை எல்லாம் அனைவருக்கும் தெரிந்த வழிகள் தான் ஆனாலும் யாரும் பின் பற்றுவது இல்லை.

விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன செய்யலாம்?

பெண் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அம்மா, அக்கா, தங்கை, மகள், தோழியர் அனைவருக்கும் மார்பு புற்றுநோய் பற்றி எடுத்து சொல்லுங்கள். முடிந்தால் விழிப்புணர்வுக்காக கீழ்க்கண்ட பிங்க் ரிப்பன்ஐ உங்கள் தளத்தில் இணையுங்கள்.



மேலும் இதனை பற்றி அறிந்து கொள்ள http://www.pinkribbon.org/ என்ற தளத்தை பாருங்கள்.

Tuesday, September 21, 2010

ஒரு வருடத்தில் 524 recipes சமைப்பது எப்படி?

வேலை கழுத்தறுக்கிறது, வாழ்க்கை போர் அடிக்கிறது, சுவாரசியப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தேன். What about trying a new recipe everyday? Isn't it fun?

"என்ன ரேசிபே செய்ய ஆரம்பிக்கலாம்?" யோசித்த போது பிரெஞ்சு ரேசிபே செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். (Why French?, அது எப்படின்னே தெரியல, பிரெஞ்சு பொண்ணுங்க மட்டும் என்ன சாப்பிட்டாலும், எப்படி தான் ரவுண்டு கட்டி சாப்பிட்டாலுமே ஒல்லியாவே இருக்குதுங்க? அதான் ஹி, ஹி, ஹி)

முதல் வேலையா, ஒரு பிரெஞ்சு சமையல் புத்தகம் வாங்கினேன், அது Mastering the Art of French Cooking, by Julia Child

அடுத்து ஒரு வலைபூ ஆரம்பித்தேன், அதில் இன்று என்ன ரேசிபே செய்ய போகிறேன் என்று எழுதினேன்.

சும்மா, one recipe one day னா போர் அடிக்குமே , ஏதாவது சுவாரஸ்யம் கொண்டு வரணுமே? என்ன செய்யலாம்?

ஓகே,
  • ஒரு வருசத்துக்குள்ள அந்த சமையல் புத்தகத்தில இருக்கிற எல்லா ரேசிபேயும் சமைச்சு முடிச்சுடனும்
  • ஒவ்வொன்னையும் சமைச்சு முடிச்சப்புறம் வலைபூவில சொல்லணும்,
  • கவுன்ட் டவுன் வச்சுக்கணும்,
இது எப்படி இருக்கு? சுவாரஸ்யமா இருக்கு இல்ல?

இதென்ன சின்னபுள்ள தனமா இருக்கு, இதெல்லாம் எப்படி சாத்தியம்னு நினைக்கிறவங்க,

Julie & Julia படத்த பாருங்க

Monday, September 20, 2010

திரைப்படமும், வாசிப்பனுபவமும்


ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் வரும் கதை மாந்தர்கள் பற்றிய நமது கற்பனையும், கதை நடக்கும் சூழ்நிலைகள் பற்றிய நமது அவதானிப்பும், அந்த புத்தகங்கள் திரைப்படங்களாக எடுக்கப்படும் போது சில வேளைகளில் பெருத்த ஏமாற்றம் தருவது உண்டு. திரை படங்களாக ஒரு புத்தகம் மாறும் போது கதை சொல்லியின் கோணத்தில் இருந்து மாறுபட்டு ஒரு இயக்குனரின் கோணத்தில் மாறுவதே இதற்க்கு காரணமாக இருக்கலாம்.

இப்படி நிறைய எனக்கு பிடித்த புத்தகங்கள் திரைப்படங்களாக மாறும் போது ஏமாற்றம் தருவது உண்டு. ஆனால் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள், படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விட திரைபடமாக மாறும் போது ஏற்படும் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்படி எனக்குள் தாக்கம் ஏற்படுத்திய ஒரு புத்தகம்/திரைப்படம் Khaled Hosseini அவர்கள் எழுதி Marc Forster அவர்கள் இயக்கிய The Kite Runner.

2000 ஆம் ஆண்டு கதைமாந்தர் அமிரின் நினைவுகளாக படம் ஆரம்பிக்கிறது. ஆப்கானிஸ்தானில் 1978 இல் சோவியத் படைகள் நுழைவதற்க்கு ஒரு சில மாதங்களுக்கு முந்தய அமைதியான, அழகான காபூல் நகரம் அது. குழந்தைகள் குதூகலத்துடன் பட்டம் விட்டு கொண்டிருக்கின்றனர். அதில் உயர்ந்த குலத்தை சேர்ந்த பணக்கார அமிரும், தாழ்ந்த குலத்தை சேர்ந்த அமிர் வீட்டில் வேலை செய்யும் ஹாசனும் அடுத்து நடைபெரும் பட்டப்போட்டியில் எப்படி ஜெயிப்பது என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.

பட்டபோட்டியின் விதிகளின் படி, பட்டத்தை ஒருவர் அறுத்த பிறகு தன் பட்டத்துடன் அறுந்த பட்டத்தையும் ஓடி சென்று எடுக்க வேண்டும், அப்படி செய்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்க படுகிறார். அமீர் ஒவ்வொரு பட்டத்தை அறுக்கும் போதும் ஹாசன், அமீருக்கு அறுந்த பட்டத்தை எடுத்து வரும் Kite Runner ஆக இருக்கிறான்.

தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனாக வீட்டு வேலைகாரனாக ஹாசன் இருந்தாலும் அவன் மீது தன் தந்தைக்கு அதிக பாசம் இருப்பதாக அமீர் எப்போதும் பொறமை படுகிறான். எப்படியும் வரும் பட்டப்போட்டியில் வெற்றி பெற்று தந்தையிடம் நல்ல பேர் பெறவேண்டும் என்று அமீர் நினைக்கிறான்.

பட்டபோட்டி நாள் வருகிறது. ஒவ்வொரு பட்டமாக அமீர் அறுக்க அமிரின் தந்தை குதூகளிக்கிறார். கடைசி பட்டத்தையும் அறுத்த பிறகு ஹாசன் அறுந்த அந்த பட்டத்தை எடுக்க ஓடுகிறான், அவனை தேடி அமிரும் பின் செல்கிறான். அப்போது உயர்ந்த இனத்தை சேர்ந்த சில சிறுவர்கள் ஹாசனை சூழ்ந்து கொண்டு பட்டத்தை கொடுத்து விடும்படி மிரட்டுகிறார்கள். "இது அமீர் உடையது கொடுக்க முடியாது" என்று ஹாசன் மறுக்க அவனை பாலியல் துன்பத்துக்கு ஆட்படுத்து கின்றனர். இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அமீருக்கு அதிலிருந்து குற்றஉணர்ச்சி மனதில் ஏற்பட அதிலிருந்து தப்பிக்க ஹாசன் குடும்பத்தின் மீது திருட்டு பட்டம் காட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறான்.

சில மாதங்களில் சோவித் படைகள் காபூலில் நுழைய உயிருக்கு பயந்து அமிரும் அவன் தந்தையும் பாகிஸ்தானுக்கு செல்கிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்க வருகின்றனர். அமீர் வளர்ந்து திருமணம் செய்யும் வரை அவன் தந்தை அவனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். அமீர் ஒவ்வொரு முறை வெற்றி பெரும் போதும் "ஹாசன் இப்போ இருந்த நல்ல இருக்கும்" என்று கூறுகிறார்.

அமிரின் தந்தை இறந்த பிறகு அவன் தந்தையின் நண்பர் மூலம் ஹாசன் தன்னுடைய சகோதரன் என்றும், தன் வீட்டு வேலைகாரிக்கும் தந்தைக்கும் பிறந்தவன் என்றும் அமீர் அறிகிறான். மேலும் ஹாசன் இப்போது உயிரோடு இல்லை என்பதும் தாலிபான் படைகளால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டான் என்பதும் தெரிய வரும் போது அமீர் மனம் வருந்துகிறான். அவனுக்கு மேலும் துன்பம் சேர்க்கும் வண்ணம் ஹாசனின் மகன் சொஹ்ராப் இப்போது அனாதையாக யாருமில்லாமல் தாலிபான்கள் வசம் உள்ளான் என்றும் அறிகிறான்.

சொஹ்ரப்பை மீட்டு வர காபூல் கிளம்புகிறான், அவன் பார்த்த அழகான அமைதியான காபூல் நகர் அழிந்து விட்டு இருக்கிறது. ஒரு மைதானத்தில் ஒரு பெண்ணை கல் எறிந்து கொள்வது, நடு ரோட்டில் சுட்டு கொள்வது, தாடி இல்லாதவர்களை சுடுவது, நினைத்த போது யாரையும் கடத்தி சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது போன்ற தாலிபான்கள் ஆதிக்கம் அவனுக்கு அதிர்ச்சி தருகிறது.

சொஹ்ராப் ஒரு பெண்ணைப்போல உடைகளை அணிந்து நடனம் ஆடுவதை பார்கிறான், தாலிபான்கள் வசம் இருந்த சொஹ்ரப்பை பலத்த காயங்களுடன் ஒரு வழியாக மீட்டு வீடு திரும்புகிறான்.

புத்தகமாக இதனை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை விட அதனை படமாக பார்க்கும் போது மனதை நெகிழ செய்தது இந்த படம்.