Monday, April 6, 2015

ஆடம்பரங்கள் ஆகும் திருமணங்கள்!

ஆயிரங்காலத்து பயிர், சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது, என்றெல்லாம் சொல்லப்படும் திருமணங்கள் இப்போது ஸ்டேட்ஸ் சிம்பல் ஆகிவிட்டன. அதாவது ஒருவர் எப்படி தன் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் நடந்துகிறார் என்பதை வைத்து அவர் புது பணக்காரரா அல்லது மிடில் கிளாஸ், அல்லது பணக்காரரா என்று கணிக்க முடியும்.

உதாரணமாக, இப்போதெல்லாம் திருமணம் மாதிரியே நிச்சயதார்த்தம் நடத்துகிறார்கள். பத்திரிக்கை அடித்து, மஹால் பிடித்து, ப்ளெக்ஸ் பானேர் வைத்து, சாப்பாடு போட்டு, போட்டோ வீடியோ எடுத்து etc etc. இது ஒரு ஸ்டேட்ஸ் சிம்பல் ஆகி விட்டது.நிச்சயதார்த்த விழாவிற்கு உங்களை  வரவேற்கிறோம் என்று ஊர் முழுக்க ப்ளெக்ஸ் பானர்கள் அதிலும் இப்பொழுதெல்லாம் மணமகன் மணமகள் போட்டோ கூட ஒரு ஓரத்தில் தான் இருக்கும் மற்றவர்கள் போட்டோ தான் அடைத்து கொண்டு இருக்கிறது. அதுவும் வித வித போஸ்களில். கூலிங் க்ளாஸ் கண்ணாடி போட்டு அல்லது செல் போன் பேசுவது போல என்று பல பார்க்க காமெடியாக இருக்கும். அப்பாவி போல சில நேரம் மணமகளும், மணமகனும் போஸ் கொடுத்து நிற்பார்கள். இப்பொழுதெல்லாம் ப்ளெக்ஸ் பானர் திருமணங்கள் என்றால் யாரோ ஒரு புது பணக்காரர் அல்லது மிடில் கிளாஸ் ஒருவர் தன மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் நடத்துகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

அதே போல, திருமண நிகழ்ச்சியும் ப்ளெக்ஸ் பானர்களால் நிரம்பி வழியும்.  ஒரு சில குடும்பங்களில் , பழக்க வழங்கங்களில் மாப்பிளை அழைப்பு எல்லாம் இருப்பதில்லை, ஆனால் இப்போதெல்லாம் நிறைய குடும்பங்கள் இதை செய்கிறார்கள். அதே போல மெகந்தி என்பதெல்லாம் இருந்ததில்லை, அது வட நாட்டு திருமணங்களில் செய்து பார்த்து இருக்கிறேன், நம் ஊர்பக்கம் எல்லாம்  மருதாணி போட்டு பார்த்து இருக்கிறேன், ஆனால் இப்போது மெகந்தி என்பது ஒரு கட்டாயம் ஆகி விட்டது. மணமகள், மணமகள் தோழிகள், அம்மா, சித்தி, அத்தை என்று எல்லோரும் மெஹந்தி போட்டு கொள்கிறார்கள்.
அதே போல கல்யாண பட்டு புடவை, அது எத்தனை விலை என்று சொல்வதில் ஒரு ஸ்டேட்ஸ். எத்தனை பெண்கள் அந்த புடவையை தொடர்ந்து கட்டி கொண்டிருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனாலும் பணத்தை கொட்டி வாங்குகிறார்கள். அதனை பெருமையாக சொல்கிறார்கள்.

அடுத்து பெரிய ஸ்டேடஸ் சிம்பல் என்பது எத்தனை நகை போட்டு கல்யாணம் என்பது. , மணப்பெண் போட்டிருக்கும் நகை தவிர, அவர்களின் சொந்தங்கள் அல்லது மணமகன் சொந்தங்கள் போட்டிருக்கும் நகை புடவை எல்லாம் பார்க்க டிசைன் டிசைன் ஆக இருக்கும், ஆளை தூக்கும். ஒரு நகை போடாமல் அல்லது இமிடேசன் நகை போட்டு கல்யாணத்திற்கு சென்றால் அவர்களை இந்த ஆடம்பர மக்கள் பார்க்கும் பார்வை ஒரு ஈனப்பிறவியை பார்ப்பது போல இருக்கும். நகை விலை எவ்வளவு ஏறினாலும் நம்ம ஊர் மக்களின் நகை மோகம் மட்டும் குறையும் போல தெரியவில்லை. அதுவே பெரிய ஸ்டேடஸ் சிம்பல் ஆகி விட்டது.

அடுத்த ஸ்டேடஸ் சிம்பல் சாப்பாட்டு, இப்போதெல்லாம் பிரியாணி சாப்பாடு அல்லது கறி சாப்பாடு, கல்யாண சாப்பாடாக போடுகிறார்கள். நிறைய சாப்பாடு செய்து உபயோகிக்காமல் வீணாக்குகிறார்கள்.

அதே போல பாச்சுலர் பார்ட்டி இல்லாமல் இந்தியாவில் நிறைய திருமணங்கள் நடப்பதில்லை. இது  மணமகன் தன நண்பர்களுக்கு "தண்ணீர்" பார்ட்டி கொடுப்பது தான்  "பாச்சுலர் பார்ட்டி". அமெரிக்காவில், மணமகன் மணமகள் வேறுபாடின்றி இப்படி பாச்சுலர் பார்ட்டி அல்லது பாச்சுலரேட்  பார்ட்டியும்  உண்டு. நல்ல வேலை இன்னும் மணப்பெண் அளவுக்கு இந்தியாவில் இது பரவவில்லை என்பது ஒரு ஆறுதல்.

அடுத்து நிறைய வீடுகளில் இப்போதெல்லாம் ரிசெப்சன் வைக்கிறார்கள், அதில் கேக் வெட்டுவது, சாப்பாடு என்பதெல்லாம் மிக மிக சாதாரணம்.  அது கிட்டத்தட்ட மிடில் கிளாஸ் மக்கள் திருமணங்களில் பார்க்கலாம். அதனை தவிர அடுத்து இப்போது முளைத்து இருக்கும் ஒரு பழக்கம் காக்டெயில் பார்ட்டி, இது நிறைய பணக்கார திருமணங்களில் பார்க்க முடியும். அப்படியே, அமெரிக்க திருமணங்களில்போல  ரிசப்சன் என்றால் மணமகன் மணமகள் டான்ஸ் ஆடுவார்கள், பின்னர் ஷாம்பெயின் ஓபன் செய்வார்கள், பின்னர் எல்லாரும் குடிப்பார்கள், டான்ஸ் ஆடுவார்கள். இப்படி ரிசப்சன் நடப்பது எல்லாம் ஸ்டார் ஹோட்டல்களில். பல நேரம் நமக்கே நாம் எந்த ஊர் திருமணத்தில் இருக்கிறோம் என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருக்கும்.

நான் இங்கே குறிப்பிட்ட திருமணங்கள் எல்லாம் அம்பானி வீட்டு திருமணங்கள் அல்ல, எல்லாம் சாதாரண மக்கள் கொஞ்சம் கையில் பணம் சேர்ந்தவுடன் தங்கள் ஸ்டேட்ஸ் காட்ட இப்படி திருமணம் நடத்துகிறார்கள். ஏன் இப்படி ஒரு ஸ்டேட்ஸ் மோகம் என்று தெரியவில்லை. எங்கே போக போகிறோம் என்றும் தெரியவில்லை.

நன்றி.

6 comments:

Avargal Unmaigal said...

///அம்பானி வீட்டு திருமணங்கள் அல்ல, எல்லாம் சாதாரண மக்கள் கொஞ்சம் கையில் பணம் சேர்ந்தவுடன் தங்கள் ஸ்டேட்ஸ் காட்ட இப்படி திருமணம் நடத்துகிறார்கள்///

சாதாரண மக்கள் தங்களை அம்பானிகளாக நினைத்து கொள்வதால் இப்படி நடத்துகிறார்களோ என்னவோ

வருண் said...
This comment has been removed by the author.
S.P.SENTHIL KUMAR said...

புது பணக்காரனிடம் கொஞ்சம் ஆட்டம் கூடுதலாக இருக்கும். பாரம்பரியமாக வருபவர்களிடம் அப்படி இருக்காது.
தாராளமயமாக்களுக்குப் பின் பணக்காரர்கள் ஆனவர்கள் இவர்கள். அதனால் தன்னை அளவுக்குமீறி பெரியாள் போல் காட்டிக்கொள்ளும் மனநிலை உருவாகியுள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு.

தனது இமேஜை வளர்த்துக்கொள்ள கடனை வாங்கி செலவு செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதன்பின் கடனை கட்ட முடியாமல் திண்டாடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். எளிமையாக திருமணம் முடிப்பதே நல்லது.

சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு!

Nirmala said...

ஆடம்பர திருமணங்களால் மட்டும் மதிப்பு வரபோவதில்லை என்கிற உண்மை தெரிவதில்லை மக்களுக்கு....சிலர் கடன் வாங்கியாவது ஆடம்பரமாக செய்ய நினைக்கிறார்கள்.... இது தவறானது. இருப்பதை வைத்து எளிமையாக திருமணம் செய்வதே நல்லது. அதில் ஒன்னும் கவுரவம் குறைய போவதில்லை.
- chudachuda.com

ஜோதிஜி said...

சென்ற வாரத்தில் திருப்பூரில் நடந்த திருமணம் ஒரு தோட்டத்தில் நடந்தது. மண்டபம் போல அலங்கரிக்க செலவளித்த தொகை 50 லட்சம்.

ப.கந்தசாமி said...

மணமகனுக்கு கால் வாங்குவதை விட்டு விட்டீர்களே? பணக்காரர்களை விட்டு விடுங்கள். மிடில்கிளாஸ் குடும்பங்கள் 10 லட்சத்திற்கு குறைவில்லாமல் கார் வாங்குகிறார்கள். மணமகனுக்கு அந்தக் காரை பராமரிக்கும் அளவிற்கு சம்பளம் வருமா என்பது தெரியாது.