Tuesday, July 7, 2015

அமெரிக்கர்கள் பாசமும் இந்தியாவில் அன்னியமாகும் சொந்தங்களும்

பொதுவாக அமெரிக்கர்கள் அல்லது வெஸ்டேர்னர்கள்   பற்றி சில clicheகள்  உண்டு. அவை, குடும்பங்களை பார்க்க மாட்டார்கள், தனியே வாழ்வார்கள். பெற்றோரை வயதான காலத்தில் கவனிக்க மாட்டார்கள். குடும்ப அமைப்பில் நம்பிக்கை இல்லை....இப்படி நிறைய.

இந்தியாவில் இருந்து வெளியே வருவதற்கு முன்பு வரை இவை எல்லாம் உண்மை என்று நான் நம்பிக்கை கொண்டு இருந்தேன். ஆனால், இப்படி சொல்லப்படும் அல்லது நம்பப்படும் குடும்பங்கள் நூற்றில் 10 இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த 100க்கு 90 குடும்பங்கள் இன்னும் பாசம் பந்தம் எல்லாம் கொண்டு இருக்கிறார்கள். 

குடும்பம் குழந்தைகள் என்று தனக்கென்று ஒரு கூட்டை கட்டி கொண்டு அதில் குழந்தைகள் வளர்ந்து கல்லூரி காலம் வரை வெளியே செல்லும் வரை பாதுகாக்கிறார்கள். குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் விட்டது பொறுப்பு என்று நிறைய பெற்றோர் விடுவதில்லை. அவர்களுக்கு தனியே உலகில் வாழ கற்று கொடுப்பதற்காக தனி வீடு எடுத்து கொடுக்கும் பெற்றோர் பார்த்து இருக்கிறேன். ஆனால், குழந்தைகள் படிப்புக்கு என்று செலவழிக்கும் அல்லது குழந்தைகள் தானே சம்பாதிக்கும் வரை பணம் கொடுத்து சப்போர்ட் செய்யும் நிறைய பெற்றோரை பார்த்து இருக்கிறேன்.

நான் பார்த்த வரையில் இந்த விசயத்தில் ஒரே ஒரு வித்தியாசம் இவர்களுக்கும் இந்திய பெற்றோருக்கும் என்ன என்றால், குழந்தைகளை தங்களுடன் வைத்து கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு விசயமாக பார்த்து பார்த்து ஸ்பூன் பீட் செய்து கொண்டு அவர்களுக்கு வெளியுலகை சமாளிப்பது எப்படி என்று கற்று கொடுக்காமல் இருப்பதில்லை.

அதே போல, குழந்தைகளும், வயதான பெற்றோரை கவனியாமல் விடுவதில்லை. ஒரே வீட்டில் இருப்பதில்லை என்றாலும் நிறைய பெற்றோர் வீட்டின் அருகில் குழந்தைகள் வசிப்பது இங்கு சகஜம்.நான்  இங்கு  வந்த புதிதில் டிவியில் "Everybody Loves Raymond" என்று ஒரு தொடர் வரும். சரியான காமெடி தொடர் என்றாலும். எப்படி குழந்தைகளும் பெற்றோரும் அருகருகே வசிக்கிறார்கள், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறார்கள் என்று நன்கு அறிந்து கொள்ள எனக்கு உதவியது.


இது எனக்கு தெரிந்த இரண்டு அமெரிக்க நண்பர்கள் தங்களின் வயதான பெற்றோரை எப்படி கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளுகிறார்கள் என்று அறிந்து புல்லரித்து போய் இருக்கிறேன். அதிலும் என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் தாய் 90 களில் இருக்கிறார். Alzeimer நோயால் நினைவு தப்பி விட்டது. சாப்பாடு சாப்பிட மறுக்கிறார் என்று ஹோமில் வைத்து உணவு குழாய் மூலம் உணவு செலுத்துகிறார்கள். அவருக்கு எந்த நினைவும் யாரை பற்றிய நினைவும் இல்லை என்றாலும் தவறாமல் இவரும்  இவரின் தங்கையும் தினமும் சென்று பார்கிறார்கள்.வாரம் ஒரு முறை குழந்தைகளை கூட்டி கொண்டு காட்டுகிறார். 

இன்னொரு நண்பர், தன் முதுகெலும்பு உடைந்து நடக்க முடியாமல் போன தந்தையை கவனிக்க அவர் வீட்டில் ஒரு நர்ஸ் வைத்துஇருந்தார் . தினமும் அவரை தள்ளு வண்டியில் அழைத்து கொண்டு வாக்கிங் செல்வார். தன் தந்தை இறக்கும் வரை அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்.

அதனால், மேற்கத்திய மக்கள் எல்லாரும் இப்படி தான் என்று நாம் முத்திரை குத்த முடியாது. 

அதே போல, இந்தியாவில் இருப்பவர்கள் குடும்ப அமைப்பில் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்  அனைவரும் தாய் தந்தையரை கண்ணும் கருத்துமாகபார்த்து கொள்ளுகிறார்கள் என்று யாரவது சொன்னால் அதுவும் உண்மை இல்லை.

எனக்கு தெரிந்த என் இரு  சொந்தகாரர்கள் குடும்பத்தில் அப்பா மீது மகளும் மகனும் கேஸ் போட்டு இருக்கிறார்கள். அவர் குடித்து குடித்து சொத்தை அழித்து கொண்டு இருக்கிறார். அதனால் எங்களுக்கு அப்பாவே வேண்டாம் என்று கேஸ் போட்டு இருக்கிறார்கள். தன்னை வளர்த்து ஆளாக்கி, கல்யாணம் முடித்து வைக்கும் வரை அப்பா வேணும், ஆனால் இப்பொழுது குடிக்கு அடிமை ஆகி இருக்கும் அப்பாவை மீட்க என்ன வழி என்று எல்லாம் பார்க்காமல், அப்பா செத்தாலும் பரவாயில்லை, தனக்கு சொத்து தான் முக்கியம் என்று இவர்கள் செய்யும் செயலை பார்த்து எங்கே செல்கிறோம் நாம் என்று மனம் வருந்தியது.

இதே போன்ற ஒரு நிலை என் தோழி ஒருவரின் வீட்டிலும் பார்க்க நேர்ந்தது. அப்பா இல்லை, அம்மா மட்டுமே, அவரும் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றவர். தோழியின் அண்ணன் வெளி நாட்டில் இருக்கிறார், ஆனாலும் அவரின் மனைவி எந்த உதவியும் செய்வதில்லை அல்லது செய்ய விடுவதில்லை. எல்லாவற்றையும் தோழி பார்த்து கொள்ளுகிறார். ஆனாலும் அண்ணன், தங்கை மீது இப்பொழுது கேஸ் போட்டு இருக்கிறார். அம்மாவின் நகைகளும் சொத்தும் தன்னை சேர்ந்தது என்று. 

தாய் தந்தையர் இறந்தவுடன் முக்கால் வாசி வீடுகளில் சொத்து தகராறு நடந்து ஒரு காலத்தில் ஒற்றுமையாக இருந்த குடும்பங்கள் இப்போது தனி தீவுகளாக இருப்பதை பார்க்க முடிந்தது. பணம் பணம் இதுவே பிரதானம். பாசமாவது மண்ணாங்கட்டியாவது.

இது நான் பார்த்த சில இந்திய  சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் அமெரிக்க நண்பர்கள் வாழ்கை கொண்டு எழுதியது. இவர்கள் இப்படிதான் என்று பொதுவாக நம்பப்படும் சில விஷயங்கள் தற்போது எப்படி மாறி இருக்கின்றன? அல்லது தற்போதைய நிலை என்ன? என்று நான் பார்த்த அனுமானிப்பு மட்டுமே இது. பொதுப்படையானது அல்ல.

நன்றி.


 

7 comments:

rajamelaiyur said...

பணம் பணம் இதுவே பிரதானம். பாசமாவது மண்ணாங்கட்டியாவது.//

100% உண்மை

? said...

பெற்றோர் தெய்வம் மாதிரி என சொல்லிக் கொண்டே அவர்களை கை விடுவது இன்று ஆரம்பித்த வழக்கமல்லவே. தலைக்கு ஊற்றல் என்ற பெயரில் பெரிசுகளுக்கு ஐன்னி வரவைத்து போட்டு தள்ளுவது தமிழர்களில் முக்கிய கண்டுபிடிப்பு அல்லவா?

அது மட்டுமல்லாமல் பெற்றோரை காப்பாற்றுவதிலும் ஒரு ஆணாதிக்க கலாச்சரம் நம்நாட்டில். மகன் பெற்றோரை கவனிச்சுக்கனுமாம், ஆனால் பெண்கள் (சம்பாதித்தாலும்) அம்போ என்று பெற்றோரை பிச்சை எடுக்கவிட்டுவிட்டு புருசனை தொழுதுண்டு வாழவேணும் என்பதுதானே நம்ம 'கல்சர்'. முன்பு 10 குழந்தைகள் பெற்றால் ஒன்றாவது ஆணாக இருக்கும், இப்போதெல்லாம் பெறுவதே ஒன்று என்பதினால் இந்த புது சிக்கல் வருகிறது. ஆனால் அமெரிக்காவில் பல குடும்பங்களில் பெண்கள்தான் தங்கள் பெற்றோரை கவனமாக பராமரிப்பதை காண முடிகிறது. இது போன்ற காரணங்களால் பொருளாதார நிலமை மோசமாகும் தருணங்களில் மேற்கத்தியர் பெண் குழந்தைகளையே விரும்புகிறார் என்கின்றன ஆராய்ச்சிகள்

வருண் said...

முள்ளும் மலரும், பாசமலர் அண்ணன் தங்கை பாசம் எல்லாம் தனக்கென்று ஒரு குடும்பம்னு வந்து செட்டிலாகிற வரைதான். அதுக்கப்புறம் அண்ணன் தங்கையே பங்காளி சண்டைதான் போடும் நிலைதான் நம்ம ஊரில் வருது. பெற்றவர்களுக்கு வயதாக ஆக பெற்று வளர்த்தவர்களை பெரிய பாரமாக நினைக்கிறாங்க. இதுல என்ன காமெடினா இதையெல்லாம் கண்கூடாகப் பார்த்த பிறகும் நாம் தமிழர், நம் கலாச்சாரம் உயர்வானதுனு பொய் சொல்லச் சொல்லுறாங்க. :)

வயதாக ஆக மனிதனுக்கு மனிதாபிமானம் அதிகமாகனும், பிறரையும் தன்னிலையில் நிறுத்திப் பார்க்கணும், அனுபவம் மனிதனைப் பண்படுத்தணும்.. ஆனால் உண்மையில் நடப்பதென்ன? சுயநலம் தலைக்கேறி கிறுக்குப் பிடிச்சு அலைகிறார்கள். ஒருவேளை ஒரு சில ஆம்பளைங்கஆபூர்வமாக வய்தான அப்பா அம்மா மேலே பாசமாக இருந்ந்தாலும், இந்த வந்து சேர்ந்தவ இருக்காளே, வயதான காலத்தில்தான் மாமனார் மாமியாரை பழி வாங்கணும்னு காத்துக்கிட்டு இருக்கா. அதாவது தன் பிள்ளைகள் எதிர்காலம்தான் முக்கியம், வயதானதுக சாகட்டும், என்ன இப்போ? என்பதுபோல் நீலிக்கண்ணீர் வடித்து புருஷனை அவன் பெற்றோர்களைப் புறக்கணிக்க வைக்கிறது. இதில் அப்படி என்னதான் திருப்தி கிடைக்குமோ தெரியலை..

பனிமலர் said...

நேரம் கிடைத்தால் இந்த படத்தை பார்க்கவும் Moms' Night Out (2014) http://www.imdb.com/title/tt3014666/, நீங்கள் சொன்ன கருத்துக்களை ஆணி அடித்தாற்போல் சொல்லும் படம். இது மட்டும் அல்ல ஏராளமான மக்களை நேரில் பார்த்தும் இருக்கின்றேன். சின்ன வயதில் அறியா பருவ காதலுக்கு வாழ்க்கையை பலிகொடுத்த மகளையும் அவளின் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு கடைக்கு வந்து பொருமையாக வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுக்கும் அம்மாக்களையும் நிறைய பார்த்து இருக்கிறேன். வார்த்தைகளை நாம் எழுதும் அத்தனையையும் இந்த படம் தெளிவாக காட்டிவிடும். பகிர்விற்கு நன்றி.

Avargal Unmaigal said...

இந்தியர்களிடம் போலித்தனமும் மேலை நாட்டினரிடம் வெளிபடைத்தனமும் உள்ளன. மேலை நாட்டினர் சுயநலவாதிகளாக இருந்தாலும் தங்கள் குடும்பத்திற்கு என்று வரும் போது மாறி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். இதை நான் பல குடும்பங்களில் பார்த்து இருக்கிறேன். ஆனால் இந்தியாவில் குடும்ப நலம் என்று சொல்லிக் கொண்டு மிக சுயநலத்துடன் செயல்படுகின்றனர்.

சரியான தகவலை சொல்லும் பதிவு

Peppin said...

That's true!

Unknown said...

தங்கள் பதிவு இன்றைய தடைமுறை உண்மையாகும்!