Friday, July 10, 2015

தமிழகத்தின் அம்மா பாசம் !!

டிஸ்கி
பொதுவாக நான் அரசியல் குறித்து எழுதுவதில்லை. ஏன் என்றால்?, நாம ஏதாவது மனசுல பட்டதை எழுதபோயி, வீட்டுக்கு ஆட்டோ ஏதும் வந்துட்டா, எதுக்கு வம்பு என்று தான். ஆனாலும் நியூ யார்க் டைம்ஸ் இல் நான் படித்த ஒரு கட்டுரையும், இந்திய பயணத்தில் நான் சந்தித்த சில நபர்களும் குறித்து எப்படியாவது எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அதன் விளைவே இது.இங்கு குறிப்பிட்டு இருப்பவை எல்லாம் அரசியலை குறித்தோ அல்லது குறிப்பிட்ட அரசியல் வாதியை குறித்தோ என்னுடைய கருத்து அல்ல. பொதுவாக நான் பார்த்த படித்த, பார்த்த  விஷயங்கள் மட்டுமே.

ஒரு மாநிலத்தை சினிமா நடிகர் ஆட்சி செய்தால் என்ன நடக்கும் ? இதுவே ஜூலை 1 வெளியான நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தி. அந்த கட்டுரையின் ஆசிரியர் Rollo Romig.



மே 8ஆம் தேதி பல கரை வேட்டிகளும், அமைச்சர்களும் பெருமாள் கோவிலில் செய்த பிரார்த்தனைகள் "பெருமாளே, நியாயம் ஜெயிக்கட்டும், தமிழ்நாடு செழிப்பான பாதையில் சென்று கொண்டு இருந்தது, ஆனால் தீய சக்திகள் வளர்ச்சியை தடுத்து விட்டன, அம்மா  புடம் போட்ட தங்கமாக வெளியே வந்து பணிகளை தொடரட்டும். அவரின் வளர்ச்சியை தடுத்தவர்கள் தண்டிக்கப்படட்டும்" என்று ஒரே கத்தல்கள்.

மக்களின் விசுவாசங்கள், உடல் முழுதும் பச்சை குத்திய பெண்கள். மாவட்ட செக்ரெட்டரி கையில் "அம்மா வாழ்க" என்ற பச்சை. கையில் தீச்சட்டி ஏந்தியபடி , தீ மேல் நடக்கும். அங்கபிரதட்சனம், யாகம்  செய்யும் அமைச்சர்கள். தீர்ப்பு வெளிவரும் நாட்களில் 1008 லட்சத்தி எட்டு என்று தேங்காய் உடைக்கும் "அம்மா பக்தர்கள்".

யார் இந்த அம்மா? என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழக முதல்வர் அவர்கள் என்பது பற்றி
அவர்களின் முந்தய கால வாழ்க்கை, MGR அவர்களுடன் நட்பு, AIADMK வில் எப்படி அவர் படிப்படியாக முன்னேறினார். அவருக்கும் DMK கலைஞர் அவர்களுக்கும் இருந்த போட்டி...என்று முன்னுரையில் குறிப்பிட்டு...கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த சொத்து குவிப்பு வழக்கில் நடந்த கைது, அதன் பின்னணி என்ன என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

கவர்ச்சியான சினிமா நடிகையாக அறியப்பட்ட இவர் , முதலில் செய்தது தன்னை அழகில்லாதவராக, சாதாரண மனிதராக காட்டி கொள்ளுவது. நகைகளை தவிர்த்து, நானும் உங்களை போன்ற ஒருவர் என்று கட்டியது. எனக்கு என்று எந்த சொந்தமும் இல்லை. நீங்களே என் சொந்தம், உங்களில் ஒருத்தி நான். உங்கள் "அம்மா" என்று ஒரு இமேஜ் உருவாக்கியது. தன்னை தானே ஒரு ப்ராண்ட் ஆக உருவாக்கியது. எங்கும் எதிலும் அம்மா முகம். அம்மா 5 ரூபாய் மதிய உணவு, அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா படம் பதித்த கம்ப்யூட்டர்கள், தமிழகத்தில் எங்கு நோக்கினும்  அம்மா..அம்மா...அம்மா என்று ஒரு ப்ராண்ட் உருவாக்கியது.


ஆனால் இந்த கட்டுரையின் சாராம்சம் தமிழக முதல்வர் பற்றியோ, அவரின் அரசியலை பற்றியோ அல்ல, மாறாக அம்மாவின் கைதும் அதன் பின்னர் அவருக்காக என்று நடந்த அம்மாவின் பக்தர்களின் பிராத்தனைகளும், பஸ் தீவைக்க பட்டது, உடைக்கப்பட்டது, தற்கொலைகள்..என்ன என்ன என்பதை பற்றியது.

பெருங்குளத்தூர் ஜங்ஷன் இல் ஹை வேயில் மக்கள் படுத்து கொண்டு "பஸ்ஸை எங்கள் மேல் ஏத்துங்கள், அம்மா சிறையில் இருக்கும் போது நாங்கள் ஏன் வாழ வேண்டும்?"  என்று மக்கள் கத்தியதை, நூற்றுகணக்கான மக்கள் தற்கொலை செய்து கொண்டது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து குறிப்பிடுகிறார்.

இப்படி ஒரு பக்திக்கு என்ன காரணம்?. பக்கத்து மாநிலமான கேரளாவில், இப்படி ஆயிரகனக்கனோர்  ரோட்டில் படுத்து கொண்டு  பஸ்ஸை ஏத்துங்கள் என்று சொல்ல மாட்டார்கள். பின்னர் எப்படி இந்த பக்தி. தற்போதைய முதல்வர் அம்மா முந்தய நாள் கதாநாயகி என்பது தான் காரணமா என்று கேள்வி கேட்கிறார்.

தீர்ப்புக்கு மூன்று நாட்கள் முன்பு கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்று அனைத்திலும் கூட்டு பிரார்த்தனைகள் மதுரையில் 1008 தேங்காய் உடைப்பு, கோயம்பத்தூர்இல் 2008 பேர் பால்குடம் ஏந்தி யாத்திரை. திருவிளக்கு பூஜைகள்..எல்லாவற்றிலும் அம்மாவின் போட்டோ வைத்து , "கடவுளே அம்மாவை விடுதலை செய்து விடு" என்று பிரார்த்தனைகள்...


மெரினா கரை ஓரம் தான் சந்தித்த சில மீனவர்கள் பற்றியும் மீனவ குடும்பங்கள் பற்றியும் குறிப்பிடும் அவர் 
மீனவர்களின் அம்மா குறித்த வார்த்தைகள் பற்றி, "மீனவர்களை காப்பாற்றும் ஒரே மனிதர் அம்மா தான். அம்மா, சிறை சென்றதும் நாங்கள் அனாதைகள் ஆகி விட்டோம்". மீனவ பெண்களோ, "சுனாமி அடித்து ஓய்ந்த பிறகு ஓடோடி வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னவர் எங்கள் அம்மா தான். யார் தவறு செய்யவில்லை இப்பொழுது, ஏன் அம்மா மீது மட்டும் இப்படி வழக்குகள்" என்று அவர் செய்தது தவறே இல்லை என்று சத்தியம் செய்யும் பெண்கள். 


"இப்படி அம்மா பாசம், தீக்குளிப்பு, பிரார்த்தனைகள், எல்லாம் கட்சிகாரர்கள் பணம் கொடுத்து செய்தது , செய்ய சொன்னது, அதன் மூலம் அம்மாவின் நன்மதிப்பை பெற அவர்கள் செய்த முயற்சி" என்று பத்திரிக்கையாளர் ஞானி போன்றவர்களின் கருத்தையும் பதிவு செய்து இருக்கும் கட்டுரை ஆசிரியர். அம்மா தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று தனது இரண்டு விரல்களை வெட்டிய சேலம்  Ex-SP ரத்தினம்,  ரத்தத்தால் அம்மாவின் சிலையை உருவாக்கிய ஹுசைனி போன்றவர்களை பற்றியும் குறிப்பிடுகிறார். இவர்களை போன்றவர்களின் பாசமும் அம்மாவின் அன்பை பெறுவதற்காகவா? அல்லது உண்மையான பாசமா?  என்று கேள்வி எழுப்புகிறார்.

என் சொந்த அனுபவத்தில் நான் கண்டது. என் அம்மாவின் தைராய்டு அறுவை சிகிச்சைக்கு என்று ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தோம். அங்கு இருந்த ஒரு டாக்டர் கூட அம்மா மோதிரம் அணிந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அங்கு வேலை பார்த்த பல நர்சுகளும் அம்மா சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்டதாக சொன்னார்கள்.எனக்கு தெரிந்த சிலர்  தீசட்டி எடுத்தாகவும், அங்க பிரதட்சணம் செய்ததாகவும் சொன்னார்கள். இவர்கள் எந்த உள்நோக்கத்துடனும் இதனை செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. அல்லது அம்மாவின் நற்பெயரை எப்படியாவது பெற்று விட மாட்டோமா, அம்மாவின் கண் பார்வை தன்  மீது பட்டுவிடாதா என்று இவர்கள் செய்திருப்பார்களா? தெரியவில்லை..எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.  

நன்றி.


4 comments:

? said...

ஏட்டுக்கல்வியோ பணமோ ஒரு மனிதனுக்கு சிந்திக்கும் திறனை ஏற்படுத்திவிடாது என்பதன் நிகழ்கால உதாரணமே தமிழ்நாட்டு மக்கள்.

இன்னொரு விடயம், ஆயிரம் சொன்னாலும் தமிழருக்கு தங்கள் மதம், இனம், மொழி,கலாச்சாரம் இவைகளைப் பற்றிய மதிப்பீடும் தன்னம்பிக்கையும் மிகவும் கேவலமான அளவில் இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கற்பனையான சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள். எம்ஜியார், ரஜினி என இருந்தது இப்போது ஜெயலலிதாவில் மையம் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த அரைகுறை மதிப்பீட்டுடன் இனவெறியுடன் வேறு நடப்பார்கள் என்பது ஒரு நகைமுரண்! (மேற்சொன்னவை அனைத்தும் சேரநாட்டினர் தவிர பெரும்பாலான இந்தியர்களுக்கு கூடக்குறைய பொருந்துபவை)

Avargal Unmaigal said...

அரசியல் பதிவுகளை அடிக்கடி எழுது எனக்கு உங்களின் இந்த பதிவு அரசியல் பதிவாகத்தான் தெரிகிறது அதனால் உங்கள் வீட்டுக்கு ஆட்டோவிற்கு பதிலாக ஒரு ஹெலிகப்டர் அனுப்ப சொல்லி இருக்கிறேன்.

வருண் said...

இன்றைய தமிழ்நாடு இப்படித்தான் இருக்கு. போன பதிவில் சினிமால பெண்களை மட்டமாக சித்தரிக்கிறாங்கனு மன வருத்தத்தை தெரிவிச்சீங்க. இன்னைக்கு உண்மையில் பெண்கள் (அந்த நர்ஸ்) எ(இ)ப்படி இருக்காங்கனு காட்டுறீங்க. இதுதான் இன்றைய நிதர்சனம். You dont have to blame the the movie creators. Because the reality is worse than that! இவர்களுக்காக் வருத்தப்படணுமா? இல்லைனா கிடைக்கிற நேரத்தில் இன்னும் கொஞசம் பயோகெமிஸ்ட்ரிசால்லது மாலிக்குலர் பயாலஜி பேசிக்கை திடப்படுத்த ஏதாவது நல்ல புத்தகம் படிக்கலாமா? என்கிற கேள்விக்கு பதில். We can spend our time strengthening our scientific thoughts rather than worrying about these idiots, is my answer!

வேகநரி said...

உங்க கலக்கலான பதிவு.
சகோ நந்தவனத்தான் சொன்னது முற்றிலும் உண்மை.
//தமிழருக்கு தங்கள் மதம், இனம், மொழி,கலாச்சாரம் இவைகளைப் பற்றிய மதிப்பீடும் தன்னம்பிக்கையும் மிகவும் கேவலமான அளவில் இருக்கிறது.
ஆகவே அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கற்பனையான சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள்.//
அதனால் தான் ஸ்ரீலங்கா பிரபாகரனை இங்கே தலைவராக்கி, இப்போ கடவுளாக்கி கோவிலில் சிலை வைக்கிறார்கள்.