Thursday, October 22, 2015

சாமி ஆடிகளும், குறி சொல்பவர்களும், பேயுடன் பேசுபவர்களும்!

நேற்று சஸ்பென்ஸ் த்ரில்லெர் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி அவர்களின் நாவலின் தழுவலான Poirot  தொடர்  "Dumb Wintness" பார்க்க நேர்ந்தது. Poirot ஆக David Suchet நடித்து அசத்தி இருப்பார்.



இந்த நாவலில் ஒரு கேரக்டர் வரும், அது எப்பொழுதும் பேயுடன் பேசும் கேரக்டர். பேய் என்ன சொல்லுகிறது யாரை குறித்து சொல்லுகிறது , யார் கொலையாளி என்று தெரிவிக்கிறது என்று பேயை அழைத்து பேசும் கேரக்டர். 

அந்த கேரக்டர் பார்த்து அவர் பேசுவதை குறித்து எல்லாரும் பயந்து கொண்டு இருக்க, Poirot ஒன்று சொல்லுவார், "அவர் சொல்லுவது எல்லாம் கெஸ் வொர்க், உண்மை இல்லை, உங்களை நம்பவைக்க, திசை திருப்ப நடக்கும் நாடகம்" என்று. எனக்கு அதனை கேட்ட பின்னர், நான் சந்தித்த,படித்த   சில சாமி ஆடிகளும் குறி சொல்லுபவர்களும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

சிறு வயதில் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது சாமி ஆடிகள் பார்த்து இருக்கிறேன். அதுவும் பூசாரிகள் அனைவரும் சாமி ஆடிகளாக அருள் வந்தவர்களாக பார்த்து, என் அம்மாவிடம் "எப்படி மா சாமி வரும்?" என்று கேட்டது ஞாபகம் வருகிறது. அதுவும் ஒரு  சாமி கோவில் பூசாரி அருள் வந்து கையில் அருவாள் எல்லாம் வைத்து சாமி ஆடியதை பார்த்து பயந்து இரவெல்லாம்  தூங்காமல் இருந்தது ஞாபகம் இருக்கிறது. 

அதே போல, நிறைய அம்மன் கோவில்களில் எல்லாம் பெண்கள் சாமி ஆடுவதை பார்த்து இருக்கிறேன். சாமி வரும் போது எல்லாம் "டேய், அவனே இவனே என்று அனைவரையும் திட்டுவதையும் பார்த்து இருக்கிறேன்". முக்கியமாக கோவிலில் சாமி வரும் போதெல்லாம், "சாமிக்கு படைக்க வேண்டும், சாமி கும்பிட வேண்டும்" என்று பலரும் குறிப்பிடுவார்கள். இதே போன்ற ஒன்று "பொன்னியின் செல்வன்" கதையில் தேவராளன் சன்னதம் வந்து ஆடுவதையும், "அவர் வேண்டுவதை சூசகமாக கூறுவதையும்" படித்த பிறகு, ஒரு வேலை எல்லா சாமி ஆடிகளும் "தனக்கு வேண்டுவதை சூசகமாக, சாமி கேட்பதாக கேட்கிறார்களோ?, அல்லது மன அழுத்தத்தை இப்படி வெளி இடுகிறார்களோ" என்று எண்ணுவது உண்டு. இன்னும் சிலர், "சாமி ஆடினா, நம்மையும் மதிப்பார்கள்"  என்று வோலேன்டீர் ஆக சாமி ஆடுகிறார்களோ என்றெல்லாம் நான் நினைப்பது உண்டு.


உதாரணமாக, எங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு அடிக்கடி சாமி வரும், என்ன சாமி வேண்டும் என்று கேட்டால், "அவருக்கு வேண்டியதை, பெரிய லிஸ்ட் படிப்பார், அதுவும்  சாமி கேட்பது போல" கேட்பார். தன்னை சுற்றி எல்லாரும் கடவுளுக்கு பயந்தவர்கள், இவர்களை நன்கு உபயோகித்து கொள்ளலாம் என்ற சூட்சுமம் தெரிந்ததால் அவர் இப்படி ஆட்டி படைத்து கொண்டு இருந்தார். நான் ஒரு முறை, "அவருக்கு சாமி எல்லாம் வர வில்லை, எல்லாம் பொய்," என்று சொல்லி, எல்லாரும் நீ சாமிய குத்தம் சொல்லுற என்று என்னை திட்டியது நியாபகம் வருகிறது.

இன்னொரு விசயமும் எனக்கு தெரிந்து புதிராக இருந்து இருக்கிறது. அது, பெரிய பெரிய கோயில்களில் எல்லாம் சாமி கும்பிடும் மக்களுக்கு சாமி வந்து பார்த்ததில்லை. ஆனால் சிறிய அம்மன் கோயில்கள் அல்லது குலதெய்வ கோயில்களில் எல்லாம் சாமி கும்பிடும் மக்களுக்கு அதிகம் சாமி வந்து பார்த்து இருக்கிறேன். ஏன் இப்படி என்று வியந்தது உண்டு.

அதே போல, இன்னொரு அனுபவம் எனக்கு உண்டு, ஒரு முறை மதுரையில் இருந்து சென்னை பயணம், ரயிலில் என் குடும்பத்துடன் சென்று கொண்டு இருந்தோம். எங்களுடன் இன்னொரு நடுத்தர வயதுக்காரரும் ஏறினார், பெரிய பட்டை போட்டு, காவி வேட்டி கட்டி இருந்தார் அவர். அப்பொழுது, ஒரு நடுத்தர வயது அம்மாவும், அய்யாவும் ஏறினார்கள். அவர்களுடன் சாதாரணமாக பேச்சு கொடுத்த அவர், திடீரென்று சாமி வந்தவர் போல, "உங்கள்  வீட்டில் பெண் தெய்வம் இருக்கிறது, அதனை நீங்கள் சரியாக கும்பிடவில்லை, கோவமாக இருக்கிறது" என்று எல்லாம் சொல்லி விட்டு, "ஒரு சில பரிகாரங்கள் செய்ய வேண்டும், என்னை வந்து சந்தியுங்கள்" என்று போன் நம்பர் குடுத்தார். எல்லாரும் அவர் சொன்னதை பார்த்து பயந்து விட, எனக்கு நிறைய சாமி ஆடி அனுபவங்கள் இருந்ததால் எதையும் நம்பவில்லை.

இதனை குறித்த நியாபகம் கூட எனக்கு மறந்து விட்டது, ஆனால் என் அண்ணன்,  கிட்டதட்ட இதே போல ஒன்றை ஒரு பஸ் பயணத்தில் ஒருவர் தன்னிடம் கூறியதாக நேற்று தெரிவித்தார்.நான்  Poirot அவர்கள் கூறியது போல, இது "சரியான கெஸ் வொர்க் , எல்லாருடைய வீட்டிலும் ஏதேனும் பெண் தெய்வம் குல தெய்வமாக இருக்கும், அதனை நன்கு உபயோகித்து இப்படி செய்கிறார்கள்" என்றுகூற, என் அண்ணனோ "எப்படி அவர்களுக்கு என்னிடம் மட்டும் அப்படி சொல்ல தோன்றும், உண்மையில் அவருக்கு சாமி வருது" என்று சொல்ல, படித்தவர்களே இப்படி இருப்பது கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரிவில்லை. . 

குறி சொல்பவர்கள் கூறுவது என்பது பல நேரங்களில் கெஸ் வொர்க் தான், தங்களை தேடி வரும் மக்கள் பல நேரங்களில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக வருகிறார்கள் என்று நன்கு தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் வாயில் இருந்தே பல விசயங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கே சொல்கிறார்கள். நல்ல வாக்கு சாதுரியமும், ஸ்ட்ரீட் ஸ்மார்ட்நெஸ் ம் தெரிந்தவர்கள் இவர்கள். தற்போது சாமி பக்தி மிக மிக அதிகமாகிவிட்ட இந்த நிலையில், நிறைய மக்கள் இப்படி இன்ஸ்டன்ட் "குறி" சொல்பவர்களாக மாறி இருப்பதை கண்கூடாக காண நேர்ந்தது. 

அதுவும் நன்கு படித்த நல்ல வேலையில் இருப்பவர்களும் இப்படிகுறி கேட்க செல்வது நாம் நிறைய backward ஆக சென்று கொண்டு இருக்கிறோமா என்று எண்ண தோன்றுகிறது. 

டிஸ்கி 

நான் எவரின் கடவுள் நம்பிக்கையையோ, பாரம்பரியத்தையோ இங்கு குறிப்பிட்டு  சொல்லவில்லை. ஆனால், மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி ஆதாயம் தேடும் மக்களை குறித்த என் அனுபவங்களை குறித்தே இங்கு பதிந்து இருக்கிறேன். இது என் அனுபவம் மட்டுமே, பொதுப்படையானது அல்ல.



நன்றி.


4 comments:

Mahesh said...

இப்போ எல்லாம் கார்புரேட் சாமியார்கள்தான் எல்லாவற்றையும் dominate செய்ராங்க.
படித்தவர்கள்தான் அதுவும் அதிகமாஅ..

? said...

பல பிராடுகள் இப்படி உலாவது உண்மைதான். ஆனால் மனோவியாதியினால் பாதிக்கப்பட்டு ஏற்படும் சைகோஸிஸ் காரணமாக கடவுளுடனும் இன்னபிற சூப்பர் நேச்சுரல் ஐட்டங்களான டீமன், ஆவிகள், பேய், பிசாசு போன்றவைகளோடு தினப்படி தாம் சேட் செய்து கொண்டிருப்பதாக நம்பும் பல அப்பாவி ஆட்கள் உண்டு. இந்த வகை மனோவியாதிகளால் பாதிக்கபட்ட பல அறிவு ஜீவிகளும் உண்டு. சாக்ரடீஸ் இந்த மாதிரி லூஸாவது கடவுளின் கிஃப்ட் என்கிறார். இவரைப் போல பலர் சைக்கோஸிஸ் மூலம் ஐடியாக்களை பெற்று குவித்திருக்கிறார்கள். ரிமோட்,ரோபோ, லேசர், எலக்ட்ரிக் மோட்டார் இன்னம் பல கருவிகளை செய்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் டெஸ்லா செவ்வாய் கிரகத்து சீமாட்டிகளும் அயல்கிரகத்து ஆயாக்களும் தம்முடன் அறிவியல் விவாதங்களிலும் ஈடுபட்டதாக நம்பினாராம். அவ்வளவு ஏன் நம்மூர் கணிதமேதையான ராமானுஜம் நமது குலதெய்வமான நாமகிரித் தாயார் இரவு கனவில் வந்து தனக்கு கணித சூத்திரங்கள் அளிப்பதாக நம்பி பேனா நோட்டுப்புத்தகம் அருகில் இல்லாமல் உறங்க மாட்டராம், நடுஇரவில் எழுந்து சூத்திரமும் எழுதுவராம்.
தாங்களின் அண்ணனைப் போலவே இவை தேவசெய்திகள்தான் என நம்பும் ஆட்கள்தான் உலகில் பெரும்பான்மையினர். இல்லாவிட்டால் கடவுளின் வார்த்தைகளை கேட்டதாக சொன்ன தீர்க்கதரிசிகளை அடிப்படையாக கொண்ட முசுலிம், கிருத்துவம் போன்ற மதங்களில் ஆளிருக்காது!

Anbarasan said...

Un answared questions for many years.

Unknown said...

I want to know that ghost is true or fake