Thursday, August 13, 2015

வயதானாலும் அழகாக, நாகரீகமாக இருப்பது எப்படி?

வயது 30 தாண்டினாலே பெண்கள் பலருக்கு ஒரு கிலி பிடித்து கொள்ளும். ஐயோ, நமக்கு வயதாகிவிட்டதோ என்று!. ஆண்களும்  இந்த சக்கரத்தில் சுழல ஆரம்பிப்பார்கள்.  பெண்கள் பலர், நிறைய மேக்கப்க்கு, வயதை குறைக்கும் க்ரீம், எடையை குறைக்கும் டையட், அழகை கூட்ட டிரஸ்க்கு, நகை, புடவை என்று செலவழிப்பார்கள். ஆண்கள், முடி கொட்டுவதை தவிர்ப்பது எப்படி, நரையை தவிர்ப்பது எப்படி, உடம்பை பிட் ஆக வைத்திருப்பது எப்படி என்று ஆரம்பிப்பார்கள்.

இது ஒரு வகை மிட் லைப் கிரைசிஸ் என்றாலும்,  இன, மொழி, நாடு வேறுபாடின்றி இது நடக்கிறது. முக்கால் வாசி நேரம் இது ஒரு வகை இன்செக்யுரிட்டி. எங்கே நாம் அழகாக இல்லை எனில், நம் வாழ்க்கைதுணை நம்மை விட்டு விட்டு போய் விடுவாரோ? அல்லது, நமக்கு கல்யாணம்/பாய் ப்ரெண்ட்/கேர்ள் ப்ரெண்ட் கிடைக்காமல் போய் விடுமோ? என்ற இன்செக்யுரிட்டியில் நடப்பது.


நான் இங்கு குறிப்பிட விரும்புவது சாதாரண மனிதர்கள் பற்றி மட்டுமே. சினிமா நடிக நடிகையர் பற்றி அல்ல. ஏனெனில், இந்திய சினிமா நடிகைகளுக்கு 25 வயதானாலே ஆன்ட்டி பட்டம் கொடுத்து விடுவார்கள். ஆனால் ஆண் நடிகர்கள், 50-60 வயதானாலும் இளைஞர் ஆக, தன் பேத்தி வயதுள்ள பெண்களுடன் டூயட் பாட விடுவார்கள். இந்த நிலையினாலேயே ஆர்த்தி அகர்வால் போன்ற நடிகைகள் வயது 30 கடந்தவுடன் அழகை கூட்ட அல்லது மெயின்டெயின்  செய்ய என்று பல எக்ஸ்ட்ரீம் விசயங்களான லைபோ சக்சன், பிளாஸ்டிக் சர்ஜெரி என்று சென்று அழகை இழப்பதுடன், சில நேரங்களில் உயிரையும் விடுகிறார்கள்.

வயதாவது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வயதானாலும்  வயதுக்கேற்று அழகாக நாகரிகமாக இருப்பது எப்படி? என்பது குறித்து நான் வாசித்த சில டிப்ஸ்   இங்கே.




1. சிறு வயதினர் போல உடை அணியாதீர்கள். அது உங்களை இன்னும் வயதானவராகி காட்டும். உதாரணமாக,உங்கள் வயது  30-40 வயதுக்கு மேல் என்றால் , டீன் ஏஜ் பெண்கள் போல சிறு பாவாடை, சுடிதார் உடுத்த இயலாது. அதனால் நீங்கள் சுடிதார் உடுத்த கூடாது என்று இல்லை. ஆனால் சிறு வயதினர் போல டைட் ஆகவோ இல்லை குட்டையாகவோ அணிய வேண்டாம். நன்றாக உங்களுக்கு பொருந்த கூடிய ஆடைகளை அணியுங்கள். தற்போதைய , ட்ரெண்டு/பாஷன்  என்று பல நேரங்களில் நமக்கு பொருந்தாத உடைகளை வாங்கி பின்னர் அதனை மற்றவர்கள் அல்லது சிறு வயது பெண்கள் அணிகிறார்கள் என்று வாங்கி அணியும் போது பல பெண்களுக்கு அசிங்கமாக தெரிகிறது. ஓவர் சைஸ் அல்லது அண்டர் சைஸ் என்று எதனையும் உடுத்தாதீர்கள். அடுத்தவர்களுக்காக உடுத்தாதீர்கள். உங்களுக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அதனை உடுத்துங்கள். அதுவே உங்களுக்கு நாகரீகமான dignified தோற்றம் தரும்.

2.அதிக  நகை அல்லது கழுத்து நிறைய நகை எப்பொழுதும் அணியாதீர்கள். இதனை , பல பெண்கள் எதிர்க்க  கூடும். நிறைய பெண்கள் அதுவும் நடுத்தர பெண்கள் இதனை செய்வதை பார்த்து இருக்கிறேன். நகை அணியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஏதாவது விசேஷம் என்றால் அணிந்து கொள்ளுங்கள். ஆனால் எப்பொழுதும் கோயில் அம்மன் போல தலை முதல் கால் வரை நகை வேண்டாம்  நீங்கள் நிறைய நகை அணிய அணிய, அது உங்களை ஓல்ட் பாஷன் ஆக மட்டுமே காட்டும். சிம்பிள் ஆக இருப்பதுவே பல நேரங்களில் உங்களை  நாகரிகமாக காட்டும்.

3. அதிக மேக் அப் அணியாதீர்கள். இது நிறைய 30 வயதை கடந்த பெண்கள் செய்வதை பார்த்து இருக்கிறேன்.அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று ப்ளீசிங், பாசில் என்று செய்வது , பின்னர் தினமும் மேக் அப் அணிவதையும் பார்த்து இருக்கிறேன். இதனால் என்ன பிரச்னை ஆகும் என்றுஅவர்கள் அறிந்து கொள்வது இல்லை.. தினமும் மேக்கப் அணிவது, உங்கள் முகத்தில் போர்ஸ் எனப்படும் செல் இடைவெளிகளை மூடி விடுவதால், அதிக அளவு பருக்கள் வர வழிவகுக்கும். பின்னர், முகம் தொங்கிப்போன ஒரு நிலை ஏற்படுத்தும். பிறகு பேஸ் லிப்ட் செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லுவார்கள். அதற்கும் சென்று பணத்தை அழுவீர்கள். இது தேவையா?, தினமும் மேக்கப் வேண்டாம். ஏதாவது ஒரு நாள் தேவை என்றால் செய்து கொள்ளுங்கள். இல்லை தினமும் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தால், நல்ல மேக்கப் ரிமூவர் அல்லது கிளென்சர்  வாங்கி உபயோகியுங்கள். எப்பொழுதும் மேக்கப் உடன் தூங்க செல்லாதீர்கள்.

4. நரையை மறக்க என்று கிடைக்கும் கண்ட கண்ட கிரீம்கள் வாங்கி பயன்படுத்தாதீர்கள். பல நேரங்களில் அது அட்வேர்ஸ் எபக்ட் ஏற்படுத்தி விடும். முடி உதிர்வு அதிகரிக்கும். சில பெண்களுக்கு வழுக்கை நிலை கூட ஏற்படுத்தி விடும். கலரிங் என்று செல்ல வேண்டாம். ஏனெலில் ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்தாக வேண்டும் பின்னர் அது ஒரு முடிவிலி ஆகி விடும்.   கட்டாயம் வேண்டும் என்றால் மருதாணி அல்லது ஹென்னா செய்து கொள்ளுங்கள்.

5. அழகு என்பது முக அழகு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியமும் கூட. உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டியது மிக முக்கியம். அதற்காக, டையேட்டிங் செய்கிறேன் பேர்வழி என்று பல பட்டினி கிடப்பார்கள். அது தவறு. ஜன்க் உணவுகள் எனப்படும் சிப்ஸ், பிஸ்கட்,சோடா எல்லாம் அறவே ஒதுக்குங்கள். காய்கறி, பழங்கள் அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் உடல் பளபளப்பை அதிகரிக்கும். உடல் பயிற்சி மிக முக்கியம். தினமும் குறைந்தது 30 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உடல் தோற்றம் உங்கள் அழகை மேலும் மெருகூட்டும்.  நிறைய தண்ணீர் குடியுங்கள்.

 6. அழகாக இருப்பது என்பது வெளிப்புற தோற்றம் மட்டும் அல்ல. வெளிப்புற தோற்றம் சில வருடங்களில் மாறி விடும், அதனால். உள் அழகையும் கவனியுங்கள். அதிக ஸ்ட்ரெஸ் ஆபத்தானது. சாப்பாட்டில் அதிக உப்பு சேர்த்து கொள்ளாதீர்கள்.  உப்பு அதிகமான உணவுகள் ரத்த கொதிப்பை அதிகப்படுத்தும். ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றில் கொண்டு வந்து விடும். இவை எல்லாம் தவிர, வெளிப்புற தோற்றத்திற்கும் ஸ்ட்ரெஸ் எதிரி. நிறைய முக சுருக்கங்களை கொண்டு வந்து விடும். நீங்கள் ஸ்ட்ரெஸ் ஆக ஆக உங்கள் முகத்தில் முக சுருக்கங்கள் அதிகரிக்கும்.

7. நெகடிவ் ஆக இருக்கும் பேசும் மக்களிடம் இருந்து விலகியே இருங்கள். பாசிடிவ் ஆக இருக்கும் மக்களுடன் இருக்கும் போது ,பேசும் போது , உங்களை அறியாமல் மனதும் முகமும் சந்தோசப்படும். மன சந்தோசம் முகத்திலும் வெளிப்படும். அழகான புன்னகை உங்களை இன்னும் அழகாக காட்டும்.

8. அதிகமாக  டிவி பார்க்காதீர்கள்.  எப்பொழுதும் சோபாவில் உக்கார்ந்து கொண்டு டிவி பார்ப்பது எந்த வயதிலும் நல்லதல்ல என்றாலும். வயதாக ஆக இதனை குறைக்க வேண்டும். ஆஸ்திரேலியா ஆராய்ச்சி ஒன்று 25 வயதுக்கு மேல் நாம் டிவி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரமும் நம் வாழ்கையில் 22 நிமிடத்தை குறைகிறது என்று சொல்கிறது. இது மட்டும் அல்லாமல் பல நேரங்களில் டிவியில் வரும் சீரியல் களில் வரும் பல கதை மாந்தர்கள் தரும்/ சொல்லும் நெகடிவ் எண்ணங்கள் நம் மனதில் இருந்து நம்மை டிப்ரெசனில் கொண்டு வந்து விடும். இது தேவையா?

9. அதிகம் வெயிலில் அலையாதீர்கள். முடிந்த அளவு வெயிலில் செல்லுவதை தவிருங்கள். வெயில் முக சுருக்கங்களை அதிகரிக்கும், வயதான தோற்றம் தரும்.  நல்ல சன் ஸ்க்ரீன் அணிந்து கொள்ளுங்கள். அது உங்கள் முகத்தை பாதுகாக்கும். 

10. முடிவாக,   நான் அழகாக இல்லை, கலராக இல்லை, முடி இல்லை, உயரமாக இல்லை  ... என்று எப்பொழுதும், உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள்.உங்கள் தன்னம்பிக்கையை கை விடாதீர்கள். எனக்கு என்ன குறைவு என்று நினைத்து, தன்னம்பிக்கை கொண்டவராக நீங்கள் இருந்தாலே உங்களுக்கு என்று ஒரு தேஜஸ் கிடைக்கும் அதுவே உங்களை இன்னும் அழகாக காட்டும்.

நன்றி.

No comments: