பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிடிக்காத பாடம் என்றால் அது வரலாறு தான். அதுவும் ஆண்டுகள் பற்றி நினைவில் வைத்து கொள்வது போன்ற ஒரு சிரமம் எதுவும் இல்லை என்பது என் எண்ணம், அதனாலேயே எனக்கு வரலாறு இன்னும் பிடிக்காமல் போனது. பத்தாவது வரையில் வரலாறு பாடத்தில் பாஸ் செய்தால் போதும் என்ற நிலையில் அதிகம் வரலாறு பற்றி கண்டு கொள்ளவில்லை. ஆனால் பத்தாவதில் மதிப்பெண் என்னும் சனி சதி செய்ய வேறு வழியில்லாமல் எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் அவை நடந்தஆண்டுகளையும் பிளாஷ் கார்டு போன்ற ஒன்றில் எழுதி வைத்திருப்பேன். எனக்கும் மனப்பாடத்திற்க்கும் அதிக தொலைவு என்பதாலேயே நிறைய நேரங்களில் வரலாற்று கேள்விகளுக்கு தப்பாகவே விடை அளித்து இருக்கிறேன்.
இந்தியா வரலாறு, இந்தியா சுதந்திர போராட்டம் பற்றி படிப்பதே பிரம்ம பிரயத்தனமாக எனக்கு இருந்த நிலையில் உலக வரலாறா! நோ சான்ஸ் என்று இருந்தது. அதனாலேயே பிற நாடுகளின் வரலாறு பற்றிய கேள்விகளை சாய்ஸ் இல் விட கற்று கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக பத்தாவது முடித்து பர்ஸ்ட் குரூப் எடுத்தவுடன் 'இனிமேல் இல்லை இந்த வரலாறு தொல்லை அப்பாடா!" என்றிருந்தது எனக்கு. அதற்க்கு பிறகு வரலாறு பற்றி படிக்கவோ பேசவோ எனக்கு வாய்ப்பு வந்ததில்லை.
இந்தியாவை விட்டு வெளியில் வந்த பிறகு நிறைய பேர் என்னிடம் வந்து மகாத்மா காந்தி பற்றியும், இந்திரா பற்றியும், இந்தியா சுதந்திர போராட்டம் பற்றியும் பேசுவார்கள். அதுவும் என்னுடன் படித்த ஒரு பையன் காந்தி பற்றி அனைத்து புத்தகங்களையும் சேர்த்து வைத்து இருப்பார். எந்த நிகழ்வை பற்றி கேட்டாலும் பதில் சொல்வார். அடுத்த நாட்டுக்காரர் நம்ம நாட்டை பற்றி தெரிந்து கொண்ட அளவு கூட நமக்கு தெரியலையே! என்று எனக்கோ அவமானம் பிடுங்கி தின்ன ஆரம்பித்தது.
இன்னொரு எக்ஸ்ட்ரிம் ஆக சிலர் "இந்திரா காந்தி மகாத்மா காந்தியின் மகள் தானே" என்று கேட்பார்கள். இல்லை அவர் நேருவின் மகள் என்று சொல்லி பின்னர் நேரு குடும்ப பெயர், காந்தியான கதையையும் அவர்களுக்கு விளக்க வேண்டி இருக்கும். இதில் கஷ்டம் என்னவென்றால் இதுதான் கதை என்று எதோ ஒன்றை அவர்களிடம் உளற முடியாது. அடுத்த நாளே அதனை பற்றி யாரிடமாவது தெரிந்து கொண்டார்கள் என்றால் நம்மை அடுத்தவர்கள் முன் வைத்து மானத்தை வாங்கி விடுவார்கள். அதனாலேயே இந்தியா வரலாறு பற்றியும் காலனியாதிக்கம் பற்றியும் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
என்னுடன் படித்த தென் ஆப்ரிக்க தோழி ஒருவர் காந்தி பற்றி, மண்டேலா பற்றி நிறைய பேசுவார். காலனியாதிக்கம் பற்றியும் ஆப்ரிக்காவில் காலனியாதிக்கம் முடிந்து விடுதலை ஆன பல நாடுகள் இன்னும் உள்நாட்டு கலவரங்களால் வளர முடியாமல் படும் அவஸ்தை பற்றியும் நிறைய கூறுவார். காங்கோ, உகாண்டா, Sierra Leone, எத்தியோபியா, ருவாண்டா இன்னும் பல நாடுகள் பற்றியும் கூறுவார். எனக்கு ஆப்ரிகா கண்டத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றன என்பதே தெரியாது அவரோ, அந்தந்த நாடுகளின் பிரச்சனைகள் பற்றி கூறுவார். எனக்கோ எப்போது அவர் நம்மை விடுவார் போய் வேற வேலையை பார்க்கலாம் என்று இருக்கும். ஆனால் அவரோ இந்திய சுதந்திர போராட்டமும், தென் ஆப்ரிக்க விடுதலை போராட்டமும் ஏறத்தாழ ஒரே மாதிரி என்பதால் எனக்கு ஆர்வம் அதிகம் இருக்கும் என்பது போல பேசி கொண்டே இருப்பார்.
இந்த வரலாறு குறித்த பிரச்சனைகளில் இருந்து மீள கொஞ்சம் கொஞ்சமாக இந்திய வரலாறு மற்றும் உலக வரலாறு குறித்த புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்து விடைஅளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், ஆண்டுகளை கடம் செய்யாமல் வரலாற்றை படிக்க ஆரம்பித்தால் ஒரு கதை போல இருக்கிறது. சில நேரங்களில் சில வரலாற்று நிகழ்வுகளை புத்தகமாக, திரைப்படமாக பார்க்கும் போது இன்னும் அது குறித்த ஆர்வம் அதிகமாகிறது.
உதாரணமாக "Blood Diamond" என்னும் படம். எப்படி? எதற்கு? Sierra Leone நாட்டில் உள்நாட்டு கலவரங்களை பெரிய பெரிய வைர வியாபாரிகள் ஊக்குவிக்கிறார்கள் என்பதை அந்த படத்தில் காட்டி இருப்பார்கள். உள்நாட்டு கலவரங்களை தூண்டி அதில் சண்டையிடும் குழுக்களுடன் ஆயுத பேரம் பேசி அவர்களின் சொத்தான வைரங்களை மிக குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வெளியில் விற்கும் அவலத்தை அந்த படத்தில் காட்டி இருப்பார்கள். "இப்படி எல்லாமா நடக்கும்?" என்று நான் என் தென் ஆப்பரிக்க தோழியிடம் கேட்பதுண்டு. அதற்க்கு அவர் அதில் காட்டி இருப்பது ஒரு பத்து சதவீதம் தான். இதை விட கொடுமைகள் நடக்கும் என்று சொல்லி என் வயிற்றில் புளியை கரைத்தார் என்பது வேறு கதை
நைபால் அவர்கள் எழுதிய "A Bend in the River" புத்தகம் காங்கோ நாட்டின் காலனியாதிக்கத்தின் பின்விளைவுகளை, அதன் தலைவரின் சுயநல போக்கை நன்கு எடுத்துக்காட்டும். அதே போல நான் சமீபத்தில் பார்த்த " The last king of Scotland" படம் இடி அமினின் உகண்டா நாட்டை பற்றிய கிலியை உண்டாக்கியது.
வரலாறு பற்றி படிக்கும் போது கதை போல இருந்தாலும் அதில் இருக்கும் உண்மை மனதை உலுக்குகிறது. பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், நோர்த் கொரியா, இலங்கை, பல ஆப்ரிக்க நாடுகள் ....இன்னும் சொல்லி கொண்டே போகலாம். எத்தனை நாடுகள்? எல்லா வற்றிலும் உள்நாட்டு கலவரங்கள் அதனை ஊக்குவிக்கும் தலைவர்கள்..பதவி வெறி, பணம், நாடு பிடிக்கும் தந்திரம்...என்ன வெல்லாம் ஆட்டி படைக்கிறது இவர்களை ?. இப்படி வரலாற்றை படிக்கும் போது சில நேரங்களில் நாம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறோம் என்று எண்ண தோன்றினாலும் உலகத்தில் சாந்தி நிலவ வேண்டும் என்று கடவுளிடம் மனமார வேண்ட தோன்றுகிறது..வேறென்ன செய்ய முடியும் நம்மால் :(( வேண்டுவதை தவிர?
டிஸ்கி
இது ஒரு மீள் பதிவு. 2010 இல் எழுதியது. நீண்ட நாட்களுக்கு பின் படித்த போது மீண்டும் பகிர வேண்டும் என்று தோன்றியதால் இங்கே பகிர்கிறேன்.
நன்றி.
1 comment:
//அடுத்த நாட்டுக்காரர் நம்ம நாட்டை பற்றி தெரிந்து கொண்ட அளவு கூட நமக்கு தெரியலையே! என்று எனக்கோ அவமானம் பிடுங்கி தின்ன ஆரம்பித்தது.// - மிகவும் உண்மை.
ஆனால், எனக்கு எப்போதும் பிடித்த பாடம் வரலாறு தான்.
Post a Comment