Wednesday, April 21, 2010

"தண்ணியும்" நானும்

சின்ன வயசிலிருந்து குடிகாரர்கள் என்றாலே ஒரு பயம் எனக்கு. நான் பார்த்தவரை குடிகாரர்கள் எல்லாம் தெருக்களில் அரைகுறை ஆடையுடன் யாரையோ கெட்ட வார்த்தைகளில் திட்டி கொண்டிருப்பார்கள். என்னை பயமுறுத்த என்னுடைய அம்மா "குடிகாரன்கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்" என்று அடிக்கடி சொல்வார்கள். அதனாலேயே பயந்து இருந்தேன்.

அந்த பயம் நான் பெரிய பெண் ஆனதும் கூட தொடர்ந்தது என்று தான் கூற வேண்டும். ஒயின் ஷாப் என்ற போர்டு பார்த்தாலே அந்த இடத்தை விட்டு ஒரு பத்து அடி தள்ளி தான் நடப்பேன்.

டிவி, சினிமாக்களில் பார்த்தவரை எனக்கு தெரிந்து "தண்ணி அடிப்பவர்கள்" என்றால் ஒரு டேபிளில் பெரிய பாட்டில் இருக்கும், சோடா, தண்ணீர் இருக்கும் அப்புறம் snacks இருக்கும். யாரோ அதனை ஒரு கிளாசில் ஊற்றுவார்கள் அப்புறம் எல்லாரும் cheers சொல்லி குடிப்பார்கள். இதுவே எனக்கு தெரிந்த தண்ணி அடிப்பது.

நான் வெளிநாட்டுக்கு வந்த சில மாதங்களில் ஒரு நாள் என்னுடைய labmate ஒரு பெண்ணின் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. என்னுடன் படித்த அனைவரையும் அவர் ஒரு பார்ட்டிக்கு அழைத்திருந்தார். பார்ட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் அவர் என்னிடம் வந்து "Beer ?" என்று ஒரு பாட்டில் நீட்டினார். நான் "நோ தேங்க்ஸ்" என்று சொல்லி coke பாட்டில் ஒன்று எடுத்து கொண்டேன்.

பின்னர் அனைவரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் இருந்த ஒரு Mexican நண்பர் ஒருவர், ஒரு பாட்டில் எடுத்து அனைவரிடமும் காட்டிகொண்டிருந்தார். அது Tequila எனப்படும் Mexican ஸ்பிரிட். அதனை அவர் திறந்ததும் அனைவரும் அவர்களின் கிளாஸ் இல் ஊற்றி அவர்களின் கட்டை விரலுக்கு கீழே எலுமிச்சம் பழச்சாற்றை தடவி கொண்டனர். பிறகு ஒரு மிடறு குடித்ததும் கைவிரலை ஒரு நக்கு நக்கிக்கொண்டனர். இப்படி தான் Tequila குடுக்க வேண்டும் போல என்று நான் நினைத்து கொண்டேன்.

பிறகு ஒருநாள் ரஷ்யாவிலிருந்து ஒரு பேராசிரியர் எங்கள் ஆராய்ச்சி கூடத்திற்கு வந்திருந்தார். அவருக்கு மரியாதை செய்யவேண்டும் என்று என்னுடைய பாஸ் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஸ்பெஷல் ட்ரின்க் என்று சிறிய கிளாஸ் இல் ஊற்றி கொடுத்தனர். அது Vodka எனப்படும் ரஷ்யன் ஸ்பிரிட். அதில் அல்கஹோல் அதிகம் என்பதால் சிறிய கோப்பைகளில் குடிப்பதாக கூறினர். அதனுடன் Beluga caviar எனப்படும் மீன் முட்டைகளும் இருந்தன. அது ரஷ்யாவில் மிகவும் பிரசித்தம்.

எப்போதெல்லாம் பார்ட்டி நடக்கிறதோ அப்போதெல்லாம் என்னுடைய Labmates "தண்ணியை" taste ஆவது செய்து பார் என்று என்னை வற்புறுத்துவது உண்டு. அப்போதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விலகிக்கொள்வேன். என்னுடைய நெருங்கிய தென்னாப்பிரிக்க தோழி ஒருவர், "பார்க்கலாம் நீ எவ்வளவு நாள் தான் இப்படி இருக்கிறாய்" என்று கிண்டல் செய்வதுண்டு. நானும் "சரி பார்க்கலாம்" என்று சொல்வேன்.

ஒருமுறை கிறிஸ்துமஸ் விடுமுறைகளின் போது என்னுடைய தென்னாப்பரிக்க தோழி Weihnachtsmärkten எனப்படும் ஜெர்மனிய கிறிஸ்துமஸ் மார்க்கெட் ஒன்றுக்கு அழைத்து சென்றாள். அதுவரை நான் இப்படி ஒன்று பார்த்ததில்லை ஆகையால் மிகவும் ரசித்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கடை அருகே அழைத்து சென்று அங்கு சூடாக விற்கப்படும் Glühwein என்ற பானத்தை ஒரு கோப்பையில் வாங்கி என்னிடம் கொடுத்து குடிக்க சொன்னாள். ஆவி பறக்க கோப்பையில் இருந்த பானத்தை பார்த்ததும் நம்ம ஊரு சுக்குமல்லி காப்பி போன்று இருந்தது. அதனால் குடித்து விட்டேன். சிறிதளவு துவர்ப்பு சுவையுடன் இருந்தது அது. முழுதாக குடித்து முடிக்கும் வரை பேசாமல் இருந்த என் தோழி குடித்து முடித்தவுடன் நான் ஜெயித்து விட்டேன் என்று என்னிடம் கூறினாள். பிறகு தான் தெரிந்தது நான் குடித்தது கிறிஸ்துமஸ் நேரங்களில் குளிருக்கு சூடாக விற்கப்படும் ஒரு வகை ஸ்பிரிட் என்று.

யாருக்கு தெரியும் "தண்ணி" என்பது இப்படி கொதிக்க கொதிக்க காபி போல இருக்கும் என்று. ஆனாலும், இன்றும் என் வீட்டுக்காரர் இதனை சொல்லி என்னை கிண்டல் செய்வதுண்டு.

12 comments:

Chitra said...

///Glühwein////

.....//// Weihnachtsmärkten////


....ha,ha,ha,ha,ha..... wluchmskasiprtzl!!!

சேட்டைக்காரன் said...

தண்ணிக்கதை நல்லாயிருக்கு! நீங்க குறிப்பிட்ட அந்த மெக்சிகன், ஜெர்மன் சங்கதிங்க இன்னும் நம்மூரு டாஸ்மாக்குக்கு வர்லே! :-)))

padma said...

cheers

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்படி போடுங்க ஆஹா.. :)

பாவம் ஆவிபறக்க் இருகும்ன்னு தெரியவே தெரியாதே நீங்க என்ன செய்வீங்க..

அமைதி அப்பா said...

//சின்ன வயசிலிருந்து குடிகாரர்கள் என்றாலே ஒரு பயம் எனக்கு. நான் பார்த்தவரை குடிகாரர்கள் எல்லாம் தெருக்களில் அரைகுறை ஆடையுடன் யாரையோ கெட்ட வார்த்தைகளில் திட்டி கொண்டிருப்பார்கள்.//

இதைதான் அமைதி அம்மா-வும் அடிக்கடி சொல்வார்கள்.

இத்துடன் இது முடியவில்லை அமைதி விரும்பியை உயர்கல்வி பயில ஹைதராபாத் அனுப்ப வேண்டுமென்று நான் சொன்னவுடன்,அவனுக்கு குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிடுமோ என்றுதான் பயப்படுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரின் பயத்தை.


நல்ல சுவாரஸ்யமான பல தகவல்களை எழுதுகிறீர்கள் மேடம். தொடருங்கள்.

ஹுஸைனம்மா said...

இதுலயுமா ”ஆவி” பறக்க? அப்புறம் என்னாச்சு, சினிமால தெரியாம மது அருந்தும் கதாநாயகி மாதிரி பாட்டு எதுவும் பாடலையே? ;-)))

முகுந்த் அம்மா said...

நன்றி சித்ரா, நன்றி பத்மா

முகுந்த் அம்மா said...

@சேட்டைக்காரன்

//தண்ணிக்கதை நல்லாயிருக்கு! //

நன்றிங்க.

//நீங்க குறிப்பிட்ட அந்த மெக்சிகன், ஜெர்மன் சங்கதிங்க இன்னும் நம்மூரு டாஸ்மாக்குக்கு வர்லே!//

ஓ அப்படியா, கவலை படாதீங்க அண்ணாச்சி சீக்கிரமே உங்க ஆசை நிறைவேறிடும்.

முகுந்த் அம்மா said...

@முத்துலெட்சுமி
//அப்படி போடுங்க ஆஹா.. :)//

உங்கம்மா எல்லா தண்ணியும் அடிச்சிருக்காங்க டா அப்படின்னு என் பையன் கிட்ட என் வீட்டுகாரர் அடிக்கடி சொல்லுறாரு.

//பாவம் ஆவிபறக்க் இருகும்ன்னு தெரியவே தெரியாதே நீங்க என்ன செய்வீங்க..//

சரியா சொன்னீங்க. அந்த அனுபவத்துல இருந்து எதை குடிக்க குடுத்தாலும் பத்து தடவை கேள்வி கேட்டுட்டு தான் குடிப்பேன்.

முகுந்த் அம்மா said...

@அமைதி அப்பா
//இதைதான் அமைதி அம்மா-வும் அடிக்கடி சொல்வார்கள். //

என்னை போல நெறைய பெண்கள் மாதிரி தான் இருக்காங்க அய்யா.

//இத்துடன் இது முடியவில்லை அமைதி விரும்பியை உயர்கல்வி பயில ஹைதராபாத் அனுப்ப வேண்டுமென்று நான் சொன்னவுடன்,அவனுக்கு குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிடுமோ என்றுதான் பயப்படுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரின் பயத்தை. //

குடிக்க வேண்டும் என்றால் பையன் எங்கிருந்தாலும் குடிக்க முடியும் அதனால் இதனை அமைதி அம்மாவிடம் எடுத்து சொல்லுங்கள் அய்யா. பையனை ஹைதராபாத் அனுப்பி உயர்கல்வி படிக்க வையுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.

//நல்ல சுவாரஸ்யமான பல தகவல்களை எழுதுகிறீர்கள் மேடம். தொடருங்கள்//

தங்களின் ஊக்குவிப்புக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா.

முகுந்த் அம்மா said...

@ஹுஸைனம்மா

//இதுலயுமா ”ஆவி” பறக்க? //

ஆமாங்க, அதுவும் இது ரொம்ப பேமஸ் வேறயாம். என்னத்த சொல்ல.

//அப்புறம் என்னாச்சு, சினிமால தெரியாம மது அருந்தும் கதாநாயகி மாதிரி பாட்டு எதுவும் பாடலையே? //

ஹி ஹி ஹி, அப்படி எல்லாம் ஒன்னும் ஆடலைங்க. ஒழுங்கா வீட்டுக்கு போயிட்டேன்.
நன்றிங்க