சில நாட்களுக்கு முன் சிறுமுயற்சி முத்துலெட்சுமி அவர்களின் மீள் பதிவான இழப்பின் வலிகள் படிக்க நேர்ந்தது. அது என்னுடைய வாழ்கையில் நான் சந்தித்த ஒரு சில பெண்களின் வாழ்க்கையை எனக்கு உடனே ஞாபகப்படுத்தியது. அதன் விளைவே இந்த பதிவு.
அவள் பெயர் சுதா. நான் இளநிலை இயற்பியல் மீனாக்ஷி கல்லூரியில் சேர்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது அவளும் எங்களுடன் நின்று கொண்டிருந்தாள். நல்ல உயரம், அழகு அவளுக்கு. ஆனால் கண்ணில் ஒரு சோகம் எப்போதும் இருந்தது. பிறகு எங்களை போலவே வரிசையில் நின்று கொண்டிருந்த இளநிலை இயற்பியலில் சேர்ந்த அனைவரும் தோழியர் ஆனோம்.
தோழியர் ஆன சில நாட்களில் எனக்கு தெரிந்து விட்டது. சுதாவுக்கு இயற்பியல் படிக்க விருப்பமில்லை. தான் improvement எழுத போவதாகவும் பின் டாக்டர் படிப்புக்கு முயற்சி செய்ய போவதாகவும் சொல்லி முயற்சி செய்து கொண்டு இருந்தாள். அவள் improvement இக்கு படித்து கொண்டு இருந்தாலும் first semester இல் அனைத்து பாடத்திலும் 90% மதிப்பெண் பெற்று இருந்தாள். அதிலும் கணித துணைபாடத்தில் அவள் நூற்றுக்கு நூறு. அதே அடுத்த semester லும் தொடர்ந்தது. எப்படி படித்தாள் என்பது எங்களுக்கு தெரியாது.
நானோ +2 வரை தமிழ் வழி கல்வி பயின்று விட்டு தடவி தடவி முதல் semester இல் 60% தான் எடுக்க முடிந்தது. ஆனால் அவளோ எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக செய்வாள். அவளை பார்த்து நான் பிரமித்திருக்கிறேன்.
பிறகு அவள் improvement இல் நல்ல மதிப்பெண் பெற்றாள். ஆனாலும் அவள் ஏனோ டாக்டர் படிப்பில் சேரவில்லை. ஏன் என்று எனக்கு தெரியாது. சுதாவுக்கு ஒரு அக்கா ஒரு தங்கை உண்டு. அவள் அக்கா கடைசி வருடம் டாக்டர் க்கு படித்து கொண்டிருந்தார்கள். அவள் தங்கை +2 படித்து கொண்டிருந்தாள்.
அவளின் மதிப்பெண்ணும் ஒவ்வொரு semester இலும் 90-95 % குறையாமல் இருந்தது. இரண்டாம் ஆண்டு வரை ஒவ்வொரு semester இலும் அவள் கணிதத்தில் 100/100 . பின் இரண்டாவது வருட முடிவில் தனக்கு கல்யாணம் ஆக போவதாக சொன்னாள். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அவள் அக்காவுக்கு திருமணம் ஆகவில்லை. என்ன என்று விசாரித்த போது தன்னுடைய தாய் மாமாவை கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொன்னாள்.
எங்கள் தோழியர் அனைவரும் அந்த கல்யாணத்திற்கு சென்றோம். பிறகு தான் தெரிந்தது. அவள் தாய் மாமா பெரிய பணக்காரர், அதனால் வயது வித்தியாசம் அதிகம் ஆனாலும், சொத்து வெளியில் சென்று விட கூடாது என்று இவளுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள் என்று.
அவள் தாய் மாமா அதிகம் படிக்காதவர் என்பதால் அவள் improvement எழுதி நல்ல மதிப்பெண் பெற்ற போதும் அவளை மருத்துவம் படிக்க வைக்கவில்லை. அதனாலே டாக்டர்க்கு படிக்கும் அவள் அக்காவால் தாய் மாமாவை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது என்றும் பின் எங்களுக்கு தெரிந்தது.
அவள் படிப்பை நிறுத்தி விடுவார்களோ என்று நாங்கள் பயந்தோம். ஆனால் சுதா வழக்கம் போல மூன்றாம் ஆண்டு படிக்க கல்லூரிக்கு வந்தாள். எங்களுக்கு சந்தோசமாக இருந்தது. அவளின் மதிப்பெண் கொஞ்சம் குறைய ஆரம்பித்தாலும் இன்னும் அவள் முதல் மார்க் தான். சில மாதங்கள் ஆனதும் அவள் எப்போதும் பெரிய டிரஸ் போட்டு கொண்டு வர ஆரம்பித்தாள், பெரிய நோட்புக் கொண்டு வயிற்றை மூடி கொண்டு வருவாள். ஐந்து ஆறு மாதம் வரை அவள் தான் உண்டாகி இருப்பதை எங்களிடம் சொல்லவில்லை. ஆனாலும் நாங்கள் அவளின் நடவடிக்கை பார்த்து சந்தேகப்பட்டோம்.
கடைசி semester பரிட்சையும் அவள் பிரசவமும் ஓரிரு மாத இடைவெளியில் வந்தது. எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் அவளை எப்படியாவது பரீட்சை எழுத வைத்து விடவேண்டும் என்று முயற்சித்தார்கள். ஏனென்றால் அவள் பெற்ற மதிப்பெண்ணுக்கு அவள் University first ஆக கட்டாயம் வந்துவிடுவாள் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் அவளால் பரீட்சை எழுத முடியவில்லை. கல்லூரிக்கும் வரவில்லை. அவள் வாழ்கை என்ன ஆனது என்று எனக்கு அப்புறம் தெரியாது.
அவள் நன்றாக படிக்கிறாள் என்று அவள் குடும்பத்தில் அனைவரும் அறிந்து இருந்தனர். பிறகு ஏன் அவளுக்கு மட்டும் திருமணம் செய்து வைத்தனர். கடைசி semester ஆவது அவளை எழுத அனுமதித்து ஒரு பட்டதாரி ஆகவாவது அவளை அனுமதித்து இருக்கலாம். ஆனாலும் அவளை ஏன் இப்படி படிக்க விடாமல் செய்து விட்டனர் என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. அவளுக்கு இருந்த திறமைக்கு கட்டாயம் பெரிய ஆளாக வந்து இருப்பாள். ஆனால் இன்று எங்கு எப்படி இருக்கிறாளோ தெரியவில்லை. இன்றும் என் மனதை தைக்கும் நிகழ்ச்சி இது.
26 comments:
என்ன கொடுமைங்க, இது? இவ்வளவு நல்லா படிச்சவங்க, வாயில்லா பூச்சியாகவா இருந்தாங்க?
ரொம்ப வருத்தமா இருக்கு முகுந்தம்மா. பல பெண்கள் வாழ்க்கை இப்படியாக ஆகிவிடுகிறது!
என்னுடன் படித்த ரேணுவின் நினைவு வந்துவிட்டது. ஐந்து பெண்பிள்ளைகள் என்பதால் ரிடையர்டு ஆவதற்குள் மணமுடித்துவிட வேண்டுமென்று +2 எழுதி ரிசல்ட் வருவதற்குள் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். :-( படிப்பைவிட கல்யாணம்தான் வாழ்க்கை என்று நினைக்கும் பெற்றோரின் ஆட்டிடியூட்தான்...மனச்சோர்வைத் தருகிறது!
அதன் சக்தி தெரியாமலே வீணடிக்கப்படும் நிஜங்கள்
நன்கு படிக்கும் ஒருவரை படிக்க விடாமல் தடுப்பதைப் போல் கொடுமை வேறு எதுவும் இல்லை. சாப்பிட உட்கார்ந்த ஒருவரை இலையில் சோறு போட்டு, பின்னர் துரத்துவது மாதிரி.
:( ம்.. இதைப்போன்று எத்தனை உண்மைகள் .
படிப்பின் அருமையும், முக்கியத்துவமும் தெரியாமல் இப்படி நிறைய பெண்களின் வாழ்வு வீணடிக்கப் படுகிறது
:-(((
என்ன செய்வது ? இப்படித்தான் நல்லதோர் வீணையை வீணடிப்பார்கள்.எனக்குமே இந்த ஆதங்கம் உண்டு
:((
வாசிக்கையிலே அந்த கடைசி செமஸ்டரை எழுத விட்டிருந்திருக்கலாமே என்கிற ஆதங்கம் எல்லோருக்குமே வருகிறது:(!
என்னோடு பத்தாவது படிச்ச பெண்கள் இரண்டு பேர், பொறியியலில் கூடப் படித்து (என்னை விட நல்லாவே படிச்சா), இதே போல் திருமணமான இன்னுமொரு பெண் எல்லார் நினைவும் வந்தது. ஓரிரு வாரங்கள் முன் என் கல்லூரித் தோழனோடு - குறிப்பா கணிதத்தில் நுண்ணறிவு கொண்ட நம்மூர்ப் பெண்கள் இப்படி அடுப்படியில் வாழ்வைக் கழிப்பது பத்திப் பேசிட்டிருந்தேன்...
"வயசுக்கு வந்த"ப்புறம் திருமணப் பேச்சு, கல்லூரி முடிக்கறதுக்குள்ள, "இன்னும் படிச்சா, அதுக்கு மேல படிச்ச மாப்பிளையை எங்க தேடுறது?"ன்னு - நீங்கள் சொன்னாப்பல - அக்கப்போர்கள். என் சித்தியே இது மாதிரி என்கிட்ட சொன்னாங்க...
கொசுவத்தி...
இன்னும் இது போல பலர் சில சால்ஜாப்புக்களுக்காக பலியாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.
இந்த சப்ஜெக்ட் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது. வாழ்க்கை என்றால் என்ன என்கிற தெளிவான கருத்து இல்லாதபோது, லட்சியங்களைப் பேசுவது பயனளிக்காது.
எனக்குத்தெரிந்த ஒரு ஆபீசர், தன் பெண்ணை டாக்டரேட் வரை படிக்க வைத்து புரொபசர் ஆக வழி வகுத்தார். ஆனால் கல்யாணம் செய்து வைக்கவில்லை. அந்தப்பெண்மணிக்கு இன்று 70 வயதாகிறது. பணம், சொத்து நிறைய இருக்கிறது. ஆதரவுக்கு யாருமில்லை.
பெண்களுக்கு எது சிறந்தது? படிப்பா, கல்யாணமா? விவாதத்திற்குரிய விஷயம்!
இப்படி படிக்கும் பெண் பேசத்தெரியாமல் போனது விந்தை!! மருத்துவம் படிக்கும் அக்காவும் எதிர்க்காதது ஆச்சர்யம்!! பாவமா இருக்கு; ஒருவேளை சில காலத்திற்குப் பின்னேனும் படிக்க முடிந்திருந்தால் மகிழ்ச்சி.
@சித்ரா
//என்ன கொடுமைங்க, இது? இவ்வளவு நல்லா படிச்சவங்க, வாயில்லா பூச்சியாகவா இருந்தாங்க?//
அவங்க வீட்டு சூழ்நிலை அப்படி. அவள் அப்பா அம்மாவின் விருப்பம் அதுவாக இருந்தது. அதைவிட அவள் பாட்டி (அவள் தாய்மாமா ) வீட்டில் அனைவரும் பெரிய பணக்காரர்கள். நெறைய ஏலக்காய் எஸ்டேட்ஸ் அவர்களிடம் இருந்தது. பணம் அனைத்தையும் செய்யும்.
@அனன்யா
உண்மை அனன்யா இதே போல எத்தனையோ பெண்கள் வாழ்கை திசை திருப்பபடுகிறது.
@சந்தனமுல்லை
//படிப்பைவிட கல்யாணம்தான் வாழ்க்கை என்று நினைக்கும் பெற்றோரின் ஆட்டிடியூட்தான்...மனச்சோர்வைத் தருகிறது!//
உண்மைங்க, என்னுடன் படித்த பெண்களுள் மூன்றில் ஒருத்தி பள்ளி படிப்பு முடிப்பதற்குள் பெற்றோரின் இந்த மனநிலையினால் திருமணம் செய்து வைக்கப்பட்டாள் என்பதே உண்மை.
@மங்குனி அமைச்சர்
//அதன் சக்தி தெரியாமலே வீணடிக்கப்படும் நிஜங்கள்//
இதனை பெற்றோர் உணர்வது எப்போது
தனக்காக அடுத்தவங்க முடிவு எடுக்கிற நாள் வரைக்கும் இது போன்ற துர்ச்சம்பவங்கள் நிகழ்ந்திட்டேதான் இருக்கும்... இது மாதிரி எல்லா இடத்திலும் பரவலாக இன்றும் நடந்திட்டுத்தான் இருக்கு...
//பெண்களுக்கு எது சிறந்தது? படிப்பா, கல்யாணமா? விவாதத்திற்குரிய விஷயம்!//
முதல்ல கையில சாய்ஸ்ச கையில கொடுத்திட்டு அதுக்குப்பிறகு - விவாதம் :-)
@ராகவன் நைஜீரியா
//நன்கு படிக்கும் ஒருவரை படிக்க விடாமல் தடுப்பதைப் போல் கொடுமை வேறு எதுவும் இல்லை. சாப்பிட உட்கார்ந்த ஒருவரை இலையில் சோறு போட்டு, பின்னர் துரத்துவது மாதிரி.//
உண்மை. பெண்களின் திறமையை உலகம் கண்டறியாத வரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்
@முத்துலெட்சுமி
//இதைப்போன்று எத்தனை உண்மைகள்//
கணக்கில் அடங்காதவை :((
@அம்பிகா
//படிப்பின் அருமையும், முக்கியத்துவமும் தெரியாமல் இப்படி நிறைய பெண்களின் வாழ்வு வீணடிக்கப் படுகிறது//
உண்மை
@பத்மா
//என்ன செய்வது ? இப்படித்தான் நல்லதோர் வீணையை வீணடிப்பார்கள்.எனக்குமே இந்த ஆதங்கம் உண்டு//
அந்த வீணை தரும் இசை அருமையானது என்பதை இவர்கள் எப்போது அறிவார்களோ?
@துபாய் ராஜா
நன்றிங்க
@ராமலெட்சுமி
//வாசிக்கையிலே அந்த கடைசி செமஸ்டரை எழுத விட்டிருந்திருக்கலாமே என்கிற ஆதங்கம் எல்லோருக்குமே வருகிறது//
எங்கள் ஆசிரியர்கள் எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
@கெக்கே பிக்குணி
நன்றிங்க
//"வயசுக்கு வந்த"ப்புறம் திருமணப் பேச்சு, கல்லூரி முடிக்கறதுக்குள்ள, "இன்னும் படிச்சா, அதுக்கு மேல படிச்ச மாப்பிளையை எங்க தேடுறது?"//
பெண்ணை பெற்றாலே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல இருக்கிறது என்று நெறைய பெற்றோர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். எப்போது நம்மை விட்டு இந்த பாரம் இறங்கும் என்று அனேக பெற்றோர் நினைப்பே இதற்க்கு காரணம் என்று நினைக்கிறன்.
@சேட்டைக்காரன்
//இன்னும் இது போல பலர் சில சால்ஜாப்புக்களுக்காக பலியாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.//
மறுக்கப்பட முடியாத உண்மை :((
@கந்தசாமி அய்யா
தாங்கள் குறிப்பிட்டது போல இருப்பவர்கள் நூற்றில் ஒருவர் இருவர் மட்டுமே அய்யா.
பெரும்பாலான பெற்றோர் தங்கள் பெண்களை பள்ளிபடிப்பு, கல்லூரி படிப்பு முடிவதற்குள் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
//பெண்களுக்கு எது சிறந்தது? படிப்பா, கல்யாணமா? விவாதத்திற்குரிய விஷயம்!//
பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. நன்றாக படிக்கும் பெண்ணை பட்டதாரி ஆகவாவது அவர்கள் பெற்றோர் அனுமதித்து இருக்கலாம் .
ஒரு பெண் படித்தால் அவள் குழந்தைகளுக்கு நன்றாக வழிகாட்டுவாள் என்பது என் எண்ணம்.
@ஹுஸைனம்மா
//இப்படி படிக்கும் பெண் பேசத்தெரியாமல் போனது விந்தை!! மருத்துவம் படிக்கும் அக்காவும் எதிர்க்காதது ஆச்சர்யம்//
அப்பா அம்மாவின் கண்டிப்பாய் மீறி அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவள் அக்கா, தான் தப்பித்தால் போதும் என்று நினைத்து இருக்கலாம்.
//ஒருவேளை சில காலத்திற்குப் பின்னேனும் படிக்க முடிந்திருந்தால் மகிழ்ச்சி//
படித்து முடித்தவுடன் அவள் தொடர்ப்பு எனக்கு இல்லாமல் போய் விட்டது. அவள் படித்து முடித்து இருந்தால் அது மிக்க மகிழ்ச்சி.
@தெகா
//தனக்காக அடுத்தவங்க முடிவு எடுக்கிற நாள் வரைக்கும் இது போன்ற துர்ச்சம்பவங்கள் நிகழ்ந்திட்டேதான் இருக்கும்//
உண்மைங்க, பெண்களுக்கு அந்த சுதந்திரம் மிகவும் கம்மி.
//இது மாதிரி எல்லா இடத்திலும் பரவலாக இன்றும் நடந்திட்டுத்தான் இருக்கு...//
வருத்தப்படவேண்டிய உண்மை.
//முதல்ல கையில சாய்ஸ்ச கையில கொடுத்திட்டு அதுக்குப்பிறகு - விவாதம் //
சரியாய் சொன்னிங்க. சாய்ஸ் கொடுக்கப்பட்டாதானே முடிவெடுக்க :((
please read the comments in my recent post
//நன்றாக படிக்கும் பெண்ணை பட்டதாரி ஆகவாவது அவர்கள் பெற்றோர் அனுமதித்து இருக்கலாம் .
ஒரு பெண் படித்தால் அவள் குழந்தைகளுக்கு நன்றாக வழிகாட்டுவாள் என்பது என் எண்ணம்.//
நிச்சயமாய். 22 வருடம் முன்னே என் உறவில் கிட்டத்தட்ட இதே போன்ற சூழலில் 12வது முடியவும் திருமணமாகி, அடுத்த வருடமே முதல் குழந்தையும் பிறந்த விட்ட பின்னும் பெண்ணை புரிந்துணர்வுடன் புகுந்த வீட்டில் எல்லோரும் மாரல் சப்போர்ட்டாக இருந்து எம்பிஏ வரை படிக்க வைத்தார்கள். தன் இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் வளர்த்து வழிகாட்டி வருகிறாள். ஆனால் அதற்கு சுற்றியிருப்பவர்களின் ஒத்துழைப்பும் அவசியமே.
பாவம் சுதா, நல்ல தோழியர்கள் அவளுக்குக் கிடைக்காமல் போனது அவளது துரதிர்ஷ்டம்.
Post a Comment