இது குழந்தைகளிடம் அதிகம் காணலாம். உதாரணமாக, நீங்கள் அவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்லுகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உடனே அவர்களுக்கு அப்பொழுது தான் தலை வலிக்கும், உடல் வலிக்கும், தூக்கம் வரும் எல்லாமே செய்யும். அதே அவர்களை இதனை முடித்தால் நீங்கள் விளையாடலாம் அல்லது டிவி பார்க்கலாம் என்று சொல்லி பாருங்கள். உடனே, வேலை நடக்கும். அப்பொழுது அவர்கள் முதலில் உடல் வலிக்கிறது, தலை வலிக்கிறது என்று பொய் சொன்னார்களா? யோசித்து வையுங்கள்.
இதே கேள்வியை உங்களிடமும் கேக்கிறேன். ஒரு நாள் ஆபிசில் இருந்து பயங்கர சோர்வாக வீட்டுக்கு வருகிறீர்கள். உங்களுக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது. அப்பொழுது உங்கள் நீண்ட கால நெருங்கிய நண்பர் போன் பேசுகிறார் அல்லது வீட்டுக்கு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம். உடனே, அவரிடம் கல கல வென்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். பழைய நினைவுகளை எல்லாம் அசை போடுகிறீர்கள். சிறிது நேரத்தில் உங்கள் சோர்வு மறைந்து விடுகிறது. அப்பொழுது முதலில் உங்களுக்கு இருந்த சோர்வு பொய்யா?
வேறு ஒரு சூழல் சொல்கிறேன். உங்களுக்கு பிடிக்காத மீட்டிங் ஆனால் நீங்கள் போயே ஆக வேண்டும். வேண்டா வெறுப்பாக பொய் உக்கார்ந்து இருக்கிறீர்கள். அப்பொழுது பார்த்து எங்கிருந்து தான் உங்களுக்கு கொட்டாவி வருமோ தெரியாது. தொடர்ந்து வந்து அனைவரும் உங்களை திரும்பி பார்க்கும் வரை தொடரும். தொடர்ந்து தலைவலியும் கொண்டு வந்து விடும். அதே நேரம் வெளியில் வந்து கொஞ்ச நேரம் நடந்தாலோ அல்லது இசை கேட்டாலோ அல்லது நண்பர்களுடன் பேசினாலோ கொட்டாவி, தலைவலி எல்லாம் போய் விடுகிறது. எப்படி?
மேலே சொன்ன உதாரணங்களில், ஒருவரின் மனநிலை அவரின் உடல்நிலையை பாதிக்கிறது. மருத்துவத்தில் நியூரோஇம்யுனாலாஜி என்று ஒரு துறை இருக்கிறது அதில் நரம்பு மண்டலம் நம் உடல் நிலையை, எதிர்ப்பு சக்தியை எப்படி பாதிக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக, உங்களின் மூட், தூக்கம் நடவடிக்கை பொறுத்து உங்களின் உடம்பில் இருக்கும் cytokine எனப்படும் செய்தி எடுத்து செல்லும் மேச்சென்ஜெர் மாலிகுல்கல் பாதிக்க படுகின்றன அல்லது தூண்டப்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இவை பொதுவாக தலையில் காயம் ஏற்படும் போது , வைரல் அல்லது பாக்டீரியல் தாக்குதலின் போது பாதிக்கப்படும் மேச்சென்ஜெர்கள் ஆகும் (1). இதே போன்ற cytokine மற்றும் chemokine போன்றவை நரம்பு மண்டலத்தில் செய்தி கடத்தும் மாலிகுல்கலை எப்படி பாதிக்கிறது என்று அறியப்பட்டு இருக்கிறது (2)
தொடர்ந்த மன அழுத்திற்கும் , அதிக வைரல் தொற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விலங்குகளில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விலங்குகளை, அதிக மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது glucocorticoid அளவு அதிகமாகி, streptococcal எனப்படும் தோல் தொற்று அதிகமாவது நிரூபிக்க பட்டு இருக்கிறது (3).
இவை என்ன தெரிவிகின்றன என்றால், உங்கள் குழந்தைகளிடம் வீட்டுபாடம் செய்ய சொல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் அலுப்புகள் அவர்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து அவர்களுக்கு தலை வலியை கொடுக்கலாம். அதனால் அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.
அதனால், எப்பொழுது பார்த்தாலும் படி, வீட்டுபாடம் செய், இல்லை அதனை செய் இதனை செய் என்று நீங்கள் நடத்தினீர்கள் அல்லது வேலை கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மன அழுத்தம் அதிகமாகி உடல் நிலை சரியில்லாமல் போக நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்பொழுது பார்த்தாலும் படி படி என்று அவர்களை படுத்தாமல், அவர்களுக்கு மன சந்தோசம் தரும் விசயங்களையும் செய்ய கொடுங்கள், நிறைய விளையாடவும் நேரம் கொடுங்கள். அப்பொழுது தான் அவர்கள் சந்தோசமாக நோய் தொற்று இன்றியும் இருப்பார்.
நன்றி.
References
1) http://grants.nih.gov/grants/guide/pa-files/pa-05-054.html
2) Kipnis J, Derecki NC, Yang C, Scrable H (October 2008). "Immunity and cognition: what do age-related dementia, HIV-dementia and 'chemo-brain' have in common?". Trends Immunol. 29 (10): 455–63
3) Kawli, Trupti; He, Fanglian; Tan, Man-Wah (2010-01-01).It takes nerves to fight infections: insights on neuro-immune interactions from C. elegans. Disease Models & Mechanisms 3 (11-12): 721–731.