Saturday, December 24, 2016

ரீவைண்ட் 2016

ஒரு வருடம் ஓடி விட்டது. எப்படி ஓடியது என்று கூட தெரியவில்லை. இந்த வருடத்தில் நடந்த என்னை பாதித்த சில நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் சுயசொறிதல் பதிவு இது.

வருட ஆரம்பத்தில் இனிமேல் முகநூல் உபயோகிப்பதில்லை என்ற தீர்மானம் எடுத்து அதனை வெற்றிகரமாக செயலாற்ற முடித்திருந்தது. அப்பப்ப்போ பதிவுகள் எழுதுவதை, சிலரின் பதிவுகளை படிப்பது தவிர, சுத்தமாக சோசியல் மீடியாவை உபயோகிப்பது விட்டாகிவிட்டது. ஒரு பெரிய அடிக்கசனில் இருந்து மீண்ட ஒரு உணர்வு. "கையில் கொஞ்சம் காசு இருந்தா அது தான் உனக்கு எஜமானன், கழுத்து வரைக்கும் காசு இருந்தா அதுவே உனக்கு எஜமானன்" என்ற ரஜினி பட பாடல் போல, " சோசியல் மீடியாவை, உங்கள் கண்ட்ரோலில் வைத்திருக்கும் வரை, நீங்கள் உங்கள் நேரத்தின் எஜமானன், அதுவே, சோசியல் மீடியா உங்களை கண்ட்ரோலில் வைத்திருந்தால் அது உங்கள் நேரத்தின் எஜமானன்" என்ற புது மொழி சொல்லலாம் என்று நினைக்கிறன். 

எப்பொழுதும் போனை பார்த்து கொண்டு, ஏதாவது லைக், கமெண்ட் வந்திருக்கிறதா, எதனை பேர் நம் ப்ளாகை வாசித்தார்கள் என்று செக் செய்து கொண்டிருந்த ஒரு மோசமான அடிக்கசனில் இருந்து முழுதும் வெளி வந்து விட்டேன். முகநூல் பக்கம் போய் மாதக்கணக்காகிறது. வாட்சாப் எல்லாம் எப்பொழுதாவது உபயோகிப்பது, அதுவும் குடும்ப விஷயம், அல்லது மிக மிக முக்கிய  விசயம்   என்றால் மட்டுமே உபயோகிப்பது, என்ற கொள்கை வைத்திருக்கிறேன். அதனால் சில நேரங்களில் நெருங்கிய தோழிகள் நண்பர்கள் கூட, "என்ன பேசவே மாட்டேங்கிற, ரொம்ப பிசியா",  என்று கேட்பதை, ஆமாம் என்று, ஒத்து கொண்டு, அமைதியாக வந்து விடுகிறேன். இப்போதெல்லாம், நிறைய பேசுவதில்லை, அடுத்தவர் பேசுவதை கேட்கிறேன். 

கிடைக்கும் நேரத்தில் வாசிக்கிறேன். அதிகம் வாசிக்க முடியவில்லை என்றாலும், ஒரு சில புத்தகங்கள் மனதுக்கு பிடித்திருந்தன. அதிலும் என்னை ரொம்ப பாதித்தது, "Naomi Wolf" அவர்களின்  "The Beauty Myth" புத்தகம்.


பெண்ணென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு மாயையை புகைப்படங்கள் காணொளிகள் மூலம் உருவாக்கி, அதுவே சாஸ்வதம் என்று நம்ப வைத்து, எப்படி பேஷன் மாற்று அழகு சாதன இண்டஸ்ட்ரி பெண்களை அடிமை படுத்தி இருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தார் போல சொல்லும் புத்தகம். 

தற்போதெல்லாம், அடுத்தவர்கள் சொல்லும் சொல், அல்லது செயல் தான் நம்மை, நிர்ணயிக்கும் கருவி ஆகி இருக்கிறது பலருக்கு. அதாவது, "நீ குண்டு," "அட்ட கரி மூஞ்சி","உன் மூக்கு சரியில்ல", "வாய பாரு", "முகமெல்லாம் பரு"  என்பது போன்ற புற அழகுகளை மெருகேற்ற தரும் டிப்ஸ் தவிர இப்போதெல்லாம், பெண்களின் ப்ரா சைஸ் இல் இருந்து அவர்கள், உடுத்தும் உள்ளாடைகள் வரை, இது தான் பெஸ்ட், இப்படி இருந்தா தான் பெஸ்ட் பாஷன், இல்லையினா வேஸ்ட். என்பது போன்றவை சிறு வயதில் இருந்தே மறைமுகமாக அல்லது நேரடியாக போதிக்க படுகின்றன. இதனை படிக்கும் போது, எப்படி மறைமுகமாக பல பல விஷயங்கள் நம் வாழ்வில் நுழைந்திருக்கின்றன என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் எல்லாம், அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து, இப்படி இருந்தால் தான் அழகு, என்று மறைமுகமாக/நேரடியாக போதித்து, ஒரு "அழகு" இண்டெக்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள். முடிந்தால் இந்த புத்தகம் கிடைத்தால் படித்தது விடுங்கள். 

அடுத்த புத்தகம், 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த  ஹவுசிங் மார்க்கெட் சரிவு குறித்து அதன் காரணிகள் குறித்த  "The Big Short" என்ற ஒரு நாவல். இதுவும் மனிதர்களின் பேராசைக்கு ஒரு உதாரணம். இது கடந்த டிசம்பர் படமாக வந்து சக்கை போடு போட்டது. அதன் ட்ரைலர் இங்கே.



எக்கனாமிக்ஸ் என்றால் என்ன?, சாதாரண மக்களிடம் கேட்டு பாருங்கள், ஒன்றும் தெரியாது. எனக்கு தெரிந்து இந்தியாவில் பல கலை கல்லூரிகளில் BA எகனாமிக்ஸ் டிகிரி உண்டு. அதில் படிக்கும் பலரிடம் கேட்டு பாருங்கள், எகனாமிக்ஸ் கோட்பாடுகளை. யாருக்கும் ஒன்றும் தெரியாது. ஆனால் இந்த எக்கனாமிக்ஸ் என்னென்ன விஷயங்களை கொண்டிருக்கிறது, எப்படி 500, 1000 ருபாய் செல்லாத அறிவிப்பு, டீ மானிட்டிசேஷன்,  எப்படி இந்தியாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கிருக்கிறது என்று படிக்கும் போது அறிந்து கொண்டால் புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும். பிராக்டிகல் ஆக இதனை சொல்லி தருவார்களா? என்று தெரியவில்லை. 
இது பெஸ்ட் அது பெஸ்ட் என்று சாதாரண மக்களுக்கு ஆசை காட்டி காட்டியே, பலர் தங்கள் பணப்பையை நிரப்பி கொள்கிறார்கள். இது எப்படி அமெரிக்கா பொருளாதாரத்தில் நிகழ்ந்தது என்று இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள். "Subprime மார்கேஜ்", "மார்கேஜ் பாண்ட்", FICO ஸ்கோர், கிரெடிட் ஸ்கோர் எல்லாம் பார்க்கும் போது, அமெரிக்காவிலேயே இப்படி ஒரு சரிவு ஏற்பட்டது, இந்தியாவில் என்ன நடக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

அடுத்தது, சினிமா. நான் இந்த வருடம் அதிகம் தமிழ் படங்கள் பார்க்கவில்லை. அவ்வப்போது ஒரு சில பார்த்ததுண்டு, சில பிற மொழி படங்கள் பார்த்ததுண்டு. அப்படி நான் பார்த்த ரசித்த ஒரு படம், "Toni Erdmaan" என்ற ஜெர்மன் படம். பொதுவாக ஜெர்மானியர்கள் குறித்த சில கிளிஷேக்கள் உண்டு. நகைசுவை உணர்வு இல்லாதவர்கள். எப்போதும் உர்ரென்று இருப்பார்கள். பெர்பெக்ஷன் மக்கள் என்று. ஆனால், திடீரென்று தனிமையாக்கப்பட்ட  ஒரு தந்தையாக, காரீயர் வுமன் ஆன தன் மகளை தேடி சென்று, அவர் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கொடுத்து இருக்கிறார்கள். வாழ்கை நிலை சொல்லும் படம். எனக்கு பிடித்திருந்தது. 



 
இந்த வருடம் நிகழ்த்த சில மரணங்கள், வாழ்க்கையின் நிலையாமையை உரக்க உணர்த்தி சென்றிருக்கின்றன. எவ்வளவு பணம், புகழ், அதிகாரம் என்று இருந்தாலும் என்ன தான் "தான்" என்று ஆட்டம் போட்டாலும், எல்லாம், ஒன்றுமில்லாமல் அடங்கி விடும். அதன் பின் ஒருவரும் உன்னை சீண்ட மாட்டார்கள். அவர் அவர் வாழ்க்கையை பார்த்து கொண்டு, புகழ், பணம் சேர்க்க சென்று விடுவார்கள். இது ஒரு நிலையில்லா வாழ்வு. என்று உணர்த்தி சென்று இருக்கிறது. 
"வாழ்வில் எத்தனை பணம் புகழ் வந்தாலும், தலைகனம் மட்டும் வரக்கூடாது" என்று  நான் உணர்ந்திருக்கிறேன். சில மறக்க முடியா பாடங்கள் இவை என்று நினைக்கிறன்.

புது ஆண்டில், எல்லாரும் எல்லாமும் பெற்று வளமுடன் வாழ, எல்லாம் வல்ல இறைவன்/இயற்க்கை அருளட்டும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

வாழ்க வளமுடன்.

நன்றி.

 




Friday, December 9, 2016

ஸ்டேட்டஸ் சிம்பல்!

ஒரு அனுபவமும் ஒரு செய்தியும் பார்க்க படிக்க நேர்ந்தது .

முதலில் ஒரு அனுபவம், பிளாக்  ஃப்ரைடே வியாபாரம் என்பது இங்கே காண ஜோராக நடக்கும். நம்ம ஊர் ஆடித்தள்ளுபடி போல இது. நிறைய கடைகளில் தள்ளுபடி கொடுப்பார்கள். எல்லா பொருட்களையும் வாங்கலாம். நான் ஊரில் இல்லாததால் எங்கும் ஷாப்பிங் செல்லவில்லை. அதனால், ஷாப்பிங் சென்ற என்னுடைய தோழி வந்து, "லூயிஸ் வுட்டன் பர்ஸ் ஒன்று, ரொம்ப சீப் ஆக சேல் போட்டு இருந்தான் ஓடி போய் அள்ளிட்டு வந்துட்டேன்" என்றாள். லூயிஸ் வுட்டன் என்பது மிக மிக அதிக விலை விற்கும் பர்ஸ். சின்ன கையடக்க பர்ஸ் கூட குறைந்தது 500$ இருக்கும். கைப்பை எல்லாம் குறைந்தது 1000-2000$ இருக்கும். என்ன தான் சேல் என்று அவர்கள் போட்டாலும் 300$க்கு குறைவாக அவர்கள் சேல் போட மாட்டார்கள்.  மற்ற பர்ஸ்களில் இல்லாத ஒன்றை அப்படி என்ன அந்த பர்சில் இருக்கிறதோ, தெரியவில்லை, ஆனால் அப்படிப்பட்ட பர்ஸ் வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்.

photo from www.andertoons.com

"சீனாவின் புதிய ஸ்டேட்டஸ் சிம்பல் இது!", என்ற பிபிசி செய்தி ஒன்று படிக்க நேர்ந்தது. அதாவது எப்படி மான்நேர்ஸ் உடன் இருப்பது, உக்காருவது, ஸ்பூன், போர்க் உபயோகிப்பது, வைன் கிளாஸ் பிடிப்பது, பேசுவது போன்ற விஷயங்களை சொல்லி கொடுக்க என்று கோர்ஸ் தற்போது சீனாவில் இருப்பதாக அந்த செய்தி தெரிவித்தது.  இதல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகி விட்டது.

90 களில் எல்லாம் மிடில் கிளாஸ் மக்களை பொறுத்தவரை, பைக் வாங்குவது என்பது ஒரு வகையான ஸ்டேட்டஸ் சிம்பல். அது வீடு வாங்குவது, நகை வாங்குவது என்பதை தாண்டி மூன்றாவதாக இருந்து வந்திருக்கிறது. "எனக்கு தெரிந்தே பைக் வாங்கி கொடு, எல்லார் கிட்டயும் பைக் இருக்கு என்னைய எவனும் மதிக்க மாட்டான்" என்று பெற்றோர் இடம் சண்டை போட்ட என் கிளாஸ் மெட் பசங்கள் உண்டு. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு எப்படியும் ஒரு பைக், ஸ்கூட்டர், அல்லது மொபெட் என்று ஏதாவது ஒன்று கட்டாயம் இருப்பது என்பது ஒரு வகை ஸ்டேட்டஸ் சிம்பல்.

 2000 களில் எல்லாம், காலேஜ் படிக்கும் பசங்கள் மத்தியில் பைக் என்பது, ஸ்போர்ட்ஸ் பைக் ஆக உருமாறி விட்டது. அதாவது, எத்தனை cc பைக் வைச்சிருக்கேன் பாரு என்று காட்டுவது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். ஆனால் மிடில் கிளாஸ் குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கார் பக்கம் திரும்ப ஆரம்பித்ததும் அந்த நேரம் தான். அதாவது 2000 தின் ஆரம்பத்தில் மாருதி என்று ஆரம்பித்த இந்த கார் கிரேஸ் பின்னர், மெதுவாக டாடா, ரெனால்ட், போர்ட், செவர்லெட், பியட், நிசான், டொயோட்டா, ஹோண்டா, போல்க்ஸ் வாகென் போன்ற மீடியம் வகை செடான் கார்கள் வாங்க ஆரம்பித்தனர். 

அதிலும் தற்போதெல்லாம் முகநூலில் எந்த வகை கார்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கிறது என்று படம் பிடித்து போடுகிறார்கள். இரண்டு மாதத்துக்கு முன், எங்கள் கும்பத்துடன் தற்போது டொயோட்டா இணைந்திருக்கிறது என்ற செய்தியுடன் என்னுடைய தோழி குறுந்செய்தி அனுப்பி இருந்தாள். அதே போல நேற்று என்னுடைய சொந்த கார பெண், எங்கள் குடுமபத்துடன் செவெர்லெட் இணைந்திருக்கிறது என்று செய்தி அனுப்பி இருக்கிறார்.  அதாவது, தற்போதெல்லாம், வீட்டுக்கு குறைந்தது, ஒரு காராவது வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது. அதிலும், தற்போதெல்லாம், உங்கள் காரின் விலை எவ்வளவு என்பது பொறுத்து உங்களின் ஸ்டேட்டஸ் உயரலாம் அல்லது குறையலாம்.

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், எப்போதும் இல்லாமல் ஒருநாள் போன் செய்து நலம் விசாரித்தார். எனக்கோ, என்னது அதிசயமா, இவர் போன் பண்ணுறார் என்ற கேள்வி. என்னவென்ற விசாரித்த போது, தான் BMW வாங்கி இருப்பதாகவும், அதுவும், ஹை எண்டு மாடல் வாங்கி இருப்பதாகவும், இங்கே அசெம்பிள் செய்யும் இடத்துக்கு சென்று வாங்கி வந்ததாகவும் கதை விட்டு கொண்டு இருந்தார். என்ன எதிர் பார்க்கிறார் என்று தெரியாமல், நல்ல வேலை செய்தீர்கள் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். சரி வாங்கிட்டிங்க என்ன செய்யணும் அதுக்கு, என்று கேட்க தோன்றியது.

இன்னும் ஒரு சில ஸ்டேட்டஸ் சிம்பல் மிடில் கிளாஸ் மக்கள் இருக்கிறார்கள். எப்போதும் பிராண்டட் பொருள்கள் மட்டுமே வாங்குவார்கள். ரால்ப் லாரன் ஷர்ட், நிக்கே ஷு, ரோலெஸ் வாட்ச், ரேபன் கண்ணாடி என்று எப்போதும் பிராண்டட் மட்டுமே. இவர்கள் உடுத்தும் உள்ளாடைகள் கூட பிராண்டட் ஆக மட்டுமே வாங்குவார்கள். இவர்கள் ஒரு பிராண்டட் பிரியர்கள்.  அதே போல அவர்கள் வாங்குவது என்று மட்டும் அல்லாமல் பிராண்டட் மட்டுமே தரமானது, மற்றவை எல்லாம் தரமில்லாதவை என்ற எண்ணம் கொண்டவர்கள்.

உண்மையை சொன்னால் இவர்கள் பிராண்டட் வாங்குவது என்பது "நான் மிடில் கிளாஸ் இல்லை, ஹை கிளாஸ்" என்று மற்றவர்களுக்கு தெரிவிக்கவே தவிர பிராண்டட் மேல் உள்ள நம்பிக்கையினால் அல்ல.

நன்றி

Friday, December 2, 2016

கலவை- ரசித்த, படித்த, பார்த்த, நொந்த நிகழ்வுகள்

நிறைய ரசித்த சின்ன சின்ன விஷயங்கள் நிறைய உண்டு, அவற்றை எல்லாம் தனித்தனி பதிவுகளாக எழுத முடியாது என்பதால், கலவையாக தொகுத்து வழங்கலாம் என்ற சிறு எண்ணம் வந்ததால் இது ஒரு கலவை பதிவு.

முதலில் சில  பாசிட்டிவ் விஷயங்கள்

மேற்கோள்  (quote)


“Think of it this way: There are two kinds of failure. The first comes from never trying out your ideas because you are afraid, or because you are waiting for the perfect time. This kind of failure you can never learn from, and such timidity will destroy you. The second kind comes from a bold and venturesome spirit. If you fail in this way, the hit that you take to your reputation is greatly outweighed by what you learn. Repeated failure will toughen your spirit and show you with absolute clarity how things must be done.” 
― Robert GreeneMastery


எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் ராபர்ட் கிறீன் அவர்களின் மேற்கோள் இது. தமிழாக்கம் செய்ய வேண்டும் என்றால், இதோ.

வாழ்க்கையில்இரண்டு வகையான தோல்விகள் உண்டு. முதல் தோல்வி பயம் காரணமாக ஒரு செயலை செய்யாமலே ,எங்கே செய்தால் தோல்வி வந்து விடுமோ,  என்று பயந்து நல்ல நேரம் பார்த்து காத்திருக்கும் மக்கள் சந்திக்கும் தோல்வி.

இரண்டாவது தோல்வி, துணிவுடன் ஒரு செயலை செய்து அந்த செயல் கொடுத்த தோல்வி. இந்த வகை தோல்வியில் நீங்கள் கற்றது அதிகம் இருக்கும் , அடுத்தடுத்த  முறை தவறு செய்து  தோல்வியில் முடிந்தாலும், திரும்ப முயற்சி செய்ய தெம்பு வரும்.

இதே "முயற்சி திருவினையாக்கும்" என்ற சொற்பதம்.

 இதனை தற்போது ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு தெரிந்தே பலர் நல்ல பிளான் செய்து வைத்திருந்தும், நேரம் காலம் சரியில்லை, இது சரி இல்லை அது சரியில்லை என்று சொல்லி சொல்லியே பல விஷயங்களை தள்ளி போட்டு கொண்டே இருப்பதை காண்கிறேன்.  என்னுடைய நெருங்கிய சொந்தத்தில் கூட இது நிறைய நடக்கிறது. எதற்கெடுத்தாலும் ஜாதகத்தை தூக்கி கொண்டு ஜோசியரிடம் சென்று, அல்லது தானே ஜோசியம் பார்த்து கொண்டு, "எனக்கு இன்னும் நல்ல நேரம் வர நாளாகும். அப்ப பாருங்க நான் எவ்வளவு பெரிய ஆளா வர்றேன்னு" என்று சொல்லி கொண்டு சிலர் திரிகிறார்கள். ஒரு விஷயத்தை தொடங்காமலே எங்கே தோற்று விடுவோமோ என்று பயந்து தள்ளி போடுதல், எல்லாமே இருந்தும் எங்கே செத்து போய் விடுவோமோ என்று பயந்து சாப்பிடாமல் இருக்கும் ஒருத்தனை போன்றது.

இதற்காக எந்த பிளானும்  செய்யாமல் விஷயங்கள் செய்வது என்று அர்த்தம் இல்லை. ஏனெனில் இன்னொரு  எஸ்ட்ரீம் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பிளான் செய்யாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்கிறவர்கள். இந்த வகை மக்கள் முதல் வகை மக்களுக்கு நேர் எதிர்.

சரி அடுத்த விஷயம்

கேட்டது

நிறைய பாடல்கள் கேட்பது பிடிக்கும் என்றாலும், எப்போதும் காலையில் ஆபீஸ் போவதற்குள் கேட்பது லங்காஸ்ரீ FM . UK வில் இருந்து ஒலிபரப்பாவதால் எங்கள் காலை நேரம் என்பது கூல் 7 பாடல்கள் என்ற நிகழ்ச்சி கேட்க சரியாக இருக்கும். 8கே ரேடியோ, தமிழ் குயில் இப்படி பல பல தமிழ் ரேடியோக்கள் வந்தாலும் எனக்கென்னவோ காலையில் எழுந்தவுடன் கேட்க இந்த ரேடியோ பிடித்திருக்கிறது. அதற்காக மற்றவை நல்லா இல்லை என்று சொல்லவில்லை. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மணித்தியாலத்தின் முதல் பாடல், மணித்தியாலத்தின் காதல் கீதம். என்று மிக சுவாரசியமாக நகர்த்தி கொண்டு போகிறார்கள். காலையில் நான் கேட்பது 1-2 மணி மட்டுமே, அந்த நேரமும் மிக சுவாரசியம் ஆக இருக்கிறது.


 படித்தது, பார்த்தது 


முகுந்த் பள்ளியில் ப்ராஜெக்ட் ஒன்றுக்காக கடலின் பல அடுக்குகள் பற்றி தேட படிக்க நேர்ந்தது. படிக்க படிக்க மிக மிக சுவாரசியமான அது, நம்முடைய பூமியின் அற்புதத்தை எண்ணி வியக்க வைத்தது.  சிறு அதனை குறித்த சிறு தொகுப்பு இங்கே.

கடல் மொத்தம் 4 அடுக்குகள் கொண்டது. 1. sunlight zone , 2. twilight zone , 3. midnight zone கடைசியாக 4. The Abyss கடைசி லேயர் என்பது சூரிய ஒளி சுத்தமும் இல்லாத ஒரு அடுக்கு. அங்கே வாழும் உயிரினங்கள் சூரிய ஒளி இல்லாமல் வாழ தகவமைத்து கொண்டிருக்கின்றன.
தானாக ஒளியை உண்டாக்கும் சில உயிரினங்கள் இருக்கின்றன. இன்னும் சில அங்கே இருக்கும் வெந்நீர் நீர் ஊற்றுக்கள் அல்லது கடலடியில் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை வைத்து உயிர்வாழ்கின்றன.

Abyss அடுக்கில் இருக்கும் விலங்குகள் குறித்த ஒரு வீடியோ காண நேர்ந்தது.



என்ன ஒரு அற்புதமான மாடல் இது. இது என்னை பொறுத்த வரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில், ஜுபிடர் /வியாழன் கிரகத்தின் நிலவான ஐரோப்பா வில், நீர் ஊற்றுக்கள் இருப்பதை படம் பிடித்து இருக்கிறது ஹபிப்ல் தொலைநோக்கி. அப்படி கடலடி நீர் ஊற்றுக்கள் இருப்பின், பூமியில் இருக்கும் கடலடி உயிரினங்கள் போல அங்கேயும் இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.



photo from https://www.nasa.gov/press-release/nasa-s-hubble-spots-possible-water-plumes-erupting-on-jupiters-moon-europa


நொந்தது

ஏற்கனவே நான் அமெரிக்க தேர்தல் குறித்து அதன் முடிவு குறித்த என்னுடைய பயத்தை எழுதி இருந்தேன், "God save us" என்று. நான் என்ன நினைத்து பயந்தேனோ அது நடக்க ஆரம்பித்து இருக்கிறது. ஏற்கனவே, வெள்ளை மக்கள் மற்ற மக்களை விட தங்கள் உசத்தி என்ற எண்ணம் பரவலாக உண்டு இங்கே. அது வெளியே தெரியாமல் இது வரை இருந்திருக்கிறது என்று தற்போது எண்ண  தோன்றுகிறது. டிரம்ப் அவர்களின் செலக்ஷன்க்கு பிறகு, "நான் வெள்ளை" நான் உசத்தி என்ற எண்ணத்தை மக்கள் அப்பட்டமாக வெளிக்கொணர ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்க்கு சமீபத்திய உதாரணம். ஒரு வெள்ளை அம்மா, தான் கறுப்பின பெண்ணால் அவமானப்படுத்த பட்டதாக ஒரு கடையில் நின்று பெரிய கூச்சல்  போட்டு, தேவையே இல்லாமல் " நான் டிரம்ப் க்கு ஓட்டு போட்டேன், அதனால் உனக்கு என்ன போச்சு" என்பது போல பல கீழ்த்தரமான வார்த்தைகள் பேசி சண்டை போடும் ஒரு வீடியோ காண நேர்ந்தது.


மண்ணின் மைந்தன் நான் என்ற கொள்கை எல்லாம் அமெரிக்காவை பொறுத்தவரை கிடையாது. ஏனெனில் அமெரிக்காவின் உண்மையான மண்ணின் மைந்தர் எல்லாம் "சீரோக்கீ, க்ரீக்  போன்ற பூர்வாங்க குடி மக்கள்" அவர்களை எல்லாம் கொன்று, நாடுகடத்தி எல்லா கஷ்டங்களையும் கொடுத்து வெளியேற்றிய பிறகு, இங்கே வந்து குடியேறிய ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்கள், தாங்கள் மண்ணின் மைந்தன் என்று சொந்தம் கொண்டாடுவது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

God save us


டிஸ்கி
இது நான் ரசித்த விஷயங்களை கோர்த்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிடவில்லை. யாரையும் , எதையும் சப்போர்ட் செய்யவில்லை.

நன்றி.

Saturday, November 19, 2016

அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே புரியும் சில விசயங்கள் !

முதல் விஷயம்,   நம் தங்க தலைவர், தான தலைவர், இந்தியாவின் லேட்டஸ்ட் துக்ளக் மோடி அவர்களின் சரித்திர புகழ் வாய்ந்த ஒரு செயல். " கருப்பு பண ஒழிப்பை பற்றி உக்கார்ந்து உக்கார்ந்து யோசித்து" முடிவாக கருப்பு பணத்தை ஒழிக்க இது தான் வழி என்று அவர் உருவாக்கிய சரித்திர புகழ் பெற்ற திட்டம் இது. வாழ்க மோடி ஜியின் புகழ் வளர்க அவரின் தொண்டு. (மைண்ட் வாய்ஸ் : நமக்கு எதுக்கு பா வம்பு, கொஞ்சம் புகழ்ந்து வைப்போம்)

என்னை போன்ற அறிவிலிகளுக்கு தற்போது என்ன பிரச்சனை என்றால், கடந்த  முறை இந்தியா வந்த போது அவசர  செலவுக்கு வேண்டும் என்று  எடுத்து வைத்திருந்த 500, 1000 நோட்டுக்களை என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறேன்.  இதே போல விசிட்டர் விசாவில் வந்த பலரும் இந்தியா சென்றதும் அவசர செலவுக்கு என்று பணம் வைத்து இருக்கின்றனர். இதனை போன்ற நோட்டுக்களை தற்போது என்ன செய்வது என்று என்னை போலவே பலரும் குழம்பி போய் இருக்கின்றனர். அதிலும் அடிக்கடி இந்தியா சென்று வரும் பலரும் 10 முதல் 50 ஆயிரம் வரை பணத்தை 500, 1000 நோட்டுக்களாக மாற்றி வைத்திருக்கின்றனர். அவர்களின் நிலைமையை நினைத்தால் என்னவாகும் என்று தெரியவில்லை. டிசம்பர் 30 க்குள் இந்தியா சென்றால் மட்டுமே பணத்தை மாற்ற முடியும் என்கிற பட்சத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. 

இந்த நிலையில், இங்கிருந்து யாரவது அங்கே செல்கிறார்கள் என்றால் அவர்களிடம் கொடுத்து மாற்ற சொல்லவேண்டிய நிலைமை பலருக்கும். அதுவும் நம்பிக்கை யானவர்களாக இருக்க வேண்டுமே என்ற பதட்டம். இந்த நிலையில் அங்கே இது போன்ற NRI களிடம் இருந்து பணம் மாற்றி கொடுக்க என்றே சிலர் ஏஜென்ட் வேலை பார்ப்பதாகவும், ஆனால் அப்படி பணம் மாற்றி கொடுக்க 10-20% கமிஷன் அடித்து கொள்ளுவதாகவும் கேள்வி பட்டேன். 

இதனை போன்ற கமிஷன் ஏஜெண்டுகளின் நன்மைக்காக இது போன்ற திட்டத்தை வகுத்த அறிவுச்செம்மல் மோடி வாழ்க.


அடுத்ததாக,  மனுஷ்ய புத்திரன் அவர்களின் "வேசிகளிடமும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகள்" என்ற கவிதை.  இதனை தொடர்ந்த  "ஒரு சொல் என்ன செய்யும்" என்ற விகடன் கட்டுரை என்னுடைய தோழி ஷேர் செய்து இருந்தாள். சிறு வயதில், தெருவில் பெண்களுக்கு இடையே சண்டை வந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் திட்டி கொள்ள உபயோகிக்கும் வார்த்தை இது. அதாவது, திட்டும் பெண், தன்னை சுத்தமானவள் என்று கருதி, திட்டப்படும் பெண்ணை நோக்கி வீசும் அம்பு இது. இதே நிலை, ஆண்களும் கையில் எடுப்பார்கள். ஒருவனை அவமானப்படுத்த, கோவப்படுத்த அவன் தாயை குறித்ததோ, மனைவியை குறித்தோ இது போன்ற தப்பான வார்த்தை சொன்னால் போதும். இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிகழ்வு, இந்தியா என்று மட்டும் அல்ல, உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், 2006 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை சொல்லலாம். உலகமே ஆர்வமாக பார்த்த அந்த போட்டியில், தன்னுடைய தாயை தரக்குறைவாக ஒருவன் கூறிவிட்டான் என்று அவனை தலையால் முட்டி மோதி, ரெட் கார்டு வாங்கி வெளியில் சென்ற Zidane ஐ சொல்லலாம். இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிகழ்வு. 





உலகின் தொன்மையான பெண்களை திட்டும் ஒரு வார்த்தையை வைத்து மோடி அவர்களின் செயலை புகழ்ந்த ஒரு அறிவி ஜீவியின் செயல் இது . இதனை புரிந்து கொள்ளவேண்டுமாயின் நீங்களும் அறிவு ஜீவியாக இருக்க வேண்டியது அவசியம்.

கடைசியாக, "அச்சம் என்பது மடமையடா" என்ற அறிவு ஜீவி காவியத்தை  சொல்லலாம்.  "படம்னா இது படம் யா, என்ன ஒரு லவ் பீலிங் தெரியுமா, அதெல்லாம் லவ் பண்ணவுங்களுக்கு தான் புரியும்" அமேஜிங்..என்று பல அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.  பல நேரங்களில் இவர்களின் தீர்க்க தரிசனத்தில்  இருந்து நான் தப்பித்து இருக்கிறேன், இருந்தாலும் இந்த படம்  ஒருவேளை VTV மாதிரி இருக்கும் போல என்று கொஞ்சம் நம்பி போய் விட்டேன். பிறகு தான் எனக்கு புரிந்தது, இந்த படத்தை பிடிக்க நானும் ஒரு அறிவு ஜீவி ஆக இருக்க வேண்டும் என்று.

எங்கயாவது "30 நாட்களில் அறிவு ஜீவி ஆவது" எப்படி என்று புக் யாராவது விக்கிறாங்களா சொல்லுங்கப்பா, நானும் படிச்சிட்டு அறிவு ஜீவி ஆகலாம்னு இருக்கேன்..

நன்றி.

டிஸ்கி 
இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே. 



Thursday, November 10, 2016

சைலன்ட் மெஜாரிட்டியும் , அமெரிக்க இந்தியர்களும்!!

இன்னும் மீள வில்லை!, அமெரிக்க தேர்தல் கொடுத்த தாக்கங்களில் இருந்து!. ஒரு பெண்மணி ப்ரெசிடெண்ட் ஆக வரவேண்டும் என்று நான் போட்ட முதல் ஓட்டும், பெண்களை அவமதிப்பாக நடத்துபவர் வரக்கூடாதென்ற என்னுடைய எண்ணங்களும் தவிடு பொடியாகிவிட்டிருந்தன.

ஏனெனில், எல்லா புள்ளியியலும், அனலிடிக்ஸ்ம், கணிப்புகளும் அடித்து நொறுக்க பட்டிருக்கின்றன. என்ன நடந்தது ஏது நடந்தது என்று இன்னும் கணிக்க இயலவில்லை.  ஆனால் என்னவோ ஒன்று நிகழ்ந்து இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். ஒவ்வொரு முறையும் கணிப்பு சரியாக இருக்கும் என்று ஜனநாயக கட்சி நம்பி இருந்தது. அதுவும், ஒபாமாவின் அலைக்கு பிறகு, டேட்டா அனாலிசிஸ் இல் நிறைய காசை ஹிலாரி அவர்கள் செலவழித்தார். நிறைய சர்வே, மக்களின் நாடித்துடிப்பு என்ன என்றெல்லாம் நிறைய டேட்டா சேகரிக்க பட்டது.

ஆனால், இப்படி சர்வே எடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் என்பது நிறைய சர்வே எடுப்பவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. அதே போல, இப்படி அவர்கள் எடுத்த சர்வேயும், நிறைய அர்பன்/நகர்ப்புற மக்களிடம் மட்டுமே இருந்திருக்கிறது. நிறைய அமெரிக்க கிராம மக்களிடம் எப்படி வாழ்க்கை தரம் இருக்கிறது என்று கேட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால், ப்ளூ காலர் வேலை எனப்படும் கூலி வேலை செய்யும் அன்றாடம் காட்சிகளும் அமெரிக்காவில் உண்டு, அவர்களின் வருட சம்பளம் "25000$" கும் குறைவு என்று ஏனோ நிறைய புள்ளியியல் சர்வே எடுக்கும் மக்கள் மறந்து விட்டு இருக்கின்றனர். இந்த மக்கள், தங்களின் "சைலன்ட் மெஜாரிட்டி ஐ" காட்டி விட்டு இருக்கிறார்கள். இது ஒரு பெரிய பிளவு. அமெரிக்காவில் முக்கால்வாசி பேர் நடுத்தர மக்கள்.   இது, அமெரிக்கா வரும்போதே H1B visa, வருட சம்பளம் குறைந்தது 50-70K என்று வரும் இந்திய சாப்ட்வேர் மக்களை காணும் சராசரி சம்பளம் வாங்கும் வெள்ளை அமெரிக்கன் கண்களுக்கு உறுத்தவே செய்யும். அதிலும் நம் மக்களுக்கு சொல்லவே வேண்டாம், வந்தவுடன் ஹோண்டா, டயோட்டா என்று ஜப்பான் கார்கள் வாங்கி, லேப்டாப்,....என்று பலதும் வாங்கி, தங்களின் "பலத்தை" காட்டுவார்கள்.  இது இந்தியர்கள் என்று மட்டும் இல்லை, இங்கே இம்மிகிரேண்ட் ஆக வந்த, வரும் பல நாட்டு மக்களுக்கும் பொருந்தும்.

டிரம்ப் அவர்களின் மிகப்பெரிய பலம் அவர், கஷ்டப்படும் சராசரி நடுத்தர அமெரிக்காவின் பிரதிநிதி தான், என்று பேசியது. இதனை கேட்ட "சைலன்ட்" மக்களுக்கோ, தங்களின் குரலையும் கேட்க, தங்களின் ஆதங்கத்தை உணர ஒருவர் இருக்கிறார், என்று நினைக்க வைத்து இருக்கிறது.  அங்கே டிரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார்.

photo from google images

இன்னொரு விஷயம், ஒரு "பெண்" ணை  எப்படி அவ்வளவு பெரிய பொறுப்பில் உக்கார வைப்பது என்ற எண்ணம். உதாரணமாக, நாங்கள் வசிக்கும் பகுதியில் நடந்த ஹாலோவீன் பார்ட்டியில், எங்களின் பக்கத்து வீட்டுக்கார வயதான வெள்ளை பாட்டி  சொன்ன ஒரு வார்த்தை.
"டிரம்ப் ஒரு ஆண்" அவர் கீழ்த்தரமாக பெண்களை பற்றி பேசியதாக வரும் வார்த்தைகள் எல்லாம், "மென்ஸ் டால்க்" அது சாதாரணம். இதுக்காக, அவரை வெறுப்போம் என்று தப்பு கணக்கு போடுறாங்க. "பெண்களால் நல்ல முடிவெடுக்க முடியாது, அமெரிக்காவின் எதிர்காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைக்க முடியாது".

இதனை கேட்ட நானோ, ஜியார்ஜியா ஒரு பைபிள் பெல்ட்  ஸ்டேட், அதனால் மக்கள் இப்படி பேசுறாங்க, மத்த ஊர்ல மக்கள் இப்படி பேச மாட்டாங்க என்று  நம்பினேன். ஆனால், நிறைய பெண்களே, பெண்களுக்கு ஓட்டு போடவில்லை என்று தெரிகிறது.

இது கூட ஒரு வகையில் ஒப்பு கொள்ள முடியும். ஆனால், எனக்கு ரொம்ப வெறுப்பை தந்தது, இங்கு வந்து குடியுரிமை வாங்கி செட்டில் ஆன பல அமெரிக்க இந்தியர்களும் , "டிரம்ப்" தான் பெஸ்ட் என்று என்னிடம் சொன்னது. அதாவது தானும் ஒரு டிபிகல் "அமெரிக்கன்" என்பது போல காட்டி கொள்ளுவது. "அவர் வந்தால் டாக்ஸ் குறையும்", பண புழக்கம் வரும். அதனால் "டிரம்ப்" க்கு ஓட்டு போடு என்று வந்து சொன்னது.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எப்படி இவர்கள், ஒரு 5-10 வருடத்துக்கு முன்பு குடியுரிமை வரும் முன், எப்படியாவது, க்ரீன் கார்டு வந்துவிடாதா?, வேலை நிரந்தரம் ஆகி விடாதா?, என்று இங்கிருப்பவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால், நீ ஒரு "ஏலியன்" என்று தவியாய் தவித்த மக்கள். தற்போது, குடியுரிமை வந்து விட்டதால், மற்றவர்களை பார்த்து, அவர்களுக்கும் ஒரு குடியுரிமை வேண்டும் அதற்க்கு நம்மால் ஆன முயற்சிகள் செய்ய வேண்டுமே, என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல். தானும் ஒரு "அமெரிக்கன்" என்று நடந்து கொள்ளுவது எவ்விதம் என்று தெரியவில்லை.

முடிவாக நான் கேட்ட ஒரு  விஷயம். ஆபீசில், தேர்தல் முடிவுகளை விவாதித்தபடி, லிப்ட் க்கு நின்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் தாய்லாந்து அல்லது பிலிப்பைன்ஸ் பெண் என்று நினைக்கிறன். ரொம்ப சோகமாக, "ப்ளீஸ் அதனை குறித்து பேசாதீர்கள், நானும் என் கணவரும் கனடா சென்று விட போகிறோம், ஏனெனில் அவர் ஒரு முஸ்லீம்" என்று கூறினார்.
இதனை நான் கேட்ட பிறகு, டிரம்ப் வெற்றி பெற போகிறார் என்ற செய்தி வந்து கொண்டிருந்த நேரத்தில், கனடா இம்மிகிரேஷன் தளம் நிறைய ஹிட் வந்ததால் டௌன் ஆகி விட்டது என்ற செய்தி படித்தது ஞாபகம் வந்தது.

முடிவாக "God Save us "

நன்றி.

டிஸ்கி

இது என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

Friday, October 21, 2016

அழகென்பது யாதெனில் ...

அழகென்பது எது?, எது பெண்களுக்கு அழகு? எப்போது பெண்கள் அழகாக இருப்பார்கள்? என்ற கேள்வி சில நேரங்களில் எனக்குள் எழுவதுண்டு. நிறைய நகை போட்டு, பட்டு புடவை கட்டினால் ஒரு பெண் அழகாக இருப்பாளா? நிறைய மேக்கப் போட்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஒரு பெண் அழகாக இருப்பாளா? நிறைய மேக்கப் இல்லாமல் அதிக படோடபம் இல்லாமல் சிம்பிள் ஆக இருந்தால் பெண் அழகாக இருப்பாளா?  ஏனென்றால், முகநூலில் தற்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பல பல போஸ்களில் ஷேர் செய்யப்படும் புகை படங்கள் பார்த்த பின்னர், இப்பொழுதெல்லாம் இயற்கையான அழகு என்ற ஒன்று உண்டா என்பது என் கேள்வியாகி விட்டு இருக்கிறது. பார்க்க பார்க்க சலிப்பும் ஏற்படுகின்றது.

இந்த நேரத்தில், புது பெண்ணான பிறகு தான் தன் கணவருடன், தழைய தழைய புடவை கட்டி, ரொம்ப சிம்பிள் ஆக பூ வைத்து, மஞ்சள் கயிறு மின்ன, எந்த மேக்கப்ம் இல்லாமல், எந்த போஸும் கொடுக்காமல், வெக்கப்பட்டு  நிற்கும், என்னுடைய தோழி ஒருவரின் பழைய புகை படம் பார்க்க நேர்ந்தது. என்ன ஒரு அழகு அந்த புகைப்படத்தில்!, எந்த வித பாசாங்கும் இல்லாமல், புகைப்படத்துக்கான எந்த போஸும் இல்லாமல், போலி சிரிப்பு இல்லாமல் அற்புதமான புகை படம் அது. ஒரு நேச்சுரல் புகைப்படம். 

இதனை பார்த்த பின்னர் எனக்குள் நேர்ந்த தேடலின் விளைவு இந்த பதிவு.

அழகு என்பது என்ன?-உலகத்தில் எது அழகு?

"Beauty is not a matter of cosmetics, money, race or social status, but more about being yourself"

என்ற ஒரு கருத்து காண நேர்ந்தது. இதனை சார்ந்த ஒரு செய்தியும் காண/வாசிக்க நேர்ந்தது, அது உலக மகளிர் பலரின் புகைப்படங்கள் அதனை எடுத்தவர் Michaela Norac என்பவர் . அதில் காணும் ஒவ்வொரு பெண்ணும் மிக இயல்பாக கொடுக்கும் போஸ் அழகு உதாரணத்துக்கு இங்கே சில 

                                                               photo from Mihaela Noroc

                                                               photo from Mihaela Noroc


அதிலும் மிக அதிகம் பேரால் கொண்டாடப்பட்ட "ஆப்கான் கேர்ள்" எனப்படும் Steve McCurry
அவர்கள் எடுத்த புகைப்படம் உலக பிரசித்தி பெற்றது. அதில் ஷர்பத் குலா என்ற அந்த பெண்ணின் கண்களில் தெரிவது சோகமா, ஆற்றாமையா என்று யாராலும் கூற முடியாது. இது இன்னொரு மோனாலிசா ஓவியம் என்று கூட போற்றப்பட்டது.


எல்லாவற்றிலும் காஸ்மெடிக்ஸ் ஆக்கிரமித்த, முக சாயம் பூசிய, வித வித உடை மாட்டிய பெண்களுக்கு மத்தியில் இது போன்ற பெண்களின் புகை படங்கள், இயல்பான புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கின்றன. 

இப்பெல்லாம் யாருங்க மேக்கப் போடாம டிரஸ் பண்ணிக்காம இருக்கா, நல்லா ப்ரெசென்ட்டபிள் ஆக இருக்கணும் இல்ல, என்று பல பெண்கள், அதுவும் இளவயது பெண்கள் கேட்கலாம்.  அது உண்மையா? அப்படி என்றால்  எல்லோரும் கொண்டாடிய ப்ரேமம் படத்தில் ரொம்ப இயல்பாக  எந்தவித மேக்கப் ம் இல்லாமல் நடித்து உள்ளத்தை கொள்ளை கொண்ட "மலர்" டீச்சர் ஆக நடித்த "சாய் பல்லவியை" ஏன் பலருக்கு பிடிக்கிறது. அதே பாத்திரத்தில் நடித்த "ஸ்ருதி ஹாசனை" பிடிக்கவில்லை.  ஏன், ஸ்ருதி ஹாசனை பல கேலி கிண்டல் செய்து மீம்கள்? உதாரணத்துக்கு கீழே சில.

இதெல்லாம் பார்த்த பிறகு, எனக்கு தோன்றியது. "அழகென்பது யாதெனில், எதனை அணியும் போது  நீங்கள் நீங்களாகவே உணர்கிறீர்களோ அதுவே உங்களுக்கு அழகு."



டிஸ்கி 

இது அழகு குறித்த என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறை கூறவில்லை. நன்றி.

Monday, October 17, 2016

"அம்மாவின்" உடல்நிலையும், ஆண்டிபையாட்டிக் எதிர்ப்பும்!

பல பல வதந்திகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது கட்டு கதைகள், எங்கும் எதிலும் அம்மாவை பற்றிய செய்திகள், இதில் உண்மை கால்பங்கு என்றால் கற்பனை 75%. இது ஒருபுறம் இருக்க இதனை சார்ந்த பிரச்சனைகள், இதனை மையப்படுத்தி அதனை தனக்கு சாதகமாக்க துடிக்கும் சிலர். அதனை தொடர்ந்த சர்ச்சைகள் என்று ஒருவரின் உடல் நலக்குறைவை வைத்து காமெடி ஆக்கி கதை கட்டி  சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் பல ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் தீனி போட்டன.



அதில் குறிப்பிடும் படியான ஒன்று மேலே.. உண்மையில் நடப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் கொடுக்கப்படும் மருத்துவ அறிக்கைகளில் இருந்து நான் கணித்தவற்றையம் தொற்று நோய் ஆராச்சியில் நான் அறிந்ததை வைத்தும் என்ன என்று என்னுடைய கணிப்பை இங்கு   எழுதி இருக்கிறேன் . இது உண்மையாக இல்லாமல் கூட இருப்பினும் அறிவியல் சார்ந்த விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.



2014 ஆம் ஆண்டு என்னுடைய பதிவு ஒன்றில் "ஆண்ட்டி பாக்டீரியல் சோப்புகளை உபயோகிப்பது நல்லதா இல்லையா?" ஆண்ட்டி பாக்டீரியல் எதிர்ப்பு குறித்து குறிப்பிட்டு இருந்தேன். அதில் ஆண்ட்டி பையாடிக் எதிர்ப்பு பாக்டீரியா வான MRSA  குறித்து குறிப்பிட்டு இருந்தேன்.

ஆண்டிபையாடிக் எதிர்ப்பு என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு.
நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் நோய் கிருமிகள் முக்கியமாக இரண்டு வகையாக பிரிக்கலாம். பாக்டீரியாக்கள், வைரஸ்கள். அதில் பாக்டீரியா தொற்றை தவிர்க்க என்று மருத்துவர்களால் பரிந்துரைக்க படும் மருந்துகள் ஆண்டிபையாட்டிக் மருந்துகள் எனப்படும். இவை பாக்டீரியாவிற்கு எதிராக நம் உடலில் இருக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக ஆன்டிஜென் ஐ தோற்றுவித்து நோய் தொற்றை தவிர்க்கும்.

இந்தியாவில் எதற்கெடுத்தாலும் தற்போது அன்டிபையாட்டிக் மருந்துகள் எழுதி தருகிறார்கள். அதனை தவிர நிறைய ஆண்ட்டிபையாட்டிக் சோப்புகளும் உபயோகிக்கிறார்கள். இதன் பின் விளைவு என்னவென்றால், நாம் பாக்டீரியாக்களை அழிக்க அழிக்க, அவை எப்படி உயிர் வாழ்வது என்று பல பல வகைகளில் தங்களை பரிணாம படி தகவமைத்து, தங்களின் DNA களில் மாற்றம் உண்டாக்கி அந்த ஆண்டிபையாட்டிக் மருந்துகள் மற்றும் சோப்பு களில் இருந்து காத்து கொள்ளுகின்றன.  இதனையே, ஆண்ட்டி பையாட்டிக் எதிர்ப்பு என்கிறோம்.

ஆண்ட்டி பையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் இடங்கள்.

எந்த இடங்களில் அதிகம் ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கையாள படுகின்றனவோ அந்த இடங்களில் ஆன்டி பையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். அதனாலேயே MRSA போன்றவை பெரிய மருத்துவ மனைகளுக்கு தலைவலி  கொடுக்கும் ஒன்றாக இருந்து வருகின்றன.

உதாரணமாக, அதிகம் கிளீன் செய்யப்படும் இடங்களான, ஆஸ்பத்திரிகள், ICU இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் இதனை போன்று பரிணாம வளர்ச்சி படி தகவமைத்து எந்த அன்டிபையாட்டிக் மருந்துகளாலும் அழிக்க படாமல் அல்லது பல ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கொடுத்து அழிக்க வேண்டிய நிலையில் இருக்கும்.


அம்மாவின் உடல் நிலையம், 2ஆம் மாடி காலியாதலும் 

"அம்மா" அப்பல்லோவில் சேர்க்கப்பட்டவுடன் அந்த மாடி முழுதும் காலியாக்க பட்டு விட்டன, யாரும் உள்ளே சேர்க்கப்படவில்லை என்பது பெரிய விஷயமாக பேசப்பட்டது.  இதற்க்கு முக்கியகாரணம், அங்கு ஏற்கனவே இருந்த நோயாளிகள் மூலம் எந்த இரண்டாம் நிலை தொற்று அம்மாவுக்கு பரவாமல் இருப்பதற்காகவும், அங்கே இருந்த மற்ற நோயாளிகள் மூலம் "அன்டிபையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள்" பரவாமல் இருப்பதற்காகவும் என்று மருத்துவ அறிவியல் முறையில் விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், அம்மாவுக்கு இருக்கும் நுரையீரல் தொற்று (upper respiratory disease) நிமோனியாவாக இருக்கும் பட்சத்தில், இதனை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அவசியம். இது அவருக்கு, செகண்டரி இன்பிக்சன் பரவாமல் தடுக்கும்.

மற்றொரு விஷயம், அவரின் வயது சார்ந்தது. இதே நிலை ஒரு 30 வயது ஒருவருக்கு ஏற்படும் எனில் அதற்கு இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை இல்லை. இவரின் வயதோ 68,  எந்த தொற்றாயினும் ( பாக்டீரியா அல்லது வைரஸ்) 60 வயதுக்கு மேல் ஏற்படின் அதற்க்கு அதிக கவனிப்பு தேவை, பாதுகாப்பு தேவை.  அதிலும், அவருக்கு இருக்கும் சக்கரை வியாதி, மற்றும் ரத்த கொதிப்பு இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு அதிக டோஸ் உள்ள ஆன்டிபயோட்டிக் கொடுக்க இயலாது. அப்படி கொடுத்தால் அது அவருக்கு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதுவும் அவருக்கு நிம்மோனியா போன்ற தொற்று ஏற்பட்டு இருப்பின், வெளி ஆட்களை உள்ளே சேர்க்காமல் இருப்பது, உடலில் எதிர்ப்பு  சக்தி ஏற்படும் வரை பாதுகாப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும்.  உடலின் எதிர்ப்பு சக்தி அளவு, ரத்த வெள்ளை அணுக்கள் அளவு எல்லாம் சரி பார்த்த பின்னர், மற்ற யாரையும் உள்ளே அனுமதிக்கலாம்.

இது இவருக்கு என்று இல்லை,வேறு  யாராக இருப்பினும், 60 வயதை தாண்டிய ஒரு பெரியவராக இருப்பின், அவருக்கு நுரையீரல் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பின், இதே போன்ற ஒரு மருத்துவ நிலை தேவை படலாம். அது அவரவருக்கு இருக்கும் பண வசதியை பொறுத்தது.

அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பின், அவரின் உடல் நிலை முழுதும் குணமாகும் வரை மருத்துவமனையில் இருப்பது நல்லது.


டிஸ்கி:  இது "அம்மாவின்" உடல்நிலை குறித்து அறிவியல் ரீதியான கருத்து மட்டுமே, உண்மை நிலை அல்ல.


நன்றி.


Friday, October 14, 2016

சவுத் இந்தியனும் கிளிஷேக்களும், உலக மகா பணக்காரர்களும்!!

சவுத் இந்தியனும், கிளிஷேக்களும்
 
எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன, மதராஸ் மாகாணம் 4, தற்போது 5 மாநிலங்களாக பிரிந்து. ஆனாலும் இன்னும் பல வட இந்திய மக்களிடம் "மதராஸி" என்ற சொல் வழக்கமாக இருக்கிறது. அந்த சொல் மட்டும் அல்ல, மதராஸி என்றால் இப்படி தான் இருப்பார் போன்ற பல கிளிஷேகளும் இன்னும் இருக்கின்றன. 

உதாரணத்துக்கு, தீபாவளிக்கு அம்மாவுக்கு புடவை வாங்கலாம் என்று இங்கிருக்கும் ஒரு வட நாட்டு துணி கடைக்கு சென்று இருந்தேன். உள்ளே நுழையும் போதே அங்கிருந்த அம்மா, வாங்க!, "பட்டு புடவைகள் எல்லாம் கடைசி செக்சனில் இருக்கு" என்றார்.  உடனே நான், இல்லங்க நான் சாதாரண புடவை பார்க்கணும் என்றவுடன், அவரோ, "நீங்க மதராஸி மக்கள் எப்பொழுதுமே பட்டு புடவை தானே வாங்குவீங்க, அதனாலதான் சொன்னேன்" என்றார்.

எங்க இருந்து இது போல கிளிஷேக்கள் உருவாகுதுன்னு தெரியல..இன்னொரு விஷயம், படேல் ஒருவரின் வீட்டுக்கு சாப்பிட போய் இருந்தோம், அவர், சாப்பிடும் போதே பெரிய தயிர் டப்பா எடுத்துட்டு வந்து வச்சார். அது டின்னெர் என்பதால் நாங்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். ஆனால் அவருக்கு "ஒரு ஆச்சரியம்," "என்ன சவுத் இந்தியன் நீங்க, தயிர் சாதம் சாப்பிடாம இருக்கீங்க!". என்று கேட்டார்.

இதே போல இன்னும் சில கிளிஷேக்கள், சவுத் இந்தியன் பெண்கள் எல்லாரும், கருப்பாக இருப்பார்கள், எல்லாரும் வெஜிடேரியன் என்று ஒரு சில கிளிஷேக்கள். எல்லாரும் பேசும் பொது ஐயோ, கடவுளே ..என்று பேசுவார்கள் என்றும் சில...இதனை குறித்து நான் அப்பப்போ யோசிப்பதுண்டு.  வேலைப்பளுவில் இருந்து ரிலாக்ஸ் ஆக என்று நான் யூ டூப் தட்டியபோது  "2 ஸ்டேட்ஸ்" என்ற படம் பார்க்க நேர்ந்தது. அதிலும் இப்படி பல பல கிளிஷே காட்சிகள்.  சவுத் இந்தியன் அல்லது தமிழன் என்றால்  கர்நாடக சங்கீதம், பட்டு புடவை, ஐயர், சந்தன பொட்டு, தயிர் சாதம், ஐயோ..என்று இருப்பார்கள் , என்பன போன்ற கிளிஷேக்களை உறுதி செய்கிறது. 
நான் வட இந்தியாவில் வசித்ததில்லை, அதனால் இது இன்னும் தொடரும் நிலையா என்று தெரியவில்லை.  இதனை குறித்து தேடிய போது, "We are south of India" என்ற ஆல்பம் பார்க்க நேர்ந்தது. அது இது போன்ற கிளிஷேக்கள் பற்றியது. நீங்களும் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கலாம்.

 




உலக மகா பணக்காரர்கள் 

"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்ற பழமொழி நிறைய பேர் கேள்வி பட்டு இருப்பார்கள். நானும் சிறு வயதில் இது போன்ற பல புது பணக்காரர்களை பார்த்து இருக்கிறேன். தற்போது பண புழக்கம் அதிகமான, சோசியல் மீடியா அதிகம் ஆன பிறகு, "ஷோ" காட்டுவது என்பது அதிகம் ஆகிவிட்டது என்று சொல்லலாம். தற்பெருமை காட்டுவது என்பது ஆண், பெண் பாகுபாடில்லாமல் நடக்கிறது. ஆண்கள் முக்கால் வாசி நேரம், "கார், பைக்" போன்றவற்றை ஷோ காட்டுவது, பல இடங்களுக்கு நாடுகளுக்கு சென்று பல போஸ்களில் போட்டோ இணையத்தில் உலவ விடுவது, சகஜம் என்றால். பெண்களோ!!, பல பல ட்ரெஸ்கள், நகைகள், மேக்கப் என்று பலவும் போட்டு, பல பல போஸ்களில் படம் எடுத்து உலவ விடுவது சகஜமான நிகழ்வு. 

இதெல்லாம் இளைய மக்கள் செய்து கொண்டிருக்க, மிடில் கிளாஸ் மக்களிடம் வேறு வகையான "ஷோ"   காட்டுவது என்பது உண்டு.  பெண்கள் எல்லாம் பெரிய தடிமனான செயின் போட்டு கொள்ளுவது. உதாரணமாக, "அம்மா" வின் பக்தைகள் சிலரின் புகைபடங்கள் காண நேர்ந்தது, அதில் காட்டப்படும் "நகை" காசு மாலை எல்லாம் பார்த்தால், எங்க இருந்து இவங்களுக்கு பணம் கிடைக்குது என்று கேட்க தோன்றும்.  

(photo from BBC) 

இதே போல நிறைய ஷோ பண்ணும் குடும்பம் என்றால், அமெரிக்காவை பொறுத்தவரை "கர்தாஷியன்" குடும்பம். "அற்பனுக்கு வாழ்வு..." பழமொழிக்கு சரியான உதாரணமான இவர்கள். 
ஆனால், இப்படி ஷோ காட்டுவதன் பின் விளைவுகள் என்ன என்று பார்த்தால் துப்பாக்கி முனையில் "கிம் கர்தாஷியன்" நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை கூறலாம். இதே, தற்பொழுது ஹாலோவீன் காஸ்டியூம் ஆகி கூட இருக்கிறது. 


ஆனால், உண்மையில் உலக மகா பணக்காரர்கள் எல்லாம் இப்படி ஷோ காட்டுபவர்களா, என்று பார்த்தால் ஆச்சரியம் மிஞ்சுகிறது. உதாரணமாக, "பில் கேட்ஸ் ம் அவரது மனைவியும்" தங்களது சொத்தில் பாதியை "பில் & மெலின்டா பவுண்டேஷன்" க்கு செலவளிக்கிறார்கள். (நானே அவர்களின் பவுண்டேஷன் க்கு நிறைய ஆராய்ச்சி அப்ப்ளிகேஷன் போட்டு இருக்கிறேன்)  அவர்களின் போகஸ் எல்லாமே, ஏழை நாடுகளில் இருக்கும் மக்களின் சுகாதாரத்தை குறித்த, உடல்நிலையை முன்னேற்றும் வழிகள், மருந்துகள் கண்டு பிடிப்பது போன்ற ஆராய்ச்சிக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். 

"வாரன் பாபட்",  1958 இல் வாங்கிய  அதே வீட்டில் இன்னும் வாழ்கிறார். முகநூல் CEO மார்க் தனது Facebook சேரில் 99% பொதுநல, சுகாதார விசயத்துக்கு என்று எழுதி வைத்து விட்டார். இன்னும் சிம்பிள் ஆக, அதே பணிவுடன், சாதாரண காரில், சாதாரணமாக வாழ்கிறார்கள்.  

"Too often, a vast collection of possessions ends up possessing its owner. The asset I most value, aside from health, is interesting, diverse, and long-standing friends."

-Warren Buffet


இதையே தான் நம்ம பாவனையில்  "கையில் கொஞ்சம் காசு இருந்தால் அது தான் நமக்கு முதலாளி, கழுத்து வரைக்கும் காசு இருந்தா அதுவே உனக்கு முதலாளி" என்று சொல்லி இருக்கிறார்கள் போல.
 

நன்றி.


Monday, September 19, 2016

இளையராஜா ஆஆஆ ...!



சிறு வயதில் இருந்து  நான்  கேட்ட மனதில்  மனதில் ரீங்காரமிடும் அந்த ட்யூன்கள்..கண் எதிரில்    ஆர்கேஸ்டரா வாசிக்க இசைஞானி இளையராஜாவை நேரில் முதன் முறையாக காணும் வாய்ப்பு கிட்டியது. இளையராஜாவின் Live -In Concert ,USA சுற்றுப்பயணத்தில் ஒரு ஊரான அட்லாண்டாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.

கொட்டும் மழையில் ஓபன் தியேட்டரில் மழைச்சாரல் அடிக்க ,  "சிவ சக்தியா யுக்தோ யதி பவதி" என்று ஆரம்பித்து, "ஜனனி, ஜனனி" என்று தொடங்கியது..அடுத்து அதிரும் குரலில் "ஓம் சிவோஹம்" என்று பாடகர் கார்த்திக் ஆரம்பித்து அதிர வைத்தார்.  

ஆனால் ஆர்ப்பாட்டமான துவக்கத்துக்கு  பிறகு துவக்கத்தில் ஏனோ கச்சேரி களை  கட்டவில்லை.  ஆயிரம் பாடல்களுக்கு மேல்  இசை அமைத்தவர் என்பதால் என்னவோ எதை விடுவது எதை எடுப்பது என்று தெரியவில்லை போலும். "நிலா காயுது, நேரம் நல்ல நேரம்"  பாடல்கள் எல்லாம் சேர்த்த அவர்கள், நூற்றுக்கணக்கான மெலடி பாடல்கள் சேர்க்காதது ஏன் என்று தெரியவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்திருந்தது அட்லாண்டா தமிழ் சங்கம் மட்டுமல்லாது அட்லாண்டாவில் இயங்கும் 3  தெலுங்கு சங்கங்களும் ஸ்பான்சர்  செய்திருந்தார்கள். அதனால் தானோ என்னவோ, நிறைய தெலுங்கு பேசினார் ராஜா.. அதனை தவிர நிறைய தெலுங்கு பாடல்கள்களும் இசைக்கப்பட்டன. அதிலும் ஒரு சில மனதுக்கு பிடித்த நான் அதிகம் விரும்பிய ஒரு சில பாடல்களான "இதழில் கதை எழுதும் நேரமிது" பாடலும் "கொடியிலே மல்லிகைப்பூ" பாடலும் தெலுங்கு வெர்சனில் கேட்க கடுப்பாகி விட்டது.

ஏற்கனவே இதழில் கதை எழுதும் நேரமிது பாடல் தமிழில் பாட கேட்காதது கண்டு கடுப்பாகி இருந்த நான், அதனை பாடிய கார்த்திக்கை ராஜா திரும்ப பாடு, தப்பாக பாடுகிறாய் என்று ட்ரில் வாங்கி கொண்டிருந்தார். கார்த்திக் பாடிய அத்தனை பாடல்களும் திரும்ப பாடும்படி அவர் சொன்னது, பலருக்கு கடுப்பேத்தியது என்பது உண்மை. "சின்ன மணிக்குயிலே" பாட்டு, பால்ஸ் வாய்ஸில் படுற, ஒரிஜினல் வாய்ஸில் பாடு, என்று திரும்ப பாட சொல்லி ஆரம்பித்த அவர், பின்னர் "நினைவோ ஒரு பறவை" பாட்டில் சுருதி இல்லை என்று திரும்ப பாட சொன்னார். அதே நிலை
"லலித பிரிய கமலம் (இதழில் கதை எழுதும் நேரமிது) பாடலுக்கும் நிகழ்ந்தது.
சில நேரம் வந்த இடத்தில இதெல்லாம் சகஜமப்பா..என்று சொல்ல தோன்றியது என்னவோ உண்மை. அதையும் தவிர, மேடைக்கு வருபவர்கள் எல்லாரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க காலில் விழுவது நேரம் போகப்போக கடுப்பாக இருந்தது. அருகில் இருந்த ஒரு சிலர்," கார்த்திக், கால்ல விழுகல போல, அதான் மாஸ்டரோ ட்ரில் வாங்குறாரு " என்று கமெண்ட் அடித்து கொண்டிருந்தனர்.





ஒரு சில நேரத்தில் தொடர்ந்து 3 தெலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்ட, கிட்டத்தட்ட அனைவரும் "தமிழ் பாட்டு வேணும் " என்று கத்தவே ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் முடியும் தருவாயில், சில குத்து பாடல்கள் போட்டு கச்சேரியை நிறைவு செய்தாலும் எனக்கென்னவோ முழு திருப்தி இல்லை.

ஆயினும்,  ஒரு சில பாடல்களான "காட்டு குயிலு மனசுக்குள்ள," "ஓ ப்ரியா ப்ரியா", "மடை திறந்து பாடும்" போன்ற பாடல்கள் அற்புதமாக இருந்ததென்னவோ உண்மை.

கொடுத்த காசுக்கு இன்னும் நிறைய மெலடி பாடல்கள் சேர்த்து இருந்தால் முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருந்திருக்கும். இது என்னவோ தரவில்லை என்பதென்னவோ உண்மை.

ஒரு கொசுறு செய்தியும் இங்கே. எங்கள் தமிழ் பள்ளியில் என் வகுப்பில் 2 ஆவது 3ஆவது படிக்கும் பிள்ளைகளிடம், "இளையராஜா யார் என்று தெரியுமா?" என்று ஒரு கேள்வி கேட்டு விட்டேன். அதற்க்கு அவர்கள் கொடுத்த பதில் புல்லரிக்க வைத்தது. சில குழந்தைகள் "He is a flutist", "He plays sitar", "He is singer" etc. இங்கேயே பிறந்து வளர்ந்த இவர்களிடம் யார் இளையராஜா என்ற கேள்வி கேட்டு இருக்க கூடாது..ஏனெனில் இவர்கள் அனைவரும் Taylor Swift, Justin Beiber, பரம்பரையை சேர்ந்தவர்கள். எல்லாம் என் நேரம்.


டிஸ்கி
இங்கு நான் குறிப்பிட்டு இருக்கும் செய்திகள் எல்லாம் என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே. யாரையும்குறிப்பிடவோ குறை  கூறவோ  இல்லை  இங்கு. புரிதலுக்கு நன்றி.




Friday, September 16, 2016

இந்திய அமெரிக்க திருமணங்கள், கல்யாணமாம் கல்யாணம்!!

எப்போதும் பிற கலாச்சாரங்கள் குறித்து பேச விவாதிக்க பிடிக்கும், அதிலும் எப்படி திருமணங்கள் நடக்கின்றன? அதற்க்கு ஆகும் செலவுகள் போன்ற பிற விஷயங்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது. வேலை விஷயமாக டல்லஸ் பயணம் அங்கு பிற நாட்டை சேர்ந்த பலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில், ரஷ்யா, அர்ஜென்டினா, பிரான்ஸ், துருக்கி, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய பலருடன் பேசிக்கொண்டு இருந்த போது எதேச்சையாக, அர்ஜென்டினா காரர் தனக்கு திருமணம் அடுத்த மாதம் என்றும் அதற்காக எவ்வளவு செலவாகிறது எத்தனை பேர் கெஸ்ட் அழைக்க போகிறேன் என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்த அவர், எப்படியும் 100-200 பேராவது அழைக்கவேண்டும், செலவு பயங்கரமாக இருக்கும். எப்படியும் ஒரு பிளேட் சாப்பாடு 200-250$ ஆகும், அதனை தவிர டிரஸ், ட்ரிங்க்ஸ் எல்லாம் சேர்ந்து எப்படியும் 50000$ ஆகலாம். பயமாக இருக்கிறது. என்று புலம்பி கொண்டு இருந்தார்.

உடனே, எல்லாரும் அவரவர் நாட்டில் நடக்கும் திருமணங்கள் குறித்தும், பேச ஆரம்பித்து விட்டனர். அதில் நான் அறிந்த சில விஷயங்கள் இங்கே.

முன்பெல்லாம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகை திருமண சடங்குகள் இருந்தது போய் தற்போது அனைவரும் ஹாலிவுட் சர்ச் வெட்டிங் போல, வெள்ளை டிரஸ், கருப்பு சூட் என்ற கலாச்சாரத்துக்கு மாறி விட்டு இருக்கின்றனர். இது, சீனா, துருக்கி போன்ற ஆசிய நாடுகளுக்கு பொருந்தும். அதாவது முன்பு போல சிவப்பு நிற பாரம்பரிய உடை அணிந்து நிறைய சீனா திருமணங்கள் நடப்பதில்லை போல. அனைவருக்கும் வெள்ளை உடைக்கு மாறி விட்டு இருக்கின்றனர். இதே போல ஒரு நிலை துருக்கி திருமணத்திலும் நிகழ்ந்து இருக்கிறது.

மற்றொரு உலகமயமாக்கல் விளைவாக கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும், தற்போது ரிசப்ஷன் என்பது சாம்பைன் குடிப்பது, டான்ஸ் ஆடுவது , கேக் வெட்டுவது என்றாகி இருக்கிறது.

மற்றொரு விஷயம், இங்கே நடக்கும் தெற்காசிய நாடுகளை சேர்ந்த மக்கள் திருமணங்கள் எல்லாம்  3-4 நாட்கள் நடக்கின்றன. இது இந்தியா, பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்து குடியேறிய அனைவரும் வடஇந்தியாவில் நடப்பது போல, மெஹந்தி, பாராத்(மாப்பிளை அழைப்பு)கல்யாணம்  மற்றும் ரிசப்ஷன். என்று நடத்துகிறார்கள்.

அதிலும், இந்தியன் அமெரிக்கன் கல்யாணங்களில் இப்போதெல்லாம் குதிரையில் அல்லது யானையில் மாப்பிள்ளை அழைப்பு இந்தியாவில் நடப்பது போல  நடக்கிறது.அதற்காகவே அதிகம் செலவழிக்கும் பழக்கம் இந்தியர்களிடையே நடக்கிறது. இதற்க்கு போட்டியே கூட நடக்கிறது. நீ இவ்வளவு செலவு செய்கிறாயா?, நான் எவ்வளவு செலவு செய்கிறேன் பார்? என்ற போட்டி.
photo from Washingtonpost
இதனை குறித்த ஒரு செய்தியையும் பாகிஸ்தானிய நபர் சொன்னார். அது அமெரிக்காவில் நடக்கும் இந்திய திருமணங்கள் எவ்வளவு ஆடம்பரமான நிகழ்ச்சிகள் என்பதை குறிக்கும் https://www.washingtonpost.com/business/2015/02/13/89e874e8-b210-11e4-886b-c22184f27c35_story.html வாஷிங்டன் போஸ்ட் செய்தி.

மற்ற கலாச்சாரங்களில் திருமணம் முடிக்க ஆகும் செலவு 50 ஆயிரம் டாலர்கள் எனில், இந்திய திருமணங்கள் அல்லது தெற்காசிய திருமணங்கள் முடிக்க ஆகும் செலவு எப்படியும் 250 ஆயிரம் டாலர்கள்.  இதில் ஒரு சில திருமணங்கள் எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் குடும்பம் உட்பட செய்த திருமணம் 1 மில்லியன் டாலர்கள். இது 4 நாட்கள் சடங்காக நடந்தது. எல்லா வட இந்திய சடங்குகளும் உள்ளடிக்கிய அந்த திருமணம். இத்தனைக்கும் அவர்கள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள்.

எனக்கு தெரிந்த இன்னொரு திருமணம் புளோரிடா அருகில் ஒரு தீவில் நடந்தது, US இல் இருந்து மட்டுமே 200-300 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதனை தவிர இந்திய சொந்தங்களும் பலரும் அழைக்க பட்டு இருக்க, அவர்கள் தங்கும் விடுதி, சாப்பாடு, 5 நாட்கள் சடங்கு என்று ஒரே களேபரம். இந்துவான இவர்கள், கிறிஸ்துவ முறைப்படியும் மோதிரம் மாற்றி கல்யாணமும் செய்து கொண்டார்கள். எல்லாரும் சொல்ல கேட்டது, இவர்களின் திருமணமும் 1 மில்லியன் டாலர் செலவு ஆனது என்று.

சராசரி அமெரிக்கர்கள் திருமணம் நடக்க ஆகும் செலவு 5 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை. இது அவரவர்கள் வசதியை பொறுத்து கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம். ஆனால் சராசரி திருமணத்திற்கு ஆகும் செலவை விட குறைந்தது 10 மடங்கு ஒவ்வொரு இந்திய அமெரிக்க திருமணமும் நடக்க செலவாகிறது அல்லது செலவழிக்க படுகிறது என்று இந்த செய்தி தெரிவிக்கிறது.

இது உண்மையா?, எல்லா திருமணங்களும் இவ்வளவு செலவு செய்து நடத்த படுகின்றனவா? தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த சில திருமணங்கள் இந்த அளவு செலவு செய்து நடத்தப்பட்டவை என்று நான் உறுதி கூறலாம்.


நன்றி.


Saturday, September 10, 2016

ஹோம் ஒர்க் உலகத்தில் குழந்தைகளும் பெற்றோரும் !

பள்ளி ஆரம்பித்ததில் இருந்து இரண்டாவது படிக்கும்  முகுந்துக்கு வரும் ஹோம் ஒர்க் பார்த்தால் நமக்கு தலை சுற்றுகிறது.

இரண்டாவது சிலபஸ் இல்  "ஸ்டேட்ஸ் ஆப் மேட்டர்" டெஸ்ட் கடந்த வாரம். அவர்களுக்கு திட, திரவ, வாயு நிலைகளை (liquid, solid and gas )பற்றி சொல்லி கொடுத்து, அவர்களை தயார் செய்ய வேண்டும். நேற்று "Next gen vehicles" பற்றி ப்ராஜெக்ட். அவர்களாகவே யோசித்து, டிஸ்கஸ் செய்து, கேள்விகள் கேட்டு, பின்னர் படம் வரைந்து என்று நிறைய நிறைய ..ஆங்கிலத்தை பொறுத்தவரை, அதற்குள் இலக்கணம் வந்துவிட்டது, proper noun, common nound, adjective..என்று அனைத்தும் வந்துவிட்டது. இதில், singular, plural nouns இல் டெஸ்ட் எல்லாம் வருகிறது. கணக்கில் picture puzzules, or puzzle problem தினமும் 15 நிமிடம் கணக்கு விளையாட்டு விளையாட வேண்டும் அதற்கென்று Reflex math என்ற Ipad app /online game இருக்கிறது. அதனை தவிர, தினமும் ஒரு புத்தகம் குறைந்தது 15 நிமிடமாவது  படிக்க வேண்டும். என்ன படித்தான், எவ்வளவு நேரம் கணக்கு விளையாட்டு என்று பெற்றோர் பையனின் ஜர்னலில் எழுதி அனுப்ப வேண்டும். எனக்கு தெரிந்த வரை 6-7 ஆவது படிக்கும் போது சிங்குலார் ப்ளுரேல் nouns படித்ததாக நியாபகம். அதனையே, இங்கேயே படித்த ஒரு அம்மாவும் சொன்னார். அதுவும் Next gen vehicle போன்ற ப்ராஜெக்ட் எல்லாம், 10 அல்லது 12 வது வகுப்பில் படித்து இருப்போம். இப்படி இரண்டாவது வகுப்பிலேயே படித்து இருக்க மாட்டோம். இத்தனைக்கும் முகுந்த் படிப்பது பப்ளிக் ஸ்கூலில்.  அவர்களுக்கு சொல்லி கொடுக்க என்று பெற்றோரும் நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டி வருகிறது.


picture from google images

நான் கேள்வி பட்ட வரை, முன்பெல்லாம் இங்கு STEM எனப்படும் Science, Technology, Engineering and Mathematics க்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க படுவதில்லை. மொழி, மற்றும் கலை இலக்கியங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க பட்டு வந்து இருக்கிறது. ஹை ஸ்கூல் படிக்கும் போது மட்டுமே நிறைய கணக்கு மற்றும் அறிவியல் விடயங்கள் படிக்க வேண்டி இருந்திருக்கிறது. ஆனால் தற்போது, elementary பப்ளிக் பள்ளிகள் கூட, STEM சிலபஸ் பின்பற்றுகிறார்கள். அதனால் 7 வயதில் "States of Matter" பற்றி படிக்க வேண்டி வருகிறது. இது காம்பெடிட்டிவ் அதிகம் உள்ள பள்ளிகளுக்கு இடையே நடக்கும் போட்டி போல ஆகி விட்டது.

முன்பெல்லாம் ஸ்கூல் விட்டு வந்ததும் விளையாட செல்லும் குழந்தைகள், தற்போது குறைந்தது 1 மணி நேரம் ஸ்கூல் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்றால் அழுது அடம் பிடிக்கிறார்கள். இதனை தவிர, இந்திய குழந்தைகள் பலரும், எக்ஸ்ட்ரா கிளாஸ் செல்கிறார்கள் திரும்பி வந்து அதனை சார்ந்த ஹோம் ஒர்க் செய்ய சொல்லும் போது இன்னும் அதிகம் அழுகிறார்கள்.

இது இங்கு நடக்கும் கூத்து என்றால், இந்தியாவில் வேறு வகையான கூத்து நடக்கிறது. எல்லா பெற்றோரும் தன் குழந்தைகளை பெஸ்ட் ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்று பணம் கொட்டி சேர்க்கிறார்கள். ஆனால் அங்கு கொடுக்கப்படும் ஹோம் ஒர்க் ஐ, சொல்லி கொடுக்க, செய்ய வைக்க  இவர்களுக்கு தெரிய வில்லை அதனால் ட்யூஷன்க்கு அனுப்புகிறார்கள். பள்ளி விட்டு வரும் எந்த குழந்தையும் விளையாட்டுவதே இல்லை, அதற்க்கு நேரம் இருப்பது இல்லை. ஒரு ட்யூசன் முடிந்தவுடன் அடுத்தது என்று ஓடுகிறார்கள்.

எங்கள் சொந்த கார பெண் தன்னுடைய 6 வயது பையனை பெரிய பள்ளியில் சேர்க்கிறேன் பேர்வழி என்று தன து வீடு இருக்கும் இடத்தில் இருந்து மறுகோடியில் இருக்கும் ஒரு பள்ளியில் சேர்த்து இருக்கிறார். காலை 8 மணிக்கு பள்ளி செல்லும் குழந்தை பள்ளி முடிந்து  வரும்போது மணி 5 ஆகி விடுகிறது. வந்தவுடன் 1 மணி நேரம் பள்ளி பாட டியூசன், பின்னர் ஹிந்தி டியூசன் 1 மணி நேரம் பின்னர் ஸ்கூல் ஹோம் ஒர்க் என்று முடிக்க வைக்க எப்படியும் 9 மணி ஆகி விடுகிறது. இதில் எங்கே குழந்தைகள் விளையாட நேரம்.

எனக்கு தெரிந்து என் பெற்றோர் எனக்கு சொல்லி கொடுத்ததில்லை அல்லது என்னிடம் இவ்வளவு நேரம் செலவழித்து ப்ராஜக்ட் செய்தது இல்லை. எனக்கு தெரிந்தே என்னுடைய ஸ்கூல் பிரிண்ட்ஸ் ன் பெற்றோரும் சரி இல்லை அவர்களும் சரி நிறைய விளையாடி இருக்கிறோம். பின்னர் எப்படி இந்த ஜெனெரேஷன் குழந்தைகளும் சரி பெற்றோரும் சரி ஹோம் ஒர்க்குக்கு  என்று  இவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள்.  பாட திட்டங்கள் அதிகமாகி விட்டதாலா? அல்லது காம்பெடிஷன் அதிகமாகி விட்டதாலா? இப்படி அதிகம் ஹோம் ஒர்க் செய்யும் குழந்தைகள் child prodigy ஆகி விடுமா?, எதனால் இத்தனை புஷ்?

STEM பாடத்திட்டம் மட்டும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து விடுமா? ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் இங்கே

“it’s in Apple’s DNA that technology alone is not enough — that it’s technology married with liberal arts, married with the humanities, that yields us the result that makes our hearts sing.”

படிப்புடன், மொழியும் இலக்கியமும், மனிதநேயமும் எல்லாமும் சேர்ந்தாலே பெஸ்ட் ரிசல்ட் வரும் என்கிறார்.  இன்னோவேஷன் அல்லது கண்டு பிடிப்பு எல்லாவற்றுக்கும் கற்பனை திறன் வேண்டும். கற்பனை திறன் வளர நிறைய மொழி மற்றும் கலை பற்றிய பிடிப்பு வேண்டும். ஆர்வம் வேண்டும்.  குழந்தைகள் நிறைய விளையாட, ஆராய்ந்து தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். தினம் தினம் ஹோம் ஒர்க் மட்டுமே வாழ்க்கை, ஒரு கிளாஸ் முடிந்தவுடன் அடுத்தது  என்று உக்கார வைக்காமல் வேறு சில விஷயங்களையும் செய்ய ஊக்கு விக்க வேண்டும்.

ஏற்கனவே நிறைய பள்ளிகளில் ஹோம் ஒர்க் கொடுத்து செய்ய சொல்லும் நேரத்தில்,  எல்லா எக்ஸ்ட்ரா கிளாஸ்களிலும் சேர்த்து குழந்தைகளை படுத்தாமல் கொஞ்ச நேரமாவது அவர்களுக்கு விளையாட கொடுக்க வேண்டும், அதுவே அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் அதுவே நான் நம்புவது.


நன்றி







Friday, September 9, 2016

கதாசிரியர்களும், உயிரி ஆயுதமும் !!

அது என்னவோ தெரியல..முன்னெல்லாம் TB, கான்செர் போன்ற வியாதிகளை முன்வைத்து கதை எழுதி வந்த சினிமா கதாசிரியர்களும் சரி அல்லது நாவல் எழுதுபவர்களும் சரி சில காலங்களாகவே உயிரியல் ஆயுதம் அல்லது உயிரியல் தொழில் நுட்பத்தை வைத்து கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஒரு வகையாக நம்மை கொன்று விடுகிறார்கள்.
அதில் தற்போது இணைந்திருப்பவர் டான் பிரவுன்.


ஆங்கில நாவல்கள் எழுதுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட மைய கருத்து உண்டு அதிலிருந்து  அவர்கள் விலகுவது இல்லை. உதாரணமாக ஜான் க்ரிஷம் அவர்களின் அத்தனை நாவல்களும் வழக்கறிஞர் அல்லது அதனை சார்ந்த அத்தனை பாயிண்டுகளையும் மைய படுத்தி இருக்கும். ஜான் க்ரிஷம் ஒரு வழக்கறிஞர் என்பதால் அவரின் துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கலக்கி தெளித்து இருப்பார். உதாரணமாக "Time  to Kill", "The Firm",  "The Partner" etc.,

அதே போல, ராபின் குக் ஒரு மருத்துவர், இவரின் அத்தனை நாவல்களும் மருத்துவம் அல்லது உயிரியல் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். உதாரணமாக, Chromosome 6, Fever, Cell etc.,

அதே போல டாம் கிளான்ஸி அவர்களின் நாவல்கள் அனைத்தும் மிலிட்டரி அல்லது போர் சம்பந்தமானவை, பாலோ கோயல்ஹோ அவர்கள் எப்பொழுதும் மனோதத்துவ நாவல்கள் எழுதுபவர்.

இப்படி எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருப்பது போல, டான் பிரௌனின் ஸ்டைல் என்பது cyptography - ரகசிய குறியீடு வைத்து நாவல் எழுதுவது. அவரின் கிட்டத்தட்ட எல்லா நாவலிகளிலுமே ஒவ்வொரு சாப்டர்றிலும் ஏதாவது ரகசிய குறியீடு அதனை எப்படி கண்டு பிடிப்பது என்று இருக்கும். The Davinci Code, Angels and Demons , Digital Fortress etc., இன்னொரு விஷயம் என்னவென்றால் கிரேக்க, ரோம கலை மற்றும் ஓவியம் குறித்த பழைய வரலாற்று செய்திகள் நிறைய நாம் இவரின் நாவல்களில் தெரிந்து கொள்ளலாம். மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி என்று பல ஓவியர்கள் பற்றியும் சிற்ப வல்லுநர்கள் பற்றியும் டாவின்சி கோட் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார்.

அந்த வரிசையில் "Inferno" வில் முழுக்க முழுக்க Dante குறித்து நிறைய அறிய  முடிந்தது.
அவரின் Inferno என்பது நரகம் எப்படி இருக்கும் எதற்கெல்லாம் தண்டனை தருவார்கள் என்பது குறித்த ஒரு சித்திரம். அதனை தவிர Dante வின் "The Divine comedy" என்ற புத்தகம் குறித்தும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. இது கிட்டத்தட்ட நம்முடைய கருட புராணத்தை ஒத்தது. அதாவது இந்த தப்புக்கு இந்த தண்டனை என்று கருட புராணத்தில் இருப்பது போல, 7 வகை குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பதே Inferno அதாவது இத்தாலிய மொழியில் Inferno என்றால் நரகம் என்று பொருள்.

இந்த புத்தகத்தின் அடிநாதமே, வில்லனின் முயற்சியான "மக்கள் தொகையை எப்படி கட்டுப்படுத்துவது, அதுவும் உயிரி ஆயுதம் கொண்டு கட்டுப்படுத்துவது என்பதே".  அதனை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பது.


இந்த புத்தகத்தை படித்த பிறகு ஒரு சில விஷயங்கள் எனக்குள் தோன்றின. அதாவது, இதில் கூறப்படும் ஒரு விஷயம், உலகில் நடக்கும் அதிக மக்கள் தொகை பெருக்கம். அதன் பின்விளைவுகள் அல்லது அதனால் நடக்க போகும் நிகழ்வுகள் குறித்த கற்பனைகள். அது ஓரளவு உண்மை என்றே வைத்து கொள்ளுவோம். உதாரணமாக, சுதந்திரம் வாங்கிய போது ~40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய மக்கள் தொகை தற்போது ~1 பில்லியன் அசுர 100 வளர்ச்சி.

 அதிக மக்கள் தொகை பெருக்கத்தால் நடக்கும் சில விஷயங்களில் முக்கியமானவை, சாப்பாடு, தங்கும் இடம், உடை மற்றும் கழிவு நீர் மேலாண்மை. அதிக மக்கள் தொகை பெருக இவை அனைத்தும் கிடப்பது அல்லது மேலாண்மை செய்வது என்பது எவ்வளவு கடினம். இந்தியாவை எடுத்து கொண்டாலே, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குப்பை அளவை விட தற்போது இருக்கும் தூக்கி வீசப்படும் குப்பை அளவு 100 மடங்கு அதிகம். தண்ணீர் என்பது கேன்களில் மட்டுமே, அடிகுழாய் தண்ணீர் என்பதெல்லாம் நமக்கு பின் வரும் சந்ததிக்கு மறந்தே விடும் போல. சாப்பாடும் அதனை தயாரிக்க அல்லது மக்களுக்கு தேவையான சாப்பிட்டுக்காகவே என்று மாஸ் ப்ரொடியூஸ் செய்ய என்று உயிரியல் தொழில் நுட்பம் புகுத்தப்பட்ட BT வகை உணவு பொருட்கள் சந்தையில் விடப்படுகின்றன, அவை மற்ற நாட்டு காய்கறிகளை சுத்தமாக அழித்து விடுகின்றன..இப்படி பல பல
எல்லாமே ஒரு டோமினோ எபெக்ட் போல..அதன் ஆரம்பம் என்பது அதிக மக்கள் தொகை பெருக்கம்..

ஆனால், இதனை தவிர்க்க உயிரி ஆயுதம் கொண்டு அதாவது 18 ஆம் நூற்றாண்டு நிகழ்ந்ததை போல பிளேக்  கொண்டு அல்லது "மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிளேக்" கொண்டு , உலகின் மக்கள் தொகையை பாதி அழித்து விடுவது என்று எழுதி சற்று விளையாடி இருக்கிறார் டான் பிரவுன். இது அக்டோபர் மாதம் படமாகவும் வரப்போகிறது. டாம் ஹாங்க்ஸ் ராபர்ட் லாங்டன் ஆக நடிக்க விருக்கிறார். இதோ ட்ரைலர்



எனக்கென்னவோ இதனை படித்த பிறகு, நம் இதே போல உயிரி தொழில்நுட்பத்தை ஆயுதங்களாக உபயோகித்த  தமிழ் சினிமா கதைகளான தசாவதாரம், 7 ஆம் அறிவு மற்றும்  ஐ போன்றவை ஞாபகத்துக்கு வந்தன. இவர்கள் எல்லாம் சொல்வது போல, உயிரி ஆயுதம் என்பது பண்டமிக் ஆக உபயோகிப்பது சாத்தியமா?.

வைரஸ் என்பது எப்போதும் பரிணாம வளர்ச்சிப்படி மாறி கொண்டே இருப்பது ஏனெனில் நம் உடல் என்பது அற்புதமான ஒரு மெஷின் . மாறி கொண்டே இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற பலவற்றுக்கும்  ஏற்ப ஆன்டிபாடி உருவாக்கி கொண்டே இருக்கும். அதனையெல்லாம் தாண்டி நம்மை நோயாளி ஆக்கவேண்டும் என்றால் தொடர்ந்த மரபியல் மாற்றம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதனையே வைரஸ்கள் செய்கின்றன. ஆனால், ஒரு பண்டமிக் உருவாவது என்பது தற்போது இருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் என்றாலும் (உதாரணமாக 2009 இல் நடந்த H1N1 swine virus பண்டமிக்) வைரஸ் பரவுதல் என்பது குறைந்தது 7 நாட்கள் முதல் 10 நாட்கள் ஆகும். தசாவதாரம் படத்தில் காண்பது போல, ஒரு செகண்ட் இல் நடப்பது இல்லை.  வைரஸ் பரவ பரவ நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியும் ஆன்டிபாடிகளை உருவாக்கும்.

அதே போல இப்போது இருக்கும் சூழலில் ஒரு பண்டமிக் உருவாக்கி அது உலகில் இருக்கும் பாதி மக்கள் தொகையை கொள்வது என்பதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை. இது 18 ஆம் நூற்றாண்டு இல்லை, இப்பொழுது நடந்த 2009 H1N1 இல் கூட <0 .000001="" 3="" nbsp="" p="">பிளேக் க்கு தடுப்பு மருந்து உண்டு, ஆண்டிபயாடிக் ம் உண்டு.

அதனால் இது போன்ற வைரஸை உயிரி ஆயுதமாக கொண்டு உலகின் மக்கள் தொகையை பாதியாக குறைப்பது அல்லது வேரறுப்பது என்பது என்னை பொறுத்தவரை நடப்பது இயலாதது. கதாசிரியர்களும், சினிமா கதை எடுப்பவர்களுக்கு இனிமேலும் இதனை போன்ற கதை எடுக்க போகிறீர்கள் என்றால், வேறேதாவது ஒன்றை எடுத்து உலகை அழிக்க வில்லன் முயல்கிறான் என்று வைத்து எடுங்கள். தயவு செய்து உயிரி ஆயுதத்தை விட்டு விடுங்கள்.



டிஸ்கி
இங்கே குறிப்பிட்டு இருப்பவை எல்லாமே, அந்த புத்தகம் குறித்தும், சினிமா குறித்தும் என்னுடைய கருத்துக்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.


நன்றி

Saturday, August 20, 2016

நிறைய இந்தியர்கள் இருக்கும் பகுதியில் வாழ்வது சரியா,தப்பா?

சில விஷயங்களில் நாம் செய்வது சரியா, தப்பா, நாம் சரியான வழியில் செய்கிறோமா, இல்லையா என்று ஒரே குழப்பம் வரும். அது போன்ற ஒரு குழப்பம் எனக்கு அடிக்கடி ஒரு விசயத்தில் வருகிறது. 
எந்த மாதிரி ஒரு சூழலில் நாம் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதே அது. நிறைய இந்தியர்கள் இருக்கும் ஒரு பகுதியில் குழந்தைகள் வளர்ப்பது சரியா?,  இல்லை இந்தியர்களே இல்லாத ஒரு பகுதியில் வளர்ப்பது சரியா? இது எனக்குள் தற்போது இருக்கும் ஒரு குழப்பம்.


இந்தியர்கள் நிறைய ஒரே இடத்தில் வீடு வாங்கி குடியேறுவது என்பது இங்கே சகஜம். அது தமிழர்கள் மட்டும் என்று இல்லை, கிட்ட தட்ட இந்தியாவின் எல்லா இந்திய மாநில, மொழி பேசும் மக்களும் ஒரே இடத்தில் வீடு வாங்கி குடியேறுவார்கள். ஒரு நெய்பர்ஹூடில் 200 வீடுகள் இருக்கின்றன என்றால் , அதில் 190 வீடுகள், சில நேரம் 200 வீடுகளும் இந்தியர் வீடுகளாகவே இருக்கும். ஒரு மினி இந்தியா அது. இப்படி நிறைய நெய்பர்ஹூட் எல்லாமே இந்தியர்கள் மட்டுமே இருப்பதால் இருக்கும் சாதக பாதகங்கள்.

சாதகங்கள் 
  • நாம் சிறு வயதில் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு குழந்தைகளுடன் அன்றாடம் விளையாண்டதை  போல, இங்கிருக்கும் குழந்தைகளும், தினமும் விளையாடுகிறார்கள். வீட்டில் வந்து கதவை தட்டி, உங்க பையனை வெளியே அனுப்புங்கள் என்று சொல்லி இழுத்து சென்று விடுகிறார்கள். நம் குழந்தைகளுக்கென்று ஒரு பிரென்ட் சர்க்ள் உருவாகி விடுகிறது. இது நல்ல விஷயம்.
  • நாம் இந்தியாவில் இருந்து அப்பா, அம்மாவை அழைத்து வரும் போது, அவர்கள் அனைவரும் சொல்லும்  ஒரே புலம்பல், "வீட்டுக்குள்ளேயே பூட்டிட்டு இருக்கிறது சிறையில் இருப்பது போல, எத்தனை நேரம் தான் டிவி பாக்குறது. அக்கம் பக்கம் மக்களே இல்லை, என்னன்னு பேசுறதுக்கு கூட." என்று புலம்பாத அப்பா, அம்மாக்கள் மிக குறைவு.  இது போன்ற நிறைய இந்தியர்கள் இருக்கும் பகுதியில் இருப்பின், அம்மா அப்பாக்களுக்கு நல்ல கம்பெனி கிடைக்கும். ஒன்றாக சேர்ந்து வாக்கிங், சமையல், போன் என்று தனக்கென்று ஒரு சர்க்ள் அமைந்து விடுகிறது.
  • தீபாவளி, பொங்கல் என்று எதுவென்றாலும் அந்த நெய்பர்ஹூஏ வெடி வெடித்து, சீரியல் செட் போட்டு என்று, நம்ம ஊர் பீல் வந்து விடுகிறது. 
  • நம்ம ஊர் போல, குழந்தைகளில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு படிக்க வேண்டும் என்று பெற்றோர் படுத்தி படுத்தி அவர்களும் அகாடெமிக்ஸ் மற்றும் பாட்டி, டான்ஸ், மியூசிக் என்று எல்லாவற்றிலும் நன்றாகவே செய்கிறார்கள். 
பாதகங்கள் 

  • நிறைய இந்தியர்கள் வாழ்வதால், இந்தியாவில் வாழும் சூழல் போன்ற ஒன்றை நாம் உருவாக்கலாம், ஆனால், அமெரிக்கர்களுடன் எப்படி வாழ்வது, எப்படி ஊருடன் ஒட்டி வாழ்வது என்பது போன்றவற்றை நாம் அறிவது எப்போது? 
  • எப்போதும் இந்திய குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் இந்திய குழந்தைகள், மற்ற நாட்டினர் பற்றியோ அல்லது, அவர்களின் பழக்க வழக்கங்கள், அல்லது எப்படி அவர்களுடன் பழகுவது, எது லிமிட், என்று எப்பொழுது தெரிந்து கொள்ளுவார்கள் என்று தெரியவில்லை. அல்லது எப்படி இனவேறுபாடு போன்ற கமெண்ட்களை எதிர் கொள்ள பழகி கொள்ளுவார்கள் என்று தெரியவில்லை.
  • எனக்கு தெரிந்த சில பள்ளிகளில் 100 க்கு 100 மாணவர்களும் இந்திய குழந்தைகள், எனும்  பட்சத்தில் காம்பெடிஷன் நாறுகிறது. குழந்தைகளை படி படி என்று படிப்பை மட்டும் கற்று, ஸ்பில்லிங் பீ, சயின்ஸ் பீ, மேத் பீ, என்று எல்லா காம்பெடிஷன்களிலும் பெற்றோர் புஷ் செய்கிறார்கள்.
  • நான் வலெண்டீர் செய்யும் தமிழ் பள்ளியில், படிக்க வரும் பல விவரம் தெரிந்த குழந்தைகள் , எனக்கு இங்கே வர இஷ்டம் இல்ல, எங்க அம்மா, அப்பா புஷ் பண்ணுறாங்க அதனாலே தான் வர்றோம், என்று ஓபன் ஆகவே சொல்லுகிறார்கள். இதனால் குழந்தைகள், சீக்கிரமே burn out ஆகி விடுகிறார்கள். ஒருமுறை இப்படி ஆகி விட்டால், பின்னர் அவர்களை இன்டெரெஸ்ட் கொள்ள வைப்பது கடினம்.
  • எல்லாரும் இந்தியர்கள் இருக்கும் ஒரு இடத்தில், வழக்கம் போல நீ பெரியவனா, நான் பெரியவனா? என்ற பாலிடிக்ஸ் நாறுகிறது.
எனக்கு தெரிந்து 70-80 களின் போது இங்கு வந்து செட்டில் ஆன, பலர், தற்போது இருக்கும் மக்களை போல ஒரே இடத்தில் இருந்து குழந்தைகளை படிக்க வைக்க வில்லை. எப்போதும் இந்தியர்களுடன் மட்டுமே அவர்கள் பழக வேண்டும் என்ற ஒரு சூழலையும் உருவாக்கி தரவில்லை. அதனாலேயே, 70-80 களில் இங்கு வந்த  நிறைய ABCD கள், அமெரிக்கா சூழலில் எப்படி தன்னை மாற்றி கொள்ளுவது, எப்படி பழகுவது என்று நிறைய கற்று கொண்டார்கள் என்று அறிய முடிகிறது. 90 களின் இறுதியில் -2000 க்கு அப்புறம் வந்த பல இந்தியர்கள், எல்லாரும் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற ஒரு சூழலை உருவாக்கி தருகிறார்களா என்பது சந்தேகமே.

நன்றி.






 

Friday, August 19, 2016

ஒலிம்பிக்ஸ்ம், சோசியல் மீடியா கூத்துக்களும்

ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ்ன் போதும் நம் மக்களுக்கு ஒரு புது வியாதி தொத்தி கொள்ளும். அது ஒரு செலெக்ட்டிவ் அம்னீசியாவில் இருந்து வெளியில் வந்த ஒருவர் பார்ப்பதை குறித்து புதிதாக தன் கருத்தை கூறுவது போன்றது.  இது ஒரு சார்ட் டைம் மெமரி போல, ஒலிம்பிக்ஸ் முடியும் மட்டுமே நினைவில் இருக்கும் பின் எங்கோ போய் விட்டு மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தலை எடுக்கும்.

அது என்ன வென்று நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும்." இந்தியாவிற்கு ஏன் பதக்கங்கள் வரவில்லை?" என்ற ஆராய்ச்சி, இந்தியாவில் ஊழல், மக்கள் விளையாட்டுகளில் காட்டும் அலட்சியம் என்ற அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விடுவார்கள்.   கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகள், புத்தகங்கள், என்று எல்லாவற்றிலும் ஒரு இந்தியன் தன் நாட்டுக்கு ஏன் பதக்கங்கள் இல்லை என்ற காரணத்தை, பக்கம் பக்கமாக விவரிப்பார். நிறைய வெளிநாட்டு பத்திரிக்கைகளில் இதனை குறித்த ஆர்டிக்கில்  பார்க்க முடிந்தது.

தற்போது சோசியல் மீடியாவில் இது ஒரு கூத்தாக போய் கொண்டு இருக்கிறது. நேற்று சாக்ஷி மாலிக் ஒரு வெண்கல பதக்கம் வாங்கியதை கேலியாக பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் "119 பேர் அனுப்பப்பட்டதற்கு 1 வெண்கல பதக்கம்" என்று  ட்வீட் செய்ய, நிறைய இந்தியர்களுக்கு, அமிதாப் பச்சன் உட்பட தேச உணர்வு பொத்துக்கொண்டு வந்து விட்டது. எப்படி சொல்லலாம், என்று சண்டை பிடிக்க, அந்த பத்திரிக்கையாளரோ சளைக்காமல் , 1.2 பில்லியன் மக்கள் தொகைக்கு ஒரு வெண்கல பதக்கம், ஆனால் வெறும் 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நோர்வே 2 பதக்கங்கள்..என்று கவுண்டர் கொடுத்து கொண்டு மேலும் உசுப்பேத்தி கொண்டு இருக்கிறார்.


எனக்கு என்ன புரியவில்லை என்றால். இது தான் நம் நிலை என்று எல்லா இந்தியர்களுக்கும் தெரியும். இந்தியா வீரர்களை அனுப்பும் போதே, அட்லிஸ்ட் ஒரு தங்க பதக்கமாவது வாங்கிட்டு வாங்க, என்று நாம் நினைக்க துவங்கி விட்டோம்.

அதற்க்கு என்ன காரணம் என்றும் எல்லாருக்கும் தெரியும், நம் நாட்டில் மக்களும் சரி, அரசாங்கமும் சரி, கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுக்கு கொடுப்பதில்லை. ஏனெனில் மற்ற விளையட்டுக்கு ஸ்பான்ஸர் இல்லை, மற்ற விளையாட்டு வீரர்களை ப்ரொமோட் செய்ய முடியாது, மக்களுக்கு தெரியாது. கிரிக்கெட் வியாபாரமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதனால் அதற்க்கு கிடைக்கும் விளம்பரங்கள் பல ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு கிடைப்பதில்லை. வருமானம் தராத விளையாட்டுக்கு ஸ்பான்சர் செய்ய யாரும் முன்வருவதில்லை.

இது ஒரு புறம் இருக்க, அரசாங்கமும் அல்லது அரசியல் வாதிகளும் இதனை குறித்து கண்டு கொள்வதில்லை. ஏனெனில் இதனை வைத்து அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்து எல்லாருக்கும் தெரிந்தது. ஒலிம்பிக்ஸ் செலக்சன் போர்டில் அவர்களுக்கு தெரிந்த மக்களை சேர்ப்பது, தகுதியானவர்களை தவிர்ப்பது என்று எல்லா வித கூத்துகளும் நமக்கு தெரிந்தே நடக்கின்றன. இதுவும் எல்லாரும் அறிந்தே இருக்கிறார்கள்.

இன்னொரு புறம், சாதாரண மக்கள்  படிப்பு படிப்பு என்று படிப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கு கொடுப்பதில்லை. என்னை பொறுத்தவரை, கடந்த தலைமுறை மக்களை விட இப்போது இருக்கும் இளைய தலைமுறை, மிக மிக குறைவாக ஸ்போர்ட்ஸ் விளையாடுகிறார்கள். நிறைய பேர் கம்ப்யூட்டர் கேம்ஸ் க்கு மாறி விட்டார்கள். இதுவும் எல்லாரும் அறிந்தே இருக்கிறார்கள்.

 இப்படி எல்லாவற்றையும் மக்கள் அறிந்திருந்தும், நம்முடைய நாட்டின், மக்களின், அரசியல் வாதிகளின் செயலை உணர்ந்திருந்தும் ஏன் இந்த திடீர் வீரம், நாட்டுப்பற்று. ஏனெனில், நமக்கு அடுத்தவர்களை பார்த்து குறை சொல்ல, பேச மட்டுமே தெரியும். உண்மை நிலவரம் தெரிந்திருந்தாலும், நாங்கள் பேசி கொண்டே இருப்போம். அடுத்த நாடுகளை போல செயலில் இறங்கி வேலை செய்ய மாட்டோம். 

எதோ ஒரு படத்தில் ஒரு வசனம் வரும். அதில் ரஜினி சொல்லுவார், "சீனா காரன் சூதாடாட்டி செத்து போயிடுவான், இந்தியன் பேசாட்டி செத்து போயிடுவான்" அது எவ்வளவு உண்மை.


டிஸ்கி
இது என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தெரிந்த விஷயங்களை கொண்டு எழுதிய என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. எந்த அரசியல்வாதிகளையோ, மக்களையோ, இனத்தையோ, குறிப்பிட்டு சொல்லவில்லை.

Friday, August 12, 2016

சாமானியர்களும், பெரிய மனிதர்களும்!!

சிறு வயதில் என்னுடைய அனுபவம் இது. எங்கள் வீட்டிற்கு அருகே அந்த ஏரியா கவுன்சிலர் வீடு இருந்தது. அந்த கவுன்சிலருக்கு எங்கள் வயதுடைய குழந்தை இருந்தது. நாங்கள் எல்லாம் சிறு வயதில் வெளியில் சென்று விளையாடும் போது ஒரு நாள் அந்த குழந்தையும் விளையாட வர, அதன் பிறகு அவங்க வீட்டில இருந்து வந்த அந்த குழந்தையை எங்களுடன் விளையாட கூடாதென்று கண்டித்து அழைத்து சென்றார்கள். அப்பொழுதெல்லாம் என்னவென்று விளங்காமல் நாங்களும் அவங்க பெரிய ஆளுங்க  பா, அதனால நம்ம கூட எல்லாம் விளையாட விட மாட்டாங்க. என்று எங்களுக்குள் நாங்க சொல்லி இருக்கிறோம். பத்தாவது படிக்கும் போதெல்லாம் சைக்கிளே பெரிய விஷயமாக இருந்த எங்களுக்கு அந்த பிள்ளை காரில் பள்ளிக்கு செல்வது வழக்கம். பெரிய பள்ளியில் படித்து, மார்க்கே இல்லை என்றாலும் காசு கொடுத்து கல்லூரி சீட் என்று எல்லாவற்றிலும் ஒரு அட்வான்டேஜ் இருந்தது. எங்களிடம் இருந்து அதாவது சாதாரண மக்களிடம் இருந்து விலகியே இருந்ததை அறிய முடிந்தது. ஒரு சாதாரண கவுன்சிலரே தங்களை சாதாரண  மக்களிடம் இருந்து தங்களை வேறு படித்தி கொள்ளுவதை வழக்கமாக இருப்பதை எல்லோரும் கண்டு இருக்கிறோம்.

இது இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வா என்று நான் சிந்தித்ததுண்டு. ஆனால், சமீபத்தில் நான் வாசித்த கார்டியன் செய்தி இதெல்லாம் ஜுஜுபி என்று என்னை நினைக்க வைத்தது. அது எப்படி மெக்சிகோ நாட்டில் இருக்கும் அரசியல் வாதிகளின் குழந்தைகள் தங்களை அரச குடும்பத்தினர் போல நினைத்து கொண்டு நடப்பது குறித்து எழுதி இருந்தனர். அதில் ஒரு அரசியல் வாதியின் மகன், சைக்கிள் செல்லும் ரோட்டில் காரில் வந்து அங்கு காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் இவருக்கு வழிவிட வில்லை என்று அவருடன் சண்டை போட்ட ஒரு வீடியோ வைரல் ஆக யூடூபில் பரவி கொண்டு இருக்கிறது.



அதே போல, ஒரு அரசியல்வாதியின் மகள் தனக்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை என்று கோவப்பட்டு அந்த ஹோட்டலை போலீசை வைத்து மூட செய்த நிகழ்ச்சியும் அங்கே நடந்து இருக்கிறது. 

அப்போது, பெரிய மனிதர்களின் குழந்தைகள் எல்லாரும் இப்படி தான் இருப்பார்களா? என்று யோசித்த போது, அமெரிக்கா ப்ரெசிடெண்ட் ஒபாமாவின் மகள் தன்னுடைய கோடைகாலத்திற்கு என்று ஒரு வேலையில் இருப்பதனை அதுவும் ஒரு சாதாரண ஹோட்டலில் கேஷியர் ஆக வேலை செய்யும் போட்டோ வை காண நேர்ந்தது.



அதற்கு பக்கத்திலேயே மெக்ஸிகோ நாட்டின் ப்ரெசிடெண்ட் மகள்கள் இருவரும் ஹை சொசைட்டி மக்கள் போல உடை அணிந்து போஸ் கொடுக்கும் படங்களும் பார்க்க நேர்ந்தது.
இவை அனைத்தும் எனக்கு பழைய ஞாபகங்களை கிளறி விட்டது. இதில் எனக்கு தெரிந்த நான் அறிந்தது போல அரசியல் வாதிகளின் குழந்தைகள் தங்களை மாற்றி கொள்ளுவது, சாமானியர்களை விட்டு தள்ளி இருப்பது ஒரு புறம். இன்னொரு புறம் தான் பெரிய ஆள் என்றாலும் தன்னுடைய குழந்தைகளை சாதாரண மனிதர்கள் போல வளர்க்கும் ஒருவர்.

எல்லாரும் சமம், நம் குழந்தைகள் எல்லார் குழந்தைகளை போல சாமானியர்கள் என்று நினைக்கும் நடத்தும் செயல் ஆச்சரியமாக இருந்தது. இதுவே ஒரு காகேசியன் ரேஸ் ப்ரெசிடெண்ட் ஆக இருப்பின் இதனை செய்திருப்பாரா? என்ற கேள்வியும் தொக்கியே நிற்கிறது.

இதனை சார்ந்த ஒரு சில விஷயங்களும் எனக்கு தோன்றியதுண்டு. அதாவது, அரசியல் வாதிகள்எ, பெரிய மனிதர்கள் என்று இல்லை , நம்மள போல வெளி நாட்டுக்கு வந்த எத்தனை பேர் நம்ம குழந்தைகளை இது போல சம்மர் வேலைக்கு அனுப்புவோம். எனக்கு தெரிந்தே இங்கு வந்த பலர் தங்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவை முழுதும் செலவழித்து படிக்க வைப்பதை பார்த்து இருக்கிறேன்.  எத்தனை பேர் நார்மல் வாழ்க்கையை குழந்தைகளுக்கு சொல்லி தருகிறோம். நாம கஷ்டப்பட்ட மாதிரி நம்ம குழந்தைகள் கஷ்டப்பட கூடாது அப்படின்னு நினச்சு, எல்லாத்தையும் கொடுக்கிறோம். ஆனால் அது உபயோகப்படுமா? யோசிக்க வேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது.


நன்றி.


Sunday, August 7, 2016

மதத்தை மதிப்பவர்களும், மிதிப்பவர்களும்!!

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது. அது இந்திய கோயில்களை பற்றியது. அடிக்கடி இதனை போன்ற செய்திகளை தோழிகள் க்ரூப் பார்வேர்ட் செய்தாலும் பார்க்காமல் இருந்த நான் என்ன கிரகமோ, அன்று படிக்க தொடங்கினேன். அதில் கூறப்பட்ட ஒவ்வொரு செய்தியும் சிரிப்பை வர வழித்தது. வாயை வைச்சிட்டு சும்மா இருக்காம, வாயை கொடுத்து நான் வாங்கி கட்டி கொண்ட கதை தான் இங்கு.

அந்த பார்வேர்டில்  கூறப்பட்ட ஒரு விஷயம், காசி நகரை சுற்றி 20 கிலோமீட்டர் வரை காகம், கருடன் பறப்பதில்லை, அங்கு பல்லி இருப்பதில்லை. என்பது போன்ற செய்தி. என்ன கிரகமோ, அதனை படிப்பதற்கு சில காலம் முன்பு தான் என்னுடைய பிரெஞ்சு நண்பர் ஒருவர் தன்னுடைய "காசி" அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதுவும், 24 மணி நேரமும் எரியும் சிதை, பாதி வெந்தும் வேகாமலும் கங்கையில் தூக்கி வீசப்படும் சடலங்கள் குறித்தும், அதனை உண்ணும் பறவைகள்  , கோட்டான்கள் குறித்தும் தான் பார்த்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அங்கு எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் காட்டி விவரித்து கொண்டு இருந்தார். நான் காசிக்கு சென்றதில்லை என்றாலும், அவர் காட்டிய புகைப்படங்கள் புல்லரிப்பை ஏற்படுத்தின.

மேலை நாடுகளில் எல்லாம் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த உடலை உடனே அப்புறப்படுத்தி விடுவார்கள். அந்த உடல் அழகுபடுத்த எடுத்து செல்லப்பட்டு விடும். அதற்கு என்றே பியூனெரல் ஹோம்ஸ் எனப்படும் இறுதி சடங்கு இல்லங்களுக்கு சென்று, பின்னர் இறுதி சடங்கு அன்று எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்படும். இப்படி பார்த்து பழக்கப்பட்ட அந்த பிரெஞ்சு மனிதருக்கு 24 மணிநேரமும் எரியும் சிதையும் அதனை சுற்றி நடக்கும் விஷயங்களும், உடல்களை உண்ணும் பறவைகளும் கோட்டான்களும்  ஆச்சரியப்படுத்தியதில் வியப்பு எதுவும் இல்லை என்று தோன்றியது. இதனை சார்ந்த நேஷனல் ஜியோகிராபியின் செய்தி ஒன்றும் காண நேர்ந்தது  முடிந்தால் படித்து பாருங்கள். இதுவே இன்றைய நிலை. இப்படி இருக்க, எங்கிருந்து பறவைகள் பறப்பதில்லை என்ற செய்தி வந்தது என்று தெரியவில்லை.


அடுத்த விஷயம், சாமிக்கு செய்யும் அபிஷேக தயிர் புளிப்பதில்லை என்பது. இதனை படித்த பிறகு எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தயிர் புளிப்பது என்பது லாக்டோபேசில்லஸ் எனப்படும் பாக்டீரியா செய்யும் வேலை. அது பாலில் இருக்கும் லாக்டோஸை சாப்பிட்டு லாக்டிக் ஆசிட் ஆக மாற்றும் அதனாலே புளிப்பு சுவை வரும். எவ்வளவு பாக்டீரியா இருக்கிறதோ அவ்வளவு லாக்டிக் ஆசிட் இருக்கும். அவ்வளவு புளிப்பு ஏற்படும். இதில் எப்படி சாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை என்று சொல்கிறார்கள் தெரியவில்லை. தயிரில் இருக்கும் பாக்டீரியா முழுதும் கொல்லப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். அப்படி ஆக வேண்டும் என்றால் சாமி விக்கிரகத்தில் ஆன்டி பாக்டீரியா தன்மை இருக்க வேண்டும். அதனை தான் சொல்லுகிறார்களா?. இந்திய சாமி விக்கிரகங்களை சுற்றி எல்லா பூச்சிகளும் ஓடி விளையாடி பாக்டீரியா வளர்வதற்கு மிக மிக சாதகமான சூழலை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் இன்றைய வேளையில் இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.

இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க யோசிக்க கூடாது போல..ஏன்னா..இதெல்லாம் நான் சும்மா இருக்காம பார்வேர்ட் செய்த தோழிக்கு சொல்ல  , அவளோ  "என்னமா வெளி நாடு போயிட்டு நம்ம ஊரு சாமிய, சூழலை கிண்டல் அடிக்கிற, நாத்திகனாயிட்டாயா?, ரொம்ப படிச்சிட்டு இப்படி நம்ம கலாச்சாரத்தை குறை சொல்லுறது இப்ப பேஷன் ஆகிப்போச்சு....மத  துரோகி"..அப்படிங்கிறாங்க.. என்னத்தை சொல்லுவது...

கடவுள் அல்லது நமக்கும் மேலே ஒரு போர்ஸ் இருக்கிறது என்பதை நம்புபவள் நான், ஆனால், இப்படி கதை கதையாக கட்டி விட்டு, அதனை சாமியின் அருள் என்று கலர் கலர் ஆக ரீல் விட்டு. அதனை நம்புபவர்கள் மட்டுமே இந்து மதத்தை மதிப்பவர்கள், மற்றவர்கள் எல்லாம் மிதிப்பவர்கள் என்று வாதிடும் மக்களை என்னவென்று சொல்லுவது.


டிஸ்கி 

இது, என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. அறிவியல் ரீதியாக எனக்கு தெரிந்ததை மட்டுமே இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன். எந்த மதத்தையும் குற்றம் சொல்ல வில்லை.

நன்றி.


Monday, July 25, 2016

நானொரு முட்டாளுங்க!

முட்டாள் என்பவர் யார். விஷயம் தெரியாதவர்களே முட்டாள் என்று ஒரு விளக்கம் சொல்லுவார்கள். பள்ளியை எடுத்து கொள்ளுங்கள், ஆசிரியர் ஏதாவது எளிய கேள்வி கேட்டு, அதற்கு நமக்கு பதில் தெரியவில்லை எனில், சரியான முட்டாள் என்று திட்டுவார். அதே போல நண்பர்களுடன் இருக்கும் போதும் சரி அலுவலகத்திலும் சரி, எப்போதும் யாரும் நம்மை முட்டாள் விஷயம் தெரியாதவன் என்று எண்ணி விடக்கூடாது என்று நினைத்து நினைத்தே நாம் செயல்படுவோம்.

இந்த குணம் இந்தியர்களிடம் அதிகம் இருப்பதாய் உணர்கிறேன். அதாவது, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை எனில் எனக்கு தெரியாது என்று ஒத்து கொள்ளுவது.  அதற்கு பதில், அதனை பற்றி தெரிந்தது போல காட்டி கொள்ளுவது. உதாரணமாக, நீங்கள் ஒரு ஆபீஸ் மீட்டிங்இல் இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அங்கு ஒரு விஷயம் குறித்து விவாதிக்க பேசுகிறார்கள் என்று வைத்து கொள்ளுவவோம், அந்த மீட்டிங்கில் நிறைய இந்தியர்கள் இருப்பின், நீங்ககவனித்து பாருங்கள், அதில் இருக்கும் எத்தனை இந்தியர்கள் தனக்கு விஷயம் தெரியாது இனிமே தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையை ஒத்து கொள்ளுகிறார்கள். மிக மிக சொற்பனமானவர்கள் மட்டுமே.. பலர், அதனை பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், எனக்கும் ஏதோ தெரியும் நானும் முட்டாள் இல்லை என்று காட்டி கொள்ளுவார்கள்.

சொல்லப்போனால், நானும் கூட எங்கே நமக்கு விஷயம் தெரியாது என்று நினைத்து மட்டம் தட்டி விடுவார்களோ என்று பயந்து தெரியாத விஷயத்தையும் தெறி தெரிந்தது போல சில நேரங்களில் முன்பு நடந்ததுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் யாராவது நேரடியாகவே என்னை முட்டாள் என்று திட்டினால் கூட அப்படியா, நன்றி என்று சொல்லி விடுகிறேன் என்பது வேறு கதை.

சரி என்னுடைய கதை இருக்கட்டும். என்னுடன் வேலை பார்க்கும் சிலர் தனக்கு தெரியாமல் ஏதாவது இருந்தாலும் என்ன எது என்று கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்ளாமல், தனக்கு அதனை பற்றி தெரியும் என்று கதை விடுவதை பார்த்து இருக்கிறேன். அதுவும் நிறைய இந்தியர்கள் இதனை போல செய்வதை கண்டு இருக்கிறேன்.

எனக்கு சமீபத்தில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. புது ப்ராஜெக்ட் ஒன்றில் வேலை செய்ய நேர்ந்தது. அந்த ப்ராஜெக்ட் குறித்து தெரிந்த சிலரிடம் இருந்து தெரியாத சிலர் KT செய்ய வேண்டும். அறிவு பரிமாற்றம், என்பது தெரியாத விசயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுவது. ஆனால், நடந்தது காண சிரிப்பாக இருந்தது. ப்ராஜெக்ட் குறித்து தெரியாத ஒரு சிலர், எதோ தனக்கு எல்லாம் தெரியும் என்று பயங்கர சீன் போட்டு தான் பெரிய அறிவாளி என்று பாஸ் முன்பு படம் காட்டி கொண்டு இருந்தனர். பின்னர் மீட்டிங் முடிந்தவுடன், அதாவது பாஸ் யாரும் அருகில் இல்லாத போது , என்னிடம் வந்து இதனை எப்படி செயல் படுத்துவது என்று ரொம்ப ரொம்ப பேசிக் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். "நீ வாங்குற அஞ்சு பத்து காசுக்கு எதுக்கு இந்த விளம்பரம்" என்ற கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வந்தது.

சரி எதுக்கு இப்போ இதை பத்தி எழுதுறேன் அப்படின்னா, இரண்டு காரணம். முதல் காரணம் இது தான். சிறு வயதில் நிறைய கார்ட்டூன் புத்தகங்கள் படிப்பதுண்டு. இப்பொழுது கூட ஒரு சில காமிக் ஸ்ட்ரிப் படிப்பது பிடிக்கும். அதுவும் அன்றாட ஆபீஸ் விஷயங்களை நக்கல் அடிப்பதில் பெஸ்ட் ஆக
இருக்கும் "DILBERT" கார்ட்டூன் ரொம்ப இஷ்டம். அவரின் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. "The Dilbert Principle" என்ற புத்தகம். அதுவும் அதன் கதாசிரியர் Scott Adams பப்லிக் ஆக "நான் ஒரு முட்டாள் எனக்கு கார்ட்டூன் மட்டுமே வரைய தெரியும், ஆனால் என்னையும் நம்பி ஒருத்தர் புக் பப்லிஷ் செய்திருக்கிறார். அதனால் ஏதானும் தவறாய் இருந்தால் சாரி " என்று தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார். இவரே முட்டாள்னா, நானெல்லாம் அடி,அடி,அடி முட்டாளுங்கோ..


Photo from Google images

இரண்டாவது விஷயம், ஹி, ஹி,ஹி.. நிறைய அறிவு ஜீவிங்க படம் பார்த்துட்டு இது சரியான பப்படம் பா.. அப்படின்னு விமரிசனம் செய்த "கபாலி" நான்  பார்த்துட்டேங்க.. குட் பெலோஸ், காங்ஸ் ஆப் நியூயார்க் போல ஒரு காங்ஸ்டர் படம் பார்த்த திருப்தி. ரொம்ப சாதாரணமா கதைக்கு தகுந்தாற் போல பொருந்தி ரஜினி. டூயட் பாடாமல், அதிகம் பஞ்சு டயாலக் பேசாமல் நல்லா நடித்த ரஜினி பார்க்க நேர்ந்தது. முதல் நாள் முதல் ஷோ என்று சென்று 25$ செலவழிக்காமல் 4 நாட்கள் கழித்து சென்றதால் 10 $ சேமிக்க நேர்ந்தது. அதோடு, கூட்டமும் அதிகம் இல்லாமல் காண நேர்ந்தது.
அதனால், நானும் ஒரு முட்டாள் தானுங்கோ!


டிஸ்கி

இன்னைக்கு டிஸ்கிக்கி லீவு..
யாரும் வந்து படம் நல்ல இல்லைன்னு திட்டாதீங்கப்பா.. இது என்னோட வியு மட்டுமே.


Wednesday, July 6, 2016

8 ஆம் வகுப்பில் IIT -JEE கோச்சிங்ம் CBSE ம் சமச்சீர் பள்ளிகளும்!

படிப்பது என்பது என்ன?, எந்த வயதில் படிக்க வேண்டும். இந்த கேள்வி எனக்கு அடிக்கடி தோன்றும். அதுவும் தற்போது இந்தியாவில் இருக்கும் குழந்தைகளை பார்த்த பிறகு இன்னும் அதிகமாக இந்த கேள்வி மனதில் ஓடி கொண்டு இருக்கிறது.

உதாரணமாக என்னுடைய தோழியின் மகள்  இந்த வருடம் 8 ஆவது படிக்கிறார். மதுரையின் சிறந்த பள்ளி ஒன்றில் படிக்கிறார். CBSE பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி அது. இருப்பினும், பள்ளி விட்டு வந்தவுடன் கிட்ட தட்ட எல்லா பாடத்திற்கும் வெளியிலே டியூசன் செல்கிறார். இது போக IIT -JEE க்கு என்று ட்யூசன். அதாவது 8 ஆம் வகுப்பில் இருந்தே 12 ஆம் வகுப்பு முடிந்த பிறகு எஞ்சினீரிங் படிக்க வேண்டும் அதுவும் IIT யில் மட்டுமே படிக்க வேண்டும்  என்று அவளின் பெற்றோர் முடிவு செய்து அவளை கோச்சிங் சேர்த்து இருக்கிறார்கள். 

அதாவது, கணக்கு, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி கேள்விகளை  8 ஆவதில் இருந்து திரும்ப திரும்ப 4 வருடங்களாக படித்து படித்து...ஒரு வழியாக மனப்பாடம் செய்து..மார்க் எடுக்க வேண்டும்  என்று தயார் செய்ய படுகிறார்கள். 

எனக்கு தெரிந்து 10 ஆவது படிக்கும் போது அல்லது 12 ஆவது படிக்கும் போது ட்யூசன் படித்து பார்த்து இருக்கிறேன்..ஏன் இந்த வயதில் கோச்சிங் என்று என் தோழியிடம் கேட்க அவளோ..IIT யில் சேர பயங்கர போட்டி காம்பெடிஷன், எல்லாரும் தற்போது தங்களின் பிள்ளைகளை IIT  யில் படிக்க வைக்க நினைக்கிறாங்க..அதனால பயங்கர போட்டி. மத்த எஞ்சினீரிங் காலேஜ் எல்லாம் ஸ்டாண்டர்ட் இல்லை..IIT மட்டுமே தரம். அதனால தான் பயங்கர போட்டி. அதில வெற்றி பெறணும்னா இப்போ இருந்த கோச்சிங்  ஆரம்பிக்கணும். என்று சொன்னாள். 

அதுவும் தவிர..நான் அவளிடம் கேட்டது இது தான். CBSE சிலபஸ் நல்லா இருக்கு, நல்ல டாப் ஸ்கூல்ல பொண்ணு படிக்கிறான்னு சொல்லுறியே அப்போ எதுக்கு மத்த ட்யூசன். எல்லா சப்ஜெக்ட் க்கும் ட்யூசன். அப்போ டீச்சர் என்ன சொல்லி தர்றாங்க?. சொல்லி தர்ற அளவுக்கு அவங்களுக்கு ஸ்டப்  இருக்குன்னா எதுக்கு வெளியில ட்யூசன். 


ஏன் ஸ்டேட் போர்ட்ல சேக்கல்ல? என்ன பிரச்சனை? என்று கேட்டதற்கு, சமசீர் கல்வி ஆரம்பிச்சு பிறகு ஸ்டாண்டர்ட் ஏ இல்லை,  ..எல்லாமே மனப்பாடம் தான்.. இப்போ எல்லாம் எங்க பார்த்தாலும் 100- பேர் ஸ்டேட் பிரஸ்ட் 1000 பேர் 100 க்கு 100 அப்படின்னு போகுது. CBSE ல தான் கொஞ்சமாவது சிலபஸ் நல்லா இருக்கு, அதனால தான் அங்க சேர்த்திருக்கோம்..என்றாள். 

எனக்கு மறுபடியும் சந்தேகம்.. இவங்க என்ன சொல்ல வராங்க.. CBSE ல மனப்பாடம் இல்லைன்னு சொல்லுறாங்களா?.மத்த எஞ்சினீரிங் படிச்சா தேற மாட்டாங்க..IIT ல படிச்ச மட்டுமே தேறுவாங்க அப்படின்னு சொல்லுறாங்களா?..இல்லை நிறைய பேர் ஸ்டேட் பிரஸ்ட் வர்றது தப்புன்னு சொல்லுறாங்களா? ஒண்ணுமே புரியல உலகத்துல...

இப்பெல்லாம் புது வகை நோய் தொத்தி இருக்கு மக்கள் கிட்ட..அது CBSE பள்ளியில தன் பிள்ளை படிக்குது...சமசீர் கல்வி பள்ளியில இல்லை..என்று சொல்லுவது. அதற்காக எவ்வளவ் பணமும் கொடுக்க தயாரா இருக்கிறாங்க. அந்த பள்ளியில் என்ன சொல்லி தர்ராங்க..அதன் ஆசிரியர்கள் சொல்லி தரும் திறன் உள்ளவர்களா..என்றெல்லாம் எந்த பெற்றோரும் யோசிப்பதில்லை. இது ஒரு பிரெஸ்டிஜ் விஷயமாகி விட்டது. CBSE யில் படிக்க வைப்பது. IIT - JEE கோச்சிங் எடுப்பது..இதெல்லாம் பிரெஸ்டிஜ் விஷயங்கள். 

.ஆன ஒன்னு மட்டும் நிச்சயம்..7, 8 ஆவது படிக்கும் குழந்தைகளை ட்யூசன் மேல ட்யூசன் சேர்த்து..படிப்பின் மீது வெறுப்படைய செய்வது மட்டும் அல்லாமல்..அவர்களின் சொந்த திறமையை வளர்க்காமல் இப்படி செய்வது அந்த குழந்தைகளின் எதிர் காலத்தை வெகுவாக பாதிக்கும் என்று எப்போது இந்த பெற்றோர் உணர்வார்களா...

டிஸ்கி 
இந்த பதிவில் குறிப்பிட்டு உள்ள விஷயங்கள் என்னுடைய கருத்து மட்டுமே.. எந்த பாட திட்டத்தையும் குறித்தோ அல்லது பள்ளிகள் குறித்தோ  குறை சொல்லவில்லை